search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எச்சரிக்கை"

    கட்சியில் என்னை சேர்க்காவிட்டால் அதற்கான பின்விளைவுகளை தி.மு.க. சந்திக்க வேண்டியது இருக்கும் என்று மு.க.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார். #DMK #MKAzhagiri #MKStalin
    மதுரை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி போர்க்கொடி உயர்த்தி வருகிறார். மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்.

    வருகிற 5-ந்தேதி தனது ஆதரவாளர்களை திரட்டி சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் நோக்கி பேரணி செல்லப்போவதாகவும் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

    அதற்கான வேலைகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார். மாநிலம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார்.

    கடந்த சில நாட்களாக மதுரையில் உள்ள தனது வீட்டில் இருந்தபடியே ஆதரவாளர்களிடம் பேரணியை வெற்றிகரமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

    நேற்று நிருபர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தல் வந்தால் வேட்பு மனுதாக்கல் செய்வோம் என்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இன்றும் மு.க.அழகிரி நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கட்சி தொண்டர்களின் விருப்பத்தின் பேரிலேயே சென்னையில் 5-ந்தேதி மெரினா நோக்கி பேரணி செல்கிறோம். கருணாநிதி இல்லை என்பதால்தான் தி.மு.க.வை காப்பாற்ற களம் இறங்கி உள்ளோம்.


    தி.மு.க.வில் என்னை சேர்க்கவில்லை என்றால் அதற்கான பின்விளைவுகளை அந்த கட்சி சந்திக்க வேண்டியது இருக்கும் என்றார்.

    அப்போது நிருபர்கள், 5-ந்தேதி பேரணியில் தி.மு.க. தலைவர்கள் யாராவது பங்கேற்க உள்ளார்களா? என கேள்வி எழுப்பினர். யூகத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை என மு.க.அழகிரி தெரிவித்தார். #DMK #MKAzhagiri #MKStalin
    கர்நாடக அணைகளில் இருந்து 1.15 லட்சம் கனஅடி உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு மத்திய அரசு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. #HeavyRain #KarnatakaFlood
    சேலம்:

    கர்நாடகா, கேரளாவில் கனமழை காரணமாக கே.ஆர்.எஸ்., கபினி அணைகள் நிரம்பி தமிழகத்திற்கு வினாடிக்கு 1.15 லட்சம் கனஅடி உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு மத்திய அரசு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

    கர்நாடகத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரளாவின் வயநாடு மாவட்டத்திலும் கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து கொட்டித்தீர்த்த கனமழையால் கர்நாடகத்தின் முக்கிய அணைகளான கபினி, கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜசாகர்) ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.



    இதன் காரணமாக கடந்த மாதம் 19-ந் தேதி இரு அணைகளும் நிரம்பின. இதனால் இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    இதன் காரணமாக தமிழகத்தின் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்ததால் கடந்த மாதம் 19-ந் தேதியில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. வினாடிக்கு ஒரு லட்சத்துக்கும் மேல் தண்ணீர் வந்ததால் ஜூலை 23-ந் தேதி மேட்டூர் அணையும் 120 அடியை எட்டி நிரம்பியது. கூடுதலாக வந்த தண்ணீர் காவிரியில் உபரியாகவும் திறக்கப்பட்டது.

    அதன்பின்னர் கர்நாடகத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை படிப்படியாக குறைந்தது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டது. கடந்த 10 நாட்களாக இரு அணைகளில் இருந்தும் குறைவான அளவு நீர் திறந்துவிடப்பட்டது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மீண்டும் கனமழை பெய்துவருகிறது. இதனால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் நேற்று மாலை இரு அணைகளும் மீண்டும் நிரம்பின. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி நீரும் திறந்துவிடப்பட்டது.

    கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் கர்நாடக பகுதியில் காவிரி, கபிலா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவைவிட நீர்வரத்து குறைவாக இருந்ததால் அணையின் நீர்மட்டம் கடந்த 2-ந் தேதி 119.98 அடியாக குறைந்தது. தொடர்ந்து நீர்மட்டம் குறைந்து நேற்று காலை 117.51 அடியானது.

    அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக நேற்று மதியம் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 30,800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதில் உபரிநீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 7,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அதேசமயம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8,751 கனஅடியாக இருந்தது.

    இந்த நிலையில் மத்திய நீர்வளத்துறை தமிழக அரசுக்கும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சை மாவட்ட கலெக்டர்களுக்கும் ஒரு உத்தரவு அனுப்பியுள்ளது.

    அதில், ‘கர்நாடகா மற்றும் கேரளாவில் பலத்த மழை பெய்வதால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் 2 நாட்களில் மேட்டூர் அணைக்கு வந்துசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளில் உரிய வெள்ள அபாய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கும்படி தெரிவிக்கப்படுகிறது’ என கூறப்பட்டுள்ளது.

    அதன்படி 6 மாவட்டங்களிலும் நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மேட்டூர் அணையின் 16 கண் பாலத்தையொட்டி அமைந்துள்ள பகுதி மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருவாய்த்துறையினர் காவிரி கரையோரங்களில் தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    ஒகேனக்கல்லுக்கு நேற்று வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டாலும், பரிசல்கள் வழக்கம்போல் இயங்கின.

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட 1.15 லட்சம் கனஅடி தண்ணீர் இன்று (வெள்ளிக்கிழமை) மாநில எல்லையான பிலிகுண்டுலுவையும், நாளை (சனிக்கிழமை) மேட்டூர் அணையையும் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்துசேர்ந்ததும் மீண்டும் அணை நிரம்பும் வாய்ப்பு உள்ளது. 120 அடியை எட்ட 3 அடி மட்டுமே தேவையாக உள்ளதால் 2 நாளில் நிரம்பிவிடும் என கூறப்படுகிறது.  #HeavyRain #KarnatakaFlood 
    அசாமில் நடந்ததுபோல் மேற்கு வங்காளத்திலும் நிகழ்ந்தால் உள்நாட்டுப் போர் வெடிக்கும் என மத்திய அரசை மம்தா பானர்ஜி இன்று எச்சரித்துள்ளார். #NRCBill #MamatameetsRajnathSingh #Mamatawarns #Mamatacivilwar
    புதுடெல்லி:

    வங்காளதேசத்தில் இருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    அதன் இறுதி வரைவு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 3,29,91,384 விண்ணப்பதாரர்களில் 2,89,83,677 பேர் குடிமக்களின் தேசிய பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    சுமார் 40 லட்சம் பேர் பதிவேட்டில்  சேர்க்கப்படவில்லை. தற்போதைய நிலையில் இவர்கள் சட்டவிரோத குடிமக்களாக கருதப்படுவார்கள். எனினும், விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    ஆனால், குடிமக்கள் பட்டியலில் 40 லட்சம் பேர் விடுபட்டது தொடர்பாக சர்ச்சை எழுந்ததால், அசாம் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. 7 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் நேற்றும் இன்றும் பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிரொலித்தது. மாநிலங்களவை துவங்கியதும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    காங்கிரஸ் எம்.பிக்களும் அவர்களுக்கு ஆதரவாக அமளியில் ஈடுபட்டனர். இதனால் நேற்று நாள் முழுவதும் மாநிலங்களவையை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். இன்றும் இதே பிரச்சனையால் மாநிலங்களவை முடங்கியது.

    இதற்கிடையில்,  அசாம் குடிமக்கள் பதிவேட்டில் சுமார் 40 லட்சம் மக்களின் பெயர் விடுபட்டுப் போனதற்கு மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்தார்.

    ஓட்டுவங்கி அரசியலுக்காக சுமார் 40 லட்சம் மக்களை அசாம் மாநிலத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்திய பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் எண்களை பெற்றுள்ள பலரும் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

    குறிப்பாக, அசாம் மாநிலத்திற்குட்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ராமகாந்த் தியோர், அனந்த்குமார் மல்லா மற்றும் முன்னாள் ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது குடும்பத்தினரின் பெயர்கள் இந்த வரைவு பட்டியலில் இடம்பெறாததற்கு மம்தா கண்டனம் தெரிவித்திருந்தார்.

    அசாம் மாநில குடிமக்கள் பதிவேட்டில் பெயர் விடுபட்டு போனவர்கள் மேற்கு வங்காளம் மாநிலத்தில் குடியேற வந்தால் அனுமதிப்பீர்களா? என்னும் கேள்விக்கு பதிலளித்த மம்தா, அவர்கள் அசாம் மாநில பூர்வவாசிகள்.

    அவர்களுக்கு சொந்தமாக வீடுகள் உள்ளன. அங்கேயே வாழும் உரிமை அவர்களுக்கு உண்டு.  மேற்கு வங்காளத்தில் குடியேற அவர்கள் கோரிக்கை வைக்கும்போது இதுதொடர்பாக  மேற்கு வங்காளம் மாநில அரசு பரிசீலனை செய்யும் எனவும் அவர் கூறினார்.

    இந்தியர்களான இவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த மம்தா பானர்ஜி, இன்று டெல்லி செல்லும்போது இவ்விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் விவாதிக்கப் போவதாகவும் கூறினார்.

    மம்தாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்த சில பா.ஜ.க. பிரமுகர்கள் மேற்கு வங்காளம் மாநிலத்திலும் இதுபோன்ற குடிமக்கள் கணக்கெடுப்பு நடத்தப்படும் என குறிப்பிட்டனர்.

    இந்நிலையில், டெல்லி சென்ற மம்தா பானர்ஜி, இன்றிரவு மத்திய உள்துறை மந்திரி சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மம்தா, ‘தேசிய குடிமக்கள் மசோதாவில் திருத்தம் செய்யப்பட வேண்டும். அல்லது, புதிய மசோதா கொண்டுவரப்பட வேண்டும் என ராஜ்நாத் சிங்கிடம் வலியுறுத்தினேன். மக்களை நாங்கள் தேவையில்லாமல் துன்புறுத்த மாட்டோம் என்று அவர் என்னிடம் உறுதியளித்துள்ளார்’ என்றுதெரிவித்தார்.

    அசாமில் நடைபெற்ற குடிமக்கள் கணக்கெடுப்புபோல் மேற்கு வங்காளத்திலும் நடைமுறைப்படுத்தப்படுவது குறித்தும் அவருடன் நான் பேசினேன். அப்படி நடந்தால் உள்நாட்டுப் போர் ஏற்படும் என நான் அவரிடம் கூறினேன் என்றும் மம்தா குறிப்பிட்டார்.

    அவரது இந்த பேட்டிக்கு சிறிது நிமிடங்களுக்கு பின்னர் இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பா.ஜ.க. எம்.பி., ராம் மாதவ், ‘இந்த பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் 2 மாதங்களுக்குள் தங்களது நாட்டுக்கு திரும்பிப் போக அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உண்மையான இந்திய குடிமக்களாக இருக்கும்பட்சத்தில் உரிய முறையில் மனு செய்து தங்களது பெயர்களை பட்டியலில் இணைக்கலாம்.

    உலகில் எந்த நாடும் தங்களது எல்லையில் ஊடுருவல்களை சகித்து கொள்வதில்லை. ஆனால், நமது நாட்டில் சில அரசியல்வாதிகள் ஊடுருவுபவர்களுக்கு ஆதரவாக இருந்துகொண்டு உள்நாட்டுப்போர் வரும் என்று மிரட்டுகின்றனர்’ என தெரிவித்துள்ளார்.  #NRCBill #MamatameetsRajnathSingh #Mamatawarns #Mamatacivilwar #tamilnews
    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சினிமா திரையரங்குகளில் குடிநீர், பாப்கார்ன் உள்ளிட்ட உணவுப்பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #Telangana #MovieTheatres
    ஐதராபாத்:

    திரையரங்குகளில் அதிக விலைக்கு பொருட்கள் விற்கப்படுவதை தடுக்க பல்வேறு விதிமுறைகளை விதித்து தெலுங்கானா மாநிலத்தின் திரையரங்க கண்காணிப்பு ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நிர்ணயிக்கப்பட்ட எம்.ஆர்.பி. விலைக்கு மேல் உணவுப்பொருட்களை விற்பது சட்டவிரோதம் என்றும், அதற்கு அபராதமும், சிறை தண்டனையும் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதன்படி, முதல்முறை குற்றம்சாட்டப்படுபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், 2-வது முறை கைதாகினால், 50 ஆயிரம் அபராதமும் தொடர்ந்து தவறு செய்யும் பட்சத்தில் அதிகபட்சமாக 1 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், அத்துடன் 6 மாதம் முதல் 1 வருடம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய நடைமுறை வருகிற 1-ம் தேதி முதல் கடைபிடிக்கப்படும் என்றும், தொடர்ந்து திரையரங்குகள் கண்காணிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சமீபத்தில் திரையரங்குகளில் உணவுப்பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #Telangana #MovieTheatres
    சாலைகளை சேதப்படுத்தும் வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    சீர்காழி:

    நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி ஒன்றியப் பகுதிகளில் ஊரக வளர்சசித்துறையின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சீர்காழி ஒன்றியம் மருவத்தூரில் ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.35.85 லட்சம் மதிப்பீட்டில் மருவத்தூர் முதல் குமாரநத்தம் வரையில் சாலை அமைக்கும் பணிகளையும், எடக்குடி வடபாதி ஊராட்சியில் ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.26.85 லட்சம் மதிப்பீட்டில் தென்பாதி மேலத்தெரு சாலை அமைக்கும் பணிகளையும், காத்திருப்பு கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.3.70 இரட்டைவாய்க்கால் தூர்வாரும் பணிகளையும், கலெக்டர் பார்வையிட்டார். மேலும் திருவெண்காடு முத்தையா நகரில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு (2017-18) நிதியின்கீழ் ரூ.10.08 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்காடி கட்டிடத்தையும், திருவாலி முதல் நெப்பத்தூர் வரை பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு (2017-18) திட்டத்தின்கீழ் ரூ.133.35 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகளையும் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு பணிகளின் தரத்தினை சோதனை செய்தார்.

    நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதிய தார்சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. வயல்களில் உழவு பணிகளுக்காக டிராக்டர்களில் இரும்பு சக்கரத்தினை பொருத்தி சாலைகளின் வழியாக வயல்களுக்கு எடுத்துச்செல்லப்படுவதால் சாலைகள் மிகுந்த சேதத்திற்கு உள்ளாகின்றன. இதனை தவிர்க்கும் வகையில் சாலைகளில் கேஜிவீலை பொருத்தி டிராக்டரை எடுத்துச் செல்வதை அனைவரும் தவிர்க்க வேண்டும். மீறி சாலைகளில் கேஜிவீலை பொருத்தி டிராக்டர்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது நாகை மாவட்ட செயற்பொறியாளர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஞானசெல்வி, ரெஜினா ராணி, பொறியாளர் முத்துகுமார், ஓவர்சியர் சந்திரசேகர், சாலை ஆய்வாளர் சங்கீதா ஆகியோர் உடன் இருந்தனர்.
    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பழனிசாமி எச்சரித்துள்ளார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ். பழனிசாமி கூறியதாவது,

    திருப்பூர் மாவட்டத்தில் நொய்யல் ஆற்றின் கரையோரங்களிலும், சங்கிலி பள்ளம் ஓடை, வீரபாண்டி ஓடை, ஜம்மனை ஓடை, சின்னக்கரை ஓடை, நல்லாறு ஓடை மற்றும் பிற நீர்நிலைகளின் கரையோரங்களிலும், சாலை ஓரங்களிலும், பொது இடங்களிலும், பாய்லர் சாம்பல், சாய கழிவுகள், பின்னலாடை நிறுவன கழிவுகள், பிரிண்டிங் கழிவுகள், பேக்கே ஜிங் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், பிற தொழிற்சாலை கழிவுகள், கட்டுமானக்கழிவுகள், வணிக வளாக கழிவுகள் ஆகியவை பகல் மற்றும் இரவு நேரங்களில் கொட்டப்படுவதாலும் நீர் நிலைகள் மாசுபடுகின்றது.

    சில நேரங்களில் இவ்வாறு கொட்டப்படுகின்ற கழிவுகள் சமூக அக்கறை இல்லாத வி‌ஷமிகளால் தீ வைக்கப்படுகின்றது. இதனால் காற்றும் மாசடைகின்றது.

    இவ்வாறு திடக்கழிவுகளை கொட்டும் தனி நபர்கள், வாகனங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், இறைச்சிக் கூடங்கள், வணிக வளாகங்கள் மற்றும் விடுதிகள் மீது நீர் மற்றும் காற்று மாசு தடுப்பு சட்டங்களின் மூலமாகவும், உள்ளாட்சி விதிகளின் மூலமாகவும் மோட்டார் வாகன சட்டத்தின் மூலமாகவும், காவல் துறையின் மூலமாகவும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதனை தொடர்ந்து, திருப்பூர் வடக்கு மாசு கட்டுபாட்டு வாரியத்தின் கண்காணிப்பின் மூலம் திருப்பூர் முதலிபாளையம் பகுதியிலுள்ள ஒரு தோட்டத்தில் சாயக் கழிவுகளை வெளியேற்றிய வாகனங்களும் மற்றும் திருப்பூர் தெற்கு மாசு கட்டுபாட்டு வாரியத்தின் கண்காணிப்பின் மூலம் காங்கயம் குட்டப்பாளையம் நொய்யல் ஆற்றின் அருகில் சாயக் கழிவுகளை வெளியேற்றிய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அவ்வாகனத்தின் அனுமதி சீட்டு ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும், சுற்றுச்சூழலை பாதிக்கின்ற வகையில் திடக்கழிவுகளை அப்புறப்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து சம்பந்தப்பட்ட அனைவரும் உருவாகின்ற அனைத்து திடக்கழிவுகளையும், செப்டிக் டேங்க் கழிவுகளையும் நகராட்சி நிர்வாகம் மூலமாகவும், மறு சுழற்சி முறையிலும் முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மேட்டூர் அணையில் இருந்து 30 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுவதால் நாகை மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடம் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் அறிவுறுத்தியுள்ளார். #FloodAlert #Nagapattinam
    நாகை:

    கர்நாடகாவில் பெய்து வரும் அதிகப்படியான கனமழை காரணமாக காவிரி ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. அணையின் பாதுகாப்பு மற்றும் விவசாயத்துக்கான நீர் திறப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இன்று இரவு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட உள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து சுமார் 30 ஆயிரம் கனஅடி நீர் இன்று இரவு 8 மணியளவில் திறக்கப்பட உள்ளது. அதேசமயம், மேட்டூர் அணையின் 16 கண் மதகு பாலத்தில் வழியாக சுமார் 8 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது.

    இதனால், நாகை மாவட்டத்தில், காவிரி, கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும் மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் அறிவுறுத்தியுள்ளார்.

    மேலும், ஆற்றில் இறங்கி யாரும் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் எனவும் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதேபோல், பவானிசாகர் அணையின் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காளிங்கராயன் கால்வாய்களில் நீர் திறக்கப்பட உள்ளதால், ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

    முன்னதாக, கரூர், திருவாரூர், தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #FloodAlert #Nagapattinam
    ஈரானுடன் போரிட அமெரிக்கா நினைத்தால் அது அனைத்து போர்களுக்கும் தாய்ப்போராக இருக்கும் என ஈரான் அதிபர் ஹஸன் ரவுகானி எச்சரித்துள்ளார். #RouhaniwarnsTrump #dontplaywiththelionstail
    டெஹ்ரான்:

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

    ஈரானிடம் இருந்து எந்த நாடும் கச்சா எண்ணை கொள்முதல் செய்ய கூடாது என அமெரிக்கா நேரடி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

    இதற்கு பதிலடி தரும் வகையில் சமீபத்தில் கருத்து தெரிவித்த ஈரான் அதிபர் ஹஸன் ரவுகானி, ‘ஈரானிடம் இருந்து கச்சா எண்ணை கொள்முதல் செய்யாவிட்டால் மேற்கத்திய நாடுகளுக்கு மத்திய கிழக்காசிய துணைகண்டத்தில் உள்ள இதர 15 நாடுகள் பெட்ரோல் ஏற்றுமதி செய்வதை ஈரான் தடுத்து நிறுத்தும் என்று குறிப்பிட்டிருந்தார்.


    இந்நிலையில், உலக நாடுகளில் உள்ள ஈரான் நாட்டு தூதர்கள் மத்தியில் இன்று உரையாற்றிய அதிபர் ஹஸன் ரவுகானி, ஈரானுடன் போரிட அமெரிக்கா நினைத்தால் அது அனைத்து போர்களுக்கும் தாய்ப்போராக (மிக பிரமாண்டமானதாக) இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.

    சிங்கத்தின் வாலை பிடித்து விளையாடாதீர்கள், மிஸ்டர் டிரம்ப். இதன் விளைவு வருத்தத்தில்தான் போய் முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். #RouhaniwarnsTrump #dontplaywiththelionstail 
    சாலையோரமாக நின்று பாலியல் தொழிலுக்கு அழைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநங்கைகளுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
    சென்னை:

    நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் ரோடு மற்றும் வள்ளுவர் கோட்டம் பகுதியில் இரவு நேரங்களில் திருநங்கைகள் சாலையோரமாக அணி வகுத்து நிற்பார்கள்.

    அப்போது அந்த வழியாக கார், மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களை அவர்கள் பாலியல் தொழிலுக்கு அழைப்பதாக நீண்ட நாட்களாகவே குற்றச்சாட்டு இருந்து வந்தது.

    இதனை கட்டுப்படுத்த போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் கமி‌ஷனர் சாரங்கன் ஆகியோர் உத்தரவிட்டனர்.

    இதனை தொடர்ந்து இணை ஆணையர் அன்பு மேற்பார்வையில் திருநங்கைகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    சூளைமேடு பஜனை கோவில் தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் இது தொடர்பான கூட்டம் நடைபெற்றது. திருவல்லிக்கேணி துணை கமி‌ஷனர் செல்வநாகரத்தினம், நுங்கம்பாக்கம் உதவி கமி‌ஷனர் முத்துவேல் பாண்டி ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் சுமார் 100 திருநங்கைகள் கலந்து கொண்டனர். அப்போது சாலையோரமாக நின்று பாலியல் தொழிலுக்கு அழைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். இதற்கு மாற்றாக உங்களுக்கு வேறு வேலை வாங்கி தருகிறோம் என்று திருநங்கைகளிடம் எடுத்துக் கூறப்பட்டது.

    அழகு கலை நிபுணராக, ஓட்டல் வரவேற்பாளராக வேலை வாங்கி தருவதற்கு தயாராக இருப்பதாக துணை கமி‌ஷனர் செல்வ நாகரத்தினம் கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட திருநங்கைகள் ஒன்று கூடி பேசி முடிவெடுப்பதாக கூறினர்.

    இந்த கூட்டத்தில் பங்கேற்ற திருநங்கைகளில் பலர் என்ஜினீயரிங் முடித்திருந்தனர். எம்.பி.ஏ., எம்.ஏ., எம்.எஸ்சி., பி.எஸ்.சி., டிப்ளமோ படிப்புகளை முடித்துள்ளனர். இவர்களில் பலர் நிறுவனங்களில் வேலையும் செய்து வருகின்றனர்.

    இது தொடர்பாக 15 நாள் கழித்து மீண்டும் ஒரு கூட்டம் நடத்துவதற்கும் போலீசார் முடிவு செய்துள்ளனர். #Tamilnews
    படுகொலைகளுக்கு காரணமாகும் வதந்தி சார்ந்த வன்முறைகள் பரவுவதை தடுக்க வேண்டும் என வாட்ஸ் அப் நிறுவனத்தை மத்திய அரசு இன்று எச்சரித்துள்ளது. #GovtwarnsWhatsApp
    புதுடெல்லி:

    சமூக வலைத்தளங்களில் முதன்மை இடத்தை வகிக்கும் பேஸ் புக், வாட்ஸ் அப் போன்ற செயலிகள் மூலம் சமீபகாலமாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.

    குறிப்பாக, கீழ்சாதி பெண்கள் கற்பழிப்பு, இறைச்சிக்காக பசு மாடுகள் கடத்தல், பிள்ளைகளை கடத்தும் கும்பல் போன்ற விவகாரங்கள் தொடர்பாக  பரிமாறப்படும் தவறான தகவல்களும் வதந்திகளும் நாட்டின் பல பகுதிகளில் வன்முறை சம்பவங்களுக்கும் உயிரிழப்புகளுக்கும் காரணமாகி விடுகின்றன.

    இந்நிலையில், வதந்தி சார்ந்த வன்முறைகள் பரவுவதை தடுக்க வேண்டும் என வாட்ஸ் அப் நிறுவனத்தை மத்திய அரசு இன்று எச்சரித்துள்ளது.

    இதுதொடர்பாக மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ’வாட்ஸ் அப் செயலியில் பரப்பப்படும் பொறுப்பற்ற, உணர்வுகளை தூண்டிவிடக் கூடிய, ஆத்திரமூட்டும், வதந்தியான தகவல்களால் சமீபகாலமாக அசாம், மகாராஷ்டிரா, கர்நாடகா, திரிபுரா மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற படுகொலை சம்பவங்கள் வேதனைக்கும் வருத்தத்துக்கும் உரியதாக உள்ளது.

    நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட செயலிகளை சில சமூக விரோதிகள் தவறாக பயன்படுத்தி வன்முறைக்கு வித்திட்டு வருகின்றனர். இதில் தங்களுக்கான பொறுப்பை இந்த செயலி நிறுவனம் தட்டிக் கழித்துவிட முடியாது. இதைப்போன்ற தகவல்கள் பரவுவதை உரிய சாதனங்களின் மூலம் உடனடியாக தடுத்தாக வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. #GovtwarnsWhatsApp
    பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்தார். #EdappadiPalaniswamy
    சென்னை:

    பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்தார்.

    தமிழக சட்டசபையில் காவல்துறை, தீயணைப்புத் துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

    தமிழகம் தற்போது கொதிநிலையில் உள்ளது. அதை இரண்டு தரப்பினருமே ஏற்றுக்கொள்ள வேண்டும். கதிராமங்கலம், நெடுவாசல், தூத்துக்குடி போராட்டம் நடந்தது. தற்போது சேலம் முதல் சென்னை வரை பல கிராமங்களில் போராட்டம் நடக்கிறது. அறவழிப் போராட்டங்களை ஏற்க இந்த அரசு தயாராக இல்லையா? திறமையின் அடிப்படையில் தமிழக போலீசாரை ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு இணையாக பேசிய காலமுண்டு. தற்போது தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம், சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்த உகந்தது என்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கூறியுள்ளார். மாநில உளவுத்துறைக்கு ஐ.ஜி. அந்தஸ்தில் ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எப்படி டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள தன் மேல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்க முடியும்? வரலாற்றில் இல்லாத அளவுக்கு மாநில உளவுத்துறை நம்பிக்கை இழந்துள்ளது.



    இந்த ஆட்சியில் குற்றங்கள் அதிகரிக்கின்றன. தொடர் கொலைகள், கடத்தல், முகமூடி கொள்ளை, மணல் கொள்ளை, பெண்கள் வன்கொடுமை, சிலை திருட்டு, குட்கா விற்பனை, மனித உரிமை மீறல்கள், காவலர் தற்கொலை என பலவற்றை சொல்லலாம்.

    தமிழகம் அமைதிப் பூங்காவாக இல்லை. தமிழகத்தில் பயங்கரவாதிகள் உள்ளனர் என்று மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். பயங்கரவாதிகளின் பயிற்சிக் களமாக தமிழகம் மாறியிருப்பதாகச் சொல்கிறார்.

    இதை அரசு கண்டித்திருக்க வேண்டும். அவர் சொல்வதில் உண்மை இருந்தால் அதை ஏற்று நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசும்போது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறுக்கிட்டுப் பேசியதாவது:-

    கொலை, கொள்ளை, திருட்டு எல்லா ஆட்சியிலும் நடைபெற்று கொண்டிருக்கிறது. எங்கள் ஆட்சியில் நடைபெறவில்லை என்று சொல்லவில்லை. உங்களுடைய (தி.மு.க.) ஆட்சியிலே நடைபெற்றதைவிட அ.தி.மு.க. ஆட்சியில் குற்றங்கள் குறைந்துள்ளன.

    எனவே, கொலை, கொள்ளை, திருட்டை பொறுத்தவரைக்கும் ஏற்கனவே எம்.ஜி.ஆர். சொன்னதைப்போல, திருடனாக பார்த்து திருந்தாவிட்டால், ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான். எந்த ஆட்சி வந்தாலும் சரி, உங்களுடைய ஆட்சியிலும் அப்படித்தான் இருக்கிறது.எனவே அ.தி.மு.க. அரசை பொறுத்தவரைக்கும், மிக வேகமாக, விரைவாக, குற்றம் செய்தவர்களை கண்டுபிடித்து கொண்டிருக்கிறது.

    தி.மு.க. ஆட்சியிலே 2006-ம் ஆண்டு 17 துப்பாக்கி பிரயோக சம்பவங்களும், 2007-ம் ஆண்டு 13 சம்பவங்களும், 2008-ம் ஆண்டு 17 சம்பவங்களும், 2009-ம் ஆண்டு 8 சம்பவங்களும், 2010-ம் ஆண்டு 12 சம்பவங்களும் என மொத்தம் 67 சம்பவங்கள் நடந்துள்ளன.

    இவற்றில் மொத்தம் 33 பேர் உயிரிழந்துவிட்டனர். எனவே உங்களுடைய ஆட்சிக் காலத்திலும், உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கின்றது. அவ்வப்போது ஏற்படுகின்ற சட்டப்பிரச்சினைகளையொட்டித்தான் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கிறார்கள்.மத்திய இணை மந்திரியைப் பற்றி மு.க.ஸ்டாலின் பேசினார்.

    தமிழகத்தை பொறுத்தவரைக்கும், மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கின்றபோது, குற்றங்களும் குறைவாக இருக்கின்றன. சட்டம்-ஒழுங்கும் பேணிக் காக்கப்படுகிறது.சில அமைப்புகள் வேண்டுமென்றே, தூண்டிவிட்டு அந்த போராட்டத்தின் வாயிலாக தங்களுக்கு ஏதாவது பெயர் கிடைக்க வேண்டும் என்ற ஒரு நோக்கத்தோடு செயல்படுகின்ற காரணத்தினால் சில பிரச்சினைகள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது.

    பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக போராட்டங்களோ, சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கின்ற வகையில் யாராவது நடக்க முற்பட்டால், கடுமையான முறையிலே அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதையும் அதற்கு அரசு தயங்காது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். அதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    தமிழகத்தில் ஒரே நாளில் 17 இடங்களில் செயின் பறிப்பு, 12 இடங்களில் செல்போன் பறிப்பு நடந்துள்ளது. டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னைக்கு வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டுவிட்டு சென்றுள்ளனர்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி (குறுக்கிட்டு):-

    டெல்லியில் இருந்து வந்து சங்கிலி பறித்தவர்களை உடனே போலீசார் கண்டுபிடித்துவிட்டனர். வெளிமாநிலத்தில் இருந்து வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை தமிழக போலீசார் திறமையாக செயல்பட்டு கண்டுபிடித்துள்ளனர்.எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் திருட்டைத் தடுக்க போலீசார் தயாராக உள்ளனர்.

    எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன்:- காட்பாடியில் எம்.எல்.ஏ. நந்தகுமாரின் உதவியாளர் ஒருவரின் செல்போனை பறித்துச் சென்றுவிட்டனர். இதுபற்றி விருகம்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அங்கிருந்த போலீசார், செல்போன் பறித்தவர்கள் ஒரு பைக்கில் 2 பேராக வந்தார்களா? ஒல்லியாக கருப்பாக உயரமாக இருந்தார்களா? என்று கேட்டார். ஆமாம் என்று சொன்னதற்கு, அப்படியானால் செல்போனை மறந்துவிடுங்கள் என்று கூறினர். இப்படிப்பட்ட போலீசாரும் உள்ளனர்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- இதுபோன்ற சம்பவங்களை உடனே அரசின் கவனத்துக்குக் கொண்டுவந்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.

    துரைமுருகன்:- இதற்காக டீம் போட்டு விசாரிப்பதாக போலீசார் கூறுகின்றனர். பல நாட்கள் ஆகிவிட்டது. டீ தான் போடுகிறார்கள்.

    மு.க.ஸ்டாலின்:- சேலம் சென்னை 8 வழி பசுமை சாலையை ஆதரிக்கின்றனர் என்பதை ஏற்றாலும், பலர் அதை எதிர்க்கவும் செய்கின்றனர். போராட்டத்தை சிலர் தூண்டுவதாக முதல்-அமைச்சர் கூறுகிறார். ஆனால் வளர்மதி, நந்தினி, மன்சூர் அலிகான், பியூஸ் மனுஷ் போன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல்-அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் வயதான பெண்கள் தரதரவென்று இழுத்துச் செல்லப்பட்டனர்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- 8 வழிச்சாலை அமைத்தால் 8 பேரை வெட்டுவேன் என்று மன்சூர் அலிகான் பேசியது, வன்முறையைத் தூண்டாதா? சில அமைப்புகள் பொய்பிரசாரம் செய்து மக்களைத் தூண்டிவிடுகின்றனர். எனவே சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதுள்ளது.

    காவல் துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகளும், காவலர்களும் இரவு, பகல் பாராமல் ஓய்வின்றி காவல் பணிகளில் ஈடுபட்டு வருவதாலும், பொதுமக்களின் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போதும், போராட்டங்களை கையாளும் போதும், அவர்களுக்கு அதிக அளவில் மன அழுத்தம் ஏற்படுகிறது.

    மேலும், இவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிட்டு, இல்ல பணிகளை கவனிக்க இயலாமல் இருந்து வருவதால், அவர்களின் குடும்பத்தினருக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் அவர்களது உடல் மற்றும் மனநலம் பாதிக்கப்படுகிறது.

    குடும்ப சூழ்நிலை காரணமாகவும், உடல்நிலை காரணமாகவும் மற்றும் பணி நிமித்தம் காரணமாகவும் ஏற்படும் மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் வகையில் மன அழுத்த மேலாண்மை பயிற்சிகள் முறையாக நடத்தப்பட்டு வருகின்றன.

    காவல் துறையினரின் மன அழுத்தத்தை போக்கவும், அவர்களது உடல் நலத்தை பேணி காக்கவும் ஏதுவாக, பெங்களூரூவில் உள்ள மனநல நிறுவனத்தினருடன் இணைந்து உளவியல் ரீதியான பயிற்சியை அளிக்க முடிவு செய்தது.

    இப்பயிற்சிக்காக 10 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி, 22.6.2018 அன்று, அரசாணை வெளியிட்டுள்ளது. இப்பயிற்சியை உடனடியாக தொடங்க, முதற்கட்ட செலவினங்களுக்காக 60 லட்சத்து 47 ஆயிரத்து 600 ரூபாய்க்கு ஒப்புதல் அளித்து மேலும் ஒரு அரசாணை அன்றே வெளியிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி திட்டம் விரைவில் தொடங்க உள்ளது. இதனால் தமிழ்நாடு காவல் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மிகவும் பயனடைவர்.

    இவ்வாறு விவாதம் நடந்தது. 
    பேய் விரட்டும் சடங்கு என்ற பெயரில் யாரையாவது துன்புறுத்தினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை செய்து தீர்ப்பு அளித்துள்ளது.
    சென்னை:

    தர்மபுரியை சேர்ந்தவர்கள் சின்னபொண்ணு, சுசீலா, முத்தாயி, விஜயா. இவர்கள், தங்களுக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய சிறை தண்டனை மற்றும் அபராதத்தை ரத்து செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு வழக்கை தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கை நீதிபதி என்.ஆனந்த் வெங்டேஷ் விசாரித்தார். பின்னர், அவர் பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

    சின்னபொண்ணு தன் மகனின் மனைவிக்கு (மருமகளுக்கு) பேய் பிடித்துள்ளது என்று கூறி கடந்த 2001-ம் ஆண்டு பிப்ரவரி 12-ந்தேதி தங்கள் ஊருக்கு அருகே உள்ள மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார். அவருடன், அவரது மகள்கள் சுசீலா, முத்தாயி, விஜயா உள்பட 15 பேர் சென்றுள்ளனர்.

    கோவிலில் வைத்து, அந்த பெண்ணின் ஆடைகளை களைந்துள்ளனர். தலைமுடியை வழித்து மொட்டை போட்டுள்ளனர். பின்னர், தீயில் பழுக்க காய்ந்த ஊசியை, அந்த பெண்ணின் நாக்கில் வைத்து சுட்டுள்ளனர்.

    பேய் விரட்டுகிறோம் என்ற பெயரில் இதுபோன்ற சடங்குகளை நடத்தி, ஒருவரை துன்புறுத்த யாருக்கும் உரிமை கிடையாது. ஆண்டாண்டு காலமாக இதுபோன்ற சடங்குகளை நடத்துகிறோம் என்று கூறி, இதுபோன்று கொடூரமாக துன்புறுத்துவதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது.

    சடங்கு என்ற பெயரில் ஒருவரது கண்ணியத்தை சிதைப்பது, அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மனிதாபிமானமற்ற செயல்களை ஜீரணிக்க முடியாது.

    இந்த வழக்கில் மனுதாரர்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.500 அபராதமும் விதித்து தர்மபுரி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தண்டனையை மாவட்ட செசன்சு கோர்ட்டும் உறுதி செய்துள்ளது.

    அதேநேரம், இந்த சம்பவம் 17 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. தண்டனை பெற்றவர்களுக்கு வயதாகிவிட்டது. எனவே, இவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை மாற்றி அமைக்கிறேன்.

    ஒரு ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்கிறேன். அதற்கு பதில், இந்த வழக்கில் அவர்கள் ஏற்கனவே சிறையில் இருந்த காலத்தையே தண்டனை காலமாக மாற்றுகிறேன். இதை தவிர, மனுதாரர்கள் 4 பேரும் தலா ரூ.15 ஆயிரத்தை தர்மபுரி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் செலுத்த வேண்டும். இந்த தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 
    ×