search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தஞ்சை"

    தஞ்சை அருகே உடல் துண்டாகி தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர் யார் என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த குடிகாடு என்ற பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் இன்று காலை ஒரு வாலிபர், தலை துண்டாக உடல் துண்டாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இந்த சம்பவம் குறித்து தஞ்சை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தான் இறந்து கிடப்பது தெரியவந்தது.

    மேலும் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபரின் சட்ட பையில் தஞ்சை - பூண்டிவரையிலும் செல்வதற்கான ரெயில் டிக்கெட் ஒன்று இருந்தது. எனவே இவர் பூண்டிக்கு ரெயிலில் சென்ற போது தான் இறந்திருக்கிறார். மேலும் தலை தனியாக, உடல் தனியாக கிடந்தது. இதனால் ரெயிலில் அடிப்பட்டு அந்த வாலிபர் இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இறந்த வாலிபர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? என்பது உடனடியாக தெரியவில்லை. இறந்தவர் பேண்ட் பாக்கெட்டில் ஒரு மெமரிகார்டு இருந்தது. அதில் சில புகைப்படங்கள் இருந்தன. அந்த புகைப்படங்களில் உள்ளவர் தான் தற்போது இறந்தவரா? என்பதும் தெரியவில்லை. எனவே ரெயில்வே போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பெண் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருமங்கலக்கோட்டை மேலையூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி ஜெயராணி (வயது 55). இவர்களுக்கு சக்திவேல் என்ற மகனும், சத்யா என்ற மகளும் உள்ளனர். கதிரேசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    ஜெயராணி தனது மகனுடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்டில் உள்ள பசுமாட்டை மேய்ச்சலுக்காக வயல்வெளிக்கு கொண்டு செல்வது வழக்கம். நேற்று வழக்கம் போல் மாடு மேய்க்க ஜெயராணி சென்றார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

    இதற்கிடையே அவரது வீட்டில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு தோப்பில் தலையில் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் ஜெயராணி பிணமாக கிடந்தார்.

    இதுபற்றி தகவலறிந்து அங்கு வந்த மகன் சக்திவேல் தாயாரின் உடலை பார்த்து கதறி அழுதார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கமலகண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பிணமாக கிடந்த ஜெயராணி கழுத்தில் கிடந்த 10 பவுன் 2 தங்க சங்கிலியை காணவில்லை. ஆனால் அவர் அணிந்திருந்த தோடு, மூக்குத்தி ஆகியவை அப்படியே இருந்தது.

    எனவே கொள்ளை சம்பவத்தில் ஜெயராணி கொலை செய்யப்பட்டரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் தோடு, மூக்குத்தி திருட்டு போகாமல் இருந்ததால் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? என்றும் விசாரித்து வருகிறார்கள்.

    மேலும் தஞ்சையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. பின்னர் போலீசார் உடலை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். இன்று பிரேத பரிசோதனை நடைபெறுகிறது.

    இதைதொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது.

    தனிப்படை போலீசார் முதற்கட்டமாக அவரது மகன் சக்திவேலிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

    இதில் ஜெயராணி மாடு மேய்க்க செல்லும் போது கழுத்தில் 10 பவுன் செயின் போட்டு சென்றாரா? என்று விசாரிக்கப்பட்டது.

    மேலும் ஜெயராணியின் அவரது உறவினர் மற்றும் ஊர் மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    தஞ்சையில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதில் கலந்துகொண்ட 6 பெண்கள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடந்தது.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் துரை மாணிக்கம் தலைமை தாங்கினார். சங்க மாவட்ட செயலாளர் பாலசுந்தரம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பன்னீர் செல்வம், மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு துரோகம் செய்த மோடி தலைமையிலான மத்திய அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 6 பெண்கள் உள்பட 60 பேரை வல்லம் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் தலைமையில் பாதுகாப்புக்கு வந்த போலீசார் கைது செய்தனர்.

    முன்னதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் துரை மாணிக்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடுவர் நீதிமன்ற தீர்ப்பின் படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை பிப்ரவரி 16-ந் தேதிக்குள் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு 3 முறை உத்தரவிட்டும் அதனை மத்திய அரசு நடைமுறைபடுத்தவில்லை.

    தமிழகத்துக்கு 4 டி.எம்.சி. தண்ணீர் வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் அதனை கர்நாடக அரசு ஏற்கவில்லை. காவிரி பிரச்சினையில் உடனடி நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்துவதற்கு கர்நாடகாவில் நடைபெறும் தேர்தல்தான் காரணம்.

    அதில் தங்களுக்கு பாதகமாக முடிவு அமைந்துவிடக்கூடாது என்று மத்திய அரசு நினைக்கிறது.

    காவிரி தண்ணீர் கிடைக்காததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் நெல் உற்பத்தி கேள்விகுறியாக உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் கர்நாடக அரசு காவிரி தண்ணீர் திறந்துவிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    ×