search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருணாஸ்"

    நிபந்தனை ஜாமீனில் வந்துள்ள கருணாஸ் எம்எல்ஏ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், மருத்துவ சான்றுகள் காவல்நிலையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. #KarunasMLA #KarunasHospitalized
    சென்னை:

    நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் இன்று உடல்நலக்குறைவு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    முதல்வரை அவதூறாகப் பேசிய வழக்கு மற்றும் ஐபிஎல் போராட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கருணாஸ் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.  தினமும் நுங்கம்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி காவல் நிலையங்களில் ஆஜராகி  கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.


    தற்போது மருத்துவமனையில் கருணாஸ் அனுமதிக்கப்பட்டிருப்பதால், காவல் நிலையங்களுக்கு கையெழுத்திட செல்லவில்லை. எனவே, அவரது வழக்கறிஞர்கள் காவல் நிலையத்திற்கு சென்று கருணாசின் மருத்துவச் சான்றுகளை வழங்கினர்.

    இதுபற்றி அவரது வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணன் கூறுகையில்,  ‘கருணாஸ் நேற்று இரவு முதலே நெஞ்சுவலியால் அவதிப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்திடவில்லை’ என்றார்.

    இதற்கிடையே 2017ம் ஆண்டு நெல்லையில் தேவர் பேரவை நிர்வாகியின் காரை சேதப்படுத்திய வழக்கு தொடர்பாக கருணாசிடம் விசாரணை நடத்துவதற்காக நெல்லை போலீசார் சென்னை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  #KarunasMLA #KarunasHospitalized
    கருணாஸ் உள்பட 4 எம்.எல்.ஏ.க்கள் மீதும் கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு அரசு கொறடா ராஜேந்திரன் சிபாரிசு கடிதம் கொடுத்துள்ளார். இதையடுத்து 4 எம்.எல்.ஏ.க்களிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் தனபால் முடிவு செய்துள்ளார். #Dhanapal #Karunas
    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் அணிக்கு ஆதரவாக 18 எம்.எல்.ஏ.க்கள் செயல்பட்டு வந்தனர்.

    அவர்கள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக கவர்னரிடம் கடிதம் கொடுத்ததால் சபாநாயகர் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    இதை எதிர்த்து அவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். முதலில் 2 நீதிபதிகள் விசாரித்த இந்த வழக்கில் இருவரும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் 3-வது நீதிபதியான எம்.சத்திய நாராயணன் விசாரித்தார்.

    இதில் இருதரப்பு வாதங்களும் முடிந்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதன் தீர்ப்பு இன்னும் வெளிவராத நிலையில் கருணாஸ், ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 4 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடிவு செய்து உள்ளார்.

    கருணாஸ் எம்.எல்.ஏ. முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பைச் சேர்ந்தவர். சட்டசபை தேர்தலில் திருவாடானை தொகுதியில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

    இதேபோல் மற்ற 3 எம்.எல்.ஏ.க்களில் பிரபு கள்ளக்குறிச்சி தொகுதியிலும், ரத்தினசபாபதி அறந்தாங்கியிலும், கலைச்செல்வன் விருத்தாசலம் தொகுதியிலும் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்.

    இந்த 3 எம்.எல்.ஏ.க்களும் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள்.

    கருணாஸ் எம்.எல்.ஏ. சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் தனது அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசினார். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தாக்கிப் பேசினார். கூவத்தூர் ரகசியங்களை வெளியிடுவேன் என்றும் மிரட்டல் விடுத்தார்.

    இதில் கைதாகி விடுதலையான பின்பு மீண்டும் தாக்கிப் பேசினார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக பேனர் வைத்த முதல்வர், துணை முதல்வர் மீது ஏன் வழக்கு போடவில்லை. இது பற்றி நீதிமன்றம் வழியாக நடவடிக்கை எடுப்பேன் என்றும் கருணாஸ் கூறினார்.

    முதல்-அமைச்சருக்கு எதிராக கருணாஸ் தொடர்ந்து கூறி வருவது கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல் என்று அ.தி.மு.க. கருதுகிறது. இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றவர் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் கருணாஸ் எம்.எல்.ஏ. சசிகலாவையும், தினகரனையும் ரகசியமாக சந்தித்து பேசியுள்ளார். இந்த தகவலும் ஆதாரமாக அரசு தரப்பில் திரட்டப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான பிரபு, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள்.

    தினகரன் நடத்திய ஆலோசனை கூட்டங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டு முதல்- அமைச்சருக்கு எதிராக பேசி வருகிறார்கள். இதனால் இந்த 3 எம்.எல்.ஏ.க்கள் மீதும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக கருணாஸ் உள்பட 4 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்ட கூட்டங்கள், பேச்சுக்கள் தொடர்பான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன.


    அவர்கள் மீதான நடவடிக்கை தொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சபாநாயகர் தனபாலுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்கள்.

    அதன் பிறகு சபாநாயகர் தனபால் தனது அலுவலகத்தில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன், சட்டசபை செயலாளர் கே.சீனிவாசன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

    தொடர்ந்து மூத்த அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் சபாநாயகருடன் ஆலோசனை நடத்தினர். இதில் அரசு கொறடா ராஜேந்திரனும் கலந்து கொண்டார். இரவு வரை இந்த ஆலோசனை நடந்தது.

    அதன் பிறகு 4 எம்.எல்.ஏ.க்கள் மீதும் கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு அரசு கொறடா ராஜேந்திரன் சிபாரிசு கடிதம் கொடுத்தார். அத்துடன் 4 எம்.எல்.ஏ.க்களின் கட்சி விரோத நடவடிக்கைகளுக்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்தார்.

    இதையடுத்து 4 எம்.எல்.ஏ.க்களிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் தனபால் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாகவே அவர் அட்வகேட் ஜெனரலுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். விரைவில் 4 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. அதற்கு விளக்கம் அளிக்க எம்.எல்.ஏ.க்களுக்கு அவகாசம் அளிக்கப்படும்.

    தங்கள் செயலுக்கு 4 பேரும் வருத்தம் தெரிவித்து பதில் கடிதம் அனுப்பினாலோ அல்லது சபாநாயகரை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தாலோ அது ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது, மன்னிப்பு அளிக்கப்படும்.

    இதில் பதில் அளிக்க மேலும் கால அவகாசம் கேட்கலாம். அதுவரை சபாநாயகர் பொறுத்து இருப்பார். ஆனால் அவர்கள் பதில் அளிக்காமல் காலம் கடத்தினாலோ, தங்கள் செயலை நியாயப்படுத்தினாலோ 4 பேர் மீதும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு அதிகாரம் உண்டு. இதனால் எம்.எல்.ஏ. பதவி பறிபோகும் வாய்ப்பு உள்ளது.

    ஏற்கனவே 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கின் தீர்ப்பு நிலுவையில் உள்ள நிலையில் மேலும் 4 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதனால் அ.தி.மு.க.வின் பலம் மேலும் குறைகிறது.

    தமிழக சட்டசபையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 234 ஆகும். இதில் அ.தி.மு.க.வின் பலம் 134 ஆக இருந்தது. அ.தி.மு.க. வசம் இருந்த ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றார். திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் மரணம் அடைந்ததாலும், 18 எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவல் தடை சட்டத்தில் நீக்கப்பட்டதாலும் அ.தி.மு.க.வின் பலம் 114 ஆக குறைந்தது.

    இந்த நிலையில் மேலும் 4 எம்.எல்.ஏ.க்களை நீக்கினால் அ.தி.மு.க. பலம் 110 ஆக குறைய வாய்ப்பு உள்ளது.

    தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை கருணாநிதி மறைவால் 88 ஆக உள்ளது. காங்கிரஸ் வசம் 8 எம்.எல்.ஏ.க்களும், முஸ்லிம் லீக் வசம் ஒரு எம்.எல்.ஏ.வும் உள்ளனர். இதனால் தி.மு.க. அணியின் பலம் 97 ஆக உள்ளது.

    இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி (மனித நேய ஜன நாயக கட்சி), தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை) ஆகியோர் அ.தி.மு.க. பக்கம் உள்ளனர். #ADMK #Dhanapal #ADMKMLAs #Karunas
    எம்.எல்.ஏ. கருணாஸ் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சபாநாயகர் தனபாலுடன், சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். #Karunas
    சென்னை:

    சமீபத்தில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வரை அவதூறாக பேசியதாக எம்.எல்.ஏ. கருணாஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கருணாஸ் தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

    கருணாசின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில், அவர் எம்.எல்.ஏ.வாக நீடிக்க வேண்டுமா? என பலரும் கேள்வி எழுப்புவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில், அதிமுக கட்சியின் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. பதவியில் உள்ள கருணாஸ் முதல்வரை அவதூறாக பேசியது குறித்து நடவடிக்கை எடுக்க சபாநாயகர் தனபாலுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



    சபாநாயகர் தனபாலுடன் தற்போது சட்டத்துறை மந்திரி சி.வி.சண்முகம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் ஆலோசனை செய்துள்ளனர்.

    இதுகுறித்து கருணாசுக்கு விரைவில் பதிலளிக்கப்படும் எனவும், அதன் பிறகு அவர் மீதான நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, எம்.எல்.ஏ. கருணாசின் பதவி தப்புமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    அதே சமயம், கூவத்தூர் ரகசியங்களை தலைமை நீதிபதியிடம் தெரிவிக்க தயார் என கருணாஸ் கூறிவரும் நிலையில், ஒருவேளை அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் விரைவில் கூவத்தூர் ரகசியம் குறித்து அவர் வெளியிடும் சூழல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. #Karunas
    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் வடசென்னை படம், சீனாவின் பிங்யோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. #VadaChennai #Dhanush
    வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் `வடசென்னை'. 

    வெற்றிமாறன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தனுஷ் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் நடித்துள்ளனர். இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், ராதா ரவி, சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மூன்று பாகங்களாக உருவாகும் வடசென்னை படத்தின் முதல் பாகத்திற்கான புரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் வெளியான டீசர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



    சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வருகிற அக்டோபர் 17-ஆம் தேதி படம் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த நிலையில், சீனாவில் நடைபெற உள்ள பிங்யோ சர்வதேச திரைப்பட விழாவில் வட சென்னை படம் திரையிடப்பட இருக்கிறது. பிங்யோ சர்வதேச திரைப்பட விழா வருகிற 11-ஆம் தேதி துவங்கி 20-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. #VadaChennai #Dhanush

    இரண்டு வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்ததையடுத்து வேலூர் சிறையில் இருந்து இன்று காலை கருணாஸ் எம்எல்ஏ வெளியே வந்தார். #KarunasMLA #IPLCase #KarunasCase
    வேலூர்:

    நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ., நுங்கம்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த 16-ந்தேதி பேசிய பேச்சுக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை கமி‌ஷனர் அரவிந்தன் ஆகியோரை மிரட்டும் வகையிலும் அவதூறு பரப்பும் வகையிலும் பேசிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட கருணாஸ் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த வழக்கில் வழக்கில் ஜாமீன் கேட்டு கருணாஸ் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் கருணாசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கருணாசுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.



    இதற்கிடையே கடந்த ஏப்ரல் 10ம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின்போது கருணாஸ் மீது திருவல்லிக்கேணி போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்திருந்தனர். அந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எனவே அந்த வழக்கிலும் ஜாமீன் கோரி கருணாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை நேற்று பரிசீலித்த எழும்பூர் நீதிமன்றம் கருணாசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் 30 நாட்களும் தவறாமல் தொடர்ந்து கையெழுத்திட வேண்டும் என எம்.எல்.ஏ. கருணாசுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.

    இந்த ஜாமீன் உத்தரவு நகல் வேலூர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து சிறை நடைமுறைகள் முடிந்து, கருணாஸ் எம்எல்ஏ இன்று காலை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

    வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தன் மீதான வழக்குகளில் உண்மை நின்றது, நீதி வென்றது என்றார்.

    ஸ்டெர்லைட் விவகாரத்தில் கருத்து தெரிவித்ததால் தன் மீது பொய்வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், இதுபோன்று ஆயிரம் வழக்குகள் போட்டாலும் அதை எதிர்கொள்வேன் என்றும் கூறினார். #KarunasMLA #IPLCase #KarunasCase
    ஐபிஎல் போட்டியின்போது ரசிகர்களை தாக்கிய வழக்கில் எம்.எல்.ஏ. கருணாசுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. #Karunas
    சென்னை:

    நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ., நுங்கம்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த 16-ந்தேதி பேசிய பேச்சுக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை கமி‌ஷனர் அரவிந்தன் ஆகியோரை மிரட்டும் வகையிலும் அவதூறு பரப்பும் வகையிலும் பேசிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட கருணாஸ் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த வழக்கில் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் மனு தாக்கல் செய்தனர். ஆனால் போலீஸ் காவலுக்கு நீதிபதி அனுமதி அளிக்கவில்லை. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட கருணாஸ் மீண்டும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் நுங்கம்பாக்கம் போலீசார் போட்ட வழக்கில் ஜாமீன் கேட்டு கருணாஸ் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது கருணாசுக்கு எழும்பூர் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

    நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கருணாசுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

    இருப்பினும் கருணாஸ் உடனடியாக ஜாமீனில் வெளிவருவதற்கு ஐ.பி.எல். வழக்கு தடையாக உள்ளது. ஐ.பி.எல். போட்டியின்போது வன்முறையை தூண்டியதாக திருவல்லிக்கேணி  போலீஸ் நிலையத்தில் கருணாஸ் மீது 2 வழக்குகள் போடப்பட்டுள்ளன.

    அந்த வழக்குகளில் ஜாமீன் வழங்குவது குறித்து இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் எம்.எல்.ஏ. கருணாசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் 30 நாட்களும் தவறாமல் தொடர்ந்து கையெழுத்திட வேண்டும் என எம்.எல்.ஏ. கருணாசுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. #Karunas
    முதமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரியை மிரட்டும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட கருணாஸ் எம்எல்ஏ இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். #Karunas #HighCourt
    சென்னை:

    முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நடத்தி வரும் காமெடி நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. கடந்த 16-ந்தேதி நுங்கம்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சுக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.நகர் துணை கமி‌ஷனர் அரவிந்தன் ஆகியோரை மிரட்டும் வகையில் பேசிய கருணாஸ், நாடார் சமுதாயத்தினர் பற்றியும் பிரிவினையை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.

    இதனை தொடர்ந்து கடந்த 20-ந்தேதி கருணாஸ் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது உள்ளிட்ட 8 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து கருணாஸ் தப்பி ஓடியதாக தகவல் பரவியது. ஆனால் அவரோ தனது வீட்டில் வைத்து ஹாயாக பேட்டி அளித்தார். நான் எங்கும் ஓடவில்லை. தப்பி ஓடிவிட்டதாக போலீஸ் அவதூறு பரப்புகிறது என்று சாடினார்.

    இதையடுத்து கருணாசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன. கருணாசின் பேச்சுக்கள் பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் இருந்த போதிலும் அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குவது போல் காணப்பட்டதால் கடும் விமர்சனங்களும் எழுந்தன.

    இந்த நிலையில் 3 நாட்களாக அமைதி காத்த போலீசார் கடந்த 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தங்களது அதிரடியை காட்டினர். சாலிகிராமத்தில் உள்ள கருணாசின் வீட்டுக்குள் அதிகாலை 5.30 மணி அளவில் புகுந்த உதவி கமி‌ஷனர் முத்துவேல் பாண்டி தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர். முதலில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

    கருணாசின் பேச்சுக்கள் வன்முறையை தூண்டும் வகையில் அமைந்திருந்ததால் அதன் பின்னணி குறித்து முழுமையாக விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர். இதற்காக எழும்பூர் கோர்ட்டில் நுங்கம்பாக்கம் போலீசார் மனுதாக்கல் செய்தனர். அதில் கருணாசை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரினர். இதன் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.

    அப்போது கருணாசை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டது. அத்துடன் அவரது ஜாமீன் மனுவுடன், காவல்துறையின் மனுவும் விசாரிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.



    அதன்படி கருணாசை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக. வேலூர் சிறையில் இருந்து காலை 9 மணி அளவில் அவரை அழைத்துக் கொண்டு போலீசார் சென்னை புறப்பட்டனர். மதியம் 12.30 மணியளவில் கருணாசை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது, கருணாசின் ஜாமீன் மனுவுடன், போலீசாரின் மனுவும் சேர்த்து விசாரிக்கப்பட்டது.

    அப்போது கருணாசை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் வாதிட்டார். இதற்கு காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

    முக்குலத்தோர் புலிப்படையினர் கொலை செய்யவும் தயங்கக் கூடாது. பிக்னிக் செல்வது போல ஜெயிலுக்கு சென்று வரவேண்டும். வழக்கு செலவை நான் பார்த்துக் கொள்வேன் என்று கூறினார். தினமும் மதுவுக்காக மட்டும் ரூ.1 லட்சம் செலவு செய்கிறேன் என்று கருணாஸ் கூறி இருந்தார். இது தொடர்பாக கருணாசிடம் உரிய விசாரணை நடத்தப்பட உள்ளது.

    முதல்-அமைச்சர் எடப்பாடியை மிரட்டும் வகையில் கருணாஸ் பேசியதன் பின்னணியில் யாரும் உள்ளனரா? துணை கமி‌ஷனர் அரவிந்தனை பார்த்து சட்டையை கழட்டி விட்டு என்னோடு நேருக்கு நேர் மோதுவதற்கு தயாரா? என்று கேள்வி கேட்கும் அளவுக்கு அவரோடு என்ன பிரச்சினை? என்பது பற்றியும் கருணாசிடம் விசாரணை நடைபெற உள்ளது.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் திடீரென அரசியல் பிரவேசம் செய்த கருணாஸ், ஜெயலலிதாவின் தயவால், திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு தமிழக அரசியல் களத்தில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. கருணாசின் நடவடிக்கைகளும் தமிழக அரசுக்கு எதிராக இருந்தன. அதன் காரணமாகவே கருணாசின் பேச்சுக்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

    இதனால் கருணாசின் பேச்சின் பின்னணியில் அரசியல் சதி திட்டம் ஏதும் உள்ளதா? என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. யாரோ ஒருவர் கருணாசை இயக்குவதாகவும் கூறப்படுகிறது. அவர் யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்படுகிறது.

    கருணாசை காவலில் எடுத்து நடத்தப்படும் விசாரணையை வாக்கு மூலமாக பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். போலீஸ் காவலில் அவர் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணையை தொடரவும் போலீசார் திட்டமிட் டுள்ளனர். எனவே கருணாசின் போலீஸ் காவல் முடியும் போது, அவரது பின்னணியில் செயல்படுபவர்கள் யார்-யார்? என்பது தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கருணாசின் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருக்கும் தாமோதர கிருஷ்ணனையும் போலீசார் தேடி வருகிறார்கள். அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. தாமோதர கிருஷ்ணன் இருக்கும் இடம் கருணாசுக்கு எப்படியும் தெரியும் என்று போலீசார் கருதுகிறார்கள். எனவே கருணாசை வைத்து அவரை பிடிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

    போலீசாரின் இது போன்ற தீவிர நடவடிக்கைகளால் கருணாஸ் ஆதரவாளர்கள் மீதான பிடி மேலும் இறுகியுள்ளது. #Karunas #HighCourt
    திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ. கருணாசை போல பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும் சிறைக்கு செல்வார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #MinisterJayakumar
    அடையாறு:

    சென்னை மயிலாப்பூர் சாந்தோம் பள்ளியில் லயன்ஸ் கிளப் சார்பில் ஆசிரியர் தினவிழா நேற்று நடைபெற்றது. நடராஜ் எம்.எல்.ஏ., ஜெயவர்தன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலாப்பூர் தொகுதியில் உள்ள சிறந்த பள்ளி ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பரிசுகளை வழங்கினார்.

    நிகழ்ச்சிக்கு முன்னதாக அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். கருணாஸ் பேசியவிதம் சமூகங்களை தூண்டுகின்ற வகையில், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துகின்ற வகையில் அமைந்திருந்தது. இதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. தன் கடமை, பொறுப்புகளை மறந்து இவ்வாறு பேசியிருப்பதால், அவர் சட்டமன்ற உறுப்பினராக தொடர வேண்டுமா? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

    இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், மதக்கலவரம், ஜாதி கலவரம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணங்களிலும் செயல்படுபவர்கள் அனைவருக்கும் மாமியார் வீடு ஜெயில் தான். கடுமையான வழக்குகள் போடப்பட்டுள்ள நிலையில், நிச்சயமாக எச்.ராஜா அவற்றுக்கு பதிலளிக்க வேண்டும். சிறைக்கு சென்றவர்கள் வரிசையில் எச்.ராஜாவும் இருப்பார்.

    எங்களுடைய ஆட்சி அடிமை ஆட்சி என்று கூறுவது முற்றிலும் தவறானது, எங்கள் ஆட்சி ஒரு சுதந்திரமான ஆட்சி. எங்களுடைய தனித்தன்மையை எந்த நிலையிலும் இழப்பதாக இல்லை. கொத்தடிமையாக இருப்பது தி.மு.க.வுக்கு வேண்டுமானால் வழக்கமாக இருக்கலாம். எங்களை பொறுத்தவரை அரசுகளுக்கு இடையேயான ஒரு இணக்கமான போக்கு இருக்கிறதே தவிர, கட்சிகளுக்குள் எந்தவிதமான இணக்கமும் இல்லை.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா சென்னையில் நடைபெறுவதால் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் டி.டி.வி.தினகரன் பெயரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் ஸ்டாலின் பெயரும் அழைப்பிதழில் போட்டுள்ளோம். இதுபோன்ற மரபு தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பின்பற்றப்படவில்லை. அவர்கள் நிகழ்ச்சிக்கு வருவதும், வராததும் அவர்களின் விருப்பம்.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterJayakumar

    வேலூர் ஜெயிலில் கருணாசை சந்திக்க சென்ற தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. #Karunas
    வேலூர்:

    முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நடத்தி வரும் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. கடந்த 16-ந்தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது முதல்மைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தி.நகர் துணை கமி‌ஷனர் அரவிந்தன் ஆகியோரை மிரட்டும் வகையில் கருணாஸ் பேசினார். நாடார் சமுதாயம் பற்றியும் அவர் விமர்சித்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்த நுங்கம்பாக்கம் போலீசார் அவரை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    வேலூர் ஜெயிலில் நீதி மன்ற காவலில் அடைக்கப்படும் கைதிகளுக்கான பிரிவில் தனி அறையில் கருணாஸ் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பக்கத்து அறைகளிலும் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.அவரது மனைவி கிரேஸ் நேற்று சந்தித்து பேசினார்.

    இந்த நிலையில் தினகரன் அணியில் உள்ள தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் என்.பார்த்திபன், பாலசுப்பிரமணி, ஜெயந்திபத்மநாபன் ஆகியோர் இன்று காலை ஜெயிலுக்கு கருணாசை சந்திக்க சென்றனர்.

    திங்கள், புதன், வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் மட்டுமே அனுமதி பெற்று கைதிகளை சந்திக்க முடியும். மற்ற நாட்களில் சந்திக்க அனுமதி கிடையாது எனக்கூறிய சிறைக்காவலர்கள் 3 பேருக்கும் அனுமதி மறுத்தனர்.

    ஆனால் அவர்கள் ஜெயில் சூப்பிரண்டை சந்திக்க வேண்டும். உடனே பார்க்க வேண்டுமென கூறியதாக தெரிகிறது. அங்கு சூப்பிரண்டு இல்லை எனக் கூறியதையடுத்து அவர்கள் புறப்பட்டு சென்றனர்.

    இது குறித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கூறுகையில்:-

    சிறைவிதிகள் படி இன்று யாரையும் பார்க்க முடியாது என கூறினர். ஜெயில் சூப்பிரண்டை பார்க்க முயற்சி செய்தோம். அவர் அங்கு இல்லை. நாங்கள் வக்கீல் என்பதால் முறைப்படி கருணாசை சந்தித்து பேசுவோம் என்றனர். #karunas
    நடிகர் கருணாசை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி காவல்துறை அளித்த மனு எழும்பூர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. #Karunas #KarunasCustody
    சென்னை:

    தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக நடிகரும் எம்எல்ஏவுமான கருணாசை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். யூடியூப்பில் வெளியான வீடியோவை ஆதாரமாக கொண்டு 8 பிரிவுகளின் கீழ் கருணாஸ் மீது வழக்குகள் பதியப்பட்டு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.


     
    இதையடுத்து அவருக்கு ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கருணாஸ் செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு  ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு 26ம் தேதி (நாளை) விசாரணைக்கு வரும் என ஏற்கனவே தகவல் வெளியானது.

    இந்நிலையில், கருணாசை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி காவல்துறை தரப்பில் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை பரிசீலித்த நீதிபதி, கருணாசின் ஜாமீன் மனுவுடன் சேர்த்து நாளை இந்த மனுவையும் விசாரிப்பதாக தெரிவித்தனர்.  #Karunas #KarunasCustody
     
    தனது ஆதரவாளர்கள் அருந்தும் மதுவுக்கு மட்டும் தினமும் ரூ.1 லட்சம் செலவு செய்வதாக கருணாஸ் கூறியிருப்பதால் அவரது பின்னணியில் இருப்பவர்கள் குறித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். #Karunas
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, போலீஸ் துணை கமி‌ஷனர் அரவிந்தன் ஆகியோரை மிரட்டும் வகையில் பேசிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நடத்தி வரும் கருணாஸ், கடந்த 16-ந்தேதி நுங்கம்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சுக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின.

    இது தொடர்பான வீடியோ பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. துணை கமி‌ஷனர் அரவிந்தன் தனது சட்டையை கழற்றி விட்டு என்னோடு நேருக்கு நேர் மோதுவதற்கு தயாரா? என்று கேள்வி எழுப்பிய கருணாஸ், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியே என்னை பார்த்து பயப்படுகிறார் என்றும் கூறினார்.

    நாடார் சமுதாயத்தை அவமதிக்கும் வகையிலும் அவரது பேச்சுக்கள் அமைந்திருந்தன. முக்குலத்தோர் புலிப்படையை சேர்ந்தவர்கள் கொலை செய்யவும் தயங்கக்கூடாது. பிக்னிக் செல்வது போல ஜெயிலுக்கு சென்று வாருங்கள். வழக்கு செலவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன். மதுவுக்காக மட்டுமே ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் செலவாகிறது என்றும் பேசினார்.

    இதனை தொடர்ந்தே நேற்று முன்தினம் அதிகாலையில் கருணாஸ் கைது செய்யப்பட்டார்.

    முதலில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட கருணாஸ், அடுத்த சில மணி நேரங்களிலேயே வேலூர் சிறைக்கு அதிரடியாக மாற்றப்பட்டார். பாதுகாப்பு காரணங்களால் அவர் இடமாற்றம் செய்யபட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் கருணாசை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.

    இதன்படி எழும்பூர் கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீது இன்று விசாரணை நடத்தப்படுகிறது. அப்போது கருணாசை கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிடுவார். இதன் பின்னர் குறிப்பிட்ட நாளில் கோர்ட்டில் ஆஜராகும் அவரை போலீசார் காவலில் எடுக்க உள்ளனர்.


    கருணாஸ் பேசிய பேச்சுக்களை அடிப்படையாக வைத்தே போலீஸ் காவலில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட உள்ளது. கருணாஸ் தனது பேச்சில் தினமும் மதுவுக்காக ரூ.1 லட்சம் செலவு செய்வதாக கூறியுள்ளார். இந்த பணம் எப்படி வருகிறது? எந்த அடிப்படையில் யாருக்கெல்லாம் செலவு செய்கிறீர்கள் என்பது போன்ற கேள்விகளை போலீசார் கேட்க உள்ளனர்.

    தி.நகர் துணை கமி‌ஷனராக இருக்கும் அரவிந்தன் பற்றி கருணாஸ் பேசியதும் கடும் விவாதப் பொருளானது. எதற்காக கருணாஸ் அப்படி பேசினார்? அவருடன் அப்படி என்ன பிரச்சனை? என்பது போன்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

    இது தொடர்பாகவும் போலீஸ் காவலில் கருணாசிடம் கேள்வி எழுப்பப்படுகிறது. அதே நேரத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாகவும் விளக்கம் கேட்கப்படுகிறது.

    கருணாஸ் பேசிய பேச்சுக்கள், அவராகவே பேசியதா? என்கிற சந்தேகமும் போலீசுக்கு ஏற்பட்டுள்ளது.

    இதன் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

    கருணாசின் அமைப்பான முக்குலத்தோர் புலிப்படையில் முக்கிய நிர்வாகியாக இருக்கும் தாமோதர கிருஷ்ணன் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். அவர் எங்கு இருக்கிறார்? என்பது பற்றியும் கருணாசிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. கருணாசை காவலில் எடுக்கும் போது, தாமோதர கிருஷ்ணன் இருக்கும் இடத்தை கண்டு பிடிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். #Karunas

    கருணாஸ் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைதும் செய்த காவல்துறை எச்.ராஜாவையும், எஸ்.வி.சேகரையும் கைது செய்ய தயங்குவது ஏன்? என அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #Karunas #HRaja
    சென்னை:

    சென்னையில் அரசியல் தலைவர்கள் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது:-



    ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் 1 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது. இந்த உண்மை வெளியே வந்ததால் மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் காங்கிரசை தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறார்.

    கருணாஸ் எம்.எல்.ஏ. ஒரு சமுதாயத்தை குறிப்பிட்டு பேசியது கண்டனத்துக்குரியது. அவரை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். ஆனால் இதைவிட மோசமாக விமர்சனம் செய்த எஸ்.வி. சேகர், எச்.ராஜாவை கைது செய்யவில்லை. அவர்கள் இருவரும் போலீஸ் பாதுகாப்புடன் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

    இதற்கு காரணம் தமிழக அரசு பா.ஜனதாவின் அடிமை அரசாக இருப்பது தான். அ.தி.மு.க. அரசு தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காக எதிர்கட்சிகளை எதிர்த்து போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது.

    இது மக்களை ஏமாற்றும் நாடகம் இதை மக்கள் ஏற்கமாட்டார்கள்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-



    ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயிலில் இருக்கும் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் கவர்னருக்கு இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்த பிறகும் கவர்னர் காலம் தாழ்த்துவது திட்டமிட்ட உள்நோக்கம் கொண்டது. இதுதொடர்பாக விரைவில் கவர்னரை சந்திக்க முடிவு செய்துள்ளோம்.

    கருணாஸ் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைதும் செய்த காவல்துறை எச்.ராஜாவையும், எஸ்.வி.சேகரையும் கைது செய்ய தயங்குவது ஏன்? என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

    இதன்மூலம் ஜாதி மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்திய அளவில் சனாதன பயங்கரவாதம் அதிகரித்து வருகிறது. இதை முறியடித்து தேசத்தை காக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து டிசம்பர் 10-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் சார்பில் திருச்சியில் தேசம் காப்போம் என்ற பெயரில் மாநாடு நடக்கிறது.

    அதில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி:-



    7 தமிழர்கள் விடுதலை வி‌ஷயத்தை சட்டத்தின் அடிப்படையில் இல்லாமல், கருணைகண் கொண்டு பார்க்க வேண்டும். அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கும், கவர்னருக்கும் உள்ளதாக சுப்ரீம் கோர்டு கூறியுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

    இலங்கை தமிழர்கள் படுகொலை விவகாரத்தில் காங்கிரஸ், தி.மு.க.வுக்கு தொடர்பு இருப்பதாக அ.தி.மு.க. போராட்டம் அறிவித்துள்ளது. இது இப்போதுதான் தெரிந்ததா? நாங்கள் ஏற்கனவே பலமுறை இதுபற்றி தெளிவாக சொல்லி இருக்கிறோம். 7 தமிழர்களையும் விடுதலை செய்ய அரசு முன்வர வேண்டும்.

    கருணாஸ் எம்.எல்.ஏ. பேசியது தவறுதான். அவர் வருத்தம் தெரிவித்த பிறகும் கைது செய்து இருக்கிறார்கள். அதன்படி பார்த்தால் எச்.ராஜாவையும், எஸ்.வி.சேகரையும் ஏன் கைது செய்யவில்லை.

    சட்டம் அனைவருக்கும் சமம் என்பது கேள்விக்குறியாகிவிட்டது.

    த.மா.கா. துணைத் தலைவர் ஞானதேசிகன் கூறும்போது, ‘‘7 தமிழர்கள் விடுதலை விவகாரத்தில், 4 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். அவர்கள் ராஜீவை கொல்வதற்காக திட்டம்போட்டு வந்தவர்கள். பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 3 பேர் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள். சந்தர்ப்ப வசத்தால் சிக்கியவர்கள். அவர்கள் 3 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #Karunas #HRaja
    ×