search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்டனம்"

    அரசியல் ஆதாயத்துக்காக சராசரி நபர்போல மு.க.ஸ்டாலின் பேசி வருவதாக கே.பி.முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். #KPMunusamy #MKStalin
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் கே.பி.முனுசாமி நிருபரிடம் கூறியதாவது:-

    நீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும் அதை சந்திக்க தயார் என்று கூறி தூத்துக்குடி மக்களின் உணர்வுகளை புரிந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுத்த முதல்வர் பழனிசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் காவல்துறை மற்றும் தமிழக முதல்வர் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என கூறி வருகிறார். எதிர்க்கட்சி தலைவர் என்ற பொறுப்பை உணர்ந்து அரசுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். அதை விடுத்து அரசியல் ஆதாயத்திற்கு சராசரி நபர் போல் தொடர்ந்து இது போன்ற கருத்துக்களை முன் வைத்து வருகிறார். குறிப்பாக இவரது தந்தை கருணாநிதி முதல்வராக இருந்த போது தமிழகத்தில் 13முறை துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அப்படி என்றால் அந்த சமயத்தில் அவரது தந்தை மீது கொலை வழக்கு பதிவு செய்து இருக்க வேண்டும்.


    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தமிழக முதல்வரை கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கிறார். இவருக்கு அரசியல் செய்ய எந்த பிரச்சனையும் தற்போது கிடைக்கவில்லை. ஆகவே இது போன்ற பிரச்சனைகளில் மூக்கை நுழைத்து கடுமையான வார்த்தைகளை உபயோகித்து அவதூறு பரப்பி வருகிறார். அவர் நாக்கை அடக்கி பேச வேண்டும். தொடர்ந்து அப்படி பேசினால் அடுத்த முறை நானே நேரடியாக சென்று வைக்கோவிற்கு பதில் அளிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #KPMunusamy #MKStalin
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் பிரதமர் மோடி, வாய் மூடி இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார். #ThoothukudiFiring
    நாகர்கோவில்:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் குமரி மாவட்டத்தில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். நாகர்கோவிலில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்வுகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. அங்கே சகஜ நிலை இன்னும் வரவில்லை. துப்பாக்கி சூட்டால் இறந்தவர்களின் உடலை மருத்துவமனையில் பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதால் இறந்த அப்பாவி மக்களின் சடலத்தை இன்னும் வீட்டுக்கு அனுப்ப முடியாத சூழல் நிலவுகிறது. இறந்தவர்களின் உடல்களை விரைந்து பிரேத பரிசோதனை செய்து ஒப்படைக்க வேண்டும்.

    தமிழக அரசு மற்றும் காவல்துறையின் தவறான செயல்பாடுகளால் தூத்துக்குடி மக்களுக்கு அரசின் மீது அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். முழுமையான விசாரணைக்கு பிறகே எப்படி இறந்தார்கள், எதனால் இறந்தார்கள்? என்ற ஏராளமான உண்மைகள் வெளிப்படும்.

    தமிழக அரசின் அலட்சியத்தால் மக்கள் இறந்துள்ளனர். துப்பாக்கிசூடு சம்பவத்துக்கு பிறகு தமிழக முதல்-அமைச்சர் நேரடியாக தூத்துக்குடி செல்லவில்லை. பின்னர் மக்களுக்கு எப்படி அரசின் மீது நம்பிக்கை ஏற்படும். 13 பேரின் உயிரிழப்புக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி, வாய் மூடி இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பிரதமர் மாற்றாந்தாய் மனப்பான்மையில் செயல்படக் கூடாது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு அனைத்து தரப்பினரையும் பாதிப்புக்குள்ளாக்கி உள்ளது. மத்திய அரசு இந்த விலை உயர்வை உடனடியாக குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசுல் விலையை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்.

    ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட மக்களுக்கு அரசு அறிவித்த நிவாரணத்தை முறையாக கொடுக்க வேண்டும். குமரியில் துறைமுகத்தின் அவசியம் குறித்து மக்களிடம் கருத்து கேட்பது மிக அவசியமான ஒன்று. ஸ்டெர்லைட், மீத்தேன் திட்டம், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் போல மக்கள் விரும்பாத திட்டத்தை திணிக்க கூடாது. மக்களின் எதிர்ப்பை மீறி எதுவும் வர முடியாது. பாரதிய ஜனதா அரசு 4 ஆண்டுகளில் தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கவில்லை.

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனித்தன்மையோடு செயல்பட்டு வருகிறது. கட்சியை பலப்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. த.மா.கா. தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThoothukudiFiring #GKVasan #TamilMaanilaCongress
    தூத்துக்குடியில் 13 பேரை கொலை செய்த போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய துப்பில்லாத அரசு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை கைது செய்தது கண்டனத்திற்குரியது என முக ஸ்டாலின் கூறியுள்ளார்.#MKStalin #DMK
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடியில் 13 பேரை கொலை செய்த போலீஸ் அதிகாரிகள் மீது ஒரு வழக்குக்கூட பதிவு செய்ய துப்பில்லாத அ.தி.மு.க. அரசு, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. காவல் துறையை காவி மயமாக்கும் முதலமைச்சர் பதவி விலகுவதே மக்களுக்கு பாதுகாப்பு.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MKStalin #DMK
    தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. #SterliteProtest #ThoothukudiFiring #NCHRO
    புதுடெல்லி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி முற்றுகைப் போராட்டத்திற்கு வந்த மக்களைத் தமிழகக் காவல்துறை மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் எதிர்கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதனை தேசிய மனித உரிமைக் கூட்டமைப்பு (என்.சி.ஹெச்.ஆர்.ஓ) வன்மையாகக் கண்டிக்கின்றது.

    இம்மாதிரித் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்படும்போது கடைபிடிக்க வேண்டிய எச்சரிக்கை விதிகள் மற்றும் நடைமுறைகள் எதுவும் கடைபிடிக்கப்படாமல் இது நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



    மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக வந்தவர்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு தீ வைத்த பின்னரே தாங்கள் சுடத் தொடங்கியதாக இப்போது காவல்துறை சொல்கிறது. ஆனால் மூன்றடுக்குப் பாதுகாப்பில் இருந்த ஆட்சியர் அலுவலகத்துக்குள் எப்படி ஊர்வலத்தில் வந்த சிலர் கையில் எரிபொருள்களுடன் நுழைந்திருக்க முடியும் என்கிற கேள்விக்கு அவர்களால் பதிலளிக்க முடியவில்லை.

    மே 22 அன்று நடந்த அனைத்து நடவடிக்கைகளும் காவல்துறை அந்தச் சூழலைத் தவறாகக் கையாண்டதன் விளைவு மட்டுமே என நாங்கள் கருதவில்லை. இது முன்னதாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலை என்றே நாங்கள் உறுதியாக நம்புகிறோம். மத்திய அரசு, மாநில அரசு இரண்டுமே இவ்வாறான கார்ப்பரேட் முயற்சிகளை எதிர்க்கும் மக்களுக்கு, அவர்களின் போராட்டங்கள் இனி இப்படித்தான் எதிர்கொள்ளப்படும் என ஒரு பாடம் கற்பிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்தான் இது.

    இந்தத் தாக்குதல் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்கப் பணியிலுள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு நீதி விசாரணை ஆணையம் ஒன்று உடனடியாக நியமிக்கப்பட வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் தமிழ்நாடு அரசு அமைத்துள்ள ஆணையத்தை நாங்கள் நம்பவில்லை.

    உரிய விதிகளைக் கடை பிடிக்காமல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தால் அந்தக் காவல்துறையினர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை வழக்கு தொடரப்பட வேண்டும்.

    மாவட்ட காவல்துறைத் தலைவர் மற்றும் ஆட்சியரை இப்போது அரசு இடம் மாற்றியுள்ளது. அவர்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது துறைசார் விசாரணை தொடங்க வேண்டும். அப்பாவி மக்கள் பலர் வீடு புகுந்து கைது செய்யப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கைது செய்யப்பட்ட அனைவரும் உடனடியாக நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.

    துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஒவ்வொருவர் குடும்பத்திற்கும் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும். அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு, அவர்களின் கல்வித் தகுதிக்குப் பொருத்தமான, நிரந்தரமான அரசுப் பணி அளிக்க வேண்டும். குண்டடிபட்டு மருத்துவமனையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பத்து இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மருத்துவமனையில் அவர்களுக்காகும் மொத்தச் செலவையும் அரசே ஏற்க வேண்டும். தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் நிறுவனத்தை உடனடியாகவும் நிரந்தரமாகவும் மூட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #SterliteProtest #ThoothukudiFiring #NCHRO
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து குமரி மாவட்டத்தில் இன்று 70 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
    நாகர்கோவில்:

    தூத்துக்குடியில் நடந்த போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் இன்று 70 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சிறு, சிறு பெட்டி கடைகள், டீக்கடைகள் மட்டுமே திறந்திருந்தன. கோட்டார் மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.

    நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் ஏராளமாக உள்ளன. இந்த கடைகள் அனைத்தும் இன்று அடைக்கப்பட்டு இருந்தது. வடசேரி, செட்டிக்குளம், கிருஷ்ணன் கோவில், பார்வதிபுரம் பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. அப்டா மார்க்கெட், வடசேரி சந்தையில் கடைகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்பட்டன.

    அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. ஒரு சில ஆட்டோக்கள், வேன்கள் மட்டும் ஓடின.

    இதேபோல மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் பல இடங்களில் கடைகள் மூடப்பட்டிருந்தன.

    தக்கலை, மேட்டுக்கடை, அழகியமண்டபம் ஆகிய இடங்களில் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேக்காமண்டபம், குமாரபுரம் பகுதிகளில் கடைகள் திறந்திருந்தன.

    குளச்சல் பஸ் நிலையம் மற்றும் பஜார் பகுதிகளில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. ஒரு சில கடைகள் மட்டுமே திறந்திருந்தன. இன்று மாலை 3 மணிக்கு குளச்சல் நகர பொதுமக்கள் சார்பில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அமைதி பேரணி நடத்துகிறார்கள்.

    தோவாளையில் பூக்கடைகள் அனைத்தும் திறந்து செயல்பட்டன. கன்னியாகுமரியில் கடைகள் திறந்திருந்தன. ஆனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

    குலசேகரம், திருவட்டார், அருமனை பகுதியில் வழக்கம்போல் கடைகள் திறந்திருந்தன.

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு நடிகரும், பா.ஜனதா தலைவர்களில் ஒருவருமான சத்ருகன் சின்கா கடும் கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் நேற்று தொடர்ந்து பதிவுகள் வெளியிட்டார். #ShatrughanSinha
    புதுடெல்லி:

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு நடிகரும், பா.ஜனதா தலைவர்களில் ஒருவருமான சத்ருகன் சின்கா கடும் கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் நேற்று தொடர்ந்து பதிவுகள் வெளியிட்டார்.

    அவற்றில் அவர் கூறி இருப்பதாவது:-

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் வேதனையானது, கண்டனத்துக்கு உரியது. காட்டுமிராண்டித்தனமானது. நாம் ஜனநாயகத்தில் வாழ்கிறோமா இல்லை பாசிச (பொதுவுடைமை எதிர்ப்பு) ஆட்சியின் கீழ் இருக்கிறோமா? அமைதி வழியில் போராட்டம் நடத்திய ஒன்றுமறியாத அப்பாவி ஏழை மக்களுக்கு எச்சரிக்கை கூட விடுக்காமல் தானியங்கி துப்பாக்கிகளால் சுட்டிருக்கிறார்கள். இந்த படுகொலைக்கு உத்தரவிட்டது யார்?

    ஜனநாயகத்தில் அனைவருக்கும் தங்கள் குரலை எழுப்ப உரிமை உண்டு. பாதுகாக்க வேண்டிய அரசாங்கமே பயங்கரவாதி போல நடந்து கொண்டால், பாவம், மக்கள் எங்கே போவார்கள்?

    காஷ்மீரில் கதுவாவில் நடந்த பலாத்காரம், பெட்ரோல் விலை உயர்வு, தூத்துக்குடியில் நடந்த கருணையற்ற படுகொலைகள் என எதற்கும் கருத்து சொல்லாமல் இருப்பதா? சொல்வன்மை மிக்க சேவகரே (பிரதமர் மோடி), பேசுங்கள்.

    இவ்வாறு அதில் சத்ருகன் சின்கா கூறி உள்ளார். #ShatrughanSinha 
    ஸ்டெர்லைட் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணாமல் துப்பாக்கி சூடு நடத்தியது தவறு என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். #GKVasan #ThoothukudiFiring #SterliteProtest
    தஞ்சாவூர்:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கூடிய கட்டாய சூழல் மத்திய-மாநில அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

    நியாயமாக போராடிய இந்த பிரச்சனைக்கு அணுகுமுறை சரியானதாக பின்பற்றபடவில்லை. ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்தியவர்களிடம் கலந்து பேசி தீர்வு காணாமல் துப்பாக்கி சூடு நடத்தியது ஜனநாயகத்திற்கு எதிரானது.

    100-வது நாள் போராட்டத்தை அதனுடைய அவசரம், அவசியம், தாக்கம், முக்கியத்துவம் ஆகியவை புரிந்து செயல்படாமல் தமிழக அரசும், காவல்துறையும் மிக சுலபமாக கையாளுவதாக நினைத்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இது காவல்துறையின் பொறுப்பற்ற செயல்.

    முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறி விட்டனர். இதன் காரணமாகதான் உயிர்பலி ஏற்பட்டுள்ளது. காவல்துறையின் அவசர போக்கு, பொறுமை இழந்த செயல் இனிமேல் மக்கள் மத்தியில் எடுபடாது. உயிர் இழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சமும், அரசு வேலையும் வழங்க வேண்டும்.

    தங்களது கோட்பாட்டை மதிக்காமல் மீறி செயல்பட்ட காவல்துறையின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் உண்மையை மக்கள் தெரிந்து கொள்வதற்காக நீதி விசாரணை நடத்த வேண்டும்.


    அமைச்சர் ஜெயக்குமார் துப்பாக்கி சூடு தவறில்லை என்று கூறியது நியாயமற்ற, மனிதாபிமானமற்ற செயல். மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்க அரசு தவறி விட்டது. துப்பாக்கி சூடு அவசியமற்றது.

    கலெக்டர் அலுவலகத்திற்கு வருவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து பொதுமக்களை தடுத்து நிறுத்தி இருக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TamilMaanilaCongress #GKVasan #ThoothukudiFiring  #SterliteProtest
    தூத்துக்குடி போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் முழு கடையடைப்பு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. #SterliteProtest #BanSterlite
    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஸ்டெர்லைட் நிறுவனத்தை எதிர்த்து தூத்துக்குடி மாவட்ட மக்களும், வணிகர்களும் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளாகிய இன்று (நேற்று) 144 தடை உத்தரவு போடப்பட்டது. இதனால் போராட்டக்காரர்கள்-போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பல உயிர்கள் பலியாகி உள்ளன. நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்து உள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

    இந்த சம்பவத்துக்கு அரசின் மெத்தன போக்கே காரணம். எனவே அரசு உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையின் இயக்கத்தை நிறுத்தவேண்டும். முழுமையான நச்சுத்தன்மை குறித்த விவரங்களை உடனடியாக ஆராய்ந்து, அந்த ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்துதர வேண்டும். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும்.

    தூத்துக்குடி போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை (இன்று) தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் முழு கடையடைப்பு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து நியாயம் கிடைக்காத பட்சத்தில் பேரமைப்பின் ஆட்சி மன்றக்குழு கூட்டத்தை கூட்டி, தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவது குறித்து தீர்மானிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.  #SterliteProtest #BanSterlite
    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன், ச.ம.க. தலைவர் சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடியில் போராடுகிற மக்களின் கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு மாறாக, ஆலை முதலாளியின் விருப்பத்தை நிறைவேற்றுகிற வகையில் போராடியவர்களை காவல் துறையினர் பெண்கள், குழந்தைகள் அனைவரின் மீதும் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி, ஓட, ஓட விரட்டியடித்துள்ளனர்.

    கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசியதோடு மட்டுமல்லாமல், துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளனர். இதில் ஒருவர் பலியாகி உள்ளார். பலர் படுகாயமுற்றுள்ளனர். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வன்மையாக கண்டிக்கிறது.

    அமைதியாக போராடுகிற மக்கள் மீது கொடூரமான துப்பாக்கிச் சூடு மற்றும் அடக்குமுறைகளை ஏவிவிடுவதை தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். எனவே நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

    ச.ம.க. தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

    ஜனநாயக ரீதியில் போராடும் மக்களிடம் வன்முறை சம்பவங்களை நிகழ்த்தி தடியடி, புகைக்குண்டு என அப்பகுதியை கலவரபூமியாக மாற்றியிருப்பது கண்ட னத்திற்குரியது. பல்லாயிரக்கணக்கில் திரளும் மக்கள் பல லட்சக்கணக்கில் திரள்வதற்கு முன்பாக அவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    போராட்டக்களத்தில் ஏற்பட்ட துப்பாக்கிசூடு சம்பவத்தால் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்த செய்தி வருத்தமளிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பிற்கான போராட்டத்தில் உயிரிழந்த அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    டைரக்டர் கவுதமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் மக்களை அழிக்கும் எமன். தூத்துக்குடியில் நீர், நிலம், காற்று அனைத்தும் பாழாகியுள்ளது. தமிழக அரசு தூத்துக்குடி மக்களின் எழுச்சிக்கு மதிப்பளிக்க வேண்டும். அடித்து ஒடுக்க முற்பட்டால் நிலைமை விபரீதமாகும்.

    மக்கள் புரட்சியாக போராட்டம் மாறுவதற்குள், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். தூத்துக்குடி மக்களின் போராட்டம் வெல்லட்டும். மக்கள் வாழும் நகரமாக தூத்துக்குடி நிலைக்கட்டும்.
    ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் புதிய வழிமுறைகளை உருவாக்குவதா? என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். #MKStalin
    சென்னை:

    ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் புதிய வழிமுறைகளை உருவாக்குவதா? என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்ததில் இருந்து பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராகவும், சமூகநீதிக் கொள்கைகளை குழி தோண்டிப் புதைக்கும் வகையிலும், பின்னடைவுப்பாதையில் அநியாயமாகச் செயல்பட்டு வருகிறது. அதன் அடுத்த கட்டமாக, தற்போது ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். உள்ளிட்ட அகில இந்திய பணிகளுக்கான தேர்வுகளிலும் சமூகநீதியை சீர்குலைக்கும் வகையில் புதிய விதிமுறைகளை உருவாக்கத் துடித்துக் கொண்டிருப்பதற்கு, தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட அகில இந்திய பணிகளுக்கு இதுவரை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பிரிலிமினரி, மெயின் தேர்வுகளை நடத்தியும், நேர்முகத்தேர்வை நடத்தியும் தேர்வு செய்து முடிவுகளை வெளியிட்டது. அதில், மிகச்சிறந்த மதிப்பெண்கள் வாங்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சமுதாயங்களை சார்ந்த இளைஞர்கள் ஏன் நேர்முகத்தேர்வில் வெற்றி பெற முடியாமல் போகிறது என்பதில் உள்ள சூழ்ச்சிகள் என்னவென்று அறிந்து கொள்ள முடியாமல், இளைஞர் சமுதாயம் ஆதங்கத்தில் இருக்கிறது.

    இப்போது சிவில் சர்வீஸ் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் இளைஞர்களை ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ் உள்ளிட்ட பல்வேறு அகில இந்திய பணிகளுக்கு நியமிக்கும் முறையையும், அதன் அடிப்படையில் அவர்கள் பணியாற்றும் மாநில ஒதுக்கீடுகளையும் ரத்து செய்து விட்டு, முசோரியில் நூறு நாள் பயிற்சியில் இருக்கும்போது எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் எந்தப் பணிக்கு ஒருவரை தேர்வு செய்வது என்பதையும், எந்த மாநிலத்தில் பணியாற்ற அவருக்கு ஒதுக்கீடு வழங்குவது என்பதையும் முடிவு செய்ய வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் விரும்புகிறது என மத்திய பணியாளர் சீர்திருத்தத்துறையின் இணைச் செயலாளர் விஜய்குமார் சிங் அறிவித்திருப்பது, அரசியல் சட்டம் அளித்துள்ள சமூகநீதியை தட்டிப் பறிக்கும் செயல் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

    ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். உள்ளிட்ட அகில இந்திய பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இளைஞர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்று நாட்டின் நிர்வாகத்தில் தங்களது பங்களிப்பை செலுத்தி வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பா.ஜ.க. அரசும், பிரதமர் அலுவலகமும் இப்படியொரு அநீதியான பவுண்டேஷன் கோர்ஸ் தேர்வுமுறையை புகுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இரவுபகலாக படித்து, தேர்வு பெற்று, பல தடைகளை தாண்டி நேர்முகத் தேர்விலும் வெற்றிபெற்ற இளைஞர்களின் தலைவிதியை முசோரியில் உள்ள ஒரு டஜன் பேராசிரியர்களிடம் ஒப்படைத்து, சமூகநீதிக் கொள்கைகளுக்கு மன்னிக்க முடியாத அநீதியைச் செய்ய பா.ஜ.க. அரசும், பிரதமர் அலுவலகமும் துணிந்து விட்டது.

    அகில இந்திய பணிகளுக்கான தேர்விலும் சிவில் சர்வீஸ் தேர்வு தவிர, ஒரு பவுண்டேஷன் கோர்ஸ் என்ற போர்வையில், ஒருவகையிலான நீட் தேர்வை அறிமுகப்படுத்தி, இளைஞர்களின் எதிர்கால கனவுகளைச் சிதைக்க முயற்சிப்பதை, நாடு பொறுத்துக் கொள்ளாது என்பதை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் புரிந்து கொள்ள வேண்டும்.

    ஆகவே, பவுண்டேஷன் கோர்ஸ் மூலம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இளைஞர்களின் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் கனவுகளை தகர்க்கும் பிரதமர் அலுவலகத்தின் உத்தரவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் எனவும், ஏற்கனவே இத்தனை ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் சிவில் சர்வீஸ் தேர்வு அடிப்படையிலேயே அகில இந்திய பணிகளுக்கு தேர்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திக்கேட்டுக் கொள்கிறேன். தவறினால் சமூகநீதி கொள்கையை சீர்குலைக்கும் மத்திய பா.ஜ.க. அரசை எதிர்த்து இளைஞர்களை பெருமளவில் திரட்டி மாபெரும் போராட்டத்தை தி.மு.க. நடத்திடும் என்றும் எச்சரிக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 
    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு எதிராக குஷ்பு ஆதரவாளர்கள் அணி திரண்டு வருகிறார்கள். அவர்கள் திருநாவுக்கரசருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். #Congress #Khushboo
    சென்னை:

    நடிகை குஷ்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரை விமர்சனம் செய்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசர் இன்னும் 1 மாதத்தில் நீக்கப்படுவார் என்றார்.

    இதற்கு பதிலடி கொடுத்த திருநாவுக்கரசர், குஷ்புவை கடுமையாக விமர்சித்தார். அவர் தி.மு.க.வில் இருந்து செருப்பு, முட்டை வீசி வெளியேற்றப்பட்டார் என்றார். இந்த மோதல் காங்கிரசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் குஷ்பு ஆதரவாளர்கள் திருநாவுக்கரசருக்கு எதிராக அணி திரண்டு வருகிறார்கள். அவர்கள் திருநாவுக்கரசருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    குஷ்பு ஆதரவாளர்களான தமிழக காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் முகமது இஸ்மாயில், காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் மணிகண்டன், காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் அப்துல் ரஜாக் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு சமீபத்தில் அளித்த பேட்டி சம்மந்தமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில தலைவர் திருநாவுக்கரசர் நாகரீகமில்லாத மிகவும் தரக்குறைவான கடுமையான வார்த்தைகளால் குஷ்புவை பேசியுள்ளார். தனது தகுதியை மறந்து பேசியுள்ளார்.

    பெண்களை தெய்வமாக போற்றும் நமது நாட்டில் பெண்களைப் பற்றி கீழ்த்தரமான வார்த்தைகளால் பேசுவது இரும்பு மங்கை எனப்போற்றப்படும் இந்திரா காந்தியின் உருவமாக காங்கிரசாரால் கொண்டாடப்படும் சோனியா காந்தியின் வழிகாட்டுதலால் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காங்கிரஸ் பேரியக்கத்திற்கு இழுக்கு என்பதை தாங்கள் ஏன் உணரவில்லை?

    பெண்களை கேவலமாக பேசி ஜாமீன் கூட பெற முடியாமல் ஊர் ஊராக மாறு வேடத்தில் சுற்றித் திரியும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எஸ்.வி. சேகரின் பேச்சுக்கும் உங்களின் பேச்சுக்கும் என்ன வித்தியாசம்.

    சிறுபான்மை சமுதாயத்தை தாங்கள் இழிவு படுத்துவது புதிதல்ல. தாங்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக வந்த பிறகு காங்கிரஸ் தலைமையிலான சத்தியமூர்த்தி பவனிலேயே அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயலாளர் அசீனா தங்கள் முன்னிலையிலேயே தாக்கப்பட்டார்.

    பெண்கள் பாதுகாப்பிற்காகவும், சிறுபான்மையினர் பாதுகாப்பிற்காகவும், போராட்டங்களும், மக்கள் இயக்கங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் ஆணாதிக்க அரசியலில் தன்னாலும் சாதிக்க முடியும் என்ற மன உறுதியோடு, குறிப்பாக சிறுபான்மை சமுதாயத்திலிருந்து அரசியலுக்கு வந்து தேசிய அளவில் பதவியை பெற்று பணியாற்றி வரும் குஷ்புவை பெண் என்றும் பாராமல் தாங்கள் பேசியிருப்பது சிறுபான்மை மக்களின் மீது தாங்கள் கொண்டிருக்கும் மனநிலையை உணர்த்துகிறது.

    இதை வன்மையாக கண்டிக்கிறேன். சொந்த கட்சிக்காரர்களின் சரமாரி கேள்வி கணைகளாலும் மாற்று கட்சி நண்பர்களின் கட்சித் தலைவர் இப்படி பேசலாமா எனும் தொடர் கேள்வியாலும் இக்கோரிக்கையை வைக்கிறோம்.

    ராகுலின் கரத்தை வலுப்படுத்தி ராகுலால் நியமிக்கப்பட்ட எங்கள் மாநில தலைவர் உங்கள் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வீறு கொண்டு எழ ராகுலால் நியமிக்கப்பட்ட குஷ்புவை நீங்கள் மதித்து பேசும் பேச்சு ராகுலை பெருமை படுத்தும் என்பது மட்டும் நிச்சயம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #Congress #Khushboo
    மோடி 4 ஆண்டுகளில் விளம்பரத்திற்காக ரூ.4343 கோடி செலவு செய்து இருப்பதற்கு நடிகையும் காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். #ModiGovernment #Modi #Advertisement #Congress #Kushboo
    சென்னை:

    மும்பையை சேர்ந்த சமூக ஆர்வலர் அனில்கல்சாலி தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கிழ் பிரதமர் நரேந்திரமோடி அரசு இதுவரை விளம்பரத்திற்கு செய்த செலவு எவ்வளவு என்று மனுதாக்கல் செய்து இருந்தார்.

    அதற்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சக அலுவலகம் தெரிவித்த பதிலில் பிரதமர் மோடி தலைமையில் 2014-ம் ஆண்டு ஆட்சி அமைந்த பின்னர் இதுவரை விளம்பரத்துக்கு செலவு செய்தது ரூ.4,343.26 கோடி.

    இதில் தினசரி நாளிதழ்கள், பருவ இதழ்கள் உள்ளிட்ட அச்சு ஊடகங்களுக்கு ரூ.1,732.15 கோடியும் (2014 ஜூன் 1 முதல் 2017 டிசம்பர் 7 வரை), டி.வி., இன்டர்நெட், ரேடியோ, டிஜிட்டல் சினிமா, எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட மின்னணு ஊடகங்களுக்கு ரூ.2,079.87 கோடியும் (2014 ஜூன் 1 முதல் 2018 மார்ச் 31 வரை), போஸ்டர், பேனர், ரெயில் டிக்கெட் உள்ளிட்ட வெளிப்புற விளம்பரங்களுக்கு ரூ.531.24 கோடியும் (2014 ஜூன் முதல் 2018 ஜனவரி வரை) செலவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இதற்கு நடிகையும் காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    மோடி 4 ஆண்டுகளில் விளம்பரத்திற்காக ரூ.4343 கோடி செலவு செய்து இருக்கிறார். காமராஜர் ஒவ்வொரு பைசாவையும் ஏழைகளின் கல்விக்காக செலவு செய்தார். மோடி அவரது சொந்த எக்காளத்தால் வீழ்ச்சி அடைவார்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #Congress #Kushboo #Modi
    ×