search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயிரிழப்பு"

    அரியானா மாநிலத்தில் இன்று மாலை லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Haryana #Accident
    சண்டிகர்:

    அரியானா மாநிலம் ரேவாரி பகுதியில் உள்ள நெருஞ்சாலையில் இன்று மாலை லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து நடந்தது. இந்த விபத்தை நேரில் கண்டவர்கள் உடனடியாக காவல்துறைக்கும், ஆம்புலன்ஸ் வாகனத்துக்கும் தகவல் அளித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர். இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விபத்துக்கான காரணம் குறித்தும், இறந்தவர்களின் அடையாளம், முகவரி குறித்தும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Haryana #Accident
    உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். #UttarakhandLandslide
    புதுடெல்லி:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் தெஹ்ரி மாவட்டம் கோட் கிராமத்தில் இன்று அதிகாலையில் திடீரென  நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், ஒரு வீடு முழுவதும் இடிபாடுகளில் புதைந்தது. தகவல் அறிந்த பொதுமக்கள் அங்கு சென்று வீட்டிற்குள் சிக்கியவர்களை மீட்க முயன்றனர். ஆனால், 10 வயது சிறுமியை மட்டுமே அவர்களால் உயிருடன் மீட்க முடிந்தது. மீதமுள்ள 7 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்களில் ஒரு பெண் கர்ப்பமாக இருந்துள்ளார்.

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் நிலச்சரிவில் சிக்கி பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #UttarakhandLandslide
    கிருமாம்பாக்கம் அருகே கூலித்தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பாகூர்:

    கிருமாம்பாக்கம் அருகே கன்னியக்கோவிலை அடுத்த மதிகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது55), கூலித்தொழிலாளி. இவருக்கு விஜயா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 2 மகள்களும் உள்ளனர்.

    வெங்கடேசன் தினமும் வேலைமுடிந்து இரவில் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம். அதுபோல நேற்று மாலை வேலை முடிந்து மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். போதையில் தள்ளாடியபடியே வந்த அவர் வீட்டுக்குள் நுழையும் போது வீட்டின் கூரை கம்பு தலை மற்றும் முதுகில் குத்தியது. இதனால் தடுமாறி வெங்கடேசன் கீழே மயங்கி விழுந்தார்.

    உடனடியாக அவரை குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வெங்கடேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் வழக்குபதிவு செய்து தடுமாறி விழுந்ததில் வெங்கடேசன் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கூடலூர் அருகே கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த காட்டு யானை பரிதாபமாக இறந்தது.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் தினமும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. நேற்று முன்தினம் கூடலூர் கோக்கால் மலையடிவாரம், 4-ம் நெம்பர், கெவிப்பாரா, பாலவாடி, சூண்டி உள்ளிட்ட பகுதியில் 13 காட்டு யானைகள் முகாமிட்டன. இதனால் கூடலூர் எல்லையோர கிராம மக்கள் பீதி அடைந்தனர். இதனால் வனத்துறையினர் தொடர் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். இந்த நிலையில் ஓவேலி பேரூராட்சி பாலவாடி 1-ம் பாலம் பகுதியில் நேற்று அதிகாலை 6 மணிக்கு சுமார் 50 வயது மதிக்கத்தக்க காட்டு யானை (மக்னா) ஒன்று நுழைந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஓவேலி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கூடலூர்- பார்வுட் சாலையை கடந்து பொதுமக்கள் நடந்து செல்லும் மேடான நடைபாதை வழியாக ஓடியது. வனத்துறையினர் தொடர்ந்து யானையை விரட்டியவாறு சென்றனர்.

    அதே பகுதியில் உள்ள ஜானகி என்பவரது வீட்டின் பின்பக்கம் வழியாக காபி தோட்டத்துக்குள் காட்டு யானை நுழைய முயன்றது. அப்போது அந்த வீட்டின் அருகே நிலத்தில் அடியில் கட்டப்பட்டு இருந்த கழிவுநீர் தொட்டி மீது காட்டு யானை நடந்து சென்றது. அந்த யானையின் எடையை தாங்க முடியாமல் கழிவுநீர் தொட்டியின் மேல்மூடி உடைந்தது. இதில், அந்த யானை கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்தது. மேலும் யானையின் வலதுபுற கால் தொட்டிக்குள் சென்றது. மீதமுள்ள கால்கள் மற்றும் துதிக்கை நிலத்தின் மேற்புறம் இருந்தது.

    கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த காட்டு யானையால் எழுந்திருக்க முடியவில்லை. பலத்த காயம் அடைந்ததால் காட்டு யானை பிளிறியது. சம்பவ இடத்துக்கு வனத்துறையினரும், பொதுமக்களும் ஓடி வந்தனர். பின்னர் தொட்டிக்குள் விழுந்த காட்டு யானையை மீட்பதற்காக தொட்டியின் அருகே மண்ணை தோண்டும் பணியில் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டனர். இருப்பினும் காட்டு யானையால் வெளியே வர முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் உதவி வன பாதுகாவலர் விஜயன், வனச்சரகர்கள் குமார், ராமகிருஷ்ணன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி உள்பட வனத்துறையினர், போலீசார் அப்பகுதிக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    மேலும் தொட்டிக்குள் காட்டு யானை விழுந்து இருக்கும் தகவல் பரவியதால் ஏராளமான பொதுமக்கள் அப்பகுதிக்கு வர தொடங்கினர். இதனால் காட்டு யானையை மீட்கும் பணி பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் பொதுமக்களை அங்கிருந்து செல்லுமாறு கூறினர். மேலும் காட்டு யானையை பொக்லைன் எந்திரம் கொண்டு மீட்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக கூடலூரில் இருந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. பின்னர் சுமார் 80 அடி உயரமான பாதை வழியாக பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டது.

    இதனிடையே சுமார் 2½ மணி நேரத்துக்கு பிறகு காட்டு யானை உயிரிழந்தது. இது கிராம மக்கள் மற்றும் வனத்துறையினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர் பொக்லைன் எந்திரம் உதவியுடன் காட்டு யானையின் உடல் தொட்டியில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.

    தொடர்ந்து கால்நடை டாக்டர் டேவிட் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த வேகத்தில் காட்டு யானையின் நெஞ்சு மற்றும் இருதயத்தில் பலத்த அடிபட்டு உயிரிழந்தது தெரிய வந்தது. பின்னர் காட்டு யானையின் உடல் அப்பகுதியில் புதைக்கப்பட்டது. 
    தண்டராம்பட்டு அருகே நாட்டு வைத்தியத்தில் கருக்கலைப்பு செய்த மாற்றுத்திறனாளி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வைத்தியம் செய்த மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் தரடாப்பட்டு அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி சத்யா (வயது 27), வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளி. இவர்களுக்கு இந்துமதி (8) என்ற மகள் உள்ளார்.

    இந்த நிலையில் சத்யா மீண்டும் கர்ப்பமாகி உள்ளார். இந்த கர்ப்பத்தை கலைக்க முடிவு செய்தனர். செங்கம் அருகில் உள்ள கரியமங்கலம் கிராமத்திற்கு சென்று நாட்டு வைத்தியம் பார்க்கும் கன்னியம்மாள் (70) என்ற மூதாட்டியிடம் கருவை கலைக்கும்படி கூறியுள்ளனர். இதையடுத்து மூதாட்டி எருக்கன் குச்சி வைத்து கருவை கலைக்கும் சிகிச்சை அளித்துள்ளார்.

    இதனால் சத்யாவிற்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனால் சத்யாவின் உடல்நிலை கவலைக்கிடமானது. இதனையடுத்து அவரை சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சத்யா பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை வீட்டுக்கு எடுத்து வந்த உறவினர்கள், போலீசாருக்கு தெரியாமல் அடக்கம் செய்தனர்.

    இதுகுறித்து தண்டராம்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் பாலாஜி, சாத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கருக்கலைப்பு செய்த கன்னியம்மாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருபுவனை அருகே பள்ளி மைதானத்தில் விளையாடிய போது 9-ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து இறந்து போனார்.
    திருபுவனை:

    திருபுவனை அருகே மதகடிப்பட்டு பாளையம் கஸ்தூரிபாய் நகரை சேர்ந்தவர் கலைச்செல்வன். விவசாயி. இவரது மகள் நிஷாந்தி (வயது 14).

    இவர், அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை நிஷாந்தி வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். மாலையில் பள்ளி விளையாட்டு மைதானத்தில் மற்ற மாணவிகளுடன் நிஷாந்தி விளையாடிக் கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென நிஷாந்தி மயங்கி விழுந்தார். உடனடியாக பள்ளி தலைமை ஆசிரியர் கணபதி அப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் நிஷாந்தியை மீட்டு திருபுவனை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நிஷாந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் பிரியா, உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேலு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே பள்ளியில் மாணவி மயங்கி விழுந்து இறந்தது குறித்து அறிந்ததும் பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் குப்புசாமி நேற்று மாலை பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினார். மாணவி நிஷாந்தி மயங்கி விழுந்து இறந்து போனதையடுத்து இன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கிஷ்த்வார் மாவட்டத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் புதையுண்ட வாகனங்களில் சென்ற 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Kishtwarlandslide
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள பட்டார் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெற்றுவரும் மச்சைல் யாத்திரையில் பங்கேற்பதற்காக இன்று பலர் டோடா-கிஷ்த்வார் சாலை வழியே வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது, காலை 10.30 மணியளவில் குல்லிகாட் என்னும் இடத்தில் பாறைகள் சூழ்ந்த  பகுதியில் திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு காரும் மினி பஸ்சும் சிக்கி, புதையுண்டது.

    இடிபாடுகளில் சிக்கி இந்த வாகனங்களில் சென்ற ஒரு பெண் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். #Kishtwarlandslide
    வேதாரண்யம் அருகே வயலில் கிடந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி 2 பசுமாடுகள்- கன்றுக்குட்டி உயிரிழந்தன.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட உம்பளச்சேரி கீழ்பகுதியில் வசித்து வருபவர் திலகர்(வயது45). அதே ஊரை சேர்ந்தவர் சாந்தி(40). இவர்கள் 2 பேரும் தங்களது வீடுகளில் பசுமாடுகள் வளர்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் திலகருக்கு சொந்தமான ஒரு பசுமாடு மற்றும் கன்று குட்டி ஒன்றும், சாந்திக்கு சொந்தமான பசுமாடும் அந்த பகுதியில் உள்ள ஒரு வயலில் சம்பவத்தன்று மோய்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வயலில் சாய்ந்த கிடந்த மின்கம்பத்தில் சென்ற மின்கம்பியை மாடுகள் மிதித்துள்ளன. இதனால் மாடுகளை மின்சாரம் தாக்கியது. இதில் 2 பசுமாடுகளும், கன்றுக்குட்டியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாடுகளின் உரிமையாளர்கள் அங்கு வந்து பார்த்தனர். இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி 2 பசுமாடு, ஒரு கன்று குட்டி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சிரியா நாட்டின் இட்லிப் மாகாணத்தில் உள்ள ஆயுத கிடங்கில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர். #Weaponsdepot #Idlibexplosion #39civilianskills
    டமாஸ்கஸ்:

    சிரியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள இட்லிப் மாகாணத்தில் அரசுப்படைகளுக்கும் போராளி குழுக்களுக்கும் இடையே நடந்துவரும் உள்நாட்டுப் போரால் அங்கு வாழும் சுமார் 25 லட்சம் மக்களில் சரிபாதி பேர் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறி விட்டனர்.

    இந்த மாகாணத்தின் பல பகுதிகள் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில், இட்லிப் மாகாணத்தில் துருக்கி நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள சர்மாடா நகரில் உள்ள அரசு ஆயுத கிடங்கில் இன்று பயங்கரமான வெடி விபத்து ஏற்பட்டது.

    அதிர்ச்சியில் அருகாமையில் உள்ள இரு வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கிய மக்களை புல்டோசர் வாகனங்களின் உதவியுடன் ராணுவத்தினர் மீட்டனர். எனினும், 39 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

    படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் சுமார் 50 பேரில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என அங்குள்ள போர் நிலவரங்களை பார்வையிடும் மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

    இது விபத்தா? அல்லது வன்முறை தாக்குதலா? என்பது தொடர்பான முதல்கட்ட தகவல் ஏதும் வெளியாகவில்லை. #Weaponsdepot  #Idlibexplosion #39civilianskills
    கனடா நாட்டின் நியூ புருன்ஸ்விக் மாகாணத்திற்குட்பட்ட பிரடெரிக்டான் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 போலீசார் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். #frederictonshooting
    மான்ட்ரியல்:

    கனடா நாட்டின் கிழக்கு பகுதியில் நியூ புருன்ஸ்விக் என்னும் கடலோர மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்திற்குட்பட்ட  பிரடெரிக்டான் நகரில் உள்ள குடியிருப்ப பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணியளவில் (இந்திய நேரப்படி மாலை சுமார் 5.30 மணி) துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டது.

    இதனால் பீதியடைந்த மக்கள் வீட்டின் கதவுகளை தாழிட்டுகொண்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் விரைந்துவந்த போலீசார், அப்பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

    துப்பாக்கியால் சுட்ட ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், உயிரிழந்தவர்களில் இருவர் போலீஸ் அதிகாரிகள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.  #Canadiantownshooting #frederictonshooting 
    கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உள்பட 4 பேர் பலியாகினர். மேலும் 22 பேர் படுகாயம் அடைந்தனர்.
    சென்னை:

    உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, நேற்றுமுன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

    இதையடுத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நேற்று சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது. அங்கு அவருடைய உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    மேலும் பொதுமக்களும் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். முக்கிய பிரமுகர்களுக்கு என்று தனி வழியும், பொதுமக்களுக்கு என தனி வழியும் போலீசாரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அதன்படி பொதுமக்களை அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட வழியில் போலீசார் அனுப்பி வந்தனர். ராஜாஜி அரங்கில் பொதுமக்களின் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது. கருணாநிதியை கடைசியாக பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் பொதுமக்கள் முண்டி அடித்துக்கொண்டு வரிசையில் சென்றனர். மேலும் சில இடங்களில் போலீசார் வைத்திருந்த தடுப்புக்களை தகர்த்துவிட்டு பொதுமக்கள் முன்னேறி சென்றனர். அதோடு போலீசாரின் கட்டுப்பாட்டை மீறி முக்கிய பிரமுகர்கள் செல்லும் பாதையில் பொதுமக்கள் நுழைந்தனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. போலீசார், பொதுமக்களை கட்டுப்படுத்த முயன்றபோது இருதரப்புக்கும் இடையே ‘தள்ளு முள்ளு’ ஏற்பட்டது.

    இதில் பொதுமக்கள் பலர் கீழே விழுந்தனர். கூட்டநெரிசலில் சிக்கி பெண் போலீஸ் அனிதா (வயது 42) உள்பட 26 பேர் படுகாயம் அடைந்தனர். போலீசார் அவர்கள் அனைவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சென்னை எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த செண்பகம் (60) என்ற பெண்ணும், ஒரு ஆணும் பரிதாபமாக உயிர் இழந்தனர். மற்ற 24 பேரும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை சரவணன் (37) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த துரை(45) என்பவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. மருத்துவமனையில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த குழந்தைவேலு (62), அம்பத்தூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (71), சென்னையை சேர்ந்த தங்கராஜ் (60), சத்யா (50), கென்னடி (55), வேலூரை சேர்ந்த ஜெயராமன் (54) மற்றும் காஞ்சீபுரத்தை சேர்ந்த சேட்டு (39) ஆகிய 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட் டனர். 
    கோவை தனியார் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பயிற்சியாளரை போலீசார் கைது செய்தனர். #CoimbatoreStudent #Logeshwari
    கோவை:

    தேசிய பேரிடர் மேலாண்மை குழு சார்பில் கோவை அருகே தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று பேரிடர் காலங்களில் எவ்வாறு தப்பிக்க வேண்டும் என்பது குறித்து மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் முகாம் நடைபெற்றது. இதில் கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டாலோ அல்லது பூகம்பம் உள்ளிட்ட நிகழ்வுகளின்போதோ கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து தப்பிப்பது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    3 மாடிகளை கொண்ட இந்த கல்லூரியில் 2-வது மாடியில் இருந்து மாணவிகள் கீழே குதிக்கவும், அவர்களை வலை மூலம் பிடித்து காப்பாற்றுவது போலவும் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி பெறுவதற்காக மாணவிகள் 2-வது மாடியில் நின்றுகொண்டு இருந்தனர். கீழே மாணவிகளை காப்பாற்றுதவற்காக சிலர் வலையை பிடித்துக்கொண்டு நின்றிருந்தனர்.

    இந்த கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்துவந்த லோகேஸ்வரி (வயது 19) என்பவரும் பயிற்சியில் கலந்துகொண்டார். இவர் 2-வது மாடியில் இருந்து கீழே குதிக்க தயக்கம் காட்டினார். அப்போது மேலே நின்றுகொண்டிருந்த பயிற்சியாளர் ஒருவர் தைரியமாக குதி என்று கூறி உற்சாகப்படுத்தினார்.

    ஒருகட்டத்தில் மாணவியின் கையைப் பிடித்து கீழே குதிக்கவைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக லோகேஸ்வரியின் தலை முதல் மாடியில் இருந்த சிலாப்பில் இடித்தது. இதில் அவரது தலை மற்றும் கழுத்து பகுதியில் பலமாக அடிபட்டது. இதனை பார்த்துக்கொண்டு இருந்த மாணவிகள் பயத்தில் அலறினர்.



    காயமடைந்த மாணவி லோகேஸ்வரி உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு முதலுதவி பெற்ற அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் பயிற்சியாளர் ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர்.#CoimbatoreStudent #Logeshwari




    ×