search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 104120"

    ஐபிஎல் 2019 சீசன் இந்தியாவில்தான் நடைபெறும், மார்ச் 23-ல் போட்டி தொடங்கும் என்று நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 11 சீசன் வெற்றிகரமான முடிவடைந்துள்ளன. 12-வது சீசன் வரும் மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், இந்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால் தொடர் தென்ஆப்பிரிக்காவிற்கு மாற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. 2009-ம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது ஐபிஎல் தொடர் தென்ஆப்பிரிக்காவிலும், 2014-ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சிலும் நடத்தப்பட்டது.

    இந்த முறை இந்தியாவிலேயே நடத்த பிசிசிஐ முயற்சி செய்து வந்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக்குழுவின் தலைவரான வினோத் ராய் டெல்லியில் முக்கிய அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பேச்சுவார்த்தையில் ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் 23-ந்தேதி தொடங்குகிறது. போட்டி அட்டவணை விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
    ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைத்த இந்திய அணிக்கும், கேப்டன் விராட் கோலிக்கும் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2-1 எனக் கைப்பற்றியது. இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதன்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளது. அத்துடன் முதல் ஆசிய அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

    சாதனைப் படைத்த இந்திய அணிக்கு பாகிஸ்தானுக்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்தவரும், தற்போதைய பாகிஸ்தான் பிரதமரும் ஆன இம்ரான் கான் டுவிட்டர் மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘துணைக் கண்டத்தைச் சேர்ந்த ஒரு அணி ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. இதற்காக விராட் கோலிக்கும், இந்திய அணிக்கும் வாழ்த்துக்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.
    சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா காயத்தால் அவதிப்பட்டார் என்ற ரவி சாஸ்திரியின் பேச்சு, பெரும் புயலை கிளப்பியது. அதற்கு பிசிசிஐ முற்றுப்புள்ளி வைத்தது. #AUSvIND #BCCI
    ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் வெற்றி பெற்றது. உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

    பெர்த் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் தேர்வு முறைகளை முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர், சஞ்சய் மஞ்ச்ரேக்கர் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்தனர். இந்திய அணி பிரதான சுழற்பந்து வீச்சாளர் இன்றி 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இறங்கியது தவறு என்று கூறிய அவர்கள், அஸ்வின் காயம் அடைந்த நிலையில் ஜடேஜாவை அணியில் சேர்த்திருக்க வேண்டும் என்று குற்றம்சாட்டினர். இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றதையும் சுட்டிக்காட்டினர்.

    இந்நிலையில் அணித்தேர்வு தொடர்பான சலசலப்புகளுக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நேற்று விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு குறை சொல்வதும், விமர்சிப்பதும் எளிது. அவர்களின் கருத்துகள் மிக தொலைவில் இருக்கிறது. ஏனெனில் நாங்கள் இப்போது புவியின் தென்துருவத்தில் இருக்கிறோம். எங்களை பொறுத்தவரை, அணியின் நலனுக்கு எது சிறந்ததோ அதை செய்கிறோம் அவ்வளவுதான்.

    அஸ்வின் காயத்தில் சிக்கிய நிலையில் பெர்த் டெஸ்டில் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவை சேர்த்து இருக்கலாம் என்று சொல்கிறீர்கள். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அப்போது ரவீந்திர ஜடேஜா உடற்தகுதியுடன் இல்லை. தோள்பட்டை வலியால் அவதிப்பட்ட அவருக்கு ஆஸ்திரேலியா வந்து இறங்கியதும் 4 நாட்களுக்கு ஊசி போடப்பட்டது.

    இந்தியாவில் இருந்தபோதே தோள்பட்டையில் கொஞ்சம் ‘பிடிப்பு’ இருப்பதை அவர் உணர்ந்திருந்தார். மருந்தினை ஊசி மூலம் உடலில் செலுத்தினாலும், காயம் சரியாவதற்கு நாங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதல் நாட்கள் ஆகிவிட்டது.

    பெர்த் டெஸ்டின்போது அவர் 70 முதல் 80 சதவீதம் வரை உடல்தகுதியுடன் இருப்பதாக உணர்ந்தோம். அதனால் அந்த டெஸ்டில் நாங்கள் ‘ரிஸ்க்’ எடுக்க விரும்பவில்லை. ஆனால் இங்கு (மெல்போர்ன்) 80 சதவீதம் உடல்தகுதியுடன் இருந்தால் கூட அவரை களம் இறக்குவோம்’’ என்றார்.

    ரவீந்திர ஜடேஜா இந்தியாவில் இருந்து கிளம்பும் போதே காயத்தில்தான் இருந்தார் என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வெளிப்படுத்திய தகவல் புதுவித சர்ச்சையை கிளப்பியது.

    காயமடைந்த வீரரை முக்கியமான இந்த தொடருக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வு குழுவினர் எப்படி தேர்வு செய்தார்கள்? அதற்கு என்ன அவசியம் ஏற்பட்டது? காயத்துடன் இருந்தால் பெர்த் டெஸ்டில் எப்படி பீல்டிங் செய்ய அனுமதிக்கப்பட்டார்? விராட் கோலி, ஏன் ஜடேஜா குறித்து நாங்கள் யோசிக்கவே இல்லை, நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன்தான் களம் இறங்க முடிவு செய்தோம் என்று கூறினார்? என ரவி சாஸ்திரியின் பதில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.



    இதற்கிடையில் இந்தியாவில் இருந்து புறப்படும்போது ஜடேஜா உடற்தகுதியுடன்தான் இருந்தார் என சவுராஷ்டிரா அணியின் பயிற்சியாளர் தெரிவித்தார். இதனால் இந்த விவகாரம் பெரிய புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் பிசிசிஐ, ஜடேஜா உடற்தகுதியுடன் இந்தியாவில் இருந்து சென்றார் என்று விளக்கம் அளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

    இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘நவம்பர் 12-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடந்த ரஞ்சி கிரிக்கெட்டில் பங்கேற்ற ஜடேஜா எந்தவித காயப் பிரச்சினையும் இன்றி 64 ஓவர்கள் பந்து வீசினார். அதைத் தொடர்ந்தே ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணிக்கு தேர்வானார்.

    சிட்னியில் நடந்த பயிற்சி கிரிக்கெட்டின்போது அவருக்கு இடது தோள்பட்டையில் பிரச்சனை ஏற்பட்டது. ஊசி போட்டு ஓய்வு கொடுத்த நிலையில் அவரது தோள்பட்டையில் தொடர்ந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இப்போது 3-வது டெஸ்டில் விளையாட தயார் நிலையில் இருக்கிறார்’’ என்று கூறப்பட்டுள்ளது.
    கடந்த 2016-ம் ஆண்டில் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான வரி சலுகையாக 160 கோடி ரூபாயை பிசிசிஐ தரவேண்டும் என ஐசிசி நெருக்கடி கொடுத்து வருகிறது. #BCCI #ICC #T20
    மும்பை:

    இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்தப் போட்டி தொடரில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) இந்திய கிரிக்கெட் வாரியம் வரி சலுகை தரவேண்டும் என்று கோரியது.

    இதுதொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் சிங்கப்பூரில் நடந்த ஐ.சி.சி. கூட்டத்தில் வரி சலுகை தொகை விரைவில் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதுவரை அந்த தொகை வழங்கப்படவில்லை.



    இந்நிலையில், வரி சலுகை தொகையான ரூ.160 கோடியை வரும் 30-ம் தேதிக்குள் இந்திய கிரிக்கெட் வாரியம் செலுத்த வேண்டும் என்று ஐ.சி.சி. உத்தரவிட்டு உள்ளது.

    அப்படி செலுத்தாத பட்சத்தில் நடப்பாண்டில் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வழங்கப்படும் வருவாயில் கழித்துக் கொள்ளப்படும் என்று ஐ.சி.சி. கூறியுள்ளது. மேலும் இந்தியாவில் 2021-ம் ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2023-ம் ஆண்டு நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர்கள் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது. #BCCI #ICC #T20
    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கேரி கிர்ஸ்டன் தேர்வு செய்யப்படாததற்கு ஐபிஎல்-தான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.
    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவார் இருந்து வந்தார். வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின்போது இவருக்கும், மிதாலி ராஜ்-க்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் பிசிசிஐ-யில் புகார் அளித்தனர்.

    இதனால் பிசிசிஐ ரமேஷ் பவாரின் பதவியை நீட்டிப்பு செய்யவில்லை. புது பயிற்சியாளரை தேர்வு செய்ய முடிவு செய்தது. தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விரும்புவோர் விண்ணப்பம் செய்யலாம் என விளம்பரம் செய்தது. மேலும், பயிற்சியாளர் பதவிக்கு தகுதியான நபர்களை பரிந்துரை செய்ய கபில்தேவ், அன்ஷூமான் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோரை கொண்ட இடைக்கால தேர்வு கமிட்டியை நியமனம் செய்தது.

    இவர்கள் நேற்று 10-க்கும் மேற்பட்டோரை நேர்காணல் செய்தனர். இதில் கேரி கிர்ஸ்டன், டபிள்யூ.வி. ராமன் மற்றும் வெங்கடேஷ் பிரசாத் ஆகியோரை பரிந்துரை செய்தனர். இதில் கேரி கிர்ஸ்டன்தான் முன்னணியில் இருந்தார். ஆனால் டபிள்யூ.வி. ராமன் தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டார்.

    கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்படாததற்கு ஐபிஎல் தொடர்தான் காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் பேட்ஸ்மேனான கேரி கிர்ஸ்டன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். பிசிசிஐ-யின் விதிப்படி பிசிசிஐ கட்டுப்பாட்டிற்குள் உள்ள ஒரு அமைப்பில் சம்பளம் வாங்கும் நபர், இன்னொரு அமைப்பில் சம்பளம் வாங்க முடியாது.



    இது ‘இரட்டை ஆதாயம்’ வரைமுறைக்குள் வரும். கேரி கிர்ஸ்டன் ஆர்சிபி-யின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக விரும்பாததால் பெண்கள் கிரிக்கெட் அணிக்கான தலைமை பயிற்சியாளர் பதவியை இழந்துள்ளார்.

    இளையோர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டிற்கும் இதே பிரச்சனை ஏற்பட்டதால், ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கேரி கிர்ஸ்டன் தலைமை பயிற்சியாளராக இருக்கும்போது இந்தியா 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக டபிள்யூ.வி. ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். #BCCI #WVRaman
    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் மும்பையில் இன்று நடந்தது. இந்த பதவிக்கு கிர்ஸ்டன், கிப்ஸ், ரமேஷ் பவார், வெங்கடேஷ் பிரசாத் உள்பட 10 பேர்களுக்கிடையே போட்டி நிலவியது. இறுதியில் கிர்ஸ்டன், வெங்கடேஷ் பிரசாத் மற்றும் டபிள்யூ.வி. ராமன் ஆகிய மூன்று பேரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. இதில் டபிள்யூ.வி. ராமன் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    முன்னதாக, வெஸ்ட்இண்டீஸில் கடந்த மாதம் நடந்த பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோற்று வெளியேறியது. அரையிறுதி ஆட்டத்தில் சீனியர் வீராங்கனையான மிதாலி ராஜிக்கு ஆடும் லெவன் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது சர்ச்சையாக வெடித்தது.

    இந்திய பெண்கள் அணியின் பயிற்சியாளர் ரமேஷ் பவார் தன்னை பலமுறை அவமதித்ததாக மிதாலி ராஜ் புகார் தெரிவித்தார். அதேநேரத்தில் தொடக்க வீராங்கனையாக தன்னை இறக்காவிட்டால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று மிதாலி ராஜ் மிரட்டியதாகவும், அவர் தனிப்பட்ட சாதனைக்கே முன்னுரிமை கொடுப்பதாகவும் ரமேஷ்பவார் குற்றம் சாட்டினார்.

    ரமேஷ் பவாரை பயிற்சியாளர் பதவியில் நீட்டிக்கக்கூடாது என்று மிதாலியும், ரமேஷ் பவாரை பயிற்சியாளராக தொடர செய்ய வேண்டும் என்று வீராங்கனைகள் ஹர்மன்பிரீத் சிங், மந்தனா ஆகியோரும் வற்புறுத்தினார்கள். இந்த சர்ச்சையால் ரமேஷ் பவாரின் இடைக்கால பயிற்சியாளர் ஒப்பந்தத்தை நீட்டிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்து விட்டது.

    இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான டயானா எடுல்ஜி மறைமுகமாக ரமேஷ் பவாருக்கு ஆதரவு தெரிவித்தார். வீராங்கனைகள் தேர்வு குறித்து அணி நிர்வாகம் எடுக்கும் முடிவில் நாங்கள் தலையிட முடியாது என்று டயானா எடுல்ஜி கூறினார்.

    அத்துடன் கேப்டன் விராட் கோலியின் வேண்டுகோளின்படி இந்திய ஆண்கள் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம் செய்யப்பட்டதுபோல் இந்திய பெண்கள் அணிக்கும் பயிற்சியாளரை நியமனம் செய்தால் என்ன? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

    இந்த நிலையில் இந்திய பெண்கள் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதையடுத்து வெளிநாட்டினர் உள்பட 28 பேர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தனர். விண்ணப்பித்தவர்களில் இருந்து தகுதியான 10 பேருக்கு நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



    அந்த இறுதி பட்டியலில் கேரி கிர்ஸ்டன், கிப்ஸ் (இருவரும் தென்ஆப்பிரிக்கா), இடைக்கால பயிற்சியாளராக இருந்த ரமேஷ் பவார், டபிள்யூ.வி. ராமன், வெங்கடேஷ் பிரசாத், மனோஜ் பிரபாகர் (4 பேரும் இந்தியா), டிரென்ட் ஜான்ஸ்டன் (அயர்லாந்து) மார்க் கோலெஸ், மாஸ்கரனாஸ் (இருவரும் இங்கிலாந்து), பிராட் ஹாக் (ஆஸ்திரேலியா) ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

    புதிய பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியால் நியமிக்கப்பட்ட இடைக்கால தேர்வு கமிட்டியினர் கபில்தேவ், அன்ஷூமான் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோர் இறுதிபட்டியலில் இடம் பிடித்துள்ள 10 பேரிடமும் நேர்காணல் நடத்தினார்கள்.
    டோனி உள்ளூர் கிரிக்கெட் தொடரில் கட்டாயம் விளையாட வேண்டும் என்று முன்னாள் ஆல்ரவுண்டரும், தேர்வாளரும் ஆன அமர்நாத் தெரிவித்துள்ளார். #MSDhoni
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்எஸ் டோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றபின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வந்தார். தற்போது டி20-க்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

    ஏற்கனவே, பார்ம் இன்றி தவித்து வரும் டோனி, ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடினால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பை தொடரில் அவர் இடம்பிடிக்க வேண்டுமென்றால், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகின்றார்கள்.



    மேலும், டோனி உள்ளூர் தொடர்களில் விளையாடினால்தான் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்கொடுக்க வேண்டும் என்ற கருத்தும் நிலவி வருகிறது. இந்நிலையில் முன்னாள் ஆல்ரவுண்டரும், தேர்வாளரும் ஆன மொகிந்தர் அமர்நாத், டோனி கட்டாயம் உள்ளூர் தொடரில் விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மொகிந்தர் அமர்நாத் கூறுகையில் ‘‘ஒவ்வொரு தனிநபர்களும் வித்தியாசமானவர்கள். ஆனால், இந்தியாவிற்காக விளையாட வேண்டும் என்று விரும்பினால், அவர்களின் மாநில அணிக்காக விளையாட வேண்டும். இது தொடர்பான கொள்கைகளை பிசிசிஐ முற்றிலும் மாற்ற வேண்டும். ஏராளமான மூத்த வீரர்கள் உள்ளூர் தொடர்களில் விளையாடுவதில்லை’’ என்றார்.
    உள்ளூர் தொடர்களில் எம்எஸ் டோனி, தவான் ஏன் விளையாடவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். #MSDhoni #Gavaskar
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. தற்போதைய நிலையில் டோனி ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடும் நிலையில் உள்ளார். இதனால் அதிக நேரம் ஓய்வு கிடைக்கிறது. தற்போது தவான் டெஸ்ட் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். இதனால் அவரும் தற்போது ஓய்வில் இருக்கிறார்.

    இந்தியாவின் உள்ளூர் முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இருவரும் விளையாடவில்லை. இந்நிலையில் எம்எஸ் டோனி மற்றும் தவான் ஏன் உள்ளூர் தொடர்களில் விளையாடவில்லை என்று பிசிசிஐ-க்கு கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘ நீங்கள் ஏன் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை? என்று நாம் ஏன் கேட்கக்கூடாது. உண்மையிலேயே பிசிசிஐயிடம், சர்வதேச போட்டிகளில் அவர்கள் இடம்பெறாத நிலையில் உள்ளூர் தொடர்களை புறக்கணிக்க ஏன் அனுமதி கொடுத்தீர்கள் என்று பிசிசிஐ மற்றும் தேர்வாளர்களிடம் நாம் கேள்வி கேட்க வேண்டும்.

    டோனி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டி20 தொடரில் விளையாடவில்லை. அதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடவில்லை. தற்போது தொடங்க இருக்கும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் விளையாடப்போவதில்லை.



    இதனால் அக்டோபரில் இருந்து அவர் விளையாடவில்லை. ஜனவரியில்தான் ஒருநாள் தொடர் நடைபெற இருக்கிறது. இதனால் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் சரியாக விளையாடவில்லை என்றால், உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவர் பெயர் இடம்பிடிக்க, பல்வேறு கேள்விகள் எழுப்பப்படும்.

    உங்களுக்கு வயது ஆகஆக, உங்களுடைய ஆட்டத்திற்கு இடையே இடைவெளி ஏற்பட்டால், ஆட்டத்திறன் மெதுவாக குறைய ஆரம்பிக்கும். நீங்கள் உள்ளூர் தொடரில் எந்தவொரு பார்மில் விளையாடினாலும், நீண்ட இன்னிங்ஸ் விளையாட வாய்ப்பு கிடைக்கும். இது சிறந்த பயிற்சியாக அமையும்’’ என்றார்.
    மும்பை வீரர்களுக்கு எதிராக மிகப்பெரிய ஓரவஞ்சனை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தேசிய தேர்வுக்குழு மீது கவாஸ்கர் கடுமையாக தாக்கியுள்ளார். #Gavaskar
    இந்திய தேசிய அணியில் சமீப காலமாக மும்பையைச் சேர்ந்த வீரர்களுக்கு இடம் கிடைப்பதில்லை. தேசிய தேர்வுக்குழு மிகப்பெரிய ஓரவஞ்சனை செய்கிறது என்று முன்னாள் இந்திய அணி கேப்டனும், தற்போதைய வர்ணனையாளரும் ஆன கவாஸ்கர் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘மும்பையைச் சேர்ந்த சித்தேஷ் லாட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த போதிலும், இந்தியா ஏ அணியில் கூட இடம் கிடைக்கவில்லை. மும்பை வீரர்களுக்கு எதிராக மிகப்பெரிய ஓரவஞ்சனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    ஒரு தொடரில் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட புதுமுக வீரர்கள் மற்ற மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்படுகிறார்கள். அமோல் முசும்தார் முதல்தர கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். ஆனால் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அதேபோல் சித்தேஷ் லாட்டிற்கு நடக்காது என்று நம்புகிறேன்.

    ஆனால், இதுவரை இந்திய அணியில் இடம்கிடைக்கவில்லை. இது சித்தேஷ் லாட்டிற்கு மட்டுமல்ல, கிரிக்கெட் கிரிக்கெட் இதுபோன்ற ஓரவஞ்சனை மற்றும் முட்டாள் தனமான முடிவுகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டாவது இது மாறுமா? நாம் பொறுத்திருந்து பார்ப்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு டெஸ்ட் போட்டிகள் முடிந்த பின்னர் இந்தியா தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. #ICCTestRankings
    ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) தரவரிசைப் பட்டியலில் இந்திய டெஸ்ட் அணி 116 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. இங்கிலாந்து (108 புள்ளி) 2-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா (106) 3-வது இடத்திலும், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா (தலா 102 புள்ளி) 4-வது மற்றும் 5-வது இடங்களிலும் உள்ளன.

    டெஸ்ட் தரவரிசையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ‘நம்பர் 1’ இடத்தில் நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுடன் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.

    இந்திய அணி ‘நம்பர் 1’ இடத்தில் நீடிக்க வேண்டுமானால் குறைந்த பட்சம் ஒரு டெஸ்டில் ‘டிரா’ செய்தால் போதுமானது. இந்திய அணி டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றினால். 120 புள்ளிகளுடனும் முதல் இடத்திலும், ஆஸதிரேலியா 97 புள்ளியுடன் 5-வது இடத்திலும் நீடிக்கும்.



    ஆஸ்திரேலியா 4-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றினால், 110 புள்ளிகளுடன் ‘நம்பர் 1’ இடத்துக்கு முன்னேறும். இந்திய அணி 108 புள்ளியுடன் 3-வது இடத்துக்கு பின்தள்ளப்படும்.

    ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றினால் அந்த அணி 108 புள்ளிகளை பெறும். இந்திய அணி 109 புள்ளியுடன் இருக்கும். ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் வென்றால் 107 புள்ளிகளை பெறும். இந்தியா 111 புள்ளிகளுடன் இருக்கும்.
    பிசிசிஐ சிஇஓ ராகுல் ஜோரி மீதான செக்ஸ் குற்றச்சாட்டு பொய்காக ஜோடிக்கப்பட்டது, அவர் மீண்டும் பணி செய்யலாம் என விசாரணைக்குழு அறிவித்துள்ளது. #RahulJohri #MeToo
    வேலை பார்க்கும் இடங்களிலும், பிற இடங்களிலும் ஆண்களால் தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைகள் குறித்து சமீப காலமாக பெண்கள் தைரியமாக புகார் கூறி வந்தனர். சர்வதேச அளவில் ‘மிடூ’ என்ற பெயரில் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் கடந்த மாதம் இப்படிப்பட்ட புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன.

    பிசிசிஐ தலைமை செயல் அதிகாரியான ராகுல் ஜோரி அடையாளத்தை வெளியிட விரும்பாத பெண் ஒருவர் புகார் தெரிவித்திருந்தார். ராகுல் ஜோரியும், அவரும் வெவ்வேறு ஊடக நிறுவனங்களுக்கு வேலை செய்தபோது நிகழ்ந்த ஒரு சம்பவத்தைப் குறிப்பிட்டு இருந்தார். இந்த குற்றச்சாட்டை ராகுல் ஜோரி மறுத்திருந்தார்.

    இருந்தாலும் அவர் பதவி விலக வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. இதனால் ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ராகேஷ் சர்மா தலைமையிலான மூன்று பெண்கள் கொண்ட விசாரணைக்குழு கடந்த மாதம் 25-ந்தேதி அமைக்கப்பட்டது. 15 நாட்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக்குழு அறிவித்தது.

    மூன்று பேர் கொண்ட குழுவில் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ராகேஷ் ஷர்மா (தலைவர்), முன்னாள் டெல்லி மகளிர் ஆணையத் தலைவி பர்க்கா சிங், வழக்கறிஞரும், ஆர்வலரும் ஆன வீணா கவுடா ஆகிய மூன்று பேர் இடம்பிடித்திருந்தனர்.



    இந்த குழு இன்ற நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராயிடம் அறிக்கையை சமர்பித்தது. அந்த அறிக்கையை வினோத் ராய் வெளியிட்டார். அதில் இருவர், தவறான மற்றும் ஜோடிக்கப்பட்ட புகார், அவர் பணியை தொடர்ந்து தொடரலாம் என்று தெரிவித்திருந்தனர்.

    அதுவேளையில் வீணா கவுடா மட்டும், பாலின உணர்திறன் கவுன்சிலிங் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் ராகுல் ஜோரி மீது வழக்கு தொடர வேண்டும் என்பது குறித்தான கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இதனால் ராகுல் ஜோரி மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை எனத் தெரியவந்துள்ளது. #BCCI #RahulJohri
    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி இறுதிகட்ட அறிவுரையை வழங்கியுள்ளார். #AUSvIND
    இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுகிறது. வருகிற 21-ந்தேதி டி20 கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.

    இங்கிலாந்து தொடரில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்ட போதிலும் பேட்ஸ்மேன்கள் ஒருங்கிணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடரில் ஒருங்கிணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கேப்டன் விராட் கோலி பேட்ஸ்மேன்களுக்கு இறுதிகட்ட அறிவுரையை வழங்கியுள்ளார்.

    ஆஸ்திரேலியா தொடருக்கு புறப்படும் முன் விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறுகையில் ‘‘ஒரு தனி பேட்ஸ்மேன் என்றில்லாமல் அனைவரும் ஒருங்கிணைந்து எப்படி நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும் என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். வேகப்பந்து வீச்சு சூப்பராக உள்ளது. நீண்ட நாட்களாக அவர்கள் 20 விக்கெட்டுக்களை வீழ்த்தி திறமையை பெற்றிருக்கிறார்கள்.

    நாம் இங்கிலாந்து தொடரை பார்த்தோம் என்றால், லார்ட்ஸ் டெஸ்டை தவிர்த்து, மற்ற டெஸ்டில் வெற்றியை நெருங்கி வந்து அறுவடை செய்ய முடியாமல் போனது. தொடர் முழுவதும் சிறப்பாக பேட்டிங் செய்தோம். ஆனால், ஒரு அணியான நாம் பேட்டிங் செய்யவில்லை என்றால், கிழே விழுந்து தோல்வியடைந்து விடுவோம் என்ற மனநிலை உருவாகிவிடும்.



    நம்முடைய திட்டம் எப்போதுமே நடைபெறக்கூடிய தொடரை பற்றிதான் இருக்க வேண்டும். முடிந்துபோன தொடர் குறித்து பேசக்கூடாது. 2014-ல் நமக்கு கடினமான நேரமாக அமைந்தது. ஆனால் அதில் இருந்து நாம் சிறப்பாக வெளியே வந்தோம். அந்த நேரத்தில் என்னிடம் இருந்து சிறப்பான மாற்றம் தொடங்கியது. நாம் எப்போதுமே நிகழ்காலத்தில் நிலைக் கொண்டிருக்க முயற்சி செய்ய வேண்டும். ஏனென்றால் நாம் அனைவரும் திறமையானவர்கள். இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களை நாம் உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.
    ×