search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுவை"

    புதுவையில் ஓட்டு எண்ணிக்கைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் துறை தீவிரமாக இறங்கியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதிக்குள் அடங்கி உள்ள 23 சட்டசபை தொகுதிகளின் ஓட்டுகள் லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக், மகளிர் பாலிடெக்னிக் ஆகிய இரு இடங்களில் எண்ணப்படுகிறது.

    காரைக்கால் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 5 தொகுதிகளுக்கான ஓட்டுகளும், மாகியில் ஜவகர்லால் நேரு அரசு மேல்நிலைப்பள்ளி, ஏனாமில் மினி சிவில் ஸ்டே‌ஷனிலுள்ள கருத்தரங்கு கூடம் ஆகியவற்றில் தலா ஒரு தொகுதிகளுக்கான ஓட்டுகளும் எண்ணப்படுகிறது.

    தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக்கில் தனி அறையில் எண்ணப்படுகிறது.

    மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் மையங்களில் 15 இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    ஓட்டு எண்ணிக்கைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் துறை தீவிரமாக இறங்கியுள்ளது.

    ஓட்டு எண்ணிக்கை அறைகள், டேபிள்கள் அமைப்பது, விளக்கு வசதி உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 23-ந்தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுகளும் அடுத்து மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்படுகிறது.

    ஒவ்வொரு தொகுதியிலும் 5 விவிபாட் எந்திரங்களில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்படுகிறது. இதனால் ஓட்டு எண்ணிக்கை முடிவதற்கு 24 மணி நேரமாகும் என தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடும் வெயிலின் காரணமாகவும், ஓட்டு எண்ணிக்கை கால தாமதத்தை கருத்தில் கொண்டும், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் அறைகளில் முழுவதுமாக ஏ.சி. வசதி செய்ய தேர்தல் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக ஓட்டு எண்ணிக்கை அறைகளில் ஏ.சி. பொருத்தும் பணி நடந்து வருகிறது.

    ஓட்டு எண்ணிக்கையை மேற்பார்வையிடவும், முறைகேடுகளை தடுக்கவும் 12 பேர் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    புதுவையில் அதிக அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக எனக்கு கோப்புகள் வரவில்லை என்று கவர்னர் கிரண் பேடி கூறி உள்ளார்.
    புதுச்சேரி:

    டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என்றும் கவர்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் தீர்ப்பளித்திருந்தது.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு யூனியன் பிரதேசமான புதுவைக்கும் பொருந்தும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியிருந்தார்.

    ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம், கவர்னருக்கு தனி அதிகாரம் உள்ளதாக குறிப்பிட்டு ஒரு உத்தரவையும் பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலர் லட்சுமிநாராயணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இவ்வழக்கில் சென்னை ஐகோர்ட்டு, மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்தும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை உறுதி செய்தும் தீர்ப்பளித்தது.

    இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. ஜூன் 6-ந் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது.

    இதற்கிடையே காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் அனைத்து செயலர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி செயல்படுங்கள் என்றும், அவ்வாறு செயல்படாவிட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனால் கவர்னருக்கு எந்தவித கோப்பும் அனுப்பப்படவில்லை என தெரிகிறது.

    இந்த நிலையில் கவர்னர் கிரண் பேடி விதிகள் ஏதும் மாறாத நிலையில் தனக்கு கோப்புகள் ஏதும் வரவில்லை என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். கவர்னர் கிரண் பேடி தனது பதிவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை நிர்வாகி என்ற கடமையில் பொதுமக்களுக்கு சில கருத்துக்களை தெரிவிக்க வேண்டியுள்ளது. கடந்த சில நாட்களாக அரசு எந்த கோப்பையும் கவர்னர் மாளிகைக்கு அனுப்பவில்லை.

    புதுவை யூனியன் பிரதேச சட்டம், அலுவல் விதிகள், நிதி சட்டம் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை. இதுதொடர்பாக எந்த திருத்தமும் செய்யப்படாமல் அப்படியேதான் உள்ளது.

    இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    புதுவையில் 10 வாக்குச்சாவடிகளில் எந்திரங்களில் ஏற்பட்ட பழுதால் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. #Loksabhaelections2019

    புதுச்சேரி, ஏப். 18-

    புதுவை பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. ஒருசில வாககுச்சாவடிகளில் கட்சி களின் பூத் ஏஜெண்டுகள் கால தாமதமாக வந்ததால் அந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்க கால தாமதமானது.

    அதுபோல் சில வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு தொடங்க தாமதம் ஏற்பட்டது.

    புதுவை மி‌ஷன் வீதியில் உள்ள எக்கோலாங்கிளாஸ் பள்ளி வாக்குச்சாவடி, திரு.வி.க. பள்ளி வாக்குச் சாவடி, முத்தியால் பேட்டை ராஜா பள்ளி வாக்குச்சாவடி, பாகூர் அரசு பள்ளி வாக்குச்சாவடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் இந்த நிலை உருவானது.

    வாக்குச்சாவடி அதிகாரிகள் எந்திர கோளாறை சரிசெய்ய முயன்றும் இயலாததால் மாற்று எந்திரங்கள் வர வழைக்கப்பட்டு அதன் பிறகு வாக்குப்பதிவு தொடங்கியது.

    இதனால் இந்த வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்க சுமார் 45 நிமிடம் கால தாமதமானது. *** புதுச்சேரி, ஏப். 18-

    புதுவையில் இன்று காலை 7.15 மணிக்கு கவர்னர் கிரண்பேடி ராஜ் நிவாசில் இருந்து வாக்களிப்பதற்காக புதுவை சுகாதாரத்துறை அலுவலகத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்தார்.

    அவர் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக் களித்தார். அவருடன் கவர்னர் மாளிகை ஊழியர் களும் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

    இதனை வரிசையில் நின்றிருந்த வாக்காளர்கள் ஆச்சரியத்துடன் பார்த்த னர். வாக்களித்த பின்னர் கவர்னர் கிரண்பேடி நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    வாக்களிப்பது நமது கடைமை. இந்திய ஜன நாயகம் மிகவும் வலிமை யானது. தேர்தல் ஆணையம் பலகோடி ரூபாய் செலவு செய்து தேர்தலை நடத்து கிறது. இதனை நாம் வீணாக்க கூடாது.

    பொதுமக்கள் அனை வரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். வாக்களித்ததோடு நின்றுவிடாமல், ஆட்சி யாளர்கள் என்ன செய் கிறார்கள்? என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    முன்னதாக கவர்னர் கிரண்பேடி வரிசையில் நிற்கையில், நிருபர்கள் அவரை புகைப்படம் எடுத்து கொண்டிருந்தனர். அப்போது கிரண்பேடி தான் மூத்த குடிமகனாக இருந்தாலும் வரிசையில் நின்று வாக்களிப்பதையே விரும்புகிறேன். புதுவையில் முதல் முறையாக வாக்

    பாராளுமன்ற தேர்தலையொட்டி புதுவையில் இன்று மாலை முதல் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என்று மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். #LokSabhaElections2019 #Puducherry
    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்றம் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வருகிற 18-ந்தேதி நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.



    நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும் அரசியல் கட்சியினர் பணம் வினியோகம் செய்வதை கட்டுப்படுத்தவும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் இன்று மாலை 6 மணி முதல் வருகிற 19-ந்தேதி காலை 6 மணி வரை 4 நாட்கள் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 5-க்கும் மேற்பட்டோர் பொதுஇடங்களில் கும்பலாக நிற்கக்கூடாது. விளம்பர பதாகைகள், துண்டறிக்கைகள், ஆயுதம் போன்றவை வைத்திருக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #Puducherry


    புதுவை புதிய பஸ் நிலையத்தில் மதுபாட்டில்கள் கடத்த முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை உருளையன்பேட்டை போலீசாருக்கு பஸ் நிலையத்தில் வாலிபர் ஒருவர் மதுபாட்டில்கள் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அப்போது பஸ் நிலையம் அருகே வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அவர் வைத்திருந்த பையை பார்த்த போது 51 மதுபாட்டில்கள் இருந்தன.

    இதனை தொடர்ந்து அந்த வாலிபரை உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மதுரை மாவட்டம் மேலுரை சேர்ந்த அழகர் (வயது39) என்பது தெரியவந்தது. இவர் புதுவையில் உள்ள தனியார் பாரில் வேலைபார்த்து வந்து உள்ளார். இவர் புதுவையில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி சொந்த ஊருக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அழகரை கைது செய்து அவரிடமிருந்த 51 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    புதுவையில் இருந்து தமிழகத்துக்கு மது பாட்டில் கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை பெரியகடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன், ஏட்டு ராமலிங்கம் மற்றும் போலீசார் நேற்று மாலையில் தம்புநாயக்கன் வீதியில் ரோந்து சென்றனர். போலீசாரை கண்டதும் ஒரு வாலிபர் 2 கட்டை பைகளை கீழே போட்டு விட்டு ஓடினார்.

    சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பைகளை திறந்து பார்த்தபோது அதில் 50 மது பாட்டில்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து கலால்துறையிடம் ஒப்படைத்தனர்.

    இன்று காலை பெரியகடை போலீசார் நீடராஜப்பர் வீதி- பாரதி வீதி சந்திப்பில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒருவர் பையுடன் நின்று கொண்டிருந்தார்.

    போலீசார் அவரை பிடித்து பையை திறந்து பார்த்தனர். அதில், 43 மது பாட்டில்கள் இருந்தன. போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் திண்டிவனம் அருகே உள்ள ஆலகிராமத்தை சேர்ந்த தேவராஜ் (வயது 45) என்றும், இவர் புதுவையில் இருந்து தமிழகத்துக்கு மதுபாட்டில்களை கடத்த முயன்றதும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் தேவராஜை கைது செய்தனர். அவரிடம் இருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    புதுவையில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், தட்டாஞ்சாவடி தொகுதி திமுக வேட்பாளர் வெங்கடேசன் ஆகியோரை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நாளை பிரசாரம் செய்கிறார். #LokSabhaElections2019 #Vaiko
    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் வைத்திலிங்கம், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வெங்கடேசன் ஆகியோரை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நாளை பிரசாரம் செய்கிறார்.

    நாளை மாலை 4 மணிக்கு தட்டாஞ்சாவடியில் 2 வேட்பாளர்களுக்கும் பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு பேசுகிறார். இதைத் தொடர்ந்து 4.30 மணிக்கு முதலியார்பேட்டை வானொலி திடலில் பாராளுமன்ற வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார்.

    5 மணிக்கு கிருமாம்பாக்கத்தில் பேசிவிட்டு புதுவை சுற்றுப்பயணத்தை வைகோ நிறைவு செய்கிறார். வைகோ பிரசாரத்தின்போது காங்கிரஸ், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.

    இந்த தகவலை ம.தி.மு.க. புதுவை மாநில பொறுப்பாளர் கபிரியேல் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #Vaiko

    தமிழகம் மற்றும் புதுவையில் வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடைந்தது. நாளை மனுக்கள் பரிசீலனை செய்யப்பட உள்ளன. #LokSabhaElections2019 #Nomination
    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 11-ந்தேதி முதல் மே மாதம் 19-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

    தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ந்தேதி 2-வது கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலுடன் தமிழக சட்டசபையில் காலியாக உள்ள தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும், இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டசபை தொகுதிகளிலும் கடந்த 19-ந்தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்கியது. மனுதாக்கலுக்கு 26-ந்தேதி (இன்று) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    23, 24-ந்தேதிகளில் (சனி, ஞாயிறு) வேட்பு மனுதாக்கல் செய்யப்படவில்லை. இதனால் வேட்பு மனுதாக்கலுக்கு 6 நாட்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.

    முதல் 2 நாட்கள் வேட்பு மனுதாக்கல் மந்தமாக இருந்தது. வியாழன், வெள்ளிக் கிழமைகளில் மனுதாக்கலில் விறுவிறுப்பு ஏற்பட்டது. நேற்றும் இன்றும் கட்சி தலைவர்கள் வேட்பு மனு தாக்கலால் தேர்தல் களம் சூடுபிடித்தது.



    நேற்று மாலை வரை நிலவரப்படி தமிழ்நாட்டில் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் 613 வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அதிக பட்சமாக தென்சென்னை தொகுதியில் 28 பேர், திருவண்ணாமலையில் 27 பேர், சேலத்தில் 25 பேர், நாமக்கல்லில் 24 பேர், ஸ்ரீபெரும்புதூர், திருநெல்வேலியில் தலா 23 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

    வேலூர், விழுப்புரம், நீலகிரி, கடலூர், விருதுநகர், ராமநாதபுரம் தொகுதிகளில் வேட்பு மனுதாக்கல் சற்று குறைவாக இருந்தது.

    18 சட்டசபை தொகுதிகளுக்கு நடத்தப்படும் இடைத்தேர்தல்களில் போட்டியிடவும் கடந்த ஒரு வாரமாக விறுவிறுப்பான மனுதாக்கல் நடந்தது. 18 தொகுதிகளிலும் நேற்று மாலை வரை 232 பேர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர். சென்னை பெரம்பூர் தொகுதியில் அதிக பட்சமாக 36 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.

    பூந்தமல்லி, அரூர், மானா மதுரை சட்டசபை தொகுதிகளில் மனுதாக்கல் மந்தமாக உள்ளது. குறிப்பாக பெண்கள் மத்தியில் தேர்தலில் போட்டியிட அதிக ஆர்வம் இல்லாத நிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் நேற்று மாலை வரை தாக்கலான 613 மனுக்களில் 75 பேர் மட்டுமே பெண்கள் ஆவார்கள். 2 பேர் மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள். அதுபோல 18 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு மனு செய்துள்ள 232 பேரில் 38 பேர் மட்டுமே பெண்கள் என்று தெரியவந்துள்ளது.

    வேட்பு மனுதாக்கலுக்கு கடைசி நாளான இன்று வேட்பாளர்கள் போட்டி போட்டு வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். எனவே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் எண்ணிக்கை 650 வரை உயர வாய்ப்புள்ளது. அதுபோல 18 தொகுதி இடைத்தேர்தல்களில் களம் இறங்குபவர்கள் எண்ணிக்கையும் 250 வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வேட்பு மனுதாக்கலுக்கு இன்று கடைசி நாளாகும். இன்று பிற்பகல் 3 மணியுடன் மனுதாக்கல் முடிந்தது. நாளை (27-ந்தேதி) வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும்.

    வேட்பு மனுவைத் திரும்பப் பெறுவதற்கு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (28, 29-ந்தேதி) 2 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. மாற்று வேட்பாளர்கள் அனைவரும் அன்றைய தினம் தங்களது வேட்புமனுவைத் திரும்ப பெறுவார்கள். 29-ந் தேதி பிற்பகல் 3 மணி வரை இதற்கான அவகாசம் உள்ளது.

    29-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு பிறகு வேட்பாளர்கள் இறுதிப் பட்டியலை அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரிகள் வெளியிடுவார்கள். அன்றைய தினமே அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு அவர்களுக்கு உரிய சின்னங்களும், மற்ற சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கி அறிவிக்கப்படும்.

    அதன்பிறகே ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் முழு விபரம் தெரியவரும். தேர்தல் பிரசாரத்துக்கு 30-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 16-ந்தேதி வரை 18 நாட்கள் அவகாசம் உள்ளது. 16-ந்தேதி பிரசார ஓயும். ஏப்ரல் 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். மே மாதம் 23-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். #LokSabhaElections2019 #Nomination
    கோட்டக்குப்பத்தில் இன்று காலை நடந்த விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் இந்திராநகரை சேர்ந்தவர் வீரக்குமார். இவரது மனைவி மகேஸ்வரி. (வயது 45). இவர் இன்று காலை 6.15 மணியளவில் கோட்டக்குப்பம் சறுக்கு பாலம் அருகே பால் வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அங்குள்ள சாலையை கடந்து செல்ல முயன்ற போது காலாப்பட்டில் இருந்து புதுவை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மகேஸ்வரி மீது மோதியது. மேலும் அந்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த கார் மீதும் மோதியது.

    இதையடுத்து கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற தனியார் கல்லூரி பஸ் மீது அதிவேகமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

    இந்த விபத்தில் மகேஸ்வரி, மோட்டார் சைக்கிளில் வந்த பிள்ளைச்சாவடியை சேர்ந்த சிவக்குமார் (19), தமிழ் செல்வன் (23) மற்றும் காரை ஓட்டி வந்த ஆந்திராவை சேர்ந்த ஏமன் (21) மற்றும் காரில் வந்த இவரது நண்பர் கிருஷ்ணன் (25) ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே ஏமன் பரிதாபமாக இறந்து போனார். மற்ற 4 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த விபத்து தொடர்பாக கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் பலியான ஏமன் சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரியில் படித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுவை அருகே வடமாநில வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான சின்னகோட்டக்குப்பத்தில் தனியார் கெஸ்ட் அவுஸ் உள்ளது. பல ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ள கெஸ்ட்அவுசில் நீச்சல்குளம் கட்டும் பணி நடந்து வருகிறது.

    அதற்காக வட மாநிலத்தை சேர்ந்த பலர் தொழிலாளர்களாக வேலைபார்த்து வருகின்றனர். அதில் அசாம் மாநிலத்தை சேர்ந்த விபின்சர்க்கார் (வயது 47) இவருடைய சித்தப்பா மகன் கெரன் பிஸ்வாஸ் (37) இருவரும் ஒரே அறையில் தங்கி இருந்தனர்.

    இதில் கெரன் பிஸ்வாஸ்க்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் கோபம் அடைந்த விபின்சர்க்கார் நாம் வேறு மாநிலத்தில் இருந்து வந்து வேலை செய்கிறோம். தினமும் மது குடிக்காமல் பணத்தை சேர்த்து வைத்து வீட்டுக்கு அனுப்புமாறு கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கெரன் பிஸ்வாஸ் விபின்சர்க்காரை சரமாரியாக தாக்கினார்.

    இதனால் ஆத்திரமடைந்த விபின்சர்க்கார் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து கெரன் பிஸ்வாஸ் முகம் மற்றும் பல இடங்களில் கத்தியால் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கெரன் பிஸ்வாஸ் துடிதுடித்து இறந்து போனார்.

    இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபின்சர்க்காரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுவை அருகே மொரட்டாண்டி டோல்கேட்டில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க தடை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    வானூர்:

    புதுவை- திண்டிவனம் 4 வழிச்சாலையில் மொரட்டாண்டி என்ற இடத்தில் டோல்கேட் உள்ளது. இங்கு வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    புதுவை நகர பகுதியில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த டோல்கேட்டுக்கு புதுவைபகுதியை சேர்ந்த வணிகர்கள், தொழிற்சாலை நிர்வாகிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் வானூர் பகுதியை சேர்ந்த வக்கீல்கள் மகேஷ், அய்யப்பன் மற்றும் பரசுராமன், சத்தியராஜ், ஞானமூர்த்தி ஆகியோர் வானூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தனர்.

    அந்த மனுவில், புதுவை - திண்டிவனம் சாலையில் மொரட்டாண்டியில் டோல்கேட் உள்ளது. ஆனால் விதிப்படி புதுச்சேரியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில்தான் டோல்கேட் அமைத்திருக்கவேண்டும்.

    ஆனால், 10 கிலோ மீட்டர் தொலைவுக்குள் டோல்கேட் அமைத்து வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. எனவே, டோல்கேட்டில் கட்டணம் வசூல் செய்வதை தடை செய்யவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இதை விசாரித்த மாஜிஸ்திரேட்டு வெங்கடேசன், வருகிற 20-ந் தேதி வரை அனைத்து வாகனங்களுக்கும் டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்கக் கூடாது. அதை போலீசார் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    இந்த இடைக்கால உத்தரவை கோர்ட்டு ஊழியர் கொடுத்த போது, அதனை டோல்கேட் நிர்வாகத்தினர் வாங்க மறுத்துவிட்டனர். இதையடுத்து கோர்ட்டு உத்தரவு, டோல்கேட் அலுவலகத்தில் ஒட்டப்பட்டது. இதையடுத்து டோல்கேட் வழியாக சென்ற வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை.

    புதுவையில் விரைவில் தியாகிகள் ஓய்வூதியம் ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.9 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். #Narayanasamy
    புதுச்சேரி:

    புதுவை அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு தியாகிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி கம்பன் கலையரங்கில் நடைபெற்றது.

    விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கி தியாகிகளை கவுரவித்து இனிப்புகள் வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    புதுவை மாநிலத்துக்கு வணிக வரி, கலால் வரி மூலம் நிதி கிடைக்கிறது. சுற்றுலாவில் இருந்து பெரிய அளவுக்கு வருமானம் இல்லை. புதுவை, இந்தியாவுடன் இணைந்தபோது 90 சதவீதம் மானியம் கிடைத்தது. அது படிப்படியாக குறைந்து தற்போது 26 சதவீதமாகி விட்டது.

    மத்திய அரசு நமக்கு கொடுக்க வேண்டிய ரூ.3 ஆயிரம் கோடி மானியத்தில் ரூ.1,650 கோடி மட்டுமே பெறுகிறோம்.



    மத்திய அரசிடம் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைப்பதில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மக்களுக்கு பணியாற்ற வேண்டிய கடமை பொறுப்பு உள்ளது. அரசின் சிக்கன நடவடிக்கையால் மக்கள் நலத்திட்டங்களை முடிந்தவரை செயல்படுத்தி வருகிறோம்.

    தியாகிகள் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் முடிவு செய்து அரசு கவர்னருக்கு கோப்பு அனுப்பியது. அந்த கோப்பு நிலுவையில் உள்ளது. விரைவில் தியாகிகள் ஓய்வூதியம் ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.9 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

    இவ்வாறு நாராயணசாமி பேசினார். #Narayanasamy

    ×