search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இழப்பீடு"

    உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. #SrilankaParliament
    கொழும்பு:

    இலங்கையில் ‘தனிஈழம்’ கேட்டு விடுதலைப் புலிகள் இயக்கம் கடந்த 30 ஆண்டுகளாக ராணுவத்துடன் போராடியது. விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடந்த உள்நாட்டு போர் கடந்த 2009-ம் ஆண்டு முடிவடைந்தது.

    உள்நாட்டு போரின் போது லட்சக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். ஏராளமானோர் உயிரிழந்தனர். பலர் மாயமாகினர். அங்கு நடந்த தேர்தலில் மகிந்த ராஜபக்சே ஆட்சி வீழ்ச்சியடைந்தது. கடந்த 2015-ம் ஆண்டு அதிபர் மைத்ரி பால சிறிசேனா தலைமையில் புதிய ஆட்சி அமைந்தது.

    அதன்பிறகும் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதியில் புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று சர்வதேச நாடுகள் குற்றம் சாட்டின. அதைத்தொடர்ந்து உள்நாட்டு போரின்போது 1 லட்சம் பேர் மாயமாகி விட்டதாக கடந்த மார்ச் மாதம் இலங்கை அரசு அறிவித்தது.

    இந்நிலையில் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வகை செய்யும் புதிய சட்டம் இயற்ற இலங்கை அரசு முடிவு செய்தது. அந்த சட்ட வரையறை இலங்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    இது விவாதத்துக்கு வந்த நிலையில் நேற்று ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 59 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. எதிராக 43 வாக்குகள் கிடைத்தன. அதன்மூலம் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட 1 லட்சம் தமிழர்கள் பலனடைகின்றனர்.

    இந்த சட்டத்துக்கு எதிராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் ஓட்டு போட்டனர். அதன் மூலம் ராணுவ நடவடிக்கையில் ஒடுக்கப்பட்ட தமிழ் போராளிகள் பலனடைவார்கள் என குற்றம் சாட்டினர்.

    இந்த சட்டம் குறித்து பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே கூறும்போது, ‘‘நாங்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளோம். உள்நாட்டு போரின்போது வடக்கு பகுதி மக்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. தெற்கு பகுதி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கும் பலர் மாயமாகி உள்ளனர். அவர்கள் குறித்த தகவல்களும் திரட்டப்படும்’’ என்றார். #SrilankaParliament
    கோவில்பட்டியில் விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால், அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணியைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவருடைய மகன் அய்யனார் (வயது 25). சுமை தூக்கும் தொழிலாளியான இவர் கடந்த 15-4-2009 அன்று சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்றார். கோவில்பட்டி-கடலையூர் ரோட்டில் சென்றபோது, எதிரே வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக சைக்கிளில் மோதியது. இதில் அய்யனார் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து அய்யனாரின் தாயார் முத்துலட்சுமி, அரசு போக்குவரத்து கழகத்திடம் இழப்பீடு கேட்டு, கோவில்பட்டி சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    கடந்த 13-12-2016 அன்று வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு போக்குவரத்து கழகம் ரூ.3 லட்சத்து 53 ஆயிரத்து 400-யை இழப்பீடாக முத்துலட்சுமிக்கு வழங்க உத்தரவிட்டார்.

    ஆனால் அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்கவில்லை. இதையடுத்து வட்டியுடன் சேர்த்து ரூ.5 லட்சத்து 95 ஆயிரத்து 203-யை இழப்பீடாக வழங்குமாறு முத்துலட்சுமி, கோவில்பட்டி சப்-கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார்.

    கடந்த 14-ந் தேதி வழக்கை விசாரித்த சப்-கோர்ட்டு நீதிபதி பாபுலால், அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்காததால், அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து மதுரைக்கு புறப்பட தயாராக இருந்த அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர் சங்கரநாராயணன் ஜப்தி செய்து, கோர்ட்டு வளாகத்தில் நிறுத்தினார்.
    உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. #ISRO #ScientistNambiNarayan #KeralaCabinet
    புதுடெல்லி:

    இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் விஞ்ஞானிகள் பட்டியலில் தவிர்க்க முடியாத ஒருவராக கருதப்படுபவர்களில் நம்பி நாராயணனும் ஒருவர். திரவ எரிபொருளை வைத்து ராக்கெட் ஏவுவதற்கான வழிமுறைகளை ஆராய்ச்சி செய்து வந்தவர்.

    இவர், கடந்த 1994-ம் ஆண்டு பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு ராக்கெட் தொழில்நுட்பத்தை விற்பனை செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை என சிபிஐ தனது அறிக்கையை தாக்கல் செய்தது. இதையடுத்து நம்பி நாராயணன் விடுதலை செய்யப்பட்டார்.

    அதன்பிறகு, தன் மீது பொய்வழக்கு போட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நம்பி நாராயணன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், விஞ்ஞானி நம்பி நாராயணனை கைது செய்தது தேவையில்லாதது எனக்கூறி, அவருக்கு கேரள அரசு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்ப்பளித்து வழக்கை முடித்து வைத்தது.

    இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றும் பொருட்டு, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானியான நம்பி நாராயணனுக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. #ISRO #ScientistNambiNarayan #KeralaCabinet
    ராணிப்பேட்டை பெல் மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் சார்பில் 2-ம் நாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.#Bhelworkerstruggle

    வாலாஜா:

    ராணிப்பேட்டை பெல் மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் சார்பில் 2-ம் நாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    வீடியோ கான்பரன்ஸ் மூலம் மேற்பார்வையாளர்கள் ஊதிய குழு அறிக்கை வெளியிட்டதை கண்டித்தும் எஸ் 1, எஸ் 3 மேலாளர்கள் ஊதிய மாற்றம் டி.பி.இ., டி.எச்.ஐ.ஜி. வழிகாட்டுதல் படி இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் எஸ் 1, எஸ் 3 பதவி உயர்வில் ஏற்பட்ட இழப்பை முழுமையாக ஈடு செய்ய வேண்டும்.

    எஸ் 9, எஸ் 10 பதவிகள் புதிதாக உருவாக்கப்பட வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

    கண்டன ஆர்ப்பாட்டத்தில் சங்க பொதுச் செயலாளர் ஸ்டாலின், உதவி தலைவர்கள் ராஜேந்திரன், கணேஷ்பாபு, உதவி பொதுச் செயலாளர் கண்ணன், அமைப்புச் செயலாளர் ரதீஷ் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். #Bhelworkerstruggle

    ராணிப்பேட்டை அடுத்த சிப்காட்டில் பெல் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    வாலாஜா:

    ராணிப்பேட்டை அடுத்த சிப்காட்டில் பெல் நிறுவன நுழைவு வாயில் முன்பு, நிறுவன மேற்பார்வையாளர்கள் ஊதிய மாற்ற அறிவிக்கையை காணொலி காட்சி மூலம் வெளியிட்டதை கண்டித்தும், பதவி உயர்வில் ஏற்பட்ட இழப்பீடை ஈடுசெய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். முன்னதாக பெல் ஊரக வளாகத்தில் தொடங்கி பெல் நிறுவன நுழைவு வாயில் வரை ஊர்வலமாக சென்றனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பொது செயலாளர் ஸ்டாலின், உதவி தலைவர்கள் ராஜேந்திரன், கணேஷ்பாபு, உதவி பொது செயலாளர் கண்ணன், அமைப்பு செயலாளர் ரத்தீஷ் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தன் மீது பொய் வழக்கு போட்டதற்கு இழப்பீடு வேண்டி இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் தொடர்ந்த வழக்கில், அவருக்கு 50 லட்ச ரூபாய் வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #ISRO #ScientistNambiNarayan #SupremeCourt
    புதுடெல்லி:

    இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன். 1994-ம் ஆண்டு இவர் விஞ்ஞானியாக இருந்த போது கிரையோ ஜெனிக் ராக்கெட் என்ஜின் தொழில்நுட்பத்தை பாகிஸ்தானுக்கு அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதையடுத்து அவரை கேரள போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீஸ் காவலில் இருந்த போது விஞ்ஞானி நம்பி நாராயணன் துன்புறுத்தப்பட்டதாக புகார் கூறப்பட்டது.

    தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து நம்பி நாராயணன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் அவர் மீதான புகார் பற்றி விசாரிக்க நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையில் விசாரணை குழு அமைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த குழுவில் மத்திய-மாநில அரசு பிரதிநிதிகளும் இடம் பெற்று இருந்தனர்.

    மேலும் சி.பி.ஐ.யும் தனியாக விசாரணை நடத்தி நம்பி நாராயணன் மீது தவறாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தது. விசாரணை குழுவின் அறிக்கையின் அடிப்படையில் விஞ்ஞானி நம்பி நாராயணனை விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதற்கிடையே தன் மீது தவறாக வழக்குப்பதிவு செய்து சித்ரவதை செய்த குற்றத்துக்காக அப்போதைய கேரள போலீஸ் டி.ஜி.பி. சிபி மேத்யூஸ், போலீஸ் சூப்பிரண்டுகள் கே.கே. ஜோசுவா, எஸ்.விஜயன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டில் நம்பி நாராயணன் மனு தாக்கல் செய்தார்.

    ஆனால் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை என்று கூறி மனுவை கேரள ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. அதன்பிறகு 3 போலீஸ் அதிகாரிகளும் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர்.


    கேரள ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து நம்பி நாராயணன் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு மனுதாக்கல் செய்தார். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஓய். சந்திர சூட் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணை நடத்தியது.

    இன்று இந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதில் கேரள போலீசாரின் தவறான வழக்கால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளான நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், முன்னாள் டி.ஜி.பி. மேத்யூஸ், சூப்பிரண்டுகள் ஜோசுவா, விஜயன் ஆகியோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். #ISRO #ScientistNambiNarayan #SupremeCourt
    கரூரில் சாயக்கழிவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் தலைமை தாங்கி, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளிடம் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது சின்னதேவன்பட்டியை சேர்ந்த விவசாயி தங்கவேல் பேசுகையில், நெல்லுக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதாரவிலை போதுமானதாக இல்லை. களை எடுப்பது, மருந்து தெளிப்பது என நெல் சாகுபடிக்கு செலவு அதிகம் ஆகிறது. எனவே நெல் கொள்முதல் விலையினை குவிண்டாலுக்கு ரூ.2,500-ஆக உயர்த்தி வழங்க வேண்டும். வாழ்க்கை முழுவதும் உழைத்து கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.10 ஆயிரம் வழங்கிட வேண்டும். காவிரியில் உபரியாக செல்லும் நீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்க வேண்டும். இதற்காக குழாய் மூலம் நீரை கொண்டு வந்து கடவூர் பகுதியிலுள்ள ஏரி, குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் விவசாயம் செழிப்பதோடு, குடிநீர் பிரச்சினையும் எளிதில் தீர்ந்துவிடும் என்று கூறினார்.

    நெரூர் ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க தலைவர் கருமலை பேசுகையில், கடம்பங்குறிச்சியில் இருந்து நன்னியூர் வழியாக செல்லும் ராஜவாய்க்காலில் தண்ணீரை தேக்கி வைக்கும் மதகு உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் காவிரி ஆற்று உபரிநீர் ராஜவாய்க்காலில் அதிகளவு வந்ததால், இந்த மதகுக்கு முன்புறமாக ஆங்காங்கே போடப்பட்ட சிறிய தடுப்பணைகள் உடைந்து சேதமடைந்து விட்டது. அதனை சரி செய்து தர வேண்டும். மேலும் காவிரி ஆறு, நெரூர் வாய்க்காலின் கரைகளில் ஆயில் என்ஜின் மூலம் சட்டவிரோதமாக தண்ணீர் எடுப்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

    கரூரை சேர்ந்த விவசாயி சண்முகம் பேசுகையில், கரூர் அமராவதி ஆற்றங்கரையோரமாக கொட்டப்படும் கழிவுகளை அகற்றி தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் கழிவுநீரை ஆற்றுக்குள் திறந்து விடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயம்பள்ளி வாய்க்காலை தூர்வாராத காரணத்தினால் அப்பகுதியில் தண்ணீர் செல்ல முடிவதில்லை. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமாநிலையூர் வாய்க்கால் உள்ளிட்டவை தூர்வாரப்படவில்லை. தாந்தோன்றிமலை ராஜவாய்க்காலை 30 ஆண்டுகளாக காணவில்லை. தூர்ந்து போய் விட்டது என்று கூறினார். உடனே எழுந்த பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர், என்னுடன் வாருங்கள் தூர்வாரிய இடத்தையெல்லாம் காண்பிக்கிறேன் என கூறி அந்த குற்றசாட்டை மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    கரூர் மாவட்ட நிலத்தடிநீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்க செயலாளர் ராமலிங்கம் பேசுகையில், கரூரில் சாயக்கழிவினால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கக்கோரி கடந்த 2003-2004-ம் ஆண்டில் சென்னையிலுள்ள இழப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் நீண்ட நாட்களாகியும் அந்த இழப்பீட்டு தொகை இன்னும் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. அதனை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் செப்டம்பரில் நடக்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் போராட்டம் நடத்தப்படும். சணப்பிரட்டி பகுதியில் உள்ள குடிநீர் கிணறு சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது. அந்த கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின்மோட்டார் உள்ளிட்டவை சேதமடைந்து, ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் அது சீர் செய்யப்படவில்லை. இதனால் மக்கள் தண்ணீர் பிரச்சினையால் அவதியடைகின்றனர். எனவே அந்த குடிநீர் கிணற்றை சீர் செய்ய வேண்டும் என்று கூறினார்.

    மேலும் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும். அமராவதி, காவிரி ஆற்றங்கரையோரமாக இயங்கும் சாயப்பட்டறைகளில் அடிக்கடி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு சட்டவிரோதமாக ஆற்றில் சாயக்கழிவு திறந்து விடப்படுகிறதா? என்பதை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நரிக்காட்டுவலசு ராஜமாணிக்கம், ஆண்டிப்பாளையம் நல்லுசாமி, கீழவெளியூர் ராஜூ உள்பட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் பேசினர். முடிவில் இந்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் பதில் கூறினார். இந்த கூட்டத்தில் வேளாண்மைதுறை இணை இயக்குனர் ஜெயந்தி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
    ரெயிலில் எலி கடித்ததால் பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு மற்றும் வழக்கு செலவை வழங்கும்படி ரெயில்வே துறைக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Railways
    சேலம்:

    சேலத்தைச் சேர்ந்த வெங்கடாச்சலம் என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி சென்னைக்கு ரெயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது அவரை எலி கடித்துள்ளது. இதனால் காயமடைந்த அவர், டிக்கெட் பரிசோதகரிடம் கூறியபோது முதலுதவி அளிக்க ஏற்பாடு செய்யவில்லை. அடுத்த ரெயில் நிலையத்தில்தான் சிகிச்சை பெற முடியும் என்று கூறியிருக்கிறார்.

    கடைசியாக எழும்பூர் ரெயில் நிலையம் வந்ததும், இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். முதலில் அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    அதேசமயம், எலி கடித்ததால் மனவேதனை அடைந்ததாகவும், இதற்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் சேலம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையிட்டார். 4 ஆண்டுகளாக நடைபெற்ற இவ்வழக்கில் இப்போது நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

    எலி கடித்ததால் பாதிக்கப்பட்ட பயணி வெங்கடாச்சலத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு, மருத்துவச் செலவிற்கு ரூ.2 ஆயிரம் மற்றும் வழக்கு செலவிற்காக ரூ.5 ஆயிரம் வழங்கும்படி ரெயில்வே துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த தொகையை மூன்று மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். Railways
    ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் இரு தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரியதால், மேலும் 4 வாரங்கள் அவகாசம் அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #ThoothukudiSterlite #SupremeCourt
    புதுடெல்லி:

    ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை தொடர்பாக ராமசுப்பு என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு ஒன்றை முன்பு தாக்கல் செய்தார். அந்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் அதை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கோரி வழக்கு தொடரப்பட்டதாகவும், ஆனால் வழக்கை முறையாக விசாரிக்காமல், ஆலை இயங்க அனுமதி அளித்து கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ந் தேதி தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியதாகவும், அந்த தீர்ப்பை தள்ளுபடி செய்து ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.



    மேலும் ஸ்டெர்லைட் ஆலை மூலம் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்காக சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    இந்த மனு கடந்த மே மாதம் 15-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய, மாநில அரசுகள் மற்றும் ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்தனர்.

    இந்தநிலையில், இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் பதிவாளர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரியதால், மேலும் 4 வாரங்கள் அவகாசம் அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  #ThoothukudiSterlite #SupremeCourt #Tamilnews 
    Krishnagiri near government bus japti is not due to compensation
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே நடந்த விபத்தில் உயிரிழந்த தொழில் அதிபர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

    கர்நாடக மாநிலம் பெங்களூரு வில்சன்கார்டன் பகுதியை சேர்ந்த தொழில்அதிபர்கள் நசீர்உசேன் (வயது 24), ஜோயால்சொரூப்(25) மற்றும் மேகாதிரிஷா(22) ஆகிய 3 பேரும் ஒரு காரில் கடந்த 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ந் தேதி காரில், பெங்களூருவில் இருந்து சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை காண சென்றனர்.

    அப்போது கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தொன்னைகான்கொட்டாய் என்ற இடத்தில் கார் சென்ற போது, எதிரே வந்த அரசு பஸ் மோதியதில், சம்பவ இடத்திலேயே நசீர் உசேன், ஜோயால்சொரூப் ஆகியோர் இறந்தனர். மேகாதிரிஷா படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, உயிர் பிழைத்தார். தற்போது நடக்க முடியாத நிலையில் உள்ளார்.

    இந்த விபத்து குறித்த வழக்கு கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கின் இறுதி தீர்ப்பு கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ந் தேதி வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 88 லட்சத்து 54 ஆயிரம் இழப்பீட்டை 7.5 சதவீத வட்டியுடன், அரசு போக்குவரத்து கழகம் வழங்கிட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் இழப்பீடு வழங்கப்படவில்லை.

    இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினர் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி, கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ந் தேதி தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ந் தேதிக்குள் 25 சதவீத வட்டியுடன் இழப்பீட்டு தொகையை வழங்க உத்தரவிட்டார். அதன்படி போக்குவரத்து கழக நிர்வாகம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ந் தேதி இழப்பீட்டு தொகையில் ரூ. 33 லட்சத்து 83 ஆயிரத்தை மட்டும் நீதிமன்றத்தில் செலுத்தியது. மீதி தொகை செலுத்தப்படவில்லை.

    இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி கலாவதி, இழப்பீட்டு தொகை முழுவதையும் செலுத்தாததால் அரசு பஸ்சை ஜப்தி செய்து கடந்த 9-ந் தேதி உத்தரவிட்டதுடன், இழப்பீட்டு தொகையாக இதுவரை உள்ள வட்டியுடன் சேர்த்து ரூ. 1 கோடியே 12 லட்சத்து 11 ஆயிரம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அதன்படி நேற்று கோர்ட்டு அமீனா உதவியுடன், பாதிக்கப்பட்டவரின் வக்கீல் முருகன் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்திற்கு சென்று, அங்கு சேலத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற அரசு பஸ்சை ஜப்தி செய்தனர். இதனால் கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
    மகாராஷ்டிராவில் குழந்தை கடத்தல் கும்பல் என சந்தேகித்து அடித்துக் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்க முதல் மந்திரி உத்தரவிட்டுள்ளார். #Dhulelynching #suspicionofchildlifters
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம், துலே மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் வசிக்கும் கிராமமான ரெயின்பாதாவிற்கு வெளியூரை சேர்ந்த சில புதிய நபர்கள்நேற்று பேருந்தில் வந்திறங்கினர்.

    அவர்களில் ஒருவர், பேருந்து நிறுத்ததில் இருந்த குழந்தையிடம் சாதாரணமாக பேச முயற்சித்துள்ளார். ஆனால், அவர்களை குழந்தை கடத்தல்காரர்கள் என சந்தேகித்த அப்பகுதி மக்கள் புதிய நபர்களை கொடூரமாக தாக்க தொடங்கினர். இந்த தாக்குதலில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்நிலையில், குழந்தை கடத்தல் கும்பல் என சந்தேகித்து அடித்துக் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்கப்படும் என மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இன்று அறிவித்துள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேவேந்திர பட்னாவிஸ், சில குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். #Dhulelynching #suspicionofchildlifters
    ஆஸ்திரேலியா நாட்டில் பள்ளி, பணியிடங்களில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 60 ஆயிரம் பேருக்கு இழப்பீடாக பணம் வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளது.
    கான்பெரா:

    ஆஸ்திரேலியா நாட்டில் பள்ளி, பணியிடங்களில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆண் - பெண்களுக்கு   இழப்பீடாக பணம் வழங்கும் திட்டத்துக்கு அந்நாட்டு சமூக நலத்துறை அமைச்சகம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

    பாதிக்கப்பட்டவர்கள் முறையீடு செய்யும் வகையில் தனி அமைப்பு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணை முகமையின் பரிந்துரையின் பேரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு சராசரியாக 67 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்களும், அதிகபட்ச தொகையாக ஒன்றரை லட்சம் டாலர்களும் இழப்பீடாக வழங்க அரசு தீர்மானித்தது.


    இதற்கான நிதியை அந்நாட்டின் பல்வேறு மாநில அரசுகளும், கத்தோலிக்க தேவாலயங்களும் அளிக்க முன்வந்துள்ளன.

    பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் மனக்காயங்களை ஆற்றும் மகத்தான திட்டம் என ஆஸ்திரேலிய பிரதமர் மால்கோம் டர்ன்புல் குறிப்பிட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு நிதி அளிக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் இன்று தெரிவித்துள்ளன.

    இந்த திட்டத்தின்கீழ் பணம் பெற்று கொள்பவர்கள் தங்களை கொடுமைப்படுத்தியவர்கள் மீது இனி வழக்கு ஏதும் தொடர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    ×