search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 101697"

    வால்பாறையில் கரடி தாக்கி தொழிலாளி காயம் அடைந்த சம்பவம் தொழிலாளர்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை புதுக்காடு எஸ்டேட் மலை 19-வது நம்பர் தேயிலை தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருபவர் பாலகிருஷ்ணன் (61). இவர் தேயிலை தோட்டத்தில் தேயிலை பறித்து கொண்டு இருந்தார்.

    அப்போது வனப்பகுதியில் இருந்து 2 கரடிகள் வந்தது. இதனை பார்த்ததும் பாலகிருஷ்ணன் தப்பி ஓடினார். அவரை ஒரு கரடி விரட்டி சென்றது. பின்னர் அவரது இடது தோல் பட்டையில் கரடி பலமாக தாக்கியது.

    இதனால் பாலகிருஷ்ணன் அலறினார். இந்த சத்தம் கேட்டு அருகில் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் ஓடி வந்தனர். அவர்கள் சத்தம் போடவே பாலகிருஷ்ணனை தாக்கிய கரடி அங்கிருந்து வனப்பகுதிக்குள் தப்பி ஓடி விட்டது.

    கரடி தாக்கியதில் காயம் அடைந்த பாலகிருஷ்ணனுக்கு முருகாளி எஸ்டேட் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தகவல் கிடைத்ததும் மானம்பள்ளி வன சரக அலுவலர்கள் விரைந்து வந்து கரடி நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.

    வால்பாறை பகுதியில் அடிக்கடி தொழிலாளர்களை கரடி தாக்கி வருவது பீதியை ஏற்படுத்தி உள்ளது.


    சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ளது காடுஉத்தனப்பள்ளி. இந்த ஊரை சேர்ந்தவர் திம்மப்பா (வயது 65). கூலித்தொழிலாளி. கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் இவர் அதே ஊரை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.

    இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி திம்மப்பாவை கைது செய்தனர். அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட திம்மப்பாவிற்கு சிறுமியை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 10 ஆண்டு சிறையும், அதை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டிய குற்றத்திற்காக 6 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

    இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது. இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜர் ஆகி வாதாடினார்.  #tamilnews
    நாமக்கல் அருகே மீன் வாங்க வந்த வாலிபரிடம் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அவரது கழுத்தை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பரமத்திவேலூர்:

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள திருகாட்டு துறை பகுதியை சேர்ந்தவர் மணிவாசகம் (வயது 40).

    இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் 4 ரோடு பகுதியில் உள்ள ஒரு மீன் விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் பரமத்தி வேலூர் தெற்கு தெருவை சேர்ந்த பாரி (35) என்பவர் நேற்று மீன் வாங்க வந்தார். அப்போது பெரிய இலையில் மீனை கட்டி தரும்படி பாரி கூறினார்.

    இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த மணிவாசகம் தன் கையில் வைத்திருந்த மீன் வெட்டும் கத்தியால் பாரியின் கழுத்தை தர தர வென அறுத்தார்.

    இதனால் வலியால் அலறி துடித்த அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து பரமத்திவேலூர் போலீசில் பாரி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மணிவாசகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    சங்கரன்கோவிலில் தொழிலாளி வீடு புகுந்து 4½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் புதுமனை 4-ம் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 50). இவர் தென்காசியில் உள்ள தனியார் சுவீட்ஸ் கடையில் வேலை செய்து வருகிறார். இதனால் தென்காசி மேலகரத்தில் குடும்பத்துடன் தங்கி உள்ளார். வாரம் ஒரு முறை மட்டும் சங்கரன்கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம்.

    புதுமனை தெருவில் உள்ள வீட்டை மாரியப்பனின் தாயார் பராமரித்து வந்துள்ளார். அவர் மாலையில் வந்து வீட்டை சுத்தம் செய்து லைட்டை போட்டு விட்டு பின் மறுநாள் காலையில் வந்து செல்வாராம். இதை நன்கு நோட்டம் விட்ட மர்ம நபர் சம்பவத்தன்று இரவு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளான்.

    பின்னர் பீரோவையும் உடைத்து உள்ளே இருந்த சுமார் ரூ.95 ஆயிரம் மதிப்புள்ள 4½கிலோ வெள்ளி பொருள்களை கொள்ளை அடித்து விட்டு சென்று விட்டான். வேறு எதுவும் விலை உயர்ந்த பொருள்கள் இல்லாததால் அவை தப்பின. காலையில் வீட்டிற்கு வந்த மாரியப்பனின் தாயார் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது பற்றி சங்கரன்கோவில் டவுண் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சங்கரன்கோவில் பகுதியில் நடைபெற்று வரும் தொடர் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் மிகவும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். காவல்துறையினர் நள்ளிரவு ரோந்து பணியை மீண்டும் ஆரம்பித்து கொள்ளை சம்பவங்களை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். #tamilnews
    பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் முன்விரோதம் காரணமாக தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது38). தொழிலாளி.

    இவருக்கும் கடலூர் பகுதியை சேர்ந்த காதர் மொய்தீனுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் காதர் மொய்தீன் அவரது நண்பர் ராம்குமார் (29) என்பவரை அழைத்து கொண்டு வடலூருக்கு சென்றார்.

    அப்போது அந்த பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த மணிகண்டனை வழிமறித்து காதர் மொய்தீனும்,ராம்குமாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த ராம்குமார் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மணிகண்டனின் வயிற்றில் குத்தினார்.

    இதில் மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். பலத்த காயம் அடைந்த மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சையளிக்கபட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு மணிகண்டனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்து வடலூர் போலீசில் மணிகண்டன் புகார் செய்தார். புகாரின் பேரில் காதர் மொய்தீன், ராம்குமார் ஆகிய 2 பேர் மீதும் போலீசார்வழக்குபதிவு செய்து ராம்குமாரை கைது செய்தனர்.காதர் மொய்தீனை வலை வீசி தேடி வருகின்றனர். #tamilnews
    உடுமலை அருகே வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதிப்புள்ள பெண்ணை கற்பழிக்க முயன்ற தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
    உடுமலை:

    உடுமலை அடுத்துள்ள உடுக்கம் பாளையத்தில் 30 வயது பெண் ஒருவர் திருமணம் ஆகாமல் தனது பெற்றோர் பராமரிப்பில் இருந்து வருகிறார்.

    சம்பவத்தன்று அப்பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன் (38) அப்பெண்ணை கற்பழிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பெண்ணின் தந்தை தளி போலீசில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து அப்பெண்ணை உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இளம் பெண்ணை கற்பழிக்க முயன்ற முருகன் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க உடுமலை டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அய்யாசாமி, சக்திவேல், போலீஸ்காரர்கள் அனுமந்தன், கருப்புசாமி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தலைமறைவான முருகனை தேடி வருகிறார்கள்.

    இது குறித்து அப்பெண்ணின் தந்தை கூறியதாவது-

    எனது மகள் 11-ம் வகுப்பில் தோல்வி அடைந்துவிட்டதால் மனநலம் பாதிக்கப்பட்டார். சம்பவத்தன்று எனது மனைவி வேலைக்கு சென்றுவிட்டார்.

    நான் பக்கத்து தெருவில் உள்ள நண்பரை பார்க்க சென்றுவிட்டேன். எனது மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் மாத்திரைகள் சாப்பிட்டு விட்டு அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முருகன் எனது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொண்டிருந்தார்.

    அந்த சமயத்தில் அங்கு வந்தேன். அதிர்ச்சி அடைந்த நான் முருகனை பிடிக்க முயன்றேன். ஆனால் அவர் என்னை அடித்து உதைத்து கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பாவூர்சத்திரம் அருகே தொழிலாளி பெயரில் பட்டா வழங்கக்கோரி அவர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
    பாவூர்சத்திரம்:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 40). இவர் பவர் டில்லர் ஓட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் ஊர் அருகே சொந்தமாக காலியிடம் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி உள்ளார். இந்த இடத்திற்கு அவரது பெயரில் பட்டா வழங்கக்கோரி சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பே மனு செய்துள்ளார். ஆனால் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.

    இதனை கண்டித்து அவர் பாவூர்சத்திரம்- சுரண்டை ரோட்டில் உள்ள கீழப்பாவூர் பகுதி-1 கிராம நிர்வாக அலுவலகம் முன்பு அவர் இதுவரை அனுப்பிய மனுக்கள் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் அனைத்தையும் கழுத்தில் கட்டித் தொங்க விட்டு கொண்டு உண்ணாவிரத போராட்டம் இருக்கப் போவதாக தெரிவித்தார்.

    இதை அறிந்து அங்கு வந்த கிராம நிர்வாக அதிகாரி ஞானக்கண் பாவூர்சத்திரம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இந்த தகவலின் பேரில் பாவூர்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிருஷ்ணமூர்த்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சம்பந்தப்பட்ட வருவாய் துறையினர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினரை அழைத்து பேசினர். அதன்படி விரைவில் பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அவர்கள் உறுதி அளித்ததின் பேரில் அவர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். #tamilnews
    ஊத்துக்கோட்டை அருகே ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டி இருந்த வீட்டை அதிகாரிகள் இடித்துவிடுவார்கள் என்ற பயத்தில் தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ளது பால்ரெட்டி கண்டிகை. இப்பகுதியில் ஊத்துக்கோட்டை ஏரியில் இருந்து பேரண்டூர் ஏரிக்கு செல்லும் பாசன கால்வாய் இடத்தை 40-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி உள்ளனர். இங்கு வசித்து வந்தவர் சுப்பிரமணி (வயது 70), தொழிலாளி.

    இந்த நிலையில் நீர்நிலை பகுதிகள் ஆக்கிரமிப்பால் ஏரிக்கு தண்ணீர் செல்வது பாதிக்கும் நிலை ஏற்பட்டு இருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து கடந்த வாரம் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற சென்றனர். அப்போது ஆக்கிரமிப்பாளர் வீடுகளை காலி செய்ய ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என்று தெரிவித்தனர். இதனால் அதிகாரிகள் வீடுகளை அகற்றாமல் சென்றனர்.

    அதிகாரிகள் நடவடிக்கையால் பயந்து இருந்த தொழிலாளி சுப்பிரமணி இதுபற்றி உறவினர்களிடம் கூறி வருத்தம் அடைந்தார். வீடு இடிக்கப்பட உள்ளதை நினைத்து புலம்பி வந்தார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

    இதற்கிடையே இன்று காலை மீண்டும் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வருவதாக அப்பகுதியில் தகவல் பரவியது.

    இதனால் மனவேதனையில் இருந்த சுப்பிரமணி திடீரென வி‌ஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி பரிதாபமாக இறந்தார். அவருக்கு மல்லிகா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    இதற்கிடையே சுப்பிரமணி தற்கொலை செய்து இருப்பதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த விவசாயி தரணி என்பவர் மயங்கி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    வீடு இடிக்கப்படுவதற்கு பயந்து தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து பதட்டமான நிலை நீடிப்பதால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தொழிலாளி தற்கொலையை அடுத்து ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியை அதிகாரிகள் இன்று தொடங்கவில்லை.
    வடமதுரை அருகே மகனை கொன்றுவிட்டு தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    வடமதுரை:

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    வடமதுரை அருகே உள்ள குருந்தம்பட்டியை சேர்ந்தவர் சின்னான் அம்பலம் (வயது 42). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி (35). இவர்களுக்கு கருப்பையா (9) என்ற மகனும், ஒரு மகளும் இருந்தனர். அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கருப்பையா 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை லட்சுமி தனது மகளுடன் ஒட்டன்சத்திரம் அருகே கூலிவேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதற்காக அவர்கள் அங்கேயே தங்கியிருந்ததாக தெரிகிறது. இதற்கு சின்னான் அம்பலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் வேலையை விட்டு விட்டு மகளுடன் வீட்டுக்கு வருமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் லட்சுமி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்து காணப்பட்ட சின்னான் அம்பலம் மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து விஷக்கிழங்கை மகனுக்கு கொடுத்துவிட்டு தானும் தின்றார். சிறிது நேரத்தில் இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் கருப்பையா மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பையா பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னான் அம்பலத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மகனை கொன்று விட்டு தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
    ஆடு மேய்க்கும் தொழிலாளிக்கு ரத்தநாள அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். #Stanleyhospital
    ராயபுரம்:

    கும்மிடிபூண்டியை சேர்ந்தவர் ஜெயராமையா (50). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவருக்கு கடுமையான வயிற்று வலி, ரத்த வாந்தி ஏற்பட்டது.

    சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஸ்கேன் பரிசோதனையில் இருதயத்தில் இருந்து வயிற்றுக்கு செல்லும் பெருந்தமணி வீக்கமடைந்தும், வெடித்தும், சிறு குடலை அரித்து ஓட்டை விழுந்து ரத்த கசிவு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

    உயிரை காப்பாற்றும் முயற்சியாக அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. வயிற்றின் உள்பகுதியில் உள்ள பெருந்தமணி வெடித்து அருகிலுள்ள சிறுகுடலுடன் ஒட்டிக் கொண்டிருந்தது. அறுவை சிகிச்சை காரணமாக சிறுகுடலில் இருந்து பெருந்தமணி பிரித்து எடுக்கப்பட்டது.

    ஒட்டி இருந்த இடத்தில் குடலில் இருந்த ஓட்டை பெருந்தமணியின் ஒரு பகுதியை வைத்து அடைக்கப்பட்டது. பெருந்தமணிக்குள் இருந்த ரத்த கட்டிகள் அகற்றப்பட்டது.

    பின்னர் பெருந்தமணியில் இருந்து கால்களுக்கு செயற்கை ரத்த குழாய் பொருத்தப்பட்டது. நோயாளியின் உயிரும், இரண்டு கால்களும் காப்பாற்றப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் ஜெயராமையாவுக்கு 2 நாட்களுக்கு செயற்கை சுவாசம் செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பிறகு அவர் செயற்கைசுவாசம் அகற்றப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பினார். அவரின் வயிறு வலியும், முதுகுவலியும் நீங்கியது.

    இதுபோன்ற அறுவை சிகிச்சையில் பெருந்தமணி வெடித்தோ, குடல் அரித்தோ, குடல் அழுகியோ உயிர் இழப்பதற்கு 99 சதவீதம் வாய்ப்புள்ளது. இந்த அறுவை சிகிச்சை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தால் ரூ.10 லட்சம் வரை செலவு ஆகும்.

    ஆனால் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ரத்த நாள அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டது.

    அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த டாக்டர்கள் இளஞ்சேரலாதன், சண்முகவேலாயுதம், தீபன் குமார், தளவாய் சுந்தரம், மயக்கவியல் நிபுணர் குமுதா, செந்தில்குமார், சரவண குமார் ஆகியோரை ஸ்டான்லி மருத்துவமனை கல்லூரி டீன் பொன்னம்பல நமசிவாயம் பாராட்டினார். #Stanleyhospital
    கே.ஆர்.தோப்பூரில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு சென்று வழிபட்டு விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்த தொழிலாளி அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார்.
    தாரமங்கலம்:

    சேலம் கே.ஆர். தோப்பூர் அருகே உள்ள செட்டி மாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 48). கூலி தொழிலாளி.

    இவர் கே.ஆர்.தோப்பூரில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு சென்று வழிபட்டு விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் அவர் மீது மோதி விட்டு, அங்கு நிற்காமல் சென்று விட்டது. பலத்த காயம் அடைந்த பழனிசாமியை பொதுமக்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகிறார்.

    பலியான பழனிசாமிக்கு ராசாத்தி என்ற மனைவியும், சாமுவேல், என்ற மகனும் தாரணி என்ற மகளும் உள்ளனர். #tamilnews

    மேற்கு வங்காளத்தில் தொழிலாளி வயிற்றில் குத்திய இரும்புக் கம்பிகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, அவரது உயிரை டாக்டர்கள் காப்பாற்றியுள்ளனர். #Surgery
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தின் 24 பர்கானா மாவட்டத்தை சேர்ந்தவர் உதய் சர்க்கார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று பரூபுர் பகுதியில் சென்ற சர்க்கார் அவரது அறையில் தொங்கி கொண்டிருந்த வயரை தொட்டார். அப்போது மேற்கூரையில் இருந்து அவருடைய வயிற்றின் மீது மூன்று இரும்புக் கம்பிகள் குத்தின.

    அதில் அலறி துடித்த சர்க்கார், அருகிலுள்ள சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை செய்து இரும்பு கம்பிகளை பத்திரமாக அகற்றினர்.

    இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், இரும்புக் கம்பிகள் வயிற்றில் குத்திய நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் 
    மருத்துவமனைக்கு சர்க்கார் அழைத்து வரப்பட்டார். அவருக்கு 5 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை செய்ய முடிவானது.

    சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையால் சர்க்கார் வயிற்றில் இருந்த இரும்புக் கம்பிகள் அகற்றப்பட்டன. அறுவை சிகிச்சையின் போது நிறைய ரத்தம் சேதமானது. ஆனாலும் ரத்தத்தை இருப்பு வைத்திருந்ததால் நாங்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை நடத்தி முடித்தோம். சர்க்கார் தொடர்ந்து டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார் என தெரிவித்தார்.
    ×