search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 103912"

    நாமக்கல் அருகே மீன் வாங்க வந்த வாலிபரிடம் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அவரது கழுத்தை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பரமத்திவேலூர்:

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள திருகாட்டு துறை பகுதியை சேர்ந்தவர் மணிவாசகம் (வயது 40).

    இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் 4 ரோடு பகுதியில் உள்ள ஒரு மீன் விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் பரமத்தி வேலூர் தெற்கு தெருவை சேர்ந்த பாரி (35) என்பவர் நேற்று மீன் வாங்க வந்தார். அப்போது பெரிய இலையில் மீனை கட்டி தரும்படி பாரி கூறினார்.

    இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த மணிவாசகம் தன் கையில் வைத்திருந்த மீன் வெட்டும் கத்தியால் பாரியின் கழுத்தை தர தர வென அறுத்தார்.

    இதனால் வலியால் அலறி துடித்த அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து பரமத்திவேலூர் போலீசில் பாரி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மணிவாசகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    கேரளாவில் சைக்கிளில் வேகமாக சென்றதாகவும், ஹெல்மெட் அணியாததாலும் இளைஞர் ஒருவரிடம் போலீசார் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #KeralaPolice #CycleOverspeedFine
    திருவனந்தபுரம்:

    உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த காசிம் என்ற இறைஞர் கேரளாவின் கும்பாலாவில் தங்கி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த வாரம் நெடுஞ்சாலையில் சைக்கிள் ஓட்டி சென்றுள்ளார். அப்போது அவரை மறித்த நெடுஞ்சாலை காவல்துறையினர், வேகமாக சைக்கிள் ஓட்டியதாகவும், ஹெல்மெட் போடவில்லை என்றும் கூறி 2000 ரூபாய் அபராதம் வசூலித்துள்ளனர்.



    2000 ரூபாய் அபராதம் வாங்கிவிட்டு 500 ரூபாய்க்கு மட்டும் ரசீது கொடுத்து அந்த இளைஞரை அனுப்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் தனக்கு நேர்ந்த அவலம் குறித்து சமூக வலைத்தளத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

    இந்த வீடியோ வைரலாகப் பரவிய நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #KeralaPolice #CycleOverspeedFine


    பொள்ளாச்சி அருகே திருவிழாவின் போது தகராறில் ஈடுபட்ட 2 வாலிபர்களுக்கு மொட்டை அடித்த இன்ஸ்பெக்டர் போலீஸ் பயிற்சி கேம்ப்க்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
    கொழிஞ்சாம்பாறை:

    கோவை பொள்ளாள்சி அருகே உள்ளது மீனாட்சிபுரம். இங்குள்ள கேரள மாநிலம் நெடும்பாறையை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 18), நிதிஷ் (20). இவர்கள் இருவரும் நேற்று அதிகாலை அருகில் நடந்த கோவில் விழாவுக்கு சென்றனர்.

    அப்போது இருவருக்கும் இடையே கைகலப்பானது. இதை கவனித்த மீனாட்சிபுரம் இன்ஸ்பெக்டர் வினோத் வாலிபர்களை பிடித்து கண்டித்தார். இது தவிர அவர்களை ஜீப்பில் ஏற்றி அருகில் உள்ள ஒரு சலூன் கடைக்கு அழைத்துக்சென்று மொட்டை அடிக்கும்படி கடைக்காரருக்கு உத்தரவிட்டார்.

    இதனையடுத்து அவர்களுக்கு மொட்டை அடிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டரின் மிரட்டலுக்கு பயந்த வாலிபர்கள் எதுவும் பேசாமல் இருந்தனர்.

    இன்ஸ்பெக்டர் வினோத் சென்றதும் வாலிபர்கள் பாலக்காடு போலீஸ் சூப்பிரண்டு தேபெஸ்குமார் பெகராவிடம் புகார் அளித்தனர். இது குறித்து உடனே விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று டி.எஸ்.பி. விஜயகுமாருக்கு உத்தரவிட்டார்.

    உடனடியாக வாலிபர்களை வலுக்கட்டாயமாக மொட்டை அடித்த இன்ஸ்பெக்டர் வினோத் போலீஸ் பயிற்சி கேம்ப்க்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

    இது குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் கூறும்போது, இன்ஸ்பெக்டர் அத்துமீறி நடந்தது சட்டவிரோதம் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது என்று கூறினர். #tamilnews
    முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்ததாக வாலிபர் மீது புகார் செய்யப்பட்டுள்ளதை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டை கிழக்குத்தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 28). கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர். இவரது மனைவி அமரஜோதி (26).

    விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த இவர், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனது கணவர் முருகனுக்கு இந்துமதி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். அதனை மறைத்து என்னை 2-வது திருமணம் செய்துள்ளார். எனது நகைகளை பறித்து விற்பனை செய்து விட்டதோடு அதனை கேட்டால் அடித்துக்கொடு மைப்படுத்துகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதற்கிடையில் சப்-இன்ஸ்பெக்டர் தன்னை தாக்கியதாக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் முருகன் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் சுமதி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    ஓமலூர் அருகே ரெயில்வே கேட்டை திறக்காததால் கேட் கீப்பரை தாக்கி முதுகில் கடித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஓமலூர்:

    சேலத்தில் இருந்து ஓமலூர் வழியாக மேட்டூருக்கு செல்ல ரெயில் பாதை உள்ளது.

    இந்த ரெயில் பாதையில் பயணிகள் ரெயில், அனல் மின் நிலையம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி ஏற்றி செல்லும் ரெயில்கள் என ஒரு நாளைக்கு 30-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கிறது.

    இந்த வழித்தடத்தில் பத்துக்கும் மேற்பட்ட ரெயில்வே கிராசிங் உள்ளது. இதில் ஓமலூர் அருகே உள்ள மாணத்தால் என்ற இடத்தில் உள்ள ரெயில்வே கிராசிங்கில் சந்திரசேகரன் என்பவர் ரெயில்வே கேட் கீப்பராக நேற்று பணியில் இருந்தார்.

    இந்த நிலையில் சேலத்தில் இருந்து மேட்டூர் நோக்கி சரக்கு ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதற்காக மாணத்தால் ரெயில்வே கேட் நேற்று மூடப்பட்டது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த குடிபோதையில் இருந்த 3 பேர் கும்பல் கேட்டை திறக்குமாறு கேட் கீப்பரிடம் வற்புறுத்தினர்.

    அப்போது ரெயில் மிக அருகில் வந்து விட்டதால் ரயில்வே கேட்டை திறக்க முடியாது என கேட் கீப்பர் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் கேட் கீப்பரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.



    மேலும் அந்த கும்பலை சேர்ந்த ஒரு வாலிபர் திடீரென கேட் கீப்பரின் முதுகில் கடித்தார். பின்னர் சிக்னல்களுக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த பேனல் போர்டையும் அந்த கும்பல் உடைத்ததால் ரெயில்வே சிக்னல்கள் செயல் இழந்தன.

    இதனால் சேலத்தில் இருந்து மேட்டூர் நோக்கி சென்ற சரக்கு ரெயில் நடு வழியில் நிறுத்தப்பட்டது. மேலும் தாக்குதல் நடத்திய இளைஞர்கள் கேட் கீப்பரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் ரெயில்வே போலீசார் மற்றும் தொளசம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த கேட் கீப்பரை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து 3 வாலிபர்களையும் தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே சேலத்தில் இருந்து சென்ற ரெயில்வே பொறியாளர்கள் சிக்னல்களை சரி செய்தனர். தொடர்ந்து ரெயில்கள் அந்த பாதையில் இயக்கப்பட்டது. இதனால் அந்த ரெயில் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. #tamilnews
    அண்ணனை அடித்து கொன்ற வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    தாமரைக்குளம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தேவனூர் காலனி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன்கள் முருகன்(வயது 38), சங்கர் (32). இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. இந்நிலையில் முருகன் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால், சங்கர் மனைவியின் தம்பி சுரேசின் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் பழுது ஏற்பட்டது. இதனை சரி செய்து தருவதாக சுரேஷிடம், முருகன் கூறியுள்ளார். இதில் முருகன், சங்கருக்கு இடையே கடந்த ஆண்டு வாய்த்தகராறு ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.

    இதில் ஆத்திரமடைந்த சங்கர், முருகனின் நெற்றி பொட்டில் கையால் அடித்துள்ளார். இதையடுத்து முருகன் ஜெயங்கொண்டம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது ரோட்டில் மயங்கி விழுந்து முருகன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து முருகன் மனைவி பொன்னரசி அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிந்து சங்கரை கைது செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு அரியலூர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி ஜெயக்குமார் சங்கருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். இதையடுத்து சங்கர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
    ராயப்பேட்டையில் மது போதையில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
    சென்னை:

    ராயப்பேட்டை சைவ முத்தையா 4-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய நண்பர் தினேஷ். பெயிண்டர். நேற்று இரவு நண்பர்கள் இருவரும் வீட்டின் 2-வது மாடியில் இருந்து மது அருந்தினார்கள் 11.30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டார்கள்.

    அப்போது மது போதையில் தள்ளாடிய தினேஷ் அங்கிருந்து தவறி விழுந்தார். இதில் அருகில் உள்ள வீட்டின் ஓட்டு கூரை உடைந்து வீட்டுக்குள் விழுந்துவிட்டார்.

    அந்த வீட்டுக்குள் நடேஷ் பாபு என்பவரின் மனைவி ஜெயந்தி (25), அவருடைய மகன் சாரதி (1) ஆகியோர் தூங்கிக்கொண்டு இருந்தனர். அவர்கள் மீது தினேஷ் விழுந்தார். இதில் தாய், மகன் இருவரும் காயம் அடைந்தனர்.

    சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த தினேஷ், காயம் அடைந்த ஜெயந்தி, சிறுவன் சாரதி ஆகியோர் ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இதில், 2-வது மாடியில் இருந்து விழுந்த பெயிண்டர் தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இவர் விழுந்ததால் காயம் அடைந்த தாய், மகன் இருவரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஐதராபாத் நகரில் உள்ள அட்டபூர் பகுதியில் வாலிபர் ஒருவரை, 2 பேர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Hyderabad #MurderAccused #Murder
    ஐதராபாத்:

    ஐதராபாத் நகரில் உள்ள அட்டபூர் பகுதியில் நேற்று பகல் 11.30 மணி அளவில் வாலிபர் ஒருவரை, 2 பேர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தனர். அப்போது அந்த இடத்தில் பணியில் ஈடுபட்டு இருந்த போக்குவரத்து போலீஸ்காரரும் மற்றும் பொதுமக்களும் அந்த நபரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் பலன் இல்லாமல் போய் விட்டது. கொலை செய்து விட்டு தப்பி ஓட முயன்ற இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    விசாரணையில் கொல்லப்பட்ட வாலிபரின் பெயர் ரமேஷ் (வயது 28) என்றும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மகேஷ் என்பவர் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழியாக இந்த படுகொலை சம்பவம் நடந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது. மகேஷ் கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்காக ரமேஷ் கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த போதுதான் இந்த கொடூர சம்பவம் நடந்தது.

    கொலை நடந்த போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த சிலர் இந்த காட்சியை தங்கள் செல்போனில் வீடியோ படம் எடுத்தனர். அந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.   #Hyderabad #MurderAccused #Murder
    திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கழுத்தில் மாலையுடன் நூத முறையில் மனு அளிக்க வந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தாண்டிக்குடியைச் சேர்ந்த கணேஷ்பாபு (வயது 37) என்பவர் மனு அளிக்க வந்தார்.

    அவர் தனது கழுத்தில் மாலை அணிந்து தரையில் பிணம் போல் படுத்து கிடந்தார். இதைப்பார்த்ததும் அங்கிருந்த போலீசார் அவரை அப்புறப்படுத்த முயன்றனர். இது குறித்து அவர் கூறுகையில், தாண்டிக்குடி பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும். மற்றும் ஊழல் முறைகேட்டை தடுக்க வேண்டும் உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பல மனுக்கள் அளித்துள்ளேன். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வருவதே எனக்கு கவலையாக உள்ளது. இதனால் இறந்து விடுவதே மேல் என்பதை உணர்த்தும் வகையில் பிணம் போல் படுத்து மனு அளிக்க வந்துள்ளேன் என்றார்.

    இதனையடுத்து தனது கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்துச் சென்றார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதே போல் முன்னாள் ராணுவத்தினர் குறைதீர்ப்பு முகாம் முறையாக நடத்தப்படுவதில்லை என்றும் பெயரளவுக்கு மனுக்கள் மட்டும் வாங்கி வைத்துக் கொள்வதாக கூறி ஏராளமான முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவரது குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். #tamilnews
    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையில் விரைவில் துப்பாக்கி குண்டு பாயும் என்று பேஸ்புக் வலைதளத்தில் மிரட்டல் விடுத்த வாலிபர் 3 மாதத்துக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். #DonaldTrump
    பென்சில்வேனியா:

    அமெரிக்காவில் பென்சில்வேனியாவை சேர்ந்தவர் ‌ஷர்வன் ரிச்சர்ட் கிறிஸ்டி (27). கடந்த ஜூன் மாதம் ‘பேஸ்புக்‘ சமூக வலைதளத்தில் அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிராக கருத்துகள் வெளியிட்டு இருந்தார்.

    அதில், “உங்கள் (டிரம்ப்) தலையில் துப்பாக்கி குண்டு பாயும், அது விரைவில் நடக்கும் என்பதை உறுதியளிக்கிறேன் என கொலை மிரட்டல் விடுத்து இருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.


    அதை தொடர்ந்து பென் சில்வேனியா போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். ஆனால் போலீசாரிடம் சிக்காமல் அவர் தலைமறைவாக இருந்தார்.

    இந்த நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு ஒகியோவில் வைத்து இவரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்து ‘380 காலிபர்’ ரக கைத்துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    விசாரணையில் அவர் கார்கள் மற்றும் துப்பாக்கிகளை திருடி அமெரிக்க மற்றும் கனடாவில் விற்று வந்தது தெரியவந்தது. போலீசார் தேடுவதை அறிந்ததும் பென்சில்வேனியாவில் இருந்து நியூயார்க் மற்றும் கனடா தப்பி சென்றார். அங்கிருந்து அமெரிக்கா திரும்பிய அவர் மேற்கு விர்ஜீனியா, கொனட்க்கு, மேரிலேண்ட் சென்று பின்னர் ஒபியோ வந்து சிக்கி கொண்டார். #USPresident #DonaldTrump
    18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்க கோரி தினகரன் கட்சி பிரமுகர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    சென்னை:

    ராஜா அண்ணாமலைபுரம் ஆர்.கே.மடம் சாலையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ளது.

    இன்று காலை இந்த செல்போன் கோபுரத்தில் வாலிபர் ஒருவர் ஏறினார். அவருடைய கையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொடி இருந்தது.

    இதை பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்து கூடி விட்டனர். கீழே இறங்கும்படி அவர்கள் குரல் கொடுத்தனர். ஆனால் அதை கண்டு கொள்ளாத அவர் செல்போன் கோபுரத்தின் உச்சிக்கு சென்றார். கொடியை அசைத்து கோ‌ஷமிட்டார்.

    தகவல் அறிந்ததும் அபிராமபுரம் போலீசார் அங்கு வந்தனர். கீழே இறங்கும்படி வாலிபருக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர், “எனது கோரிக்கை நிறைவேற்றினால்தான் கீழே இறங்குவேன்” என்றார்.

    கோரிக்கை என்ன என்று கேட்டபோது “18 எம்.எல். எ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பை விரைவில் வெளியிட வேண்டும். அதுபற்றி உறுதி அளித்தால்தான் கீழே இறங்குவேன். இல்லை என்றால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன்” என்றார்.

    போலீசாரும், அங்கு கூடியிருந்தவர்களும் கோபுரம் உச்சியில் இருந்த வாலிபரை சமாதானப்படுத்தினார்கள். என்றாலும் கீழே இறங்க மறுத்துவிட்டார். 45 நிமிட போராட்டத்துக்கு பிறகு ஓரளவு சமாதானம் அடைந்த அவர் செலபோன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கினார்.

    போலீசார் நடத்திய விசாரணையில், கோபுரத்தில் ஏறிய வாலிபர் பெயர் ராஜேஷ். ராயபுரத்தை சேர்ந்தவர். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகரான இவர், டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளர் என்பது தெரியவந்தது.

    இதுபற்றி கூறிய அவர், “18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு தாமதமாகிக் கொண்டே போகிறது. அதனால்தான் அ.தி.மு.க. அரசு நீடிக்கிறது. தீர்ப்பு வந்து விட்டால் தமிழக அரசியலில் திருப்பம் வரும். எனவேதான் இந்த கோரிக்கையை வற்புறுத்தும் வகையில் கோபுரத்தில் ஏறினேன்” என்றார்.

    இதற்கு யாராவது தூண்டுதலாக இருந்தார்களா? என்பது குறித்து வாலிபர் ராஜேசிடம் விசாரணை நடந்து வருகிறது.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகர் செல்போன் கோபுரத்தில் ஏறி போராடிய சம்பவம் ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #
    விநாயகர் நகர் பகுதியில் அடையாறு ஆற்றையொட்டி ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வாலிபர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தாம்பரம்:

    பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் விநாயகர் நகர் பகுதியில் அடையாறு ஆற்றங்கரையில் ஏராளமான வீடுகள் உள்ளன.

    தற்போது மழை காலம் நெருங்குவதையடுத்து அடையாறு ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் விநாயகர் நகர் பகுதியில் அடையாறு ஆற்றையொட்டி ஆக்கிரமித்து கட்டியிருந்த 47 வீடுகளை அகற்ற கடந்த மாதம் பொதுப்பணித்துறையினர் நோட்டீஸ் வழங்கினர். அவர்களுக்கு பெரும்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கப்பட்டது.

    ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் தங்களது வீட்டை காலி செய்யாமல் அங்கேயே தங்கி இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர் வந்தனர். அவர்கள் பொருட்களை அப்புறப்படுத்தி வீடுகளை இடித்து அகற்றினர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த கர்ணன் என்பவர் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க போவதாக கூறி திடீரென தனது உடலில் மண்எண்ணையை ஊற்றினார். பின்னர் அவர் வீட்டுக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார்.

    வீட்டுக்குள் அவரது மனைவியும், 2 குழந்தையும் இருந்தனர். அசம்பாவிதத்தை தடுக்க போலீசார் விரைந்து வந்து வீட்டு கதவை உடைத்து கர்ணனையும், அவரது குடும்பத்தையும் மீட்டனர்.

    பின்னர் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இச்சம்பவத்தால் அப்பகுதில் பெரும் பரபரப்பு எற்பட்டது.

    தொடர்ந்து அப்பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. தீக்குளிக்க முயன்ற கர்ணனிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    ×