search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 106327"

    திருப்பதியில் தலைமுடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு நாற்காலி வசதி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. #tirupatitemple

    திருமலை:

    திருப்பதியில் தினமும் 30 முதல் 34 ஆயிரம் பக்தர்கள் வரை தங்களது தலைமுடியை நேர்த்திக் கடனாக காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

    திருமலையில் இதற்காக 18 இடங்களில் கல்யாண கட்டா உள்ளது. மேலும், பக்தர்கள் தங்கும் விடுதிகளிலும் இந்த வசதி செய்து தரப்பட்டுள்ளது.

    இவ்வாறு பக்தர்கள் செலுத்தும் தலைமுடியை ஒவ்வொரு மாதமும் தேவஸ்தானம் இ-டெண்டர்கள் மூலம் ஏலம் விடுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.11 முதல் 12 கோடி வரை தேவஸ்தானத்திற்கு வருமானம் கிடைத்து வருகிறது.

    கல்யாண கட்டாவில் தலைமுடி காணிக்கை செலுத்துவோருக்கு, அங்கேயே குளிக்கவும், உடை மாற்றும் அறைகளையும் தேவஸ்தானம் கட்டிக் கொடுத்துள்ளது.


    ஆதலால், ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் வந்து தலைமுடி காணிக்கை செலுத்துகின்றனர். ஆனால், சமீபத்தில் நடந்த குறைகேட்கும் நிகழ்ச்சியில், தலைமுடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்கள் கீழே உட்காருவதால் சங்கடமாக உள்ளதாகவும், குறிப்பாக, மாற்றுத்திறனாளி பக்தர்கள், முதியோர், பெண்கள் ஆகியோர் கீழே உட்கார்ந்து தலைமுடி காணிக்கை செலுத்த சங்கடப்படுவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து, அறங்காவலர் குழுத் தலைவர் புட்டா சுதாகர் யாதவ் கல்யாண கட்டாவில் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, முதியோர், மாற்று திறனாளிகளுக்காக நாற்காலி வசதி செய்து கொடுக்க தீர்மானிக்கப்பட்டது.

    அதன்படி, நேற்று முதல் கல்யாண கட்டாவில் நாற்காலி வசதி அமைக்கப்பட்டது. இதற்கு பக்தர்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால், விரைவில் கூடுதல் நாற்காலிகள் அமைக்கப்படும் என புட்டா சுதாகர் யாதவ் உறுதியளித்தார்.

    தற்போது ஒவ்வொரு கல்யாண கட்டாவிலும் 5 நாற்காலிகள் போடப்பட்டுள்ளது.  #tirupatitemple

    சபரிமலையில் சுற்றுச்சூழலை பராமரிக்கும் வகையில், பிளாஸ்டிக் மீது ஐகோர்ட் முழுமையான தடை விதித்ததுடன், பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. #Sabarimala #AyyappanTemple #PlasticBan #KeralaHighCourt
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலையின் புனிதத்தையும், தூய்மையையும் பராமரிக்க அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. அதன்படி சபரிமலையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சபரிமலையில் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் விற்க ஐகோர்ட் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தடை விதித்தது.

    இந்நிலையில், சபரிமலை சுற்றுச்சூழல் தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட், சபரிமலையில் பிளாஸ்டிக் மீது முழுமையான தடை விதித்து இன்று உத்தரவிட்டுள்ளது. பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. 

    அதாவது, சபரிமலையில் இந்த வருட மண்டல கால பூஜையின்போது பக்தர்கள் இருமுடியில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டப்பாக்கள் என சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவகை பிளாஸ்டிக் பொருட்களையும் கொண்டு வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை தந்திரி பரிந்துரை செய்யும் பொருட்களை மட்டுமே கொண்டு வர முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    சபரிமலையில் பிளாஸ்டிக் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டபோதும், பக்தர்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக தொடர்ந்து  புகார் எழுந்தது. இதையடுத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து சபரிமலை சிறப்பு ஆணையர் ஆய்வு நடத்தி பரிந்துரைகளை அளித்தார். அதன் அடிப்படையில் இன்று ஐகோர்ட் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. #Sabarimala #AyyappanTemple #PlasticBan #KeralaHighCourt
    மணப்பாறையை அடுத்த ஆண்டவர் கோவிலில் உள்ள மான்பூண்டி நல்லாண்டவர் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
    மணப்பாறையை அடுத்த ஆண்டவர் கோவிலில் மான்பூண்டி நல்லாண்டவர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் நாளன்று பால்குட விழாவும், அதைத்தொடர்ந்து ஆடி மாதம் முழுவதும் பல்வேறு சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும். ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் கோவிலுக்கு வந்து செல்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான பால்குட விழா கடந்த 6-ந் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஆடி முதல் நாளான நேற்று காலை பால்குட விழா நடைபெற்றது. இதையொட்டி திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் ஆண்டவர் கோவில் அருகே உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    பின்னர் கோவிலின் பரம்பரை அறங்காவலரும், பொய்கைப்பட்டி, குமாரவாடி ஜமீன்தாருமான கே.ஆர்.கே.முத்து வீரலெக்கைய நாயக்கர் தாரை, தப்பட்டையுடன் முன்செல்ல அதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். அகத்தீஸ்வரர் கோவிலில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலம் நல்லாண்டவர் கோவிலை வந்தடைந்ததும், அங்கு அனைத்து பால்குடங்களும் இறக்கி வைக்கப்பட்டன.

    இதைத்தொடர்ந்து நல்லாண்டவருக்கு முத்துகண்ணன் சிவாச்சாரியார் தலைமையிலான குருக்கள் தேன், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேக, ஆராதனை செய்தனர்.

    தொடர்ந்து பக்தர்கள் எடுத்து வந்த பாலால் நல்லாண்டவருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பிரபாகர், கோவிலின் பரம்பரை அறங்காவலரும், ஜமீன்தாருமான கே.ஆர்.கே.முத்துவீரலெக்கைய நாயக்கர், மணியம் சண்முகம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களின் ஊர் நாட்டாண்மைகள் செய்திருந்தனர். நிகழ்ச்சியை டாக்டர் கரு.ராசகோபாலன் தொகுத்து வழங்கினார். 
    உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கும்பாபிஷேக திருவிழாவையொட்டி, ஆகஸ்ட் 9 முதல் அடுத்த 9 நாட்களுக்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. #TirupatiTemple
    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற திருப்பதி கோவிலில் கும்பாபிஷேக விழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அதன்படி 12 ஆண்டுகள் கழித்து இந்த வருடம் திருப்பதி ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், திருப்பதியில் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதியிலிருந்து திருமலைக்கு வாகனம், மலைப்பாதை வழியாக பக்தர்கள் நடந்து செல்லவும் அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. பக்தர்கள் மற்றும் பயணிகளுக்கு மாற்று பாதைக்கான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும், ஆகஸ்ட் 17-ம் தேதி அதிகாலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TirupatiTemple
    விடுமுறை தினத்தையொட்டி பழனி மலைக்கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். இதன் காரணமாக ஒரு மணி நேரம் காத்திருந்த பின்னரே அவர்கள் சாமி தரிசனம் செய்ய முடிந்தது.
    முருகப்பெருமானின் 3-ம் படைவீடாக பழனி விளங்குகிறது. இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். திருவிழா காலங்கள் என்றில்லாமல் ஆண்டு முழுவதும் மலைக்கோவிலுக்கு பக்தர்கள் வருகை இருக்கும். அதிலும் விடுமுறை தினங்களில் வழக்கத்தைவிட இருமடங்கு பக்தர்கள் பழனிக்கு வருகை தருவார்கள்.

    அந்த வகையில் விடுமுறை தினமான நேற்று பழனி மலைக்கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். இதன் காரணமாக படிப்பாதை, யானைப்பாதை, ரோப்கார் நிலையம், மின் இழுவை நிலையம் ஆகியவற்றில் பக்தர்கள் கூட்டமாக காட்சியளித்தது. பக்தர்கள் வருகை அதிகரித்ததால் மலைக்கோவில் வெளிப்பிரகாரம், பொது, கட்டணம், சிறப்பு தரிசன வழிகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதன் காரணமாக ஒரு மணி நேரம் காத்திருந்த பின்னரே அவர்கள் சாமி தரிசனம் செய்ய முடிந்தது. 
    கடலூர் பாடலீசுவரர் கோவிலில் பக்தர்கள் விளக்கு ஏற்ற தடை விதித்து அறநிலையத்துறை உத்தரவிட்டு உள்ளது. இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
    கடலூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பாடலீசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி சன்னதிகளிலும், பிரகாரங்களிலும் விளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். இந்த நிலையில் பாடலீசுவரர் கோவில் பிரகாரங் களிலும், சன்னதிகளிலும் விளக்கு ஏற்ற தடை விதித்து அறநிலையத்துறை உத்தரவிட்டு உள்ளது. இதுபற்றிய அறிவிப்பு பலகை கோவிலில் வைக்கப்பட்டு உள்ளது.

    அதில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக விளக்கு ஏற்ற தடை விதிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் எண்ணெய், நெய் ஆகியவற்றை அதற்கென வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களில் ஊற்றிச்செல்லலாம் என்று கூறப்பட்டு உள்ளது.

    இது பற்றி கோவில் குருக்கள் ஒருவர் கூறியதாவது:-

    தீ விபத்து ஏற்படாமல் இருக்க முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கோவில் பிரகாரங்களிலும், சன்னதிகளிலும் விளக்கு ஏற்ற தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே விளக்கு ஏற்றி வழிபட விரும்பும் பக்தர்கள், பாடலீசுவரர் சன்னதியின் சங்கு மண்டபத்தில் உள்ள சூரிய விளக்கிலோ அல்லது அம்மன் சன்னதியின் கொலு மண்டபத்தில் உள்ள சந்திர விளக்கிலோ, தாங்கள் கொண்டு வரும் எண்ணெய், நெய்யை ஊற்றிச்செல்லலாம். விளக்கில் எண்ணெய் அதிகமாக இருந்தால், அதன் அருகில் பாத்திரங்களை வைத்துள்ளோம். அதில் எண்ணெய், நெய்யை ஊற்றிச்செல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த உத்தரவை தொடர்ந்து பாடலீசுவரர் கோவில் முன்பு உள்ள கடைகளில் அகல் விளக்கு விற்பனையும் நேற்று நிறுத்தப்பட்டது.

    மாவட்டத்தில் 1,252 கோவில்களில்...

    இந்த தடை உத்தரவு பற்றி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகா தேவி கூறுகையில், மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தை தொடாந்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அறநிலையத்துறை நிர்வாகத்துக்கு உள்பட்ட கோவில்களுக்குள் நெய்விளக்கு, அகல் விளக்கு, எலுமிச்சை விளக்கு, தேங்காய் விளக்கு ஏற்ற தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதற்கு பதிலாக கோவிலுக்குள் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ள விளக்கில் எண்ணெய், நெய் ஊற்றி வழிபடலாம் என்றார்.

    இந்த உத்தரவு மாவட்டத்தில் அறநிலையத்துறை நிர்வாகத்துக்கு உள்பட்ட 1,252 கோவில்களிலும் நடைமுறைக்கு வந்து உள்ளது.

    இதற்கிடையே அறநிலையத்துறையின் உத்தரவுக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இது பற்றி பக்தர்கள் கூறியதாவது:-

    சாமி சன்னதியில் விளக்கு ஏற்றி வழிபடக்கூடாது என்று பக்தர்களுக்கு தடை விதிப்பது சரியல்ல. நம் முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளாக கோவில்களில் விளக்கு ஏற்றித்தான் வழிபட்டு வந்திருக்கிறார்கள். அப்பொழுதெல்லாம் தீ விபத்து ஏற்படவா செய்தது? அப்படியே தீவிபத்து ஏற்பட்டிருந்தாலும் விளக்கு ஏற்றி வழிபடக் கூடாது என்று யாரும் சொல்லவில்லையே. எனவே பாரம்பரிய வழக்கத்துக்கு மாறாக அரசு உத்தரவிடக்கூடாது. தீ விபத்து ஏற்படாமல் தடுக்க வேறு எத்தனையோ நடைமுறைகள் உள்ளன. அதனை செய்யாமல் பாரம்பரியத்தை மாற்றும் நடைமுறையை திணிக்க அரசு முயற்சிக்கக்கூடாது. எனவே அறநிலையத்துறையின் உத்தரவை அரசு திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு பக்தர்கள் தெரிவித்தனர். 
    களக்காட்டில் அய்யாவழி மாநாட்டை முன்னிட்டு நடந்த நாராயணசுவாமி வாகன பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    களக்காடு தேரடி திடலில் களக்காடு வட்டார அய்யாவழி பக்தர்கள் சார்பில் அய்யா வழி 6-வது மாநாடு நேற்று முன் தினம் நடந்தது. காலையில் டாக்டர் சொக்கலிங்கம் கொடி ஏற்றி வைத்தார். சாமிதோப்பு சிவச்சந்திரன் தலைமையில் விவாத அரங்கம், பேராசிரியை டாக்டர் ஸ்ரீமதி தியாகராஜன் தலைமையில் மகளிர் கருத்தரங்கம், உச்சிப்படிப்பு, மாணவ-மாணவிகள் மாநாடு, அகிலத் திரட்டு திருஏடு வாசிப்பு, அன்னதானம் வழங்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

    மாலையில் அய்யா நாராயணசுவாமி வாகன பவனியுடன் பக்தர்கள் ஊர்வலம் சென்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு மாநாடு துவங்கியது. மாநாட்டுக்குழு உறுப்பினர் பால்சாமி வரவேற்றார். திசையன்விளை லைசாள் எட்வர்டு, தெய்வேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் நடந்த சாமிதோப்பு சிவச்சந்திரனின் அருளிசை வழிபாட்டை வள்ளியூர் அய்யா வழி அகிலத்திருக்குடும்ப செயலாளர் தர்மர் தொடங்கி வைத்தார்.

    இதற்கான ஏற்பாடுகளை களக்காடு வட்டார அய்யாவழி மாநாட்டு குழு தலைவர் சிவப்பிரசாமி, துணை தலைவர் சங்கரன், சேர்மன்ராஜ், சொர்ணலிங்கம், மணி, பால்சாமி, சுப்பிரமணியன், சண்முகநாதன், கார்த்திக் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். 
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று விடுமுறை நாள் என்பதாலும், முகூர்த்த நாள் என்பதாலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் நகரின் மையப் பகுதியில் உள்ள அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்.

    இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், முகூர்த்த நாள் என்பதாலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. கோவிலில் கட்டண தரிசன வழி மற்றும் பொது தரிசன வழியாக நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கோவில் சார்பில் குடிநீர் வசதி செய்யப்பட்டு இருந்தது. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    மேலும் சிலர் கிரிவலம் சென்று, கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்கங்களை வழிபட்டனர். 
    அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், முகூர்த்த நாள் என்பதாலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர். விடுமுறை நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். கோடை விடுமுறையில் ஏராளமான மக்கள் தங்கள் குடும்பங்களுடன் திருவண்ணாமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், முகூர்த்த நாள் என்பதாலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோவிலில் கட்டண தரிசன வழி மற்றும் பொது தரிசன வழியாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கோவில் சார்பில் குடிநீர் வசதி செய்யப்பட்டு இருந்தது. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 
    ஆந்திராவில் கோவில்களில் பணியாற்றும் சவர தொழிலாளர்கள் இன்று திடீரென ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். #TempleBarbersStrike
    ஐதராபாத்:

    ஆந்திராவில் கோவில்களுக்கு வரும் பக்தர்கள் பணம், நகைகள் என பல்வேறு வகையில் காணிக்கை செலுத்துகின்றனர். சிலர் தலைமுடியையும் காணிக்கை செலுத்துகின்றனர். இந்த பக்தர்களுக்கு மொட்டை அடிப்பதற்காக கோவில்களில் சவரத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். 

    இவ்வாறு ஆந்திர மாநிலத்தில் உள்ள கோவில்களில் மொட்டை போடும் பணியில் ஈடுபட்டுள்ள சவரத் தொழிலாளர்கள் தங்களுக்கு நிலையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

    இதனால் கோவில்களில் பணியாற்றும் சவரத் தொழிலாளர்கள் இன்று திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலையான ஊதியம், பணி பாதுகாப்பு கோரிக்கையை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால், முடி காணிக்கை செலுத்த வந்த பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். வேண்டுதலை நிறைவேற்ற முடியாத அதிருப்தியுடன் கோவில்களில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். 

    பிஎப் மற்றும் பென்சனுடன் மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் என கடந்த சில தினங்களாகவே சவர தொழிலாளர்கள் வலியுறுத்தி வந்தனர். தற்போது, ஒரு தலைக்கு 13 ரூபாய் என்ற அளவில் சம்பளம் வழங்கப்படுகிறது. இதனால் பல நாட்கள் போதிய வருவாய் இன்றி குடும்பத்தை நடத்த முடியவில்லை என்பதால் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க கோரி போராட்டம் நடத்தினர்.

    ஆனால், மிக அதிக அளவில் பக்தர்கள் வருகை தரும் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் பணியாற்றும் சவரத் தொழிலாளர்கள் யாரும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஏழுமலையான் கோவிலில் உள்ள கல்யாண கட்டாவில் (முடி காணிக்கை செலுத்துமிடம்) மட்டும் 500 நிரந்தர தொழிலாளர்கள், 100 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். #TempleBarbersStrike
    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    முருகப்பெருமானின் 3-ம் படைவீடாக பழனி விளங்குகிறது. இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். திருவிழா காலம் என்றில்லாமல், ஆண்டு முழுவதும் பழனி மலைக்கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும்.

    குறிப்பாக விடுமுறை தினங்களில் வழக்கத்தைவிட இருமடங்கு பக்தர்கள் பழனிக்கு வருகை தருவார்கள். அந்த வகையில் விடுமுறை தினம் மற்றும் முகூர்த்த நாளையொட்டி நேற்று மலைக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதன் காரணமாக படிப்பாதை, யானைப்பாதை, ரோப்கார் நிலையம், மின் இழுவை நிலையம் ஆகியவற்றில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    பக்தர்கள் வருகை அதிகரித்ததால், மலைக்கோவில் வெளிப்பிரகாரம், பொது, கட்டணம், சிறப்பு தரிசன வழிகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதன் காரணமாக சுமார் 3 மணி நேரம் காத்திருந்த பின்னரே அவர்களால் சாமி தரிசனம் செய்ய முடிந்தது.

    பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மின் இழுவை ரெயில் நிலையத்திலும் ஏராளமானோர் காத்திருந்தனர். இதனால் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, சாமி தரிசனம் செய்த பிறகு படிப்பாதை வழியாக மலைக்கோவிலில் இருந்து கீழே இறங்கி செல்லும்படி பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினர் படிப்பாதை வழியாக கீழே இறங்கி சென்றனர்.

    திருப்பதியில் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்திய காணிக்கை தலைமுடி ரூ.10 கோடியே 48 லட்சத்துக்கு ஏலம் போனது. #Tirupati
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களில் பலர் நேர்த்தி கடன் செலுத்துவதற்காக தங்களின் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

    பக்தர்களின் காணிக்கை தலைமுடி, வாகனங்கள் மூலம் திருப்பதிக்கு கொண்டு சென்று, அங்கு சுத்தம் செய்து, நீளம் மற்றும் நிறத்தின் அடிப்படையில் தரம் பிரித்து, ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை அன்று ஆன்லைன் மூலமாக ஏலம் விடப்படுகிறது.

    அதன்படி நேற்று பக்தர்களின் காணிக்கை தலைமுடி ஏலம் விடப்பட்டது. இதில் 8 ஆயிரத்து 200 கிலோ எடையிலான தலைமுடி விற்பனையானது.

    முதல் ரகம் கிலோ ஒன்றுக்கு 22 ஆயிரத்து 495 ரூபாய்க்கும், 2-வது ரக தலைமுடி கிலோ ஒன்றுக்கு 17 ஆயிரத்து 225 ரூபாய்க்கும், 4-வது ரகம் கிலோ ஒன்று 2000 ரூபாய்க்கும், 5-வது ரகம் கிலோ ஒன்றுக்கு 400 ரூபாய்க்கும் என ஆக மொத்தம் 8 ஆயிரத்து 200 கிலோ தலைமுடி ரூ. 10 கோடியே 48 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

    கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதால், வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் காத்திருக்கும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

    300 ரூபாய் விரைவு தரிசனம், தர்ம தரிசனம், நடைபாதை தரிசனம் உள்ளிட்டவற்றில் தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் டோக்கனில் குறிப்பிட்ட நேரத்துக்கு சென்றால் 2 மணி நேரத்துக்குள் ஏழுமலையானைத் தரிசித்து திரும்பலாம்.

    செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை மாலை வரை ரூ.2.80 கோடி உண்டியல் வசூலானது.

    ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 75,498 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 41,029 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். #Tirupati
    ×