search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 105717"

    சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உடல் கருகிய 4 தொழிலாளிகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியை அடுத்துள்ள காளையார் குறிச்சி கிராமத்தில் கனகபிரபு என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது.

    இங்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.

    இன்று காலை வழக்கம் போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆலையில் உள்ள ஒரு அறையில் ராக்கெட் வெடிக்கு மருந்து நிரப்பும் பணி நடைபெற்று வந்தது.

    அப்போது மருந்துகளில் உராய்வு ஏற்பட்டு வெடிக்கத் தொடங்கியது. சிறிது நேரத்தில் தீ அறை முழுவதும் பரவியது. அங்கிருந்த பட்டாசுகளில் தீ பரவி பயங்கர சத்தத்துடன் வெடித்தன.

    இந்த விபத்தில் அந்த அறையில் இருந்த தொழிலாளர்கள் திருத்தங்கலைச் சேர்ந்த ராமசாமி (வயது 67), சுக்கிரவார்பட்டி மாரி பாண்டி (47), காளையார் குறிச்சி முருகேசன் (47), எரிச்சநத்தம் அழகுபாண்டி (26) ஆகிய 4 பேர் உடல் கருகினர்.

    தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் மற்றும் எம்.புதுப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ விபத்தில் காயமடைந்த 4 பேரையும் மீட்டனர். 90 சதவீதத்திற்கும் மேல் காயமடைந்த இவர்கள் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    அமெரிக்காவில் வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்ததில் வாலிபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    ஹுஸ்டன்:

    அமெரிக்காவில் உள்ள ஹுஸ்டன் நகரை சேர்ந்தவர் ஜெனீபர் சுட்கிளிப். கடந்த மாதம் (மே) 27-ந்தேதி இவரது கணவர் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு ரேட்டில் சினேக் எனப்படும் கிளுகிளுப்பை பாம்பு ஒன்று ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அதை பார்த்த அவர் பாம்பின் தலையை வெட்டினார்.

    அதை அங்கிருந்து அகற்ற வெட்டப்பட்ட பாம்பின் தலையுடன் தூக்கிச் சென்றார். அப்போது வெட்டிய பாம்பின் தலை அவரை கடித்தது.

    கிளுகிளுப்பை பாம்பின் வி‌ஷம் கடுமையானது. அது அவரது உடலில் வேகமாக பரவியது. அதனால் மயக்கம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    தற்போது அவர் கண் பார்வையை இழந்து விட்டார். உடலில் உள்ள உறுப்புகளில் ரத்தக் கசிவு உள்ளது. எனவே, உயிர் பிழைக்க மாட்டார் என டாக்டர்கள் கை விரித்து விட்டனர். #Tamilnews
    சிகிச்சையில் இருந்த போது ஜெயலலிதாவுக்கு பாதாம் அல்வா கொடுக்கப்பட்டதா? என்று ஆணையம் எழுப்பிய கேள்விக்கு அப்பல்லோ மருத்துவமனை தலைமை நர்ஸ் பதில் அளித்துள்ளார்.
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றிய புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் அர்ச்சனா (இவர், தற்போது திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்) நேற்று காலை 10.30 மணிக்கு ஆஜரானார். அதேபோன்று அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை நர்ஸ் ரேணுகாவும் ஆஜரானார்.

    அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவர் சிகிச்சை பெற்று வந்த வார்டில் அர்ச்சனா பல நாட்கள் பணியில் இருந்துள்ளார். இதனால், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அர்ச்சனாவுக்கு தெரிந்து இருக்க அதிக வாய்ப்பு உள்ளது என்ற அடிப்படையில் அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி பல்வேறு கேள்விகளை கேட்டார். அதேபோன்று ஆணையத்தின் வக்கீல்கள் மதுரை எஸ்.பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர் குறுக்கு விசாரணை செய்தனர். நீதிபதி மற்றும் ஆணையத்தின் வக்கீல்கள் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு மருத்துவர் அர்ச்சனா தெரியாது என்றே பதில் அளித்துள்ளார்.

    ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த வார்டில் பணியில் இருந்தபோது ஜெயலலிதா தன்னிடம் பலமுறை பேசி உள்ளதாக அவர் கூறி உள்ளார். தமிழக கவர்னராக இருந்த வித்யாசாகர்ராவ் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்க்க சென்றபோது அர்ச்சனா தான் பணியில் இருந்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து வித்யாசாகர்ராவை பார்த்து ஜெயலலிதா கை அசைத்தாரா? என்பது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு அர்ச்சனா, ‘கண்ணாடிக்கு வெளியே நின்று கவர்னர் பார்த்ததையும், அவர் கை அசைத்ததையும் பார்த்தேன். ஆனால், கவர்னரை பார்த்து ஜெயலலிதா கை அசைத்தாரா? என்பதை பார்க்கவில்லை’ என்று கூறி உள்ளார்.

    4.10.2016 அன்று ஜெயலலிதாவுக்கு இடது வென்ட்ரிக்கலில் மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தாக்கல் செய்த மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அன்றைய தினம் அர்ச்சனா தான் பணியில் இருந்துள்ளார். இதுகுறித்து ஆணையம் எழுப்பிய கேள்விக்கு அர்ச்சனா சரியான முறையில் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவின் சிகிச்சைக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு நர்சுகளை, தலைமை நர்சான ரேணுகா தான் நியமித்துள்ளார். ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரை அடிப்படையில் அப்பல்லோ மருத்துவமனையில் தயாரிக்கப்பட்ட உணவுகள் மட்டுமே நர்சுகள் மூலம் ஒவ்வொரு முறையும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டது என்று ரேணுகா வாக்குமூலம் அளித்துள்ளார்.

    27.11.2016 அன்று வீட்டில் இருந்து தயாரிக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட பாதாம் அல்வா ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதே என்று ஆணையம் கேள்வி எழுப்பிய போது, வீட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட உணவுப்பொருட்கள் எதுவும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்படவில்லை என்பதை ஆணித்தரமாக கூற முடியும் என்று பதில் அளித்துள்ளார்.

    சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவுக்கு 21.11.2016 அன்று லட்டு, குலோப்ஜாமூன், ரசகுல்லா போன்றவை வழங்கப்பட்டது என்ற தகவல் வெளியான நிலையில் தற்போது அவருக்கு பாதாம் அல்வாவும் வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஜெயலலிதா மருத்துவமனையில் 22.9.2016 அன்று அனுமதிக்கப்பட்ட நிலையில், 25.11.2016 அன்று முதல் தான் அவருக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்பட்டது என்பது குறித்த விவரம் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தாக்கல் செய்த மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆணையம் எழுப்பிய கேள்விக்கு, அதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று ரேணுகா பதில் அளித்துள்ளார்.

    அப்படியென்றால் 22.9.2016 முதல் 24.11.2016 வரை மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுரைப்படி தான் ஜெயலலிதாவுக்கு உணவு வழங்கப்பட்டதா? என்ற கேள்வி ஆணையத்துக்கு எழுந்து உள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தவும் ஆணையம் முடிவு செய்துள்ளது. 
    மாடியில் இருந்து குதித்தபோது வாலிபரின் முதுகில் பாய்ந்த இரும்பு கம்பியை அகற்றி சென்னை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கம் ஜெயலட்சுமி புரத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் (29). டிரைவரான இவர் மாடியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

    சம்பவத்தன்று இரவு இவர் சினிமாவுக்கு சென்றுவிட்டு நள்ளிரவில் தனது அறைக்கு திரும்பினார். அப்போது வீட்டின் ‘கேட்’ பூட்டப்பட்டிருந்தது.

    காம்பவுண்டு சுவரில் ஏறி முதல் மாடியில் உள்ள தனது அறையின் பால்கனிக்கு சென்றார். அங்குயின் கதவு பூட்டப்பட்டிருந்தது. எனவே அங்கிருந்து வெளியே வர மாடியில் இருந்து குதித்தார்.

    அப்போது வாசலில் உள்ள இரும்பு கதவு மீது விழுந்தார். அவரது முதுகில் கதவின் இரும்பு கம்பி பாய்ந்தது. அவரால் அதில் இருந்து விடுபட முடியவில்லை. வலியால் துடித்துக் கொண்டிருந்த அவரை நள்ளிரவு 1 மணியளவில் அந்த வழியாக வந்த ஒருவர் பார்த்து நுங்கம்பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்டனர்.

    அவருக்கு உடனடியாக சி.டி.ஸ்கேன் எடுக்கப்பட்டது. உடனடியாக 3 அடி நீளமும், 3 செ.மீ. அகலமும் கொண்ட கம்பி முதுகில் 1 அடி ஆழத்துக்கு 7-வது விலா எலும்பு பகுதியில் பாய்ந்து இருந்தது.

    அந்த கம்பியின் முனை வளைந்த நிலையில் ‘கொக்கி’ போன்று டிசைன் செய்யப்பட்டிருந்தது. அந்த கொக்கி முதுகு பகுதிக்குள் இருந்தது. நுரையீரலின் இடதுபுறத்தில் குத்தி ஊடுருவி இதயம் மற்றும் மூச்சுக்குழல் பகுதி வரை சென்று இருந்தது. இதையடுத்து அவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு மிகவும் ஆபத்தான ஆபரேசனை 3 டாக்டர்கள் வெற்றிகரமாக செய்து முடித்தனர். முதுகில் பாய்ந்திருந்த இரும்பு கம்பியை வெளியே இழுத்து அகற்றினர். தற்போது வாலிபர் வெற்றிவேல் நலமாக இருக்கிறார். ஒரு வார சிகிச்சைக்கு பின் வீடு திரும்புகிறார். #tamilnews
    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 4 பேருக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #sterliteprotest
    மதுரை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ந் தேதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜலிங்கம் (வயது 38), வீரபாபு (17), காளிமுத்து (32), சக்திவேல் (34) ஆகிய 4 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தனிப்பிரிவில் சிறப்பு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். #sterliteprotest
    கும்மிடிப்பூண்டியை அடுத்த தோக்கம்பூரில் மாதா கோவில் விழாவில் பட்டாசு வெடித்து மாணவி உள்பட 7 பேர் உடல் கருகினர்.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த தோக்கம்பூரில் மாதா கோவில் உள்ளது. நேற்று ஆலயத்தில்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று இரவு மாதா சிலை ஊர்வலம் நடந்தது.

    இதில் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தின் போது லோடு ஆட்டோவில் வைத்து பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அந்த ஆட்டோவில் சிறுவர்கள் ஏராளமானோர் அமர்ந்து இருந்தனர். ஒரு பட்டாசு வெடித்து சிதறிய போது அதன் தீப்பொறி லோடு ஆட்டோவில் இருந்த பட்டாசுகள் மீது விழுந்தது. இதனால் பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறின.

    இதில் அருகே நின்ற சென்னை அண்ணாநகரை சேர்ந்த அக்காள்- தம்பியான காவியா (9), சஞ்செய் (8) மற்றும் போந்தவாக்கம் தர்ஷினி (10), தோக்கம்பூர் அர்ஜூன் (11), ஜோசப் (5), ஹரீஸ்பாபு (6), கல்லூரி மாணவி பர்வீனா (21) ஆகிய 7 பேர் உடல் கருகினர்.

    உடனடியாக அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இவர்களில் தர்ஷினி, அர்ஜூன், ஹரீஸ் பாபு ஆகியோரது நிலைமை மோசமாக உள்ளது. #Tamilnews
    தா.பேட்டை அருகே சாலையில் நடந்து சென்ற பெண் மீது கார் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அப்பெண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    தா.பேட்டை:

    தா.பேட்டை அடுத்த வளையெடுப்பு கிராமத்தை சேர்ந்தவர் மருதாயி (வயது 55) ,கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தா.பேட்டையில் அரசு ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவமனை அருகில் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த கார் மோதியதில் மருதாயிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

    அக்கம் பக்கத்தினர் காயமடைந்த மருதாயியை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத் திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து தா.பேட்டை போலீசார் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் ரவி (47) என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூத்துக்குடியில் ஏற்பட்ட கலவரத்தில் காயமடைந்த 8 போலீசாருக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.#SterliteProtest #BanSterlite
    நெல்லை:

    தூத்துக்குடியில் ஏற்பட்ட கலவரம் காரணமாக 13 பேர் துப்பாக்கி சூட்டில் பலியாகி உள்ளனர். 100-க்கும் மேற்பட்ட பொது மக்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதால், கலவரத்தில் காயம் அடைந்த போலீஸ்காரர்களை சிகிச்சைக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

    அங்கு முதல்நாள் 43 போலீசாரை சிகிச்சைக்காக சேர்த்தனர். ஜெய்சங்கர் என்ற ஒரு போலீஸ்காரர் மட்டும் பாளை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இதில் மறுநாளே 20 போலீசார் சிகிச்சை முடிந்து பணிக்கு திரும்பினர். 10 பெண் போலீசார் உள்பட 23 போலீசாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இதிலும் நேற்று பெரும்பாலான போலீசார் சிகிச்சை முடிந்து திரும்பினர். இன்று நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தூத்துக்குடியைச் சேர்ந்த 8 போலீசார் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதுபோல புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம் புளியைச் சேர்ந்த சுகுமார் (21) என்பவர் வயிற்றில் குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.#SterliteProtest #BanSterlite
    உடுமலை அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளியை காட்டு யானை தாக்கியது. இதில் காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த அமராவதி வனச்சரகத்தில் உள்ள தளிஞ்சி மலைவாழ் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பரமன் (69) . கூலித் தொழிலாளி. இவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த காட்டு யானை பரமனை தூக்கி வீசியது. அவர் உயிர் தப்பிக்க ஓட்டம் பிடித்தார். ஆனாலும் அவரை துரத்தி தாக்கியது. இதில் பரமன் படுகாயம் அடைந்தார் அவர் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர்.

    பொதுமக்கள் கூட்டமாக வருவதை பார்த்த யானை காட்டுக்குள் சென்று விட்டது. படுகாயம் அடைந்த பரமனை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஊட்டியில் சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்த டாக்டர் கைது செய்யப்பட்டார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி மார்க்கெட் எதிரே பல் மருத்துவமனை நடத்தி வருபவர் டாக்டர் சரவணன். அரசு டாக்டராகவும் உள்ளார்.

    இவரது மருத்துவமனைக்கு ஊட்டியை சேர்ந்த இளம் பெண் தனது தாயுடன் சிகிச்சை பெற வந்தார். டாக்டர் சரவணன் அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்த போது சிகிச்சைக்கு தேவையான பணம் இல்லாத நிலையில் அவரது தாய் பணம் எடுத்து வருவதாக கூறி வீட்டிற்கு சென்று விட்டார்.

    திடீரென இளம்பெண் கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு சென்றனர். அப்போது இளம்பெண் தன்னிடம் டாக்டர் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக கூறினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் டாக்டர் சரவணனை அடித்து உதைத்தனர். அவருக்கு தலையில் பலத்த காயம் எற்பட்டது.

    மேலும் மருத்துவமனையையும் சூறையாடினார்கள். தகவல் அறிந்து ஊட்டி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் டாக்டரை தாக்கிய பொதுமக்களை சமாதானம் செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்து சென்றனர்.

    டாக்டர் சரவணனையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரை கைது செய்தனர். மாஜிஸ்திரேட்டு முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பீகார் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ் சிகிச்சைக்காக அடுத்த வாரம் மும்பை செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #LaluPrasadYadav
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத் யாதவ் முதல்வராக பதவி வகித்தபோது, கால்நடை தீவனம் வாங்குவதில் ஊழல் செய்த குற்றத்துக்காக 3 வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் இருந்தார். சமீபத்தில் மருத்துவ காரணங்களுக்காக 6 வார கால ஜாமீன் கோரியிருந்த லாலு பிரசாத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

    இந்நிலையில், உடல் நிலை மோசமடைந்த காரணத்தினால், பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் லாலு பிரசாத் யாதவ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு  ஒவ்வாமை, மயக்கம் மற்றும் மூச்சுதிணறல் போன்றவைகளால் பாதிக்கப்பட்டு சிரமப்படும் லாலு அடுத்தகட்ட சிகிச்சைக்காக மும்பை அழைத்துச்செல்லப்பட உள்ளார்.

    லாலுவுக்கு கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மும்பையில் உள்ள மும்பை புறநகர் பகுதியான பந்த்ரா குர்லா எனும் இடத்தில் அமைந்துள்ள பிரபல இதவியல் மருத்துவமனையில் இரண்டு இதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. தற்போது, அதே மருத்துவமனையில் லாலுவுக்கு மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

    மேலும், சிறுநீரக பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற மும்பையை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கும் லாலு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  #LaluPrasadYadav
    ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக அப்பல்லோ மருத்துவர்கள் அளித்த வாக்குமூலம் முரண்படுவதால் ‘ரமணா’ பட பாணியில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதா? என்ற சந்தேகம் ஆணையத்துக்கு எழுந்துள்ளது. #Jayalalithaa #JayaProbe #Apollo
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகிறார். ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் பல்வேறு காலகட்டங்களில் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த 20 மருத்துவர்களின் பட்டியலை சசிகலா ஆணையத்தில் தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மருத்துவர்களிடம் தற்போது ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. அந்த பட்டியலில் இடம்பெற்ற அப்பல்லோ மருத்துவர் ஜெயஸ்ரீகோபால் மற்றும் மருத்துவர் ராமச்சந்திரன்(இருவரும் சர்க்கரை நோய் தடுப்பு சிறப்பு மருத்துவர்கள் ஆவர்) ஆகியோரிடம் நேற்று முன்தினம் ஆணையம் விசாரணை நடத்தியது.

    கோப்பு படம்

    சசிகலா அளித்த பட்டியலில் இடம்பெற்றிருந்த அப்பல்லோ மருத்துவமனையில் சர்க்கரை நோய் தடுப்பு சிறப்பு மருத்துவராக பணியாற்றி வரும் சாந்தாராமிற்கு ஆணையம் சம்மன் அனுப்பியது. அதன்படி நேற்று காலை 10.30 மணிக்கு அவர் ஆணையத்தில் ஆஜரானார்.

    ஜெயலலிதாவுக்கு எந்த ஆண்டு முதல் சிகிச்சை அளித்து வருகிறீர்கள்?, ஜெயலலிதாவுக்கு என்னென்ன உடல்நிலை பாதிப்பு இருந்தது?, உங்களது சிகிச்சையில் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்ததா? என்பது போன்று பல்வேறு கேள்விகளை நீதிபதி கேட்டார்.



    அதற்கு மருத்துவர் சாந்தாராம், ‘2000-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை தொடர்ந்து 14 ஆண்டுகள் ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளித்தேன். அப்போது சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. 2015-ம் ஆண்டுக்கு பின்னர் ஜெயலலிதாவுக்கு நான் சிகிச்சை அளிக்கவில்லை. என்னை ஏன் அழைக்கவில்லை என்பது எனக்கு தெரியாது. எனக்கு பின்னர், ஜெயஸ்ரீகோபால் ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிப்பதாக கேள்விப்பட்டேன். 2015-ம் ஆண்டுக்கு பின்னர் ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்றும் கேள்விப்பட்டேன். நான் அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றியபோதும், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் அவருக்கு சிகிச்சை எதுவும் அளிக்கவில்லை’ என்று பதில் அளித்துள்ளார்.

    ‘தொடர்ந்து 14 ஆண்டுகள் நீங்கள் ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளித்து இருந்ததால் அவரது உடல்நிலை குறித்து உங்களுக்கு தெரிந்திருக்கும். அப்படி இருக்கும்போதும், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும் ஏன் உங்களை ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழுவில் சேர்க்கவில்லை’ என்று சாந்தாராமிடம் நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு, அதுபற்றி தனக்கு தெரியாது என்று மருத்துவர் சாந்தாராம் பதில் அளித்துள்ளார்.

    தொடர் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது குறித்து கேள்வி எழுப்பிய ஆணையம், அதுபோன்று திடீர் மாரடைப்பு ஏற்படும்போது என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று கேள்வி எழுப்பியது.

    அதற்கு மருத்துவர் சாந்தாராம், ‘அதிக ரத்த அழுத்தத்தின் காரணமாக மாரடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. மாரடைப்பு ஏற்பட்டால் ரத்த ஓட்டம் நின்று விடும். சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், மூளை செயல் இழந்து விடும். மீண்டும் இருதயம் செயல்பட்டால் எல்லா உறுப்புகளும் செயல்படும். ஆனால், ஜெயலலிதாவுக்கு இருதயம் மீண்டும் செயல்படவில்லை’ என்று கூறி உள்ளார்.

    மேலும், ரத்த ஓட்டம் நின்றபின்பு கொடுக்கப்படும் மருந்துகள் செயல்படுமா? என்று கேட்டதற்கு, அதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறி உள்ளார். மருத்துவர் சாந்தாராமிடம் ஆணையத்தின் வக்கீல் எஸ்.பார்த்தசாரதி குறுக்கு விசாரணை செய்தார். அதேபோன்று சாந்தாராமிடம் குறுக்கு விசாரணை செய்வதற்காக சசிகலா தரப்பு வக்கீல் ராஜ்குமார் பாண்டியன் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்டார்.

    அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஆணையத்தில் தாக்கல் செய்த ஜெயலலிதா சிகிச்சை குறித்த மருத்துவ ஆவணங்களில், 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி மாலை 6 மணிக்கு ஜெயலலிதாவுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அப்போது ஜெயலலிதாவுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆனால், ஜெயலலிதாவுக்கு அன்றைய தினம் மாலை 4.20 மணிக்கு இருதய அடைப்பு ஏற்பட்டதும், மீண்டும் இருதயத்தை செயல்பட வைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி அனைத்தும் தோல்வியில் முடிந்தது என்பதும் அப்பல்லோ மருத்துவர்களின் வாக்குமூலத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

    இருதய அடைப்பு ஏற்பட்டதும் ரத்த ஓட்டம் நின்று விடும் என்ற சூழ்நிலையில் அன்றைய தினம் மாலை 6 மணிக்கு ஜெயலலிதாவுக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டதாக அப்பல்லோ மருத்துவ ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு இருப்பது ஆணையத்துக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும், ஜெயலலிதாவுக்கு இருதய அடைப்பு ஏற்பட்ட பின்பு ‘ரமணா’ பட(நடிகர் விஜயகாந்த் நடித்த ரமணா படத்தில் இறந்தவருக்கு பரபரப்பாக சிகிச்சை அளிப்பது போன்ற காட்சி இடம்பெறும்) பாணியில் சிகிச்சை அளிக்கப்பட்டதா? என்ற சந்தேகம் ஆணையத்துக்கு எழுந்துள்ளது. இதை அடுத்தடுத்து ஆஜராகும் மருத்துவர்கள் மூலம் உறுதி செய்ய ஆணையம் முடிவு செய்துள்ளது.  #Jayalalithaa #JayaProbe #Apollo
    ×