search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோடி"

    இந்தியாவின் முக்கிய அமைப்புகளின் புனிதத்தை அழிக்கிற பணியை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டுள்ளார் என காங். கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    தேர்தல் கமிஷனில் எழுந்துள்ள பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக அந்த கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா நேற்று கூறுகையில், “தேர்தல் கமிஷன் விதிகள் ஒருமித்த முடிவுக்குத்தான் முன்னுரிமை தெரிவிக்கின்றன. ஆனால் ஒருமித்த முடிவு இல்லை என்கிறபோது பெரும்பான்மை முடிவை ஏற்கச்சொல்கிறது. அரசியல் சாசன அமைப்பு என்கிற வகையில், சிறுபான்மை முடிவும் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் மோடியையும், அமித் ஷாவையும் பாதுகாக்க இது மிதிபடுகிறது” என்று குறிப்பிட்டார்.

    மேலும், “பிரதமர் மோடியும், பா.ஜனதா தலைவர் அமித் ஷாவும் தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறியதாக காங்கிரஸ் கட்சி புகார் அளித்தது. ஆனால் அவை குப்பைத்தொட்டியில் போடப்பட்டு விட்டன. இந்தியாவின் முக்கிய அமைப்புகளின் புனிதத்தை அழிக்கிற பணியை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டுள்ளார்” எனவும் கூறினார்.
    நேர்மையான பிரதமர் என்பது உள்பட அனைத்து வாக்குறுதிகளையும் மோடி தகர்த்துவிட்டார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #NarendraModi #RahulGandhi
    ஐதராபாத்:

    டிசம்பர் 7-ந் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற ஒரு மாணவர்கள் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடியும், முதல்-மந்திரி சந்திரசேகர் ராவும் பலப்பல வாக்குறுதிகளை கொடுத்தனர். ஆனால் அவைகளை நிறைவேற்றவில்லை.



    பிரதமர் ஒவ்வொரு குடிமகன் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும், வருடந்தோறும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, விவசாய கடன் தள்ளுபடி, விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்று வாக்குறுதிகள் அளித்தார். தான் இந்த நாட்டின் ‘காவலாளி’ பிரதம மந்திரி அல்ல என்றும் கூறினார். நேர்மையான பிரதமர் என்பது உள்பட அனைத்து வாக்குறுதிகளையும் தகர்த்துவிட்டார்.

    பிரதமர் தொழில் அதிபர் அனில் அம்பானிக்கு ரபேல் ஒப்பந்தத்தில் ரூ.30 ஆயிரம் கோடி வழங்குகிறார். ஆனால் விவசாயிகளுக்கு ஒன்றுமில்லை. இந்தியாவின் பணக்காரர்கள் 15 பேரின் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்கிறார். இந்திய விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய அவர் தயாரா?

    எல்லோரையும் ஒரே மாதிரி கவனிக்கும்படி தான் கூறுகிறோம். பணக்காரர்களின் கடனை தள்ளுபடி செய்யும்போது, விவசாயிகள் கடனையும் தள்ளுபடி செய்திருக்க வேண்டும்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார். #NarendraModi #RahulGandhi
    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் திருட்டு நடந்திருப்பதை மோடி சுப்ரீம் கோர்ட்டில் மோடி ஒப்புக் கொண்டு இருக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறினார். #NarendraModi #RafaleDeal #SupremeCourt #RahulGandhi
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் மோடி அரசு 2016-ம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசு ரபேல் ஒப்பந்தம் குறித்த நடைமுறைகளை அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும் எனவும், விமானத்தின் விலைப்பட்டியல் குறித்த விவரங்களை மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.



    அதன்படி மத்திய அரசு நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் விலைப்பட்டியலை தனியாக தாக்கல் செய்தது. ரபேல் ஒப்பந்தம் குறித்த அறிக்கையையும் தாக்கல் செய்தது.

    இந்த நிலையில் ராகுல்காந்தி நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் திருட்டு நடந்திருப்பதை பிரதமர் மோடி ஒப்புக் கொண்டு இருக்கிறார். இந்திய விமானப்படையை கேட்காமலேயே ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யப்பட்டதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். அதன் மூலம் தொழில் அதிபர் அம்பானியின் சட்டை பாக்கெட்டுக்குள் ரூ.30 ஆயிரம் கோடி திணிக்கப்பட்டு உள்ளது” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    மேலும், சத்தீஷ்கார் மாநில தேர்தல் பிரசாரத்தில் ராகுல்காந்தி பேசும்போது கூறியதாவது:-

    பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் தலையணைக்குள் இருந்த பணம் வெளியே வந்ததாக மோடி கூறினார். அவர் சொன்னது சரிதான். ஆனால் யாருடைய பணம் பறிக்கப்பட்டது என்பதை அவர் சொல்லவில்லை. அது ஏழை மக்களின் பணம். அவர்கள்தான் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பணத்தை மாற்றுவதற்கு நீண்ட வரிசையில் வங்கிகளின் முன்பாக கால்கடுக்க காத்துக் கிடந்தனர். எந்த கோடீசுவரராவது இதுபோல் நீண்ட வரிசையில் நின்றார்களா?... கோட்டு, சூட்டு அணிந்தவர்கள் யாரையாவது நீண்ட வரிசையில் பார்க்க முடிந்ததா?

    இந்தியாவின் பிரதமர் கோட்டும் சூட்டும் அணிந்தவர்களின் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு உதவினார். அவர் ஏழைகளின் பணத்தை பறித்துக் கொண்டார். அதனால் பணக்காரர்கள் மட்டும்தான் பலன் அடைந்தனர்.

    சத்தீஷ்காரில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #NarendraModi #RafaleDeal #SupremeCourt #RahulGandhi
    உலகிலேயே மிக உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் 2 பேர் கலந்து கொள்கிறார்கள். #SardalPatel #PMModi #Inaugurate
    ஆமதாபாத்:

    ‘இரும்பு மனிதர்‘ என்று அழைக்கப்படும் முதலாவது உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டு உள்ளது. நர்மதா மாவட்டம் சர்தார் சரோவர் அணை அருகே சாது பேட் என்ற குட்டித்தீவில் இந்த சிலை நிறுவப்பட்டு உள்ளது.

    சர்தார் வல்லபாய் படேல், நாட்டை ஒன்றுபடுத்தியதை குறிப்பிடும்வகையில், ‘ஒற்றுமை சிலை’ என்று இது அழைக்கப்படுகிறது.

    இதன் உயரம் 182 மீட்டர். உலகிலேயே மிக உயரமான சிலையாக கருதப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை விட 2 மடங்கு உயரம் கொண்டது.

    இந்த சிலையை உருவாக்க 70 ஆயிரம் டன் சிமெண்ட், ஆயிரக்கணக்கான டன் எக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது. சிலையின் வெளிப்புற பூச்சுக்காக 1,700 டன் வெண்கலம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

    சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். சிலையை அவர் திறந்து வைத்தவுடன், இந்திய விமானப்படைக்கு சொந்தமான 3 விமானங்கள் வானில் பறந்து சென்று, தேசிய கொடியில் உள்ள 3 வண்ணங்களில் பொடிகளை தூவி, வானில் தேசிய கொடியை உருவாக்கும்.

    நாட்டின் ஒற்றுமையை குறிக்கும்வகையில், சிலை அருகே உருவாக்கப்பட்டு உள்ள ஒற்றுமை சுவரையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். அப்போது, 3 போர் விமானங்கள், அந்த சுவருக்கு மேலே தாழ்வாக பறந்து செல்லும்.

    பின்னர், படேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். அப்போது, மி-17 ரகத்தை சேர்ந்த 2 ஹெலிகாப்டர்கள் வானில் இருந்து படேல் சிலை மீது மலர்களை தூவும்.

    சிலை திறப்பை முன்னிட்டு, குஜராத் காவல்துறை, ஆயுதப்படை மற்றும் துணை ராணுவப்படைகளைச் சேர்ந்த பாண்டு வாத்திய குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெறும். 29 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட கலைஞர்களின் நடன, இசை நிகழ்ச்கிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    சிலை திறப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் காண வசதியாக, 135 மீட்டர் உயரத்தில் பார்வையாளர் மாடம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கிருந்து சர்தார் சரோவர் அணையையும், அதைச் சுற்றி உள்ள மலைகளையும் பார்த்து ரசிக்கலாம்.

    இந்த நிகழ்ச்சியில், தமிழக அரசு சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி, செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதற்காக இருவரும் நேற்று மாலை 4.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்றனர்.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே, படேல் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு நர்மதா மாவட்டத்தில் உள்ள பழங்குடியின குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த சிலை உருவாக்கும் திட்டத்தால், இயற்கை வளங்கள் பேரழிவை சந்திக்கும் என்பதால், திறப்பு விழாவை புறக்கணிப்பதாக பிரதமர் மோடிக்கு 22 கிராமங்களின் தலைவர்கள் கூட்டாக கடிதம் எழுதி உள்ளனர்.

    விழாவுக்கு வரும் மோடியை வரவேற்க மாட்டோம் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.
    ×