search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தம்பிதுரை"

    தமிழக அமைச்சர்கள் ஊழல் செய்திருந்தால் லோக் ஆயுக்தாவில் புகார் செய்து நிரூபிக்கலாம் என்று பாரதிய ஜனதாவுக்கு தம்பிதுரை பதில் அளித்துள்ளார்.#ADMK #ThambiDurai #BJP
    கரூர்:

    கரூரில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போதே எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்க தமிழகத்தில் 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதன் விவரம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் மத்திய அரசுதான் பல்வேறு காரணங்களால் இத்திட்டத்தை கொண்டு வராமல் காலம் தாழ்த்தி இருக்கிறது. தற்போது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க உள்ளது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்ததை பெருமையாக பேசி வருகின்றனர். அதனை மக்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் நெருங்கி வருவதால் இதனை செயல்படுத்துவதாக கூட எடுத்து கொள்ளலாம்.

    பிரதமர் நரேந்திரமோடி எங்கள் நண்பர். ஆனால் பா.ஜ.க. தலைவர்கள் எங்கள் ஆட்சியை பற்றி குறை சொன்னால் ஏற்றுக் கொள்ளமாட்டோம். தமிழகத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி வருவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அதனை தடுக்க ஏதேனும் இதுவரை முயற்சி செய்துள்ளாரா? இவை அனைத்தும் அ.தி.மு.க. அரசை குறை கூறும் நோக்கில் கூறப்படும் பொய் குற்றச்சாட்டுகள். ஆதாரம் இருந்தால் பொன். ராதாகிருஷ்ணன் நிரூபிக்கட்டும்.


    சென்னை வந்திருந்த பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா தமிழகத்தில் ஊழல் மலிந்து இருப்பதாக கூறியுள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்போம் என்று கூறிய பா.ஜ.க. இதுவரை எத்தனை ஊழல் குற்றச்சாட்டுகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

    2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மேல்முறையீடு செய்ய பா.ஜ.க. அரசு மெத்தனமாக செயல்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் நடந்த ஊழல்களில் எதற்கான தீர்வை பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ளது. தமிழக அமைச்சர்கள் ஊழல் செய்ததற்கான ஆதாரங்கள் இருந்தால் அதை நிரூபிக்க வேண்டும். லோக் ஆயுக்தாவில் பா.ஜ.க.வினர் புகார் தெரிவிக்கலாம். எதையும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 20 லட்சம் கோடி ரூபாய் நிதி உதவி இதுவரை கிடைக்கவில்லை. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே தேர்தல் என்ற மத்திய அரசின் கொள்கை ஏற்புடையது அல்ல. தமிழக கலாச்சாரத்திற்கு இந்த கொள்கை ஒத்துவராது. உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் தி.மு.க. தான் கோர்ட்டுக்கு சென்றது. அதற்காக உள்ளாட்சி நிதி ரூ.2ஆயிரம் கோடியை பெற முடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் தம்பிதுரையிடம் நிருபர்கள், அ.தி.மு.க. கட்சியை கைப்பற்றி இரட்டை இலை சின்னத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை தலைவர் தீபா கூறியுள்ளாரே? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், தீபா யார்? அவர் யார் என்றே எனக்கு தெரியாது என்றார்.

    பேட்டியின் போது போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்,கீதா எம்.எல்.ஏ. உடனிருந்தனர். #ADMK #ThambiDurai
    நீட் தேர்வில் எந்த சீர்திருத்தம் கொண்டு வந்தாலும் அதனை ஏற்றுகொள்ளமாட்டோம் என்று கரூரில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். #NEET
    கரூர்:

    கரூரில் இன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது :-

    தமிழகத்தில் 2021ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சி உள்ளது. 5ஆண்டுக்குத்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். அவர்களுக்கு செய்யவேண்டியது இன்னும் நிறைய உள்ளது. அதனால்தான் 2019 பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கு கொள்கை ரீதியாக எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

    2024 முதல் பாராளுமன்றம், சட்டமன்றத்திற்கு ஒருங்கிணைந்த தேர்தல் என்று முடிவெடுத்தால், முன்கூட்டியே தேர்தல் தேதி அறிவித்து, அதற்கு அனைவரும் உடன்பட்டால் நாங்களும் உடன்படுவோம். எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால் இடைத்தேர்தலே இருக்கக்கூடாது என்பதுதான்.


    நீட் தேர்வில் எந்த சீர்திருத்தம் கொண்டு வந்தாலும் அதனை நாங்கள் ஏற்றுகொள்ளமாட்டோம். நீட் தேவையில்லை என்பதுதான் எங்களது கொள்கை முடிவு. அதில் நாங்கள் வெற்றி பெறுவோமா? தோல்வி அடைவோமா? என்பது மத்திய அரசின் கையில்தான் உள்ளது. இந்த விவகாரத்தில் நாங்கள் மாணவர்களை திசை திருப்ப விரும்பவில்லை.

    அனைத்து வி‌ஷயங்களிலும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறோம் என்று கூறுவது தவறு. ஜி.எஸ்.டி. விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்தும், பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பும் செய்துள்ளோம். இது போல் பல்வேறு விவகாரங்களில் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். தமிழ் உணர்வு, தமிழர் உரிமை, மாநில சுயாட்சி ஆகியவற்றை கொள்கையாக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #NEET #ThambiDurai
    ரூ.268 கோடியில் நடந்து வரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டிற்குள் முடிவடையும் என தம்பிதுரை மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தெரிவித்தனர்.
    கரூர்:

    தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் கரூரில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி கரூர் காந்தி கிராமம் பகுதியில் ரூ.268 கோடி மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரியின் கட்டுமான பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த பணிகளை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மாவட்ட கலெக்டர் அன்பழகனுடன் சென்று நேற்று ஆய்வு செய்தனர். அப்போது மருத்துவக்கல்லூரி கட்டிட வரைபடத்தை பார்வையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கினர். தற்போது கட்டிடத்திற்கு அஸ்திவாரம் போடப்பட்டு கம்பிகள் கட்டும் பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    கரூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகுறித்து பாராளுமன்ற துணை சபாநாயகர் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆகியோர் கூறியதாவது:-

    கரூரில் 800 படுக்கைகள் கொண்ட 150 மாணவ- மாணவிகள் பயிலக்கூடிய மருத்துவக்கல்லூரி கட்டுவதற்காக கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி அன்று பணிகள் தொடங்கப்பட்டு விரைந்து நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அடுத்த ஆண்டு (2019) மார்ச் மாதத்திற்குள் முடித்திட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

    ரூ.60 கோடியே 23 லட்சம் மதிப்பில் 3 லட்சத்து 20 ஆயிரம் சதுரஅடி பரப்பில் வகுப்பறை கட்டிடங்களும், ரூ.145 கோடியே 94 லட்சம் மதிப்பில் மருத்துவமனை கட்டிடங்களும், ரூ.61 கோடியே 83 லட்சம் மதிப்பில் மாணவ- மாணவிகள் தங்கும் விடுதிகளும் என ரூ.268 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மருத்துவக்கல்லூரி நகரின் மையப்பகுதியான காந்திகிராமத்தில் 17.45 ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெற்று வருகிறது. இக்கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இந்த ஆய்வின் போது கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரோஸிவெண்ணிலா, மருத்துவ கட்டிடங்கள் செயற்பொறியாளர் மாதய்யன், உதவி செயற்பொறியாளர்கள் தவமணி, சிவக்குமார், மஹாவிஷ்ணு மற்றும் அ.தி.மு.க. மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட துணை செயலாளர் பி.சிவசாமி, நகர செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் வி.செல்வராஜ், முன்னாள் மாவட்ட மாணவரணி செயலாளர் என்.தாணேஷ், தொழிற்சங்க செயலாளர் பொரணி கணேசன், கரூர் நகர வங்கி தலைவர் ரேணுகா மோகன்ராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    முன்னதாக கரூர் நகராட்சி வார்டு எண் 39 மற்றும் 48-க்கு உட்பட்ட தாந்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெறும் முகாமில் கலந்து கொண்டனர். அப்போது அந்த பகுதி மக்கள் அடிப்படை வசதிகள் மற்றும் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை நேரடியாக கொடுத்து முறையிட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசுகையில், தாந்தோன்றிமலை உள்ளிட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். 39-வது வார்டில் குடிநீர், சாலை, கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் ரூ.2 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். இந்த முகாமில் நகராட்சி ஆணையர் அசோக்குமார், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் வருத்தம் அளிப்பதாக உள்ளது என்று கிருஷ்ணகிரியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். #Thoothukudifiring #SterliteProtest #ThambiDurai
    கிருஷ்ணகிரி:

    துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நிருபரிடம் கூறியதாவது:-

    ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஆனால் அவர்கள் உச்சநீதிமன்றத்திற்கு சென்று ஆலையை திறக்க அனுமதி பெற்றனர். மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டதால்தான் இந்த ஆலையை மூட உத்தரவிட்டதாக அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கூறினார்.

    அவரது வழியில் விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் மக்கள் நலனுக்காக மட்டும் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. மக்கள் நலன் பாதிக்கும் எந்த திட்டத்தையும் செயல்படுத்தாது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக கூறி உள்ளார்.

    தூத்துக்குடியில் நடந்த சம்பவம் வேறு மாதிரியான ஒன்று. ஆகவேதான் தமிழக முதல்-அமைச்சர் அதற்கு உரிய நிவாரணம் வழங்கவும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடிக்கு அதிகாரிகள் முதலில் செல்வார்கள். அங்கு உள்ள நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்த பின்பு அமைச்சர்கள் சென்று அங்குள்ள மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நிவாரணப் பணிகளை மேற்கொள்வார்கள்.

    தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது குறித்து எனக்கு தெரியாது. இந்த துயர சம்பவம் எங்கள் எல்லோருக்கும் வருத்தமளிப்பதாக உள்ளது. எனவே தான் அதற்கு ஒரு நிவாரணம் தேடும் விதமாக அவர்களுக்கு உரிய உதவிகளை வழங்குவதாகவும், வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த சம்பவம் எங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.


    காவிரி பிரச்சனையில் ஒத்துழைக்க தயார் என்று குமாரசாமி கூறிவிட்டார். நீதிமன்றம் கூறியுள்ளபடி செயல்பட தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் தண்ணீரை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. அதன்படி அவர் செயல்படுவார் என்று நம்புகிறோம்.

    கர்நாடகாவில் ஒரு மாநில கட்சியின் தலைவர்தான் முதல்-அமைச்சர் ஆகி உள்ளார். அங்கு மாநில கட்சியின் ஆட்சிதான் நடைபெறுகிறது. இந்தியாவில் அந்தந்த மாநில உணர்வுகளுக்கு ஏற்ப தான் தலைவர்கள் உருவாகி வருகிறார்கள். அதேபோல் தமிழகத்தை பொறுத்தவரையில் எந்த தேசியக்கட்சிக்கும் வாய்ப்பு கிடையாது. அ.தி.மு.க. தொடர்ச்சியாக ஆட்சி செய்யும்.

    தமிழகத்தைப் பொருத்த வரையில் திராவிட கட்சிகள் மட்டும் தான் ஆட்சி அமைக்கும் என்பதற்கு கர்நாடகா தேர்தலில் தேசிய கட்சி தலைவர்கள் யாரும் முதல்வராக வர முடியாததே எடுத்துக்காட்டு ஆகும். தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் இப்படித்தான் நடந்து கொண்டு வருகிறது.

    கூட்டாட்சி தத்துவத்தை ஏற்று அனைவரும்செயல்பட வேண்டும். அந்தந்த மாநிலத்தின் உரிமையை தர வேண்டும். மாநில கலாச்சாரத்தையும் மொழியையும் மதிக்க வேண்டும் என்பதுதான் பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கையாகும். அந்த வகையில் தான் அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது.

    மாநில உரிமைகளை பெற்று அந்தந்த மொழிகளை காப்பது நம் கடமையாகும். தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழினம் இவற்றை காக்க என்றென்றும் அ.தி.மு.க. போராடும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thoothukudifiring #SterliteProtest  #ThambiDurai
    ×