search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குப்பதிவு"

    பாராளுமன்றத்துக்கு இரண்டாவது கட்டமாக 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இன்று தொடங்கியது. #LokSabhaElections2019 #ParliamentElections
    முதல்கட்ட பாராளுமன்ற தேர்தல் கடந்த 11-ஆம் தேதி 91 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

    தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. புதுச்சேரியில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.

    அதேபோல், கர்நாடகா 14, மகாராஷ்டிரா 10, உத்தரபிரதேசம் 8, பீகார் 5, அசாம் 5, ஒடிசா 5, சத்தீஸ்கர் 3, காஷ்மீர் 2, மணிப்பூர் 1 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. 



    சரியாக காலை 7 மணிக்கு அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது வாக்கை பதிவு செய்தார்.

    நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் நிலையில், பதிவாகும் வாக்குகள், வருகிற மே 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். #LokSabhaElections2019 #ParliamentElections

    இந்தோனேசியாவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் எம்பிக்களை தேர்வு செய்வதற்கான பொதுத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். #IndonesiaElections #JokoWidodo
    ஜகார்த்தா:

    உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில் இன்று மிகப்பெரிய பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. முதல் முறையாக, ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் ஒரே நாளில் நடத்தப்படுகிறது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்கின்றனர். சில வாக்காளர்கள் தங்கள் பகுதியில் உள்ள மசூதிகளுக்குச் சென்று பிரார்த்தனை செய்துவிட்டு, ஓட்டு போட சென்றனர்.



    இந்த தேர்தலில் சுமார் 2.45 லட்சம் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அடுத்த 2024-ஆம் ஆண்டு வரையிலும் நாட்டை ஆளப்போகும் ஜனாதிபதி மற்றும் எம்பிக்களை 19 கோடி வாக்காளர்கள் நிர்ணயிக்க உள்ளனர். 8 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனாதிபதியும், இந்தோனேசிய மக்களாட்சிக் கட்சி (போராட்டம்)  தலைவருமான ஜோகோ விடோடோவும் (வயது 57), முன்னாள் ராணுவ தளபதியும் கெரிந்த்ரா கட்சி தலைவருமான பிரபோவோ சுபியாண்டோவும் (வயது 67) போட்டியிடுகின்றனர்.

    கருத்துக்கணிப்பு முடிவுகள் விடோடோவுக்கு சாதகமாகவே உள்ளன. அதேசமயம், கடந்த தேர்தலில் வெற்றிவாய்ப்பை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தவற விட்ட சுபியாண்டோ, இந்த முறை தேர்தல் களத்தில் விடோடோவுக்கு கடும் சவாலாக விளங்கினார். இந்த முறை வாக்காளர் பட்டியலில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக சுபியாண்டோ குற்றம்சாட்டினார். ஒருவேளை தான் தோல்வி அடைந்தால், தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாகவும் எச்சரித்துள்ளார்.

    வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் மே மாதம் வரை வெளியிடப்படாது என கூறப்படுகிறது. #IndonesiaElections #JokoWidodo
    உத்தரகாண்டில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது , வாக்குச்சாவடிக்குள் செல்பி எடுத்த பாஜக தலைவர்கள் உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #Casefiled #ModelCodeofConduct
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணி முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏராளமான மக்கள் தங்கள் ஜனநாயக கடமை ஆற்ற, வாக்குச்சாவடிகளில் சென்று வாக்களித்தனர். இந்த வாக்குப்பதிவில் புதிய வாக்களர்களும் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் வாக்களித்தனர்.

    தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறக்கூடாது எனவும், தேர்தல் விதிகளை மீறி மக்கள் செயல்படுவதை தடுக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. மேலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.



    வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்துச் செல்லவும் அங்கு உள்ள ஆவணங்கள், மற்றும் வாக்கு இயந்திரங்களை புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று உத்தரகண்டில் பாஜக தலைவர்கள் 4 பேர் உட்பட 11 வாக்காளர்கள், வாக்குச்சாவடிக்குள் வாக்களித்துவிட்டு செல்பி எடுத்துள்ளனர்.

    இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் செல்பி எடுத்தது தொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. #Casefiled #ModelCodeofConduct



    மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூர் தொகுதியில் உலகிலேயே மிக குள்ளமான பெண்ணான ஜோதி அம்கே வாக்கினை பதிவு செய்தார். #LokSabhaElections2019 #Jyotiamge
    நாக்பூர்:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று  (ஏப்ரல் 11ம் தேதி)  துவங்கி 4 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து இன்று காலை 7 மணி முதலே அம்மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    இதேப்போல் மக்களும் காலை 7 மணி முதல் நீண்ட நேரம் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் உலகின் மிகவும் குள்ளமான பெண்ணான ஜோதி அம்கே (26)  மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் இன்று காலை மகிழ்ச்சியுடன் வாக்களித்தார்.

    உலகின் மிகவும் குள்ளமான ஜோதி அம்கே கின்னஸ், லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இவரது உயரம் 62.8 செ.மீ ஆகும்.



    ஜோதி அம்கே ஜோதி அம்கே வாக்களித்த புகைப்படங்கள் சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது. மகாரஷ்டிரா மாநிலத்தில் 3 மணி நிலவரப்படி  38.35% வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #Jyotiamge


    உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பேண்டு வாத்தியம் முழங்க மலர் தூவி வாக்காளர்களை வரவேற்றது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. #LokSabhaElections2019 #WelcomeVoters
    லக்னோ:

    மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சட்டமன்றத் தேர்தல்  நடைபெறும் 4 மாநிலங்களில் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. ஒடிசாவில் சில சட்டமன்றத் தொகுதிகளில் மட்டும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்குகளை பதிவு செய்தவண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் பாக்பக் மாவட்டம், பராவ்த் நகரில் உள்ள பூத் எண் 126-ல் வாக்காளர்களை மேளதாளத்துடன் மலர் தூவி வரவேற்றனர். வாக்குச்சாவடி நுழைவு வாயிலில் என்சிசி மாணவர்கள் நின்றுகொண்டு, பேண்டு வாத்தியம் முழங்க மலர் தூவி வாக்காளர்களை வரவேற்றனர். மாணவர்களின் இந்த செயல் வாக்காளர்களை வெகுவாகக் கவர்ந்தது.



    வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கச் செய்வதற்காக தேர்தல் ஆணையம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.  குறிப்பாக முதல் முறை வாக்காளர்கள் தவறாமல் வந்து வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. அதேபோல் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் சிரமம் இன்றி வாக்களிக்க  விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #LokSabhaElections2019 #WelcomeVoters

    17-வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முதல் கட்டமாக 91 தொகுதிகளில் தொடங்கி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #LokSabhaElections2019
    நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று (ஏப்ரல் 11-ந் தேதி) தொடங்கி அடுத்த மாதம் 19-ந் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும், ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கிய நிலையில், மக்கள் முன்னதாகவே வாக்குப்பதிவு மையங்களுக்கு ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.



    அத்துடன் ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 3 மாநிலங்களின் அனைத்து தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே நாளில் நடக்கிறது.

    காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடக்கிறது. ஒரு சில இடங்களில் 4 அல்லது 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. #LokSabhaElections2019 #VotingBegins

    பாராளுமன்ற தேர்தலில் முதல் கட்டமாக இன்று (வியாழக்கிழமை) 91 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஓட்டுப்பதிவு நடக்கிறது. 4 மாநில சட்டசபை தேர்தலிலும் வாக்குப்பதிவு நடக்கிறது. #LokSabhaElection
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று (ஏப்ரல் 11-ந் தேதி) தொடங்கி அடுத்த மாதம் 19-ந் தேதி வரை ஏழு கட்ட தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும், ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

    அந்த வகையில், ஆந்திராவில் 25, அருணாசலபிரதேசத்தில் 2, அசாமில் 5, பீகாரில் 4, சத்தீஷ்காரில் 1, காஷ்மீரில் 2, மராட்டியத்தில் 7, மணிப்பூரில் 1, மேகாலயாவில் 2, மிசோரமில் 1, நாகலாந்தில் 1, ஒடிசாவில் 4, சிக்கிமில் 1, தெலுங்கானாவில் 17, திரிபுராவில் 1, உத்தரபிரதேசத்தில் 8, உத்தரகாண்டில் 5, மேற்கு வங்காளத்தில் 2, லட்சத்தீவுகளில் 1, அந்தமான் நிகோபார் தீவுகளில் 1 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடக்கிறது.



    பாராளுமன்ற தேர்தலைப் பொறுத்தமட்டில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மத்திய மந்திரிகள் வி.கே.சிங் (காசியாபாத்), சத்யபால் சிங் (பாக்பத்), மகேஷ் சர்மா (கவுதம்புத்த நகர்) ஆகியோர் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து முதல் கட்ட தேர்தலை சந்திக்கின்றனர். ராஷ்டிரீய லோக்தளம் கட்சி தலைவர் அஜித் சிங்கும், முசாப்பர்நகரில் முதல் கட்ட தேர்தலை சந்திக்கிறார்.

    ஆந்திர மாநிலத்தில் இருந்து முன்னாள் மத்திய மந்திரிகள் கிஷோர் சந்திர தேவ் (அரக்கு), அசோக் கஜபதி ராஜூ ஆகிய இருவரும் தெலுங்குதேசம் கட்சி சார்பில் முதல் கட்ட தேர்தலை எதிர்கொள்கிறார்கள்.

    மற்றொரு முன்னாள் மத்திய மந்திரி புரந்தேசுவரி, விசாகப்பட்டினம் தொகுதியில் பா.ஜனதா கட்சி சார்பில் இன்று நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்கிறார்.

    தெலுங்கானாவில் முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகள் கவிதா, நிஜாமாபாத் தொகுதியில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி சார்பிலும், முன்னாள் மத்திய மந்திரி ரேணுகா சவுத்ரி, காங்கிரஸ் வேட்பாளராக கம்மம் தொகுதியிலும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் ஒவைசி ஐதராபாத்திலும் முதல் கட்ட தேர்தலை சந்திக்கிறார்கள்.

    மராட்டிய மாநிலத்தில் முதல் கட்ட தேர்தலை சந்திக்கிற தலைவர்களில் மத்திய மந்திரி நிதின் கட்காரி (நாக்பூர்), முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான சுஷில்குமார் ஷிண்டே (சோலாப்பூர்) முக்கியமானவர்கள் ஆவார்கள்.

    சட்டசபை தேர்தலில் ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 3 மாநிலங்களில் அனைத்து தொகுதிகளிலும் இன்று ஒரே நாளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    ஒடிசாவை பொறுத்தவரையில் முதல் கட்ட தேர்தலை சந்திக்கிற 4 பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளில் மட்டும் இன்று முதல் கட்ட தேர்தல் நடக்கிறது.

    கடந்த முறை பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் இந்த முறை தனியாக தேர்தலை சந்திக்கிறது.

    முதல்-மந்திரியும், தெலுங்குதேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு (குப்பம்), அவரது மகன் நரலோகேஷ் (மங்களகிரி), ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி (புலிவந்துலா), ஜனசேனா தலைவர் நடிகர் பவன் கல்யாண் (பீமாவரம், குஜூவாகா) ஆகியோரின் அரசியல் எதிர்காலம் இன்று நிர்ணயிக்கப்படுகிறது.

    சந்திரபாபு நாயுடு, ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி, பவன் கல்யாண் ஆகிய மூவரில் யார் ஆந்திராவை ஆளப்போகிறார்கள் என்பதை ஆந்திர மக்கள் இன்று ஓட்டு போட்டு முடிவு செய்கிறார்கள்.

    91 பாராளுமன்ற தொகுதிகளிலும், ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா சட்டசபை தேர்தலிலும் நேற்று முன்தினம் மாலை அனல் பறக்கும் பிரசாரம் முடிந்தது. இன்று (வியாழக்கிழமை) ஓட்டுப்பதிவு நடப்பதையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    உத்தரபிரதேசம், காஷ்மீர், மேற்கு வங்காளம், அந்தமான், லட்சத்தீவுகளில் காலை 7 மணிக்கு தொடங்கும் ஓட்டுப்பதிவு மாலை 6 மணிக்கு முடிகிறது.

    ஆந்திராவில் அரக்கு பாராளுமன்ற தொகுதி, அதற்குட்பட்ட சட்டசபை தொகுதிகளை தவிர்த்து பிற இடங்களில் காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிகிறது. அரக்கு பாராளுமன்ற தொகுதி, அதற்குட்பட்ட சட்டசபை தொகுதிகளில் சில இடங்களில் காலை 7 மணி முதல் 5 மணி வரையில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. அங்கு ஒரு சில இடங்களில் மட்டும் மாலை 4 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்து விடும்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரையிலும் ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    ஒடிசா, பீகார், சத்தீஷ்கார், ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் ஓட்டுப்பதிவு 7 மணிக்கு தொடங்கினாலும், முடிவது மாலை 3 மணி முதல் 5 மணி வரை இடத்துக்கு தக்கவாறு அமைகிறது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ள மாநிலங்கள் என்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    வட கிழக்கு மாநிலங்களான அசாம், அருணாசல பிரதேசம், மிசோரம், சிக்கிம், திரிபுரா, மணிப்பூர், நாகலாந்து, மேகாலயா ஆகிறவற்றில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையில் வாக்குப்பதிவு இடைவெளியின்றி தொடர்ந்து நடக்கிறது.

    பாராளுமன்ற முதல் கட்ட தேர்தலையும், சட்டசபை தேர்தலையும் சந்திக்கிற தொகுதிகளில் மின்னணு ஓட்டு எந்திரங்கள், ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரங்கள் (விவிபாட்), வாக்குச்சாவடிகளுக்கு போய்ச்சேர்ந்து விட்டன.

    தமிழகம், புதுவை உள்ளிட்ட 13 மாநிலங்களில் 97 பாராளுமன்ற தொகுதிகளில் 2-வது கட்ட தேர்தல் 18-ந் தேதி நடக்கிறது.

    இந்த தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டசபை தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
    வாக்குப்பதிவின்போது அசம்பாவிதங்கள், வன்முறை சம்பவங்களை தடுக்க, போலீஸ் பிடியில் சிக்காமல் இருந்துவந்த 1315 பழைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். #LokSabhaElections2019
    சென்னை:

    தமிழகம் முழுவதும் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இதையொட்டி மாநிலம் முழுவதும் போலீசார் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். இதற்காக குற்ற வழக்குகளில் தொடர்புடைய பழைய ரவுடிகளை போலீசார் வேட்டையாடி கைது செய்து வருகிறார்கள்.

    சென்னையிலும் ஓட்டுப்பதிவின் போது அசம்பாவிதங்களை தடுக்கவும், வன்முறை சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ளவும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையர்கள் தினகரன், மகேஸ் குமார் அகர்வால் ஆகியோரது மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் தேவையான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையத்துடன் இணைந்து போலீசார் மேற்கொண்டுள்ளனர். இதன்படி பழைய குற்றவாளிகள், ரவுடிகள், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டவர்களை கைது செய்ய முடிவு செய்யப்பட்டது.

    கடந்த மாதம் 10-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தன. அந்த வகையில் தேர்தல் விதி மீறல்களை கண்காணிக்கும் பணியுடன் ரவுடிகள் வேட்டையும் தீவிரப்படுத்தப்பட்டது.

    இதில் 1555 ரவுடிகள் இதுவரை பிடிபட்டுள்ளனர். சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் போலீசிடம் சிக்கியுள்ள இவர்களிடம் அந்தந்த பகுதி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், இனி தவறு செய்ய மாட்டேன் என்று எழுதி வாங்கி உள்ளனர்.

    இதனை மீறி குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதே போல வழக்கு விசாரணைக்கு சரியாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 1000-க்கும் மேற்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இப்படி போலீஸ் பிடியில் சிக்காமல் டிமிக்கி கொடுத்து கொண்டிருந்த 1315 பழைய குற்றவாளிகளும் பிடிபட்டுள்ளனர்.

    சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் சட்டம்-ஒழுங்கு போலீசார் ரவுடிகளை தேடிப்பிடித்து கைது செய்து வரும் அதே வேளையில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    வருகிற 16-ந்தேதியுடன் பிரசாரம் ஓயும் நிலையில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். சென்னையில் இதுவரையில் தேர்தல் விதி மீறல் தொடர்பாக 629 வழக்குகள் போடப்பட்டுள்ளன. அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதாக 176 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பறக்கும் படை சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநகர பகுதிகளில் மட்டுமே தீவிரமாக நடைபெற்ற இந்த சோதனை கடந்த 2 நாட்களாக புறநகர் பகுதிகளிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    வரும் நாட்களில் இந்த சோதனை மேலும் தீவிரப்படுத்தப்பட உள்ளது. #LokSabhaElections2019
    தாய்லாந்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தொடர்ச்சியான புகார்கள் மற்றும் முறையற்ற தகவல்கள் காரணமாக தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. #ThailandElection
    பாங்காக்:

    தாய்லாந்தில் 2014-ம் ஆண்டு நடந்த ஆட்சி கவிழ்ப்புக்கு பிறகு முதல் முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு பொதுத்தேர்தல் நடந்தது. 5 கோடிக்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதியானவர்களாக இருந்த நிலையில், இந்த தேர்தலில் 64 சதவீத வாக்குகள்தான் பதிவானது.

    ஞாயிற்றுக்கிழமை மாலை வாக்குப்பதிவு முடிந்தபிறகு 90 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் எண்ணிக்கை முடிந்துவிட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் ராணுவ ஆதரவு பெற்ற கட்சியான பாலங் பிரச்சா ரத் கட்சி முன்னணியில் இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியது. அதன்படி தற்போதைய பிரதமர் பிரயாட் சான்ஓசா தலைமையில் அரசு அமைக்கப்பட வேண்டிய சூழல் உருவானது. ஆனால் தொடர்ச்சியான புகார்கள் மற்றும் முறையற்ற தகவல்கள் காரணமாக தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் குழப்பம் ஏற்பட்டது.

    இதையடுத்து தேர்தல் முடிவுகள் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் அதிகாரப்பூர்வமான முழுமையான முடிவுகள் மே மாதம் வரை வெளியிடப்படாது என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை நடந்த பொதுத்தேர்தலில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டி உள்ள முன்னாள் பிரதமர் தக்‌ஷின் ஷினவத்ரா, முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
    பாராளுமன்ற தேர்தலில் ஆண்களை விட பெண்களின் வாக்குப்பதிவு அதிகரிக்கும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 18 வயது நிரம்பிய ஆண்-பெண் இருபாலருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் நாட்டில் பாராளுமன்ற தேர்தல் தொடங்கிய 1952-ம் ஆண்டு காலகட்டத்தில் ஆண்களே அதிக அளவில் வாக்களித்து வந்தனர். எனினும் ஆண்டுகள் செல்ல செல்ல இந்த நிலைமை மாறி வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இந்தியாவில் நடந்துள்ள தேர்தல்கள் குறித்து பிரபல எழுத்தாளர்களான பிரன்னாய் ராய், தொரப் சொபரிவாலா ஆகியோர் ஆய்வு செய்து புத்தகம் ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதில் இந்திய தேர்தலில் ஆண்-பெண் வாக்காளர்களின் பங்களிப்பு குறித்து பல்வேறு தகவல்களை அவர்கள் பகிர்ந்துள்ளனர்.

    அதன்படி கடந்த 1962 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான பாராளுமன்ற தேர்தல்களில் பெண்களின் பங்களிப்பு 20 சதவீதம் அதிகரித்து உள்ளதாகவும், ஆண்களின் பங்களிப்பு வெறும் 5 சதவீதம் அளவுக்கே உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டு இருக்கிறது. தற்போது ஆண்களும், பெண்களும் சமமான பங்களிப்பை வழங்கி வருவதாக கூறியுள்ள ஆசிரியர்கள், எனினும் சில சட்டசபை தேர்தல்களில் ஆண்களை விட பெண்களின் வாக்குப்பதிவு 1 சதவீதம் அளவுக்கு அதிகரித்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.இது வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் தொடரும் என அந்த புத்தகம் கூறுகிறது. அந்தவகையில் வருகிற தேர்தல் இந்திய பெண்களின் தேர்தலாக இருக்கும் எனவும் புத்தக ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
    ராணுவ ஆட்சி நடைபெறுகிற தாய்லாந்து பொதுத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. #ThailandElection
    பாங்காக்:

    தாய்லாந்தில் 1932-ம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு வந்த பின்னர் அங்கு ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ராணுவம் அரியணை ஏறுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. அப்படி கடந்த 90 ஆண்டுகளில் 12 முறை ஆட்சி கவிழ்க்கப்பட்டு உள்ளது.

    அந்த வகையில், கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் யிங்லக் ஷினவத்ரா, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவரது பதவியை பறித்து அந்நாட்டு அரசியல் சாசன கோர்ட்டு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து நிவாட்டம்ராங் பூன்சாங் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டார். ஆனால் வலுவான தலைமை இல்லாததால் அந்நாட்டின் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. ராணுவ தளபதியாக இருந்த பிரயாட் சான்ஓசா பிரதமராக பொறுப்பேற்றார்.

    நாட்டின் சட்டம், ஒழுங்கு சரியாகும் வரை மட்டுமே ராணுவ ஆட்சி அமலில் இருக்கும் என கூறப்பட்ட நிலையில், இதுவரை அங்கு ஜனநாயக ஆட்சி மலரவே இல்லை.

    இந்த சூழலில் மன்னர் மகா வஜ்ரலோங்கோன் உத்தரவு பிறப்பித்தன் பேரில், மார்ச் மாதம் 24-ந்தேதி பொதுத்தேர்தல் நடக்கும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. தாய்லாந்து அரச குடும்பத்தினர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்கள் பெரும்பாலும் அரசியல் விவகாரங்களில் தலையிடுவது கிடையாது.

    ஆனால் எதிர்பாராத வகையில் மன்னர் மகா வஜ்ரலோங்கோனின் சகோதரியும், இளவரசியுமான உப்லோரட்டனா மஹிடோல் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்தார். எனினும் மன்னர் மகா வஜ்ரலோங்கோன் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் உப்லோரட்டனா மஹிடோல் தனது முடிவில் இருந்து பின் வாங்கினார்.

    இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், 500 உறுப்பினர்களை கொண்ட தாய்லாந்து நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. பள்ளிக்கூட வளாகங்கள், கோவில்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் அமைக் கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். பொதுவான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

    இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் பிரயாட் சான்ஓசா, முன்னாள் பிரதமர் தாக்‌ஷின் ஷினவத்ராவின் பெகு தாய் கட்சியின் சார்பில் களம் இறங்கி உள்ள சூடாரத் கீரப்பான் ஆகியோர் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. தேர்தல் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மன்னர் மகா வஜ்ரலோங்கோன் மக்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

    அதில் அவர் தனது தந்தையும், முன்னாள் மன்னருமான பூமிபோல் அதுல்யாதேஜ் கூறிய “அரசுக்கும் சமூகத்துக்கும் நல்லது செய்யக்கூடிய மற்றும் கெட்டவர்களை கட்டுப்படுத்தும் ஆளுமை கொண்ட நல்ல மனிதர்களை ஆதரியுங்கள்” என்கிற வாசகத்தை சுட்டிக்காட்டி “இதை நினைவில் வைத்து விழிப்புடன் செயல்படுங்கள்” என தெரிவித்திருந்தார். மன்னரின் இந்த அறிக்கை செய்தி சேனல்களில் தொடர்ச்சியாக காட்டப்பட்டுக்கொண்டே இருந்தன.
    வங்காளதேசம் நாட்டில் மாவட்ட நிர்வாகங்களுக்கு இன்று நடந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின்போது கோஷ்டி மோதலில் தேர்தல் அதிகாரி உள்பட 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். #Bangladeshdistrictpolls #Bangladeshpollviolence
    டாக்கா:

    வங்காளதேசத்தில் உள்ள மாவட்ட நிர்வாக அமைப்புகளுக்கான பிரதிநிதிகளை தேர்வு செய்ய பல கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சில மலையோரப்பகுதி மாவட்டங்களில் இன்று இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. 

    இந்நிலையில், இங்குள்ள ரங்கமாட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் இன்று மாலை எண்ணும் இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

    இந்த குழுவினர் நொய்மேலி பகுதி வழியாக வந்தபோது அவர்களை வழிமறித்த ஒரு கும்பல் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தேர்தல் அலுவலர் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த ரங்கமாட்டி மாவட்ட போலீசார், பிரேதங்களை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.  #Bangladeshdistrictpolls #Bangladeshpollviolence  
    ×