search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ணகிரி"

    கிருஷ்ணகிரி அருகே தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் ரூ.5 கோடி மோசடி செய்த கணவன், மனைவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தர்கா ஹவுசிங் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 47). இவர் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இதில் ஓசூர் பசுமை நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்யா. இவரது மனைவி அகிலா ஆகிய 2 பேரும் பங்குதாரர்களாக உள்ளனர்.

    கடந்த மாதம் 16-ந்தேதி முதல் நிறுவனம் செயல்படாமல் இருந்தது தெரியவந்தது.

    உடனே வெங்கடேஷ் நிறுவனத்திற்கு சென்று கணக்குகளை சரிபார்த்தார். அப்போது ஆதித்யாவும், அவரது மனைவி அகிலாவும் சேர்ந்து நிறுவனம் சார்பில் பணம் கொடுக்கல், வாங்கலில் ரூ.5 கோடி வரை மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர்களிடத்தில் வெங்கடேஷ் செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது அவர்களது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. பின்னர் கணவன்-மனைவி 2 பேரையும் வெங்கடேஷ் பல இடங்களில் தேடிபார்த்தார். எங்கும் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.

    இந்த சம்பவம் குறித்து வெங்கடேஷ் கிருஷ்ணகிரி குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள ஆதித்யாவும், அகிலாவையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.  #Tamilnews

    தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்பட 5 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு இன்று 4-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    கிருஷ்ணகிரி:

    தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு விநாடிக்கு 800 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    அணையின் முழு உயரத்துக்கும் தண்ணீர் உள்ளதால், அணைக்கு வரும் நீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது.

    கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறக்கப்பட்டு வரும் தண்ணீர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை நீரையும் சேர்த்து கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1,068 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. புதிய மதகு அமைக்கும் பணிக்காக நேற்று மாலை 4 மணி அளவில் அணையில் 3 முறை அபாய ஒலி எழுப்பப்பட்டு விநாடிக்கு 1,900 கன அடி நீர், 3 சிறிய மதகுகள் வழியாக தென்பெண்ணை ஆற்றிலும் பாசனக் கால்வாய் வழியாகவும் திறக்கப்பட்டது.

    தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு இன்று 4-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக அணையின் உதவி செயற்பொறியாளர் நடராஜன் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி அணையில் தரைபாலம் மூழ்கி விட்டதால், அணைக்குள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தென்பெண்ணை ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக உள்ளதால், பொதுப்பணித்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர், அணையின் நீர்மட்டம் 34.80 அடியாக உள்ளது.



    பணியாளர் சீரமைப்பு குழுவை கலைக்க வலியுறுத்தி தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தர்மபுரி:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் அரசாணை 56-ன்படி அமைக்கப்பட்ட பணியாளர் சீரமைப்புக்குழுவினை கலைத்திட வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை தாங்கினார். சங்க மாவட்ட செயலாளர் சேகர் வரவேற்றார். சங்க நிர்வாகிகள் சிவப்பிரகாசம், புகழேந்தி, யோகராசு, இளங்குமரன், சரவணன், நெடுஞ்செழியன், மகளிர் அணி துணை அமைப்பாளர்இளவேனில் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் தமிழ்ச்செல்வி பணியாளர் சீரமைப்புக்குழுவின் செயல்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி பேசினார். இதில் அரசு ஊழியர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி உள்பட 7 தாலுகா அலுவலகங்கள் மற்றும் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி ஆகியவற்றின் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலகம் எதிரில் கிருஷ்ணகிரி கிளை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் அரசு ஆணை 56-ன்படி அமைக்கப்பட்ட பணியாளர் சீர்த்திருத்த குழுவை உடனடியாக ரத்து செய்திட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சந்திரன், மாவட்ட இணை செயலாளர்கள் காமராஜ், பெருமாள், வருவாய் ஊழியர் சங்கம் சலிம்பாஷா, ஊரக வளர்ச்சித்துறை கோபாலகண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள். முடிவில் மணி நன்றி கூறினார்.

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஓசூர், சூளகிரி, ஊத்தங்கரை தாலுகா அலுவலகங்கள் முன்பும் அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வருவாய்த்துறை, சாலைப்பணியாளர்கள் சங்கம், அங்கன்வாடி பணியாளர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 
    கிருஷ்ணகிரியில் நாள்தோறும் 4 மணி நேரம் வரையில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் கடந்த சில நாட்களாக தொடர் மின் வெட்டு காணப்படுகிறது. நாள்தோறும் 4 மணி நேரம் வரையில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. குறிப்பாக லேசான இடி-மின்னல் இருந்தால் கூட தொடர்ச்சியாக 2 முதல் 3 மணி நேரம் வரையில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் 10.30 மணி வரையில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. நேற்று மட்டும் காலை முதல் இரவு வரையில் 10 முறை மின்வெட்டு ஏற்பட்டது. இதில் 4 மணி நேரம் வரையில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    கிருஷ்ணகிரியில் மின்சார பராமரிப்பு பணிகளுக்காக மாதம் ஒரு முறை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரையில் மின்சாரம் நிறுத்துகிறார்கள். இது மட்டுமல்லாமல் அடிக்கடி பழுதான மின்கம்பங்கள் மாற்றுவதாகவும், மின்சார வயர்கள் மாற்றுவதாகவும் கூறி மின்சாரத்தை நிறுத்துகிறார்கள்.

    இந்த நிலையில் சிறிய மழை, இடி-மின்னலுக்கு கூட மின்சாரம் உடனடியாக நிறுத்தப்படுகிறது. இது குறித்து மின்வாரிய ஊழியர்களிடம் கேட்டால் அலட்சியமாக பதில் கூறுகிறார்கள். மேலும் மின்வாரிய அலுவலகங்களை தொடர்பு கொண்டாலும் யாரும் போனை எடுப்பதில்லை. தொடர் மின் வெட்டால் குழந்தைகள், வயதான முதியவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே உயர் அதிகாரிகள் இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வழக்கம்போல் பஸ்கள் ஓடின. பஸ் நிலையத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    தருமபுரி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    தருமபுரி மாவட்டத்தில் பஸ் நிலையம், சின்னசாமி நாயுடு தெரு, ஆறுமுக ஆசாரி தெரு, முகமது அலி கிளப் ரோடு, நேதாஜி பைபாஸ் சாலை, சேலம் மெயின்ரோடு, கிருஷ்ணகிரி மெயின்ரோடு, ஆகிய பகுதிகளில் வழக்கம்போல் ஓட்டல்கள், டீக்கடைகள், துணிக்கடைகள், பழக்கடைகள் உள்பட கடைகள் அடைக்கப்பட்டன.

    ஆனால் தருமபுரி ரூட் மற்றும் டவுன் பஸ் நிலையங்களில் உள்ளே மட்டுமே மருந்து கடைகள், பூக்கடைகள், டீக்கடைகள் உள்பட ஒரு சில கடைகள் மட்டுமே திறந்து இருந்தன.

    மேலும் பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் தருமபுரி மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கு வழக்கம் போல் டவுன் பஸ்களும் இயங்கின. இதேபோன்று தருமபுரியில் இருந்து சேலம், கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களுக்கும், கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஓசூர் ஆகிய பகுதிகளுக்கு வழக்கம் போல் இயங்கின. ஆட்டோக்களும் இயங்கின.

    பஸ் நிலையத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பென்னாகரம், பொம்மிடி, காரிமங்கலம் உள்பட பகுதிகளில் வழக்கம்போல் கடைகள் திறந்திருந்தன. ஆட்டோகளும், பஸ்களும் வழக்கம்போல் இயங்கின.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன. பஸ் நிலையங்களில் வழக்கம்போல் பஸ்கள் ஓடின. ஆட்டோக்களும் வழக்கம்போல் இயக்கப்பட்டன. பஸ் நிலையத்தில் பூக்கடை, ஓட்டல்கள், மருந்து கடை, டீக்கடை உள்பட கடைகள் திறந்திருந்தன. மேலும் பஸ் நிலையத்தில் எந்த அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.

    இதுபோன்று ராயக்கோட்டை, ஓசூர், வேப்பன அள்ளி, தேன்கனிக் கோட்டை, அஞ்செட்டி, தளி பகுதிகளில் வழக்கம்போல் கடைகள் திறந்து இருந்தன. ஒரு சில கடைகள் மட்டும் மூடியிருந்தன.

    தமிழகம் முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் மாணவர்கள் 92.51 சதவீதமும், மாணவிகள் 95.94 சதவீதம் என மொத்தம் 94.18 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வினை 80 மையங்களில் மாணவர்கள் 12 ஆயிரத்து 926பேரும், மாணவிகள் 12 ஆயிரத்து 234 பேரும் என மொத்தம் 25 ஆயிரத்து 160 பேர் எழுதினர். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி இன்று காலை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிட்டார்.

    இதில் 11 ஆயிரத்து 958 மாணவர்களும், 11 ஆயிரத்து 737 மாணவிகள் உட்பட 23 ஆயிரத்து 695 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 92.51 சதவீதமும், மாணவிகள் 95.94 சதவீதம் என மொத்தம் 94.18 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 93.12 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டை விட 1.06 சதவீதம் பேர் இந்த ஆண்டு அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 260 அரசுப்பள்ளிகளில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் 91.75 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    கிருஷ்ணகிரி அருகே கால்வாயில் மூழ்கி அண்ணன் - தங்கை பரிதாபமாக இறந்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை அருகே உள்ள சின்ன பேயனப்பள்ளியை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 45). விவசாயி. இவரது மனைவி கவிதா (40). இவர்களுக்கு தமிழ்ச்செல்வன் (8) என்ற மகனும், நந்தினி (3) என்ற மகளும் இருந்தனர். தமிழ்ச்செல்வன் அருகில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்த நிலையில் நேற்று நரசிம்மன் அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் பூப்பறிப்பதற்காக சென்றார். மேலும் ஆட்டையும் மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றார். அப்போது சிறுவன் தமிழ்ச்செல்வனும், சிறுமி நந்தினியும் உடன் சென்றனர். அந்த நேரம் நரசிம்மன் மேய்ச்சலுக்காக கொண்டு சென்ற ஆடு வேறு பக்கம் சென்றது.

    இதைப் பார்த்த நரசிம்மன் அந்த ஆட்டை பிடித்து வருமாறு தமிழ்ச்செல்வனிடம் கூறினார். இதனால் தமிழ்ச்செல்வனும், நந்தினியும் ஆட்டை பிடிப்பதற்காக ஓடிச் சென்றனர். அப்போது அவர்கள் அந்த பகுதியில் உள்ள கே.ஆர்.பி. அணை தண்ணீர் செல்லும் கால்வாயில் இறங்கினர். அந்த நேரம் இருவரும் சேற்றில் சிக்கினார்கள்.

    பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் 2 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு நரசிம்மன் அங்கு ஓடி சென்றார். ஆனால் அதற்குள் தமிழ்ச்செல்வனும், நந்தினியும் கால்வாயில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். குழந்தைகளின் உடலை நரசிம்மன் மற்றும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போது 2 பேரின் உடல்களை பார்த்து நரசிம்மன் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி அணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்கள். அவர்கள் பலியான சிறுவன் தமிழ்ச்செல்வன், சிறுமி நந்தினி ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கிருஷ்ணகிரி அணை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.கால்வாயில் மூழ்கி அண்ணன் - தங்கை பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் -2 தேர்வு எழுதியவர்களில் மாணவர்கள் 83.60 சதவீதம் பேரும், மாணவிகள் 90.56 சதவீதம் பேரும் என மொத்தம் 87.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். #PlusTwoExamResults #Plus2Result
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் 176 பள்ளிகளில் இருந்து 22 ஆயிரத்து 467 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத தகுதி பெற்று 10 ஆயிரத்து 899 மாணவர்களும்,11 ஆயிரத்து 311 மாணவிகளும் என மொத்தம் 22 ஆயிரத்து 210 பேர் ஓசூர் கல்வி மாவட்டத்தில் 27 மையங்களிலும், கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 39 மையங்களிலும் என மொத்தம் 66 மையங்களில் தேர்வு எழுதினர்.

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று காலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

    தேர்வு முடிவுகளில் 9ஆயிரத்து 112 மாணவர்களும், 10 ஆயிரத்து 240 மாணவிகள் என மொத்தம் 19 ஆயிரத்து 352 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் -2 தேர்வு எழுதியவர்களில் மாணவர்கள் 83.60 சதவீதம் பேரும், மாணவிகள் 90.56 சதவீதம் பேரும் என மொத்தம் 87.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கடந்த ஆண்டு 88.02 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு 87.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பதால் இது கடந்த ஆண்டைவிட 0.89 சதவீதம் பேர் குறைவாக தேர்ச்சி அடைந்துள்ளனர். #PlusTwoExamResults #PlusTwoResults #Plus2Result
    கிருஷ்ணகிரி - திண்டிவனம் வரை தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு ரூ.262 கோடியே 67 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அசோக்குமார் எம்.பி. கூறினார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சாலை பாதுகாப்பு கண்காணிப்புக்குழு கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கண்காணிப்புக்குழுத் தலைவர் கே.அசோக்குமார் தலைமையில் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் கதிரவன், போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், பர்கூர் சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அசோக்குமார் எம்.பி. பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் 6 வழிச்சாலையில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதை தடுக்க விபத்து நடைபெறும் இடங்களில் சாலையை அகலப்படுத்துதல், மேம்பாலங்கள், உயர்மட்ட நடைபாதைகள், மின் கோபுரங்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி முதல் திண்டிவனம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு ரூ.262 கோடியே 67 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் பணிகள் தொடங்க உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உறுதி அளித்துள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 5 தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் உள்ள 191.20 கிலோ மீட்டர் சாலையில் விபத்துகள் ஏற்படாத வகையில் மேம்பாலங்கள், உயர் மின்கோபுரங்கள், சர்வீஸ் சாலைகளில் வேகத்தடைகள் போன்ற பணிகள் விரைந்து மத்திய அரசின் அனுமதி பெற்று செய்து தரப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் தேவையான இடங்களில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, தேசிய நெடுஞ்சாலை திட்ட அலுவலர்கள் சிவாஜி, நாராயணன், ரிலையன்ஸ் மேலாளர் முத்துகுமார், மண்டல போக்குவரத்து ஆணையர் செந்தில்நாதன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அசோகன், செந்தில்வேலவன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கண்ணன் (கிருஷ்ணகிரி), சங்கர் (தேன்கனிக்கோட்டை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    அகரம் வெப்பாளம்பட்டி துர்க்கம் அருகே பழமையான பாறை ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே அகரம் வெப்பாளம்பட்டி கிராமத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மலை உள்ளது. இந்த மலை மீது மராட்டியர் காலத்தில் பாதி கட்டப்பட்ட நிலையில் கோட்டை சுவர்கள் உள்ளன. மேலும் நீரை தேக்க சிறிய தாழ்வான பகுதியும் உள்ளது. இந்த மலைப்பகுதியில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆவண பதிவுக்குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் மலையின் பாதி உயரத்தில் இயற்கையாக அமைந்துள்ள குகையில் பழமையான பாறை ஓவியங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது குறித்து கிருஷ்ணகிரி வரலாற்று ஆவண பதிவுக்குழு நிர்வாகி தமிழ்செல்வன் கூறியதாவது:-

    இந்த பாறை ஓவியங்கள் தேர் போன்ற அமைப்புடனும், கோவில் போன்ற அமைப்புடனும் காணப்படுகிறது. இதன் அருகில் நட்சத்திரம் போன்ற அமைப்புடன் பாறை ஓவியங்கள் உள்ளன. இவை வெண்சாந்து ஓவியங்களாக உள்ளது. இது 3 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஓவியங்கள் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது வரலாற்று ஆவண பதிவுக்குழு நிர்வாகிகள் டேவிஸ், மதிவாணன், சென்னப்பன், காவேரி, ரவி, பாலாஜி மற்றும் பலர் உடன் இருந்தனர். 
    ×