search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எதிர்க்கட்சிகள்"

    கலைஞர் புகழ் வணக்க கூட்டத்தில் கலந்து கொண்ட பல கட்சி தலைவர்கள் பா.ஜனதாவை விமர்சித்ததை அரசியல் அநாகரீகம் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டித்துள்ளார். #TamilisaiSoundararajan
    சென்னை:

    பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

    மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவரான பிறகு தனது ஏற்புரையில் பா.ஜனதா எதிர்ப்பை கடுஞ்சொற்களால் பேசிய நிலையிலும், தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான கலைஞருக்கு மரியாதை செலுத்த நிதின் கட்கரி கலந்து கொண்டது அரசியல் நாகரீகம்.

    ஆனால் அதே கூட்டத்தில் மற்றவர்கள் கலைஞரை மறந்து பா.ஜனதாவை விமர்சித்தது அநாகரீகம்.

    நாம் ஒற்றுமையாக இருந்தால் வெற்றி நமதே என்ற கையேட்டை மு.க.ஸ்டாலின் கொடுத்திருக்கிறார். முதலில் அதை அண்ணன் அழகிரிக்கு கொடுத்திருக்கலாம்.

    காவியை பற்றி விமர்சிக்கிறார்கள். தமிழகத்தில் காவி பறக்கும் காலம் வரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan
    அ.தி.மு.க. ஆட்சி கவிழும் என நினைத்த எதிர்கட்சிகளின் கனவு பலிக்காமல் 17 மாத காலமாக ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது என்று அமைச்சர் உதயகுமார் பேசினார். #ADMK #TNMinister #Udhayakuamr
    ஆரணி:

    திருவண்ணாமலை வடக்கு, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் 17 மாத ஆட்சி குறித்து சாதனை விளக்க 3-வது கட்ட சைக்கிள் பேரணி ஆரணியில் தொடங்கியது.

    இதன் தொடக்க நிகழ்ச்சி ஆரணி-சேவூர் பைபாஸ் சாலையில் உள்ள அம்மா திடலில் நடந்தது. அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வரவேற்றார். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கி சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-


    முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவிற்கு பிறகு இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று எதிர்க்கட்சியினர் கனவு கண்டனர். புதிய முதல்-அமைச்சர்கள் நாங்கள்தான் என்று கூறினர். அவர்களுடைய கனவு பலிக்காமல் 17 மாத காலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக ஆட்சி நடத்தி நம்மை வழிநடத்திசெல்கின்றனர்.

    தொடர்ந்து நீதிமன்றம் மூலம் ஆட்சியை கவிழ்த்து விடலாம் என நினைத்து வருகிறார்கள். அது நடக்காது. அ.தி.மு.க.வின் 1½ கோடி தொண்டர்கள் வீறுகொண்டு எழுவார்கள்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் 1, 250 இளைஞர்கள் சீருடை அணிந்து அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் இந்த சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். தினமும் இந்த சைக்கிள் பேரணி காலை 7 மணிக்கு தொடங்கும். சில பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்படும். ஒரு சில பகுதிகளில் பள்ளி மாணவர்களிடத்தில் வாசிப்புத் திறன் மேற்கொள்ளப்படும். நீங்கள் சைக்கிள் ராஜாவாக இனியும், எப்போதும் உலா வருவீர்கள்.

    இந்த சைக்கிள் பயணம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் 300 கி.மீ. தொலைவிற்கு நடக்கிறது. நிறைவு நிகழ்ச்சி இதே இடத்தில் 28-ந் தேதி நடக்கிறது என்றார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். #ADMK #TNMinister #Udhayakuamr
    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்காக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வருகிற 28-ந்தேதி டெல்லி வரவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #MamataBanerjee
    புதுடெல்லி:

    மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் மேற்குவங்க முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தீவிரமாக இருக்கிறார்.

    எனவே நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை பாரதிய ஜனதாவுக்கு ஒருங்கிணைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

    இதற்காக ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவர்களை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். சமீபத்தில் டெல்லி வந்த அவர், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது இதுபற்றி விரிவாக ஆலோசனை நடத்தினார்.

    காங்கிரசை பொறுத்த வரை ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறது.

    ஆனால் பாரதிய ஜனதாவுக்கு எதிராக உள்ள சில கட்சிகளுக்கு ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த விருப்பம் இல்லை.

    குறிப்பாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் போன்றவர்கள் இதை விரும்பவில்லை. மம்தாவும் கூட காங்கிரசை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பதில் தயக்கம் காட்டி வருகிறார்.

    இதனால் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இருந்தாலும் இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டு ஒருமித்த முடிவுக்கு வர மம்தா பானர்ஜி விரும்புகிறார்.

    இதற்காக அவர் மீண்டும் டெல்லி வர உள்ளார். இந்த மாதம் இறுதியில் டெல்லி வர உள்ள அவர் சில நாட்கள் டெல்லியிலேயே தங்கி இருந்து எதிர்க்கட்சி ஒருங்கிணைப்பு பணிகளை தீவிரமாக்க முடிவு செய்துள்ளார்.

    வருகிற 28-ந்தேதி அவர் டெல்லி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 30-ந்தேதி அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை அவர் கூட்ட உள்ளார். இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேபோல சந்திரபாபு நாயுடுவும் இந்த கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். 17 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    அப்போது எதிர்க்கட்சிகள் எழுப்பும் சந்தேகங்களுக்கு தீர்வு காணப்படும் என்றும், எதிர்க்கட்சிகள் மத்தியில் இருக்கும் கருத்து வேறுபாடுகள் களையப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    குறைந்தபட்ச கொள்கை திட்டத்தின் அடிப்படையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைவது என்று அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

    மேலும் 28-ந்தேதி காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து குழுவாக சென்று தேர்தல் கமி‌ஷன் தலைவர்களை சந்திக்க முடிவு செய்துள்ளனர். ஓட்டு எந்திர முறையை மாற்றிவிட்டு பழைய மாதிரி ஓட்டு சீட்டு முறையில் பாராளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்று அவர்கள் தேர்தல் கமி‌ஷனிடம் வற்புறுத்த உள்ளனர். ஓட்டு எந்திரத்தில் முறைகேடு நடப்பதாக சமீப காலமாக எதிர்க்கட்சிகள் சந்தேகப்படுகின்றன. ஓட்டு சீட்டு முறைதான் இந்த சந்தேகத்தை போக்கும் ஒரே வழி என்பதால் ஓட்டு சீட்டு முறையை வற்புறுத்த இருக்கிறார்கள்.

    இதுமட்டுமல்லாமல் ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல், அசாம் தேசிய குடியுரிமை பட்டியல் பிரச்சினை, கேரள வெள்ளத்திற்கு மத்திய அரசு சரியாக உதவி செய்யாததாக எழுந்துள்ள பிரச்சினை போன்றவை சம்பந்தமாகவும் எதிர்க்கட்சிகள் ஓட்டுமொத்தமாக குரல் எழுப்பவும் திட்டமிட்டுள்ளனர்.

    கேரள முதல்-மந்திரி பிரனாயி விஜயன் ஏற்கனவே நிதி அயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி வந்திருந்த போது மம்தா பானர்ஜி, சந்திர பாபுநாயுடு, குமாரசாமி ஆகியோரை சந்தித்து பேசினார்.

    தற்போது கேரள வெள்ளத்திற்கு தேவையான உதவிகளை செய்வதாக சந்திரபாபு நாயுடு, பிரனாயி விஜயனிடம் கூறியுள்ளார். மம்தா பானர்ஜி ரூ.10 கோடி நிதி உதவி அளித்துள்ளார்.

    ரபேல் விமான ஊழல் பிரச்சினையில் பல்வேறு ஆதாரங்கள் இருப்பதாக ராகுல்காந்தி அனைத்து கட்சி தலைவர்களிடம் ஏற்கனவே விளக்கி கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் பெரிய அளவில் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #MamataBanerjee
    அசாம் மாநிலத்தின் குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என குடியரசுத்தலைவரிடம் இன்று எதிர்க்கட்சிகள் மனு அளித்துள்ளனர். #AssamNRC #RamNathKovind
    புதுடெல்லி:

    வங்காளதேசத்தில் இருந்து வந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டது. சமீபத்தில் வெளியிடப்பட்ட அதன் இறுதி வரைவு அறிக்கையில், 40 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். தற்போதைய நிலையில் இந்த 40 லட்சம் பேரும் சட்டவிரோத குடிமக்களாக கருதப்படுவார்கள்.

    இந்த விவகாரம் கடும் சர்ச்சைக்குள்ளானது. மேலும், அரசியல் காரணங்களுக்காக இந்தியர்களின் பெயர்களும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், அசாம் குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் இந்தியர்களின் பெயர்கள் விடுபடாமல் இருக்க குடியரசுத்தலைவர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய எதிர்க்கட்சிகள் குடியரசுத்தலைவரிடம் இன்று மனு அளித்தனர். #AssamNRC #RamNathKovind
    புதுவை சட்டசபைக்குள் 3 பாரதிய ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்கள் நுழைந்துள்ளதால் எதிர்கட்சிகளின் பலம் 15 ஆக உயர்ந்துள்ளது. #PuducherryAssembly #NominatedMLAs
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆளும் கட்சியான காங்கிரசுக்கு 15 எம்.எல்.ஏ.க்கள் பலம் உள்ளது. ஆளும் கட்சியான காங்கிரசை ஆதரிக்கும் தி.மு.க. 2, சுயேச்சை 1 என மொத்தம் ஆளும் கட்சியின் பலம் 18 ஆக உள்ளது.

    சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரசுக்கு 8, அ.தி.மு.க.வுக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எதிர்க்கட்சிகளின் பலம் 12 ஆக இருந்தது.

    தற்போது 3 பாரதிய ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்குள் நுழைந்துள்ளதால் எதிர்கட்சிகளின் பலம் 15 ஆக உயர்ந்துள்ளது. #PuducherryAssembly #NominatedMLAs
    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. அனைத்துக்கட்சிகளும் ஒத்துழைப்பு தர பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். #pmmodi #parliamentarymonsoonsession
    புதுடெல்லி:

    நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் பல்வேறு பிரச்சினைகளால் கிட்டத்தட்ட முழுமையாக முடங்கியது. இந்த நிலையில் மழைக்கால கூட்டத்தொடர், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. அடுத்த மாதம் 10-ந்தேதி முடிகிறது. 18 நாட்கள் கூட்டம் நடைபெறும்.

    ‘முத்தலாக்’ உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு ஆர்வம் கொண்டு உள்ளது. மேலும் புதிதாக 18 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இந்த கூட்டத்தொடரில் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் வரிந்து கட்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால், கூட்டம் அமைதியாக நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்த நிலையில், மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தை மத்திய அரசு நேற்று டெல்லியில் கூட்டி ஆலோசனை நடத்தியது.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த குமார், நாடாளுமன்ற மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஆனந்த் சர்மா (காங்கிரஸ்), சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), டி.ராஜா (இந்திய கம்யூ) உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, ‘‘அனைத்துக்கட்சிகளும் எழுப்புகிற பிரச்சினைகளுக்கு அரசு முக்கியத்துவம் வழங்குகிறது. நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு, பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை அனைவரும் எழுப்புவார்கள் என்று நம்புகிறேன்’’ என குறிப்பிட்டார்.

    நாடாளுமன்றம் சுமுகமாக இயங்குவதற்கு அனைத்துக்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

    இந்த கூட்டத்துக்கு பின்னர் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த குமார், நிருபர்களிடம் பேசினார்.

    அப்போது அவர், ‘‘நாடாளுமன்றம் இயங்க வேண்டும், தேச நலனை அடிப்படையாகக் கொண்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்பது ஒட்டுமொத்த தேசத்தின் எதிர்பார்ப்பாக அமைந்து உள்ளது. நாடாளுமன்றம் சுமுகமாக இயங்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு தரும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். நாட்டு நலனின் அடிப்படையில் அனைத்துக்கட்சிகளிடமும் இருந்து அரசு ஒத்துழைப்பை நாடுகிறது’’ என்று கூறினார்.

    அனைத்துக்கட்சி கூட்டம், இணக்கமான சூழலில் நடந்து முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

    இருப்பினும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் முத்தலாக் மசோதா, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் இட ஒதுக்கீடு விவகாரம், டெல்லி அரசுக்கும், துணை நிலை கவர்னருக்கும் இடையே நிலவி வருகிற மோதல் போக்கு, காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களின் கட்சி என்று அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட கருத்து உள்ளிட்ட பிரச்சினைகளில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    மத்திய அரசுக்கு எதிராக இந்த கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் எதிர்க்கட்சி எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு கேட்டு வந்தார்.

    இந்நிலையில் டெல்லியில் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் அளித்த பேட்டியில், மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. மேலும் சில கட்சிகளை சந்தித்து இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்து ஏற்படுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.

    மேல்சபை துணைத்தலைவர் பி.ஜே.குரியனின் பதவிக்காலம் முடிந்து விட்டதால், புதிய துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்த கூட்டத்தொடரில் நடத்தப்படும்.

    புதிய துணைத்தலைவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.

    இது தொடர்பாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளுடன் பேச்சு நடத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியது உள்ளது. #pmmodi #parliamentarymonsoonsession
    அமைதியற்ற சூழ்நிலை நிலவினால், அரசியல் ரீதியில் ஆதாயம் அடையலாம் என எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன என்று பிரதமர் மோடி சாடினார். #PoliticalBenefit #Modi
    லக்னோ:

    அமைதியற்ற சூழ்நிலை நிலவினால், அரசியல் ரீதியில் ஆதாயம் அடையலாம் என எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன என்று பிரதமர் மோடி சாடினார்.

    உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் பிறந்து மிகப்பெரிய மத குருவாகவும், கவிஞராகவும் திகழ்ந்தவர் கபீர்தாசர்.

    அவரது 500-வது நினைவு தினத்தையொட்டி, உத்தரபிரதேச மாநிலம், சந்த் கபீர்நகர் மாவட்டம், மகாரில் அமைந்து உள்ள அவரது நினைவிடத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி நேற்று சென்று மரியாதை செலுத்தினார்.



    அன்னாரின் நினைவைப் போற்றும் விதமாக ரூ.24 கோடியில் அமைய உள்ள சந்த் கபீர் அகாடமி என்னும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

    அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது கூறியதாவது:-

    நாட்டில் நெருக்கடி நிலையை அமல்படுத்தியவர்களும், அதை எதிர்த்தவர்களும் இன்றைக்கு ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள்.

    சில கட்சிகள் அமைதியையும், வளர்ச்சியையும் விரும்புவது இல்லை. அமைதி இல்லாத சூழ்நிலை உருவானால், அதன்மூலம் தாங்கள் அரசியல்ரீதியாக பலன் அடைய முடியும் என அவர்கள் (எதிர்க்கட்சிகள்) நினைக்கின்றனர்.

    ஆனால் உண்மை கள நிலவரம் என்னவென்றால், அவர்கள் மக்களோடு துண்டிக்கப்பட்டு விடுகிறார்கள். கபீர்தாசர், மகாத்மா காந்தி, பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோர் வாழ்ந்த இந்த தேசம் எப்படிப்பட்டது என்பது அவர்களுக்கு தெரியாது.

    சமாஜ்வாத் (சோஷலிசம்) பற்றி எப்போதும் பேசுகிறவர்களும், பகுஜன்(வெகு ஜனங்கள்) பற்றி பேசுகிறவர்களும் மிகுந்த சுயநலவாதிகளாக விளங்குகின்றனர். (சமாஜ்வாடி கட்சியையும், பகுஜன் சமாஜ் கட்சியையும் இப்படி சாடினார்).

    சமூகத்தின் நலன்பற்றி அவர்கள் பார்ப்பது கிடையாது. அவர்கள் தங்கள் நலனையும், தங்கள் குடும்பத்தின் நலனையும்தான் கருத்தில் கொள்கின்றனர்.

    முஸ்லிம் பெண்கள் கேட்டும், நாடாளுமன்றத்தில் முத்தலாக் மசோதா நிறைவேற விடாமல் அவர்கள் (எதிர்க்கட்சிகள்) தடை செய்கின்றனர்.

    அம்பேத்கர் சமூகத்தின் சமத்துவத்துக்காக குரல் கொடுத்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அரசியல் கட்சிகள் அவரது கொள்கைகளை தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Tamilnews 
    சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்களில் எதிர்க்கட்சிகளின் வகுப்புவாத அரசியலாலேயே பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்தார். #BJP #NitinGadkari
    நாக்பூர்:

    மத்தியில் பா.ஜனதா கட்சி ஆட்சி அமைத்து 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அக்கட்சி சார்பில் நாடு முழுவதும் மத்திய அரசின் சாதனைகள் தொடர்பாக பொதுமக்கள் இடையே பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் 4 ஆண்டு ஆட்சியின் சாதனைகள் குறித்து நாக்பூரில் நிருபர்களை சந்தித்த மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியதாவது:-

    விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காமை, பால் விலை வீழ்ச்சி உள்பட பல்வேறு பிரச்சினைகளால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். விவசாயிகளின் தற்போதைய பிரச்சினைகள் எதுவும் புதிதானவை அல்ல, ஏற்கனவே இருப்பவைதான். இவற்றுக்கு சர்வதேச பொருளாதார மந்தநிலை மற்றும் விவசாயிகளின் அதிகப்படியான உற்பத்தி ஆகியவையே காரணம்.

    இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண நீண்ட மற்றும் குறுகிய கால திட்டங்கள் வகுத்து போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அரசு செயல்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகளின் உற்பத்தி செய்யும் உபரி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான உரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    இதைத்தொடர்ந்து சமீபத்தில் 11 மாநிலங்களில் நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மந்திரி நிதின் கட்காரி, எதிர்க்கட்சியினர் அரசியல் காரணங்களுக்காக வேண்டுமென்றே மத்திய அரசு குறித்து தவறான தகவல்கள் பரப்பி வருவதாகவும், இதன் மூலம் சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் இடையே பயத்தை விதைத்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

    மேலும் பா.ஜனதா ஒருபோதும் சாதி, மதம் மற்றும் மொழி ஆகியவற்றை பயன்படுத்தி பிரிவினை அரசியலில் ஈடுபடாது எனவும் தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் வகுப்புவாத அரசியலாலேயே பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். #BJP #NitinGadkari
    ×