search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடபழனி"

    வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்ட திருவிழா நடந்தது. ‘அரோகரா... அரோகரா...’, பக்தி கோஷத்துடன் பக்தர்கள் மனமுருக வழிபட்டனர்.
    சென்னையில் உள்ள தொன்மை வாய்ந்த வடபழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படும். அந்தவகையில் இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா, கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து மங்களகிரி விமானம், ஆட்டுக்கிடா வாகனம், நாக வாகனம், யானை வாகனத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சிகள் நடந்தன.

    திருவிழாவின் 7-வது நாளான நேற்று தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்வான தேர் திருவிழாவையொட்டி வடபழனி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. கோவிலை சென்றடையும் அனைத்து சாலைகளிலும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். பக்தர்கள் சிரமமின்றி வழிபாடு செய்வதற்காக வாகனங்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    காலை 9.50 மணியளவில், வடபழனி முருகன் கோவிலுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த தேரில் வள்ளி-தெய்வானையுடன் முருக பெருமான் எழுந்தருளினார். தேரை பக்தர்களே வடம் பிடித்து இழுத்தனர். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள், ‘கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா...’ என்று பக்தி கோஷம் எழுப்பி மனமுருக வழிபட்டனர்.

    கோவில் மற்றும் தெப்பக்குளத்தை சுற்றி தேர் பவனி வந்தது. பின்னர் வடபழனி கோவில் அருகே உள்ள முக்கிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது. தேர் சென்ற வழியெல்லாம் பக்தர்களும் உடன் சென்றனர். பாதுகாப்பு கருதி போலீசாரும் உடன் சென்றனர். தேருக்கு முன்பாக வழிகாட்டும் நாயகனாக விநாயகர் சிலையும், தேருக்கு பின்னால் கோவில் பாதுகாவலரான சண்டிகேஸ்வரர் சிலையும் எடுத்து செல்லப்பட்டது.

    தேரோட்டம் முடிந்த பிறகு, நேற்று மாலை கோவில் வளாகத்திலேயே ஒய்யாளி உற்சவம் நடத்தப்பட்டது. தேரில் ஏறி பக்தர்களுக்கு அருள் பாலித்த களைப்பில் அசதி கொண்ட முருகன், நாதஸ்வர இசைக்கு ஏற்ப ஆடி தனது களைப்பை போக்கிக்கொள்ளும் நிகழ்வாக ‘ஒய்யாளி உற்சவம்’ கடைபிடிக்கப்படுகிறது. அந்தவகையில் கோவில் வளாகத்திலேயே முருகனை ஆடிப்பாடி உலா வர செய்தனர். நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு வடபழனி ஆண்டவர் திருவீதி உலா நடக்கிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) வைகாசி விசாக திருவிழா நடக்கிறது. அன்று காலை 10.30 மணிக்கு ஸ்ரீசண்முகர் வீதி உலாவும், தீர்த்தவாரி கலசாபிஷேகமும் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 7 மணிக்கு மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. 19-ந்தேதி இரவு 7 மணிக்கு சிறப்பு புஷ்ப பல்லக்கு வீதி உலா புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.

    20-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை விடையாற்றி திருவிழா நடக்கிறது. இந்த நாட்களில் தினந்தோறும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. தினந்தோறும் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பரதநாட்டியமும், இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஆன்மிக சொற்பொழிவு மற்றும் பாடல் நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    வைகாசி விசாக திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ல.ஆதிமூலம், உதவி ஆணையர் கவிதா பிரியதர்ஷிணி ஆகியோர் செய்து வருகின்றனர்.
    வடபழனியில் வீட்டில் புகுந்து ரூ.2 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    வடபழனி குமரன் காலனி 7வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கணேஷ். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 51). ஆதம்பாக்கத்தில் நீட் பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார்.

    மகேஸ்வரி நேற்று மாலை தனது பயிற்சி வகுப்பில் வசூலான பணம் மற்றும் நகைகளை அடமானம் வைத்து பெற்ற பணம் என மொத்தமாக சேர்த்து ரூ.2 லட்சத்தை தனது கைப்பையில் வைத்துக் கொண்டு வீடு திரும்பினார். பின்னர் கைப்பையை வீட்டின் ஹாலில் உள்ள சோபாவில் வைத்துவிட்டு சமையல் அறைக்குள் சென்றார்.

    சிறிது நேரம் கழித்து வந்த மகேஸ்வரி கைப்பையை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். வெளியே ஓடி வந்து பார்த்தபோது கைப்பை மட்டும் கிடந்தது. அதிலிருந்த பணம் ரூ.2லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    இதுகுறித்து வடபழனி போலீசில் மகேஸ்வரி புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பாலுசாமி வழக்குப் பதிவு செய்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கண் காணிப்பு கேமராவை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றார்.

    வடபழனி பகுதியில் நகை திருடும் கும்பலைசேர்ந்த 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    மாங்காடு மேல்மாநகர் அம்மன்முருகன் நகரைச் சேர்ந்தவர் ருக்குமணி (75).

    கடந்த டிசம்பர் மாதம் இவர் கோயம்பேட்டில் இருந்து வடபழனிக்கு ஷேர் ஆட்டோவில் சென்றார். அப்போது ருக்குமணி அணிந்திருந்த 5 சவரன் செயினை உடன் வந்த பெண்கள் திருடி சென்றது தெரிந்தது.

    கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் புலியூர் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் ஜீனத் (53). அவர் கடந்த 1-ந் தேதி பூந்தமல்லியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்வதற்காக பஸ்சில் ஏறினார். பஸ் வடபழனி கோவில் அருகே வந்தபோது தான் அணிந்திருந்த 6 சவரன் செயின் கொள்ளை போனது தெரியவந்தது.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வடபழனி போலீசார் உதவி கமி‌ஷனர் ஆரோக்ய பிரகாசம் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலுசாமி தலைமையில் தனிப்படை அமைத்து தங்க சங்கிலியை திருடிய பெண்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் வைத்து முத்தம்மாள் (29), முத்துமாரி (37) ஆகிய பெண்களை தனிப்படை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 சவரன் நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

    இதில் தொடர்புடைய மீனாட்சி மற்றும் கூட்டாளிகளான மூன்று பெண்களை தேடி வருகின்றனர். போலீசார் விசாரணையில் மதுரை கடச்சநேந்தல் பகுதியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த கும்பல் தனியாக பஸ்சில் வரும் பெண்கள், முதியவர்களை குறிவைத்து அவர்களிடம் பேச்சு கொடுத்து கவனத்தை திசை திருப்பி நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

    கைது செய்யப்பட்ட பெண்கள் மீது விருகம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, வேலூர், மதுரை ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் கொள்ளை வழக்குகள் உள்ளன. பெண் கொள்ளை கும்பலை கைது செய்த தனிப்படை போலிசாரை கமி‌ஷனர் விஸ்வநாதன் பாராட்டினார்.

    வடபழனியில் லாட்ஜில் சூதாடிய 13 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    வடபழனி விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் விடுதிகளில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக புகார்கள் வந்தன.

    இதையடுத்து வடபழனி உதவி கமி‌ஷனர் ஆரோக்ய பிரகாசம் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் விடுதிகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள தனியார் விடுதியில் போலீசார் சோதனை நடத்தினர்.

    அப்போது ஒரு அறையில் சூதாட்டம் நடைபெற்று வந்தது தெரியவந்தது. சூதாட்டத்தில் ஈடுபட்ட அபுசுசியான், பெரியசாமி, வெங்கலியான், சதிஷ்குமார், சபீர், தமிம் அன்சாரி உள்ளிட்ட 13 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.27ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    வடபழனியை சேர்ந்த நிதி நிறுவன அதிர்பர்களை கடத்திய வழக்கில் கைதான கொள்ளையர்களிடமிருந்து ரூ.28 லட்சம் பணம் மற்றும் 25 பவுன் நகைகள் பறிமுதல செய்யப்பட்டது.
    சென்னை:

    வடபழனியை சேர்ந்த நிதி நிறுவன அதிபர்களான மோகன், மாணிக்கம் ஆகியோர் கடந்த மாதம் 23-ந்தேதி காரில் கடத்தப்பட்டனர்.

    2 பேரையும் கத்திமுனையில் மிரட்டி பங்களாவில் அடைத்து வைத்த கும்பல் ரூ.33 லட்சம் பணம் மற்றும் 28 பவுன் நகைகளை பறித்தது.

    இது தொடர்பாக வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் வடபழனி உதவி கமி‌ஷனர் சங்கர் தலைமையில், இன்ஸ்பெக்டர் பசுபதி, மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    கடத்தல் வழக்கின் குற்றவாளிகளான செல்லப்பாண்டி, சுதீர்குமார், நந்த குமார், சேக்தாவூத், சீனிவாசன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். மணிகண்டன், வினோத் ஆகியோர் சைதாப்பேட்டை கோர்ட்டிலும், சரவணகுமார் அம்பத்தூர் கோர்ட்டிலும் சரண் அடைந்தனர்.

    இவர்கள் 3 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது 3 பேரிடமிருந்தும் ரூ.28 லட்சம் பணம், 25 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 5 கத்திகளும் கைப்பற்றப்பட்டன. #Tamilnews
    வேலை கிடைக்காத விரக்தியில் வணிக வளாக அடுக்குமாடி கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து என்ஜினீயர் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
    கோயம்பேடு:

    வேலை கிடைக்காத விரக்தியில் வணிக வளாக அடுக்குமாடி கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து என்ஜினீயர் குதித்து தற்கொலைக்கு முயன்றார். தரைதளத்தில் இருந்த பாதுகாவலர் அவரை கைகளில் தாங்கிப்பிடித்து காப்பாற்றினார்.

    சென்னை வடபழனி, ஆற்காடு சாலையில் கமலா திரையரங்கம் எதிரில் தனியார் அடுக்குமாடி வணிகவளாக கட்டிடம் உள்ளது. அதில் நான்காவது மாடியிலிருந்து ஒரு வாலிபர் குதிக்க முயன்றார். இதைப் பார்த்த அங்கு இருந்தவர்கள் அவரை வேண்டாம்... என எச்சரித்து சத்தம் போட்டனர்.

    ஆனாலும் அதை கேட்காமல் அந்த வாலிபர் ஏறி குதித்தார். சத்தம் கேட்டு அதை தரைதளத்திலிருந்து கவனித்த பாதுகாவலர் சகாயம் ஓடிச்சென்று அவரை 2 கைகளாலும் தாங்கிப்பிடித்தார். இதனால் அந்த வாலிபரின் தலை தரையில் மோதாமல் தவிர்க்கப்பட்டு உயிர்தப்பினார்.

    ஆனால் இந்த சம்பவத்தில் பாதுகாவலர் சகாயத்தின் கை முறிந்தது. குதித்த வாலிபரும் காயம் அடைந்தார். இரண்டு பேரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து வடபழனி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். விசாரணையில், தற்கொலைக்கு முயன்ற வாலிபர் சிதம்பரத்தை சேர்ந்த சபரிநாதன் (வயது 27) என்று தெரிந்தது. பொறியியல் பட்டதாரியான இவர் பூந்தமல்லி அருகே உள்ள குமணன் சாவடியில் அறை எடுத்து தங்கியிருந்தார்.

    இங்கு தங்கியிருந்து வேலை தேடிவந்த அவருக்கு சரியான வேலை கிடைக்காததால் ஏமாற்றத்துக்கு உள்ளானார். தனக்கு வேலை கிடைக்காததற்கு இடஒதுக்கீடு மற்றும் நிர்வாக குளறுபடிகள் தான் காரணம் என்று அவர் கருதினார். இதன் காரணமாகவே அவர் தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. இதுபற்றி தற்கொலை முயற்சிக்கு முன்னதாக முகநூலில் பதிவு செய்துள்ளார்.

    வாலிபரின் தலை தன் மீது விழுந்தால் உயிர் போய்விடும் என்று தெரிந்தும், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அவரை தாங்கிப்பிடித்து காப்பாற்றிய பாதுகாவலர் சகாயத்தை வணிக வளாகத்தில் இருந்த பொதுமக்களும், போலீசாரும் பாராட்டினார்கள். 
    ×