search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீட்பு"

    காதல் தகராறில் வாலிபரை காரில் கடத்திய கும்பலை 3 மணி நேரத்தில் போலீசார் மீட்ட சம்பவம் வேலூர், காவேரிப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வேலூர்:

    வேலூர் அடுத்த அரப்பாக்கத்தை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 28). இவர் புதுவசூர் பகுதியில் உள்ள ஒரு கார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் வாணாபாடியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வேணுகோபாலிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் மறுத்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் வேணுகோபாலிடம், அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. வேணுகோபால் மீண்டும் மறுத்துள்ளார்.

    இந்த நிலையில் அப்பெண்ணின் தரப்பை சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் நேற்று வேணுகோபால் வேலை செய்யும் கம்பெனிக்கு வந்தனர். அங்கு வேணுகோபாலை சந்தித்து திருமணம் குறித்து பேசினர். கம்பெனிக்கு வெளியே வேணுகோபாலிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அந்த கும்பல் திடீரென அவரை காரில் தூக்கிப்போட்டு கடத்திச் சென்றனர். இதைப்பார்த்த அக்கம்பெனியின் மேலாளர் உடனடியாக சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்திக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் உடனடியாக மாவட்டத்தின் அனைத்து போலீஸ் நிலைய போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் வேணுகோபாலை கடத்திச் சென்ற கார் எண் குறித்தும் அக்கம்பெனியின் மேலாளர் போலீசாரிடம் தெரிவித்திருந்தார். அந்த எண்ணை வைத்து போலீசார் தேடுதல் வேட்டையை நடத்தினர்.

    கடத்தப்பட்ட வேணுகோபாலை, அக்கும்பல் காவேரிப்பாக்கம் அருகே உள்ள திருப்பாற்கடல் பாலாற்றுப்பகுதிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அக்கும்பலில் 3 பேர் வேலூரில் உள்ள ஒரு மோட்டார்சைக்கிளை எடுப்பதற்காக வேலூருக்கு அதே காரில் சென்றனர். வேணுகோபால் மீதம் உள்ள 3 பேரின் பிடியில் இருந்தார்.

    கார் வாலாஜா சுங்கச்சாவடி அருகே வந்தபோது அங்கிருந்த போலீசார் அந்த காரை பார்த்தனர். அதில் வேணுகோபால் இல்லை. இதுகுறித்து வாலாஜா போலீசார் சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அந்த காரை வாலாஜா போலீசார் பின்தொடர்ந்து வந்தனர். சத்துவாச்சாரி அருகே கார் வந்தபோது சத்துவாச்சாரி போலீசாரும், வாலாஜா போலீசாரும் அக்காரை மடக்கி காரில் இருந்த 3 பேரையும் கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் ராணிப்பேட்டை சீனிவாசபேட்டை தெருவை சேர்ந்த உமாமகேஸ்வரன் (29), காவேரிப்பாக்கம் அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த பூவரசன் (30), ராணிப்பேட்டை காரை பகுதியை சேர்ந்த புத்தன் (28) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் வேணுகோபாலை அவர்களின் கூட்டாளிகள் 3 பேர் பிடித்து வைத்துள்ளதாக தெரிவித்தனர்.

    பின்னர் போலீசார், பிடிபட்ட 3 பேரிடம் உங்களது கூட்டாளிகளுக்கு போன் செய்து வேணுகோபாலை விடுவிக்குமாறு கூறினர். இதையடுத்து அவர்கள் தங்களது கூட்டாளிகளுக்கு போன் செய்து அவரை விடுவிக்குமாறு கூறினர். அதைத்தொடர்ந்து வேணுகோபாலை அவர்கள் விடுவித்தனர். பின்னர் அவர், தனது உறவினர் பாஸ்கர் என்பவர் மூலம் காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். வேணுகோபாலை விடுவித்த 3 பேரும், தலைமறைவாகி விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர். சினிமா பாணியில் வாலிபர் மீட்கப்பட்ட சம்பவம் வேலூர், காவேரிப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக ஈஷா யோகா மைய குழுவினர் கேரள சென்றுள்ளனர். #keralafloods
    கோவை:

    கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக ‘நதிகளை மீட்போம்’ இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கோவையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவுக்கு புறப்பட்டு சென்றனர்.

    இவர்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளான ஆலுவா, பத்தனம்திட்டா, வைக்கம், துரவூர், செர்தலா, பரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஈஷா தன்னார்வலர்கள் உணவு, உடை, மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை கேரளாவுக்கு அனுப்பி உள்ளனர். அந்த பொருட்கள் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும், கோவையில் செயல்பட்டு வந்த 3 ஈஷா நடமாடும் மருத்துவ வாகனங்கள் தற்போது கேரளாவில் உள்ளன. அந்த வாகனத்துடன் ஈஷா மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவ குழுவினரும் உடன் சென்றனர். கடந்த 3 நாட்களில் மட்டும் 1,500-க்கும் மேற்பட்ட மக்களுக்கு மருத்துவ சேவை அளித்துள்ளனர்.

    தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தன்னார்வலர்களாக ‘நதிகளை மீட்போம்’ இயக்கத்தில் இணைந்துள்ள 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கோவை ஈஷா யோகா மையத்தில் இருந்து இன்று புறப்பட்டு கேரளாவுக்கு சென்றனர். அவர்கள் ஏற்கனவே உள்ள குழுவினருடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுப்பட உள்ளனர். #keralafloods
    ஆப்கானிஸ்தானில் அதிபர் அறிவித்த போர்நிறுத்தத்துக்கு இடையில் தலிபான் பயங்கரவாதிகளால் இன்று கடத்தப்பட்டவர்களில் 149 பேரை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். #Afghanforces #149hostagesfreed #Talibanambush
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசு படைக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே சுமார் 17 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. 

    நாட்டின் பல பகுதிகளை பிடித்து வைத்துள்ள தலிபான்கள் கஸ்னி நகரை கைப்பற்றுவதற்காக கடந்த 15 நாட்களாக ஆவேசமாக போரிட்டு வருகின்றனர். இந்த நகரம் அவர்கள் கையில் சிக்காமல் இருப்பதற்காக அரசுப் படையினரும் தீவிரமான எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

    இருதரப்பு மோதல்கள் கடந்த புதன்கிழமை முடிவுக்கு வந்துள்ள நிலையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மீண்டும் ஒரு இடைக்கால போர்நிறுத்தத்துக்கு அதிபர் அஷ்ரப் கானி நேற்று அழைப்பு விடுத்தார். 

    இன்றிலிருந்து (20-ம் தேதி) முஹம்மது நபியின் பிறந்தநாளான மீலாதுன்நபி விழா (நவம்பர் மாதம் 21-ம் தேதி) வரை இந்த போர்நிறுத்தம் அமலில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

    இந்நிலையில், அந்நாட்டின் குன்டுஸ் மாகாணத்துக்கு உட்பட்ட கான் அபாட் மாவட்டம் வழியாக இன்று காலை சென்ற மூன்று பேருந்துகளை துப்பாக்கி முனையில் தலிபான் பயங்கரவாதிகள் வழிமறித்து மடக்கினர். அவற்றில் வந்த பயணிகள் அனைவரையும் கீழே இறக்கி சுமார் 170 பேரை கடத்திச் சென்றனர். 

    பிணை கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டவர்கள் எங்கே கடத்திச் செல்லப்பட்டனர்? என்பது தெரியாத நிலையில் அவர்களை மீட்க குன்டுஸ் மாகாணம் முழுவதும் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த வேட்டையில் பிணைகைதிகள் வைக்கப்பட்டிருந்த இடத்தை கண்டுபிடித்த பாதுகாப்பு படையினர் தலிபான்களின் கடுமையான துப்பாக்கிச் சூட்டை எதிர்கொண்டனர். பாதுகாப்பு படையினர் எதிர் தாக்குதலில் 7 தலிபான்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து 149 பேர் விடுவிக்கப்பட்டதாகவும், மீதமுள்ளவர்களை மீட்பதற்காக அங்கு தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாகவும் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
    #Afghanforces #149hostagesfreed #Talibanambush
    கேரளாவில் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் சிக்கிய மனைவி மற்றும் குழந்தையை அவரது கணவர் மீட்டு பத்திரமான இடத்திற்கு அழைத்துச் சென்றார். #keralarain #keralafloods
    திருவனந்தபுரம்:

    கேரளாவை புரட்டிப்போட்ட மழை வெள்ளம் காரணமாக குடும்பத்தையும், உற்றார் உறவினர்களையும் இழந்தும், பிரிந்தும் தவிப்பவர்கள் ஏராளம்.

    தற்போது கேரளாவில் இயல்புநிலை திரும்பும் சூழ்நிலை உருவாகி வருவதால் பிரிந்து சென்றவர்களை தேடும் பணியிலும் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.

    செங்கனூர் விருவன் மண்டூர் பகுதியை சேர்ந்தவர் அகிலா. இவரது கணவர் அருண். பிரசவத்திற்காக சில மாதங்களுக்கு முன்பு அகிலா தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு அவருக்கு 2 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து அவர் தாய் வீட்டிலேயே வசித்துவந்தார்.

    இந்த நிலையில் அவரது வீட்டை மழை வெள்ளம் சூழ்ந்ததால் அவரால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை. இதனால் குழந்தை மற்றும் வயதான பெற்றோருடன் அகிலா அந்த வீட்டின் மாடியில் தஞ்சமடைந்தார்.

    போன் மூலம் தனது கணவர் அருணுக்கு இது பற்றி தெரிவித்தார். உடனே அவர் அங்கு செல்ல முடியாதபடி அதிகளவு வெள்ளப் பெருக்கு காணப்பட்டது. 5 நாட்கள் தவிப்புக்கு பிறகு தனது உறவினர்கள் சிலர் உதவியுடன் ஒரு படகு மூலம் அங்கு சென்ற அருண் தனது மனைவி, குழந்தை மற்றும் அவரது குடும்பத்தினரை மீட்டு பத்திரமான இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

    செங்கனூர் பகுதியை சேர்ந்த லெட்சுமி என்ற பெண்ணும் தனது தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்ற போது அவரது வீட்டை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் தனது 11 மாத குழந்தை மற்றும் பெற்றோருடன் தனது வீட்டு மாடியில் பாதுகாப்பாக தங்கிக்கொண்டார். அவரது வீட்டு அருகே வசிக்கும் 14 பேரும் அவரது வீட்டில் தஞ்சம் அடைந்தனர்.



    3 நாட்களாக அவர்கள் பகுதிக்கு உதவிக்கு யாரும் வரவில்லை. செல்போன் செயல்படாததால் இவர்களாலும் தங்கள் நிலைமையை மற்றவருக்கு தெரியப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் அங்கு படகில் சென்ற மீட்புபடையினர் மூலம் அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். #keralarain #keralafloods
    கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்து கடற்படையால் மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. #KeralaFloods
    திருவனந்தபுரம்:

    100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கேரள மாநிலம் கடுமையான மழை பாதிப்புகளை சந்தித்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மொத்த மாநிலமும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. ரெயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விமான போக்குவரத்து, பேருந்து சேவை என அனைத்தும் வெள்ளத்தின் அளவிலா பசிக்கு உணவானது.

    இதனால் பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்வை முற்றிலும் இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப் படுகின்றனர். மேலும், வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கி தவிக்கும் மக்களையும் ராணுவத்தினர் மீட்டு வருகின்றனர்.

    இந்நிலையில்,  ஆலுவா பகுதியில் உள்ள பல்வேறு குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. வெள்ள பாதிப்புகளினால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் தவித்துக் கொண்டிருக்க, அப்பகுதியில் இருந்த சஜீதா ஜபீல் கர்ப்பிணி பிரசவ வலி ஏற்பட்டதாக மீட்புப்படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து, ஹெலிகாப்டர் மூலம் அப்பகுதிக்கு விரைந்த கடற்படையினர், பத்திரமாக சஜீதாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். வெள்ளம், பிரசவம் என மரணத்தின் விளிம்பு வரை சென்று விட்டு வந்த சஜீதா ஜபீலுக்கு தற்போது அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

    கேரள மாநிலத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மீட்பு பணியில் முழுமூச்சாய் பணியாற்றும் கடற்படை உள்ளிட்ட அனைத்து மீட்புக்குழுவினருக்கும் பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். #KeralaFloods
    விருதுநகர் பி.ஆர்.சி. டெப்போ அருகே கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் பி.ஆர்.சி. டெப்போ அருகே டான்பெட் உரகிட்டங்கி உள்ளது. இங்குள்ள கழிவுநீர் தொட்டிக்குள் விருதுநகர் தாமரை தெருவை சேர்ந்த முத்து என்பவரது பசுமாடு விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த விருதுநகர் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் நிலைய அலுவலர் முருகன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் அங்கு வந்தனர்.

    கிழக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஆதீஸ்வரன் மற்றும் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் அரை மணி நேரம் போராடி பசுமாட்டை பத்திரமாக மீட்டனர். பசுவை உயிருடன் மீட்டவர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர். கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த பசுமாடு சினையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 
    பீகாரில் 110 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்புக்குழுவினர் இன்று பத்திரமாக உயிருடன் மீட்டனர். #ChildFellBorewell #Bihar
    பாட்னா:

    பொதுமக்கள் பயன்படுத்தப்படாமல் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூடாமல் அப்படியே விட்டு விடுவதால் அதில் குழந்தைகள் தவறி விழுந்து உயிரிழக்க நேரிடுகிறது. இதுகுறித்து தொடர்ந்து அறிவுறுத்தியும் சிலர் அதனை அஜாக்கிரதையாக விட்டுவிடுகின்றனர்.

    இதேபோல், பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 3 வயது பெண் குழந்தை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, திறந்து கிடந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டது.

    தகவலறிந்த கோட்வாலி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து  மீட்பு பணியில் ஈடுபட்டனர். 110 அடி ஆழம் கொண்ட அந்த ஆழ்துளை கிணற்றில் பக்கவாட்டில் பொக்லைன் எந்திரம் மூலம் பெரிய பள்ளம் தோண்டி குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. 

    இந்நிலையில், தொடர்ந்து 26 மணி நேரமாக நடைபெற்ற மீட்பு பணிகளால் இன்று மாலை அந்த பெண் குழந்தை உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டது என போலீசார் தெரிவித்தனர். #ChildFellBorewell #Bihar
    திண்டிவனம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 14 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன. #MotorCycle #Theft
    திண்டிவனம்:

    திண்டிவனம் நகரில் கடந்த சில மாதங்களாக மோட்டார் சைக்கிள்கள் அதிகளவில் திருட்டு போனது. இதுகுறித்த புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்படி திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் மேற்பார்வையில் திண்டிவனம் இன்ஸ்பெக்டர் சீனிபாபு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், ரங்கராஜ், மகாலிங்கம், பாண்டியன் உள்ளிட்ட தனிப்படை போலீசார் மோட்டார் சைக்கிள் திருடர்களை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்தநிலையில் இன்ஸ்பெக்டர் சீனிபாபு தலைமையிலான தனிப்படை போலீசார் திண்டிவனம் காவேரிப்பாக்கம் மொட்டையன் தெரு சந்திப்பு பகுதியில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் ஒருவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் திண்டிவனம் காவேரிப்பாக்கம் மிட்டாய் முனியன் தெருவை சேர்ந்த மம்முது மகன் சையத் இப்ராகிம்(வயது 38) என்பதும், அவர் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் திண்டிவனம் நகர பகுதியில் 15-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை திருடி, ஒரு சில மோட்டார் சைக்கிள்களை தனித்தனியாக பிரித்து அதன் உதிரிபாகங்களை விற்பனை செய்ததும் தெரிந்தது.

    இதையடுத்து சையத் இப்ராகிமை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 14 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் உதிரிபாகங்கள் மீட்கப்பட்டு, போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன.

    இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் திண்டிவனம் போலீஸ் நிலையத்துக்கு விரைந்து வந்து, சையத் இப்ராகிமிடம் இருந்து மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், உதிரிபாகங்களை பார்வையிட்டார். மேலும் திண்டிவனம் பகுதியில் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவரை கைது செய்த தனிப்படை போலீசாரை அவர் பாராட்டினார்.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், திண்டிவனம் நகர பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் புதிதாக 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திண்டிவனம் போலீஸ் நிலையத்துக்கு 13 போலீசார் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் முக்கிய விழா காலங்களில் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து பணிபுரிவார்கள். குயிலாப்பாளையம் பாபு கொலையானது சொத்து பிரச்சினைக்காக நடந்துள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகே நடுவழியில் நின்ற மின்சார ரயிலில் 2 மணி நேரமாக தவித்த கர்ப்பிணி பெண் உட்பட பயணிகள் கீழே இறங்குவதற்கு காவலர்கள் படிக்கட்டுகளாக மாறி உதவி செய்த நிகழ்வு பாராட்டுகளை பெற்றுவருகிறது. #ElectricTrain #TNPolice
    சென்னை:

    தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரெயில் ஒன்று, சிக்னல் கோளாறு காரணமாக கோட்டை மற்றும் பூங்கா ரெயில் நிலையங்களின் இடையே பாதி வழியில் நின்றது.  இதனையடுத்து, பெரும்பாலான பயணிகள் இறங்கிய நிலையில், படிகள் உயரமாக இருந்ததால், கர்ப்பிணி பெண் அமுதா மற்றும் முதியவர்கள் சிலர் கீழே இறங்க முடியாமல் 2 மணி நேரமாக தவித்து வந்தனர்.

    இதையடுத்து, தமிழக காவல் துறையை சேர்ந்த தனசேகரன், மணிகண்டன் ஆகியோர், அமுதா கீழே இறங்குவதற்காக ரெயில் பெட்டி வாசலில் இரு காவலர்களும் படிக்கட்டு போல குனிந்து கொண்டு, தங்கள் முதுகின் மீது அவரை இறங்குமாறு செய்தனர்.

    காவலர்களின் இந்த மனித நேயமிக்க செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது. #TNPolice #ElectricTrain
    கடந்த 6 மாதங்களில் வீடுகளை விட்டு ஓடிவந்து ரெயில் நிலையங்களில் தவித்த 540 குழந்தைகள் மற்றும் 52 பெண்களை மீட்டு பெற்றோர் மற்றும் உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
    சென்னை:

    ரெயில் நிலையங்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீட்கப்பட்டது தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தெற்கு ரெயில்வேயில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கடந்த 6 மாதத்தில் பயணிகள் தவறவிட்ட 1,385 உடமைகளை மீட்டு தந்துள்ளனர். ரெயில் பயணத்தின் போது மருத்துவ உதவி தேவைப்பட்ட 735 பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    பல்வேறு பிரச்சினைகளுக்காக வீடுகளை விட்டு ஓடிவந்து ரெயில் நிலையங்களில் தவித்த 540 குழந்தைகள் மற்றும் 52 பெண்களை மீட்டு பெற்றோர் மற்றும் உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். ரெயில் மூலம் கடத்திவரப்பட்ட ரூ.1.75 கோடி மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்ததோடு, குற்றத்தில் ஈடுபட்ட 133 பேரை கைது செய்தனர்.

    ரூ.5 லட்சம் மதிப்பிலான ரெயில்வே சொத்துக்களையும் மீட்டுள்ளனர். 51 ஆயிரத்து 701 விதிமீறல் சம்பவங்களில் தொடர்புடையோரிடம் இருந்து ரூ.1 கோடியே 32 லட்சத்து 5 ஆயிரத்து 256 அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. ரெயில்வே பாதுகாப்பு படையின் பாதுகாப்பு உதவி எண் ‘182’ மூலம் 368 புகார்களும், ‘டுவிட்டர்’ மூலம் 501 புகார்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
    ஆந்திர மாநிலம் கவுதமி ஆற்றில் பயணிகள் படகு நீர்ச்சுழலில் சிக்கி பாலத்தின் தூணில் மோதிய விபத்தில் படகில் இருந்த 30 பேர் ஆற்றுக்குள் விழுந்தனர். இதில் 23 பேர் மீட்கப்பட்ட நிலையில் 7 பேர் காணவில்லை. #AndhraPradesh #EastGodavri
    அமராவதி:

    ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பசுவுல்லங்கா என்னும் இடத்தில் இருந்து சலாதிவரி பாலெம் என்னும் இடம் நோக்கி பயணிகள் ஒரு படகு நேற்று மாலை கவுதமி ஆற்றில் சென்று கொண்டிருந்தது. இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் ஆவர்.

    இந்த நிலையில் நீர்ச்சுழலில் சிக்கிய அந்த படகு ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் பாலத்தின் தூண் ஒன்றின் மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த 30 பேரும் ஆற்றுக்குள் விழுந்து தத்தளித்தனர். இதையடுத்து விசாகப்பட்டினம் மற்றும் ராஜமகேந்திரவரம் நகரங்களில் இருந்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்களுடன் உள்ளூர் போலீசாரும் இணைந்து 23 பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

    எனினும் மற்ற 7 பேரை காணவில்லை. அவர்களின் கதி என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. அவர்களை தேடும்பணி தொடர்ந்து நீடித்து வருவதாக மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.  #AndhraPradesh #EastGodavri
    கைலாய யாத்திரை சென்ற 1,500 இந்தியர்கள் நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தவிக்கிறார்கள். 19 தமிழர்கள் உள்பட 143 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். #KailashMansarovar #Pilgrims #NepalRescued
    புதுடெல்லி:

    சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்திய பகுதியில் கைலாய மானசரோவர் ஏரி அமைந்துள்ளது. இங்கு சென்று வழிபட ஏராளமான பக்தர்கள் நேபாள நாட்டின் வழியாக யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

    இந்த ஆண்டும் கடந்த சில வாரங்களாக மானசரோவருக்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் புனித யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.

    மானசரோவர் அமைந்துள்ள திபெத்திய பகுதியிலும், அங்கு செல்வதற்கான நேபாள நாட்டின் மலைப்பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மோசமான வானிலை நிலவி வருகிறது. தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. நிலச்சரிவு காரணமாக பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன.



    இதன் காரணமாக மானசரோவருக்கு சென்ற இந்திய பக்தர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். குறிப்பாக நேபாள நாட்டின் சிமிகோட் பகுதியில் 525 பக்தர்களும், ஹில்சா என்னும் இடத்தில் 550 பேரும், திபெத்திய பகுதியில் 500 பக்தர்களும் என 1,500-க்கும் மேற்பட்டோர் மோசமான வானிலை காரணமாக தாங்கள் தங்கியிருந்த பகுதிகளில் இருந்து வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

    குறிப்பாக புனித யாத்திரை மேற்கொண்ட வயதான ஆண்களும், பெண்களும் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். தொடர்ந்து இதே நிலை நீடித்தால் இவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையும் உருவாகி உள்ளது.

    இதைத்தொடர்ந்து மத்திய அரசு மானசரோவருக்கு யாத்திரை மேற்கொண்டுள்ள இந்திய பக்தர்களை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் இறங்கியது.

    இதுதொடர்பாக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று நேபாள அரசுடன் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இந்திய பக்தர்களை மீட்பதற்கு ராணுவ ஹெலிகாப்டர்களை உடனடியாக அனுப்பி வைக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

    ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன்



    மேலும் அவர் தனது டுவிட்டர் பதிவில், மானசரோவருக்கு யாத்திரை மேற்கொண்டவர்களை பத்திரமாக மீட்பதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து தகவல் வெளியிட்டார்.

    அதில், நேபாளத்தில் சிக்கி பரிதவிக்கும் பக்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் உதவிகள் வழங்க நேரடி தொலைபேசி வசதி(ஹாட்லைன்) ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்து இருக்கிறார்.

    நேபாளத்தில் பரிதவிக்கும் இந்திய பக்தர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் ஹாட்லைனில் தொடர்பு கொள்வதற்கான போன் நம்பர்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது. பிரணவ் கணேஷ்(முதன்மை செயலாளர்-தூதரக அதிகாரி), 977-9851107006, தமிழில் அறிந்து கொள்ள ஆர்.முருகன், 977-9808500642 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய பக்தர்களை மீட்பது தொடர்பாக சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பதிவுகளில் கூறி இருப்பதாவது:-

    நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் நேபாள்கஞ்ச் மற்றும் சிமிகோட் பகுதிகளுக்கு தனது பிரதிநிதிகளை அனுப்பி வைத்துள்ளது. யாத்திரை சென்ற பக்தர்களுடன் அவர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். மேலும் அனைத்து பக்தர்களுக்கும் தேவையான உணவு மற்றும் தங்கும் இடங்களுக்கும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.



    சிமிகோட்டில் தங்கியிருக்கும் வயதில் மூத்தோர் அனைவருக்கும் உடற்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அவர்களுக்கு மருத்துவ உதவியும் அளிக்கப்படுகிறது. இதேபோல் ஹில்சா பகுதியில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தரும்படி அங்குள்ள போலீஸ் அதிகாரிகளை கேட்டுக் கொண்டு இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிமிகோட் பகுதியில் சிக்கித் தவிக்கும் பக்தர்களை மாற்றுப்பாதைகளில் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் இந்த பாதைகள் அனைத்தும் சிமிகோட்-நேபாள்கஞ்ச் பாதையைப் போன்றே சிக்கலானது என்றும் கூறப்படுகிறது.

    மேலும் ஹில்சா பகுதியில் மற்ற இடங்களை விட மிகவும் மோசமான வானிலை நிலவுவதால் இப்பகுதியில் இருந்து விரைவாக இந்திய பக்தர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை இந்திய தூதரகம் மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் சிமிகோட், ஹில்சா பகுதிகளில் நேற்றும் மோசமான வானிலை காணப்பட்டது. இதனால் இந்திய பக்தர்களை மீட்பது சற்று கடினம் என்று கருதப்பட்டது.

    எனினும் மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. சிமிகோட் மற்றும் ஹில்சா பகுதிகளில் இருந்து 143 இந்திய பக்தர்கள் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர். இவர்களில் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தீனதயாளன் என்பவர் உள்பட 19 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதற்காக 7 சரக்கு விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தமிழர்களுடன் சிமிகோட்டில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு புறப்பட்ட ஒரு விமானம் பிற்பகல் 1.55 மணிக்கு நேபாள்கஞ்ச் வந்தடைந்தது.

    பின்னர் அங்கிருந்து நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கு அவர்கள் காரில் அழைத்து செல்லப்பட்டனர். காத்மாண்டுவில் சிறிது ஓய்வுக்கு பின்னர், அவர்கள் சாலைமார்க்கமாகவே உத்தரபிரதேச மாநிலம் லக்னோவுக்கு புறப்பட்டு உள்ளனர்.

    அவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ஏற்பாடு செய்து தந்தனர். எனவே விரைவில் அவர்கள் சென்னைக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து மானசரோவருக்கு மாண்டியா, ராமநகரா, மைசூரு ஆகிய பகுதிகளில் இருந்து 290 பேர் கைலாய யாத்திரை சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.

    நேபாளத்தில் தவிக்கும் இவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி தனது மாநிலத்தின் சார்பில் பிரதிநிதிகளை நேபாள்கஞ்ச் பகுதிக்கு அனுப்பி வைத்து உள்ளார்.

    இதற்கிடையே, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ராமச்சந்திரன்(வயது 69) இந்த பயணத்தின்போது உயிர் இழந்தது, தெரிய வந்துள்ளது. இவர், தனது மனைவியுடன் மானசரோவருக்கு கடந்த மாதம் 18-ந்தேதி பயணம் மேற்கொண்டார்.

    நேற்று முன்தினம் மானசரோவரில் கிரிவலம் சென்றபோது கடும் குளிர் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு ராமச்சந்திரன் பரிதாபமாக உயிர் இழந்தார்.

    அவரது உடல் நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து இந்தியாவுக்கு கொண்டுவரும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படுவதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் கேரளாவைச் சேர்ந்த லீலா(வயது 56), ஆந்திராவின் சத்தியலட்சுமி ஆகிய 2 பெண்களும் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

    லீலா, மானசரோவருக்கு சென்றுவிட்டு தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு திரும்பியபோது இறந்துள்ளார். கேரளாவில் இருந்து யாத்திரை சென்ற 40 பேரில் இவரும் ஒருவர். ஆந்திர மாநிலத்தின் சத்திய லட்சுமி திபெத்திய பகுதியில் மரணம் அடைந்தது தெரிய வந்துள்ளது.
     #KailashMansarovar #Pilgrims #NepalRescued #Tamilnews 
    ×