search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீடூ"

    மீடூ பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ராகுல் ஜோர ஐசிசி கூட்டத்தில் பங்கேற்பதில் இருந்து விலகியுள்ளார். #MeToo #BCCI
    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோரி. கிரிக்கெட் வாரியத்துக்கு வருவதற்கு முன்பு இவர் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றினார். இந்த நிலையில் ராகுல் ஜோரி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் பத்திரிகையாளர் ஒருவர் சமீபத்தில் ‘மீடூ’ ஹேஸ்டேக்கில் குற்றம்சாட்டி இருந்தார்.

    இதைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியம் அவரிடம் 1 வாரத்துக்குள் விளக்கம் அளிக்குமாறு கேட்டது. அவர் அதற்கு மேலும் கால அவகாசம் கேட்டு இருந்தார். இதனால் ஐசிசி கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று கூறியிருந்தார்.



    இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைமை நிர்வாக அதிகாரிகள் கூட்டம் வருகிற 17 மற்றும் 18-ந்தேதியில் சிங்கப்பூரில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் ராகுல் ஜோரி கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டதால் அவர் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவருக்கு பதிலாக கிரிக்கெட் வாரிய செயலாளர் அமிதாப் சவுத்ரி கலந்து கொள்ள இருக்கிறார்.
    பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக பாடகி சின்மயி கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக கவிஞர் வைரமுத்துவை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி கடுமையாக சாடியுள்ளார். #Thilagavathi #Vairamuthu #MeToo #Chinmayi
    சென்னை:

    கவிஞர் வைரமுத்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக பாடகி சின்மயி குற்றம் சாட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி திலகவதி கூறியதாவது:-

    வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை. அவர் ஏதாவது கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருக்கிறாரா? ஏதேனும் பொறுப்பில் இருக்கிறாரா? இல்லையே. பணத்துக்காக பாடல் எழுதுபவர் தானே? பிறகு ஏன் அவரை விசாரிக்க கூடாது?

    வைரமுத்து தன் மீது வைக்கப்பட்ட குற்றசாட்டுகளுக்கு காலம்தான் பதில் சொல்லும் என்கிறார். காலமா சின்மயிக்கு பாலியல் துன்புறுத்தல் தந்தது? இப்படி ஒரு பதிலை சொல்லிவிட்டு ஒதுங்கலாமா? சம்பந்தப்பட்டவர்கள் தானே பதில் சொல்லவேண்டும்?

    வைரமுத்து ஒரு பெரிய மனிதர் என்று சொல்லிக் கொள்கிறார். அதை நாங்கள் தான் சொல்லவேண்டும். பிரபலமானவர்கள் எல்லாம் பெரிய மனிதர்கள் கிடையாது. அழகாக பேசினாலே அதற்கு மயங்கக் கூடியவர்கள் தமிழர்கள். அதுபோன்ற போக்கு தான் இது.


    சின்மயி வி‌ஷயத்தில் அரசியல் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. சின்மயி ஏன் காவல்துறைக்கு செல்ல தாமதிக்கிறார் என்றும் தெரியவில்லை. சின்மயி வி‌ஷயத்தில் யாராவது ஒரு நீதிபதி தானே முன்வந்து கையில் எடுத்து விசாரிக்க வேண்டும்.

    இது இன்னும் வழக்காக மாறாமல் இருப்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. சின்மயி தாமதமாக புகார் சொல்வதை குறை சொல்ல முடியாது. சம்பவம் நடந்தபோது அவருக்கு 17, 18 வயது தான். அந்த சூழலில் அவர் குழப்ப நிலைக்கு தான் சென்றிருப்பார். இப்போது அவருக்கு வயது காரணமாக பக்குவம் வந்திருக்கலாம்.

    பெண்ணுக்கு தீங்கு நடக்கும்போது அவள் அதை சத்தமாக வெளியில் கொண்டு வரவேண்டும். இதில் வெட்கப்பட வேண்டியவர் அந்த குற்றத்தை செய்தவர்தானே தவிர பாதிக்கப்படும் பெண்கள் அல்ல என்பது புரிய வேண்டும். சமூக வலைதளங்களில் இதை பகிர்வதால் நிச்சயம் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

    அரசாங்கமும் இதற்கு இன்னும் உதவ வேண்டும். ஜெயலலிதா இருந்தபோது இதுபோன்ற புகார்களை எடுத்து சென்று இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து இருப்பார்.

    இவ்வாறு திலகவதி கூறி உள்ளார். #Thilagavathi #Vairamuthu #MeToo #Chinmayi
    குறிப்பிட்ட துறையில் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் பிரச்சனை உள்ளதாக நடிகை கஸ்தூரி கூறினார். #MeToo #Kasthuri
    நெல்லை:

    தாமிரபரணி புஷ்கரத்தை முன்னிட்டு நடிகை கஸ்தூரி இன்று மதியம் நெல்லை வந்தார். பின்னர் அவர் குறுக்குத்துறை சுப்பிரமணிய சாமி கோவில் ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விருட்சிக ராசிக்குரிய நதி தாமிரபரணி. 144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் புஷ்கர விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. நேற்று வரை இதன் சிறப்புகள் எனக்கு தெரியாமல் இருந்தது. இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இங்கு வந்த பிறகே அதன் சிறப்புகளை பற்றி தெரிந்து கொண்டேன். என்னுடைய ராசியும் விருட்சிகம் தான். எனவே இங்கு வந்து நீராடினேன்.


    பெண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனை தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். அதற்கு தீர்வு என்ன என்பதை யோசிக்க வேண்டும். குறிப்பிட்ட துறையில் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் பிரச்சனை உள்ளது.

    இதுதான் மீ டூ இயக்கத்தின் மூலம் வெளிவருகிறது. பெண்களுக்கு விரைவில் சம நீதி கிடைக்கும் என நம்பிக்கையுள்ளது. அதன் முதல்படி தான் இன்றைய நிகழ்வுகள். அரசு சட்டங்கள் உள்ளது. அது சரியான திசையில் சென்றடைய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MeToo #Kasthuri
    நடிகைகள் பாலியல் தொடர்பு புகார் அளித்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நடிகர் சங்கத்தின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று நடிகை ஸ்ரீபிரியா தெரிவித்துள்ளார். #MeToo #Sripriya #Vishal
    சேலம்:

    சேலத்தில் நடிகை ஸ்ரீபிரியா நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடிகைகள் பாலியல் தொடர்பு புகார் அளித்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நடிகர் சங்கத்தின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. எந்த ஒரு புகார் என்றாலும் விசாரிக்கப்பட வேண்டும்.


    சின்மயி பொறுப்பானவர். தான்தோன்றித்தனமாக பேசக்கூடியவர் அல்ல. ஏன்? முன்பே அவர் சொல்லவில்லை என்பது இரண்டாம்பட்சம். இப்போதாவது வெளியானதே என்பது முக்கியம்.

    இதனால் வருங்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் குறையும். திரைத்துறை மட்டுமல்ல, எந்த இடத்தில் பெண்களுக்கு தொல்லைகள் நேர்ந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MeToo #Sripriya #Vishal
    என்மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை, பொய்யாக ஜோடிக்கப்பட்டவை என மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் இன்று விளக்கம் அளித்துள்ளார். #MJAkbar #MeToo
    புதுடெல்லி:

    பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை “மீ டூ” என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் இந்த “மீ டூ” இந்தியா ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் பாதிப்பு அடைந்துள்ளனர். 
     
    அவ்வகையில், மீ டூ பாலியல் குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி எம்.ஜே.அக்பரும் ஆளாகியிருக்கிறார். பிரபல பத்திரிக்கையாளராக இருந்து பா.ஜனதாவில் இணைந்து இப்போது மாநிலங்களவை எம்.பி. மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி என பொறுப்பில் இருக்கும் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்துள்ளனர். 

    அவர் மீதான புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆனால் மத்திய மந்திரி எம்.ஜே. அக்பர் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எந்த பதிலையும் அளிக்காமல் இருக்கிறார். அவர் விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், அரசுமுறைப் பயணமாக வெளிநாடு சென்றிருந்த அக்பர் இன்று டெல்லி திரும்பினார். தன்மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இன்று மாலை அறிக்கை வெளியிட்ட அவர், எனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை, பொய்யாக ஜோடிக்கப்பட்டவை  என குறிப்பிட்டுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் இப்போது இத்தகைய புகார்கள் எழுப்பப்படுவது ஏன்? என கேள்வி எழுப்பிய அக்பர், அடிப்படை ஆதாரங்களற்ற இந்த குற்றச்சாட்டுகளால் தனது நன்மதிப்புக்கு களங்கம் நேர்ந்துள்ளதாகவும், இதுதொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளை எனது வழக்கறிஞர்கள் மேற்கொள்வார்கள் எனவும் தெரிவித்தார். #MJAkbar #MeToo
    மீடூ மூலம் வெளிச்சத்துக்கு வரும் நடிகைகளின் பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் அறிவித்துள்ளார். #MeToo #Vishal
    சென்னை:

    சமீபத்தில் இந்தி நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகளின் மிரட்டலையும் பொருட்படுத்தாமல் தனுஸ்ரீ தத்தா தொடர்ந்து பாலியல் புகாரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.

    அவருக்கு பெண்கள் அமைப்பு, பெண் எழுத்தாளர்கள், பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தனர். தனுஸ்ரீ தத்தாவைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மேலும் பல பெண் பிரபலங்கள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகளை வெளியிட முன்வந்தனர்.

    இதற்காக சமூக வலைதளத்தில் ‘மீ டூ’ ஹேஷ்டேக் தொடங்கப்பட்டது. அதில் பல பெண்கள் தெரிவித்த பாலியல் புகார்கள் வெளியிடப்பட்டன.


    முதலில் மத்திய மந்திரி எம்.ஜே. அக்பர் மீது பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார்.

    தென்னிந்தியாவில் முதல் முறையாக பிரபல பின்னணி பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் செய்தார். சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா மற்றும் சுவிட்சர்லாந்தில் நடந்த இசை நிகழ்ச்சி என பல இடங்களில் தனக்கு வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என்று தெரிவித்தார்.

    இதேபோல் மேலும் பல பாடகிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    சின்மயிக்கு நடிகைகள் சமந்தா, வரலட்சுமி, ஆன்ட்ரியா, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சித்தார்த் உள்பட பலர் ஆதரவு தெரிவித்தனர். நடிகர் கமல்ஹாசன், கனிமொழி எம்.பி. போன்றோரும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து கருத்து வெளியிட்டனர்.

    பாடகி சின்மயிக்கு ஆதரவாக திரைத்துறையினர் குரல் கொடுக்க வேண்டும், அவர்கள் மவுனமாக இருப்பது ஏன் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி நடிகர் சங்க பொதுச்செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷாலிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-


    திரையுலகில் பாலியல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகும் பெண்களுக்கு என்ன தீர்வு காணப்போகிறீர்கள்? என்ற கேள்வியை பலரும் முன் வைத்தனர். பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது கூறியிருக்கும் பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டால், நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்கப்படும்.

    தமிழ் திரையுலகில் மீ டூ விவகாரம் தொடர்பாக விசாரிப்பதற்கென்றே 3 பேரை கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.

    ஜூனியர் கலைஞர்கள் முதல் மூத்த கலைஞர்கள் வரை புகார் செய்யலாம். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். குழுவில் நடிகர்-நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோரது பிரதிநிதிகள் தலா ஒருவர் இடம் பெறுவார்கள்.

    இவ்வாறு விஷால் கூறினார்.

    ஏற்கனவே ‘மீ டூ’வில் வரும் பாலியல் புகார்களை விசாரிக்க மத்திய அரசு சார்பில் குழு அமைக்கப்படும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி அறிவித்து இருந்தார்.

    ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய 4 பேர் இந்த குழுவில் இடம்பெறுவார்கள் என்று தெரிவித்து இருந்தார். தற்போது நடிகர் சங்கமும் குழு அமைக்க முடிவு செய்து இருப்பதன் மூலம் பாலியல் புகார்கள் விஸ்வரூபம் எடுக்கிறது.

    ஏற்கனவே ஆந்திராவில் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது ஒட்டு மொத்தமாக பாலியல் குற்றச்சாட்டு கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார். சினிமா வாய்ப்பு தருவதாக கூறி நடிகர்கள், இயக்குனர்கள் பாலியல் ரீதியாக தன்னை பயன்படுத்தி ஏமாற்றி விட்டார்கள் என்றார்.

    அவர் ஐதராபாத்தில் அரைநிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. #MeToo #Vishal
    பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்களால் ட்விட்டரில் பூதாகாரமாய் வெடித்திருக்கும் மீடூ விவகாரம் பற்றி நடிகை குஷ்பு விளக்கம் அளித்துள்ளார். #MeToo #TimesUp #Kushboo
    திரைத்திறையில் நடக்கும் செக்ஸ் அத்துமீறல்கள் பற்றி மீடூ என்ற இயக்கம் முன்னெடுக்கப்பட்டு அதன் மூலம் நடிகைகள், பாடகிகள் என்று திரைத்துறையில் உள்ள பெண்கள் தாங்கள் பாதிக்கப்பட்டதை பகிர்ந்து வருகிறார்கள்.

    கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி சமீபத்தில் பாலியல் புகார் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து மீடூ மூலம் அது குறித்த விவரங்களை பலர் அனுப்பி வருகிறார்கள்.
    இந்த நிலையில், நடிகை குஷ்பு பாலியல் தொடர்பான பிரச்சனைகளை சந்தித்துள்ளீர்களா என்று ரசிகர்கள் ட்விட்டரில் கேட்டனர். அதற்கு பதில் அளித்த குஷ்பு, 

    40 வருடங்களாக திரைத்துறையில் இருக்கும் நான் நான் பாலியல் தொல்லையை எதிர்கொண்டிருக்கிறேனா என்று பலர் கேட்கின்றனர். உங்களை ஏமாற்றுவதற்கு மன்னியுங்கள், இதுவரை எனக்கு அப்படி நடந்ததில்லை. என்னுடைய பிரச்சனைகளை நானே அடித்து விரட்ட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அதை மட்டுமே நான் பின்பற்றினேன். 

    என்று கூறியுள்ளார். #MeToo #TimesUp #Kushboo

    ஊழல் குற்றசாட்டு சொன்ன உடன் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #BJP #TamilisaiSoundararajan #Edappadipalaniswami
    சேலம்:

    பா.ஜனதா மகளிர் அணி மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில் நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி மீடூவில் பாலியல் குற்றசாட்டு வைத்துள்ளார். இது குறித்து தி.மு.க, ம.தி.மு.க கம்யூனிஸ்ட் காங்கிரஸ் சேர்ந்த தலைவர்கள் எந்தவித கருத்தும் சொல்லவில்லை. ஆனால் எஸ்.வி சேகர் இன்னொருவர் பதிவை பேஸ்-புக்கில் பகிர்ந்தார். ஆனால் அவரை பலர் நேரடியாக குற்றம் சாட்டினார்கள். தமிழகத்துக்கு மத்திய அரசு திட்டங்களையும் கொண்டு வரவில்லை என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறிவருகிறார். மத்திய அரசு சார்பில் தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. குறிப்பாக நெல்லை, மதுரை, தஞ்சை ஆகிய மருத்துவ கல்லூரிகளுக்கு 150 கோடியில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 600 கோடி ரூபாயில் தடுப்பூசி தொழிற்சாலை நிறுவப்பட்டு வருகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து பெண்களும் செல்லலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது பண்பாட்டை சீர்குலைக்கும் செயலாகும். இது தொடர்பாக அமைதியாக நடக்கும் போராட்டங்களுக்கு பா.ஜனதா ஆதரவு தெரிவித்து வருகிறது.


    முதல்- அமைச்சர் மீதான குற்றசாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும், ஊழல் குற்றசாட்டு சொன்ன உடன் பதவி விலக வேண்டும் என்று அவசியம் இல்லை.

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து வருகிறது. முடிந்தவுடன் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார். பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அவர் எந்த அதிகாரத்தில் இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.   #BJP #TamilisaiSoundararajan #Edappadipalaniswami
    சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சின்மயி, பாலியல் புகார் பற்றி சொல்ல அப்போது துணிச்சல் இல்லை. இப்போது பயம் இல்லை என்று கூறியிருக்கிறார். #Chinmayi
    கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி சமீபத்தில் பாலியல் புகார் கூறியிருந்தார். இதற்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்த நிலையில், சின்மயி மீண்டும் வைரமுத்து மீது குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

    அதில் சுவிட்சர்லாந்தில் நடந்த ‘‘வீழமாட்டேன்?’’ என்ற நிகழ்ச்சிக்கு வைரமுத்து தான் அழைப்பு விடுத்தார். அவர் மீது வைத்திருந்த மரியாதை காரணமாக ஒப்புக்கொண்டு சென்றேன். நிகழ்ச்சி முடிந்ததும் எங்களை மட்டும் விடுதியில் தங்க வைத்தனர். அப்போது தான் இந்த சம்பவம் நடந்ததாக என் தாயார் கூறினார்.

    அதன்பின்னர் வைரமுத்துவிடம் கையெழுத்து வாங்க சென்றபோது என் மீது அத்துமீறல் நடந்தது. அவர் என்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டது உண்மை என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சின்மயி, ‘அந்த சமயத்தில் ஏன் சொல்லவில்லை என்று கேட்கிறார்கள். அப்போது எனக்கு துணிச்சல் இல்லை, இப்போது பயம் இல்லை. பப்ளிசிட்டிக்காக வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறுவதாக கூறுகிறார்கள். நான் பாடிய 96 படத்தின் பாடல்கள் இப்போதுதான் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. டப்பிங் கொடுக்கிறேன். நிறைய பாடல்கள் பாடியிருக்கிறேன். நான் பப்ளிசிட்டிக்காக கூறவில்லை. 

    பாலியல் புகார்களை சொல்லும் சூழல் சமூகத்தில் தற்போதுதான் உருவாகியுள்ளது. புகார் அளித்ததால் எனக்கு வாய்ப்புகள் குறைந்தாலும் அதைப்பற்றி கவலையில்லை. ஒருவர் முன்வந்து சொன்னால்தான் உண்மைகள் வெளியே வரும். என்னைப் போல் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வைரமுத்து மீது புகார் அளிப்பீர்களா? என்ற கேள்விக்கு, என்னுடைய வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து வருகிறேன். விரைவில் வழக்கு தொடர்வேன்’ என்றார்.
    ட்விட்டரில் பாலியல் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்கள் நடத்தி வரும் #MeToo புகார் ஆட்டோமொபைல் துறையிலும் எழுந்துள்ளது.



    அமெரிக்காவில் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்தவர்களின் முகத்திரையை கிழிப்பதற்காக பாதிக்கப்பட்ட பிரபலங்கள் #MeToo (நானும் பாதிக்கப்பட்டேன்) என்னும் பெயரில் ட்விட்டர் மூலம் பிரசார இயக்கத்தை தொடங்கினர். 

    அதேவேளையில், இந்திய திரையுலகிலும் இந்த #MeToo இயக்கம் வேரூன்ற ஆரம்பித்தது. பாலிவுட் நாயகி தனுஸ்ரீ தத்தா, பாடகி சின்மயி உள்ளிட்டோர் பரபரப்பு புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

    பிரபலங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் ட்விட்டரில் நடத்தி வரும் மீடூ புகார், ஆட்டோமொபைல் துறையையும் விட்டுவைக்கவிலை. 




    சினிமா துறையை தொடர்ந்து, மீடூ புகார் கார்ப்பரேட் துறையிலும் பரவியுள்ளது. அந்த வகையில் டாடா மோட்டார்ஸ் தலைமை தகவல் பரிமாற்ற அலுவலர் சுரேஷ் ரங்கராஜன் மீது ட்விட்டரில் புகார் எழுந்துள்ளது. 

    பெண் ஊழியர்களை அச்சுறுத்தியதாக ரங்கராஜன் மீது குற்றஞ்சாட்டப்பட்டு, இது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்கள் ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளன. எனினும் இந்த குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை இதுவரை துவங்கவில்லை. இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

    டாடா மோட்டார்ஸ் குழுமத்தில், பணியாளர்களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அனைத்து புகார்களும் முறையாக விசாரிக்கப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த விவகாரம் குறித்த நடவடிக்கைகள் ஏற்கனவே துவங்கிவிட்டது. 

    மேலும் சட்டத்திற்கு உட்பட்டு உள்புற புகார் அமைப்பு மூலம் விசாரிக்கப்படுகிறது. விசாரணை நிறைவுற்றதும் முறையான நடவடிக்கை எடுக்கப்படும். என டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    திரைத்திறையில் நடக்கும் செக்ஸ் அத்துமீறல்கள் பற்றி பலரும் குற்றச்சாட்டுகளை அடுக்கிவரும் நிலையில், அனுசரித்துப் போகக் கூடிய பெண்கள் முதலில் மாற வேண்டும் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். #LakshmiRamakrishnan
    திரைத்திறையில் நடக்கும் செக்ஸ் அத்துமீறல்கள் பற்றி மீடூ என்ற இயக்கம் முன்னெடுக்கப்பட்டு அதன் மூலம் நடிகைகள், பாடகிகள் என்று திரைத்துறையில் உள்ள பெண்கள் தாங்கள் பாதிக்கப்பட்டதை பகிர்ந்து வருகிறார்கள்.
    இது தொடர்பாக டுவீட் செய்துள்ள நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் “திரைப்படத் துறையை மட்டும் குறை சொல்வது சரியல்ல. மாற்றம் வேண்டுமென்று நினைத்தால், எந்த மாற்றம் வேண்டுமோ அதன் கருவியாக நாம் இருக்க வேண்டும். அனுசரித்துப் போகக் கூடியவர்களாகவும், இரையாகக் கூடியவர்களாகவும் இருக்கும் பெண்கள் முதலில் மாற வேண்டும். நம்முடைய சுய மரியாதை மற்றும் மதிப்பை விட உயர்ந்தது எதுவுமில்லை” என பதிவிட்டுள்ளார். #LakshmiRamakrishnan #MeToo

    எனக்கும், சில பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறிய பாடகி சின்மயின் குற்றச்சாட்டுக்கு வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார். #Chinmayi
    இந்தி பட உலகை அலற வைத்த பாலியல் புகார்கள் இப்போது தமிழ் திரையுலகையும் தாக்க ஆரம்பித்து உள்ளது. கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு சொல்லி உள்ளார். மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடலை பாடி பிரபலமானவர் சின்மயி.

    வாகை சூடவா படத்தில் பாடிய ‘சரசர சாரக்காற்று வீசும்போது சாரப்பார்த்து பேசும்போது’ பாடலும், சிவாஜி படத்தில் பாடிய ‘சஹானா சாரல் வீசுதோ’, ‘கிளிமஞ்சரோ’ பாடல்களும் அவருக்கு புகழை தேடித்தந்தன. மேலும் பல படங்களில் ஏ.ஆர்.ரகுமான் போன்ற பிரபல இசையமைப்பாளர்கள் இசையில் ஏராளமான பாடல்களை பாடி இருக்கிறார்.

    இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து சில பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சின்மயி அவரது டுவிட்டரில் பதிவிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். இதுகுறித்து ஆங்கில தொலைக்காட்சிக்கு நேற்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-



    “எனக்கு வைரமுத்துவால் பாலியல் தொல்லை ஏற்பட்டது. சுவிட்சர்லாந்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது இதை அனுபவித்தேன். என்னை அவர் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு அழைத்தார். நான் மறுத்துவிட்டேன். இதனால் எனக்கு பயம் வந்தது. அவரது அலுவலகத்திலும் இரண்டு பெண்களை முத்தமிட முயற்சித்தார்.

    என்னைப்போல் பாதிக்கப்பட்ட பாடகிகள் இனிமேல் இதுகுறித்து பேசுவார்கள் என்று நம்புகிறேன். வைரமுத்துவின் அதிகார பலத்தால் வெளியே பேச தயங்குகிறார்கள். ஆனால் இது சரியான நேரம். எனவே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பலரும் இதுகுறித்து பேச வேண்டும்.

    விளம்பரத்துக்காக இந்த குற்றச்சாட்டை நான் சொல்லவில்லை. எனக்கு இனிமேல் பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா? என்று தெரியவில்லை. அரசியல் ரீதியாகவும் அழுத்தம் வரலாம். ஆனாலும் இதை யாராவது பேசத்தான் வேண்டும்.”

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து கவிஞர் வைரமுத்து நேற்று டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன். அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை. உண்மையைக் காலம் சொல்லும்.”

    இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.



    வைரமுத்து விளக்கத்தை பார்த்த பாடகி சின்மயி, அவர் ‘பொய்யர்’ என்று பதில் கருத்தை பதிவிட்டார்.

    இந்நிலையில், பாடகி சின்மயி தாய் பத்மாஷினி கூறியதாவது:-

    “சின்மயிக்கு, வைரமுத்து பாலியல் தொல்லை தர முற்படுவதை முதலில் அறிந்ததே நான் தான். ஒரு சினிமா பாடல் வெளியீட்டு விழாவுக்காக, கடந்த 2004-ம் ஆண்டு சுவிட்சர்லாந்து சென்றோம். கச்சேரி முடிந்த பிறகு, எல்லோரையும் அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டு, என்னையும், என் மகள் சின்மயியையும் மட்டும் தங்க சொன்னார்கள். அங்கே வைரமுத்து இருப்பது தெரியாது.

    இந்தநிலையில் பயண ஏற்பாட்டாளர் என்னிடம் வந்து ‘அம்மா நீங்கள் இங்கேயே காத்திருங்கள். சின்மயிக்காக வைரமுத்து ஓட்டலில் காத்திருக்கிறார், வர சொல்லுங்கள்’, என்றார். ‘ஓட்டலுக்கு எதுக்காக சின்மயி தனியாக போகவேண்டும்? எந்த தொழில்முறை பேச்சுவார்த்தையாக இருந்தாலும் ஊருக்கு சென்றதும் வைத்துக்கொள்ளலாமே? எதற்காக இந்த ரகசிய சந்திப்பு?’, என்று கேட்டேன்.

    அதற்கு அந்த நபர் ‘வைரமுத்துவுடன் கொஞ்சம் ஒத்துழையுங்கள்’, என்று வெளிப்படையாக கூறினார். ‘அதற்கு வேறு ஆளை பாருப்பா...’, என்று உறுதியாக கூறி, அங்கிருந்து புறப்பட்டு விட்டோம். இதற்காக சட்ட நடவடிக்கைக்கு செல்லவில்லை.

    மீ டூ இயக்கத்துக்கு சின்மயி ஆதரவாக இருக்கிறார். இது பெரிய இயக்கமாக மாற வேண்டும். இப்போது எல்லோரும் இதுகுறித்து பேச ஆரம்பித்து உள்ளனர். சீரழிவு ஏற்படுத்தும் இந்த சமூகத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.”

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×