search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்வெட்டு"

    பொன்னேரி பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் கிராம மக்கள் அவதிக்குள்ளானார்கள்.

    பொன்னேரி:

    பொன்னேரி பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு என்பது தொடர் கதையாகி வருகிறது. பகல், இரவு பாராமல் துண்டிக்கப்படும் மின்சாரம் பல மணி நேரம் தடை படுவதால் பொதுமக்கள் கோடை காலத்தை சமாளிக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

    மின்தடையால் பல இடங்களில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை அரசூர், பொன்னேரி, மெதூர், தடப் பெரும்பாக்கம், வேன்பாக்கம், இலவம்பேடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது.

    இதனால் கிராம மக்கள் அவதிக்குள்ளானார்கள். இரவில் புழுக்கத்தால் தெருக்களில் தஞ்சம் அடையும் நிலை ஏற்பட்டது. 12 மணி நேர மின்தடை குறித்து மின் ஊழியர்களிடம் பொதுமக்கள் கேட்டபோது உரிய பதில் கூறவில்லை.

    இதற்கிடையே அரசூர், காட்டாவூர், கூடுவாஞ்சேரி ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் பொன்னேரி துணை மின் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு பொறியாளரிடம் மனு ஒன்றை அளித்தனர்.

    சுமார் 1500 ஏக்கரில் நெற்பயிர்கள் சாகுபடி செய்து உள்ளோம். அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக மோட்டார்கள் மூலம் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் விவசாயிகள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இதேபோல் மின்தடையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பொன்னேரி போலீஸ் நிலையத்திலும் விவசாயிகள் மனு அளித்து உள்ளனர்.

    இதுகுறித்து பொன்னேரி கோட்ட உதவி செயற் பொறியாளர் பன்னீர் செல்வத்திடம் கேட்டபோது கூறியதாவது:-

    கடந்த 11-ந் தேதி வேண் பாக்கம் துணை மின்நிலை யத்தில் டிரான்ஸ்பார்ம் வெடித்து விட்டது. இது பொருத்தப்பட்டு இரண்டு மாதம் தான் ஆகிறது இதை சரி செய்யும் பணியில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று மாலை அல்லது நாளை பணி முடிவடையும். அதன்பின் சீராக மின் சாரம் வழங்கப்படும். அதுவரை பொன்னேரி துணை மின் நிலைய கோட்டத்தில் உள்ள ஆலாடு அரசூர், மேட்டுப் பாளையம், இலவம்பேடு, பெரும்பேடு, பொன்னேரி, தேவதானம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சுழற்சிமுறையில் மின்சாரம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொன்னேரியில் மின்வெட்டால் அவதி அடைந்த பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி, மீஞ்சூர், தடப்பெரும்பாக்கம், வேண்பாக்கம், நாலூர், இலவம்பேடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இரவு பகல் என சுழற்சி முறையில் மின்வெட்டு ஏற்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் மின்வாரிய துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்காததால் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு 10 மணிக்கு பொன்னேரியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    அங்கு அதிகாரிகள் யாரும் வராததால் பொன்னேரி திருவொற்றியூர் சாலை வேண்பாக்கத்தில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மின்வாரிய அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இனி அறிவிக்கப்படாத மின்வெட்டு இருக்காது என உத்தரவாதம் தர வேண்டும் என வலியுறுத்தினர். எனினும் மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    போராட்டம் நடத்திய பிறகு உடனே மின்சாரம் வழங்கப்பட்டு சிறிது நேரத்தில் மீண்டும் 1 மணி நேரம் வழக்கம் போல மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாகி அனைத்து கிராம மக்களை திரட்டி போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தனர்.

    மின்சாரம் இல்லாத நேரத்தில் வேண்பாக்கம் துணைமின் நிலையத்துக்கு போன்செய்தால் எடுப்பதில்லை. போனை எடுத்து கீழே வைத்து விடுகின்றனர். அதிகாரிகளுக்கு போன் செய்தாலும் எடுப்பதில்லை.

    மின்சாரம் இல்லாத நேரத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்துள்ளன அதை சரியாக பயன்படுத் துவதில்லை எனவும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

    திமுக ஆட்சியில் மக்கள் மின்வெட்டால் அவதிப்பட்டனர் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். #Panneerselvam

    கரூர்:

    அரவக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாறையூர், அரவக்குறிச்சி, ஈசநத்தம் உள்ளிட்ட இடங்களில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த காலங்களில் யாருடைய ஆட்சி சிறப்பாக இருந்தது? மக்களுக்கான தொலைநோக்கு திட்டங்களை சீரியமுறையில் செயல்படுத்தியது யார்? என்று சிந்தித்து பார்த்தால் அது அ.தி.மு.க. அரசாக தான் இருக்க முடியும். ஒரு மனிதனுக்கு உணவு, உடை, உறைவிடம் ஆகிய மூன்றும் தான் பிரதானம் ஆகும்.

    அந்த வகையில் 20 கிலோ இலவச அரிசி வழங்கி ஏழை, எளிய மக்கள் உள்ளிட்டோருக்கு உணவு பாதுகாப்பினை உறுதி செய்தார் ஜெயலலிதா. மேலும் அவரது வழியில் தரமான கான்கிரீட் வீடுகள் கட்டி தருவது, பெண்களுக்கு தாலிக்கு தங்கம், மிக்ஸி, கிரைண்டர் மற்றும் தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி வேலை வாய்ப்புகளை பெருக்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மற்ற மாநிலங்களைவிட முன்னோடியாக தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    தி.மு.க.வினர் தற்போது இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது அவர்களுடைய ஆட்சி நடந்த 2006-2011 காலக்கட்டத்தில் செய்த சாதனைகளை சொல்ல முடியாமல் இருக்கின்றனர். அப்போது ஏற்பட்ட மின் தட்டுப்பாட்டினால் பொதுமக்கள் அடைந்த அவதியை மறக்க முடியுமா? தூக்கமின்றி பலரும் தவித்தனர்.


    2011-ல் ஜெயலலிதாவின் அரசு அமைந்ததும் தான் மின் தட்டுப்பாடு போக்கப்பட்டு, தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறியது. தி.மு.க. ஆட்சியில் பல்வேறு நில அபகரிப்பு புகார்கள் எழுந்தன. அவை அனைத்தும் அ.தி.மு.க.ஆட்சியில்தான் விசாரிக்கப்பட்டு உரியவருக்கும் நிலம் மீட்டு கொடுக்கப்பட்டது. அ.தி.மு.க.வில் யாராவது கட்டப்பஞ்சாயத்து செய்கிறார் என சொல்ல முடியுமா என்றால் முடியாது.

    காவிரி, முல்லைபெரியாறு உள்ளிட்ட ஜீவாதார பிரச்சினைகளையும் தி.மு.க. காப்பாற்ற தவறியது. கச்சதீவினை தாரை வார்த்து கொடுத்தனர். கர்நாடாகாவில் 4 அணை கட்ட கருணாநிதி கையெழுத்திட்டு வந்தார். ஆனால் அதற்குமாறாக சட்டப் போராட்டம் நடத்தி காவிரியில் உரிையை மீட்டெடுத்தவர் ஜெயலலிதா. தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க. காணாமல் போய்விடும் என மு.க.ஸ்டாலின் சொல்கிறார்.

    எப்படியாது ஆட்சியை பிடித்து விடலாம் என ஸ்டாலின் கங்கணம் கட்டி கொண்டு அலைகிறார். 1,000 ஸ்டாலின் வந்தாலும், 1,000 தினகரன் வந்தாலும் அ.தி.மு.க. ஆட்சியை ஆட்டவோ அசைக்கவோ முடியாது. அ.தி.மு.க. ஆட்சியில் சாதி, மதக்கலவரங்கள் இல்லை. தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது. ஓ.பி.எஸ்.சும்- இ.பி.எஸ்.சும் தமிழகத்தை தீ வைத்து கொளுத்திவிடுவார்கள் என ஸ்டாலின் கூறுகிறார். நாங்கள் என்ன தீ பந்தத்தோடு அலைந்து கொண்டிருக்கோமா?

    அரவக்குறிச்சிக்கு இடைத்தேர்தல் தேவைதானா?. இங்கு நிற்கும் தி.மு.க. வேட்பாளர் (செந்தில்பாலாஜி) எந்த கட்சியில் நின்று ஜெயித்தார், பின்னர் எந்த கட்சிக்கு தாவினார் என்பது எல்லாருக்கும் தெரியும். கடந்த 2006-ல் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கி ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டு, வாய்ப்புகளை பெருக்கி கொண்டார். அதையெல்லாமல் நினைத்து பார்க்க வேண்டாமா? துரோகத்திற்கும், நயவஞ்சகத்திற்கும் ஒரு எல்லை இருக்கிறது.

    2011-ல் கூட அவரால் தான், அரவக்குறிச்சியில் வி.வி.செந்தில்நாதன் வெற்றி வாய்ப்பினை இழந்தார். தற்போது ஜெயலலிதான் ஆன்மாவால் செந்தில் பாலாஜியை வீழ்த்த, மீண்டும் செந்தில்நாதனே களமாட வந்திருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Panneerselvam

    ஊத்துக்கோட்டை அருகே தொடர் மின்வெட்டை கண்டித்து 30 கிராமங்களை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கத்தில் 33 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் உள்ளது.

    இங்கிருந்து ஜெ.ஜெ.நகர், லட்சிவாக்கம், பேரண்டூர், சென்னங்காரணி, கண்டிகை, சூளமேனி உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கடந்த ஒருமாத காலமாக தொடர் மின் வெட்டு காரணமாக பொது மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என்று புகார் எழுந்தது.

    இந்தநிலையில் தொடர் மின்வெட்டை கண்டித்து 30 கிராமங்களை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட பொது மக்கள் மற்றும் விவசாயிகள் கருகிய நெற்கதிர்களுடன் பாலவாக்கத்தில் உள்ள துணை மின் நிலையம் எதிரே நேற்று ஊத்துக்கோட்டை- பெரியபாளையம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் கிடைத்த உடன் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், இன்ஸ்பெக்டர் அனுமந்த், சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சமரச பேச்சு வார்தையில் ஈடுபட்டனர்.

    சீரான மின் சப்ளைக்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் சாலை மறியலை விலக்கி கொண்டனர்.

    இதன் காரணமாக ஊத்துக்கோட்டை- பெரிய பாளையம் இடையே சுமார் ½ மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    தமிழகத்தில் இந்த ஆண்டு தேவைக்கு அதிகமாகவே மின் உற்பத்தி இருப்பதால், வருகிற கோடை காலத்தில் மட்டும் இன்றி எப்போதுமே மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு இல்லை என அமைச்சர் தங்கமணி கூறினார். #MinisterThangamani #Summer
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவியை வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் பாராளுமன்ற தேர்தல் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டணி குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முடிவு செய்வார்கள். தமிழகத்தில் இந்த ஆண்டு தேவைக்கு அதிகமாகவே மின் உற்பத்தி இருப்பதால், வருகிற கோடை காலத்தில் மட்டும் இன்றி எப்போதுமே மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு இல்லை.



    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வரை வேலை வேண்டும் என்பதற்காக கிராம சபை கூட்டங்கள் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தேர்தலுக்கு பிறகு தான் மக்களின் செல்வாக்கு யாருக்கு இருக்கிறது என்பது தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #MinisterThangamani #Summer
    சின்னதாராபுரம் அருகே 3 மின் கம்பங்கள் உடைந்து விழுந்தது. இதனால் தொடர் மின்வெட்டு ஏற்பட்டதால் அந்த பகுதி பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
    க.பரமத்தி: 

    சின்னதாராபுரம் அருகே உள்ள நஞ்சைகாளி குறிச்சி கிராமத்தில் தேவேந்திரன் நகர் உள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநகர் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உள்ளன. இந்த மின்கம்பங்கள் அனைத்தும் சேதடைந்த நிலையில் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். 

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென தேவேந்திரன் நகரில் உள்ள 3 மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன. இதில் ஒரு மின்கம்பம் அருகில் உள்ள வீட்டின் கூரை மீது விழுந்தது. அப்போது உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இந்த மின்கம்பங்கள் உடைந்து விழுந்ததால் தேவேந்திரன் நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை தொடர் மின்வெட்டு ஏற்பட்டு மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் இப்பகுதி பொதுமக்கள், குழந்தைகள், முதியவர்கள் இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் மிகவும் அவதி அடைந்தனர். மின் கம்பங்கள் உடைந்து விழுந்தபோது, அருகில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனவே இப்பகுதியில் சேதமடைந்த மின்கம்பங்கள் அனைத்தையும் உடனடியாக மின்சார வாரியத்துறையினர் அகற்றி புதிய மின்கம்பங்கள் நட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    அறிவிக்கப்படாத மின்வெட்டால் ஊத்துக்கோட்டை நகரம் இருளில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டையில் 11 கிலோ வாட் துணை மின் நிலையம் உள்ளது. இங்கிருந்து ஊத்துக்கோட்டையில் உள்ள சுமார் 5 ஆயிரம் வீடுகள், வனிக நிறுவனங்களுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் தராட்சி, பால்ரெட்டி கண்டிகை, கீழ்சிற்ற பாக்கம், கீழ்சிற்ற பாகம், ஜங்காலபள்ளி, தொம்பரம்பேடு, தாராட்சி உட்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள வீடுகளுக்கும், விவசாய பம்ப் செட்டுகளுக்கு மின் வினியோகம் நடைபெற்று வருகிறது.

    கடந்த ஒரு வாரமாக ஊத்துக்கோட்டை உள்ளிட்ட மேற்கூறபட்ட 50 கிராமங்களில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் அவதிப்படு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணி முதல் இரவு 12 மணி வரை அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

    தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அறிவிக்கப்படாத மின் வெட்டால் வியாபாரிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    மின்தடை காரணமாக இண்டர்நெட் சேவை பாதிக்கப்பட்டதால் அரசு அலுவலகங்ளில் தகவல் பறிமாற்றம் பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து பொதுமக்கள் ஊத்துக்கோட்டையில் உள்ள துணை மின் நிலையத்துக்கு புகார் கூற சென்றனர். ஆனால் அங்கு அதிகாரிகள் யாரும் இல்லாதால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    ஊத்துக்கோட்டை பகுதியில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்வெட்டு குறித்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நிலக்கரி வழங்குவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது என்றும், அதனால் கர்நாடகத்தில் மின்வெட்டை அமல்படுத்தக்கூடாது என்றும் மின்துறை அதிகாரிகளுக்கு குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். #kumaraswamy
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் மின்சார பிரச்சினைகள் தொடர்பாக மின்துறை அதிகாரிகளுடன் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று பெங்களூரு விதான சவுதாவில் ஆலோசனை நடத்தினார். மின்துறை அவர் வசமே உள்ளது. இந்த கூட்டத்தில் அந்த துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து குமாரசாமி அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    கர்நாடகத்தில் தற்போது மின்வெட்டு இல்லை. அடுத்து வரும் காலங்களிலும் கர்நாடகத்தில் மின்வெட்டை அமல்படுத்தக்கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். ஒப்பந்தத்தில் கூறியுள்ளபடி மத்திய அரசு, கர்நாடகத்திற்கு போதிய அளவு நிலக்கரியை ஒதுக்கீடு செய்யவில்லை. இதுகுறித்து மத்திய நிலக்கரித்துறை மந்திரிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. தலைமை செயலாளர் மத்திய அரசு அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளார்.



    முடிந்தவரை நிலக்கரியை வழங்குவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. நிலக்கரியை ஒதுக்கியவுடன், அதை குறிப்பிட்ட நேரத்திற்குள் கர்நாடகத்திற்கு கொண்டு வந்து சேர்க்க ரெயில்வேத்துறை உதவ வேண்டும் என்று கேட்டுள்ளோம். கர்நாடக மின்சாரத்துறையை சேர்ந்த அதிகாரிகள் டெல்லிக்கு சென்றுள்ளனர். அவர்கள் ரெயில்வே மற்றும் நிலக்கரித்துறை அதிகாரிகளை சந்தித்து, நிலக்கரி விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுப்பார்கள்.

    நிலக்கரி பற்றாக்குறையை தடுக்க மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. மேலும் சூரியசக்தி உற்பத்தி மற்றும் நீர்மின் உற்பத்தி மூலம் மின் பற்றாக்குறையை சமாளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு மின்சாரம் தடையின்றி கிடைக்க மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.#kumaraswamy
    தமிழகத்தில், மின்வெட்டு உள்ளதாக ஸ்டாலின் கூறுவது நகைச்சுவையாக உள்ளது என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.
    கூத்தாநல்லூர்:

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் சில இடங்களில் நிலவி வரும் குறைந்த மின் அழுத்தத்தை சரி செய்யும் பொருட்டும், மின் இழப்பை குறைத்திடும் பொருட்டும் ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கூத்தாநல்லூர் நகராட்சிக்கு ரூ.3 கோடியே 73 லட்சம் நிதி தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதில் ரூ.1 கோடியே 6 லட்சம் செலவில் 33.11 கி.வோ கூத்தாநல்லூர் துணை மின் நிலையத்தில் கூடுதலாக திறன் கொண்ட மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதன் தொடங்க விழா நேற்று கூத்தாநல்லூர் துணை மின் நிலையத்தில் நடந்தது. விழாவிற்கு திருவாரூர் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார், மன்னார்குடி செயற்பொறியாளர்கள் ராதிகா, காளிதாஸ், திருச்சி கட்டுமான மேற்பார்வை பொறியாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு புதிய திறன் மின்மாற்றியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கூத்தாநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 20 கிராமங்களில் நிலவி வந்த குறைந்த மின் அழுத்தம் புதிய திறன் மின்மாற்றியால் சரி செய்யப்பட்டுள்ளது. இதனால் கூத்தாநல்லூர் நகராட்சி பகுதியை சேர்ந்த கிராம மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், வடபாதிமங்கலத்தில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவிற்கு உள்ள மின்பாதை வழியாக மின் சாரம் வந்தது தவிர்க்கப்பட்டு தற்போது 5 கிலோ மீட்டருக்குள்ளாகவே உள்ள மின் பாதை மூலம் மின்சாரம் வழங்க வழிவகை செய்யப் பட்டுள்ளது.

    இந்த கூடுதல் திறன் மின்மாற்றி மூலம் கூத்தாநல்லூர் நகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள சுமார் 25 ஆயிரம் பயனாளிகள் பயன் அடைவர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர், தமிழகத்தில் மின்வெட்டு உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறாரே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு அமைச்சர் காமராஜ் கூறியதாவது:-

    தமிழகத்தில் மின்வெட்டு உள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறி வருவது காமெடியாக உள்ளது. தி.மு.க. ஆட்சியில் கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு தமிழகமே இருளில் மூழ்கியதை தமிழக மக்கள் மறந்து விட மாட்டார்கள். மு.க.ஸ்டாலினும் மறந்து விட மாட்டார். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர்தான் தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறியது என்பதை யாரும் மறக்க மாட்டார்கள். தமிழகத்தில் தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் அ.தி.மு.க. நகர செயலாளர் பசீர் அகமது, நகர துணை செயலாளர் உதய குமார், பொருளாளர் பாஸ் கரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முகமதுஅஸ்ரப், நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜசேகரன், நகர ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் காளிதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மன்னார்குடி உதவி செயற்பொறியாளர் அருள்ராஜ் வரவேற்றார். முடிவில் கூத்தாநல்லூர் உதவி செயற்பொறியாளர் சங்கர்குமார் நன்றி கூறினார். 
    தமிழகத்தில் மின்வெட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் தவறான பிரச்சாரம் செய்வதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். #MinisterThangamani
    புதுடெல்லி:

    தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி டெல்லியில் இன்று மத்திய ரெயில்வே மற்றும் நிலக்கரித்துறை மந்திரி பியூஸ் கோயலை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தங்கமணி கூறியதாவது:-

    தமிழகத்தில் நிலக்கரி கையிருப்பை அதிகரிப்பதற்காக மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். கூடுதல் நிலக்கரி வழங்குவதாக மத்திய அரசு கூறியுள்ளது. தினமும் நிலக்கரி அனுப்புவதாகவும் கூறியுள்ளார்கள்.



    தமிழகத்தில் மழை காரணமாக மின்சார தேவை குறைந்திருப்பதால் உற்பத்தியையும் குறைத்திருக்கிறோம். வடசென்னையில் 3 நாட்களுக்கான  நிலக்கரியும், தூத்துக்குடியில் 6 நாட்களுக்கான நிலக்கரியும் கையிருப்பு உள்ளது. ஒடிசாவில் ஏற்பட்ட மழை காரணமாகவே கடந்த வாரத்திற்கான நிலக்கரி கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

    தமிழகத்தில் மின்வெட்டு என எதிர்க்கட்சிகள் தவறான பிரச்சாரம் செய்து வருகின்றன. அரசியல் செய்வதற்காக மின்வெட்டு இருப்பதாக பேசி வருகிறார்கள். தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மின்வெட்டு என்பதே வராது.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterThangamani

    தமிழகத்தில் மின்வெட்டு நிலவுவதாக திட்டமிட்டு வதந்தியை பரப்புகிறார்கள் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். #MinisterThangamani #PowerShortage #TNGovernment

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-

    அண்ணா பிறந்த நாள் பொதுக் கூட்டத்தை நடத்துவதற்கு முழு உரிமை உள்ள இயக்கம் அ.தி.மு.க. தான்.

    ஜெயலலிதா ஆட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்று வருவதை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும், கழகத்திற்கு துரோகம் விளைவித்த தினகரன் மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் மின்வெட்டு வரப்போகிறது என்று பேசி வருகிறார். அது முற்றிலும் தவறானது.

    ஏனென்றால் ஜெயலலிதா இருக்கும்போதே தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றி அமைத்துள்ளார். இந்திய சமன்பாட்டு அறிக்கை கூட தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது என அறிக்கை வழங்கியுள்ளது.

    கடந்த 9-ந் தேதியும் 10-ந் தேதியும் மத்திய தொகுப்பிலிருந்து வரவேண்டிய மின்சாரம் பராமரிப்பு பணிக்காக வழங்கப்படவில்லை. அதேபோல காற்றாலை மின்சாரம் இருந்த காரணத்தால் அனல் மின்சார தயாரிக்கும் பணியை நிறுத்திருந்தோம். திடீரென்று காற்றாலை மின்சாரம் வராத காரணத்தால் அனல் மின்சார உற்பத்தியை திடீரென கொடுக்க முடியாத சூழலில் இருந்தோம்.

    ‌அதை அடுத்த நாளே சரிசெய்து சகஜ நிலைக்கு திருப்பி அமைத்து விட்டோம். மின் விநியோகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்போது நிலக்கரி இல்லை என்று வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.

     


    நிலக்கரி குறித்து பிரதமருக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதம் ஒரு நினைவூட்டல் கடிதம் தான். ஏற்கனவே தமிழகத்திற்கு அதிக நிலக்கரி வழங்க வேண்டும் என்று முதல்வர் கேட்டுள்ளார். அதற்கான நினைவூட்டல் கடிதம் தான் அது.

    தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டே இல்லாத போலவும், இந்த ஆட்சியில் தான் மின்வெட்டு இருப்பது போலவும் பேசி வருகிறார்கள். மின்வெட்டு குறித்து பேசுவதற்கு தி.மு.க.வுக்கு அருகதை இல்லை.

    முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். நானும் ரெயில்வே மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளேன். வருகிற 18-ம் தேதி மத்திய ரெயில்வே மந்திரியை சந்தித்து அதிக வேகன்களில் நிலக்கரியை ஏற்றி வந்து வழங்க வேண்டுமென்று கேட்க உள்ளேன்.

    நிலக்கரியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதற்கான டெண்டர் கோரப்பட்டு உள்ளது. இன்னும் 20, 25 நாள்களில் அந்த நிலக்கரியும் வந்து சேரும்.

    ஆகவே, மக்கள் வதந்தியை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். மேலும் கூடங்குளத்தில் 400 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் ஒருபோதும் மின்வெட்டு வராது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜய் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். #MinisterThangamani #PowerShortage #TNGovernment

    வேலூர் மாவட்டத்தில் தினமும் 3 மணி நேரம் மின் தடை ஏற்படுவதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    வேலூர்:

    சென்னை அனல் மின் நிலையில் 1410 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அனல் மின் நிலையத்திலும் மின் உற்பத்தி பாதிக்கபட்டுள்ளது. வழக்கமாக இந்த சமயங்களில் கிடைக்க கூடிய காற்றாலை மின்சாரம் உற்பத்தி குறைந்துவிட்டது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் கடந்த சனிக்கிழமை முதல் காலையில் 1 மணி முதல் மாலை 1 மணி நேரம் இரவு 1 மணி நேரம் என 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டுள்ளது.

    ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மின்னூர், விண்ணமங்கலம், வடகரை, மாராபட்டு ஆகிய பகுதிகளில் கடந்த 3 வாரமாக பகலில் 2 மணி நேரமும் இரவில் 3 மணி நேரமும் மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது.

    வாணியம்பாடியில் பகலில் 2 மணி நேரமும் இரவில் 1 மணி நேரமும் மின் வெட்டு ஏற்படுகிறது. ஆலங்காயம், திம்மாம்பேட்டை, அம்பலூர் பகுதிகளில் தினமும் 4 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கபடுகிறது.

    அரக்கோணம் பகுதியில் கடந்த 1 மாதமாக 3 மணி நேரத்திற்கும் மேல் தொடர் மின் தடை ஏற்படுகிறது. மேலும் விவசாயிகளுக்கு வழங்கும் மின்சாரமும் முறையாக வழங்கபடுவதில்லை இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    வாலாஜா பகுதியில் கடந்த 2 வாராமாக 1 மணி நேரம் மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது.

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு, பெருந்துரைபட்டு, வாணாபுரம், அகரம்பள்ளிபட்டு சதாகுப்பம் பகுதிகளில் பகலில் 4 மணி நேரமும், இரவில் 2 மணி நேரமும் மின்சாரம் தடை செய்யப்பட்டு வருகிறது.

    இதனால் காலாண்டு தேர்வுக்கு படிக்கும் மாணவ, மாணவிகள் அவதியடைந்துள்ளனர், பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். மின் வெட்டை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். #tamilnews
    ×