search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுகாத்தி"

    இந்திய ஓப்பன் குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
    கவுகாத்தி:

    2-வது இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. நேற்று நடந்த இறுதிப் போட்டிக்கான பந்தயங்களில் இந்திய வீரர், வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். இதில் இந்தியா மொத்தம் 12 தங்கப்பதக்கங்களை அள்ளியது.

    6 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மேரி கோம் 51 கிலோ எடைப்பிரிவின் இறுதிச் சுற்றில் 5-0 என்ற கணக்கில் சக நாட்டு வீராங்கனை வன்லால் டுடியை எளிதில் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை தனது வசமாக்கினார்.



    மற்றொரு இந்திய வீராங்கனை சரிதா தேவி (60 கிலோ) 3-2 என்ற கணக்கில் சக நாட்டு வீராங்கனை சிம்ரன்ஜித் கவுரை வீழ்த்தி தங்கம் வென்றார். கடந்த 3 ஆண்டுகளில் சரிதா தேவி வென்ற முதல் தங்கப்பதக்கம் இதுவாகும்.

    இதேபோல், ஆண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அமித் பன்ஹால் 4-1 என்ற கணக்கில் சக நாட்டு வீரர் சச்சின் சிவாச்சை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். மேலும், 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ஷிவதபா 5-0 என்ற கணக்கில் சக நாட்டு வீரர் மனிஷ் கவுசிக்கை வென்று தங்கம் வென்றார்.
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 32-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி அணி நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) அணியை வீழ்த்தி 4-வது வெற்றியை பதிவு செய்தது. #ISL2018 #MumbaiCity #NorthEastUnited
    கவுகாத்தி:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கவுகாத்தியில் நடந்த 32-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) வீழ்த்தி 4-வது வெற்றியை பதிவு செய்தது. வெற்றிக்குரிய கோலை 4-வது நிமிடத்தில் அர்னால்டு இசோகோ அடித்தார். கவுகாத்தி அணிக்கு இது முதலாவது தோல்வியாகும். 6-வது ஆட்டத்தில் ஆடிய அந்த அணி 3 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி என்று 11 புள்ளிகள் பெற்றுள்ளது.

    இன்றைய ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா- எப்.சி. புனே சிட்டி (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன. #ISL2018 #MumbaiCity #NorthEastUnited 
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கோவா-கவுகாத்தி அணிகள் இடையிலான ஆட்டம் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி ‘டிரா’வில் முடிந்தது. #ISL2018 #NorthEastUnited #FCGoa
    கவுகாத்தி:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), எப்.சி.கோவா, மும்பை சிட்டி, ஜாம்ஷெட்பூர், அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ், டெல்லி டைனமோஸ், புனே சிட்டி ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.



    இந்த நிலையில் கவுகாத்தியில் நேற்றிரவு நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் கவுகாத்தி-கோவா அணிகள் மல்லுகட்டின. இதில் பலம் வாய்ந்த கோவா அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கவுகாத்தி அணியினர் ஈடுகொடுத்து ஆடினர். கோவா கோல் கீப்பர் முகமது நவாஸ் செய்த தவறால் 8-வது நிமிடத்தில் கவுகாத்தி வீரர் பெடரிகோ காலெகோ கோல் அடித்தார். அதாவது தனது பகுதியை விட்டு வெளியே வந்து பந்தை பிடித்த முகமது நவாஸ் அது ஆப்-சைடு என்று அறிவிக்கப்படும் என்று நினைத்தார். ஆனால் நடுவரோ உடனடியாக பிரிகிக் வாய்ப்பு வழங்கினார். அவர் திரும்புவதற்குள் பந்தை பெடரிகோ கோலாக மாற்றினார்.

    இதன் பின்னர் 14-வது நிமிடத்தில் பதிலடி கொடுத்த கோவா அணியின் நட்சத்திர வீரர் பெரன் கோராமினோஸ் கோல் அடித்தார். 39-வது நிமிடத்தில் எதிரணியின் மூன்று தடுப்பாட்டக்காரர்களை ஏமாற்றி கோராமினோஸ் மீண்டும் ஒரு கோல் போட்டார். இதனால் 2-1 என்ற கோல் கணக்கில் கோவா முன்னிலை பெற்றது. ஆனால் இந்த முன்னிலையை அவர்கள் தக்க வைத்துக் கொள்ள தவறினர். 53-வது நிமிடத்தில் கவுகாத்தி கேப்டன் பார்த்தோலோம் ஓக்பேச் தலையால் முட்டி கோல் அடித்தார். முடிவில் இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

    மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக்கில் மும்பை சிட்டி-ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதுகின்றன. #ISL2018 #NorthEastUnited #FCGoa 
    அசாமில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தனது தாய் உட்பட 3 பேரை 11 வயது சிறுவன் துணிச்சலாக உயிரை பணையம் வைத்து காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. #Assam
    திஸ்பூர்:

    அசாம் மாநிலம் வடக்கு கெளகாத்தியில் உள்ள செயின்ட் அந்தோனி பள்ளியில் கமல் கிஷோர் என்ற 10 வயது சிறுவன் படித்து வருகிறான். அங்கு வடக்கு கெளகாத்தி மற்றும் கெளகாத்தி இடையே பிரம்மபுத்திரா ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. இரு நகருக்கு இடையே படகு போக்குவரத்து மட்டுமே உள்ளது.

    இந்நிலையில், கிஷோர் தனது அம்மா, அத்தையுடன் வடக்கு கெளகாத்தியில் இருந்து கெளகாத்தி நகருக்குச் படகில் சென்று கொண்டிருந்தான்.

    அப்போது அவர்கள் சென்று கொண்டிருந்த படகு திடீரென்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நீச்சல் நன்கு அறிந்த கிஷோர் முதலில் கரையேறினான். அதன் பிறகு நீரில் தத்தளிக்கும் தனது அம்மாவை காப்பாற்றுவதற்காக மீண்டும் நீரில் குதித்து அம்மாவை காப்பாற்றினான். இதையடுத்து, தன்னுடன் வந்த அத்தையை காணவில்லை என்பதை உணர்ந்த கிஷோர், மீண்டும் ஆற்றுக்குள் குதித்து அத்தையையும், மற்றும் தத்தளித்துக்கொண்டிருந்த பெண்ணையும் ஆற்றிலிருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தான்.

    இந்த சம்பவம் குறித்து சிறுவன் கிஷோர் கூறுகையில்,

    ‘நான் தினமும் பிரம்மபுத்திரா ஆற்றில்  குதித்து நீச்சல் கற்றுக்கொள்வேன்.  ஆற்றில் படகு கவிழந்ததும் அனைவரும் வந்து விடுவார்கள் என்று முதலில் நினைத்தேன். பின்னர் தான் எனது அம்மாவுக்கு நீச்சல் தெரியாது என்பதை உணர்ந்து, உடனடியாக அம்மா, அத்தையை மீட்டேன்.  எல்லாம் 20 நிமிடங்களில் முடிந்து விட்டது. கடைசியாக பர்தா அணிந்திருந்த ஒரு அக்காவை காப்பாற்றினேன். ஆனால், அவர் கையில் ஒரு குழந்தை வைத்திருந்தார். குழந்தையை என்னால் காப்பாற்ற முடியவில்லை. அந்த வருத்தம் எனக்கு இப்போதும் உள்ளது.’

    இவ்வாறு சிறுவன் கிஷோர் கூறினார். தன் உயிரை பொருட்படுத்தாது, 3 பேரை காப்பாற்றிய சிறுவன் கிஷோரை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். #Assam
    அசாம் மாநிலத்தில் குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து 2 பேர் அடித்துக் கொல்லப்பட்டதைக் கண்டித்து கவுகாத்தியில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். #AssamChildKidnappers
    கவுகாத்தி:

    அசாம் மாநிலம் கர்பி அங்லாங் பகுதியில் குழந்தை கடத்தல் கும்பல் நடமாட்டம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இந்த சூழ்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு கர்பி அங்லாங் பகுதியில் உள்ள பஞ்சரி காசரி கிராமம் வழியாக ஒரு கார் சென்றுள்ளது. டோக்மோகா நோக்கி சென்ற அந்த காரை பொதுமக்கள் சிலர் வழிமறித்து விசாரித்துள்ளனர். அப்போது காருக்குள் இருந்த நபர்களின் நீண்ட தலைமுடி மற்றும் அவர்களின் தோற்றத்தைப் பார்த்து குழந்தை கடத்தும் கும்பல் என நினைத்து வெளியே இழுத்துப்போட்டு சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.

    தாங்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்றும், தங்களை உயிருடன் விட்டுவிடும்படியும் அவர்கள் கெஞ்சி உள்ளனர். அவர்களின் கெஞ்சலை காதில் வாங்காத கும்பல், மிகவும் கொடூரமாக தாக்கி உள்ளது. இதில் 2 பேரும் உயிரிழந்தனர். அத்துடன் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்தும் வெளியிட்டுள்ளனர்.

    இந்த வீடியோ வைரலாகப் பரவி பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கவுகாத்தியில் நேற்று இரவு பொதுமக்கள் பலர் திடீரென ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு மோதல் ஏற்பட்டது. வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.



    இந்த கொலை தொடர்பாக போலீசார் இதுவரை 16 பேரை கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். சட்டம் ஒழுங்கை பராமரிக்க அரசு தவறிவிட்டதாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். #AssamChildKidnappers

    ×