search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 102691"

    வள்ளியூரில் குழந்தை, பெண் பலியான சம்பவத்தையடுத்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்ப‌ட்டு வருகின்றன.
    வள்ளியூர்:

    சென்னையில் 7 வயது இரட்டைக் குழந்தைகள் காய்ச்சலுக்கு உயிரிழந்த நிலையில் தமிழகம் முழுவதும் காய்ச்சல் குறித்த பீதி அதிகரித்துள்ளது. இதற்கு ஏற்றாற் போல அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சமீபகாலமாக பல்வேறு வகையிலான காய்ச்சல் பரவி வருகிறது. வைரஸ் காய்ச்சல், பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல், டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சல்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காய்ச்சலின் தீவிரத்தை பொறுத்து சிலர் உள்நோயாளிகளாகவும் புற நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுள்ள‌னர். நெல்லை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பகலில் வெயிலும், மாலையில் மழையும் என மாறி மாறி காணப்படுவதால் பொதுமக்கள் காய்ச்சல் உள்ளிட்ட சீசன் நோய்களுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் காரணமாக நெல்லை மாவட்டத்தில் இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர். தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகன் மனைவி கர்ப்பிணி பெண் சாந்தினி(வயது 26) டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார்.

    இந்த நிலையில் வள்ளியூர் பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு பெண் குழந்தை உள்பட 2 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வள்ளியூர் வடக்கு மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் முருகையா (வயது 37), லாரி டிரைவர். இவருடைய மனைவி ஜெயராணி (35). இவர்களுக்கு ஒன்றரை வயதில் பவித்ரா என்ற பெண்குழந்தை உள்ளது. ஜெயராணி தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இந்த நிலையில் குழந்தை பவித்ராவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சிகிச்சைக்காக ஏர்வாடி, வெள்ளமடம் பகுதிகளில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். ஆனாலும் பவித்ராவுக்கு காய்ச்சல் குறையவில்லை.

    பின்னர் குழந்தையை வீட்டுக்கு கொண்டு வந்து, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வள்ளியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை பவித்ரா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மர்ம காய்ச்சலுக்கு குழந்தை பலியான சம்பவம் வள்ளியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையடுத்து வள்ளியூரில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வீடு வீடாக கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. சிறப்பு மருத்துவ குழுக்களும் வள்ளியூரில் முகாமிட்டுள்ளன.

    ஏற்கனவே கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரையை சேர்ந்த சந்தியாகு என்பவருடைய மனைவி ஜெனதா (47). இவருக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஜெனதா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ஜெனதாவின் உடல், இடிந்தகரைக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

    மாவட்டத்தில் பரவலாக பல இடங்களில் காய்ச்சல் பாதிப்பு உள்ளது. சிங்கை மற்றும் பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது. சிங்கை மற்றும் அகஸ்தியர்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சலுக்காக ஏராளமானோர் சிகிச்சை எடுத்து வருகின்றனர். வெளிநோயாளிகளாக அனைவரும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். தனியார் மருத்துவமனைகளிலும் பலர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    மர்மகாய்ச்சல், டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவி வருவதால் பொது சுகாதாரத்துறை கொசு ஒழிப்பிற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோருக்கு உடனடியாக டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளதா எனக் கண்டறிவதற்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அவசர வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தூத்துக்குடி மாவட்டத்தில் காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்ப‌ட்டு வருகின்றன. 1000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நகராட்சி, கிராம பகுதியில் டெங்கு தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தூத்துக்குடி மாநகராட்சியில் 400-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள‌னர். கலெக்டர் மற்றும் அனைத்து அதிகாரிகளும் தினந்தோறும் டெங்கு தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள். டெங்கு காய்ச்சலால கர்ப்பிணி பெண் பலியான முள்ளக்காடு பகுதியில் சுகாதார குழுவினர் முகாமிட்டுள்ளனர்.



    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை நீடித்து வருவதால் அணைகள், குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. #Rain
    தூத்துக்குடி:

    தமிழகம் அருகே மன்னார்வளைகுடா பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் பரவலாக அனைத்து இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காலநிலை நிலவுகிறது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் பரவலாக கன மழை பெய்தது. நேற்று காலை வரை விடிய விடிய மழை கொட்டியது.

    குறிப்பாக திருச்செந்தூர், காயல்பட்டினம் பகுதியில் பலத்த மழை பெய்தது. திருச்செந்தூரில் அதிகபட்சமாக 8 செ.மீ. மழை பதிவானது. திருச்செந்தூர் சபாபதிபுரம் தெருவில் உள்ள ஒரு வீட்டிலிருந்த தென்னை மரம் இடி தாக்கியதில் தீப்பற்றி எரிந்தது. ஆத்தூர் போலீஸ் நிலையம் அருகில் மரங்கள் விழுந்து மின்கம்பங்கள் சேதமடைந்ததால் அங்கு மின்தடை ஏற்பட்டது. ஆறுமுகனேரியிலும் சிவன் கோயில் அருகிலும், பிரதான சாலை அருகிலும் மின்வயர் அறுந்து விழுந்தது. தகவலறிந்து மின் ஊழியர்கள் விரைந்து வந்து சரி செய்தனர்.

    தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் தண்டவாளப் பகுதியில் மழைநீர் அதிகளவு தேங்கியதால் ரயில்கள் புறப்படுவதில் தாமதம் நிலவியது. இரவு 7.50 மணிக்கு புறப்பட வேண்டிய முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் 9 மணியளவில் புறப்பட்டுச் சென்றது.

    தூத்துக்குடியில் பிரதான பகுதிகளான குரூஸ் பர்னாந்து சிலை, பழைய மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியதால் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக கழிவுநீர் லாரிகள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மாலை மழை குறைந்தது. எனினும் சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்தது. உடன்குடி, குலசேகரன்பட்டினம், தண்டுப்பத்து, பரமன்குறிச்சி பகுதியில் நேற்று இரவு மழை பெய்தது. இன்று காலையும் மழை தூறிக்கொண்டிருந்தது.

    இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவியர், அலுவலக பணிகளுக்கு செல்வோர் குடைபிடித்த படி சென்றனர். தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. அப்பகுதி முழுவதுமே குளிர்ந்த காலநிலை நிலவியது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம்(மில்லிமீட்டரில்) வருமாறு:-

    திருச்செந்தூர்-30, குலசேகரன்பட்டினம்-30, காடல்குடி-23, தூத்துக்குடி-8.1, ஸ்ரீவைகுண்டம்-4, விளாத்திகுளம்-2, சாத்தான்குளம்-1.2.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பெய்தது. நாங்குநேரி, நெல்லை ஆகிய இடங்களில் லேசான மழையும், நம்பியாறு அணைப்பகுதியில் கன மழையும் பெய்தது. ஏற்கனவே பெய்த மழையினால் மாவட்டத்தில் உள்ள கருப்பாநதி, குண்டாறு, நம்பியாறு ஆகிய 3 அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் இந்த அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.

    பிரதான பாசன அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலை 99.45 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 496.76 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 20 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 112.27 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 85.65 அடியாகவும் உள்ளன. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 362 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதேபோல் கடனா அணை நீர்மட்டம் 65.40 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 61.75 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 20.50 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 30 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 109 அடியாகவும் உள்ளன. குற்றாலம் மலைப் பகுதியில் பெய்துவரும் மழையினால் அருவிகளில் மிதமான அளவு தண்ணீர் விழுகிறது.

    மெயினருவி, ஐந்தருவியில் விழும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். எனினும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் ஏற்கெனவே தென்மேற்கு பருவ மழை காரணமாக சில பகுதிகளில் உள்ள குளங்கள் நிரம்பின. பெரும்பாலான குளங்களில் அதிகளவு தண்ணீர் நிரம்பியது.

    சமீபத்தில் பெய்த மழையினால் மாவட்டத்தில் உள்ள 100 க்கும் மேற்பட்ட கால்வரத்து குளங்களுக்கும், 50 க்கும் மேற்பட்ட மானாவாரி குளங்களுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளன. குளங்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அதே வேளையில் சில பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பயிர்கள் மழையால் சேதமானது விவசாயிகளை கவலை அடைய செய்துள்ளது. சுரண்டை பகுதியில் பெய்த மழையினால் அங்குள்ள இரட்டை குளம் 2-வது முறையாக நிரம்பி மறுகால் பாய்ந்து செண்பகம் கால்வாயில் தண்ணீர் செல்கிறது.

    இத்தண்ணீர் இலந்தை குளம் செல்லுவதால் இலந்தை குளத்தில் இருந்து மீன்கள் செண்பகம் கால்வாயில் ஏறிவருகின்றன. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சிலர் வலைகளை கொண்டு வந்து மீன்களை பிடித்து திருவிழாவை போல கொண்டாடி மகிழ்ந்தனர். இதில் விரால், கெண்டை, கெளுறு உள்ளிட்ட பல வகை மீன்கள் சிக்கின தண்ணீர் வருவதையும் மீன் பிடிப்பதையும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து சென்றனர். #Rain

    தாமிரபரணி புஷ்கர விழாவை முன்னிட்டு தாம்பரம் - நெல்லை இடையே சுவிதா சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. #SpecialTrain
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தாமிரபரணி புஷ்கர விழாவை முன்னிட்டு தாம்பரம்-நெல்லை இடையே சுவிதா சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * தாம்பரம்-நெல்லை சுவிதா சிறப்பு ரெயில்(வண்டி எண்:82627), நாளை(புதன்கிழமை) இரவு 10.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 10.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    * நெல்லை-தாம்பரம் சுவிதா சிறப்பு ரெயில்(82628), வரும் 20-ந்தேதி(சனிக்கிழமை) மாலை 6.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று(செவ்வாய்கிழமை) காலை 8 மணி முதல் தொடங்குகிறது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 
    வருகிற டிசம்பர் மாதம் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் பண்டிகை போன்ற விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து நெல்லை, செங்கோட்டை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    சென்னை:

    சென்னை எழும்பூர்-செங்கோட்டை சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்: 06011) டிசம்பர் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் இரவு 8.40 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9.50 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கத்தில் (06012) செங்கோட்டையில் இருந்து 4, 11, 18 ஆகிய தேதிகளில் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

    இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, செட்டிநாடு, காரைக்குடி, தேவக்கோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பன்கோவில் சாந்தி, கடையநல்லூர், தென்காசி வழியாக செல்லும்.

    சென்னை எழும்பூர்- நெல்லை சிறப்பு கட்டண ரெயில் (06001) டிசம்பர் 14 மற்றும் 28-ந்தேதிகளில் (வெள்ளிக்கிழமை) எழும்பூரில் இருந்து இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கத்தில் (06002) நெல்லையில் இருந்து 9 மற்றும் 16-ந்தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

    இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக செல்லும்.

    தாம்பரம்-கொல்லம் சிறப்பு கட்டண ரெயில் (06027) டிசம்பர் 3, 5, 10, 12, 14, 17, 19, 26, 28, 31 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கத்தில் (06028) கொல்லத்தில் இருந்து 4, 6, 8, 11, 13, 15, 18, 20, 27 ஆகிய தேதிகளில் காலை 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பன்கோவில் சாந்தி, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, பகவதிபுரம், ஆரியங்காவு, தென்மலை, எடமான், புனலூர், அவனீசுவரம், கொட்டாரக்கரா, குந்தாரா ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

    சென்னை சென்டிரல்-நாகர்கோவில் சிறப்பு கட்டண ரெயில் (06007) டிசம்பர் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் சென்டிரலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.05 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கத்தில் (06008) 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.

    இந்த அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

    சென்னை சென்டிரல்-அகமதாபாத் (06051) டிசம்பர் 1, 8, 15, 22, 19 ஆகிய தேதிகளில் இரவு 8.10 மணிக்கும், சென்டிரல்-சந்திரகாச்சி (06058) டிசம்பர் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.15 மணிக்கும், புதுச்சேரி-சந்திரகாச்சி (06010) டிசம்பர் 1, 8, 15, 22 ஆகிய தேதிகளில் மாலை 6.45 மணிக்கும் சிறப்பு கட்டண ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    இந்த தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. 
    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் இன்று 5-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. #Fishermen
    நெல்லை:

    நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. தற்போது வங்காள விரிகுடா கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளதால் கடற்கரையோர பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று சங்கரன்கோவில், திருவேங்கடம் பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் திருவேங்கடம் அருகே உள்ள சங்குபட்டி கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவரது மனைவி சுப்புத்தாய் (வயது55) என்பவர் மக்காச்சோள தோட்டத்தில் வேலை செய்யும் போது மின்னல் தாக்கி பலியானார்.

    இன்று காலையும் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நம்பியாறு அணை பகுதியில் 48 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பாபநாசம் அணை பகுதியில் 34 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    புயல் எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்ட கடற்கரை பகுதியான உவரி, கூடங்குளம் உட்பட 10 மீனவ கிராமங்களிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கடலோர மீனவ கிராமங்களிலும் புயல் மற்றும் மழை காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இன்று 5-வது நாளாக மீன்பிடிக்க செல்லாமல் தங்கள் படகுகளை கடற்கரையோரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தில் மட்டும் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் கட்டுமரங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. தூத்துக்குடி மாவட்டத்திலும் பல்லாயிரக்கணக்கான நாட்டு படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 19 மீனவர்களை தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பகல் முழுவதும் மேகமூட்டத்துடன் லேசான தூறல் இருந்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சாத்தான்குளம் பகுதியில் 25 மி.மீட்டரும், கழுகு மலை பகுதியில் 17 மி.மீட்டரும், கீழஅரசடி பகுதியில் 12 மி.மீ.மழையும் பதிவானது.

    இதற்கிடையே, கடல் பகுதியில் 55 முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், இன்று (அக்.9) இரவு வரை மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும் யாரேனும் கடலுக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தால் அவர்கள் உடனடியாக கரைதிரும்பும் படியும் அதிகாரிகள் தொலைத் தொடர்பு கருவி கள் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில் மீனவர்கள் மற்றும் கப்பல்களுக்கு புயல் எச்சரிக்கை அளிக்கும் வகையில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் நேற்று மாலை 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள 11 அணைகளுக்கும் பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 704 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 205 கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது.

    இதனால் அணையின் நீர்மட்டம் ஒரு அடி கூடி இன்று காலை 107.25 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 50 அடியாக இருந்தது. அது ஒரே நாளில் 2 அடி உயர்ந்து இன்று காலை 52.76 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 271 கன அடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் சற்று உயர்ந்து இன்று காலை 84.85 அடியாக உள்ளது.

    இதுபோல கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, அடவி நயினார், குண்டாறு, கொடு முடியாறு, வடக்கு பச்சையாறு ஆகிய அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    நம்பியாறு-48, பாபநாசம் -34, சேர்வலாறு-26, மணிமுத்தாறு-10, கொடுமுடியாறு-10, குண்டாறு-9, ராதாபுரம்-7, அடவிநயினார்-7, ஆய்க்குடி-6.4, அம்பை-6, நாங்குநேரி-6, செங்கோட்டை-6, கருப்பாநதி-6, ராமநதி-5, சங்கரன் கோவில்-4, தென்காசி-3, சிவகிரி-1.  #Fishermen



    தாமிரபரணி புஷ்கரம் திருவிழாவை முன்னிட்டு தாம்பரம், நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
    சென்னை:

    தாமிரபரணி புஷ்கரம் திருவிழாவை முன்னிட்டு தாம்பரம், நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    * நெல்லை-தாம்பரம் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (06040) வருகிற அக்டோபர் 12 மற்றும் 14-ந்தேதி மதியம் 2 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    * நெல்லை-தாம்பரம் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (06044), வருகிற 16-ந்தேதி மாலை 6.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    *நெல்லை-தாம்பரம் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்(06042), வருகிற 14-ந்தேதி மாலை 6.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    * நெல்லை-தாம்பரம் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (06046), வருகிற 17-ந்தேதி மதியம் 3 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    * தாம்பரம்-நெல்லை சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06039), வருகிற 11-ந்தேதி மற்றும் நவம்பர் 13-ந்தேதி மாலை 5.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    * தாம்பரம்-நெல்லை சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (06043), வருகிற 15-ந்தேதி இரவு 7.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    *தாம்பரம்-நெல்லை சுவிதா சிறப்பு ரெயில் (82625), வருகிற 16-ந்தேதி மாலை 5.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.

    இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது. 
    ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மருந்து கடைகளை அடைத்து இன்று போராட்டம் நடத்தினார்கள். நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களிலும் இன்று அனைத்து மருந்து கடைகளும் அடைக்கப்பட்டன.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 1200 மருந்து கடைகள் மற்றும் மொத்த விற்பனை மருந்தகங்கள் உள்ளன. இதில் நெல்லை மாநகர பகுதிகளில் மட்டும் சுமார் 400-க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் உள்ளன.

    பிரபல பெரிய ஆஸ்பத்திரிகளின் உள்ளே செயல்படும் மருந்து கடைகளும் பெரும்பாலானவைகள் இன்று அடைக்கப்பட்டு இருந்தன. ஆனால் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் டாக்டர்கள் மருந்து மாத்திரைகள் கொடுத்து சிகிச்சை அளித்தனர்.

    வெளிநோயாளிகள் மருந்து கடைகளுக்கு சென்று மாத்திரை வாங்க முடியாமல் தவித்தனர். அதுபோல ஏற்கனவே டாக்டர்கள் எழுதிக்கொடுத்த மருந்து சீட்டுக்களுக்கும், இன்று மருந்துகள் வழங்கப்படவில்லை. இதனால் பெருமளவு வெளிநோயாளிகள் பரிதவித்தனர்.

    அரசு மருந்தகங்கள், அம்மா மருந்தகங்கள், மத்திய அரசின் குறைந்தவிலை மருந்து கடைகள் போன்றவை இன்று வழக்கம் போல் திறந்து இருந்தன. இதனால் அங்கு இன்று கடும் கூட்டம் அலைமோதியது. நெல்லை மேம்பாலம் அருகே உள்ள கூட்டுறவு பேரங்காடி ‘அம்மா’ மருந்தகத்தில் ஏராளமானவர்கள் வெளியே காத்து நின்று மருந்து மாத்திரைகள் வாங்கி சென்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 550 க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் இன்று அடைக்கப்பட்டன. இதனால் அங்கும் வெளி நோயாளிகள் மருந்துகள் கிடைக்காமல் அவதிப்பட்டனர். அம்மா மருந்தகங்கள் அனைத்து பகுதியிலும் திறந்து இருந்தது.

    நாளை அனைத்து மருந்து கடைகளும் வழக்கம் போல் திறக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை, கன்னியாகுமரி, தேனி, நீலகிரி மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரி தெரிவித்தார். #Rain #MeteorologicalDepartment
    சென்னை:

    தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை போதிய அளவுக்கு பெய்யவில்லை. இயல்பான அளவுக்கு சற்று குறைவாகவே பெய்துள்ளது. அதாவது 30 செ.மீ.க்கு பதில் 26 செ.மீ. மழைதான் பெய்துள்ளது.

    தேனி மாவட்டத்திலும், நெல்லை மாவட்டத்திலும் வழக்கத்தை விட மிக அதிகமாக பெய்துள்ளது. தேனி மாவட்டத்தில் இயல்பாக பெய்யவேண்டிய மழை 14 செ.மீ., ஆனால் 41 செ.மீ. மழை பெய்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவு 13 செ.மீ., ஆனால் 31 செ.மீ. மழை பெய்துள்ளது. 20 மாவட்டங்களில் குறைவாக மழை பெய்துள்ளது. 9 மாவட்டங்களில் இயல்பான அளவுக்கு பெய்துள்ளது.

    இந்த நிலையில் சென்னை வானிலை மைய அதிகாரி கூறுகையில், “வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும். ஆனால் நெல்லை, கன்னியாகுமரி, தேனி, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்” என்றார்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    கோபிசெட்டிபாளையம் 8 செ.மீ., சத்திரப்பட்டி (திண்டுக்கல் மாவட்டம்) 6 செ.மீ., உளுந்தூர்பேட்டை, தாளவாடி தலா 5 செ.மீ., அரண்மனை புதூர், ஆயிக்குடி, தாராபுரம், பொள்ளாச்சி, போடிநாயக்கனூர், காங்கேயம் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் 35 இடங்களில் குறைந்த அளவுக்கு மழை பதிவாகி உள்ளது.  #Rain #MeteorologicalDepartment
    சென்னை எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. #SpecialTrain
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    * சென்னை எழும்பூர்-நெல்லை சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்(வ.எண்.06001), சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 5-ந் தேதி இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.30 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக நெல்லை-சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரெயில்(06002), நெல்லையில் இருந்து வருகிற 7-ந் தேதி பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு, அடுத்தநாள் அதிகாலை 3.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

    * சென்னை எழும்பூர்-செங்கோட்டை சிறப்பு கட்டண ரெயில்(06011), சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 1, 8-ந் தேதிகளில் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.50 மணிக்கு செங்கோட்டை செல்லும். மறுமார்க்கமாக, செங்கோட்டை-சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரெயில்(06012), செங்கோட்டையில் இருந்து வருகிற 2, 9-ந் தேதிகளில் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு எழும்பூர் வந்து சேரும்.

    * தாம்பரம்-கொல்லம் சிறப்பு கட்டண ரெயில்(06027), தாம்பரத்தில் இருந்து வருகிற 1, 3, 5, 8 மற்றும் 10-ந் தேதிகளில் மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக கொல்லம்-தாம்பரம் வாரம் 3 முறை செல்லும் சிறப்பு கட்டண ரெயில்(06028) வருகிற 2, 4, 6, 9 மற்றும் 11-ந் தேதிகளில் கொல்லத்தில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் அதிகாலை 3.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    * சென்னை சென்டிரல்-நாகர்கோவில் சிறப்பு கட்டண ரெயில்(06007), சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 2, 9-ந் தேதிகளில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.05 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக, நாகர்கோவில்-சென்னை சென்டிரல் சிறப்பு கட்டண ரெயில்(06008), வருகிற 3, 10-ந் தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 7.20 மணிக்கு சென்னை சென்டிரல் வந்து சேரும்.

    * சென்னை சென்டிரல்-எர்ணாகுளம் சிறப்பு கட்டண ரெயில்(06005), சென்டிரலில் இருந்து வருகிற 5-ந் தேதி இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். மறுமார்க்கமாக எர்ணாகுளம்-சென்னை சென்டிரல் சிறப்பு கட்டண ரெயில்(06006), எர்ணாகுளத்தில் இருந்து வருகிற 7-ந் தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 7.20 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.

    * சென்னை சென்டிரல்-ஆமதாபாத் சிறப்பு கட்டண ரெயில்(06051), சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 6-ந் தேதி இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு 8-ந் தேதி அதிகாலை 5.45 மணிக்கு ஆமதாபாத் செல்லும்.

    * புதுச்சேரி-சந்திரகாச்சி சிறப்பு கட்டண ரெயில்(06010), புதுச்சேரியில் இருந்து வருகிற 6-ந் தேதி மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு 8-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சந்திரகாச்சி சென்றடையும்.

    மேற்கண்ட ரெயில்களுக்கு டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #SpecialTrain

    நெல்லை - கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் அந்த வழியாக செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. #Expresstrains #Flood
    நெல்லை:

    கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் மழை பெய்கிறது.

    நெல்லை - கன்னியாகுமரி மாவட்டங்களில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டது.



    இதனால் நெல்லை-குமரி மாவட்டங்களில் ரெயில் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று 15 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இன்றும் ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டதால் ரத்து செய்யப்பட்டது.

    நெல்லை - நாகர்கேவில் (56718) பயணிகள் ரெயில், செங்கோட்டை - கொல்லம் (56335/56336) பயணிகள் ரெயில், புனலூர் - கொல்லம் - புனலூர் ரெயில், கொல்லம் - புனலூர்-கொல்லம் ரெயில், புனலூர் - கன்னியாகுமரி, புனலூர் ரெயில் ஆகியவை இன்று ரத்து செய்யப்பட்டன.

    மதுரை கோட்டத்தில் செங்கோட்டை- புனலூர் இடையே மண்சரிவு காரணமாக அந்த வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    வாரத்தில் மூன்று முறை இயக்கப்படும் கொல்லம் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் கொல்லம்- செங்கோட்டை இடையேயான சேவை பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    புனலூரில் இருந்து இன்று (16-ந் தேதி) புறப்படுவதாக இருந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 56365/ 56366) போக்குவரத்தில் கொல்லம்-புனலூர் இடையிலான சேவை இருமார்க்கங்களிலும் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. நெல்லை - பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் கொல்லம் வரை இயக்கப்படுகின்றன.

    திருவனந்தபுரம் கோட்டத்தில் கனமழை காரணமாக அங்கமாலி, ஆலுவா பாலங்களில் வெள்ள நீர் உயர்ந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சோரனூர்- எர்ணாகுளம் பயணிகள் ரெயில் இன்று ரத்து செய்யப்படுகிறது.

    நேற்று புறப்பட்ட சென்னை - திருவனந்தபுரம் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், காரைக்கால் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பாலக்காடு வரை மட்டுமே செல்லும்.

    இதேபோல் இன்று புறப்படும் திருவனந்தபுரம் - சென்னை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், எர்ணா குளம் - காரைக்கால் எக்ஸ்பிரஸ் பாலக்காடு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    14-ந்தேதி புறப்பட்ட மும்பை - கன்னியாகுமரி ஜெயந்தி எக்ஸ்பிரஸ் ரெயில் ஈரோடு, திண்டுக்கல், மதுரை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. இதேபோல் கே.எஸ்.ஆர். பெங்களூர் - கன்னியாகுமர் எக்ஸ்பிரஸ் சேலம், நாமக்கல், திண்டுக்கல், நெல்லை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

    ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். #Expresstrains #Flood

    நெல்லை, குமரி மாவட்டங்களில் பலத்த மழை காரணமாக தண்டவாளத்தில் மண்சரிந்தது. இதனால் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மழை காரணமாக குமரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. #HeavyRain
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய பலத்த மழை பெய்தது. நேற்று காலையிலும் தொடர்ந்து மழை பெய்தது. தொடர் மழையின் காரணமாக பாபநாசம், சேர்வலாறு, ராமநதி, கடனாநதி ஆகிய அணைகளுக்கு தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 124 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 137 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் 13 அடி உயர்ந்தது.



    அணையில் இருந்து 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டதால் தாமிர பரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றங்கரையோர பகுதியில் உள்ள பல மரங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.

    நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் கருப்பந்துறை ஆற்றுப்பாலத்தை தொடும் அளவுக்கு தண்ணீர் ஓடுகிறது. குறுக்குத்துறை தாம்போதி பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.



    தொடர் மழை காரணமாக, குண்டாறு, அடவிநயினார், கொடுமுடியாறு ஆகிய அணைகள் நிரம்பி உள்ளன. கருப்பாநதி, கடனாநதி ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளன.

    குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்க நேற்று 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு அதிகரித்தது.

    இந்த நிலையில் புலியருவியில் குளித்தபோது வெள்ளத்தில் சிக்கி சிவகாசியை சேர்ந்த பிரபு (வயது 39) என்ற சுற்றுலா பயணி இறந்தார்.

    செங்கோட்டை அருகே கேரள மாநிலம் தென்மலையில் பலத்த மழை பெய்தது. நேற்று அதிகாலையில் திடீரென தென்மலை ரெயில் குகை நுழைவுவாயிலில் ராட்சத பாறை விழுந்து குகை பாதையை மூடிவிட்டது. மேலும் அப்பகுதியில் இருபுறமும் மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் விழுந்தது.

    தண்டவாளத்தில் விழுந்து கிடக்கும் பாறை மற்றும் மண்சரிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் நேற்று காலை நெல்லையில் இருந்து செங்கோட்டை வழியாக கொல்லம் செல்லும் ரெயில் ரத்து செய்யப்பட்டது. மேலும் நெல்லையில் இருந்து செங்கோட்டை வழியாக இரவு 12.30 மணிக்கு பாலக்காடு செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலும் ரத்தானது.

    இதேபோல் குமரி மாவட்டத்திலும் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் இரணியல் ரெயில் நிலையம் அருகில் நேற்று அதிகாலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக குருவாயூரில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்பட்டது.

    பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு தண்டவாளத்தில் கிடந்த மண்ணை அப்புறப்படுத்தும் பணி நடந்தது. தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும், அதிக அளவில் மண் மூடி இருந்ததாலும் சீரமைப்பு பணியில் சிரமம் ஏற்பட்டது. மண் சரிவு காரணமாக பல ரெயில்கள் நடு வழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    நாகர்கோவிலில் இருந்து புறப்படவேண்டிய 9 ரெயில் கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை-கொல்லம் செல்ல வேண்டிய அனந்தபுரி எக்ஸ்பிரஸ், திருச்சி- திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாகர்கோவில் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன.

    நெடுந்தூர பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் பொருட்டு மாற்று ஏற்பாடாக, கொல்லம்- சென்னை இடையேயான அனந்தபுரி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம்- திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஆகியவை நேற்று மாலை நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு சென்றன. கன்னியாகுமரி-மும்பை எக்ஸ்பிரஸ் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது.

    தொடர்மழை காரணமாக குமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் நெல்லை மாவட்டத்தில் தென்காசி வட்டார பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
    நெல்லை மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்களை கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று ஒரு தாலுகாவிற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த முகாமில் பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை மற்றும் நிறுத்தம் செய்யப்பட்ட முதியோர் உதவித்தொகை மறுபரிசீலனை விண்ணப்பம் உள்பட சமூக பாதுகாப்பு திட்டங்கள் குறித்தும், உழவர் பாதுகாப்பு அட்டை குறித்தும், நிலத்தாவாக்கள், சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் மனு கொடுக்கலாம். இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    நெல்லை மாவட்டத்தில் நாளை (10-ந்தேதி) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அம்மா திட்ட முகாம் நடக்கிறது. அதன்படி, நெல்லை தாலுகா பழவூர், பாளையங்கோட்டை தாலுகா முத்தூர், சங்கரன்கோவில் தாலுகா வாழவந்தாபுரம், தென்காசி தாலுகா பாட்டாக்குறிச்சி, செங்கோட்டை தாலுகா குன்னக்குடி, சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர், வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல், ஆலங்குளம் தாலுகா கடங்கநேரி, அம்பை தாலுகா ஆலடியூர் பகுதி1, நாங்குநேரி தாலுகா கீழகருவேலங்குளம், ராதாபுரம் தாலுகா ராதாபுரம், கடையநல்லூர் தாலுகா சிந்தாமணி, திருவேங்கடம் தாலுகா சத்திரங்கொண்டான், மானூர் தாலுகா தென்கலம், சேரன்மாதேவி தாலுகா வடக்கு கபாலிபாறை ஆகிய கிராமங்களில் நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    ×