search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்களவை"

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குள் இந்த ஆண்டு 69 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக மக்களவையில் மத்திய மந்திரி தெரிவித்துள்ளார். #LokSabha #JKInfiltration
    புதுடெல்லி:

    பயங்கரவாதிகள் ஊடுருவல் தொடர்பாக மக்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு உள்துறை இணை மந்திரி ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் வருமாறு:-

    பயங்கரவாதத்தை பாதுகாப்பு படை வெற்றிகரமாக சமாளித்துள்ளது. இந்த ஆண்டில் ஜூன் மாதம் வரை 113 முறை பயங்கரவாதிகள் எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றனர். 69 பயங்கரவாதிகள் ஊடுருவினர். இதில் 14 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 50 பேர் எல்லை வழியாகவே திரும்பிச் சென்றுள்ளனர்.



    2014ம் ஆண்டில் இருந்து 2018ம் ஆண்டு ஜூலை வரை 694 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகள் மற்றும் சந்தேக நபர்கள் என மொத்தம் 368 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டில் ஜூலை வரை 308 வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 90 என்கவுண்டர்களில் 113 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்பு படை தரப்பில் 49 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

    ஜம்மு காஷ்மீரில் உள்ள மக்களில் சிலர் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதாக தகவல்கள் வந்துள்ளன. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இவ்வாறு மத்திய மந்திரி தெரிவித்தார். #LokSabha #JKInfiltration
    பீகாரில் பாதுகாப்பு இல்லத்தில் நடந்த பாலியல் வன்முறை தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பிரச்சனை எழுப்பி வெளிநடப்பு செய்தனர். #LSWalkout #BiharShelterHomeIncident
    புதுடெல்லி:

    பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக மக்களவையில் இன்று எதிர்க்கட்சி எம்பிக்கள் பிரச்சினை எழுப்பினர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பீகார்  மாநில காங்கிரஸ் உறுப்பினர் ரஞ்சீத் ரஞ்சன், ராஷ்டிரிய ஜனதா தளம் உறுப்பினர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் யாதவ், சவுகதா ராய் (திரிணாமுல் காங்.) உள்ளிட்ட எம்.பி.க்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து முழக்கமிட்டனர். 

    பீகார் பாலியல் வன்கொடுமை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள போதிலும், அனைத்து ஆதாரங்களும் அழிக்கப்பட்டபிறகு, எப்படி நீதி கிடைக்கும்? என ரஞ்சீத் ரஞ்சன் கேள்வி எழுப்பினார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுவிட்டதாகவும், அவர்களில் முக்கியமான ஒரு சிறுமியை காணவில்லை என்றும் ரஞ்சீத் ரஞ்சன் குற்றம்சாட்டினார். 

    உறுப்பினர்களின் தொடர் அமளியால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. அவர்களை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சமாதானம் செய்தார். எனினும், இந்த சமாதானத்தை ஏற்காத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். #LSWalkout #BiharShelterHomeIncident
    தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சாசன அங்கீகாரம் அளிக்கும் திருத்த மசோதா பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. #MonsoonSession #OBC
    புதுடெல்லி:

    பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் கொண்டு வரப்பட்டது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம். ஆனால், இதுதொடர்பான மசோதாவுக்கு அரசியல் சாசன அங்கீகாரம் இதுவரை வழங்கப்படவில்லை. 

    தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியலமைப்பு சட்ட அங்கீகாரம் வழங்கப்படாததால், பிற பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்கள் பல வகைகளில் காவு கொடுக்கப்பட்டன. அம்மக்களின் நலன்களை பாதுகாக்கும் நோக்குடன் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரைகளை வழங்கினாலும் அதற்கு அரசியலமைப்பு சட்ட அங்கீகாரம் இல்லை என்பதால் அந்தப் பரிந்துரைகள் ஏற்கப்படவில்லை.

    இந்நிலையில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சாசன அங்கீகாரம் அளிக்கும் திருத்த மசோதா பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு 406 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். #Parliment #Loksabha #OBC
    மக்களவையில் இன்று எஸ்சிஎஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், என்ஆர்சி உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். #NRCIssue #SCSTAct #LokSabhaProtests
    புதுடெல்லி:

    மக்களவை இன்று கூடியதும் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு, முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

    எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலிமைப்படுத்தும் சட்டத்திருத்த மசோதாவை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார். அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) வரைவு பட்டியல் வெளியான பிறகு, வங்கதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு தொந்தரவு கொடுக்கப்படுவதாகவும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சுகதா ராய் வலியுறுத்தினார். இதேபோல் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தெலுங்குதேசம் கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டனர்.



    இப்படி பல்வேறு விவகாரங்களை முன்வைத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் நிலவியது. எனினும், கேள்வி நேரத்தை ஒத்திவைக்க மறுத்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன், அவையை தொடர்ந்து நடத்தினார்.

    இதனால் அதிருப்தி அடைந்த உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் அவர்களை அமைதியாகச் சென்று தங்கள் இருக்கைகளில் அமரும்படி சபாநாயகர் கேட்டுக்கொண்டார். ஜீரோ அவரில் அனைத்து கட்சிகளுக்கும் பேச வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். அதன்பிறகு உறுப்பினர்கள் தங்கள் இருக்கைகளுக்கு திரும்பினர். #NRCIssue #SCSTAct #LokSabhaProtests
    பரங்கிமலை ரெயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 30 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என மக்களவையில் அ.தி.மு.க. எம்பி வலியுறுத்தினார். #ChennaiTrainAccident #ADMK
    புதுடெல்லி:

    சென்னையில் மின்சார ரெயில் படிக்கட்டில் பயணம் செய்த சிலர், பரங்கிமலை ரெயில் நிலையத்தில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி கீழே விழுந்தனர். இதில் 4 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர்.

    ரெயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதேபோல் மத்திய அரசும் நிவாரணம் வழங்க வேண்டும் என அ.தி.மு.க. வேண்டுகோள் விடுத்து உள்ளது.



    மக்களவையில் இன்று அ.தி.மு.க. எம்.பி. ராமச்சந்திரன், பரங்கிமலை விபத்து குறித்து பேசினார். அப்போது, ரெயில் விபத்தில் உயிரிந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 30 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

    பரங்கிமலையில் நடந்த விபத்து ரெயில் பயணிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணித்ததால் உயிரிழக்க நேரிட்டதாக குற்றம்சாட்டப்பட்டாலும், தண்டவாளத்தை ஒட்டி உள்ள தடுப்புச் சுவர்தான் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அந்த சுவரை அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். #ChennaiTrainAccident #ADMK
    செக் (காசோலை) மோசடி வழக்குகள் நீண்ட காலம் இழுத்தடிக்காமல் விரைவில் முடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. #LokSabha #FraudCase #BillPassed
    புதுடெல்லி:

    செக் (காசோலை) மோசடி வழக்குகள் நீண்ட காலம் இழுத்தடிக்காமல் விரைவில் முடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக செலாவணி மசோதா 1881-ல் திருத்தம் செய்து புதிய மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா நேற்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

    இதன் மூலம் செக் மோசடி வழக்குகளில் இருக்கும் தேவையற்ற சட்ட நடைமுறைகள் களையப்படுகின்றன. அத்துடன் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், இந்த மோசடியில் ஈடுபட்டவரிடம் இருந்து பாதிக்கப்பட்டவருக்கு 20 சதவீதத்துக்கு மிகாமல் நிவாரணம் பெற்று தரப்படும். அதேநேரம் குற்றம் சாட்டப்பட்டவர் இறுதியில் விடுவிக்கப்பட்டால், அவர் வழங்கிய நிவாரணம் வட்டியுடன் திரும்ப கிடைக்கவும் வசதி செய்யப்பட்டு உள்ளது.

    முன்னதாக இந்த மசோதாவை தாக்கல் செய்த நிதித்துறை இணை மந்திரி சிவ் பிரசாத் சுக்லா, காசோலைகள் மற்றும் வங்கி நடைமுறைகள் மீதான நம்பகத்தன்மையை இந்த மசோதா காக்கும் என்று கூறினார்.  #LokSabha #FraudCase #BillPassed  #tamilnews 
    பிரதமர் இருக்கையில் அமர்ந்திருக்கும் பொழுது மோடியை ராகுல் கட்டித்தழுவியது அவையின் மாண்பை குறைக்கும் செயல் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார். #LokSabha #NoConfidenceMotion #PMModi #RahulGandhi #SumitraMahajan
    புதுடெல்லி:

    மக்களவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போது மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து பேசினார்.

    தனது உரையை முடித்த பின்னர், யாரும் எதிர்பாராத வகையில் பிரதமர் மோடியின் இருக்கைக்கு சென்ற ராகுல் காந்தி மோடியை கட்டிப் பிடித்தார். பதிலுக்கு மோடியும் சிரித்துக் கொண்டே ராகுல் காந்தியின் கையை பிடித்து குலுக்கி அவருக்கு  வாழ்த்து தெரிவித்தார்.

    இந்நிலையில், பிரதமர் இருக்கையில் அமர்ந்திருக்கும் பொழுது மோடியை ராகுல் கட்டித்தழுவியது அவையின் மாண்பை குறைக்கும் செயல் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், பிரதமர் இருக்கையில் அமர்ந்திருக்கும் பொழுது அவரை ராகுல் காந்தி கட்டித் தழுவியது ஏற்கத்தக்கது அல்ல. இது அவையின் மாண்பை குறைக்கும் செயல்.

    அவையில் மாண்புகள் நிச்சயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். வெளியில் இருந்து வந்து யாரும் அவைக்கு பாதுகாப்பு தரமுடியாது. அவையில் இருக்கும் நீங்கள் தான் இதற்கு முழு பொறுப்பு என தெரிவித்துள்ளார். #LokSabha #NoConfidenceMotion #PMModi #RahulGandhi #SumitraMahajan
    நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசு மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். #NoConfidenceMotion #RahulGandhi #NarendraModi
    புதுடெல்லி:
     
    பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று காலை நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்காமல் கூட்டணி கட்சியான சிவசேனா கட்சியினர் புறக்கணித்தனர்.

    இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று பேசினார். 
    அப்போது அவர் பேசுகையில், ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் பல கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் தருவதாகக் கூறி ஏமாற்றியுள்ளார் மோடி. விவசாயிகளும், இளைஞர்களும் மத்திய அரசின் பொய் வாக்குறுதிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    மேலும், நான் பிரதமர் இல்லை. பிரதம சேவகன் என்றார் மோடி. அமித்ஷா மகன் ஜெய் ஷா விவகாரத்தில் மத்திய அரசு மெளனம் காப்பது ஏன்?

    பிரதமர் நாட்டுக்காக உழைக்கவில்லை; சில தொழிலதிபர்களுக்காக உழைக்கிறார். ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பிரதமர் மோடி ஏமாற்றம் மட்டுமே அளித்துள்ளார்.

    ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் மூலம் மோடியின் நண்பர் பலனடைந்துள்ளார். என் கண்ணைப் பார்த்து பிரதமர் பேசவேண்டும்; ஆனால் அதை தவிர்க்கிறார். பிரதமரின் புன்னகையில் ஒரு பதற்றம் தெரிகிறது 

    ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் உண்மையை வெளிப்படையாக விளக்கவேண்டும் என்றார்.

    அமித்ஷா மகன் குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்த போது மக்களவையில் பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து சபை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

    இடைவேளைக்கு பின்னர் பேசிய ராகுல் காந்தி, என் மீது உங்களுக்கு கோபம் உள்ளது. நீங்கள் என்னை பப்பு என அழைக்கலாம். ஆனால், நான் உங்கள் மீது கோபப்பட மாட்டேன்.

    அவை ஒத்திவைக்கப்பட்ட இடைவேளையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மட்டுமல்லாது உங்கள் கூட்டணி கட்சி எம்.பி.க்களும் வந்து என்னிடம் சரியான கேள்விகளை கேட்டீர்கள் என பாராட்டு தெரிவித்தனர்” என ராகுல் கூறினார்.


    தனது பேச்சில் மோடியை கடுமையாக ராகுல் தாக்கினாலும், பேசி முடித்ததும் நேராக மோடியின் இருக்கைக்கு சென்று அவரை கட்டி அணைத்தார். மோடியும் சிரித்துக்கொண்டே ராகுலின் கையை பிடித்து குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.  #NoConfidenceMotion #RahulGandhi  #NarendraModi 
    பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. இந்த விவாதத்தில் பங்கேற்காமல் சிவசேனா கட்சியினர் புறக்கணித்துள்ளனர். #MonsoonSession #NoConfidenceMotion #Sivasena
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் சார்பில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

    தெலுங்கு தேசம் கட்சி சார்பிலும் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதில் தெலுங்குதேசம் அளித்த நோட்டீசை சபாநாயகர் ஏற்றுக்கொண்டு வெள்ளிக்கிழமை விவாதம் நடத்த அனுமதி அளித்தார். 

    அதன்படி, பாராளுமன்றத்தில் மக்களவை இன்று காலை 11 மணிக்கு கூடியதும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் தொடங்கியது. 

    முன்னதாக, இந்த விவாதத்தில் பங்கேற்பது தொடர்பாக சிவசேனா கட்சியின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சிவசேனா நம்பிக்கையில்லா தீர்மானத்தை புறக்கணித்துள்ளது. #MonsoonSession #NoConfidenceMotion #Sivasena
    நீலகிரி மலை ரெயிலால் கடந்த இரண்டு ஆண்டுகளில் ரெயில்வேக்கு 54 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என மக்களவையில் மத்திய இணை மந்திரி தெரிவித்துள்ளார். #Parliment #Loksabha #NilgiriMountainRail
    புதுடெல்லி:

    தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்பட்டு வரும் மலை ரெயில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.

    தமிழகத்துக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அனைவரும் கண்டிப்பாக நீலகிரி மலை ரெயிலில் பயணம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவையில் இன்று பேசிய ரெயில்வே துறை இணை மந்திரி மனோஜ் சின்ஹா, நீலகிரி மலை ரெயிலால் 2 ஆண்டுகளில் 54 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், நீலகிரி மலை ரெயிலை இயக்கியதன் மூலம் ரெயில்வே துறைக்கு கடந்த 2017-18ம் நிதியாண்டில் 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதேபோல், கடந்த 2016 -17ம் ஆண்டில் 26.75 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

    யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளதால் இந்த மலை ரெயிலை தொடர்ந்து இயக்குவோம் எனவும் தெரிவித்தார். #Parliment #Loksabha #NilgiriMountainRail
    ×