search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிந்தாதிரிப்பேட்டை"

    சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பெண் தவறவிட்ட 19 பவுன் நகையை கண்டெடுத்து அதை அடகுவைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கண்காணிப்பு கேமரா மூலம் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
    சென்னை:

    சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீரான் சாகிப் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீபிரியா (வயது 49). இவரது கணவர் சம்பத்குமார் தனியார் நிறுவனம் ஒன்றில் என்ஜினீயராக வேலை செய்கிறார். இவர்களின் மகன் சந்தோஷ்குமார் என்ஜினீயரிங் மாணவர். கடந்த 4-ந்தேதி அன்று ஸ்ரீபிரியா தனது தாயாருடன் திருத்தணிக்கு சென்றார்.

    அன்றைய தினம் இரவே ரெயில் மூலம் சென்னை திரும்பினர். சென்டிரல் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையத்தில் இருந்து சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு ஸ்ரீபிரியா தனது தாயாருடன் ஆட்டோவில் சென்றார்.

    ஆட்டோவை விட்டு இறங்கிய பின்னர் தனது மணிபர்ஸ் இல்லாததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அந்த பர்ஸ்க்குள் 19 பவுன் தங்க நகைகளும், ரூ.1,500 பணமும் இருந்தது. இது குறித்து அவர் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் தான் ரெயில் நிலையத்தில் இருந்து சிந்தாதிரிப்பேட்டைக்குள் நுழையும் வரை பர்ஸ் எனது கையில் இருந்தது. எனவே எனது வீட்டுக்கு செல்லும் பகுதியில் தான் மணிபர்ஸ் கீழே விழுந்திருக்கக்கூடும் எனவும் போலீசாரிடம் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் முருகேசன் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மணிபர்சை தவறவிட்ட பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை அவர்கள் ஆய்வு செய்தனர். அதில் தவறவிட்ட மணிபர்சை சரக்குவேனில் வந்த 2 பேர் எடுத்தது தெரியவந்தது. மேலும் சுற்றும் முற்றும் பார்த்த அவர்கள் அந்த பர்சை எடுத்துக்கொண்டு மீண்டும் வேனில் செல்லும் காட்சிகளும் கேமராவில் பதிவாகி இருந்தது. இதுபோக கேமராவில் பதிவான கூடுதல் காட்சிகளையும் ஸ்ரீபிரியாவின் மகன் சந்தோஷ்குமார் போலீசாரிடம் கொடுத்தார். இதையடுத்து வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் அடையாளம் கண்டனர்.

    அவர்கள் சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பார்த்தசாரதி (34). சரக்கு வேன் டிரைவர். வியாசர்பாடி கல்யாணபுரத்தை சேர்ந்த கலைச்செல்வன்(49). கிளனர் என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் அந்த நகைகளை அடகு கடை ஒன்றில் அடமானம் வைத்து பணம் வாங்கியுள்ளனர்.

    இதனால், அவர்கள் இருவர் மீதும் போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்தனர். நேற்று அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். நகைகளை பத்திரமாக மீட்டுக்கொடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசனுக்கு ஸ்ரீபிரியாவும் அவரது கணவர் சம்பத்குமாரும் நன்றி தெரிவித்தனர். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து ஸ்ரீபிரியாவிடம் அவரது நகையை போலீசார் ஒப்படைத்தனர்.

    அப்போது, ஸ்ரீபிரியா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், சென்னையில் கண்காணிப்பு கேமரா அமைக்கும் திட்டத்தை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் சிறப்பாக செயல்படுத்தியுள்ளார். இதற்காக என் பாராட்டுதலை தெரிவித்துக்கொள்கிறேன்.

    கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளதால்தான் எனது நகை பத்திரமாக திரும்ப கிடைத்தது என்று அவர் குறிப்பிட்டார்.
    சென்னை சிந்தாதிரிப்பேட்டை அருகே கூவம் ஆற்றில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    சென்னை:

    கூவம் ஆற்றோரம் 1000 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. அவர்கள் குடிசைகள் போட்டு வசித்து வருகிறார்கள். அவர்களை அங்கிருந்து வெளியேற்றி பெரும்பாக்கத்தில் இடம் கொடுக்க மாநகராட்சி முடிவு செய்தது.

    ஆக்கிரமிப்பாளர்கள் வீடுகளை காலி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் ஏற்கனவே கூறி இருந்தனர். ஆனால் அவர்கள் காலி செய்யாமல் இருந்து வந்தனர்.

    இன்று காலையில் அதிகாரிகள் போலீசார் உதவியுடன் கூவம் ஆற்றோரம் குடியிருந்து வரும் குடும்பத்தினரிடம் சென்று வீடுகளை காலி செய்ய கூறினர். அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அவர்களுக்கு பெரும்பாக்கத்தில் இடம் ஒதுக்கி இருப்பதாகவும், வீடுகளை காலி செய்து விட்டு அங்கு செல்லும்படி கூறினர். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.


    ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை நீங்களே அப்புறப்படுத்திக் கொண்டால் தங்கள் உடமைகள் சேதம் இல்லாமல் எடுத்து கொள்ளலாம். ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடிக்கப்பட்டால் பொருட்கள் சேதம் அடையும் என்று விளக்கமாக கூறினர்.

    இதையடுத்து அப்பகுதி மக்கள் பொருட்களை எடுக்க முன்வந்தனர். பொருட்களை தங்கள் வீடுகளில் இருந்து ஒவ்வொரு குடும்பத்தினரும் வெளியே எடுத்து பாதுகாப்பாக வைத்துக் கொண்டனர்.

    மாநகராட்சி அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரத்தை கொண்டு வந்தவுடன் பதட்டமான மக்கள் வேகமாக பொருட்களை பாதுகாத்து கொள்வதில் ஆர்வம் காட்டினர். பொருட்களை வெளியே எடுத்தவுடன் வீடுகளை தரைமட்டமாக்க அதிகாரிகள் தயாரானார்கள்.

    உடனே ஆற்றோரம் குடியிருந்த ஏழை மக்கள் கட்டில், பீரோ, டி.வி., பாத்திரங்கள், சமையல் பொருட்கள் போன்றவற்றை மூட்டைகளாக கட்டினர். மாநகராட்சி அதிகாரிகள் அவர்களை எச்சரித்தப்படி நடவடிக்கையில் இறங்கினர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
    மெட்ரோ சுரங்க ரெயில் பாதையில் திடீர் தீ விபத்தில் இருந்து பயணிகள் தப்பிக்க சிந்தாதிரிப்பேட்டை மேதின பூங்காவில் அவசர வழி அமைக்கப்பட்டு வருகிறது. #MetroTrain
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

    கோயம்பேடு - ஆலந்தூர், சின்னமலை-விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும் திருமங்கலம் - சென்ட்ரல், சைதாப்பேட்டை - டி.எம்.எஸ். வரை சுரங்கப் பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது. பொது மக்கள், பயணிகள் இடையே வரவேற்பு ஏற்பட்டதையொட்டி மெட்ரோ ரெயில் திட்டம் சென்னை மாநகரம் முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.

    சென்ட்ரல் - அண்ணாசாலை மெட்ரோ வழித்தட பாதையில் அரசினர் தோட்டம் ரெயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

    இதையொட்டி சிந்தாதிரிப்பேட்டை மேதின பூங்காவில் மெட்ரோ ரெயில் பயணிகளுக்காக சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சென்ட்ரல் - சிந்தாதிரிப்பேட்டை 1.8 கிலோ மீட்டர் தூர மெட்ரோ ரெயில் பாதையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டால் பயணிகள் எளிதில் தப்பிக்க மேதின பூங்காவில் அவசர வழிப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

    சுரங்கத்தில் இருந்து பயணிகள் நேரடியாக தப்பிக்க 27 மீட்டர் உயரம் 6 மீட்டர் அகலத்தில் படிக்கட்டுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

    சுரங்க ரெயில் பாதையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் இங்குள்ள அவசர கதவுகளை பயணிகள் திறந்து கொண்டு எளிதில் வெளியேறி தப்பிக்கலாம். மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க சிறப்பு காற்றோட்ட வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளது.

    சென்ட்ரல் - அண்ணா சாலை வழித்தட மெட்ரோ சுரங்கப்பாதையை மிகவும் கடினமாக போராடி ஊழியர்கள் அமைத்துள்ளனர். கூவம் ஆற்றின் அடியில் சேறு, சகதி, கடின பாறையின் கீழ் சுரங்க மெட்ரோ பாதை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். #MetroTrain
    ×