search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அ.தி.மு.க."

    • அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
    • 4 முனைப்போட்டி நிலவுவதால் ஒவ்வொரு கட்சியும் தீவிர பரிசீலனை.

    சென்னை, ஜூன்.11-

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் 6-ந்தேதி மரணம் அடைந்ததால் அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

    இதற்கான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது. அதன்படி வருகிற 14-ந்தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது. மனுதாக்கல் செய்ய 21-ந்தேதி கடைசி நாளாகும்.

    தேர்தலுக்கு நாள் நெருங்கி விட்ட காரணத்தால் இந்த தேர்தலில் போட்டியிட தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகிறது.

    இதில் தி.மு.க. வேட்பாளர் யார்? என்பது நாளைக்குள் (புதன்கிழமை) அறிவிக்கப்பட்டு விடும் என்று அறிவாலய வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இதனால் தி.மு.க.வில் 'சீட்' கேட்டு அமைச்சர் பொன்முடி மகன் கவுதமசிகாமணி, மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், மாநில விவசாய பிரிவு செயலாளர் அன்னியூர் சிவா, மாவட்ட பொருளாளர் ஜனகராஜ் ஆகிய 4 பேர் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் மீண்டும் போட்டியிட அமைச்சர் பொன்முடி மகன் கவுதமசிகாமணி முயற்சி செய்திருந்தும் அவருக்கு அப்போது வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    அதனால் இடைத்தேர்தலில் நின்று எம்.எல்.ஏ.வாகி விட வேண்டும் என்ற முனைப்பில் இப்போது கவுதம சிகாமணி 'காய்' நகர்த்தி வருகிறார். ஆனால் இவரைப் போல் கட்சியில் முக்கியஸ்தராக இருக்கும் மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரனும் எம்.எல்.ஏ. சீட் கேட்டு வருகிறார். இதில் ஜெயச்சந்திரனுக்கு தான் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.

    இதேபோல் அ.தி.மு.க.வில் கடந்த முறை போட்டியிட்ட முத்தமிழ்ச்செல்வனுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏனென்றால் 2021 தேர்தலில் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி 93,730 ஓட்டுகள் வாங்கி இருந்த நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. சார்பில் முத்தமிழ்ச்செல்வன் 84,157 வாக்குகள் பெற்று கடும் போட்டியை உருவாக்கி இருந்தார். அதாவது 9,573 வாக்குகள் வித்தியாசத்தில் தான் தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி வெற்றி பெற்றிருந்தார்.

    நாம் தமிழர் கட்சியில் போட்டியிட்ட ஷீபா ஆஸ்மி 8,216 வாக்குகளும், அ.ம.மு.க. வேட்பாளர் 3,053 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

    2021 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பா.ஜனதா கட்சிகள் இணைந்திருந்தது. அதன் பிறகு இப்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகி விட்டது. இனி வரும் தேர்தலிலும் பா.ஜனதாவுடன் கூட்டணி கிடையாது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து விட்டார்.

    எனவே இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளரை நிறுத்தினாலும் பா.ம.க.வும் வேட்பாளரை களம் இறக்குகிறது.

    பா.ம.க. சார்பில் சிந்தாமணி புகழேந்தி ஏகமனதாக நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் நாம் தமிழர் கட்சியும் ஏற்கனவே போட்டியிட்ட ஷீபா ஆஸ்மியை வேட்பாளராக நிறுத்தும் என தெரிகிறது.

    விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிகம் இருப்பதால் ஒவ்வொரு கட்சியும் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்களை நிறுத்த ஆயத்தமாகி வருகிறது. அப்போதுதான் வெற்றி எளிதாக கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 72,188 வாக்குகளும், அ.தி.மு.க. 65,365 வாக்குகள், நாம் தமிழர் கட்சி 8,352 வாக்குகள் வாங்கி உள்ளது.

    இதையெல்லாம் கணக்கு போட்டு பார்க்கும்போது 4 முனை போட்டி நிலவினால் தி.மு.க., அ.தி.மு.க. இடையே தான் கடும் போட்டி நிலவும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. பா.ம.க. நிறுத்தும் வேட்பாளரை பொறுத்து அரசியல் களம் மாறுபட வாய்ப்பு உள்ளது.

    தி.மு.க. ஆளும் கட்சியாக இருப்பதால் இடைத்தேர்தல் பணிகளை கவனிக்க 15 அமைச்சர்கள் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் நியமிக்க கூடும் என தெரிகிறது.

    எனவே விக்கிரவாண்டி தொகுதியில் 4 முனைப் போட்டி நிலவுவதால் ஒவ்வொரு கட்சியும் வேட்பாளரை நிறுத்த தீவிர பரிசீலனையில் இறங்கி உள்ளது.

    • பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடிக்கும், மத்திய மந்திரிகளுக்கும் வாழ்த்துக்கள்.
    • தேர்தல் காலத்தில் மட்டும் கச்சத்தீவு விவகாரம் பேசப்படுகிறது.

    மதுரை:

    மதுரை ஆதீனம் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடிக்கும், மத்திய மந்திரிகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். அனைத்து கட்சிகளும் நல்ல வாக்குகளை பெற்றுள்ளன. பிரதமர் மோடிக்கு 2 கோரிக்கைகளை முன்வைக்கிறேன். கச்சத்தீவை மீட்டெடுத்து தமிழகத்தோடு இணைக்க வேண்டும். அப்போதுதான் மீன்வளம் அதிகரிக்கும்.

    இலங்கையில் உள்ள தமிழ் மக்களை பாதுகாக்க பிரதமர் மோடி, தமிழ் ஈழத்தை ஏற்படுத்த வேண்டும். 60 ஆண்டுகளாக கச்சத்தீவு விவகாரம் குறித்து யாரும் பேசவில்லை. தேர்தல் காலத்தில் மட்டும் கச்சத்தீவு விவகாரம் பேசப்படுகிறது.

    எனவே எல்லா காலக்கட்டத்திலும் அதுகுறித்து குரல் எழுப்ப வேண்டும். இலங்கை தமிழர்கள் மற்றும் கச்சத்தீவு என இரண்டிற்காக நான் பிரதமர் மோடியை ஆதரிக்கிறேன்.

    அதன்படி பிரதமர் மோடியை சந்தித்து இந்த கோரிக்கைகளை விடுக்க உள்ளேன்.

    பா.ஜனதா கூட்டணி ஆட்சி சரியாக வரும். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் மக்கள் முறையாக வாக்களித்து அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள். காமராஜர் தோல்வியுற்றபோது, நாம் தோற்று விட்டோமே என கட்சிக்காரர்கள் கூறினார்கள். அதற்கு காமராஜர், இதுதான் ஜனநாயகம் என பதில் அளித்தார்.

    பிரதமர் மோடியை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்கின்றன. ஆனால் மோடி, எதையும் தாங்கும் இதயம் கொண்டவர். பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதற்காக அக்கட்சியை தோல்வி அடைந்த கட்சி என விமர்சனம் செய்கிறார்கள்.

    பா.ஜனதா பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இருந்தால் பட்டனை அழுத்தியவுடன் தாமரைக்கு ஓட்டு விழுகிறது என கூறி இருப்பார்கள். ஜனநாயக நாட்டில் வெற்றி, தோல்வி என்பது மக்கள் கொடுக்கக்கூடிய தீர்ப்பாகும்.

    பா.ஜனதாவுக்காக நான் பிரசாரங்களில் ஈடுபட்டதில்லை. இந்த தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்காத காரணத்தால் அ.தி.மு.க. தோல்வியை தழுவியுள்ளது. அ.தி.மு.க. தனது கட்டமைப்புகளை மேம்படுத்தவில்லை. ஆனால், பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி ஆகியவை தங்கள் கட்டமைப்புகளை மேம்படுத்தி உள்ளார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது.
    • கூட்டணி விசயத்தில் சரியான முடி வெடுக்கவில்லை என்ற எண்ணம் இருக்கிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது.

    இந்த சூழ்நிலையில் அடுத்து வரும் 2026 சட்ட மன்ற தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது.

    தேர்தலில் எடப்பாடி பழனிசாமியும் கூட்டணி விசயத்தில் சரியான முடி வெடுக்கவில்லை என்ற எண்ணம் இருக்கிறது.

    இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் புகழேந்தி, பழனி சாமி ஆகிய 3 பேரும் இணைந்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு குழு என்று உருவாக்கி கட்சியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

    இதுபற்றி அந்த தரப்பினர் கூறும்போது, கட்சியினர் அனைவரையும் ஒருங்கி ணைத்து கட்சியை பலப் படுத்த வேண்டியது கட்டாயம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் இன்று மரியாதை செலுத்தி விட்டு அந்த பணியை தொடங்கு கிறோம்.

    எல்லா தரப்பையும் சந்தித்து பேசி இணைப்பதற்கு தடையாக இருக்கும் பிரச்சினைகளை அறிந்து அதை களையவும் திட்டமிட்டுள்ளோம். இதற்காக கட்சியின் மூத்த தலைவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து பேச உள்ளார்கள்.

    அதைத் தொடர்ந்து சுமார் 10 பேர் கொண்ட குழு ஏற்படுத்தப்படும். இந்த குழுவினர் அடுத்த கட்ட பணியை தொடர்ந்து செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

    இந்த புதிய முயற்சி பலிக்குமா? என்பது பெரிய கேள்விக்குறி. ஏனெனில் பிரிந்து சென்ற ஓ.பன்னீர் செல்வம், சசிகலா ஆகியோரையும் ஒன்று சேர்க்கவே இந்த குழு விரும்புகிறது.

    ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதிப்பாரா? என்று தெரியவில்லை. நேற்று ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரை இணைக்க வாய்ப்பு உண்டா? என்று அவரிடம் கேட்டதற்கு போனவர்கள் போன வர்கள்தான் என்றார்.

    மேலும் ஓ.பன்னீர்செல்வம் பா.ஜனதாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி, 'தேசிய கட்சிகள் தேர்தலுக்கு மட்டும் நமமை பயன்படுத்திக் கொள்கின்றன.

    அதன் பிறகு கண்டு கொள்வதில்லை. இனிமேல் பா.ஜனதாவுடன் எப்போதும் கூட்டணி கிடையாது என்று அறிவித்துள்ளார். இந்த சிக்கல்களுக்கு தீர்வு கண்டு சமரச முயற்சியில் எவ்வாறு வெற்றி பெறுவார்கள் என்பது போக போகத்தான் தெரியும் என்றனர் கட்சி நிர்வாகிகள்.

    • 8 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது.
    • அ.தி.மு.க. 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

    சேலம்:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி ஆகிய 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி படுதோல்வி அடைந்தது. இதில் 9 தொகுதிகளில் அ.தி.மு.க. 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

    மேலும் நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், தேனி, ராமநாதபுரம், வேலூர், தென்சென்னை, புதுச்சேரி ஆகிய 8 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. இதனால் தொண்டர்கள், நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    குறிப்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் சேலம் வடக்கு தொகுதியை தவிர மற்ற 10 சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வசம் உள்ளது. அப்படி இருந்தும் சேலம் பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் மட்டுமே அ.தி.மு.க. வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்றிருந்தார்.

    அதேபோல் கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும் குறைந்த வாக்குகள் பெற்றிருந்தார்.

    இதையடுத்து முதல் கட்டமாக சேலம், கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை (8-ந்தேதி) ஓமலூரில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் ஆலோசனை நடத்துகிறார். இதில் தோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்கப்படுகிறது. இதனால் நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.

    • தேர்தல்களில் வெல்ல கூட்டணி என்பது வியூகம் தான்.
    • தேர்தலில் வியூகம் அமைப்பதில் கோட்டை விட்டோம் என்பது உண்மை.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் பாரதீய ஜனதா மற்றும் அ.தி.மு.க.வினரிடையே கடும் அதிர்ச்சியையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

    இரு கட்சி கூட்டணியும் உடையாமல் இருந்திருந்தால் மிகப்பெரிய வெற்றி பெற்று இருக்க முடியும் என்ற கருத்து இரு கட்சியினரிடமும் உள்ளது.

    அண்ணாமலையின் அணுகுமுறை சரியில்லாத தால் தான் கூட்டணி அமையவில்லை என்று அ.தி.மு.க. குற்றம்சாட்டி உள்ளது.

    இதற்கிடையில் அ.தி.மு.க.வை மக்கள் நிராகரித்து விட்டதாக அண்ணாமலை மீண்டும் தெரிவித்து இருப் பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த நிலையில் தென் சென்னை தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக களம் இறங்கி வெற்றி வாய்ப்பை இழந்த முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

    கூட்டணி பலமாக இருந்திருந்தால் வென்று இருப்போம் என்பது யதார்த்தமான உண்மை. தி.மு.க. மீது கடுமையான அதிருப்தி இருந்தும் வெற்றிபெற வழி வகுத்து விட்டோம். எதிரணி பிரியாமல் இருந்திருந்தால் அவர்களால் வென்று இருக்க முடியாது.

    தேர்தல்களில் வெல்ல கூட்டணி என்பது வியூகம் தான். அந்த வியூகத்தை உடைக்கவும் முயற்சிப்பார் கள். அதையெல்லாம் வென்று வியூகம் அமைத்தால் வெல்ல முடியும். இந்த தேர்தலில் வியூகம் அமைப்பதில் கோட்டை விட்டோம் என்பது உண்மை.

    கட்சி வளர்ந்து இருக்கலாம். சந்தோசம். அதை நினைத்து கொண்டாடுவதா? அல்லது அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. வென்றதை நினைத்து வருத்தப்படுவதா?

    என்னதான் கட்சி வளர்ந்து இருந்தாலும் தமிழகத்தில் இருந்து நமது பிரதி நிதிகள் யாரும் இல்லை என்பது வருத்தம்தானே. வென்று இருந்தால் மந்திரி பதவிகள் கிடைத்து இருக்கும். அதன் மூலம் மக்கள் பணி மேற்கொண்டிருக்கலாம். அதனால் கட்சி மேலும் வளர்ந்து இருக்கும்.

    கூட்டணி வேண்டாம் என்று மறுபடி மறுபடி எதிரணியை வெற்றி பெற வைப்பது சரியான தேர்தல் வியூகம் அல்ல. 2026 தேர்தலை பற்றி இப்போதே பேச வேண்டிய அவசியமில்லை. அ.தி.மு.க.வுடன் கூட்டணி இருக்கிறதா? இல்லையா? எதிர்காலத்தில் அமையுமா? என்றெல்லாம் யாரும் கருத்து சொல்ல முடியாது. ஏனெனில் கூட்டணி பற்றி முடிவெடுக்க வேண்டியது தேசிய தலைமைதான்.

    தேர்தலில் நான் தோற்றது எதிர்பாராதது. பிரசாரத்தின் போது மக்கள் காட்டிய ஆதரவையும் தி.மு.க. மற்றும் அதன் வேட்பாளர் மீது மக்கள் வெளிப்படுத்திய வெறுப்பையும் நேரடியாக பார்த்தேன்.

    தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் பெண்களுக்கான ரூ.1000 உதவித்தொகையை வங்கி கணக்கில் போட்டார்கள். மீனவர்களுக்கான ரூ.8 ஆயிரம் உதவித் தொகையையும் 17-ந்தேதி வங்கி கணக்கில் செலுத்தி இருக்கிறார்கள்.

    இன்னும் அதிகமான வாக்குகள் பெற்றிருப்பேன். ஒருவேளை வெல்ல முடியும் என்று நினைத்திருந்தேன்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • அண்ணாமலையின் தோல்வியை பா.ஜ.க.வினரால் ஜீரணிக்க முடியவில்லை.
    • பாராளுமன்ற தேர்தல் முடிவு அ.தி.மு.க.வுக்கு பாதகமாகவே கருதப்படுகிறது.

    கோவை:

    தென்இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை கொங்கு மண்டலத்தின் தலைநகர் போல் திகழ்கிறது. சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய நகரான கோவை எந்தவொரு பொதுத்தேர்தல் வந்தாலும் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படும் நகரமாக மாறி விடுகிறது.

    இதற்கு காரணம் நடந்து முடிந்த பல தேர்தல்களும், தற்போது நடந்துள்ள 18-வது பாராளுமன்ற தேர்தலுமே சாட்சி. கடந்த பல ஆண்டுகளாக கோவை உள்ளிட்ட கொங்கு மண்டல நகரங்கள் அ.தி.மு.க.வின் கோட்டையாகவே பார்க்கப்பட்டு வந்தது.

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தொடர்ந்து 2 முறை ஆட்சியை பிடிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது கொங்கு மண்டலங்களில் பெற்ற வெற்றி தான் முக்கிய காரணம் ஆகும்.

    ஜெயலலிதா மறைவுக்கு பின் கடந்த 2021-ல் நடந்த சட்டசபை தேர்தலிலும் இதன் தாக்கம் எதிரொலித்தது. தமிழகம் முழுவதும் தி.மு.க. பெருவாரியாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தாலும் கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட தி.மு.க.வால் வெற்றி பெற முடியவில்லை. மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் 9-ல் அ.தி.மு.க.வும், 1-ல் அதன் கூட்டணி கட்சியாக இருந்த பா.ஜ.க.வும் வெற்றி பெற்றன.

    அதன்பிறகு முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கவனம் முழுக்க கோவை பக்கம் திரும்பியது. ஆட்சி பொறுப்பேற்றதும் கோவைக்கு பொறுப்பு அமைச்சராக செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டார். அதன்பலனாக உள்ளாட்சித் தேர்தலில் பெரும் மாற்றம் ஏற்பட்டது.

    தமிழகத்தில் பெரிய மாநகராட்சிகளில் ஒன்றான கோவையை தி.மு.க. கைப்பற்றியது. மாவட்டத்தில் பெரும்பாலான உள்ளாட்சி இடங்களை தி.மு.க.வே பிடித்தது.

    அதைத்தொடர்ந்து தான் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானது. கோவை பாராளுமன்ற தொகுதியில் பாரதீய ஜனதா சார்பில் தமிழக தலைவர் அண்ணாமலை களமிறக்கப்பட உள்ளதை முன்கூட்டியே அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி வியூகங்களை அமைத்தார்.

    பல ஆண்டுகளாக கோவை பாராளுமன்ற தொகுதி தி.மு.க.வின் கூட்டணிகளிடமே இருந்தது. இந்த முறை எதிரணியான பா.ஜ.க. கைப்பற்றி விடக்கூடாது என்பதற்காக கோவையை கம்யூனிஸ்டு கட்சியிடம் இருந்து தி.மு.க. கேட்டுப்ெபற்றது. அதற்கு பதிலாக திண்டுக்கல் தொகுதியை தி.மு.க. விட்டுக் கொடுத்தது. கோவையில் பா.ஜ.க.வை எதிர்த்து களம் காண தி.மு.க. தயாரானது.

    தி.மு.க. சார்பில் போட்டியிட கடும் போட்டி நிலவியது. மூத்த தலைவர்கள் பலர் முட்டிமோத யாரும் எதிர்பாராத வகையில் கணபதி ராஜ்குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இவர் அறிவிக்கப் பட்டதும் தி.மு.க.வின ரிடையே திடீர் சலசலப்பு ஏற்பட்டது. காரணம் கணபதி ராஜ்குமார், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சமீபத்தில் தான் தி.மு.க.வில் சேர்ந்தவர். அண்ணாமலையை எதிர்த்து போட்டியிட இவர் வலுவான வேட்பாளர் இல்லை, சாதாரண வேட்பாளரை நிறுத்தி விட்டனர் என்றெல்லாம் பேசப்ப ட்டது.

    ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலி னின் கணக்கோ வேறு மாதிரியாக இருந்தது. கணபதி ராஜ்குமார் கோவை மாநகராட்சி மேயராக பணியாற்றியவர். மக்களுடன் நெருங்கி பழகியவர். அவர்களுக்கு என்னென்ன தேவை என்பதை அறிந்தவர். ஏற்கனவே பழக்கப்பட்ட முகம் என்பதால் எளிதில் மக்களை அடைந்து விடுவார் என எண்ணினார். மேலும் அ.தி.மு.க.வில் இருந்து வந்த அவர் எதிரணியின் பலவீனங்களையும் நன்கு அறிந்தவர். இதுவும் வெற்றிக்கு சாதகமாக அமையும் என்று கருதினார்.

    மு.க.ஸ்டாலினின் வியூகத்தை உணர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் கணபதி ராஜ்குமாருடன் கைகோர்த்தனர். கோவைக்கு பொறுப்பு அமைச்சராக உள்ள முத்துசாமியுடன் கூடுதலாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவும் களமிறக்கப்பட்டார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஆலோசனைப்படி அவர் கோவையிலேயே முகாமிட்டு தேர்தல் பணியை மேற்கொண்டார். அவரது பிரசார வியூகமே புது விதமாக இருந்தது.

    ஓட்டுக்களை கொத்து, கொத்தாக அள்ளுவதே அவரது குறிக்கோளாக இருந்தது. இதற்காக தொழில்துறையினர், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரையும் சந்தித்து ஆதரவு திரட்டினார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தனது கடைசி கட்ட பிரசாரத்தை கோவையில் தான் அமைத்திருந்தார்.

    தி.மு.க. நிர்வாகிகளை உற்சாகப்படுத்தி களப்பணியாற்றச் செய்தார். இவ்வாறு அமைக்கப்பட்ட பல்வேறு வியூகங்கள் தான் இன்று கோவை தொகுதியில மாபெரும் வெற்றியை தி.மு.க.வு க்கு பெற்று தந்துள்ளது.

    ஒரு கட்டத்தில் அண்ணாமலை என்ற பெயர் கோவை முழுக்க எதிரொலிக்க அவருக்கு ஆதரவாக பிரதமர் மோடியும் 3 முறை பிரசாரம் செய்தார். அப்போது தி.மு.க.வினர் சற்று தடுமாற வெற்றி நமக்கு தான், தைரியமாக பணியாற்றுங்கள் என்று கூறி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உற்சாகப்படுத்தினார்.

    தேர்தல் முடிந்த கையோடு தி.மு.க. நிர்வாகிகள் அனைவரையும் சென்னைக்கு அழைத்து கருத்து கேட்டார். வெற்றி உறுதி என்று நிர்வாகிகள் சொன்னதும் அனைவரையும் அவர் பாராட்டினார்.

    இவ்வாறு பல்வேறு அதிரடி வியூகங்கள் அமைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணாமலையை வீழ்த்தியே விட்டார். 28 ஆண்டுகளுக்கு பின் கோவை தொகுதியை தி.மு.க. கைப்பற்றி உள்ளது.

    இதற்கிடையே அண்ணாமலையின் தோல்வியை பா.ஜ.க.வினரால் ஜீரணிக்க முடியவில்லை. அண்ணாமலை பிரசாரத்துக்கு சென்ற இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்பு இருந்தது.

    கோவை தொகுதிக்கென தனி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அவரை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் என பலரும் பிரசாரம் மேற்கொள்ள எப்படியும் அண்ணாமலை வெற்றி பெற்று விடுவார் என்றே பா.ஜ.க.வினர் கருதி வந்தனர். ஆனால் தி.மு.க. வேட்பாளரிடம் அண்ணாமலையை தோல்வியை தழுவி விட்டார். இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.

    தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை, விலையில்லா பஸ் பயண திட்டம் ஆகியவை தி.மு.க.வுக்கு கைகொடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி தனியே நின்றது அண்ணாமலையின் தோல்விக்கு முக்கிய காரணம் ஆகும். கோவை தொகுதியில் உள்ள சிறுபான்மையின மக்களின் மொத்த வாக்குகள் தி.மு.க. கூட்டணிக்கு சென்று விட்டன. ஊரகப்பகுதியில் தி.மு.க.வுக்கு நல்ல வாக்குகள் கிடைத்துள்ளது.

    2026 சட்டசபை தேர்தல் களம் இளைஞர்களின் காலமாக இருக்கும். அந்த தேர்தலில் அண்ணாமலை, உதயநிதி ஸ்டாலின், நடிகர் விஜய் என பலரும் தேர்தல் களத்தில் நிற்பார்கள். அண்ணாமலைக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதனை ஏற்க மறுக்கும் பா.ஜ.க.வினர், தங்களுக்கு அதிக வாக்கு கிடைக்கும் தொகுதியான கவுண்டம்பாளையத்தில் பா.ஜ.க. ஆதரவு வாக்காளர்களின் பெரும்பாலானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது தங்களுக்கு பின்னடைவாக அமைந்ததாக தெரிவிக்கின்றனர்.

    இதுஒருபுறம் இருக்க பாராளுமன்ற தேர்தல் முடிவு அ.தி.மு.க.வுக்கு பாதகமாகவே கருதப்படுகிறது. மாவட்டத்தில் 9 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் அ.தி.மு.க. வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரனால் 3-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

    இதுவரை கோட்டை என வர்ணிக்கப்பட்ட இடத்தில் ஓட்டை விழுந்து விட்டதாக எதிர்க்கட்சியினர் அ.தி.மு.க.வை வசைபாடு கிறார்கள்.

    இதேபோல நீலகிரி தொகுதியிலும் அ.தி.மு.க. 3-வது இடத்தையே பெற்றுள்ளது. இந்த தோல்வி அ.தி.மு.க. தொண்டர்களிடை யே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு.
    • அ.தி.மு.க. தொண்டர்கள் மிகவும் கலக்கம் அடைந்து கவலையில் உள்ளனர்.

    சென்னை:

    நடந்து முடிந்த பாராளு மன்ற தேர்தலில் இந்திய அளவில் பாரதீய ஜனதா கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களை பிடிக்கும் என்றும் தமிழ கத்தில் தி.மு.க. கூட்டணி அமோகமாக வெற்றி பெறும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு 170 இடங்கள் தான் கிடைக் கும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளதாக ஊடகங்களில் பரபரப்பாக ஒளிபரப்பப் பட்டன.

    தமிழ்நாட்டை பொறுத்த வரை தி.மு.க. கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றும் என்பது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் அ.தி.மு.க., பாரதீய ஜனதாவுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருந் தது.

    காரணம் அ.தி.மு.க. இந்த முறை பா.ம.க.வுடன் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென பா.ம.க. பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்தத்தது.

    இதனால் அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட சில கட்சிகளுடன் தான் கூட்டணி வைத்து போட்டி யிட்டது. எனவே அ.தி.மு.க. கூட்டணிக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பது அ.தி.மு.க. தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

    அதற்கேற்ப நேற்று வெளியான இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் தி.மு.க. கூட்டணிக்கு 26 முதல் 30 தொகுதிகளும் அ.தி.மு.க. கூட்டணிக்கு 6 முதல் 8 இடங்களும், பா.ஜனதா கூட்டணிக்கு 1 முதல் 3 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.

    சி.என்.என். நியூஸ் 18 கருத்து கணிப்பில் தி.மு.க. கூட்டணி 36 முதல் 39 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 2 இடங்களிலும், பா.ஜனதா கூட்டணி 1 முதல் 3 இடங்களிலும் வெற்றி பெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    டி.வி.9 கருத்துக் கணிப்பில் தி.மு.க. கூட்டணி 35 இடங்களிலும், பா.ஜனதா கூட்டணி 4 இடங்க ளிலும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டது.

    தந்தி டி.வி. கருத்துக் கணிப்பில் அ.தி.மு.க. கூட்டணி 2 இடங்களிலும், பா.ஜனதா கூட்டணி 5 இடங்களிலும் வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளனர்.

    இப்படி ஒவ்வொரு டி.வி.யிலும் வெளியான கருத்துக் கணிப்பை பார்க்கும் போது அ.தி.மு.க.வுக்கு அதிகபட்சம் 8 இடங்கள், குறைந்த பட்சம் 2 தொகுதிதான் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சீபுரம், கள்ளக்குறிச்சி தொகுதிகள் மட்டுமே அ.தி.மு.க.வுக்கு சாதகமாக இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மிகவும் கலக்கம் அடைந்து கவலையில் உள்ளனர். ஆனாலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில, "கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்றும்" என்று நம்பிக்கை அளிக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் அரசியலை தீர்மானித்த அ.தி.மு.க. இப்போது இவ்வளவு பல வீனமாகி விட்டதே என்று அ.தி.மு.க. தொண்டர்கள் புலம்புவது கேட்க முடிந்தது.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்து கடுமையாக உழைத்தாலும், கூட்டணியை சரியாக அமைக்காமல் கோட்டை விட்டு விட்டாரோ என்று எண்ணத் தோன்றுவதாகவும் கட்சிக்காரர்கள் கூறி வருகின்னர்.

    அ.தி.மு.க.வில் எடப்பாடி அணி, ஓ.பி.எஸ். அணி, டி.டி.வி.தினகரன், சசிகலா என 4 அணியாக இப்போது காட்சியளிப்பதால் இது போன்ற நிலை ஏற்பட்டுள்ள தாகவும், அனைவரும் ஒன்று சேர்ந்தால்தான் கட்சியின் எதிர்காலம் ஒன்றாக இருக் கும் என்றும் பேசி வருகின்ற னர்.

    ஆனால் அதே சமயம் தமிழகத்தில் பா.ஜனதா கட்சி கால் ஊன்ற முடியாது என்று பலரும் விமர்சனம் செய்து வந்த நிலையில் இப்போது அக்கட்சிக்கு 3 தொகுதிகள் கிடைக்கும் என்று கருத்து கணிப்பு வெளியாகி உள்ளதை அறிந்து பா.ஜனதாவினர் குதூகலம் அடைந்துள்ளனர்.

    அண்ணாமலையின் உழைப்பு பிரதமர் மோடி யின் பிரசாரம் பா.ஜனதா கட்சியை வளர்ச்சியை நோக்கி கொண்டு சென் றுள்ளதாக அக்கட்சியினர் கூறி வருகின்றனர். எனவே எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது 4-ந்தேதி தெரிந்து விடும்.

    அதன் பிறகுதான் தி.மு.க., அ.தி.மு.க.வில் என்னென்ன நடவடிக்கைகள் இருக்கும் என்பது தெரிய வரும்.

    • தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது.
    • குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதலே பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்கதையாகிவிட்டன. பெண்களுக்கான பாதுகாப்பான மாநிலமாகத் திகழ்ந்த தமிழ் நாட்டை, பெண்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் அளவிற்கு தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் 17 வயது சிறுமியை 9 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் கேட்டு மிகுந்த அதிர்ச்சியுற்றேன்.

    கடந்த சில மாதங்களாகவே, தொடர்ச்சியாக அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், 4 மாத கர்ப்பமான நிலையிலேயே வெளியில் தெரியவந்துள்ளது.

    காவல் துறை விசாரணையில், இந்த கொடூரச் செயலை செய்த கும்பல் மேலும் ஒரு சிறுமியை இதேபோன்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும் சமூக வலைதளங்கள் மூலமாகத் தெரியவந்துள்ளது.

    தி.மு.க. ஆட்சியில் சிறார்கள்-இளைஞர்கள் போதையின் பிடியில் சிக்கி குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. தற்போது, நெஞ்சை பதைபதைக்கும் இத்தகு குற்றச் செயல்களைக் கூட சட்டத்தின் மீதோ, காவல் துறையின் மீதோ எவ்வித அச்சமும் இன்றி செய்யத் துணிந்துவிட்டனர் சமூக விரோதிகள்.

    அன்று தன்னை பெண்களின் பாதுகாவலராக அறிவித்து முழங்கிய ஸ்டாலின், தற்போது முதல்-அமைச்சராக இருக்கும் இந்த தி.மு.க. ஆட்சியில், தொடர்ச்சியாக நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக நடக்கும் இத்தகு பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்தத் தவறிய தி.மு.க. அரசை, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மட்டுமல்லாமல், ஒரு தந்தை என்கிற அக்கறையுடனே கண்டிக்கிறேன்.

    உடுமலைப்பேட்டை பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பூங்கொத்து வழங்கி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
    • பைத்தியக்காரர்கள் ஆதாரமற்ற வதந்திகளை பரப்பினார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் முடிவு அடுத்த மாதம் வெளியானதும் அ.தி.மு.க.வில் பிரிவு ஏற்படும் என்றும், அப்போது கட்சிக்கு தலைமை தாங்க போவது செங்கோட்டையனா? அல்லது எஸ்.பி.வேலுமணியா? என தெரிய வரும் என்றும் தி.மு.க. அமைச்சர் ரகுபதி கடந்த 2 நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்திருந்தார்.

    இதற்கு காரணம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அண்மையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த வைத்திலிங்கத்தை சந்தித்து ரகசிய ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி வந்தது.

    பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வலுவான கூட்டணி அமைக்க தவறி விட்டதால் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாகவே எஸ்.பி.வேலுமணி அதிருப்தியில் இருப்பதாகவும், சமூக வலை தளங்களில் செய்திகள் உலா வந்தன.

    இதை உறுதிப்படுத்தும் வகையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி கடந்த 12-ந் தேதி பிறந்தநாள் கொண்டாடிய போது அ.தி.மு.க.வில் உள்ள பலரும் அவருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து விட்டு வந்தனர்.

    ஆனால் எஸ்.பி.வேலுமணி மட்டும் செல்லவில்லை. அதற்கு பதிலாக தனது எக்ஸ் வலைதளத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். கழகத்தை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழி நடத்தி வருவதாக அதில் குறிப்பிட்டிருந்தார்.

    எக்ஸ் வலைதளத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த எஸ்.பி.வேலுமணி எதற்காக நேரில் சென்று எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வில்லை என்று அ.தி.மு.க.வினர் பேசத் தொடங்கினார்கள்.

    இந்த நிலையில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரான எஸ்.பி.வேலுமணி நேற்று சென்னை வந்து அடையாரில் இருந்த எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    தன்னுடன் வந்திருந்த ஆதரவாளர்களையும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வைத்து ஆளுயர ஆப்பிள் மாலை அணிவித்தார். இதன் மூலம் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவிக்கையில், எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை திறம்பட நடத்துவதை சகித்துக்கொள்ள முடியாமல் சில பைத்தியக்காரர்கள் ஆதாரமற்ற வதந்திகளை பரப்பினார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

    அ.தி.மு.க. பொதுக் குழுவில் தீர்மானம் கொண்டு வந்து அனைவரும் ஒருமனதாக எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத் ேதாம். அவரது தலைமையில் கட்சி வீறுநடை போடுவதாகவும் தெரிவித்தார்.

    முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில் அ.தி.மு.க. என்பது மிகப்பெரிய ஆலமரம் அதன் கீழ் எல்லோரும் இருக்கிறோம். இங்கு பிளவு என்ற பேச்சுக்கே இடமில்லை.

    செங்கோட்டையனின் பேரன் திருமணம் வரவேற்பு கோவையில் ஜூன் 16-ந் தேதி நடைபெறுகிறது. இந்த திருமணத்தை எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி நடத்துகிறார்.

    எனவே கட்சி வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வெளியில் பிதற்றுகிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது என்று தெரிவித்தார்.

    இதேபோல் மூத்த தலைவர்களும் தி.மு.க.வை சாடி உள்ளனர். 

    • விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
    • விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிட்டு வெற்றி பெறும்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.,வாக, தி.மு.க.,வை சேர்ந்த புகழேந்தி இருந்தார். இவர் உடல் நலக்குறைவால் ஏப்ரல் 6-ந் தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடந்தது. பாராளுமன்ற தேர்தல் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகிறது. இறுதி கட்ட தேர்தலின் போது, விக்கிரவாண்டி தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே, ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் தேர்தல் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.

    இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிட பா.ம.க., விரும்புவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் தெரிவித்தார். அதே சமயம் அந்த தொகுதியில் போட்டியிட, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பா.ஜ.க.வும் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, தமிழக பா.ஜ.க. துணைத் தலைவர் எம்.சக்கரவர்த்தி கூறியதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க.-அ.தி.மு.க.வை அடுத்து பா.ஜ.க. பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்று பலம் வாய்ந்த கூட்டணி உருவானது. எனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிட்டு வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சமச்சீரான வளர்ச்சியை ஏற்படுத்துவதில் அரசு தோல்வி.
    • முன்னேற்றத்திற் கான சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அனைவருக்கும் முன்னேற்றம் என்ற மயக்கும் முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்த தி.மு.க., அ.தி.மு.க.வின் 57 ஆண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களிடையேயான பொருளாதார ஏற்றத்தாழ்வு மிகப்பெரிய அளவில் அதிகரித்திருப்பது தெரியவந்திருக்கிறது.

    தனிநபர் வருமானத்தில் மாநில சராசரிக்கும் குறைவாக உள்ள 24 மாவட்டங்களில் 16 மாவட்டங்கள் வடக்கு மற்றும் காவிரி பாசன மாவட்டங்களைச் சேர்ந்தவை என்பதிலிருந்தே சமச்சீரான வளர்ச்சியை ஏற்படுத்துவதில் அரசு தோல்வியடைந்திருப்பது உறுதியாகியுள்ளது.

    இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனரும், சென்னை பொருளாதாரப் பள்ளியின் தலைவருமான முனைவர் சி. அரங்கராஜன், சென்னை பொருளாதாரப் பள்ளியின் இயக்குனர் முனைவர் கே.ஆர். சண்முகம் ஆகியோர் இணைந்து தமிழக பொருளாதாரம் குறித்த 69 பக்க ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

    அதில் 2019-20-ம் ஆண்டு புள்ளி விவரங்களின் அடிப்படையில் தமிழ் நாட்டின் சராசரி தனிநபர் வருவாயான ரூ.2,36,783-ஐ விட 19 மாவட்டங்களின் தனிநபர் வருமானம் குறைவாக இருப்பதாக குறிப்பிட்பட்டிருக்கிறது. 13 மாவட்டங்கள் மட்டுமே சராசரியை விட அதிக வருமானம் ஈட்டியுள்ளன.

    சென்னையை ஒட்டி யுள்ள தொழிற்சாலைகள் நிறைந்த திருவள்ளூர் மாவட்டம் தான் ரூ.3,64,337 ஆண்டு வருமானத்துடன் தனிநபர் வருமானத்தில் முதலிடத்தில் உள்ளது. பெரம்பலூர் ரூ.1,07,731 வருமானத்துடன் கடைசி இடத்தில் உள்ளது.

    வட மாவட்டங்களும், காவிரி பாசன மாவட்டங்களும் முன்னேறாமல் தமிழ்நாடு முன்னேறாது என்ற உண்மையை உணர்ந்து அந்த மாவட்டங்களின் முன்னேற்றத்திற்கான சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

    வேளாண்மைக்கு பாதிப்பு ஏற்படாமல் தொழிற்திட்டங்களைத் தொடங்க வேண்டும். இந்த மாவட்டங்களுக்கு சிறப்பு சலுகைகளை பெறுவதற்கு வசதியாக இந்திய

    அரசியலமைப்புச் சட்டத்தில் 371 (கே) என்ற புதிய பிரிவைச் சேர்க்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. பட்டியல் தயார் செய்து வருகிறது.
    • விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கும்.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி (தி.மு.க.) மரணம் அடைந்ததை தொடர்ந்து இந்த தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் கமிஷனில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் 7-வது கட்டமாக ஜூன் 1-ந் தேதி நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுடன் விக்கிரவாண்டி தொகுதிக்கும் தேர்தல் நடத்தினால் அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளது.

    அதன் அடிப்படையில் எந்த நேரத்திலும் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அனேகமாக நாளையே (7-ந்தேதி) தேர்தல் தேதிக்கான அட்டவணை வெளியாக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தல் நடத்தை விதிகள் ஏற்கனவே அமலில் இருப்பதால் தேர்தலில் பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்களை வைத்து இடைத்தேர்தலை நடத்தி விடலாம் என தேர்தல் ஆணையம் கருதுவதாக தெரிகிறது.

    ஆனால் வெயில் அதிகமாக இருப்பதால் இடைத்தேர்தல் தேதியை முடிவு செய்வதற்கு முன்பு தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக முடிவு எடுக்க கூடாது என்றும் அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    மே 4-ந் தேதி முதல் தமிழகத்தில் வெப்ப அலை நிலவி வருவதால் தேர்தல் ஆணையம் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

    இந்த சூழ்நிலையில் எப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் கட்சிகள் இடைத் தேர்தலை சந்திக்க தயாராகவே இருப்பதாக தெரிகிறது.

    பா.ம.க.வும் அ.தி.மு.க.வும் கூட்டணியின்றி இப்போது தனித்தனியாக இருப்பதால் தேர்தலில் தமக்கு சாதகமான நிலை காணப்படுவதாக தி.மு.க. கருதுகிறது. இதனால் இப்போதே யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று தி.மு.க. பட்டியல் தயார் செய்து வருகிறது.

    இந்த தேர்தலில் தி.மு.க.வில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் தலைமையை அணுகி வருகின்றனர்.

    விழுப்புரம் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெயச் சந்திரன் விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர் வேம்பி ரவி, மறைந்த புகழேந்தி எம்.எல்.ஏ.வின் மருமகள் பிரசன்னா தேவி (கோலியனூர் முன்னாள் சேர்மன்) ஆகியோர் `சீட்' பெறுவதற்கு கடும் முயற்சி செய்து வருகின்றனர்.

    அ.தி.மு.க.வில் ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர்.எம். பன்னீர், முன்னாள் பொதுக் குழு உறுப்பினர் லட்சுமி நாராயணன் உள்பட நிர்வாகிகள் போட்டியிட ஆர்வம் காட்டி அ.தி.மு.க. மேலிடத்தை அணுகி வருகின்றனர்.

    பா.ம.க.வில் மாவட்டத் தலைவர் புகழேந்திக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்பகுதியில் ஏற்கனவே பிரபலமான முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.ஜி.சம்பத் உள்ளார்.

    இவர் பா.ஜனதா கட்சி யில் இருப்பதால் பா.ம.க. ஆதரவுடன் அவர் களம் காணுவாரா? என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    தேர்தல் கமிஷன் தேர்தல் தேதியை அறிவிப்பதை பொறுத்து விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கும்.

    ×