search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்டனம்"

    விநாயகர் பற்றி விமர்சனம் செய்த வழக்கில் இயக்குனர் பாரதிராஜா நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததால் அவருக்கு ஐகோர்ட் நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 18-ந்தேதி நடந்த ஒரு திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பாரதிராஜா, விநாயகரை இறக்குமதி கடவுள் என்று விமர்சித்தார். ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு தலைகுனிவு ஏற்பட்டால், தலையை எடுக்கவும் தயங்க மாட்டோம் என்றும் அவர் பேசினார்.

    இதுகுறித்து நாராயணன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் பாரதிராஜாவுக்கு சென்னை ஐகோர்ட்டு கடந்த மே 23-ந்தேதி நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கியது.

    மூன்று வாரங்களுக்கு வடபழனி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்து உத்தரவாதம் அளித்து ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

    ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள் நீதிமன்றத்திற்கு செல்ல முடியவில்லை என்றும், எனவே முன் ஜாமீன் உத்தரவை பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று புதிய மனுவை ஐகோர்ட்டில் பாரதிராஜா தாக்கல் செய்தார்.


    அந்த மனு இன்று நீதிபதி ராஜமாணிக்கம் முன் விசாரணைக்கு வந்தது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக இயக்குனர் பாரதிராஜா பற்றி செய்திகள் வருகிறது, அதற்கெல்லாம் செல்ல முடிந்த அவரால் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியவில்லையா? நிவாரணம் தேடி நீதிமன்றம் வரும்போது, நீதிமன்றம் பிறப்பிக்கும் நிபந்தனைகளை ஏன் நிறைவேற்ற முடியவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி புகார்தாரர் நாராயணனுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வருகிற 17-ந்தேதிக்கு தள்ளி வைத்தார். #HighCourt #Bharathiraja
    டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் போட்டித்தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். #TNPSC #MKStalin
    சென்னை:

    டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் போட்டித்தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-



    வேலை வாய்ப்பு தேடும் லட்சக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வேலை வாய்ப்புக்கான போட்டி தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைக்க முயற்சி செய்வதாக வரும் செய்திகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. “மாநில அரசில் உள்ள பதவிகளுக்கு போட்டித்தேர்வுகளை நடத்தி பணியாளர்களை தேர்வு செய்வது மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கடமை” என்று அரசியல் சட்டத்தின் பிரிவு 320 தெளிவாக கட்டளை பிறப்பித்து இருக்கிறது. அந்த அரசியல் சட்ட கடமையை தனியாருக்கு தாரை வார்க்க அரசு பணியாளர் தேர்வாணையம் முயற்சிப்பது அரசியல் சட்ட விரோதம் என்பதை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

    மாநில, சார்நிலை மற்றும் அமைச்சு பணிகளுக்கு நேரடி நியமனத்திற்கு போட்டி தேர்வு, அரசு ஊழியர்களுக்கான துறை தேர்வுகள், இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய வனப்பணி மற்றும் மாநில குடிமைப் பணி அதிகாரிகளுக்கான அரையாண்டு தேர்வுகளை நடத்தும் மிக முக்கியமான பொறுப்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இருக்கிறது. இந்த ஆணையம் நடத்தும் எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வுகளை நம்பித்தான் எண்ணற்ற இளைஞர்கள் குரூப்-1 பதவிகளான சார்பு ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் போன்ற பதவிகளுக்கும், அதே போல் குரூப்-2, குரூப்-3, குரூப்-4 ஆகிய பல்வேறு அரசு பதவிகளுக்கும் போட்டி தேர்வுகளை எழுதுவதற்கு முன் வருகிறார்கள்.

    இரவு பகலாக படித்து அரசு ஊழியராகவோ, அரசு அதிகாரியாகவோ ஆகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கிராமப்புற மாணவர்கள் தங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து சென்னையில் நெருக்கடி மிகுந்த விடுதிகளில் தங்கி படிக்கிறார்கள். இதுபோன்ற போட்டித் தேர்வுகளை எழுதும் மாணவர்களின் வசதிக்காகவே தலைவர் கருணாநிதி உலகப்புகழ் பெற்ற அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அமைத்து கொடுத்தார் என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் அவ்வப்போது புகார்கள் வெளிவந்தாலும், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் போட்டி தேர்வுகள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடக்கும் என்று இன்னமும் லட்சக்கணக்கான கிராமப்புற ஏன் நகர்ப்புற மாணவர்களும் நம்பி, தேர்வுபெற உழைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த நம்பிக்கையை தகர்த்து எறியும் விதத்தில் போட்டித்தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைக்க முயற்சி செய்யும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஏற்கனவே பாலிடெக்னிக் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் தனியார் நிறுவனங்களில் நடைபெற்ற முறைகேடுகள், இமாலய ஊழல்கள் எல்லாம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புகாரின் அடிப்படையில் தான் விசாரிக்கப்பட்டு வருகிறது என்பதை ஏனோ மறந்து விட்டு, போட்டி தேர்வுகள் அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைக்க முயற்சிப்பது “கண்ணை விற்று சித்திரம் வாங்குவதற்குச் சமம்” என்பதை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உணர வேண்டும்.

    நேர்மையான தலைவரின் கீழ் உள்ள ஓர் அரசுப் பணியாளர் தேர்வாணையம் இளைஞர்களின் வாழ்க்கையோடு விளையாடும் இப்படியொரு விபரீத முடிவை எப்படி எடுக்க முயற்சிக்கிறது என்பதும், தனது அரசியல் சட்ட கடமையில் இருந்து விலகும் பொறுப்பற்ற செயலை ஏன் அமல்படுத்தத் துடிக்கிறது என்பதும் மர்மம் நிறைந்ததாக இருக்கிறது. தகுதியில்லாதவர்களை எல்லாம் உறுப்பினர்களாக நியமித்து ஏற்கனவே அரசு பணியாளர் தேர்வாணையம் அ.தி.மு.க.வின் தலைமைக்கழகமாக மாற்றப்பட்டிருக்கும் நிலையில், போட்டித் தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைக்க நினைப்பதில் ஏதோ உள்நோக்கம் இருப்பது போல் தெரிகிறது. பல்வேறு முறைகேடுகளுக்கு வித்திடும் உள்நோக்கத்துடன் அரசு பதவிகளுக்கான போட்டி தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைக்கும் இந்த முயற்சியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உடனடியாக கைவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    நடுவருக்கு எதிரான கருத்தை விமர்சித்த மரடோனாவுக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) நேற்று கடும் கண்டனம் தெரிவித்தது. #Maradona
    மாஸ்கோ:

    உலக கோப்பை கால்பந்து தொடரில், இங்கிலாந்து-கொலம்பியா அணிகள் இடையிலான 2-வது சுற்று ஆட்டம் வழக்கமான மற்றும் கூடுதல் நேரம் முடிவில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட பெனால்டி ஷூட்-அவுட்டில் இங்கிலாந்து அணி 4-3 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறியது. ‘இந்த ஆட்டத்தில் நடுவர் ஜிஜெர் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டார். அவரது சில முடிவுகள் இங்கிலாந்துக்கு சாதகமாக இருந்தன’ என்று கொலம்பியா கேப்டன் ராடமெல் பால்காவ் சாடியிருந்தார்.

    அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்த அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மரடோனா, ‘இங்கிலாந்து நினைவுகூரத்தக்க ஒரு வழிப்பறியை செய்து விட்டது’ என்று விமர்சித்தார். இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன், கொலம்பியா வீரர் கார்லஸ் சாஞ்சசை பவுல் செய்ததற்காக கொலம்பியாவுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும் என்பது மரடோனாவின் எண்ணமாகும். ‘இங்கு ஒரு ‘ஜென்டில்மேன்’ தீர்ப்பளிக்கிறார். அவர் தான் போட்டி நடுவர். அவரை போன்ற ‘நேர்மையான நடுவர்’ கூகுளில் தேடிப்பார்த்தாலும் கிடைக்கமாட்டார். அந்த நடுவர் ஜிஜெர் ஒரு அமெரிக்கர்.... என்னவொரு எதிர்பாராத பொருத்தம்’ என்றும் கிண்டலடித்து இருந்தார்.

    இந்த நிலையில் மரடோனாவுக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) நேற்று கடும் கண்டனம் தெரிவித்தது. நடுவருக்கு எதிரான அவரது கருத்து முற்றிலும் நியாயமற்றது என்று பிபா கூறியுள்ளது. இதையடுத்து தனது கருத்துக்கு மரடோனா வருத்தம் தெரிவித்துள்ளார். 
    உயர்மின்கோபுர திட்டங் களுக்கு கண்டனம் தெரிவித்து விவசாய சங்கங் களின் கூட்டியக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    கரூர்:

    கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு, உயர்மின்கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் கொங்கு ராஜாமணி தலைமை தாங்கினார். நிர்வாகி ராஜ்குமார் முன்னிலை வகித்தார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்பிர மணியன், கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சின்னசாமி ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது உயர்மின்கோபுர திட்டம் செயல்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் எடுத்து கூறினர்.

    அப்போது, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் பவர்கிரிட் நிறுவனம் ஆகியவற்றின் மூலம் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டதில் தமிழகத்தில் சுமார் 3 லட்சம் விவசாயிகள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்த நிலையில் கரூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகளின் மதிப்பு மிக்க விளை நிலங்களில் உயர்மின்கோபுரம் அமைக்க ஏற்பாடு நடக்கிறது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மின்கதிர்வீச்சினால் நிலம் பாழ்படும். அங்கு வளர்க்கப்படும் கால்நடைகளும் பாதிக்கப்படக்கூடும். எனவே அந்த திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்தும், சாலையோரங்களில் கேபிள்களை பதித்து அதன் மூலம் மின்வயர்களை கொண்டு செல்லும் வகையில் திட்டத்தினை செயல்படுத்தக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக தெரிவித்தனர்.

    மேலும் ஆர்ப்பாட்டத்தின்போது, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 11 உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டங்களையும், வருங்கால திட்டங்களையும் கேபிள் வழியாக மண்ணில் பதித்து மேற்கொள்ள வேண்டும். கடந்த 2 ஆண்டுகளில் திட்டப்பணிகள் முடிக்கப்பட்ட நிலங்களுக்கு சட்டப்படி சந்தை மதிப்பு விலை நிர்ணயித்து அதில் 4 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில், சாமானிய மக்கள் நலக்கட்சி மாவட்ட செயலாளர் சண்முகம், மே 17 இயக்கம் மாவட்ட பொறுப்பாளர் திலீபன், ஏர்முனை இளைஞர் அணி துணை தலைவர் மகேஸ்வரன் உள்பட விவசாய சங்க பிரதி நிதிகள், அரசியல் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். 
    மேட்டூர் அணையை ஜூன் 12-ந்தேதி திறக்க முடியாது என்று கூறியதுடன் அரசின் தோல்வியை மறைப்பதற்கு தி.மு.க. மீது குறை கூறுவதாக முதலமைச்சருக்கு துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். #DMK #DuraiMurugan #ADMK
    சென்னை:

    தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ந்தேதியன்று தண்ணீர் திறந்து விட இயலாது என்று கூறியதோடு மட்டுமல்லாமல், ஏதோ அதிமுக ஆட்சியில் மட்டுமே ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை நேற்றைய தினம் சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் பேசினார்.

    தி.மு.க. ஆட்சி இருந்த காலங்களில் எல்லாம் சட்டப் போராட்டத்தையும் நடத்தியிருக்கிறோம். கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் தண்ணீரை பெற்றிருக்கிறோம்.

    இது போன்ற தெளிவான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் இல்லாத காலத்திலும் கூட தலைவர் கலைஞர் முதல்-அமைச்சராக இருந்த போது கர்நாடகத்தில் யார் முதல்-அமைச்சராக இருந்தாலும் அவர்களுடன் நல்லுறவு பேணி, பேச்சுவார்த்தை நடத்தி தமிழக விவசாயிகளின் நலனை காப்பதில் மிகுந்த அக்கறை காட்டியிருக்கிறார். மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டுள்ளார்.

    ஆனால் இப்போது நீண்ட விளக்கத்தைக் கொடுத்துள்ள முதல்-அமைச்சர் அ.தி.மு.க. ஆட்சியில் இரு வருடங்கள் ஜூன் 6 மற்றும் 12-ந்தேதிகளில் மேட்டூர் அணை திறந்து விடப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். அதற்கு முன்பு இருந்த கழக ஆட்சி காவிரி நீரை உரிய முறையில் பெற்று மேட்டூர் அணையில் தேக்கி வைத்ததால் மட்டுமே 12.6.2001 மற்றும் 6.6.2011 ஆகிய காலங்களில் குறித்த காலத்தில் அணை திறந்து விட முடிந்தது என்பதை ஏதோ முதல்-அமைச்சர் வசதியாக மறந்து விட்டார்.

    காவிரி ஆணையத்திற்கு முழு அதிகாரம் இருக்கிறது என்று வாதிட்டுக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு, உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு வெளிவந்ததிலிருந்து கடந்த 113 நாட்களில் ஆக்கபூர்வமான, அழுத்தம் தரக்கூடிய செயல்களில் ஈடுபட்டிருந்தால் இந்நேரம் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருக்கும். ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையை திறப்பதில் எந்த தடையும் இருந்திருக்காது.


    அதை கோட்டை விட்ட முதல்-அமைச்சர் தி.மு.க.வை குறை கூறுவதில் காட்டும் அக்கறையை, மத்திய பா.ஜ.க. அரசுக்கு அழுத்தம் கொடுப்பதிலோ, உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீரை திறக்க வைப்பதிலோ எவ்வித முயற்சியும் எடுக்க இயலவில்லை.

    மத்திய பா.ஜ.க. அரசை எதிர்த்துப் பேச முடியாத தன் இயலாமையை “மேட்டூர் அணையை ஜூன் 12-ந்தேதி திறக்க இயலாது” என்ற வடிவத்தில் நேற்றைய தினம் அவையில் அறிவித்திருக்கிறார்.

    ஆகவே உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அமைக்கப்படும் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் 113 நாட்களாக காவிரி நீரைப் பெறாமல் வேடிக்கை பார்த்து விட்டு இன்றைக்கு மேட்டூர் அணையை ஜூன் 12-ந்தேதி திறக்க முடியாது என்று முதல்-அமைச்சர் கூறுவது உள்ளபடியே மனவேதனையளிக்கிறது.

    தன் தோல்வியை மறைக்க தி.மு.க. மீது குறை கூறி திசை திருப்ப முனைவது அதை விட வேதனை தருகிறது. ஆகவே விவசாயிகளின் நலனில் அரசியல் செய்வதை நிறுத்தி விட்டு, காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் உடனடியாக காவிரி நீரைப் பெற முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மத்திய அரசுக்கு அதற்கு தேவையான அழுத்தத்தை கொடுக்க முன் வர வேண்டும்.

    இவ்வாறு துரைமுருகன் கூறியுள்ளார். #DMK #DuraiMurugan #ADMK
    அடுத்த ஓரிரு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்ற அதிகாரியின் அறிவிப்பு தூத்துக்குடி மக்கள் மத்தியில் மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. #SterlitePlant #ThoothukudiFiring
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்ட பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இதனால் தூத்துக்குடியில் பதட்டமும், பரபரப்பும் உண்டானது.

    துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு உலக அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்டு விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது. துப்பாக்கி சூடு தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம் ஆகியவை நேரடியாக தூத்துக்குடி வந்து விசாரணை மேற்கொண்டன.

    இதே போல நீதிபதிகள் அடங்கிய உண்மை கண்டறியும் குழுவும் தூத்துக்குடியில் முகாமிட்டு விசாரணை நடத்தின. இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலை மூடுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. முதல் கட்டமாக ஆலைக்கு மின்சாரம் வழங்குவது மற்றும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டன.

    இதன் பிறகு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை செயல் அதிகாரி ராம்நாத் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘அடுத்த ஓரிரு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’ என தெரிவித்தார்.

    இது தூத்துக்குடி மக்கள் மத்தியில் மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி அ.குமரெட்டியாபுரத்தை சேர்ந்த மகேஷ் என்பவர் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம் என்று அந்த நிறுவன அதிகாரி கூறியிருப்பது எங்களுக்கு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த பிரச்சனையில் 13 பேரை இழந்து விட்டோம். நல்ல காற்று, குடிநீர் கிடைக்கவில்லை.

    ஸ்டெர்லைட் ஆலையால் படும் துன்பம் சொல்லி மாளாத நிலையில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்து ஆலையை மூடியுள்ளது. எனினும் இதுபற்றி சட்டமன்றத்தை கூட்டி ஸ்டெர்லைட்டை மூடுவதற்கான அரசாணை குறித்த தீர்மானம் நிறைவேற்றி ஆலையை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அப்போது தான் இதற்கு நிரந்தர தீர்வு காண முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அ.குமரெட்டியாபுரத்தை சேர்ந்த மகாலட்சுமி கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலையினால் புற்றுநோய் ஏற்பட்டு பலர் இறந்து விட்டார்கள். குடிநீர் மாசுபட்டு உள்ளது. ஏற்கனவே இந்த ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் இறந்து விட்டார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து கை, கால்கள் முடமாகி உள்ளனர். தூத்துக்குடி நகர் முழுவதுமே பதட்டமான நிலையில் காணப்படுகிறது.

    தமிழ் மாந்தன், மகேஷ்

    இந்த சூழ்நிலையில் மீண்டும் ஆலையை திறப்போம் என ஆலை நிர்வாகம் கூறியிருப்பது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதற்கு முழுமையான தீர்வை காணவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் தூத்துக்குடி மக்கள் மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்தும் சூழ்நிலை ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழ் மாந்தன் கூறியதாவது:-

    துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்த வேதனை இன்னும் தீரவில்லை. கொந்தளிப்பு அடங்கவில்லை. மக்கள் மனதில் இன்னமும் அமைதி திரும்பவில்லை. இந்த சூழ்நிலையில் ஆலை மீண்டும் திறக்கப்படும் என அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது சாத்தியமல்ல என கூறியிருந்தார். அனில் அகர்வால் கோர்ட்டு உத்தரவு பெற்று திறப்போம் என தெரிவித்தார்.

    இதைவைத்து பார்க்கும் போது ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளிடையே உடன்பாடு இருப்பது போல் தெரிகிறது. தற்போது ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது பூட்டு போடும் விழா போல நடந்துள்ளது.

    எனவே சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #SterlitePlant #ThoothukudiFiring
    ஊழியர்கள் மீதான கைது நடவடிக்கையை கண்டித்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் சார்பில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் மீது தேவையில்லாமல் போலீஸ் மூலம் கைது நடவடிக்கை எடுத்து வருவதை கண்டித்தும், தேவையற்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும், சிவகங்கையில் உள்ள கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாநில பொதுச் செயலாளர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஏராளமானோர் பணிகளை புறக்கணித்துவிட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

    முன்னதாக ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்த பொதுச் செயலாளர் கணேசன் பேசும்போது, மாவட்ட கூட்டுறவு துறை சமீபகாலமாக மத்திய வங்கி பணியாளர்கள் மீது வேண்டுமென்றே வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் ஏற்படும் இழப்புகளுக்கு அந்தந்த சங்கமே பொறுப்பாகும். இதற்கு மத்திய வங்கி ஊழியர்களும், கள ஆய்வாளர்களும் நேரடி பொறுப்பாகமாட்டார்கள். ஆனால் வீண் பழி சுமத்துவதற்காக மத்திய வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே உடனடியாக கைது நடவடிக்கையை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

    ஆர்ப்பாட்ட முடிவில் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. 
    காவிரி சிக்கல் குறித்து கர்நாடக முதல்-அமைச்சர் குமாரசாமியுடன் கமல்ஹாசன் சந்திப்பு குறித்து ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமியை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்புக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    காவிரி பாசன விவசாயிகள் கவனத்திற்கு, காவிரி சிக்கல் குறித்து கர்நாடக முதல்- அமைச்சருடன் கமல்ஹாசன் இன்று பேச்சு நடத்துகிறாராம். அநேகமாக நாளை அல்லது அதற்கு மறுநாள் காவிரியில் தண்ணீர் வந்துவிடும் என்பதால் குறுவைப் பாசனத்திற்கு தயாராக இருக்கவும்.

    காவிரி சிக்கலில் பேச்சு கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆர்வக்கோளாறில் செய்யப்படும் சில நடவடிக்கைகள் ஆபத்தை ஏற்படுத்தி விடும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PMK #Ramadoss #KamalHaasan
    காலா பட டிக்கெட் விலை உயர்வு பற்றி டுவிட்டரில் பா.ம.க. தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். #Kaala #Ramadoss
    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் ‘காலா’ பட டிக்கெட் விலை உயர்வு பற்றி டுவிட்டரில் தெரிவித்துள்ள கருத்து வருமாறு:-

    ஜோரா கைத்தட்டுங்க. காலா திரைப்படத்திற்கு முன்பதிவு தொடங்கியது. வழக்கமான அதிகபட்சக் கட்டணம் ரூ.165.78-க்கு பதிலாக ரூ.207.24-க்கு விற்கப்படுகிறதாம்.

    இதில் கொடுமை என்னவென்றால் காலா திரைப்படத்தில் ஏழைப் பங்காளனாக நடிக்கிறாராம் ரஜினிகாந்த். ஏழைப் பங்காளன்.... ஏழைப் பங்காளன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kaala #Ramadoss
    பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் பெட்ரோல் 81.28 ரூபாய்க்கும், டீசல் 73.06 ரூபாய்க்கும், மானியத்துடன் கூடிய வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.2.12 காசுகள் உயர்த்தி, 481.84 ரூபாயாகவும், மானியம் இல்லாத வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.49.50 காசுகள் உயர்த்தப்பட்டு, 712 ரூபாயாகவும் உள்ளது. எனவே இந்த விலை ஏற்றம் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. நடுத்தர மற்றும் சாமானிய பொதுமக்கள் இந்த விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பால், காய்கறிகள், மளிகைப்பொருட்கள் என வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் விலை உயர்ந்துள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் இதை மிக முக்கிய பிரச்சினையாக எடுத்துக்கொண்டு, விலை உயர்வை கட்டுப்படுத்தவேண்டும். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 
    விவசாயி அய்யாக்கண்ணு மீது அரக்கோணத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார். #AttackOnAyyakannu #TTVDhinakaran
    சென்னை:

    மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிராக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறார். இன்று அவர் சக விவசாய சங்கத்தினருடன் வேலூர் மாவட்டம் அரக்கோணம் வழியாக சென்றபோது பா.ஜ.க.வினர் தாக்கி உள்ளனர். இதற்கு டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர்  அய்யாக்கண்ணுவும், அவருடன் பயணித்த இயக்கத்தினரும், அரக்கோணம் வழியாக திருத்தணி செல்லும் வழியில் பாஜகவினரால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

    தமிழக விவசாயிகளின் உரிமைக்காகவும், காவிரியின் உரிமைக்காகவும், எதிர்கால சந்ததியினரின் வாழ்வை நாசமாக்கும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கெதிராகவும் மிகக் கடுமையாக போராடிவரும் ஜனநாயக போராளி அய்யாக்கண்ணு.



    அவர் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல் என்பது கடும் கண்டனத்திற்கு உரியது. அய்யாக்கண்ணு தனிநபர் அல்ல, அவர் ஒட்டுமொத்த தமிழகத்தின் குரலாகத்தான் போராடி வருகிறார்.

    பாஜகவினர் சட்ட மீறல்களில் ஈடுபடும்போது தமிழக அரசு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தொடர்ந்து தயக்கம் காட்டுவது தமிழகத்தை அபாயச் சூழலுக்குத்தான் கொண்டு செல்லும் என்பதை பழனிசாமியின் அரசுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார். #AttackOnAyyakannu #TTVDhinakaran
    சென்னையில் இன்று தி.மு.க. நடத்திய மாதிரி சடடமன்ற கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. #DMKSampleAssembly
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணையில் உள்ள குளறுபடிகள் இருப்பதாக தி.மு.க. குற்றம்சாட்டியுள்ளது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தி.மு.க. சட்டமன்ற கூட்டத் தொடரை புறக்கணிக்கும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். மேலும், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மாதிரி சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.



    அதன்படி, அண்ணா அறிவாலயத்தில் இன்று மாதிரி சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர். எம்எல்ஏ கருணாசும் பங்கேற்றார். திமுக கொறடா சக்கரபாணி அவைத்தலைவராக நியமிக்கப்பட்டார். எதிர்க்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டார்.

    கூட்டம் தொடங்கியதும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக பேசப்பட்டது. #DMKSampleAssembly
    ×