search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருணாஸ்"

    வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கருணாசை அவரது மனைவி கிரேஸ் இன்று சந்தித்து பேசினார். ஒருமணி நேர சந்திப்பை தொடர்ந்து கிரேஸ் புறப்பட்டு சென்றார். #Karunas
    வேலூர்:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் காவல்துறையினரை அவதூறாக பேசிய நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ், கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

    கருணாசை அவரது மனைவி கிரேஸ் இன்று ஜெயிலில் சந்தித்தார்.

    ஒருமணி நேர சந்திப்பை தொடர்ந்து கிரேஸ் புறப்பட்டு சென்றார். #Karunas

    நடிகர் கருணாஸ் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். #Opanneerselvam #karunas
    உத்தமபாளையம்:

    தேனி அருகே உத்தமபாளையம் அடுத்த சுருளி அருவியில் சாரல் விழா நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் நிருபர்கள் நடிகர் கருணாஸ் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அவர் கூறுகையில், எந்த ஒரு தனி நபரும் எந்த ஒரு சமுதாயத்தைப் பற்றியும் இழிவாக பேசக்கூடாது. அது யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். டி.டி.வி. தினகரன் தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுவதில் இருந்தே அவரது குணாதிசயங்களை தெரிந்து கொள்ளலாம் என்றார்.

    பின்னர் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    அந்த சமயத்தில் சீர்மரபினர் மக்களுக்கு அரசியல் அமைப்பு சட்டத்தில் அங்கீகாரம் வழங்க வேண்டும். நல வாரிய திட்டங்களை செயல்படுத்தக் கோரி அந்த அமைப்பின் மாநில பொறுப்பாளர் தவமணி அம்மாள் தலைமையில் துணை முதல்வரிடம் மனு கொடுக்க வந்தனர். ஆனால் போலீசார் 3 பேருக்கு மட்டுமே மனு வழங்க அனுமதி கொடுத்தனர். இதனால் சீர் மரபினர் ஆத்திரமடைந்தனர்.

    விழா முடிந்ததும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களின் கார்கள் புறப்பட்டது. உடனே சீர்மரபினர் ஓ.பி.எஸ். காரை முற்றுகையிட்டனர். அதோடு நடுரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர்.

    ஓ.பி.எஸ். காரை முற்றுகையிட்டு அவருக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பிய சீர்மரபினர்

    எங்கள் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று கோ‌ஷம் போட்டனர். உஷாரான போலீசார் சீர்மரபினரை சமரசப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #Opanneerselvam #karunas
    புழலில் இருந்து வேலூர் சிறைக்கு கருணாஸ் மாற்றப்பட்டது ஏன் என்பது பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. #PuzhalJail #Karunas
    சென்னை:

    முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நடத்தி வரும் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. கடந்த 16-ந்தேதி நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தி.நகர் துணை கமி‌ஷனர் அரவிந்தன் ஆகியோரை மிரட்டும் வகையில் கருணாஸ் பேசினார். நாடார் சமுதாயம் பற்றியும் அவர் விமர்சித்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து கருணாஸ் மீது வழக்குப் பதிவு செய்த நுங்கம்பாக்கம் போலீசார் நேற்று அதிகாலையில் அவரை கைது செய்தனர். பின்னர் எழும்பூரில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட கருணாஸ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறிது நேரத்திலேயே கருணாசை வேலூர் சிறைக்கு அதிரடியாக மாற்றி சிறை நிர்வாகம் உத்தரவிட்டது.

    இதனையடுத்து புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட கருணாஸ், வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். பாதுகாப்பு காரணங்களுக்காகவே அவர் மாற்றப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    புழலில் இருந்து வேலூர் சிறைக்கு கருணாஸ் மாற்றப்பட்டது ஏன் என்பது பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

    நடிகர் கருணாஸ் சினிமா மற்றும் அரசியல் துறைகளை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு நெருக்கமானவர்கள் அவரை அடிக்கடி சென்று சந்திப்பார்கள்.

    புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால் இந்த சந்திப்பு தொடர்ச்சியாகி கொண்டே இருக்கும் என்றே கூறப்பட்டது. இதனை தொடர்ந்தே கருணாஸ் வேலூர் ஜெயிலுக்கு மாற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #PuzhalJail #Karunas
    கருணாசுக்கு ஒரு சட்டம், எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டமா? என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். #MKStalin #Karunas #HRaja

    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுகள் எந்தச் சூழ்நிலையிலும் வரம்பு மீறும் வகையில் இருக்கக் கூடாது என்பதிலும்; பொது அமைதியையும், நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பெருமளவுக்கு இருக்கிறது என்பதிலும்; இரு வேறு கருத்துகளுக்கு இடமே இல்லை.

    ஆனால் அதே நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், தான் தெரிவித்த கருத்துக்கு வெளிப்படையாக வருத்தம் தெரிவித்த பிறகும், அவரை வேண்டுமென்றே கைது செய்திருப்பது, தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி, “ஆளுக்கொரு நீதி வேளைக்கொரு நியாயம்” என்ற நிலையில்தான் அமல்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகிறது.

    தந்தை பெரியார் சிலையை உடைப்பேன் என்றும், உயர் நீதிமன்றத்தையும், தமிழ்நாடு காவல்துறையையும் ஒட்டு மொத்தமாக மிகவும் கேவலமாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்ததாலும், இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களின் இல்லத் தரசிகளைப் பற்றி அநாகரிகமான முறையில் பேசியதாலும், பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டும், இதுவரை பா.ஜ.க. தேசியச் செயலாளர் எச்.ராஜா கைது செய்யப்படவில்லை.

    அவர் காவல்துறைக்கே, காவல்துறையைக் கட்டுப்படுத்தும் தமிழக அரசுக்கே சவால் விடும் வகையில் “நான் தலை மறைவாகவில்லை” என்று மேடைதோறும் பேசி, அதற்கு காவல்துறை அதிகாரிகளே பாதுகாப்பு வழங்கி வருவது என்னவகை நியாயம் என்று புரியவில்லை.

    அதேபோல், பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து மிகவும் இழிவான கருத்துகளை வெளியிட்ட எஸ்.வி.சேகரின் முன் ஜாமின் மனு உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டு, உச்சநீதி மன்றமே கைது செய்ய தடை விதிக்க மறுத்தும் கூட, அவரை அ.தி.மு.க அரசு கைது செய்யத் தயக்கம் காட்டுவது, என்ன வகை அணுகுமுறை என்றும் விளங்கவில்லை.

     


    ஆகவே, கருணாசுக்கு ஒரு சட்டம், எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டம் என்ற அ.தி.மு.க அரசின் பாகுபாடான போக்கு மிகவும் அநீதியானது, கண்டிக்கத்தக்கது.

    ஒரு போலீஸ் அதிகாரியை விமர்சித்தது குற்றம் என்றால், ஒட்டுமொத்த காவல்துறையையும், உயர் நீதிமன்றத்தையும் மிக மோசமாக விமர்சித்த எச். ராஜாவை கைது செய்யா ததைப் பார்க்கும்போது, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கிய “கூவத்தூர் மர்மமும் ரகசியமும்” வெளிச்சத்துக்கு வந்து விடக் கூடாது; தமிழ்மக்களின் ஏச்சையும் பேச்சையும் இதிலாவது தவிர்க்க வேண்டும்; என்ற காரணத்திற்காகவே கருணாசை கைது செய்திருக்கிறார்கள் என்றே கருதுகிறேன்.

    உலை வாயை மூடும் அற்ப எண்ணம் இதுவாகும். அ.தி.மு.க அரசில் “சட்டத்தின் ஆட்சி” குரங்குகையில் கிடைத்த பூ மாலை போல், சிதறிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பதைக் கண்டு, பொதுமக்கள் வெட்கித் தலைகுனிகிறார்கள்! எனவே, கைது செய்ய வேண்டியவர்களை, அவர்களுடைய பின்னணியைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தாமதிக் காமல் கைது செய்ய வேண்டும்; விடுவிக்க வேண்டியவர்களை உடனே விடுவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    கருணாஸ் பேச்சு ஒருதுளி கூட ஏற்புடையதல்ல என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #Karunas #PonRadhakrishnan

    விருதுநகர்:

    பா.ஜனதா கட்சியின் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ராஜபாளையத்தில் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் எம்.பி. மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடிகர் கருணாஸ் பேச்சு ஒரு துளி கூட ஏற்புடையதல்ல. அவரது பேச்சு அவரை சார்ந்தவர்களின் உணர்வை தூண்டி விட்டு கலவரத்தை ஏற்படுத்துமானால் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டவர்கள் மீது சட்டம் தன் கடமையை செய்யும்.

    சாதி, இனம், மதம், மொழி ஆகிய உணர்வுகளை தூண்டி விடும் வகையில், பேசும் நிலைமாற வேண்டும். குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்ததை வரவேற்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வரம்பு மீறி யார் பேசினாலும் தவறுதான். கருணாஸ் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #Karunas #TamilisaiSoundararajan

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    பா.ஜனதா தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவில் சிலை திருட்டு அதிகமாக நடைபெறுவதால் போலியான சிலையை வழிபடுகிறோமோ என பக்தர்களிடம் கேள்வி எழுந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கோவிலை விட்டு வெளியேற வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.

    முதல்வர் முதல் கடைநிலை ஊழியர் வரை யார் வரம்பு மீறி பேசினாலும் அது தவறுதான். கருணாஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எச்.ராஜா, தனது மீதான புகாரை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொள்வார்.

    விநாயகர் சிலையை வைத்து அரசியல் செய்கிறார்கள். தி.மு.க.விற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். இன்று தொடங்கும் பிரதமரின் மக்களுக்கான காப்பீடு திட்டத்தில் தமிழக அரசும் இணைந்ததற்கு நன்றி.


    இவ்வாறு அவர் கூறினார்.

    ராஜபாளையத்தில் நேற்று இரவு நடைபெற்ற மத்திய அரசின் சாதனை விளக்க கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

    தமிழகத்தில் ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாமல் நாம் செயல்படுகிறோம். தமிழகத்தில் கூட்டணியும் கிடையாது. யாருடைய துணையும் கிடையாது. மாநில, மாவட்ட நிர்வாகிகள் முழுமையாக சுற்றுபயணம் செய்யவில்லையென்றால் தமிழகத்தில் பா.ஜனதாவை எப்படி வளர்க்க முடியும்?

    வருங்காலத்தில் பா.ஜனதா இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலமையை உருவாக்க வேண்டும். தமிழகத்தில் தேர்தல் பணிகளை ஆரம்பிக்க வேண்டும். வாக்குச்சாவடி தோறும் இளைஞர்களை நியமிக்க வேண்டும்.

    நமக்கு கொடுத்த பொறுப்பை உணர்ந்து பணியாற்றினால் பா.ஜனதா பலம் பெறும். இப்போதே நம்மை நோக்கி தமிழக அரசு நகர்ந்து வருகிறது. மோடி ஆட்சியை அகற்றுவோம் என தி.மு.க. கூறி வருகிறது.

    இந்தியாவில் 21 மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி செய்கிறது. மோடி கொண்டு வந்த திட்டங்களை மக்களிடம் எடுத்து சென்றால் போதும். தமிழகத்தில் மிகப் பலம் வாய்ந்த கட்சியாக பா.ஜனதாவை மாற்றுவோம். சட்டமன்ற பொறுப்பாளர்கள் முழுமையாக பணியாற்ற வேண்டும்.

    இதுவரை 35 சதவீதம் தான் பணியாற்றி உள்ளோம். மாவட்ட நிர்வாகிகள் அங்கீகாரத்தை பெற வேண்டும். திராவிட கட்சிக்கு எதிராக பணியாற்ற வேண்டும். தி.மு.க., அ.தி.மு.க.வை அசைக்கக் கூட முடியவில்லை. பிறகு எப்படி மோடியை அசைக்க முடியும்?

    எனக்கு செல்போனில் பல வகையில் மிரட்டல் வருகிறது. பா.ஜனதாவை தமிழகத்தில் அரியணையில் ஏற்றாமல் என் உயிர் போகாது. தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்.

    இவ்வாறு அவர் பேசினார். #Karunas #TamilisaiSoundararajan

    நடிகர் கருணாஸ் கைது செய்யப்பட்டது சட்டப்படி சரியான நடவடிக்கை என்று பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #LaGanesan #Karunas

    ராஜபாளையம்:

    பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் ராஜபாளையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நடிகர் கருணாஸ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது. இந்த தகவலை சபாநாயகருக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

    தமிழகத்தில் சாதி வெறி மங்கி வருகிறது. இந்த நிலையில் இப்படி கருணாஸ் பேசி இருப்பது ஏற்புடையதல்ல.


    நீதிமன்றங்கள் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது என ராகுல் காந்தி கூறியுள்ளது அவரது பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது. இது கடும் கண்டனத்திற்குரியது.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #LaGanesan #Karunas

    கருணாஸின் அவதூறு பேச்சுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என அமைச்சர் ஜெயக்குமார் இன்று கேள்வி எழுப்பியுள்ளார். #MKStalin #Jayakumar #Karunas
    சென்னை:

    அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    என்னை அரிச்சந்திரன் என கூறிய கருணாஸுக்கு நன்றி. சாதி ரீதியாக பேசிய கருணாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது பேச்சுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், திமுக தலைவரான ஸ்டாலின் இன்னும் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?.

    ஊழல் குறித்து பேச திமுக, காங்கிரசுக்கு தகுதி இல்லை. ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தடையாக இருக்கிறது. ஸ்டாலின் அதனை கண்டிக்காதது ஏன்?. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது மூடப்பட்டதுதான். திறக்கப்படும் என்ற பேச்சுக்கு இடமே இல்லை. 
    எச்.ராஜா- கருணாஸ் பொது இடங்களில் பேசும்போது வரம்பை கடைபிடிக்க வேண்டும் என்று ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். #gkvasan #hraja #karunas
    திருச்சி:

    திருச்சியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் திருச்சி வந்தார். அவரை திருச்சி விமான நிலையத்தில் மாவட்ட தலைவர்கள் நந்தா செந்தில்வேல், ரவீந்திரன் குணா, மற்றும் மாவட்ட பொருளாளர் கே.டி.தனபால் த.மா.நிர்வாகிகள் அய்யப்பன் மற்றும் பலர் வரவேற்றனர். அதன் பிறகு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது :-

    தேர்தல் நேரத்தின் போது பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க முடியாது என தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. தேர்தல் ஆணையத்தால் பணம் பட்டு வாடாவை தடுக்க முடியாது என்றால் தேர்தல் ஆணையத்தை விட அதிகாரம் படைத்த ஒரு அமைப்பை உருவாக்கி பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கலாம். 

    தமிழக அமைச்சர்கள் மீது கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டை அமைச்சர்கள் சந்தித்து அதில் நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிருபிக்க வேண்டும். இல்லையென்றால் அமைச்சர்கள் தவறு செய்தது போல் ஆகிவிடும். 

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 


    தொடர்ந்து ஜி.கே.வாசனிடம் எஸ்.வி.சேகர், எச்.ராஜாவை தொடர்ந்து கருணாஸ் எம்.எல்.ஏ. பேசிய பேச்சும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதே என நிருபர்கள் கேட்டனர். அதற்கு ஜி.கே.வாசன் கருத்து தெரிவிப்பவர்கள், பேசுபவர்கள் யாராக இருந்தாலும் பொது இடங்களில் பேசும் போது வரம்பை மீறி பேசக்கூடாது.

    இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார். #gkvasan #hraja #karunas
    ஜாதிகளை மறக்கும் இந்த நேரத்தில் என்னைப் பொறுத்தவரை அதை விளையாட்டாக கூட பயன்படுத்தக்கூடாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவன தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கருணாஸ் என்ன பேசினார் என்று எனக்கு தெரியாது. ஜாதிகளை மறக்கும் இந்த நேரத்தில் என்னைப் பொறுத்தவரை அதை விளையாட்டாக கூட பயன்படுத்தக்கூடாது. கருணாஸ் அதற்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதிலும் ஒரு நியாயம் இருக்கிறது.



    ஜாதியைப் பற்றி பேசும் காலம் முடிந்து விட்டது. என்னைப் பொருத்தவரை அதைப்பற்றி பேசவே கூடாது.

    எந்த தேர்தலாக இருந்தாலும் ஆயத்தம் இல்லாமல் எதையும் செய்யக் கூடாது என்ற நம்பிக்கை உள்ளவன் நான். அது உள்ளாட்சி தேர்தலாக இருந்தாலும் சரி, பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி. ஆயத்தம் இல்லாமல் செய்யக்கூடாது என்பதால் தான் எங்களுடைய பயிலரங்க தேதியை மாற்றி இருக்கிறேன்.

    உள்ளாட்சி தேர்தல் வரும்போது அதைப் பற்றி பேசலாம். இவர்கள் நடத்தும் தேர்தலை வேடிக்கையாகத் தான் பார்க்க வேண்டும்.

    நான் மக்களை சந்திக்க கிராமங்களுக்கு சென்றேன். அங்கு நாங்கள் நடத்தும் கூட்டத்துக்கு அனுமதி எளிதாக கிடைக்கவில்லை. அதனால் இடங்கள் மாற்றப்பட்டது.

    மேடை அமைக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. ஆனாலும் மக்கள் திரளாக கலந்து கொண்டனர். மக்கள் சந்தோ‌ஷமாகவும், ஆச்சரியமாகவும் இருந்தார்கள்.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கதையை ‘அயர்ன் லேடி’ என்ற பெயரில் அவருக்கு மரியாதை செய்யும் வகையில் கட்சியினர் படமாக எடுக்கிறார்கள்.

    ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் 13 பேர் குண்டு பாய்ந்துதான் இறந்துள்ளனர். அதைத்தான் நாம் கேள்வி கேட்க வேண்டும். அதை விட்டுவிட்டு தொண்டு நிறுவனங்களுக்கு பண்டு வந்ததா? செண்டு வந்ததா? என்று கேட்டுக் கொண்டிருக்க முடியாது. குற்றத்திற்கு மன்னிப்பு கோர வேண்டிய நேரத்தில் குற்றத்தை மக்கள் பக்கமே திருப்பக்கூடாது.

    ஊழலை ஒழிப்பது என்பதை ஆதாரங்களுடன் கையும் களவுமாக பிடிக்க வேண்டும். அதுதான் ஒரே வழி. ஆனால் ஊழல் செய்பவர்கள் சாதுர்யமாக செய்வதால் ஆதாரங்களை திரட்டுவது கஷ்டமாக இருக்கிறது. ஊழலை ஒழிக்க முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் முயன்று கொண்டே இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    கருணாசின் எம்.எல்.ஏ. பதவியை பறித்து கடுமையான சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். #PuthiyaTamilagam #Krishnasamy #Karunas
    கரூர்:

    புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கரூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேவேந்திர குல வேளாளர்கள் 6 பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். எனவே தேவேந்திர குல வேளாளர் என்று ஒரே பெயரில் அழைக்க அரசாணை வெளியிட வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.

    மேலும் எஸ்.சி. பட்டியலில் இருந்து தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை இதர பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 6-ந்தேதி திருச்சி உழவர் சந்தையில் மாநாடு நடத்தப்படுகிறது. தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பெயரை அறிவிக்கும் முழு அதிகாரம் தமிழக அரசின் கையில் உள்ளது.

    இந்திய அளவில் வேலை வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும் திறன் இல்லாததால் வேலை வாய்ப்புகளை நிரப்ப முடியவில்லை. ஆண்டுக்கு 5 லட்சம் என்ஜினீயர்கள் படிப்பை முடிக்கிறார்கள். ஆனால் அதில் 10 சதவீதம் பேர் மட்டுமே திறன் உள்ளவர்கள் வெளியே வருகிறார்கள். மருத்துவம் போன்று நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு நடத்துவதில் எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால் 2, 3 வருடங்கள் அவகாசம் அளிக்க வேண்டும்.


    திறன் பயிற்சிக்கு மத்திய மாநில அரசுகள் நிதி ஒதுக்கினாலும் அதனை வெளியில் இருந்து நடத்தி வருகிறார்கள். பள்ளி-கல்லூரி கல்வியிலேயே திறன் வளர்ப்பு கல்வியை போதிக்க வேண்டும்.

    எச்.ராஜா விவகாரமானது உடனடியாக கைது செய்வதும், பின்னர் கைது செய்வதும் வழக்கின் தன்மையை பொறுத்து உள்ளது. கருத்துரிமைக்கும் எல்லை, வரம்பு, நாகரீகம் உள்ளது. முதல்வர் -காவல் துறை பற்றி நடிகர் கருணாஸ் பேசியதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். எம்.எல்.ஏ. பதவியை பறிக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது. எனவே கருணாசின் எம்.எல்.ஏ. பதவியை பறித்து கடுமையான சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PuthiyaTamilagam #Krishnasamy #Karunas
    யாரும், யாரையும் அவமரியாதையாக பேச வேண்டிய அவசியம் இல்லை என்று கருணாஸின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #Karunas
    பீளமேடு:

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 2 நாட்களாக சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பேசினார். மேலும் கல்லூரி மாணவர்கள், தொழில்துறையினருடன் கலந்துரையாடினார்.

    நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு கோவையில் இருந்து இன்று சென்னை செல்வதற்காக பீளமேடு விமானநிலையத்துக்கு வந்த கமல்ஹாசனிடம் நடிகர் கருணாஸ் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து நிருபர்கள் கேட்டனர்.


    அதற்கு பதில் அளித்து பேசிய கமல்ஹாசன், இன்னும் அந்த பேச்சை கேட்கவில்லை. அதற்கு முன்னர் அதுகுறித்து பேசுவது நியாயமாக இருக்காது. இருப்பினும் யாரும், யாரையும் அவமரியாதையாக பேச வேண்டிய அவசியம் இல்லை என்று பதில் அளித்தார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #Karunas
    ×