search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வன்முறை"

    சபரிமலை விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி பினராயி விஜயனின் சொந்த ஊரான பினராயி என்ற இடத்தில் இருக்கும் அவருடைய வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. #KeralaViolent #Sabarimala #PinarayiVijayan
    கண்ணூர்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்த விவகாரத்தால் கேரள மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. கம்யூனிஸ்டு, பா.ஜனதா கட்சி தலைவர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்படுவதும், வெடிகுண்டுகள் வீச்சு சம்பவமும் நடந்து வருகின்றன.

    இதையடுத்து கண்ணூர் மாவட்டத்தில் உள்ள முதல்-மந்திரி பினராயி விஜயனின் சொந்த ஊரான பினராயி என்ற இடத்தில் இருக்கும் அவருடைய வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதேபோல் தலச்சேரி பகுதியில் இருக்கும் கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜனதா தலைவர்கள் வீடுகளுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.  #KeralaViolent #Sabarimala #PinarayiVijayan
    வங்காளதேசத்தில் பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு இன்று மாலை 4 மணியுடன் முடிந்த நிலையில் தேர்தல்சார்ந்த வன்முறை சம்பவங்களில் 17 பேர் கொல்லப்பட்டனர். #Bangladeshelection #Bangladeshelectionclash #BNPsupporters
    டாக்கா:

    வங்காளதேசம் நாட்டு பாராளுமன்ற தேர்தல் இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது.  பாராளுமன்றத்தில் மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில் 1,848 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.   

    அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்க 40,183 மையங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவில் பெண்கள் உள்பட பலர் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர்.  பிரதமர் ஷேக் ஹசீனா டாக்கா சிட்டி கல்லூரியில் இன்று காலை முதல்நபராக நின்று வாக்களித்தார். 

    தேர்தலுக்கு முன்னர் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்ததால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க ராணுவ வீரர்கள், துணை ராணுவ படையினர் உள்ளிட்ட 6 லட்சத்திற்கும் கூடுதலான வீரர்கள் நாடு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    எனினும், ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளும் அவாமி லீக் கட்சி மற்றும் ஊழல் வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்துவரும் கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சி (பி.என்.பி.) ஆதரவாளர்களிடையே நாட்டின் சில பகுதிகளில் வன்முறையும் மோதலும் ஏற்பட்டது. 

    இந்த மோதல்களில்  இன்று மாலை நிலவரப்படி 17 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். வன்முறை வெடித்த பகுதிகளுக்கு கூடுதலாக போலீசாரும் ராணுவத்தினரும் அனுப்பி வைக்கப்பட்டனர். காயமடைந்த சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது. 

    இந்த வன்முறைகள் தொடர்பான செய்திகள் பிறபகுதிகளுக்கு பரவாத வகையில் கைபேசி இன்டர்நெட்  சேவைகள் நாடு முழுவதும் முடக்கப்பட்டது. ஒரு தனியார் தொலைக்காட்சி சேவையும் இடைமறித்து தடை செய்யப்பட்டது.

    இந்நிலையில், இன்று மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்தது. வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்னும் 24 மணி நேரத்தில் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #17killed #Bangladesh #Bangladeshelection #Bangladeshelectionclash #AwamiLeague #BNPsupporters
    சூடான் நாட்டில் ரொட்டி விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறைகளில் இதுவரை 19 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. #SudanProtests #BreadPrice
    கர்த்தூம்:

    சூடான் நாட்டில் ரொட்டி உற்பத்திக்கான அரசு மானியங்கள் நிறுத்தப்பட்டதால், ரொட்டி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ரொட்டி விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினருடன் இணைந்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 19-ம்தேதி முதல் ரொட்டி விலை உயர்வுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டக்காரர்கள் பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், கடைகளை சூறையாடி அங்குள்ள பொருட்களை போராட்டக்காரர்கள் கொள்ளையடித்துச் செல்வதும் அதிகரித்துள்ளது. போராட்டக்காரர்களை ஒடுக்க கலவர தடுப்பு பிரிவு போலீசார் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதனால் போராட்டக் காரர்களுக்கும் போலீசாருக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

    இந்த வன்முறைப் போராட்டங்கள் மற்றும் போலீஸ் நடவடிக்கைகளில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 2 பேர் பாதுகாப்பு படையினர் என்றும் கூறப்பட்டுள்ளது.


    இதற்கிடையே போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பத்திரிகையாளர் சங்கமும் நேற்று ஸ்டிரைக்கில் குதித்தது. தலைநகர் கர்த்தூம் உள்ளிட்ட சில பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாளை வரை ஸ்டிரைக்கில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். போராட்டம் நடத்திய பத்திரிகையாளர்களில் சிலரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தனர்.

    வரும் நாட்களில் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், பொதுமக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. அதிபர் ஒமர் அல் பஷீர் தலைமையிலான அரசாங்கத்தை தூக்கி எறியும் வரை போராட்டத்தை தொடரவேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

    போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழல் உருவாகியிருப்பதால் அனைத்து பகுதிகளிலும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே, போராட்டக்காரர்களுக்கு எதிரான அடக்குமுறை மற்றும் வன்முறைகளால் கடும் அதிருப்தி அடைந்த வடக்குமாநிலத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். இது ஆளும் கூட்டணிக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. #SudanProtests #BreadPrice
    ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு இன்று நடைபெற்ற தேர்தலில் பல்வேறு பகுதிகளில் வாக்குச்சாவடிகளை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 13-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். #Afghanistanpoll
    காபுல்:

    249 உறுப்பினர்களை கொண்ட ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. 2500-க்கும் அதிகமான வேட்பாளர்கள் மோதும் இந்த தேர்தலில் சுமார் 89 லட்சம் வாக்களிக்கவுள்ளனர். சுமார் ஐயாயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
     
    பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என அறிவுத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள், நாட்டின் பல பகுதிகளில் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த சில நாட்களில் இவர்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல்களில் பத்துக்கும் அதிகமான வேட்பாளர்களும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

    தலிபான்களின் கோட்டை என்று கருதப்படும் கந்தஹார் மாகாணத்தில் உள்ள கவர்னர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கந்தஹார் மாகாணத்தின் காவல்துறை தலைவர் ஜெனரல் அப்துல் ரசிக், உளவுத்துறை தலைவர் மற்றும் ஒரு பத்திரிகையாளர் கொல்லப்பட்டனர். கவர்னர் உள்பட 13 பேர் காயமடைந்தனர்.

    வாக்குப்பதிவின்போதும் தலிபான்கள் இதுபோன்ற கொடூரமான தாக்குதல்களில் ஈடுபடலாம் என அங்குள்ள பொதுமக்களிடையே பீதி நிலவியது.

    இதனைதொடர்ந்து, கந்தஹார் மாகாணத்தில் மட்டும் பாராளுமன்ற தேர்தல் ஒருவாரத்துக்கு பின்னர் நடத்தப்படும் என ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியின் செய்தி தொடர்பாளர் நேற்று அறிவித்தார்.

    இந்நிலையில், இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்குச்சாவடிகளாக மாற்றப்பட்ட பள்ளிகளில் ஏராளமான வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்கச் சென்றனர். சில இடங்களில் வாக்குச்சாவடிகள் தாமதமாக திறந்ததால் அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையில் வாக்குவாதம் நடந்தது.

    தலைநகர் காபுலில் உள்ள சில பள்ளிகள் மீது தலிபான் பயங்கரவாதிகள் இன்று வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் பீதியடைந்த வாக்காளர்கள் உயிர் பயத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

    இதேபோல் நாட்டின் பிறபகுதிகளிலும் வாக்குச்சாவடிகள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தினர்.  இந்த தாக்குதல் மற்றும் தேர்தல் சார்ந்த வன்முறை சம்பவங்களில் 13-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #Afghanelectionviolence #Kabulpollingstations #Afghanistanpoll
    ஈராக் நாட்டில் அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக உருவெடுத்ததால் பஸ்ரா நகரில் இன்று மாலை முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. #Basracurfew #Basraprotests
    பாக்தாத்:

    ஈராக் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பஸ்ரா மாகாணத்தின் தலைநகர் பஸ்ராவில் உள்கட்டமைப்புகள் மிகவும் மோசமாக இருப்பதாகவும், அரசு சேவைகள் கிடைக்கப்பெறாமல் புறக்கணிக்கப்படுவதாகவும், ஊழல் மலிந்து விட்டதாகவும் கூறி அந்த நகரை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த மூன்றாம் தேதி போராட்டத்தில் குதித்தனர்.

    தொர்ந்து ஆறுநாட்களாக நடைபெற்றுவரும் இந்த போராட்டத்தின்போது பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இந்த மோதலில் பலர் உயிர் இழந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பஸ்ரா நகரில் அரசு அலுவலகங்கள், அரசியல் கட்சி அலுவலகங்கள் உள்ளிட்டவற்றுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். அரசு செய்தி சேனல் நிறுவனத்துக்கும் தீவைக்கப்பட்டது.

    அதுமட்டும் இன்றி நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்தை துண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்புபடை வீரர்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு, தடியடியும் நடத்தினர்.


    இந்த மோதலில் போராட்டக்காரர்கள் 3 பேர் உயிர் இழந்தனர். இதன் மூலம் அங்கு கடந்த திங்கட்கிழமை முதல் நடந்து வரும் வன்முறைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், போராட்டம் மேலும் தீவிரமடையாமல் தடுக்கும் வகையில் இன்று மாலை 4 மணியில் இருந்து பஸ்ரா நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும், இதை பொருட்படுத்தாத பஸ்ரா நகர மக்கள் தொடர்ந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #Basracurfew #Basraprotests
    எஸ்.சி-எஸ்.டி சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜஸ்தானில் ஜெய்ப்பூர், ஜோத்பூர் உள்பட பல நகரங்களில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதில் பல இடங்களில் தீவைப்பு வன்முறை நடந்தது. #SCST
    புதுடெல்லி:

    எஸ்.சி-எஸ்.டி சட்டத்தின் கீழ் அப்பாவிகள் தண்டிக்கப்படுவதை தடுப்பதற்காக இச்சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படுகிறவர்களுக்கு ஜாமின் வழங்க வேண்டும். அரசு அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டால் விசாரணை நடத்தி போதிய ஆதாரம் இருப்பதாக கருதினால் மட்டுமே வழக்கு தொடர வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தது. அதை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனால் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தின் பிரிவுகளை நீடிக்கச்செய்யும் வகையில் அதில் சட்ட திருத்தத்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ந்தேதி பாராளுமன்றத்தில் கொண்டு வந்தது.

    இதை எதிர்த்து வட மாநிலங்களில் ஓ.பி.சி. வகுப்பினரும், பொது பட்டியல் வகுப்பினரும் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பீகார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    நேற்று வட மாநிலங்களில் நாடு தழுவிய ‘பாரத் பந்த்’ போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் பல இடங்களில் தீவைப்பு வன்முறை நடந்தது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி வன்முறையை கட்டுப்படுத்தினார்கள்.

    உத்தரபிரதேசத்தில் பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. சாலைகளில் தடை ஏற்படுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பாட்னாவில் போராட்டக்காரர்கள் பல இடங்களில் கண்டன பேரணி நடத்தினார்கள். ரெயில் மறியலில் ஈடுபட்டு ரெயில் தண்டவாளத்துக்கு தீ வைத்தனர். இதனால் பீகாரில் ரெயில் போக்குவரத்து பாதுக்கப்பட்டது.

    மத்திய பிரதேசத்தில் ஓ.பி.சி. மற்றும் உயர் சாதி வகுப்பைச் சேர்ந்த 150 அமைப்புகள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

    உத்தரப் பிரதேசத்தில் லக்னோ, ஆக்ரா மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன.

    ராஜஸ்தானில் ஜெய்ப்பூர், ஜோத்பூர் உள்பட பல நகரங்களில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. ஆங்காங்கே பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம், உருவபொம்மை எரிப்பு போராட்டங்கள் நடந்தன.

    போராட்டத்தையொட்டி வட மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்படு இருந்தது. #SCST
    ஜெர்மனியில் அகதிகளுக்கு எதிராகவும், ஆதரவாகவும் நடைபெற்ற போட்டி போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இதில் பலர் காயமடைந்துள்ளனர்.
    பெர்லின்:

    உள்நாட்டு போர் நடைபெறும் சிரியா மற்றும் ஈராக்கில் இருந்து ஏராளமானோர் வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

    கடந்த 2015-ம் ஆண்டில் 13 லட்சம் பேர் அகதிகளாக குடியேறினர். தொடர்ந்து பலர் அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர். இவர்களுக்கு பிரதமர் ஏஞ்சலா மெர்கல் அரசு ஆதரவு அளித்து வருகிறது. அகதிகள் வருகைக்கும், இங்கு அவர்கள் தங்குவதற்கும் வலதுசாரி அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கிழக்கு ஜெர்மனியின் செமின்ட்ஷ் நகரில் நடந்த மோதலில் ஜெர்மனைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக ஈராக் மற்றும் சிரியாவைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

    அதைதொடர்ந்து அகதிகளுக்கு எதிராக செமின்ட்ஷ் நகரில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின்போது வெளிநாட்டினர் விரட்டியடிக்கப்பட்டனர். போராட்டத்தை அடக்க போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். அப்போது முகமூடி அணிந்த போராட்டக்காரர்கள் போலீசார் மீது கல்வீசி தாக்கினார்கள். அதேசமயம் மற்றொரு குழுவினர் எதிர்போராட்டம் நடத்தினர். ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. பாட்டில்கள் மற்றும் பட்டாசுகளை வெடிக்கச் செய்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

    கல்வீச்சு மற்றும் வன்முறை சம்பவங்களில் பலர் காயம் அடைந்தனர். இச்சம்பவத்துக்கு பிரதமர் ஏஞ்சலா மெர்கெலின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் சிபெர்ட் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    மராட்டியத்தில் மராத்தா சமூகத்தினர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து 2 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். #Maharashtrabandh #MarathaQuotaStir
    மும்பை:

    மராட்டிய மாநிலத்தில் மராத்தா சமூகத்தினர் மாநில மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் உள்ளனர். அரசியல் செல்வாக்கு மிக்கவர்களாக கருதப்படும் இவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கோரி நடத்தி வரும் போராட்டம் வன்முறையாக மாறியது.

    மும்பையில் நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையொட்டி பல இடங்களில் சாலை மறியல் நடந்தன. அப்போது பஸ்கள் மீது கல்வீசப்பட்டது. ஒரு பஸ் தீவைத்து எரிக்கப்பட்டது. பல பஸ்களின் டயர்கள் சேதப்படுத்தப்பட்டன.

    பல்வேறு பகுதிகளில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் 3 போலீசார் காயம் அடைந்தனர்.

    மும்பை மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பேரணி நடந்தது. ரெயில் மறியலும் நடந்தது. சிலஇடங்களில் ரெயில்கள் மீது கற்கள் வீசப்பட்டன. இதனால் ரெயில்சேவை பாதிக்கப்பட்டது.


    இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி மேலும் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். ஏற்கனவே 2 பேர் தற்கொலை செய்து இருந்தனர்.

    மராத்தா சமூகத்தினர் 2016-17ம் ஆண்டு 58 பேரணியை நடத்தி இருந்தனர். இது அமைதியாக நடந்து முடிந்தது. ஆனால் நேற்று நடந்த முழு அடைப்பு கலவரமாக மாறியது. 2 போலீஸ் வாகனம் உள்பட 50 வாகனங்கள் கொளுத்தப்பட்டன.

    இந்த நிலையில் மராத்தா சமூகத்தினர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து 2 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். அவுரங்காபாத்தை சேர்ந்த சிவசேனா எம்.எல்.ஏ. ஹர்‌ஷவர்தன் ஜாதவ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை அவர் இ.மெயில் மூலம் சபாநாயகருக்கு அனுப்பியுள்ளார்.

    இதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவரும் பதவி விலகியுள்ளார்.

    மராத்தா சமூகத்தினரின் போராட்டம் பட்னாவிஸ் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. #MarathaReservation #Maharashtrabandh #MarathaQuotaStir #MarathaReservationProtest
    மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வன்முறை பரவியதையடுத்து, மராத்தா சமூக அமைப்புகளின் முழு அடைப்பு போராட்டம் திரும்ப பெறப்பட்டது. #MarathaProtest
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் அரசுப் பணி மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மராத்தா கிரந்தி மோர்ச்சா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இரண்டாவது நாளாக இன்றும் முழு அடைப்பு போராட்டம் நீடித்தது.

    ஆனால், போலீஸ் பாதுகாப்பையும் மீறி, போராட்டக்காரர்கள் இன்று வன்முறையில் ஈடுபட்டனர். குறிப்பாக மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் வன்முறை வேகமாக பரவியது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதால் சில வழித்தடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சாலை மறியல் மற்றும் ரெயில் மறியல் போராட்டமும் நடைபெற்றது. போராட்டம் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கற்களை வீசி தாக்கியவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.


    இவ்வாறு வன்முறை தீவிரமடைந்ததையடுத்து, முழு அடைப்பு போராட்டத்தை திரும்ப பெறுவதாக மராத்தா தலைவர்கள் இன்று பிற்பகல் அறிவித்தனர். மேலும் தங்கள் போராட்டம் வெற்றியடைந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

    நாங்கள் ஒற்றுமையுடன் இருப்பதை நிரூபிக்கவே விரும்பினோம். ஆனால் ஒருபோதும் போராட்டங்கள் வன்முறையாக மாறுவதை விரும்பமாட்டோம் என்றும் அவர்கள் கூறினர்.

    தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் யாரும் வன்முறையில் ஈடுபடவில்லை என்றும், இதற்கு அரசியல் சதிதான் காரணம் என்றும் மராத்தா கிரந்தி மோர்ச்சா ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் வீரேந்தர் பவார் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், எந்த வன்முறையும் இன்றி 58 அமைதி பேரணிகளை நடத்தியிருப்பதாகவும், இட ஒதுக்கீடு தொடர்பாக அரசாங்கத்திடம் இருந்து எந்த பதிலும் வராததால் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவர் கூறினார்.  #MarathaProtest #MaharashtraBandh #MarathaKrantiMorcha #MarathaReservation
    ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக 8 மாத கால விசாரணைக்கு பின் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் கூறினார். #Jallikattu
    மதுரை:

    ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கடந்த 2016-ம் ஆண்டு போராட்டம் வெடித்தது.

    மதுரை தமுக்கம் மைதானம், சென்னை மெரினா கடற்கரை, கோவை போன்ற பகுதிகளில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.

    இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. அவர் ஜல்லிக்கட்டில் நடைபெற்ற வன்முறை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மதுரையில் இன்று 6-வது கட்ட விசாரணையை நீதிபதி ராஜேஸ்வரன் நடத்தினார். அரசு சுற்றுலா மாளிகையில் நடைபெற்ற இந்த விசாரணையின் போது இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், 3 போலீசார் விசாரிக்கப்பட்டனர்.

    தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி ராஜேஸ்வரன் இதுவரை 1,202 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். 8 மாத விசாரணைக்கு பிறகு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார். #Jallikattu
    வன்முறைக்கு முடிவு கட்ட வளர்ச்சிதான் ஒரே வழி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். #NarendraModi
    பிலாய்:

    பிரதமர் நரேந்திர மோடி நேற்று சத்தீஷ்கார் மாநிலம் பிலாய்க்கு சென்றார். அங்கு ரூ.22 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கிவைத்தார்.

    இவற்றில், பிலாய் உருக்கு ஆலை விரிவாக்கம், ஐ.ஐ.டி.க்கு அடிக்கல் நாட்டுதல், ஜக்தால்பூர்-ரெய்ப்பூர் இடையிலான புதிய விமான போக்குவரத்து ஆகியவையும் அடங்கும்.

    இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:-

    சத்தீஷ்கார் மாநிலம், முன்பு காடுகளும், பழங்குடியினரும் நிறைந்த மாநிலமாக அறியப்பட்டது. இப்போது, ஸ்மார்ட் சிட்டியாக மாறி இருக்கிறது. பாதை மாறிச்சென்ற இளைஞர்கள், தேசிய நீரோட்டத்தில் இணைந்து வளர்ச்சிக்கு அரும்பணி ஆற்றி வருகிறார்கள். எந்த வடிவிலான வன்முறைக்கும், சதிக்கும் முடிவு கட்ட வளர்ச்சிதான் ஒரே வழி.

    அதனால்தான், எங்கள் அரசு வளர்ச்சி மூலமாக நம்பிக்கையான சூழ்நிலையை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. வளர்ச்சிக்கு அமைதி, சட்டம்-ஒழுங்கு, அடிப்படை வசதிகள் ஆகியவை முக்கியம்.

    சத்தீஷ்காரில் கிடைக்கும் இரும்புத்தாது, இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கனிமங்கள் மீது இம்மாநில மக்களுக்குத்தான் உரிமை உள்ளது.

    முந்தைய காங்கிரஸ் அரசு, பல இடங்களில் சாலை கூட போடவில்லை. ஆனால், அந்த இடங்களில் எங்கள் அரசு விமான நிலையங்களையே கட்டி உள்ளது. ‘ஹவாய்’ செருப்பு அணிந்தவர் கூட விமானத்தில் பறப்பதை பார்ப்பதுதான் எனது கனவு.

    அதற்காக, சிறு நகரங்களை விமான போக்குவரத்து மூலம் இணைக்கும் ‘உடான்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, மக்கள் ரெயில்களின் ஏ.சி. பெட்டிகளில் பயணிப்பதை விட விமானங்களில் பயணிப்பதையே விரும்புகிறார்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.  #NarendraModi
    மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் பரவிய வன்முறை ஓய்ந்தபோதிலும், பதற்றம் நீடிப்பதால் ஊரடங்கு உத்தரவு தொடர்கிறது.
    ஷில்லாங்:

    மேகாலயா மாநில தலைநகரான ஷில்லாங்கின் தேம் ஆவ் மாவ்லாங் பகுதியில் கடந்த வியாழக்கிழமை அரசு பேருந்து ஊழியர்களுக்கும் சில பெண் பயணிகளுக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் 3 பேர் தாக்கப்பட்டனர். பின்னர் ஒரு கும்பல் தேம் ஆவ் மாவ்லாங் நோக்கி சென்றபோது மோதல் வெடித்தது. பின்னர் அது கலவரமாக மாறியது. ஷில்லாங் நகரத்தில் மாத்ரான், மாக்கர் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளுக்கும் கலவரம் பரவியது.

    பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்ட போலீசார் மீது வன்முறைக் கும்பல் சரமாரியாக கற்களை வீசி தாக்கியது. கும்பலைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர். எனினும் அந்த கும்பல் கலைந்து செல்லாமல் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டது.

    சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததைத் தொடர்ந்து லும்டிங்ஜிரி காவல் நிலையம் மற்றும் கண்டோன்ட்மெண்ட் பீட் ஹவுஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஏராளமான போலீசார் மற்றும் மத்திய ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டு ரோந்து சுற்றி வந்தனர்.

    இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. பெட்ரோல், டீசல் போன்ற தீப்பற்றும் பொருட்களை கேன்கள் மற்றும் பாட்டில்களில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

    தற்போது ஓரளவு பதற்றம் தணிந்து ஷில்லாங்கில் அமைதி திரும்பத் தொடங்கி உள்ளது. ஆனால், மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் இருப்பதால், வன்முறை நடைபெற்ற பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தொடர்கிறது. மாலை 4 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்ட காவல் துணை ஆணையர் தெரிவித்துள்ளார். மத்திய ஆயுதப்படை போலீசாரும் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் கூறினார். #ShillongViolence #ShillongCurfew
    ×