search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாம்பியன்"

    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபெல் நடாலும், பெண்கள் பிரிவில் கரோலினா பிளிஸ்கோவா சாம்பியன் பட்டம் பெற்றனர்.
    ரோம்:

    பிரெஞ்ச் ஓபனுக்கு முன்னோட்டமாக இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்தது. களிமண் தரை போட்டியான இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா), 2-ம் நிலை வீரர் ரபெல் நடாலும் (ஸ்பெயின்) பலப்பரீட்சை நடத்தினர். விறுவிறுப்பான இந்த மோதலில் நடால் 6-0, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி 9-வது முறையாக இந்த பட்டத்தை வசப்படுத்தினார். இந்த ஆட்டம் 2 மணி 25 நிமிடங்கள் நீடித்தது. ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் இத்தகைய மாஸ்டர்ஸ் பட்டத்தை நடால் வெல்வது இது 34-வது முறையாகும். வெற்றி பெற்ற நடாலுக்கு ரூ.7½ கோடியும், 2-வது இடம் பிடித்த ஜோகோவிச்சுக்கு ரூ.3¾ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.



    பெண்கள் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஜோஹன்னா கோன்டாவை (இங்கிலாந்து) தோற்கடித்து வாகை சூடினார். 1978-ம் ஆண்டுக்கு பிறகு செக்குடியரசு வீராங்கனை ஒருவர் இந்த பட்டத்தை உச்சிமுகர்வது இதுவே முதல் முறையாகும். மொத்தத்தில் பிளிஸ்கோவா கைப்பற்றிய 13-வது சர்வதேச பட்டமாக இது அமைந்தது.
    மொனாக்கோவில் நடைபெற்ற மான்ட்கார்லோ டென்னிசின் இறுதிப்போட்டியில் செர்பியா வீரர் துசான் லாஜோவிச்சை வீழ்த்தி இத்தாலி வீரர் பாபியோ போக்னினி கோப்பையை கைப்பற்றினார். #MonteCarlo #Fognini
    மான்ட்கார்லோ:

    மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் இத்தாலி வீரர் போக்னினியும், செர்பியா வீரர் துசான் லாஜோவிச்சும் மோதினர்.

    தொடக்கத்தில் இருந்தே அபாரமாக விளையாடிய போக்னினி 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார். ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் கோப்பையை இத்தாலி வீரர் வெல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. #MonteCarlo #Fognini
    மான்டெர்ரி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா ‘சாம்பியன்’ பட்டம் வென்றார். #Muguruza #MonterreyOpenTitle
    மான்டெர்ரி:

    மான்டெர்ரி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி மெக்சிகோவில் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனைகளான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்)-விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) ஆகியோர் மோதினார்கள். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கார்பின் முகுருஜா 6-1, 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது விக்டோரியா அஸரென்கா காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார். இதனால் கார்பின் முகுருஜா சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

    கடந்த ஆண்டில் இந்த போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்த கார்பின் முகுருஜா அதன் பிறகு வென்ற முதல் பட்டம் இதுவாகும். 3 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக சர்வதேச போட்டியின் இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்த அஸரென்கா பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்து நடையை கட்டினார். இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் அஸரென்கா தரவரிசையில் 7 இடம் முன்னேறி 60-வது இடத்தை பிடித்துள்ளார்.
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி முதல்முறையாக மகுடம் சூடியது. #ISL2018 #BengalureFC #FCGoa
    மும்பை:

    10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து திருவிழாவில் இறுதிப்போட்டி நேற்றிரவு மும்பையில் அரங்கேறியது. இதில் மகுடத்துக்கான பெங்களூரு எப்.சி.- எப்.சி. கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதல் நிமிடத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிரம் காட்டினர். ஆனால் வழக்கமான 90 நிமிடங்களில் யாரும் கோல் போடவில்லை. 81-வது நிமிடத்தில் பெங்களூரு வீரர் மிகு அடித்த அருமையான ஷாட் கம்பத்தில் பட்டு நழுவியது.



    இதையடுத்து 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இரண்டு அணி வீரர்களும் தொடர்ந்து ஆக்ரோஷமாக ஆடினர். அவ்வப்போது உரசலும் ஏற்பட்டது. 105-வது நிமிடத்தில் 2-வது முறையாக மஞ்சள் அட்டை பெற்ற கோவா வீரர் அகமது ஜாஹோ வெளியேற்றப்பட்டார். இதனால் எஞ்சிய நேரம் அந்த அணி 10 வீரர்களுடன் ஆடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டது.

    இந்த பரபரப்பான சூழலில் 116-வது நிமிடத்தில் பெங்களூரு அணி கோல் போட்டது. ‘கார்னர்’ பகுதியில் இருந்து அடிக்கப்பட்ட பந்தை பெங்களூரு வீரர் ராகுல் பெகே தலையில் முட்டி வலையை நோக்கி திருப்பினார். பந்து கோவா கோல் கீப்பர் நவீன்குமாரின் கையில் பட்டு வலைக்குள் தெறித்து விழுந்தது. அதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது. முடிவில் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் கோவாவை தோற்கடித்து முதல்முறையாக கோப்பையை சொந்தமாக்கியது. அதே சமயம் கோவா அணி 2-வது முறையாக இறுதி சுற்றில் தோற்று இருக்கிறது. ஏற்கனவே 2015-ம் ஆண்டிலும் தோல்வி கண்டு இருந்தது. வாகை சூடிய பெங்களூரு அணிக்கு ரூ.8 கோடியும், 2-வது இடத்தை பிடித்த கோவா அணிக்கு ரூ.4 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

    அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த கோவா அணி வீரரான ஸ்பெயினைச்சேர்ந்த பெர்ரான் கோரோமினாஸ் (16 கோல்) தங்க காலணி மற்றும் தங்கப்பந்து விருதை பெற்றார். சிறந்த கோல் கீப்பர் விருதுக்கு பெங்களூரு வீரர் குர்பிரீத் சிங் சந்து தேர்வு செய்யப்பட்டார்.
    ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனில் சீன வீராங்கனை சென் யூபே 21-17, 21-17 என்ற நேர் செட் கணக்கில் தாய் ஜூ யிங்கை சாய்த்து ‘சாம்பியன்’ பட்டத்தை தட்டிச்சென்றார். #AllEnglandOpen
    பர்மிங்காம்:

    ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் பர்மிங்காமில் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான தாய் ஜூ யிங் (சீனதைபே), 4-ம் நிலை வீராங்கனை சென் யூபேவை (சீனா) எதிர்கொண்டார்.

    அபாரமாக ஆடிய 21 வயதான சென் யூபே 21-17, 21-17 என்ற நேர் செட் கணக்கில் 41 நிமிடங்களில் தாய் ஜூ யிங்கை சாய்த்து, இந்த பட்டத்தை முதல்முறையாக தட்டிச் சென்றார். சென் யூபே, தாய் ஜூ யிங்கை தோற்கடிப்பது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு அவருக்கு எதிராக ஆடியிருந்த 11 ஆட்டங்களிலும் தோல்வி கண்டிருந்தார். வாகை சூடிய சென் யூபேவுக்கு ரூ.49 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது. #AllEnglandOpen
    நாமக்கல் அருகே நடைபெற்ற மாநில பெண்கள் கைப்பந்து போட்டியில் டாக்டர் சிவந்தி கிளப் அணி ‘சாம்பியன்’ பட்டத்தை தட்டிச்சென்றது. #DRSivanthiClub
    நாமக்கல்:

    பொங்கல் பண்டிகையையொட்டி நாமக்கல் அருகே உள்ள தூசூரில் இளம்புலி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான பெண்கள் கைப்பந்து போட்டி நடத்தப்பட்டது. இதில் 6 அணிகள் பங்கேற்றன.

    லீக் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் சென்னை டாக்டர் சிவந்தி கிளப் அணி முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. அந்த அணிக்கு கோப்பை மற்றும் ரூ.15 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல் 2-வது இடத்தை பிடித்த பொள்ளாச்சி புளூ ஸ்டார் அணிக்கு கோப்பை மற்றும் ரூ.10 ஆயிரமும், 3-வது இடத்தை பிடித்த கோவை கிருஷ்ணாம்பாள் கல்லூரி அணிக்கு கோப்பை மற்றும் ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டன.

    பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் டாக்டர் சிவந்தி கிளப் செயலாளர் சித்திரை பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். இதில் நாமக்கல் மாவட்ட கைப்பந்து சங்கத்தின் பொருளாளர் அருணகிரி, செயலாளர் சதாசிவம், இணை செயலாளர்கள் சிவநேசன், கனகராஜ் மற்றும் இளம்புலி ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #DRSivanthiClub
    தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் கர்நாடக அணி தமிழகத்தை சாய்த்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை உச்சி முகர்ந்தது. #SeniorNationalVolleyball #Championship #Karnataka
    சென்னை:

    67-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் கேரள அணி 20-25, 25-17, 17-25, 25-19, 15-8 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியனான ரெயில்வே அணியை வீழ்த்தி 11-வது முறையாக பட்டத்தை கைப்பற்றியது. அத்துடன் தொடர்ச்சியாக 9 முறை ரெயில்வேயிடம் இறுதிப்போட்டியில் கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுத்தது. முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் மராட்டிய அணி 25-20, 25-14, 25-18 என்ற நேர்செட்டில் மேற்கு வங்காளத்தை தோற்கடித்தது.

    ஆண்கள் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் தமிழ்நாடு-கர்நாடக அணிகள் சந்தித்தன. விறுவிறுப்பான இந்த மோதலில் முதல் செட்டை தமிழக அணி தனதாக்கியது. 2-வது செட்டை தமிழக அணி மயிரிழையில் இழந்தது. அதன் பிறகு தமிழக அணியால் சரிவில் இருந்து மீள முடியவில்லை. முடிவில் கர்நாடக அணி 21-25, 36-34, 25-18, 25-14 என்ற செட் கணக்கில் தமிழகத்தை சாய்த்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை உச்சி முகர்ந்தது. முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் கேரள அணி 25-23, 25-16, 25-19 என்ற நேர்செட்டில் பஞ்சாப் அணியை பதம் பார்த்தது.

    பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு இந்திய கைப்பந்து சம்மேளன பொதுச்செயலாளர் ராம்அவ்தார்சிங் ஜாக்கர் தலைமை தாங்கினார். சென்னை ஸ்பார்டன்ஸ் நிறுவன சேர்மன் ராஜசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பையை வழங்கினார். விழாவில் ஜோன்ஸ் பவுண்டேசன் நிர்வாக இயக்குனர் ஜோன்ஸ், வேலம்மாள் கல்வி குழும தலைமை செயல் அதிகாரி வேல்முருகன், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக இயக்குனர் (விளையாட்டு) வைத்யநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  #SeniorNationalVolleyball #Championship #Karnataka 
    மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது. #MaharashtraOpen #RohanBopanna #DivijSharan
    புனே:

    மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்தது. இதில் நேற்று நடந்த இரட்டையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- திவிஜ் சரண் ஜோடி, இங்கிலாந்தின் லுக் பாம்பிரிட்ஜ்-ஜானி ஓமரா இணையை எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆடிய போபண்ணா- திவிஜ் சரண் கூட்டணி 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 38 வயதான போபண்ணா வென்ற 18-வது சர்வதேச இரட்டையர் பட்டம் இதுவாகும். திவிஜ் சரணுக்கு இது 4-வது பட்டமாக அமைந்தது.



    இருவரும் 2018-ம் ஆண்டில் எந்த கோப்பையும் வெல்லாத நிலையில், இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கி அசத்தி இருக்கிறார்கள். 32 வயதான திவிஜ் சரண் கூறும் போது, ‘நிச்சயம் எனக்கு இது சிறப்பான வெற்றி தான். உள்ளூரில் நான் வென்ற முதல் ஏ.டி.பி. பட்டம் இதுவாகும். இது, புதிய சீசனுக்கு எனக்கு நிறைய நம்பிக்கையை தந்துள்ளது’ என்று குறிப்பிட்டார். போபண்ணா- திவிஜ் சரண் இணைக்கு 250 தரவரிசை புள்ளிகளுடன், ரூ.20 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. ஆஸ்திரேலிய ஓபனிலும் இவர்கள் இணைந்து விளையாட இருக்கிறார்கள்.

    இதைத் தொடர்ந்து நடந்த ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), 100-ம் நிலை வீரரான இவா கார்லோவிச்சை (குரோஷியா) சந்தித்தார். இதில் ஆண்டர்சனுக்கு எல்லா வகையிலும் கார்லோவிச் கடும் நெருக்கடி கொடுத்ததால் ஆட்டம் நீயா-நானா என்று பரபரப்புடன் நகர்ந்தது. டைபிரேக்கர் வரை சென்ற முதல் இரு செட்டுகளில் இருவரும் தலா ஒன்றை வசப்படுத்தினர். இதே போல் கடைசி செட்டிலும் அனல் பறந்தது.

    இருவரும் தங்களது சர்வீஸ்களை புள்ளிகளாக மாற்றுவதில் மட்டும் கவனமாக இருந்தனர். ஆண்டர்சன் 6-5 என்று முன்னிலை பெற்று சாம்பியன் பட்டத்திற்குரிய புள்ளியை நெருங்கினார். ஆனால் எதிராளியின் இரண்டு சாம்பியன்ஷிப் புள்ளி வாய்ப்பில் இருந்து தன்னை காப்பாற்றி கொண்ட கார்லோவிச் இந்த செட்டையும் டைபிரேக்கருக்கு கொண்டு சென்றார். டைபிரேக்கரில் தொடக்கத்தில் கார்லோவிச்சின் (5-2) கை ஓங்கினாலும், அதன் பிறகு ஆண்டர்சன் சுதாரித்துக் கொண்டு மீண்டு வெற்றிக்கனியை பறித்தார்.

    2 மணி 44 நிமிடங்கள் நடந்த திரிலிங்கான இந்த மோதலில் ஆண்டர்சன் 7-6 (4), 6-7 (2), 7-6 (5) என்ற செட் கணக்கில் கார்லோவிச்சை சாய்த்து பட்டத்தை சொந்தமாக்கினார். இது அவரது 6-வது பட்டமாகும். 39 வயதான கார்லோவிச் இந்த ஆட்டத்தில் மொத்தம் 36 ஏஸ் சர்வீஸ்கள் வீசியது குறிப்பிடத்தக்கது. வாகை சூடிய ஆண்டர்சனுக்கு ரூ.62 லட்சமும், 2-வது இடம் பெற்ற கார்லோவிச்சுக்கு ரூ.33 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. #MaharashtraOpen #RohanBopanna #DivijSharan
    பார்முலா1 கார் பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். #LewisHamilton #FormulaOne #WorldTitle
    மெக்சிகோ சிட்டி:

    இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இறுதி கட்டத்தை எட்டி விட்ட இந்த போட்டியில் 19-வது சுற்றான மெக்சிகோ கிராண்ட்பிரி போட்டி மெக்சிகோ சிட்டியில் நேற்று முன்தினம் நடந்தது. பந்தய தூரமான 305.354 கிலோமீட்டர் தூர இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.



    இதில் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 1 மணி 38 நிமிடம் 28.851 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்து அதற்குரிய 25 புள்ளிகளை கைப்பற்றினார். அவரை விட 17.316 வினாடிகள் பின்தங்கிய ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) 2-வது இடத்தை பிடித்து 18 புள்ளிகள் பெற்றார்.

    பின்லாந்து வீரர் கிமி ராய்க்கோனென் (பெராரி அணி) 3-வது இடத்தை பெற்று 15 புள்ளிகளை தனதாக்கினார். நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 4-வது இடம் பிடித்து 12 புள்ளிகள் பெற்றார். இந்த போட்டியில் 7-வது இடத்துக்குள் வந்தாலே ‘சாம்பியன்’ பட்டத்தை தக்க வைத்து கொள்ள முடியும் என்ற நிலையில் களம் கண்ட லீவிஸ் ஹாமில்டன் 4-வது இடத்தை பிடித்ததன் மூலம் மீண்டும் ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றினார்.

    இன்னும் 2 சுற்று பந்தயங்கள் (பிரேசில் கிராண்ட்பிரி நவம்பர் 11-ந் தேதி, அபுதாபி கிராண்ட்பிரி நவம்பர் 25-ந் தேதி) எஞ்சி இருக்கும் நிலையில் லீவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தி உள்ளார். 33 வயதான லீவிஸ் ஹாமில்டன் பார்முலா1 ‘சாம்பியன்’ பட்டத்தை வெல்வது இது 5-வது முறையாகும். அவர் ஏற்கனவே 2008, 2014, 2015, 2017-ம் ஆண்டுகளில் பட்டத்தை வென்று இருந்தார். அத்துடன் பார்முலா1 பட்டத்தை அதிக முறை வென்ற வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஜெர்மனியின் மைக்கேல் சூமாக்கருக்கு (7 முறை) அடுத்த 2-வது இடத்தை அர்ஜென்டினாவின் ஜூயன் மானுவேல் பான்ஜியோவுடன் (5 முறை) இணைந்து லீவிஸ் ஹாமில்டன் பெற்றார். #LewisHamilton #FormulaOne #WorldTitle 
    பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா, அமெரிக்காவின் ஸ்டீபன்சை வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றினார். ரூ.17¼ கோடி பரிசுத்தொகையையும் பெற்றார். #WTAFinal #SloaneStephen #ElinaSvitolina
    சிங்கப்பூர்:

    டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்ற பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் ஒரு வார காலமாக நடந்து வந்தது. கிராண்ட்ஸ்லாமுக்கு நிகராக வர்ணிக்கப்படும் இந்த டென்னிஸ் திருவிழாவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் ஸ்லோனே ஸ்டீபன்சும் (அமெரிக்கா), 7-ம் நிலை வீராங்கனையான எலினா ஸ்விடோலினாவும் (உக்ரைன்) மல்லுகட்டினர்.



    முதலாவது செட்டில் 2-வது கேமில் ஸ்விடோலினாவின் சர்வீசை முறியடித்த ஸ்டீபன்ஸ் அதன் தொடர்ச்சியாக முதல் செட்டை எளிதில் வசப்படுத்தினார். 2-வது செட்டில் சுடச்சுட பதிலடி கொடுத்த ஸ்விடோலினா மூன்று முறை எதிராளியின் சர்வீசை ‘பிரேக்’ செய்து அந்த செட்டை தனக்கு சாதகமாக மாற்றினார். கடைசி செட்டிலும் ஆக்ரோஷமாக ஆடிய ஸ்விடோலினாவின் கை ஓங்கியது. பந்தை வலுவாக வெளியே அடித்து விட்டு தானாக செய்யக்கூடிய தவறுகளை ஸ்டீபன்ஸ் அதிகமாக (48 முறை) செய்ததால், பின்னடைவை சந்திக்க நேரிட்டது.

    2 மணி 23 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தின் முடிவில் ஸ்விடோலினா 3-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றியை ருசித்து முதல்முறையாக இந்த பட்டத்தை உச்சிமுகர்ந்தார். 46 ஆண்டுகால பெண்கள் டென்னிஸ் வரலாற்றில் உக்ரைன் வீராங்கனை ஒருவர் இந்த கோப்பையை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

    இந்த தொடரில் ஸ்விடோலினா தோல்வியே சந்திக்கவில்லை. 2013-ம் ஆண்டு செரீனா வில்லியம்சுக்கு பிறகு தோல்வி பக்கமே செல்லாமல் வாகை சூடிய வீராங்கனை ஸ்விடோலினா தான். 24 வயதான ஸ்விடோலினாவின் வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய பட்டம் இதுவாகும். ‘இது எனக்கு சிறப்பு வாய்ந்த தருணமாகும். எனது செயல்பாடு மிகவும் திருப்தி அளிக்கிறது. இந்த வெற்றி நிறைய நம்பிக்கையை கொடுக்கும்’ என்று ஸ்விடோலினா பெருமிதத்துடன் கூறினார். போட்டி கட்டணம், லீக்கில் ஒவ்வொரு வெற்றிக்குரிய பரிசு என்று எல்லாவற்றையும் சேர்த்து மொத்தம் ரூ.17¼ கோடியை ஸ்விடோலினா பரிசாக அள்ளினார். 2-வது இடம் பிடித்த ஸ்டீபன்சுக்கு ரூ.8¾ கோடி கிட்டியது.



    இந்த வெற்றியின் மூலம் ஸ்விடோலினா இன்று வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறுகிறார். ஸ்டீபன்ஸ் ஒரு இடம் உயர்ந்து 5-வது இடத்தை பிடிக்கிறார். ருமேனியாவின் சிமோனா ஹாலெப் முதலிடத்தில் தொடருகிறார்.

    இதன் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் டைமியா பாபோஸ் (ஹங்கேரியா)- கிறிஸ்டினா மிலாடெனோவிச் (பிரான்ஸ்) கூட்டணி 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ‘நம்பர் ஒன்’ ஜோடியும், விம்பிள்டன் சாம்பியனுமான செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா-கேத்ரினா சினியகோவா இணையை வீழ்த்தி பட்டத்தை தனதாக்கியது. இவர்களுக்கு ரூ.3½ கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

    அடுத்த ஆண்டு இந்த போட்டி சீனாவின் ஷின்ஜென் நகருக்கு மாற்றப்படுகிறது. அத்துடன் ஒட்டுமொத்த பரிசுத்தொகை ரூ.50 கோடியில் இருந்து ரூ.100 கோடியாக உயர்த்தப்படுகிறது.
    சுசீந்திரன் இயக்கத்தில் `ஜீனியஸ்' படம் வருகிற அக்டோபர் 26-ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், தனது அடுத்த படமான `சாம்பியன்' படத்தின் படப்பிடிப்பை முடித்த சுசீந்திரன், டப்பிங் பணிகளை துவங்கியிருக்கிறார். #Champion
    சுசீந்திரன் இயக்கத்தில் `ஜீனியஸ்' திரைப்படம் வருகிற அக்டோபர் 26-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், சுசீந்திரன் தனது அடுத்த படமான `சாம்பியன்' படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். மேலும் படத்தின் டப்பிங் பணிகளும் இன்று துவங்கியிருக்கிறது. 

    சுசீந்திரன் இயக்கத்தில் விளையாட்டை மையமாக வெளியான `வெண்ணிலா கபடி குழு', `ஜீவா' படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து சாம்பியன் படத்தை கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாக்கி இருக்கிறார்.

    இதில் புதுமுகம் ரோஷன், மிர்னாலினி நாயகன் நாயகியாக நடித்துள்ளார்கள். இவர்களோடு ஜி.கே.ரெட்டி, அஞ்சாதே நரேன், ஜெயப்பிரகாஷ், ஆர்.சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.



    அரோல் கோரொலி இசையமைக்கும் இந்த படத்துக்கு, சுஜித் சாரங் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் சார்பாக கே.ராகவி இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படம் டிசம்பரில் வெளியாக உள்ளது.

    சுசீந்திரன் இயக்கத்தில் `ஏஞ்சலினா' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. #Champion

    அகில இந்திய ஆக்கி போட்டியில் ஐ.ஓ.சி. அணி 4-0 என்ற கோல் கணக்கில் ரெயில்வே அணியை தோற்கடித்து 4-வது முறையாக சாம்பியன் கோப்பையை உச்சிமுகர்ந்தது. #Hockey #IOC #Champion #Railway
    சென்னை:

    92-வது எம்.சி.சி.-முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியன் ஆயில் கார்பரேஷன் (ஐ.ஓ.சி.), இந்தியன் ரெயில்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி அசத்திய ஐ.ஓ.சி. அணி 4-0 என்ற கோல் கணக்கில் ரெயில்வே அணியை தோற்கடித்து 4-வது முறையாக சாம்பியன் கோப்பையை உச்சிமுகர்ந்தது. ஐ.ஓ.சி. அணியில் ரோஷன் மின்ஸ் (14-வது நிமிடம்), குர்ஜிந்தர் சிங் (18-வது நிமிடம்), தல்விந்தர்சிங் (21-வது நிமிடம்), பாரத் சிக்ரா (52-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர்.

    இந்த தொடரில் தோல்வியே சந்திக்காமல் வாகை சூடிய ஐ.ஓ.சி. அணிக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பிடித்த ரெயில்வே அணிக்கு ரூ.2½ லட்சம் கிடைத்தது. இது தவிர, சிறந்த முன்கள வீரராக பர்தீப்சிங் (ரெயில்வே), சிறந்த நடுகள வீரராக பவால் லக்ரா (இந்திய ராணுவம்), சிறந்தகோல் கீப்பராக குர்விந்தர்சிங் (பஞ்சாப் சிந்து வங்கி), தொடரின் சிறந்த வளரும் வீரராக வீர தமிழன் (சென்னை ஆக்கி சங்கம்), ஆட்டநாயகனாக குர்ஜிந்தர்சிங் (ஐ.ஓ.சி.) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் மற்றும் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.  #Hockey #IOC #Champion #Railway
    ×