search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குப்பை"

    ஆரணியில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், சுகாதார ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் 8 பணியாளர்களுக்கு நோட்டீஸ் (மெமோ) வழங்கப்பட்டது.
    ஆரணி:

    ஆரணி நகரில் எங்கும் குப்பை கூளமாக இருப்பதாக நேற்று முன்தினம் ‘தினத்தந்தி’யில் நகர்வலம் பகுதியில் படத்துடன் செய்தி வெளியானது. இதுதொடர்பாக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நேற்று நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் விஜயகுமார், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஸ்டான்லிபாபு, பொறியாளர் கணேசன், உதவி பொறியாளர் தேவநாதன், சுகாதார அலுவலர் (பொறுப்பு) பழனிச்சாமி மற்றும் அலுவலர்களுடன் நகரில் குப்பைகள் தேங்கி கிடக்கும் பகுதிகளுக்கு அழைத்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    அதைத் தொடர்ந்து ஆரணி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் தலைமையில், நகராட்சியில் பணிபுரியும் அனைத்து அலுவலர்கள், பணியாளர்களுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தின் முடிவில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் யார் போன் செய்தாலும் பதில் அளிக்காத சுகாதார ஆய்வாளர் ஜெயச்சந்திரனை பணியிடை நீக்கம் செய்தும், மேலும் சுகாதார ஆய்வாளர் பாலாஜி, துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் வாசுதேவன், மாசிலாமணி, ஜோதிவேலு, வருவாய் ஆய்வாளர் தேவராஜ், குத்தகை இனங்களை முறையாக வசூலிக்காத காரணத்தால் பில் கலெக்டர்கள் சரவணன், விஜயபிரபாகரன், குப்பைகளை லாரி மூலம் முறையாக அகற்றாத டிரைவர் இந்திராபாண்டியன் ஆகிய 8 பேருக்கு நோட்டீஸ் (மெமோ) வழங்கப்பட்டது. சரியான விளக்கம் அளிக்கவில்லையெனில் இவர்கள் மீதும் பணியிடை நீக்கம்(சஸ்பெண்டு) நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் விஜயகுமார் கூறினார்.

    மேலும் நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் குறைவான எண்ணிக்கையில் இருப்பதாலும், அதிலும் வயது முதிர்ந்தோர் அதிகம் இருப்பதாலும் நகரில் எங்கு பார்த்தாலும் குப்பைகள் காணப்படுவதால் அவற்றை அள்ளுவதற்காக ஆற்காடு, ராணிப்பேட்டை, செய்யாறு ஆகிய நகராட்சி பகுதிகளில் இருந்து துப்புரவு பணியாளர்கள் வாகனத்துடன் வருகை தந்து குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 
    எவரெஸ்ட் சிகரத்தில் ஆண்டுதோறும் டன் கணக்கில் குப்பைகள் குவிந்து வருவதாக சாகர்மாதா மாசு கட்டுப்பாட்டு குழு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. #Everest #Trash
    காட்மாண்டு:

    இமயமலைத்தொடரில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரம் 8,848 மீட்டர் உயரம் கொண்டது. உலகிலேயே மிகவும் உயரமான சிகரம் என்ற பெருமையை பெற்ற இதன் உச்சியில் கால்பதிக்க வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மலையேற்ற வீரர்கள் சிகரத்தில் ஏறி வருகின்றனர். இந்த நிலையில் எவரெஸ்ட் சிகரத்தில் ஆண்டுதோறும் டன் கணக்கில் குப்பைகள் குவிந்து வருவதாக சாகர்மாதா மாசு கட்டுப்பாட்டு குழு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.



    வீரர்கள் தங்குவதற்கான கூடாரங்கள், ஏறுவதற்காக பயன்படுத்தும் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் மனித கழிவுகள் குப்பைகளாக எவரெஸ்ட் சிகரத்தை ஆக்கிரமித்து உள்ளன.

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு எவரெஸ்ட் சிகரத்தில் குப்பைகளை அகற்ற முடிவு செய்த நேபாள அரசு அதற்காக நவீன யுக்தியை கையாண்டது. அதாவது மலையேற்றம் செல்லும் குழுவினர் சுமார் ரூ.2,64,000-ஐ வைப்பு தொகையாக செலுத்த வேண்டும். பின்பு சிகரத்தில் இருந்து கீழே இறங்கும்போது ஒவ்வொரு வீரரும் தலா 8 கிலோ குப்பைகளை தன்னுடன் எடுத்து வந்து செலுத்திய தொகையை திரும்ப பெற்று கொள்ளலாம்.

    இதன்படி கடந்த ஆண்டு மட்டும் சுமார் 25 டன் குப்பைகளும், 15 டன் மனித கழிவுகளும் எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து கீழே கொண்டு வரப்பட்டது.

    இந்த ஆண்டும் மலையேற்ற வீரர்கள் டன் கணக்கில் குப்பைகளை கீழே கொண்டு வந்தாலும் சிகரத்தில் தொடர்ந்து குப்பைகள் குவிந்து வருவதாக சாகர்மாதா மாசு கட்டுப்பாட்டு குழு கவலை தெரிவித்துள்ளது.  #Everest #Trash
    கூடலூர் பகுதியில் அகற்றப்படாத குப்பையால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    கூடலூர்:

    கூடலூர் நகராட்சி பகுதியில், பொதுமக்கள் பயன்படுத்திய குப்பை கழிவுகள், கழிவுப் பொருட்கள், தெருக்களில் இருந்து அள்ளப்படும் சாக்கடை கழிவுகள், இறைச்சிக்கழிவு, காய்கறி கழிவுகள் அனைத்தும் துப்புரவுப் பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்காகுப்பை என தரம் பிரித்து நகராட்சி டிராக்டர், மற்றும் மூன்று சக்கர சைக்கிள்களில் எடுத்துச் சென்று பெத்துக்குளம் பகுதியிலுள்ள நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி வந்தனர்.

    சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு காலியிடமாகக் கிடந்த பெத்துக்குளம் சுற்றுப்பகுதி தற்போது காந்திகிராமம், சவுடம்மன் கோவில் தெருப்பகுதி, புதுக்குளம் முருகன் கோவில் பகுதி என குடியிருப்புப் பகுதிகளாக மாறியுள்ளது. பலஆண்டுகளாக கொட்டப்பட்ட குப்பை கழிவுகள் இங்கு மலைபோல் குவிந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.

    எனவே குப்பை கிடங்கை மாற்ற கோரி பொதுமக்கள் தொடர் போராட்டம் செய்ததால் நகராட்சி அதிகாரிகள் கூடலூர் பெருமாள்கோவில் புலம் பகுதியில் குப்பை கொட்டும் வகையில் 5 ஏக்கர் தரிசுநிலத்தை தேர்வு செய்தனர். ஆனால் இப்பகுதியில் குப்பை கொட்டினால் விளைநிலங்கள் மாசுபடும்.

    பெருமாள் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு இடையூறாக இருக்கும் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் குப்பை கழிவுகள் கம்பம் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது.

    கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மழைபெய்து வருவதால் குப்பை கிடங்கிற்கு உள்ளே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கூடலூரிலிருந்து கம்பத்தில் கொண்டுவந்து குப்பைகள் கொட்ட கம்பம் நகராட்சி அனுமதி மறுத்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக கூடலூர் நகர் பகுதியில் சேகரமாகி உள்ள குப்பைக்கழிவுகள் அகற்றப்படாமல் கிடக்கிறது. இதனால் தெருப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதோடு நோய்பரவும் அபாயமும் ஏற்பட்டள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் இவ்வி‌ஷயத்தில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×