search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜனாதிபதி"

    பாராளுமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதையடுத்து, பிரதமர் மோடி இன்று மாலை ஜனாதிபதியை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து பா.ஜனதா எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில் இன்று மாலை நடக்கிறது. பிரதமர் தேர்வு, புதிய அரசு பொறுப்பேற்பு குறித்து இக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

    இதேபோல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் இன்று டெல்லியில் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்ததும், இரவு 8 மணியளவில் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் அளிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, பாஜக மற்றும் கூட்டணி தலைவர்கள் மாலை 7 மணியளவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.



    வரும் 30-ம் தேதி மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பார் என்றும், பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 2014ம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்றபோது, விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

    உச்ச நீதிமன்றத்திற்கு இன்று 4 புதிய நீதிபதிகளை ஜனாதிபதி நியமித்துள்ளார். இதன்மூலம் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளன.
    புதுடெல்லி:

    உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட மொத்தம் 31 நீதிபதிகள் பணியாற்றவேண்டும். இதில் 4 நீதிபதி இடங்கள் காலியாக இருந்தன. இதற்கு தகுதியான நீதிபதிகளை, தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் அமைப்பு தேர்வு செய்து பரிந்துரை செய்தது.

    நீதிபதிகள் அனிருத்தா போஸ், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்கும்படி, மத்திய அரசுக்கு கொலிஜியம் முதலில் பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்தது. அந்த நீதிபதிகளுக்கு போதிய சீனியாரிட்டி இல்லை என்று கூறி பரிந்துரையை மீண்டும் கொலிஜியத்துக்கே அனுப்பி வைத்தது. ஆனால், அவர்கள் பெயர்களையே மீண்டும் கொலிஜியம் பரிந்துரை செய்தது.



    இதேபோல், நீதிபதிகள் பி.ஆர்.கவாய் (பூஷண் ராமகிருஷ்ண கவாய்), சூரியகாந்த் ஆகியோரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும்படி பரிந்துரைத்தது.

    இந்த பரிந்துரையை ஏற்ற மத்திய அரசு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். நீதிபதிகள் அனிருத்தா போஸ், போபண்ணா, கவாய், சூரியகாந்த் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்மூலம், உச்ச நீதிமன்றத்தில் உள்ள 31 நீதிபதிகள் பணியிடங்களும் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளது. 
    இந்தோனேசியாவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் எம்பிக்களை தேர்வு செய்வதற்கான பொதுத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். #IndonesiaElections #JokoWidodo
    ஜகார்த்தா:

    உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில் இன்று மிகப்பெரிய பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. முதல் முறையாக, ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் ஒரே நாளில் நடத்தப்படுகிறது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்கின்றனர். சில வாக்காளர்கள் தங்கள் பகுதியில் உள்ள மசூதிகளுக்குச் சென்று பிரார்த்தனை செய்துவிட்டு, ஓட்டு போட சென்றனர்.



    இந்த தேர்தலில் சுமார் 2.45 லட்சம் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அடுத்த 2024-ஆம் ஆண்டு வரையிலும் நாட்டை ஆளப்போகும் ஜனாதிபதி மற்றும் எம்பிக்களை 19 கோடி வாக்காளர்கள் நிர்ணயிக்க உள்ளனர். 8 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனாதிபதியும், இந்தோனேசிய மக்களாட்சிக் கட்சி (போராட்டம்)  தலைவருமான ஜோகோ விடோடோவும் (வயது 57), முன்னாள் ராணுவ தளபதியும் கெரிந்த்ரா கட்சி தலைவருமான பிரபோவோ சுபியாண்டோவும் (வயது 67) போட்டியிடுகின்றனர்.

    கருத்துக்கணிப்பு முடிவுகள் விடோடோவுக்கு சாதகமாகவே உள்ளன. அதேசமயம், கடந்த தேர்தலில் வெற்றிவாய்ப்பை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தவற விட்ட சுபியாண்டோ, இந்த முறை தேர்தல் களத்தில் விடோடோவுக்கு கடும் சவாலாக விளங்கினார். இந்த முறை வாக்காளர் பட்டியலில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக சுபியாண்டோ குற்றம்சாட்டினார். ஒருவேளை தான் தோல்வி அடைந்தால், தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாகவும் எச்சரித்துள்ளார்.

    வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் மே மாதம் வரை வெளியிடப்படாது என கூறப்படுகிறது. #IndonesiaElections #JokoWidodo
    கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #LokSabhaElections2019 #Vellore
    புதுடெல்லி:

    வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பாக அக்கட்சியின் பொருளாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். துரை முருகனின் வீட்டில் கடந்த மார்ச் 30-ம்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் ரூ. 10.5 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. அடுத்த 2 நாட்களுக்கு பின்னர் மொத்தம் ரூ. 11.53 கோடி பணம் வேலூரில் உள்ள துரை முருகனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதன் தொடர்ச்சியாக, ஏப்ரல் 10 ஆம் தேதி, வருமான வரித்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில், மாவட்ட காவல்துறை, கதிர் ஆனந்த் மற்றும் இரண்டு திமுக பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது.



    மேலும் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதால், வேலூர் மக்களவைத் தொகுதி மற்றும் அந்த மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலை நிறுத்தி வைக்கும்படி தமிழக தேர்தல் ஆணையம், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டத்திற்கு மட்டும் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் சார்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #LokSabhaElections2019 #Vellore
    இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த சிற்பி டாக்டர் அம்பேத்கரின் 128-வது பிறந்தநாளான இன்று ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் அவருக்கு மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர். #Ambedkarjayanti #DrBRAmbedkar
    புதுடெல்லி:

    இந்திய அரசியலமைப்பு சட்டம் என்னும் மகத்தான சாசனத்தை வடிவமைத்த மாபெரும் சிற்பியும், சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க பாடுபட்ட சமத்துவ நாயகருமான சட்டமேதை ‘பாரதரத்னா’ பாபா சாகேப் டாக்டர் அம்பேதகரின் 128-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் எழுச்சியுடனும் சிறப்பாகவும் கொண்டாடப்படுகிறது.

    டெல்லியில் உள்ள பாராளுமன்ற புல்வெளியில் அண்ணல் அம்பேத்கரின் சிலையின் முன்னே வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்துக்கு ஜனாதிபதி ராம்நாத்  கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



    இதேபோல், பல மாநிலங்களிலும் அரசியல் கட்சி தலைவர்களும் பொதுமக்களும் பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

    அவரது பிறந்தநாளையொட்டி ஜனாதிபதி ராம்நாத்  கோவிந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘நமது நாட்டின் தனிப்பெரும் அடையாளமாக திகழும் நமது அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சாதிகளற்ற, பாகுபாடுகளற்ற நவீன இந்தியாவை உருவாக்கவும், பெண்கள் மற்றும் நலிந்த மக்களுக்கான சம உரிமைகள் நிலைநாட்டப்படவும் தனது வாழ்நாள் முழுவதும் போராடியவர். அவரது பிறந்தநாளன்று எனது மரியாதையை செலுத்துகிறேன்’ என தெரிவித்துள்ளார். #Ambedkarjayanti  #DrBRAmbedkar
    சித்திரை திங்கள் பிறப்பையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். #Presidentextend #PMextend #தமிழ்புத்தாண்டு
    புதுடெல்லி:

    தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழர்கள் தங்களது புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.

    நடைமுறைக்கு ஏற்றதாக தமிழ்ப் புத்தாண்டு ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்பட்டாலும், தமிழ்ப் பஞ்சாங்கங்களில் அந்த நாளில் ஆண்டு பிறக்கும் சரியான நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அடிப்படையிலேயே ஆண்டுக்காலம் கணிக்கப்படுகிறது.

    இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் , பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தமிழர்களுக்கு தங்களது தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.



    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘நம் தமிழ்நாட்டில் உள்ள சகோதர சகோதரிகள் மற்றும் உலகில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளுக்கும் என்னுடைய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். பிறக்கக்கூடிய இந்த வருடம் எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சியும், இன்பமும் மற்றும் செழிப்பும் வழங்கிட வேண்டிக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.





    பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து மடல் வடிவில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘தமிழ் சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! வரும் ஆண்டில் உங்கள் ஆசைகள் நிறைவேறட்டும்; அனைவரின் வாழ்விலும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் பெருகட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் திரைத்துரை, விளையாட்டுத்துறை பிரமுகர்களும் தங்களது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர். #Presidentextend  #PMextend #PMModi #TamilNewYear #NewYearGreetings #தமிழ்புத்தாண்டு
    ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிரிழந்தவர்களின் தியாகத்தை ஒருபோதும் மறக்க முடியாது என ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் நினைவு கூர்ந்துள்ளனர். #JallianwalaBagh #PMModi
    புதுடெல்லி:

    1919–ம் ஆண்டு ஏப்ரல் 13–ந்தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் ஒரு அமைதியான பொதுக்கூட்டம் நடந்தது. இந்தியர்களின் பேச்சுரிமை உள்பட அனைத்து உரிமைகளையும் பறிக்கும் கொடிய ரவுலட் சட்டத்தை எதிர்த்தும், ஏற்கனவே இந்த சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் கைது செய்யப்பட்டு, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பலர் கொல்லப்பட்டது ஆகியவற்றை கண்டித்தும் நடந்த அகிம்சை கூட்டம்தான் அது.

    பிரிகேடியர் ஜெனரல் ரொனால்டு டயர் என்ற வெள்ளைக்காரர் தலைமையில் வந்த ஆங்கிலேய ராணுவ படை, கூடியிருந்தவர்களை கலைந்து செல்லும்படி எச்சரிக்கை விடுக்காமல், பீரங்கியால் சுட்டு வீழ்த்தினர்.  இந்த சம்பவத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த சம்பவம் நிகழ்ந்து 100 ஆண்டுகள் கடந்து விட்டது. இந்த சம்பவத்தின் நூற்றாண்டு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தி உள்ளார்.

    “100 ஆண்டுகளுக்கு முன், நமது சுதந்திர போராட்ட தியாகிகள் ஜாலியன் வாலாபாக்கில் உயிர்த்தியாகம் செய்தனர். அது ஒரு கொடூரமான படுகொலை, மனித நாகரிகத்தின் மீது படிந்த ஒரு கறை. அந்த தியாகத் தினத்தை ஒருபோதும் மறக்க முடியாது. உயிர்நீத்த தியாகிகளுக்கு நாம் மரியாதை செலுத்துவோம்” என ஜனாதிபதி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில், “ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிரிழந்தவர்களின் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது.  நாட்டின் முன்னேற்றத்துக்கு மேலும் கடுமையாக உழைக்க ஜாலியன் வாலாபாக் நினைவு உத்வேகம் அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.



    ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர். #JallianwalaBagh #PMModi
    செயற்கைகோளை சுட்டு வீழ்த்தும் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளனர். #Modi #MissionShakti #RamNathKovind #VenkaiahNaidu
    புதுடெல்லி:

    செயற்கைகோளை சுட்டு வீழ்த்தும் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்து செய்தியில், “மிஷன் சக்தி, இந்தியாவின் பெருமைமிகு தருணம். இந்த சோதனை, இந்தியாவின் விஞ்ஞான திறன் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் உறுதிப்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாராட்டுகள்“ என்று கூறியுள்ளார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது வாழ்த்து செய்தியில், “இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள். நமது விஞ்ஞானிகளால் நாம் பெருமைப்படுகிறோம்“ என்று கூறியுள்ளார்.

    நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய மந்திரிகள் ரவிசங்கர் பிரசாத், ஹர்ஷவர்தன், சுரேஷ் பிரபு, ஸ்மிரிதி இரானி, முதல்-மந்திரிகள் யோகி ஆதித்யநாத், தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். #MissionShakti #RamNathKovind  #VenkaiahNaidu
    டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சரத் கமல், பங்காரு அடிகளாருக்கு பத்ம ஸ்ரீ விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். #PadmaAwards #BangaruAdigalar
    புதுடெல்லி:

    இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது.  பத்ம விபூஷண் 4 பேருக்கும், பத்ம பூஷண் 14 பேருக்கும், பத்ம ஸ்ரீ 94 பேருக்கும் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்றது. பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் முதல்கட்டமாக இன்று 56 பேருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.



    தமிழகத்தைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ், மதுரை சின்னப்பிள்ளை, மருத்துவர் ரமணி, மருத்துவர் ராமசாமி வெங்கடசாமி,  டிரம்ஸ் சிவமணி, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், பங்காரு அடிகளார், சரத் கமல், டிரம்ஸ் சிவமணி ஆகியோர் இன்று ஜனாதிபதியிடம் பத்ம ஸ்ரீ விருது பெற்றனர்.

    இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் பிரதமர் மோடி பங்கேற்றனர். #PadmaAwards #BangaruAdigalar
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவர், பாகிஸ்தானில் இந்திய விமானப்படை நடத்திய அதிரடி தாக்குதல் குறித்த தகவல்களை தெரிவித்தார். #PulwamaAttak #PMModi #IAFAttack #LoC
    புதுடெல்லி:

    இந்தியாவில் தொடர்ந்து காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை நடத்தி வந்த பாகிஸ்தான் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்த மத்திய அரசு முடிவு செய்தது.

    அதன் அடிப்படையில் இந்திய விமானப்படை விமானங்கள் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு பாகிஸ்தானுக்கு பறந்து சென்று அந்த முகாம்கள் மீது குண்டு வீசி அழித்தன. 350-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    அதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை 10.45 மணிக்கு ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார். அங்கு அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது வேறு யாரும் உடனிருக்கவில்லை.

    பாகிஸ்தானுக்குள் சென்று இந்திய விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தி, அங்குள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம்களை அழித்தது பற்றியும், அதற்கான தேவை ஏன் ஏற்பட்டது என்பது குறித்தும் விளக்கம் அளித்தார்.

    அதைத் தொடர்ந்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவரிடமும் விமானப்படையின் அதிரடி தாக்குதல்கள் குறித்து எடுத்துரைத்தார்.

    அத்துடன் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேரில் சந்தித்து பேசினார். அவர் பாகிஸ்தானில் இந்திய விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தி விட்டு திரும்பி வந்துள்ளது பற்றி விரிவாக விளக்கினார். 
    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வலியுறுத்தி அம்மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் இன்று ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்தனர். #ChandrababuNaidu #Andhraspecialstatus #RamnathKovind
    புதுடெல்லி:

    ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என முன்னர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி தலைமையிலான அரசை கண்டித்து டெல்லியில் சந்திரபாபு நாயுடு நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
     
    டெல்லியில் உள்ள ஆந்திர பவனில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் தேவேகவுடா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். அவரது கோரிக்கை வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தனர்.



    தனது உண்ணாவிரதத்தை இரவு 8 மணியளவில் சந்திரபாபு நாயுடு நிறைவு செய்தார். முன்னாள் பிரதமர் தேவேகவுடா அவருக்கு பழச்சாறு அளித்து உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்தார்.

    இந்நிலையில், ஏற்கனவே அறிவித்திருந்தவாறு இன்று பிற்பகல் சந்திரபாபு நாயுடு ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார்.

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வலியுறுத்தி சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் உள்ளிட்ட எம்.பி.க்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு அளித்தனர்.  #ChandrababuNaidu #Andhraspecialstatus #President #RamnathKovind
     
    குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் நடைபெற்ற கோலாகலமான நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசியக்கொடி ஏற்றி வைத்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். #RepublicDay #President #DelhiRajpath
    புதுடெல்லி:

    நாட்டின் 70-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் ராஜபாதையில் நடைபெற்ற பிரமாண்டமான விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.



    இந்திய ராணுவத்தின் பெருமை மிகு அணிவரிசை, ராணுவத்தின் முப்படை அணிவகுப்பைத் தொடர்ந்து, நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு மாநிலங்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.  மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் அலங்கார வாகனங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் கண்கவர் வாகனங்களும் அணிவகுத்து வருகின்றன. குடியரசு தின விழாவை கண்டுகளிப்பதற்காக ராஜபாதையில் பல லட்சம் மக்கள் திரண்டுள்ளனர்.

    டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார். குடியரசு தின விழாவையொட்டி தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் அந்தந்த மாநிலங்களில் நடைபெற்ற குடியரசு தின விழாக்களில், ஆளுநர் பங்கேற்று தேசியக்கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். இதேபோல் நாடு முழுவதிலும் உள்ள அரசியல் கட்சி அலுவலகங்களிலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. கட்சி தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். #RepublicDay #President #DelhiRajpath

    ×