search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழக்குப்பதிவு"

    ஈரோட்டை சேர்ந்த மைனர் பெண்ணை கடத்தி கட்டாய திருமணம் செய்தது தொடர்பாக அம்மாபேட்டையை சேர்ந்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    அம்மாபேட்டை:

    ஈரோடு செங்கோடம் பாளையத்தை சேர்ந்த 15 வயது மைனர் பெண் அம்மாபேட்டை அருகே உள்ள குறிச்சி சந்தை கரையில் உள்ள அத்தை வீட்டில் தங்கி இருந்தார். இவரது தாயாரும் அங்கேயே இருந்தார்.

    சம்பவத்தன்று குறிச்சி பெரிய வாய்க்காலில் இளம்பெண் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அவருடன் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் சிலரும் குளித்துக் கொண்டு இருந்தனர்.

    அப்போது பெருந்துறை அடுத்த குஞ்சரமடை சத்யாபுரத்தை சேர்ந்த ஜெகதீஸ் மற்றும் அவரது மனைவி லோகேஸ்வரி ஆகியோர் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    வாய்க்காலில் துணி துவைத்து கொண்டிருந்த இளம்பெண்ணை அழைத்து திடீரென மோட்டார் சைக்கிளில் ஏற்றி கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இதை கண்ட மற்ற பெண்கள் இது குறித்து அந்த இளம்பெண்ணின் தாயாரிடம் வி‌ஷயத்தை சொன்னார்கள்.

    இந்த நிலையில் கடத்தப்பட்ட பெண்ணுக்கும், திவாகர் என்பவருக்கும் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் தாயார் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இது குறித்து போலீசார் ஜெகதீஸ், லோகேஸ்வரி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ஓய்வுபெற்ற ஐ.ஜி. சிவனாண்டி மீது வழக்குப்பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt #IGSivanandi
    புதுடெல்லி:

    ‘சவுத் இந்தியா பாட்டிலிங்’ என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று சென்னையை சேர்ந்த பாண்டியராஜ் என்பவரை சுஜை ஆனந்த், சைலஜா ரெட்டி, சுப்பிரமணியன் ஆகியோர் அணுகினர். இதை நம்பி, தனது பெயரிலும், தன் மனைவி பெயரிலும் ரூ.50 லட்சத்தை பாண்டியராஜ் முதலீடு செய்தார். ஆனால் சொன்னபடி லாபம் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து அவர் விசாரித்தபோது, பணத்தை முதலீடு செய்ததற்கான எந்த ஆதாரமும், அந்த நிறுவனத்திடம் இல்லை என்று தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பாண்டியராஜ், இதுகுறித்து 2015-ம் ஆண்டு சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    இதையடுத்து இந்த புகாரை வாபஸ் பெறும்படி, தன்னை, அப்போது பதவியில் இருந்த ஐ.ஜி.சிவனாண்டி மிரட்டியதாக பாண்டியராஜ் புகார் செய்தார். இந்தநிலையில், இந்த மோசடி வழக்கு விசாரணைக்காக கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு பாண்டியராஜ் சென்றார்.

    அப்போது, அவரை 10 பேர் கொண்ட கும்பல் கடத்த முயற்சித்தது. அந்த கும்பலிடம் இருந்து தப்பிய பாண்டியராஜ், வேப்பேரி போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில், ஒரு வக்கீல் உள்பட பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து குற்றச்சாட்டுக்கு ஆளான வக்கீலுக்கு, முன்ஜாமீன் வழங்கவேண்டும் என்று அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் வீட்டை முற்றுகையிட்டு 70-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இந்த வக்கீல்கள் மீது பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வக்கீல்கள் பலரை கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. ரூ.50 லட்சம் மோசடி வழக்கு, புகார்தாரர் பாண்டியராஜை மிரட்டியதும், அவரை கடத்தியது குறித்த வழக்கு, தலைமை நீதிபதி வீட்டை முற்றுகையிட்ட வழக்கு ஆகிய 3 வழக்குகளையும் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதன்படி விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், ‘ரூ.50 லட்சம் மோசடி வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, வழக்கை முடித்து வைத்து, கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

    இதை எதிர்த்து பாண்டியராஜ் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், ‘மோசடி வழக்கை திரும்ப பெறவேண்டும் என்று பாண்டியராஜை ஐ.ஜி. சிவனாண்டி மிரட்டியதற்கும், தலைமை நீதிபதி வீட்டில் ரகளை செய்த வக்கீல்களின் செல்போனில் சிவனாண்டி பேசியதற்கும் ஆதாரம் உள்ளது. எனவே இந்த வழக்கை தமிழக போலீசார் விசாரித்தால் சரியாக இருக்காது. அதனால், இந்த வழக்குகளை எல்லாம் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுகிறேன்’ என்று உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோட்டில் சிவனாண்டி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, நாகேஸ்வரராவ் ஆகியோர் விசாரித்தனர்.

    பின்னர், ‘மனுதாரர் சிவனாண்டிக்கு எதிராக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்ற ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கிற்கு எதிர்மனுதாரர் பாண்டியராஜ் 4 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    ஐ.ஜி.சிவனாண்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியில் இருந்து ஓய்வுபெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    கருணாஸ் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைதும் செய்த காவல்துறை எச்.ராஜாவையும், எஸ்.வி.சேகரையும் கைது செய்ய தயங்குவது ஏன்? என அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #Karunas #HRaja
    சென்னை:

    சென்னையில் அரசியல் தலைவர்கள் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது:-



    ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் 1 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது. இந்த உண்மை வெளியே வந்ததால் மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் காங்கிரசை தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறார்.

    கருணாஸ் எம்.எல்.ஏ. ஒரு சமுதாயத்தை குறிப்பிட்டு பேசியது கண்டனத்துக்குரியது. அவரை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். ஆனால் இதைவிட மோசமாக விமர்சனம் செய்த எஸ்.வி. சேகர், எச்.ராஜாவை கைது செய்யவில்லை. அவர்கள் இருவரும் போலீஸ் பாதுகாப்புடன் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

    இதற்கு காரணம் தமிழக அரசு பா.ஜனதாவின் அடிமை அரசாக இருப்பது தான். அ.தி.மு.க. அரசு தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காக எதிர்கட்சிகளை எதிர்த்து போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது.

    இது மக்களை ஏமாற்றும் நாடகம் இதை மக்கள் ஏற்கமாட்டார்கள்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-



    ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயிலில் இருக்கும் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் கவர்னருக்கு இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்த பிறகும் கவர்னர் காலம் தாழ்த்துவது திட்டமிட்ட உள்நோக்கம் கொண்டது. இதுதொடர்பாக விரைவில் கவர்னரை சந்திக்க முடிவு செய்துள்ளோம்.

    கருணாஸ் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைதும் செய்த காவல்துறை எச்.ராஜாவையும், எஸ்.வி.சேகரையும் கைது செய்ய தயங்குவது ஏன்? என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

    இதன்மூலம் ஜாதி மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்திய அளவில் சனாதன பயங்கரவாதம் அதிகரித்து வருகிறது. இதை முறியடித்து தேசத்தை காக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து டிசம்பர் 10-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் சார்பில் திருச்சியில் தேசம் காப்போம் என்ற பெயரில் மாநாடு நடக்கிறது.

    அதில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி:-



    7 தமிழர்கள் விடுதலை வி‌ஷயத்தை சட்டத்தின் அடிப்படையில் இல்லாமல், கருணைகண் கொண்டு பார்க்க வேண்டும். அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கும், கவர்னருக்கும் உள்ளதாக சுப்ரீம் கோர்டு கூறியுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

    இலங்கை தமிழர்கள் படுகொலை விவகாரத்தில் காங்கிரஸ், தி.மு.க.வுக்கு தொடர்பு இருப்பதாக அ.தி.மு.க. போராட்டம் அறிவித்துள்ளது. இது இப்போதுதான் தெரிந்ததா? நாங்கள் ஏற்கனவே பலமுறை இதுபற்றி தெளிவாக சொல்லி இருக்கிறோம். 7 தமிழர்களையும் விடுதலை செய்ய அரசு முன்வர வேண்டும்.

    கருணாஸ் எம்.எல்.ஏ. பேசியது தவறுதான். அவர் வருத்தம் தெரிவித்த பிறகும் கைது செய்து இருக்கிறார்கள். அதன்படி பார்த்தால் எச்.ராஜாவையும், எஸ்.வி.சேகரையும் ஏன் கைது செய்யவில்லை.

    சட்டம் அனைவருக்கும் சமம் என்பது கேள்விக்குறியாகிவிட்டது.

    த.மா.கா. துணைத் தலைவர் ஞானதேசிகன் கூறும்போது, ‘‘7 தமிழர்கள் விடுதலை விவகாரத்தில், 4 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். அவர்கள் ராஜீவை கொல்வதற்காக திட்டம்போட்டு வந்தவர்கள். பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 3 பேர் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள். சந்தர்ப்ப வசத்தால் சிக்கியவர்கள். அவர்கள் 3 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #Karunas #HRaja
    கருணாஸ் மீது நடவடிக்கை எடுத்த தமிழக அரசு எச்.ராஜாவை கைது செய்யாதது ஏன்? என்று சீமான் நிருபர்களிடம் அளித்து பேட்டியில் கூறியுள்ளார். #Seeman #Karunas

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்சம் பனை விதைகள் நடும் திட்டம் நடைபெற்றது.

    அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையை அடுத்த நெடுங்குன்றம் பகுதியில் பனை விதைகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழர்களின் அடையாளமான பனை மரத்தை இன்று 50, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலை உள்ளது. பனை மரத்தின் அருமை தெரியாமல் இளைய தலைமுறையினர் உள்ளனர். ஒரு கிணற்றை சுற்றி பனைமரங்கள் இருந்தால் தண்ணீர் வற்றாது என்று நம்மாழ்வார் கூறி இருக்கிறார்.


    இதனை உணர்த்தும் வகையிலேயே பசுமை திட்டமான இதனை நாம் தமிழர் கட்சி கையில் எடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து 5 ஆயிரம் பனை விதைகளையும் வாங்கி வந்துள்ளோம். இதனையும் நட்டுள்ளோம். புளி, வேம்பு, பூவரசு, புங்கை மரக் கன்றுகளையும் நட்டுள்ளோம்.

    கருணாஸ் சாதி உணர்வை தூண்டிய குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்றால், எச்.ராஜா மத உணர்வை தூண்டும் வகையில் பேசவில்லையா? போலீஸ் அதிகாரியை தரக்குறைவாக பேசியதாக கருணாஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எச். ராஜாவும் அப்படித்தான் பேசினார். கருணாசை கைது செய்தது போல எச்.ராஜாவை ஏன் கைது செய்யவில்லை. அரசுக்கு எதிராக செயல்பட்டதால் கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எச்.ராஜா அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் தேசிய செயலாளர் என்பதால் தமிழக அரசு கைவைக்க தயங்குகிறது.

    இவ்வாறு சீமான் கூறினார். #Seeman #Karunas

    அறநிலையத்துறை அதிகாரிகள் பற்றி அவதூறு பேசிய எச்.ராஜாவை கைது செய்ய கோரி திருவாரூர் போலீசில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
    திருவாரூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா பேசும் போது, அறநிலையத் துறை அதிகாரிகளை பற்றி அவதூறாக பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் தொடர்ந்து அவதூறாக பேசி வரும் எச்.ராஜாவை கைது செய்ய கோரி அறநிலையத்துறையினர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்து வருகின்றனர்.

    இதேபோல் திருவாரூர் டவுன் போலீஸ் நிலையத்திலும் எச்.ராஜாவை கைது செய்ய கோரி அறநிலையத்துறை உதவி ஆணையர் கிருஷ்ணன் ஒரு புகார் மனு கொடுத்தார்.

    அதில் அறநிலையத்துறை அதிகாரிகளை பற்றியும், வீட்டு பெண்களை பற்றியும் இழிவாக கொச்சைப்படுத்தி எச்.ராஜா பேசியுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    தொடர்ந்து பல்வேறு அவதூறாக பேசி வரும் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி திருவாரூர் டவுன் போலீசார், எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர் மீது அரசு ஊழியர்களை தரக்குறைவாக பேசியது, பெண் வன்கொடுமை, அரசு ஊழியர்களை அச்சுறுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் தொடர்ந்து போலீஸ் நிலையங்களில் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி மனுக்கள் வழங்கப்பட்டு வருகிறது. இது பா.ஜனதா கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
    வருமான வரி ஏய்ப்பு செய்ததோடு, ‘ஹவாலா’ பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கர்நாடக மந்திரி டி.கே.சிவக்குமார் மீது அமலாக்கத்துறை நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளது. #KarnatakaMinister #DKShivakumar
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் மூத்த காங்கிரஸ் தலைவராக இருப்பவர் டி.கே.சிவக்குமார். இவர் முதல்-மந்திரி குமாரசாமியின் மந்திரி சபையில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு (2017) ஆகஸ்டு மாதம் மந்திரி டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகம் மற்றும் அவருடைய தொழில் பங்குதாரர்களின் வீடு, அலுவலகங்கள் என்று டெல்லி, பெங்களூருவில் உள்ள 60-க்கும் அதிகமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

    இந்த சோதனையின்போது, டெல்லியில் உள்ள அவருடைய வீட்டில் கணக்கில் காட்டாத ரூ.8.59 கோடி சிக்கியது. அத்துடன், ‘ஹவாலா’ பணப்பரிமாற்றத்தில் அவர்கள் ஈடுபட்டதற்கான ஆதாரங்களும் அதிகாரிகளிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக விசாரணை நடத்தியபோது டி.கே.சிவக்குமாருக்கு அவருடைய தொழில் பங்குதாரர் சச்சின் நாராயண், நண்பரும்-டிராவல்ஸ் நிறுவன அதிபருமான எஸ்.கே.சர்மா, டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் பணியாற்றி வரும் ஊழியர் அனுமந்தய்யா, கர்நாடக பவன் பொறுப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் உதவி செய்தது தெரியவந்தது.

    இது சம்பந்தமாக நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையில் ‘ஹவாலா’ பணப்பரிமாற்றத்தில் டி.கே.சிவக்குமார் முதல் குற்றவாளியாக செயல்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் வரி ஏய்ப்பு, ‘ஹவாலா’ பணப்பரிமாற்றத்துக்கு டி.கே.சிவக்குமாருக்கு, சச்சின் நாராயண், எஸ்.கே.சர்மா உதவி செய்துள்ளனர். டி.கே.சிவக்குமார், எஸ்.கே.சர்மா ஆகியோரின் அசையா சொத்துகளை ராஜேந்திரன் நிர்வகித்து வருகிறார். அனுமந்தய்யா ‘ஹவாலா’ முறையில் மாற்றும் பணத்தை டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாத்து வந்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் மந்திரி டி.கே.சிவக்குமார் உள்ளிட்டவர்கள் மீது நேற்று அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதனால் விரைவில் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சார்பில் டி.கே.சிவக்குமாருக்கு நோட்டீசு அனுப்ப வாய்ப்புள்ளது. மேலும் அவரை கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. #KarnatakaMinister #DKShivakumar
    வேலூரில் கணக்கில் வராத ரூ.1¼ லட்சம் பணம் கைப்பற்றியதை தொடர்ந்து டாஸ்மாக் மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சோபியா ஜோதிபாய் தனது கட்டுப்பாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒருநாளைக்கு ஒரு லட்சத்துக்கு மேல் மதுபானங்கள் விற்பனையானால் ரூ.2 ஆயிரம் வீதமும், ரூ.4 லட்சத்துக்கு மேல் விற்பனையானால் ரூ.5 ஆயிரம் வீதமும் வசூலில் ஈடுபட்டு வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்றுமுன்தினம் மாலை டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் 90-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது அவர் கடந்த (ஆகஸ்டு) மாதம் டாஸ்மாக் கடைகளில் இருந்து வர வேண்டிய பணத்தை மேற்பார்வையாளர்களிடம் இருந்து தனித்தனியாக வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

    இந்த தகவல் வேலூர் லஞ்சஒழிப்பு துறை போலீசாருக்கு கிடைத்தது. உடனடியாக வேலூர் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சரவணக்குமார், இன்ஸ்பெக்டர்கள் விஜய், விஜயலட்சுமி உள்பட போலீசார் மாலை 6 மணி அளவில் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    விடிய விடிய சோதனை நடைபெற்றது. அப்போது சோபியா ஜோதிபாயின் கைப்பையில் இருந்து ரூ.80 ஆயிரமும், அவருடைய காரில் இருந்து ரூ.25 ஆயிரமும், மேற்பார்வையாளர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரமும் என ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்தை போலீசார் கைப்பற்றினர். கணக்கில் வராத பணம் கைப்பற்றியதை தொடர்ந்து டாஸ்மாக் மேலாளர் சோபியா ஜோதிபாய் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews
    அரியலூர் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற 161 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    அரியலூர்:

    இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிந்து செல்லாத காரணத்தால் ஏற்பட்ட விபத்தில் ஏராளமான பேர் இறந்துள்ளனர். இதில் தொடர்ந்து உயிர்பலி அதிகரித்து வருகிறது. மோட்டார் வாகன சட்ட பிரிவு 129–ன்படி இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்பதனை சென்னை உயர்நீதிமன்றமும் பலமுறை அறிவுறுத்தி உள்ளது. 

    இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்றவர்கள் மீது சட்ட பிரிவு 129–ன் கீழ் 161 பேர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ஹெல்மெட் அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் சட்டப்படி போலீசாரால் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவல் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

    பெரம்பலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வெண்டும். ஹெல்மெட் அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் மீது பிரிவு 129 மோட்டார் வாகன சட்டப்படி போலீசாரால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ஈரோடு மாவட்டத்தில் ஆற்றின் கரையோரம் நின்று வெள்ளத்தை செல்பி எடுத்த 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் காவிரி மற்றும் பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினை காண ஏராளமான பொதுமக்கள் கரையோரங்களில் குவிந்து வருகின்றனர்.

    ஆற்றில் செல்லும் தண்ணீரை செல்போன் மூலம் போட்டோ எடுப்பது, குழுவாக நின்று கொண்டு செல்பி எடுப்பது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    கரையோரங்களில் ஒரு சில பகுதிகள் ஆபத்தானவை என்பதால் போலீசார் அங்கு பொதுமக்கள் செல்ல தடை விதித்துள்ளனர். ஈரோடு கருங்கல்பாளையம் பாலம், பவானி பழைய பாலம் ஆகியவற்றில் வாகனங்கள், பொதுமக்கள் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று போக்குவரத்திற்கு இடையூறாகவும், ஆற்றின் கரையோரத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு தடையை மீறி சென்று செல்பி எடுத்து பொதுமக்களுக்கு இடையூறாகவும் செயல்பட்டதாக மாவட்டம் முழுவதும் 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சித்தோடு போலீஸ் நிலையத்தில் 6 வழக்குகளும், பவானி, பங்களாப்புதூரில் தலா 1 வழக்கும், சத்தியமங்கலத்தில் 3 வழக்கும் கவுந்தப்பாடியில் 2 வழக்குகள் என மொத்தம் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் கூறியதாவது:-

    பொது மக்கள் யாரும் போலீஸ் தடை செய்துள்ள பகுதியில் நின்று போட்டோ எடுக்கக்கூடாது. அவ்வாறு மீறி போட்டோ (செல்பி) எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    வியாபாரியிடம் ரூ. 2 கோடி மோசடி செய்ததாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள கரிசல்பட்டியில், விளைபொருட்களை பதப்படுத்தி வைக்கும் குளிரூட்டப்பட்ட குடோன்  உள்ளது. இதனை கோர்வை மாவட்டம் ஒண்டிப்புதூரைச் சேர்ந்த ரெங்கராஜ் (வயது 36) என்பவர் மதுரையைச் சேர்ந்த பாரதி (41) என்பவருடன் இணைந்து நடத்தி வருகிறார்.

    இங்கு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுண்டல் உள்ளிட்ட பல தானியங்களை வைத்து விற்பனை செய்து வருகிறார்கள்.

    ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மன் நாட்டில் இருந்து கண்டெய்னர்களில் வரவழைக்கப்பட்ட 3 லட்சத்து 30 ஆயிரத்து 50 கிலோ கருப்பு சுண்டல், 80 ஆயிரத்து 130 கிலோ வெள்ளை சுண்டல் போன்றவை குடோனில் வைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் திருமங்கலம் நகர் போலீசில் ரெங்கராஜ் புகார் மனு அளித்துள்ளார். அதில், பங்குதாரர் பாரதி, அவரது நண்பர்கள் விருதுநகரைச் சேர்ந்த பிரேம்குமார், மரிய பாஸ்கர், கற்பகராஜ், புதுக்கோட்டை தமிழரசன், முதுகுளத்தூர் ஜெயச்சந்திரன், சென்னை கொடித்தோப்பு குணசேகர் ஆகியோர் சென்னை அக்ரோ நிறுவனம் பெயரில் குடோனில் இருந்த ரூ.2 கோடியே 24 லட்சத்து 27 ஆயிரத்து 400 மதிப்பிலான சுண்டலை கொள்முதல் செய்தனர்.

    இதற்காக ரூ.17 லட்சம் முன் பணம் கொடுத்த அவர்கள், மீதிப்பணம் தராமல் இழுத்தடிக்கின்றனர். 

    பலமுறை கேட்டும் 2 கோடியே 7 லட்சத்து 24 ஆயிரத்து 400 ரூபாயை தராமல் மோசடி செய்து விட்டனர் என குறிப்பிட் டுள்ளார். புகாரின் அடிப்படையில் திருமங்கலம் நகர் போலீசார் 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விவாகரத்து வழக்கில் கோர்ட்டில் ஆஜரான மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    தேனி:

    தேனி பாரஸ்ட் ரோடு 5-வது தெருவை சேர்ந்த துரைப்பாண்டி மகள் ராஜபாலா (வயது27). இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் திருவேங்கடம் பிள்ளைமார் தெருவை சேர்ந்த திருப்பதிராஜ் (36) என்பவருக்கும் கடந்த 7.9.2014-ந் தேதி திருமணம் நடந்தது.

    திருமணத்தின்போது 28 பவுன் நகை, ரொக்க பணம் மற்றும் சீர்வரிசைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. திருமணமான சில மாதங்களிலேயே அவர் அணிந்த அனைத்து நகைகளையும் திருப்பதி ராஜ் குடும்பத்தினர் பறித்து வைத்துக்கொண்டனர். மேலும் கூடுதல் நகை வாங்கி வரச்சொல்லி கொடுமைப்படுத்தி வந்தனர்.

    இதனால் ராஜபாலா தனது கணவரை விட்டு பிரிந்து தேனியில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு வந்து விட்டார். இதனையடுத்து சங்கரன்கோவில் சப்-கோர்ட்டில் விவாகரத்து கேட்டு கணவர் திருப்பதிராஜ் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த விசாரணையில் ராஜபாலா மற்றும் அவரது தந்தை ஆஜராகி கணவருக்கு எதிராக சாட்சியம் அளித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த திருப்பதிராஜ் குடும்பத்தினர் துரைப்பாண்டி வீட்டிற்கு வந்து இனிமேல் கோர்ட்டில் ஆஜராக வந்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டி சென்றனர். இது குறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் தேனி அனைத்து மகளிர் போலீசார் கொலை மிரட்டல் விடுத்த கணவர் திருப்பதிராஜ், மாமியார் சுப்புலட்சுமி, நாத்தனார் கனகவள்ளி உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    அபிஷேகப்பாக்கத்தில் நிலத்தகராறில் பெண் உள்பட 2 பேருக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை-மகன் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை ஈஸ்வரன்கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துவெங்கடாச்சலம் (வயது62). இவருக்கு தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கத்தில் சொந்தமாக நிலம் உள்ளது. இதற்கிடையே முத்து வெங்கடாசலத்துக்கும், அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவருக்கும் நிலத்தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வெங்கடாச்சலம் தனது உறவினர் மீனாட்சி (60) என்பவருடன் அபிஷேகப்பாக்கத்தில் உள்ள நிலத்தை பார்வையிட சென்றார். அப்போது மாயகிருஷ்ணன் மற்றும் அவரது மகன் விக்னேஷ் ஆகிய 2 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.

    இதுகுறித்து முத்துவெங்கடாச்சலம் தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி மாயகிருஷ்ணன் மற்றும் அவரது மகன் விக்னேஷ் ஆகிய 2 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

    ×