search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடகம்"

    கர்நாடகத்தில் மூன்று பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் இரண்டு சட்டசபை தொகுதிகள் என மொத்தம் ஐந்து தொகுதிகளுக்கான நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. #KarnatakaBypoll
    பெங்களூரு:

    கர்நாடகம் மாநிலத்தின் சிவமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ராமநகரம், ஜம்கண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 2-ம் தேதி நடைபெற்றது.

    இந்த தொகுதிகளில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்தக் கூட்டணியை எதிர்த்து பாஜக மட்டுமே களத்தில் போட்டியிட்டது. பெல்லாரி உள்பட மொத்தமுள்ள ஐந்து தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களுடன் சேர்த்து 31 பேர் போட்டியிட்டனர்.

    காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. ஐந்து தொகுதிகளில் மொத்தம் 54,54,275 பேர் வாக்களித்தனர்.

    பெல்லாரியில் 1901, சிவமோகாவில் 2002, மாண்டியாவில் 2047, ஜம்கண்டியில் 226, ராமநகரில் 277 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 1502 வாக்குச்சாவடிகள் பதற்றமானவைகளாகக் கருதப்பட்டு, போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.



    பாராளுமன்ற தொகுதிகளான சிவமோகாவில் 61.5 சதவீதம், பெல்லாரியில் 63.85 சதவீதம் , மாண்டியாவில் 53.93 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    இதேபோல், சட்டசபை இடைத்தேர்தலை சந்தித்த ராமநகரில் 73.71 சதவீதமும், ஜம்கண்டியில் 81.58 சதவீதம் வாக்குகளும் பதிவாகின.

    இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. வாக்குகள் எண்ணப்பட்டு மதியத்துக்குள் வெற்றி நிலவரம் வெளியாகும். மேலும், வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர். #KarnatakaBypoll
    கர்நாடகம் மாநில தலைநகரான பெங்களூருவுக்கு சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அம்மாநில முதல் மந்திரி குமாரசாமியை இன்று திடீரென சந்தித்துப் பேசினார். #RahulGandhi #Kumaraswamy
    பெங்களுரு:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகம் மாநிலத்துக்கு ஒருநாள் பயணமாக சென்றுள்ளார். அங்கு பெங்களூருவில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் ஏரோநாடிக்கல் நிறுவன ஊழியர்களை சந்திக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், கர்நாடகம் மாநில தலைநகர் பெங்களூருவில் தங்கிய ராகுல் காந்தி, திடீரென அம்மாநில முதல் மந்திரி குமாரசாமியை சந்தித்து பேசினார்.

    இருவரும் கர்நாடகம் மாநில அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #RahulGandhi #Kumaraswamy
    கர்நாடாகாவின் கார்வார் பகுதியில் வேன் மீது லாரி மோதிய விபத்தில் தாய், மகள் உள்பட 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். #Accident
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கார்வார் மாவட்டத்தின் ஒன்னாவர் தாலுகா கர்கிமடம் வழியாக எடப்பள்ளி-பன்வேல் தேசிய நெடுஞ்சாலை 66 செல்கிறது.

    இந்தப் பகுதியில் நேற்று மாலை பயணிகளை ஏற்றிக் கொண்டு குமட்டாவில் இருந்து ஒன்னாவர் நோக்கி ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த ஒரு லாரி வேன் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த விபத்தில் ஒரு சிறுமி, 2 பெண்கள் உள்பட 5 பேர் உடல் நசுங்கி இறந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தகவல் அறிந்த ஒன்னாவர் போலீசார் அங்கு சென்று விபத்தில் பலியானோர் உடல்களை கைப்பற்றினர். அவர்கள் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Accident
    பெட்ரோல், டீசல் விலையுயர்வை கண்டித்து நடைபெறும் பாரத் பந்தை முன்னிட்டு பெங்களூருவில் பள்ளி, கல்லூரிக்கு நாளை விடுமுறை அளித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. #BharatBandh #Bengaluru #PublicHoliday
    பெங்களூரு:

    பெட்ரோல் - டீசலுக்கு மத்திய அரசு அளித்து வந்த மானியத்தை பெருமளவில் குறைத்ததுடன் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கே வழங்கியது. இதனால் பெட்ரோல்-டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வந்தது.

    இதனால் சர்வதேச சந்தை விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.81.40 ஆக இருந்த நிலையில் நேற்றைய விலையிலிருந்து 12 காசுகள் அதிகரித்து பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.83.66 ஆகவும், 11 காசுகள் அதிகரித்து டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.76.75 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை (10-ந்தேதி) நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் வர்த்தகர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.



    இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூருவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக, மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலையுயர்வை கண்டித்து நடைபெறும் பாரத் பந்தை முன்னிட்டு பெங்களூருவில் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது. #BharatBandh #Bengaluru #PublicHoliday
    பெங்களூருவில் நடைபெறும் விமான கண்காட்சி வேறு இடத்துக்கு மாற்றப்படாது என பாதுகாப்பு துறை இன்று அறிவித்துள்ளது. #Bengaluru #AeroIndia
    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆண்டு தோறும் விமான கண்காட்சி நடப்பது வழக்கம். கடந்த 1996-ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த கண்காட்சியை உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவுக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது.

    விமான கண்காட்சி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியானதும், கர்நாடக மாநில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு பெங்களூருவில் நடைபெறும் உலக புகழ்பெற்ற விமான கண்காட்சியை உத்தரப்பிரதேசத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது என முதல் மந்திரி குமாரசாமி குற்றம் சாட்டினார். விமான கண்காட்சியை மாற்றக் கூடாது என பிரதமர் மோடிக்கி கடிதம் எழுதியிருந்தார்.



    இந்நிலையில், பெங்களூருவில் நடைபெறும் விமான கண்காட்சி வேறு இடத்துக்கு மாற்றப்படாது என பாதுகாப்பு துறை இன்று அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பெங்களூருவில் நடைபெற்று வந்த விமான கண்காட்சி வேறிடத்துக்கு மாற்றப்படாது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 20 ம் தேதி முதல் 24 ம் தேதி வரை பெங்களூருவில் விமான கண்காட்சி நடைபெறவுள்ளது. என குறிப்பிட்டுள்ளது. #Bengaluru #AeroIndia
    கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கான நிவாரண நிதி தொடர்பாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் பேசவுள்ளேன் என பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். #KarnatakaFlood #Kumaraswamy #NirmalaSitharaman
    புதுடெல்லி:

    கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது குடகு மாவட்டம். இந்த மாவட்டத்தில் கனமழை இடைவிடாது கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளப்பெருக்கால், பல்வேறு கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    இங்குள்ள முக்கொட்லு, காட்டக்கேரி, ஆலேறி, மக்கந்தூர் ஆகிய கிராமங்களில் பயங்கர மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. மண்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலியாகினர்.

    குடகு மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவம், கடலோர காவல்படையினர் உள்பட பலர் ஈடுபட்டுள்ளனர். முதல் மந்திரி குமாரசாமி ஹெலிகாப்டர் மூலம் குடகு மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும், கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதல் மந்திரி குமாரசாமியிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார்.



    இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கான நிவாரண நிதி தொடர்பாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் பேசவுள்ளேன் என பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி நான். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடகு மாவட்டத்தை சீரமைக்க எம்.பி தொகுதி நிதியாக ஒரு கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என கோரவுள்ளேன்.

    வெள்ளத்தால் சேதமடைந்துள்ள விரைவில் சாலைகளை சீரமைப்பது தொடர்பாக சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரியை சந்திக்க உள்ளேன்.

    மேலும், குடகு மாவட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடியிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளேன் எனவும் தெரிவித்தார். #KarnatakaFlood #Kumaraswamy #NirmalaSitharaman
    கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதல் மந்திரி குமாரசாமியிடம் தொலைபேசியில் கேட்டறிந்தேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #KarnatakaFlood #PMModi #Kumaraswamy
    புதுடெல்லி:

    கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது குடகு மாவட்டம். இந்த மாவட்டத்தில் கனமழை இடைவிடாது கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளப்பெருக்கால், பல்வேறு கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    இங்குள்ள முக்கொட்லு, காட்டக்கேரி, ஆலேறி, மக்கந்தூர் ஆகிய கிராமங்களில் பயங்கர மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. மண்சரிவால் ஏற்கனவே குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

    இதற்கிடையே, ஜோடுபாலா பகுதியில் மழைவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 6 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

    குடகு மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவம், கடலோர காவல்படையினர் உள்பட பலர் ஈடுபட்டுள்ளனர். நேற்று முதல் மந்திரி குமாரசாமி ஹெலிகாப்டர் மூலம் குடகு மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதல் மந்திரி குமாரசாமியிடம் தொலைபேசியில் கேட்டறிந்தேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், வெள்ள பாதிப்புகள் குறித்து கர்நாடக முதல் மந்திரி குமாரசாமியிடம் தொலைபேசியில் கேட்டறிந்தேன். வெள்ளம் பாதித்த கர்நாடகாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும். வெள்ளம் பாதித்த பகுதிகளில் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க பிரார்த்தித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். #KarnatakaFlood #PMModi #Kumaraswamy
    கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்கு விமான கண்காட்சி மாற்றப்படுவது ஏன் என முதல் மந்திரி குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார். #Kumaraswamy #AeroShow
    பெங்களூரு:

    உலக அளவில் பிரபலமான இந்திய விமானத் தொழில் கண்காட்சி, 1996-ஆம் ஆண்டு முதல் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை பெங்களூரு ஹெப்பாளில் உள்ள விமானப் படைத் தளத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வந்துள்ளது.

    இதற்கிடையே, இந்த ஆண்டு விமான கண்காட்சி பெங்களூருவில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்கு மாற்றப்பட  உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த அறிவிப்புக்கு கர்நாடகம் மாநில முதல் மந்திரி குமாரசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் ஹுப்ளியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், விமான கண்காட்சியை பெங்களூருவில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் தலைநகர் லக்னோவுக்கு இடம் மாற்றுவது சரியல்ல. இதன்மூலம் கர்நாடக மாநிலத்தை அலட்சியப்படுத்துவது ஏற்புடையதல்ல. 

    பெங்களூருவில் விமான கண்காட்சியை நடத்துவதற்கான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் நிறைந்துள்ளது. இந்த கண்காட்சியை மாற்றும் முடிவை மத்திய அரசு எடுத்தது ஏன் என தெரியவில்லை. இங்குள்ள பாஜக சகோதரர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்றார் குமாரசாமி. #Kumaraswamy #AeroShow
    மேகதாதுவில் புதிய அணை கட்டினால் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கர்நாடகம் தராது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார். #MegathathuDam #Kumaraswamy #Ramadoss
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக தமிழகத்துடனும், கர்நாடகத்துடனும் மத்திய அரசு பேச்சு நடத்தும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரி உறுதியளித்திருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்திருக்கிறது.

    காவிரி பிரச்சினையில் இரு தரப்புக்கும் பொதுவானவராக இருக்க வேண்டிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, கர்நாடகத்தின் தூதராக மாறி தமிழகத்துடனும் பேச்சு நடத்தப் போவதாக அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது; இதை ஏற்க முடியாது.

    மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரியை கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் நேற்று தில்லியில் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது மேகதாதுவின் அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்ற கர்நாடக அமைச்சரின் கோரிக்கையைக் கேட்ட நிதின் கட்கரி, இதுதொடர்பாக இரு மாநில பிரதிநிதிகளையும் அழைத்துப் பேசப்போவதாக உறுதியளித்திருக்கிறார்.



    இதைத் தொடர்ந்து மேக தாது அணை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசப்போவதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கூறியிருக்கிறார். இவை இரண்டுமே மிகவும் ஆபத்தானவையாகும்.

    மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று பாராளுமன்றத்தில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தினார். இதுதொடர்பாக அப்போதைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதிக்கு தொடர்ச்சியாக கடிதங்களையும் எழுதினார். அவற்றுக்கு பதிலளித்து 9.6.2015 அன்று உமா பாரதி எழுதிய கடிதத்தில் இதை தெளிவாக விளக்கி யிருந்தார்.

    ‘‘மாநிலங்களிடையே பாயும் நதியான காவிரியில் கர்நாடகம் எந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக இருந்தாலும் அதுகுறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதால், அதன்படி அந்த மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்டு, அதையும் விரிவான திட்ட அறிக்கையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

    கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை நதிகளின் குறுக்கே இப்போதுள்ள அணைகளின் கொள்ளளவு 104.59 டிஎம்சி ஆகும். 67.14 டிஎம்சி கொள்ளளவுள்ள மேகதாது அணையும் கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 171.73 டிஎம்சியாக அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, இடைப்பட்ட காவிரிப் பரப்பு, நீர்நிலைகள் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டால் 200 டிஎம்சி தண்ணீரை கர்நாடகத்தால் தேக்கி வைக்க முடியும்.

    இந்த அளவுக்கு கொள்ளளவு இருந்தால் காவிரியில் தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீரைக்கூட கர்நாடகம் தராது. மேகதாது அணை கட்டப்படுவது அனைத்து வழிகளிலும் தமிழகத்திற்கு ஆபத்தானது என்பதால் அதுகுறித்து பேச்சு நடத்துவதற்கான அழைப்பு, ஒருவேளை முழு அதிகாரம் பெற்ற காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு அதனிடமிருந்து வந்தால் தவிர, வேறு யாரிடமிருந்து வந்தாலும் அதை தமிழக அரசு ஏற்கக்கூடாது என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #MegathathuDam #Kumaraswamy #TN #Ramadoss
    கர்நாடகம் மாநிலத்தின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து குமாரசாமி விடுவிக்கப்பட்டுள்ளார். #SecularJanataDal #StatePresident #Kumaraswamy
    பெங்களூரு:

    மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவராக தேவே கவுடா செயல்பட்டு வருகிறார். கர்நாடகம் மாநில தலைவராக அவரது மகன் குமாரசாமி இருந்து வந்தார்.

    இதற்கிடையே, சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவில் குமாரசாமி முதல் மந்திரியாக பதவியேற்றார்.

    இதையடுத்து, அவரது பணிச்சுமையை குறைக்கும் வகையில் மதசார்பற்ற ஜனதா தளத்தின் மாநில தலைவர் பதவியில் இருந்து குமாரசாமியை விடுவித்து தேவே கவுடா இன்று நடவடிக்கை எடுத்துள்ளார். குமாரசாமிக்கு பதிலாக, விஷ்வநாத் என்பவரை மாநில தலைவராக நியமனம் செய்துள்ளார்.

    மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் தேவே கவுடா சார்ந்திருக்கும் ஒக்காலிகா இனத்தவருக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படுவதாக ஒரு கருத்து நிலவி வருகிறது. இந்நிலையில், தற்போது அக்கட்சியின் மாநில தலைவர் பதவி குருபா இனத்தவரை சேர்ந்த விஷ்வநாத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

    சித்தராமையாவின் நெருங்கிய நண்பரான விஷ்வநாத், கடந்த மே மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து மதசார்பற்ற ஜனதா தளத்தில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #SecularJanataDal #StatePresident #Kumaraswamy
    கர்நாடகம் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. #KarnatakaCivicPoll
    பெங்களூரு:

    கர்நாடகம் மாநிலத்தின் சட்டசபைக்கான தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக அதிக இடங்களை பெற்ற காங்கிரஸ் கட்சி, தன்னை விட குறைவான இடங்களை பெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவளித்தது. 

    இதனால் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக குமாரசாமி பதவி வகித்து வருகிறார்.

    இந்நிலையில், கர்நாடகம் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. 

    இதுதொடர்பாக கர்நாடகம் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கர்நாடகத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல் கட்டமாக ஆகஸ்ட் 29-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.  

    29 மாநகராட்சிகள், 53 நகராட்சிகள் மற்றும் 23 நகர பஞ்சாயத்துக்கள் உள்ளிட்ட 105 இடங்களுக்கு முதல் கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 36 லட்ச்ம வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

    இந்த தேர்தலில் தற்போதுள்ள ஆட்சியில் இடம் பிடித்துள்ள கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுமா என அரசியல் ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    உள்ளாட்சி தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை தெரிவிக்கும் நோடா பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.  #KarnatakaCivicPoll
    கர்நாடக மாநிலத்தில் மகளை இழந்த சோகத்திலும் ஏழை மாணவிகளின் கல்வி கட்டணத்தை கட்டி வரும் பள்ளி ஊழியருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
    பெங்களூர்:

    கர்நாடகம் மாநிலம் கல்புர்கி மாவட்டத்தை சேர்ந்தவர் பசவராஜ். மக்தம்புரா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சமீபத்தில் இறந்துவிட்டார்.

    மகள் மீதுள்ள பாசத்தால் சோகத்தில் இருந்து வந்தார். அப்பொழுது தான் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. தனது மகள் போன்ற மாணவிகளுக்கு கல்வி கட்டணம் செலுத்தலாம் என்ற முடிவுக்கு வந்தார். இதையடுத்து, இந்தாண்டு தனது பள்ளியில் படிக்கும் சில மாணவிகளுக்கான கல்வி கட்டணத்தை கட்டியுள்ளார்.

    இதுகுறித்து பசவராஜ் கூறுகையில், இந்த ஆண்டு முதல் ஏழை மாணவிகளின் கல்வி கட்டணம் கட்ட முடிவுசெய்தேன். அதன்படி சிலருக்கு பணமும் கட்டியுள்ளேன். வரும் ஆண்டுகளில் இதை தொடர்ந்து செய்யவுள்ளேன் என தெரிவித்தார்.



    இதுதொடர்பாக பள்ளி மாணவிகள் சிலர் கூறுகையில், இங்கு படிக்கும் நாங்கள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். எங்களில் சிலர் கல்வி கட்டணத்தை கட்ட முடியாத நிலையில் உள்ளோம். இந்த ஆண்டு முதல் பசவராஜ் சார் எங்களில் சிலருக்கு கல்வி கட்டணத்தை கட்டியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது இந்த செய்கை இறந்துபோன அவரின் மகளுக்கு நிச்சயம் மன அமைதியை தரும் என குறிப்பிட்டுள்ளனர்.

    மகள் இறந்த சோகத்தை மறைக்க பள்ளி மாணவிகள் பலரின் கல்வி கட்டணத்தை கட்டி வரும் பள்ளி ஊழியரான பசவராஜுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். #Tamilnews
    ×