search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலபாமா"

    அமெரிக்க மாகாணமான அலபாமாவில் கருக்கலைப்புக்கு தடைவிதிக்கும் மசோதா நிறைவேறியது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் 1973-ம் ஆண்டுக்கு முன்னர் பெண்கள் தங்களின் கருவை கலைப்பது சட்டவிரோத செயலாக பார்க்கப்பட்டது. இதை எதிர்த்து பெண் உரிமை ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த 1973-ம் ஆண்டு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு, கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.

    அதன்படி அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் கருக்கலைப்பு செய்வதற்கு சட்டப்பூர்வ அனுமதி இருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப், கருக்கலைப்பு செய்யும் பெண்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என பிரசாரம் செய்தார்.

    இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. எனினும் டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதி ஆனார். அதனை தொடர்ந்து குடியரசு கட்சியினர் கவர்னர்களாக இருக்கும் மாகாணங்களில் கருக்கலைப்புக்கு கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.

    கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவின் 16 மாகாணங்களில் கருக்கலைப்புக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. அந்த வகையில் அலபாமா மாகாணத்தில் கருக்கலைப்புக்கு முழுமையாக தடைவிதிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

    கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கருக்கலைப்புக்கு தடைவிதிக் கும் சட்ட மசோதா அலபாமா மாகாண சட்டசபையில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா கீழ்சபையில் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டபோது மசோதாவுக்கு ஆதரவாக 74 ஓட்டுகளும், எதிராக 3 ஓட்டுகளும் விழுந்தன.

    எனவே பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் கீழ்சபையில் அந்த மசோதா நிறைவேறியது. அதனை தொடர்ந்து, இந்த மசோதா நேற்று முன்தினம் மேல்சபையில் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. அங்கு மசோதாவுக்கு ஆதரவாக 25 ஓட்டுகளும், எதிராக 6 ஓட்டுகளும் விழுந்தன.

    இதன் மூலம், கருக்கலைப்புக்கு தடைவிதிக்கும் மசோதா மேல்சபையிலும் வெற்றிகரமாக நிறைவேறியது. இதையடுத்து, இந்த மசோதா குடியரசு கட்சியை சேர்ந்த அலபாமா மாகாணத்தின் பெண் கவர்னரான கெய் இவேவின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

    அவர், இந்த மசோதாவில் கையெழுத்திடுவது அல்லது நிராகரிப்பது குறித்து உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. எனினும் அவர் கருக்கலைப்பை கடுமையாக எதிர்ப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த மசோதா கையெழுத்தாகி சட்டமானால், கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஆபத்து நேரிட்டாலோ அல்லது பாலியல் பலாத்காரத்தின் மூலம் கர்ப்பமடைந்தாலோ, தவறான உறவின் மூலம் கருத்தரித்தாலோ மட்டுமே கருக்கலைப்பு செய்ய முடியும்.

    மேற்கூறிய காரணங்கள் தவிர வேறு எதற்காக கருக் கலைப்பு செய்தாலும் அது தண்டனைக்குரிய குற்றமாகும். கருக்கலைப்பு செய்யும் டாக்டருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அதே சமயம் கருக்கலைப்பில் ஈடுபடும் பெண் குற்றவாளியாக கருதப்படமாட்டார்.

    கருக்கலைப்புக்கு எதிராக மசோதா நிறைவேற்றப்பட்டு இருப்பது பெண் உரிமை ஆர்வலர்கள் மற்றும் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    ×