search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 106175"

    • ரூ.90 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
    • ஆனந்தக்காவிரி வாய்க்கால் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் வண்ணாரப்பேட்டை ஊராட்சியில் உள்ள முதலைமுத்து வாரியில் தூர்வாரும் பணியை இன்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது :-

    2023-24-ம் ஆண்டு காவிரி டெல்டா மாவட்ட ங்களில் ஆறுகள், கால்வா ய்கள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களில் 691 பணிகள் 4773.13 கி.மீ நீளத்திற்கு ரூ.90.00 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள அரசாணை வழங்கப்பட்டு உள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், கால்வா ய்கள், வாய்க்கால்கள், வடிகால்கள் மற்றும் ஏரிகள் ஆகியவற்றில் 189 பணிகள்.

    1068.45 கி.மீ நீளத்திற்கு ரூ.2045.51 லட்சம் மதிப்பீட்டிற்கு ஒப்பளிக்க ப்பட்டதை தொடர்ந்து, ஏப்ரல் 27ஆம் தேதி அன்று நீர்வளத்துறை அமைச்சர் தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், ஆனந்தக்காவிரி வாய்க்கால் தூர்வாரும் பணியை தொடக்கி வைத்தார்.

    மேற்காணும் தூர்வாரும் பணிகள் கீழ்காவிரி வடிநில வட்டத்தைச் சார்ந்த கோட்டங்களான காவிரி வடிநிலக் கோட்டம். தஞ்சாவூர், காவிரி வடிநிலக் கோட்டம், (கிழக்கு) மயிலாடுதுறை, வெண்ணாறு வடிநிலக் கோட்டம், தஞ்சா வூர், கல்லணைக்கால்வாய் கோட்டம், தஞ்சாவூர் அக்னியாறு வடிநிலக் கோட்டம், பட்டுக்கோட்டை மற்றும் திருச்சி, நடுக்காவிரி வடிநில வட்டத்தை சார்ந்த திருச்சி, ஆற்றுப்பாதுகாப்பு கோட்டங்களின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் அ l பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரும் பணி 31.05.2023 மற்றும் "ஆ" பிரிவு வாய்க்கால்கள் 10.06.2023க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 189 தூர்வாரும் பணி பணிகளில் பணிகள் 3 முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

    ஆறுகள், கால்வாய்கள். வாய்க்கால்கள், வடிகால்கள் மற்றும் எரிகள் ஆகியவற்றில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடை வரை சென்றடையும். மேலும், மழை பெய்தால் தங்குதடையின்றி விரைவாக மற்றும் வெள்ளக்கா லங்களில் வயல்வெளிகளில் தேங்கும் நீரானது விரைவில் வடிந்து பயிர் சேதும் ஏற்படாமல் பாதுகாக்க ப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது பொதுப்பணி செயற்பொறியாளர் இளங்கோ காவேரி, மதன சுதாகர், (வெண்ணாறு) பவளக்கண்ணன், (கல்லணை கால்வாய் ) உதவி செயற்பொறியாளர் சிவகுமார், மலர்விழி, சபரிநாதன், ரேவதி சேந்தன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • போலீசார் சீர்காழி ஈசானியத்தெரு டாஸ்மாக் கடையில் திடீர் ஆய்வு செய்தனர்.
    • பாரினை பூட்டி சீல்வைத்து அங்கு பணியாற்றி வந்த சைஜி என்பவரை கைது செய்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி பகுதியில் உரிமம் இன்றி டாஸ்மாக் அருகே பார்கள் செயல்படுவதாக வந்த புகாரின் பேரில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் வாசுதேவன் தலைமையில் சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் செல்வி மற்றும் போலீசார் சீர்காழி ஈசானியத்தெரு டாஸ்மாக் கடையில் திடீர் ஆய்வு செய்தனர்.

    அப்போது அங்கு உரிமம் இன்றி பார் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த பாரினை பூட்டி சீல் வைத்தனர்.

    மேலும் அங்கு விற்பனையில் ஈடுப்பட்டிருந்த மாதானம் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து கடவாசல் டாஸ்மாக் கடையில் உரிமம் இன்றி செயல்பட்ட பாரினை பூட்டி சீல்வைத்து அங்கு பணியாற்றிவந்த புதுத்துறையை சேர்ந்த சைஜி என்பவரை கைது செய்தனர்.

    இதேபோல் திருமுல்லை வாசல், டாஸ்மார்க் கடையில்பார் நடத்திய சசிகுமார், மாதானம் டாஸ்மாக் கடையில் பார் நடத்திய முத்து கடைக்கண், விநாயக நல்லூரில் டாஸ்மாக் கடையில் பார் நடத்திய பார்த்தராஜ் ஆகிய 5 பே ரை கைது செய்து 5 பார்கள் பூட்டி சீல்வைக்கப்பட்டது.

    தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பம்மல் கல்குவாரி நீர் குடிநீராக பயன்படுத்த தகுதி உள்ளதா என்று ஆய்வு செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
    தாம்பரம்:

    பருவ மழை பொய்த்ததால் இந்த ஆண்டு சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் முற்றிலும் வறண்டு விட்டன.

    பூண்டி, புழல் ஏரியில் உள்ள தண்ணீரை இன்னும் ஒருவாரத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தண்ணீர் பிரச்சினை விசுவரூபம் எடுத்து உள்ளது. குடிநீருக்காக பொதுமக்கள் காலி குடங்களுடன் தினமும் காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது.

    குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க கல்குவாரி நீர் மற்றும் காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய கிணற்று தண்ணீரை கூடுதலாக எடுத்து பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இதேபோல பம்மல் காமராஜபுரத்தில் உள்ள செங்கழுநீர் கல்குவாரியில் தேங்கி உள்ள நீரை குடிநீருக்கு பயன்படுத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ. 6.5 கோடி செலவில் பம்மல், அனகாபுத்தூர் ஆகிய 2 நகராட்சிகளிலும் தனித்தனியாக சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

    சோதனை ஓட்டமாக தண்ணீரை சுத்திகரித்து குடிநீருக்கு பயன்படுத்த உகந்ததா? என்று அறிய மாநில சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கிண்டி ஆராய்ச்சி மைய நீர் பரிசோதனை துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ஆனால் இதுவரை தண்ணீரின் தன்மை குறித்த முடிவு தெரிவிக்காமல் உள்ளதாக தெரிகிறது. இதனால் செங்கழுநீர் கல்குவாரி நீரை குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாநில பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி கூறும்போது, ‘கல்குவாரி, ஏரி, குளங்களில் உள்ள நீரை குடிநீருக்கு பயன்படுத்த தகுதி உள்ளதா? என்பதை பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்க முடியும்.

    நீரின் தன்மை குறித்து பரிசோதனைக்கு அனுப்பிய 3 நாட்களில் முடிவை தெரிவிக்க வேண்டும். கல்குவாரி நீரின் தன்மை குறித்த முடிவு என்ன காரணத்தினால் தாமதம் என்று தெரியவில்லை. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    பம்மல், அனகாபுத்தூர் கல்குவாரி நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உடனடியாக ஆய்வு செய்யப்படும்’ என்றார்.

    ஒடிசா மாநிலத்தின் புரியில் பானி புயலால் பாதிப்பு அடைந்த பகுதிகளை மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று பார்வையிட்டார். #CycloneFani
    புவனேஷ்வர்:

    வங்கக் கடலில் உருவான பானி புயல் ஒடிசா மாநிலத்தில் கரையை கடந்தது. அப்போது வீசிய பலத்த காற்றால் மாநிலம் முழுவதும் மரங்கள், மின் கம்பங்கள் கீழே விழுந்தன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பானி புயலால் பாதிப்பு அடைந்த ஒடிசா மாநிலத்துக்கு பல்வேறு மாநிலங்கள் நிடி அளித்து வருகின்றன.



    இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் புரியில் பானி புயலால் பாதிப்பு அடைந்த பகுதிகளை மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று பார்வையிட்டார்.

    இன்று ஒடிசாவின் புரி நகருக்கு வந்த மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான். புயலால் பாதிப்பு அடைந்த பகுதிகளை பார்வையிட்டார். அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடினார். #CycloneFani
    அடிப்படை வசதிகள் குறித்து வாக்குச்சாவடிகளில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.
    ஊட்டி:

    குன்னூர் அருகே மேலூர் அரசு தொடக்கப்பள்ளி, தூதுர்மட்டம் அரசு நடுநிலைப்பள்ளி, சேலாஸ் லிட்டில் பிளவர் உயர்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்பப்பள்ளி, வண்டிசோலை நடுநிலைப்பள்ளி, ஓட்டுப்பட்டரை சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளி, குன்னூர் நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு குடிநீர், கழிப்பிடம், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் உள்ளனவா? என்பது குறித்து தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உடனடியாக விடுபட்ட வசதிகளையும் ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தினார்.

    முன்னதாக ஊட்டி அருகே உள்ள கேத்தி சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதனை கலெக்டர் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தலைமை தேர்தல் ஆணையத்தின் மூலம் வழங்கப்பட்ட ‘அனைவரும் வாக்களிக்க வேண்டும்’ என்ற விழிப்புணர்வு குறும்பட பிரசார வாகனத்தை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

    இதில் குன்னூர் தாசில்தார் தினேஷ் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜ், சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ஆம்பூர் அருகே மர்ம நோயால் பாதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் இறந்தன. கால்நடைத்துறையினர் மற்றும் பொது சுகாதாரத் துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே கிராமப் பகுதிகளில் வெள்ளாடுகள் இறந்த சம்பவத்தை தொடர்ந்து கால்நடை மற்றும் சுகாதாரத் துறையினர் அப்பகுதிகளில் முகாமிட்டு ஆய்வு செய்தனர்.

    ஆம்பூர் அருகே மிட்டாளம், பைரப்பள்ளி, பந்தேரப்பள்ளி, வன்னிய நாதபுரம், ரகுநாதபுரம், மேக்கனாம்பல்லி, ராள்ளக்கொத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிப்பவர்கள் வெள்ளாடுகளை வளர்த்து வருகின்றனர்.

    அதோடு மட்டுமல்லாமல் தமிழக அரசு இலவசமாக வழங்கிய வெள்ளாடுகளையும் வளர்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக மர்ம நோயால் பாதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் இறந்தன.

    இந்நிலையில் மிட்டாளம், பைரப்பள்ளி பகுதிகளுக்கு கால்நடைத்துறையினர் மற்றும் பொது சுகாதாரத் துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். கால்நடைத்துறை நோய்கள் புலனாய்வு இணை இயக்குனர் டாக்டர் ஸ்ரீஹரி தலைமையில் கால்நடை டாக்டர்கள் ரமேஷ்குமார், பிரவீன்குமார் உள்ளிட்ட குழுவினரும், பொது சுகாதாரத்துறை வட்டார மருத்துவ அலுவலர் குமார் தலைமையில் மாவட்ட பூச்சியியல் நிபுணர் காமராஜ், வட்டார சுகாதார அலுவலர் ரஷீத், சுகாதார ஆய்வாளர் பிரேம் உள்ளிட்ட குழுவினரும் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதுகுறித்து கால்நடை துறையின் நோய்கள் புலனாய்வு பிரிவு இணை இயக்குனர் ஸ்ரீஹரி கூறியதாவது:-

    வழக்கத்தை காட்டிலும் அதிக பனிப்பொழிவே வெள்ளாடுகள் இறப்புக்கு காரணம். திறந்த வெளியில் உள்ள பட்டிகளில் வெள்ளாடுகளை அடைக்கக்கூடாது. கூரை மேய்ந்த கொட்டகைகளில் மட்டுமே ஆடுகளை அடைத்து பாதுகாக்க வேண்டும்.

    ஆடுகளுக்கு நோய் தாக்குதல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். நோய் தாக்கி வெள்ளாடுகள் இறந்தால் அவற்றை குழி தோண்டி புதைக்க வேண்டும். உணவுக்காக சம்மந்தப்பட்ட வெள்ளாட்டின் இறைச்சியை பயன்படுத்தக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும், நோய் தாக்குதலுக்கு ஆளான வெள்ளாட்டு கொட்டகைகளை பார்வையிட்டனர். வெள்ளாடுகளின் சளி, சாணம் போன்றவற்றை பரிசோதனைக்காக எடுத்து சென்றனர்.

    கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
    கடலூர் முதுநகர்:

    கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்துக்கு ரெயில்வே போலீஸ் ஏ.டி.ஜி.பி.சைலேந்திரபாபு நேற்று மாலை 3.30 மணிக்கு காரில் திடீரென வந்தார். பின்னர் அவர், அங்குள்ள ரெயில்வே போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்கள், பதிவு செய்துள்ள வழக்குகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணி குறித்து போலீசாரிடம் கேட்டார்.

    இதனை தொடர்ந்து ஏ.டி.ஜி.பி.சைலேந்திரபாபு, ரெயில் நிலைய பகுதிகளையும் பார்வையிட்டார்.

    இது குறித்து ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    இது வழக்கமான ஆய்வுதான். கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்திற்கு முதன்முறையாக ஆய்வு செய்ய வந்துள்ளேன். ரெயிலில் பயணம் செய்யும்போதோ அல்லது ரெயில் நிலையத்தில் காத்திருக்கும்போதோ தங்களது உடைமைகளை பயணிகள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதையும் மீறி பொருட்கள் திருடுபோனாலோ அல்லது தொலைந்து போனாலோ ரெயில் நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம். இது தொடர்பாக உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதுமட்டுமின்றி தமிழகத்தில் இருந்து ஆந்திரா, ஒடிசா, மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு ரெயிலில் பயணம் செய்யும்போது திருட்டு நடந்ததால், அது தொடர்பாக அந்தந்த பகுதியில் உள்ள ரெயில் நிலையத்தில்தான் புகார் செய்ய வேண்டும் என்பது கிடையாது. தமிழகத்திற்கு வந்து, அருகில் உள்ள ரெயில் நிலையங்களிலும் புகார் தெரிவிக்கலாம்.

    ரெயிலில் பயணம் செய்யும்போது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் ‘ஜி.ஆர்.பி. ஹெல்ப்’ என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளோம். அதனை பயணிகள் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். தனியாக ரெயிலில் பயணம் செய்யும் பெண்ணுக்கு ஏதேனும் பாலியல் தொல்லையோ அல்லது வேறு ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டதால் ‘ஜி.ஆர்.பி. ஹெல்ப்’ என்ற செயலி மூலம் தகவல் தெரிவிக்கலாம். அடுத்த சில நிமிடங்களில் அந்த ரெயிலில் பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது விழுப்புரம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்ரின் சுஜாதா உடன் இருந்தார்.
    முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வுக்கு சென்ற தமிழக அதிகாரிகளை கேரள வனத்துறையினர் திருப்பி அனுப்பினர். #MullaperiyarDam
    கூடலூர்:

    திருச்சியில் தமிழக பொதுப்பணித்துறை மேலாண்மை பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் நீர்மேலாண்மை குறித்து பொதுப்பணித்துறை என்ஜினீயர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    அணை, மதகு, நீர்வரத்து, வெளியேற்றம், மின்சார உற்பத்தி உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்க அணைகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வார்கள். இதேபோல் 30 என்ஜினீயர்கள் கொண்ட குழுவினர் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள இடுக்கி அணையை பார்வையிட்டனர்.

    பின்னர் முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட தேக்கடி வந்தனர். இது குறித்து கேரள வனத்துறைக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி தேக்கடிக்கு வந்த தமிழக என்ஜினீயர்களை நுழைவு வாயிலிலேயே கேரள வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். பெரியாறு புலிகள் காப்பக துணை இயக்குனர் ஷில்பாகுமார், எங்களுக்கு முறையான தகவல் வரவில்லை. எனவே என்ஜினீயர்களுக்கு அனுமதி அளிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

    இதனால் தலைமதகு பகுதி, போர்பைடேம் ஆகியவற்றை மட்டும் பார்வையிட்டனர். எனவே குழுவினர் தேனியில் தங்கி உள்ளனர். பெரியாறு, வைகை பாசன பிரிவில் உள்ள அணைகள் மற்றும் கால்வாய்களை பார்வையிட உள்ளனர்.

    இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது தகவல் முறையாக தெரிவிக்கப்பட்ட பிறகும் கேரள வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இது குறித்து மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் என்றனர். இது பற்றி விவசாயிகள் தெரிவிக்கையில், கேரள வனத்துறையினர் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அதிகாரிகளும் கண்டுகொள்ளாமலேயே உள்ளனர். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். #MullaperiyarDam

    மாற்று அறுவை சிகிச்சை மூலம் மனித இருதயத்துக்கு பதிலாக பன்றியின் இருதயத்தை பொருத்தும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். #pigheart
    பெர்லின்:

    இருதய நோய்கள் காரணமாக ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக மாரடைப்பு மூலம் பலர் மரணம் அடைகின்றனர். மருந்து மாத்திரைகள் மூலம் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இருந்தாலும் இருதய மாற்று அறுவை சிகிச்சையே சிறந்தது என நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் இருதயம் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் காத்து கிடக்கின்றனர்.

    எனவே, மனித இருதயத்துக்கு பதிலாக பன்றியின் இருதயத்தை பொருத்தும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

    ஜெர்மனியின் முனிச்லுத்விக் மேக்சி மில்லியன் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் இதுகுறித்த ஆய்வில் தீவிரமாக உள்ளனர்.

    அவர்கள் பன்றியின் இருதயத்தை எடுத்து வால் இல்லாத ‘பபூன்’ இனத்தை சேர்ந்த 10 குரங்குகளுக்கு பொருத்தினர். ஆய்வில் 5 குரங்குகள் நீண்டநாட்கள் உயிர் வாழ்ந்தன. ஒரு குரங்கு 51 நாட்களும், 2 குரங்குகள் 3 மாதங்களும் உயிருடன் இருந்தன. மேலும் 2 குரங்குகள் 6 மாதங்களுக்கு மேலாக உயிர் வாழ்ந்தன.



    இது ஒரு நல்ல முன்னேற்றம். இதன்மூலம் மனிதர்களுக்கும் பன்றி இருதயத்தை வெற்றிகரமாக பொருத்தலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனவே இந்த ஆய்வை மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர். அந்த ஆய்வு கட்டுரை ‘நேச்சர்’ என்ற அறிவியல் இதழில் வெளியாகி உள்ளது. #pigheart
    நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்து, அங்கு பயிரிடும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையில், புதிய லூனார் ரோவரை சீனா அனுப்பி உள்ளது. #China #Mission #Moon
    பீஜிங்:

    நிலவு மற்றும் செவ்வாய் போன்ற பகுதிகளுக்கு மனிதனை அனுப்புவதற்கு முன்னர் அங்கு தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்களை அனுப்பி அவை எப்படி அங்குள்ள சூழ்நிலைகளை சமாளித்து தாக்குப்பிடிக்கின்றன மற்றும் அவற்றுக்கு எந்தவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று கண்டறிந்து ஆவணப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது சீனாவின் சாங் இ (Chang’e Program) திட்டம். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ‘சாங் இ 4 மிஷன்’ (Chang’e 4 Mission) எனும் திட்டத்தை சீனா செயல்படுத்தி உள்ளது.
     
    இதுவரை பூமியை நோக்கி காணப்படாத நிலவின் மற்றொரு பகுதியாக  கருதப்படும் வோன் கர்மான் என்னும் பகுதியில் சாங் இ-4 என்னும் இந்த செயற்கைக்கோள் தரையிறங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    சீனாவிலுள்ள ஷிசாங் விண்வெளி நிலையத்திலிருந்து லோங் மார்ச் 3பி என்னும் ராக்கெட்டில் இந்த ரோபோ, நிலவை நோக்கி செலுத்தப்பட்டது.

    இந்த முயற்சியின் மூலம் நிலவிலுள்ள பாறைகள், மண் ஆகியவற்றை பூமிக்கு கொண்டு வந்து மேலதிக ஆராய்ச்சிகளை செய்வதற்கு சீனா திட்டமிட்டுள்ளது.

    ஜனவரி மாதத்தின் தொடக்க பகுதி வரை இந்த செயற்கைக்கோள் நிலவில் தரையிறங்காது. ஆனால், குறிப்பிட்ட காலம் முடிவு செய்யப்பட்ட பிறகு செயற்கைக்கோள் நிலவின் வேறொரு மூலையிலுள்ள கரடுமுரடான பகுதியில் தரையிறங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சூரியனின் குறுங்கோள்களில் ஒன்று நிலவில் தெற்கு அரைக்கோளத்திலுள்ள அய்ட்கன் பேசினில் மோதியதால் அங்கு பெரும் பள்ளம் உண்டானது. எனவே, நிலவு குறித்த ஆராய்ச்சிகள் தொடங்கிய காலத்திலிருந்தே வோன் கர்மான் என்னும் இந்த இடத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    தற்போது சீனாவினால் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள் இதுவரை ஆராய்ச்சிகளே மேற்கொள்ளப்படாத நிலவின் தென் துருவப் பகுதியின் புவியியல் அமைப்பு குறித்த தகவல்களை சேமிப்பதோடு அங்கிருந்து பாறை துண்டுகள், மண் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வரும்.

    Tidal locking அல்லது ஓதப் பூட்டல் என்ற விளைவின் காரணமாக நம்மால் நிலவின் ஒரு பகுதியை மட்டுமே பார்க்க முடிகிறது. ஏனெனில், நிலவை சுற்றி வருவதற்கு எடுத்துக் கொள்ளும் அதே காலத்தை தன்னைத்தானே சுற்றி வருவதற்கும் நிலவு எடுத்துக் கொள்கிறது.

    பொதுவாக நிலவின் 'இருண்ட பக்கம்' என்றழைக்கப்படும் இந்த இடத்திலும் சூரிய வெளிச்சம் காணப்பட்டாலும், பூமியிலிருந்து இந்த இடத்தை பார்க்க முடியாது என்பதால்தான் இதை அவ்வாறு அழைக்கின்றனர்.

    பூமியின் தொலைதூரத்தில் ரேடியோ அலைகளை அடிப்படையாக கொண்ட தொலைநோக்கிகளை நிலவின் தென் துருவத்தில் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளையும் இந்த செயற்கைக்கோள் மேற்கொள்ளும்.

    அதுமட்டுமின்றி, நிலவில் உயிரியல் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக ஒரு பெட்டிக்குள் உருளைக்கிழங்கு, அராபிடாப்சிஸ் தாவரத்தின் விதைகள் மற்றும் பட்டுப்பூச்சி முட்டைகள்  மூன்று கிலோ கொண்ட கொள்கலனில் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

    நிலவை அடையும் பட்டுப்பூச்சி முட்டைகள் முதலில் பட்டுப்பூச்சிகளை உற்பத்தி செய்யும், பின்னர் அந்த பட்டுப்பூச்சிகள் நிலவில் கரியமில வாயுவை உற்பத்தி செய்யும். இதற்கிடையில், உருளைக்கிழங்கு மற்றும் அராபிடாப்சிஸ் செடிகள் வளர்ந்து ஒளிச்சேர்க்கை மூலம் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து நிலவில் ஒரு சிறிய சூழ்மண்டலத்தை (simple ecosystem) உருவாக்கும் என்கிறார் ஆய்வாளர் யுவான்சுன்.

    "லூனார் மினி பயோஸ்பியர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உபகரணத்தை 28 சீன பல்கலைக்கழகங்கள் இணைந்து உருவாக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  #China #Mission #Moon
    பல்லடம் ஊராட்சியில் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருப்பூர், டிச. 7-

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றியம், வடுகபாளையம் புதூர், மாணிக்காபுரம் மற்றும் கோடாங்கிபாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளில், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.100.26 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து பல்லடம் ஊராட்சி ஒன்றியம், வடுக பாளையம் புதூர் ஊராட்சி, வடுகபாளையம் புதூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.12.83 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளிசுற்றுச்சுவர் அமைக்கப்பட்டிருந்ததையும், பள்ளி வளாகத்தில் ரூ.8.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டிருந்த புதிய அங்கன்வாடி மைய கட்டிடனத்தினையும், மாணிக்காபுரம் ஊராட்சி மின்நகர் பகுதியில் ரூ.30லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டிருந்த அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி நிலையத்தினையும், அதே பகுதியில், ராஜீவ்காந்தி ஊராட்சி கட்டிடங்கள் அபியான் திட்டத்தின் கீழ் ரூ.40லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாவட்ட ஊராட்சி சேவை மையத்தை கலெக்டர் பார்வையிட்டார். மேலும் கோடாங்கிபாளையம் ஊராட்சி சின்ன கோடாங்கி பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.6.90 லட்சம் மதிப்பீட்டில் ஓடையில் நடுவே கான்கீரீட் தடுப்பணை கட்டப்பட்டுள்ளதையும் மற்றும் அதே பகுதியில், ரூ.2.03 லட்சம் மதிப்பீட்டில் தண்ணீரை சேமிக்கும் வகையில் வரத்து வாரியில் குழிகள் அமைக்கப்பட்டுள்ளதையும் என பல்லடம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.100.26 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்திட வேண்டுமென அலு வலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ் குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பால சுப்பிரமணியன், திட்ட அலுவலர் கிரி, உதவி செயற்பொறியாளர் (சாலைகள்) மீனாகுமாரி, பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கந்தசாமி, வில்சன் மற்றும் உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கர்நாடக நீர்வளத்துறை மந்திரி சிவக்குமார் இன்று காலை மேகதாதுவிற்கு சென்றார். அங்கு அணை கட்டப்பட உள்ள பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார். #MekedatuDam
    பெங்களூர்:

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் ரூ.6 ஆயிரம் கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

    கடந்த மாதம் மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் கர்நாடகா வழங்கியது. இந்த திட்ட வரைவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து, ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. 

    கர்நாடகாவில் ஏற்கனவே காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜசாகர் அணை உள்பட சில சிறிய அணைகள் உள்ளன. அந்த அணைகளில் 104 டி.எம்.சி அளவுக்கு தண்ணீர் சேமித்து வைக்க வசதி உள்ளது.

    இந்த தண்ணீரில் இருந்தே தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய உரிய பங்கு தண்ணீரை கர்நாடகம் தர மறுக்கிறது. இந்த நிலையில் மேகதாதுவில் கட்டப்படும் அணையில் 67 டி.எம்.சி. தண்ணீர் தேக்கி வைக்க முடியும் என்று கூறப்படுகிறது.

    அத்தகைய சூழ்நிலையில் மொத்தம் 171 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வைத்துக்கொள்ள முடியும். இதன் காரணமாக தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் முழுமையாக வறண்டுவிடும் அபாயம் உள்ளது.

    காவிரி நதி நீருக்கான சட்டப்போராட்டத்தில் தமிழகம் வெற்றி பெற்று தனக்குரிய பங்கை பெற்ற போதிலும், ஆண்டுதோறும் போதிய தண்ணீர் கிடைக்குமா? என்பது சந்தேகமாக உள்ளது. இந்த நிலையில் மேகதாதுவில் அணை கட்டினால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும் என்று தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அடுத்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. இதற்கிடையே மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிடக்கோரி தமிழக சட்டசபையில் நேற்று ஒரு மனதாக தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

    தமிழக அரசு பல்வேறு வழிகளில் தனது எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்து வந்த போதிலும், கர்நாடகா மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளது. நேற்று கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி இது தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    அதில் மேகதாதுவில் அணை கட்ட உடனடியாக ஆய்வு பணிகளை தொடங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை கர்நாடக நீர்வளத்துறை மந்திரி சிவக்குமார் மேகதாதுவிற்கு சென்றார். அங்கு அணை கட்டப்பட உள்ள பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார்.


    மந்திரி சிவக்குமாருடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள், நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் நிபுணர் குழுவினர் சென்றிருந்தனர். அவர்களுடன் மேகதாது அணை எப்படி கட்டப்படும் என்று மந்திரி சிவக்குமார் விவாதித்தார்.

    மேகதாது அணை அருகில் நீர் மின்நிலையம் கட்டப்பட உள்ளது. அந்த பகுதியையும் மந்திரி சிவக்குமார் ஆய்வு செய்தார். மேகதாது அணையை எப்போது கட்ட தொடங்கலாம் என்றும் அதிகாரிகளிடம் மந்திரி சிவக்குமார் கேட்டு அறிந்தார்.

    மேகதாது பகுதியில் சில மணிநேரம் தங்கியிருந்து மந்திரி சிவக்குமார் ஆய்வு நடத்தியுள்ளார். இந்த ஆய்வு தகவல்களை அவர் பெங்களூர் சென்றதும் குமாரசாமியிடம் தெரிவிக்க உள்ளார். இதை தொடர்ந்து மேகதாதுவில் அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடகா அதிரடியாக தொடங்கும் என்று கூறப்படுகிறது.

    கர்நாடக அரசு தீவிரம் காட்டும் மேகதாது அணை காவிரி ஆற்றில் சிவசமுத்திரம் அருவி அருகே அமைய உள்ளது. தமிழகத்தின் ஒகேனக்கல் பகுதியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் 2 பெரிய மலைகளுக்கு மத்தியில் இந்த அணை கட்டப்பட உள்ளது.

    664 மீட்டர் அகலத்தில் கட்டப்பட இருக்கும் மேகதாது அணையால் கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டம் அதிக நீர்வளம் பெற்று செல்வசெழிப்பாக மாறிவிடும். ஆனால் தமிழகத்தின் டெல்டா ஏற்கனவே காய்ந்து வரும் நிலையில் மேலும் நீர் பாசனப் பகுதிகளை இழக்கும் அபாயத்திற்கு தள்ளப்படும். #MekedatuDam
    ×