search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 106582"

    வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக 20-ம் தேதி முதல் தண்ணீர் திறக்கும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #VaigaiDam #EdappadiPalaniswami
    சென்னை:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணைக்கு மழைக்காலங்களில் மேகமலை, வெள்ளிமலை, வரு‌ஷநாடு ஆகிய பகுதிகளில் பெய்யும் மழையின் மூலமாக நீர்வரத்து ஏற்படும். பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரும் வைகை அணைக்கு வரும். கடந்த சில வருடங்களாக போதிய மழை பெய்யாததால் வரலாறு காணாத அளவில் நீர்மட்டம் குறைந்து வந்தது. 71 அடி உயரமுள்ள அணையின் நீர் மட்டம் 22 அடி வரை சரிந்தது.

    இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கேரளாவில் கனமழை பெய்து வருவதால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. எனவே அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு, வைகை அணையில் தேக்கப்பட்டது. நேற்று அணையின் நீர்மட்டம் 67 அடியை எட்டியதையடுத்து, 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


    வைகை அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருக்கும் நிலையில், அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

    வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக வரும் 20-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் 1 லட்சத்து 5,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். #VaigaiDam #EdappadiPalaniswami
    முன்னாள் நீதிபதிகள் 5 பேருக்கும் அவர்களுக்கு முறைப்படியாக கிடைக்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை 2 மாதங்களுக்குள் வழங்குமாறு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt #TamilnaduGovernment
    புதுடெல்லி:

    வக்கீல்களாக இருந்த கே.அன்பழகன், பி.ஜி.ராஜகோபால், ஜி.சாவித்திரி, ஆர்.ராதா, ஏ.எஸ்.ஹசீனா ஆகியோரை தற்காலிகமாக 5 ஆண்டுகளுக்கு விரைவு கோர்ட்டு நீதிபதிகளாக கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை ஐகோர்ட்டு நியமித்தது. பின்னர் அவர்களுடைய பதவி காலம் நீட்டிக்கப்பட்டது. 2011-12-ம் ஆண்டு அவர்கள் 60 வயதை அடைந்ததும், அந்த பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

    பின்னர் அவர்கள் தரப்பில், தங்களுக்கு மாவட்ட மற்றும் செசன்சு கோர்ட்டு நீதிபதிகள் என்ற அடிப்படையில் ஓய்வூதிய பலன்கள் வழங்கப்பட வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதை ஏற்க மறுத்து ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து அவர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஐகோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்ததோடு, முன்னாள் நீதிபதிகள் 5 பேருக்கும் அவர்களுக்கு முறைப்படியாக கிடைக்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை 2 மாதங்களுக்குள் வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்கள். 
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி கிடையாது என்றும், நிர்வாக பணிகளை மட்டும் மேற்கொள்ளலாம் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. #NGT #SterlitePlant
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மே மாதம் நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டு அப்போது நடந்த தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு மே 28-ந்தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.



    இந்த மனு தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினர்களான நீதிபதிகள் ஆதர்ஷ்குமார் கோயல், டாக்டர் ஜவாத் ரகீம், எஸ்.பி.வங்டி, டாக்டர் நகின்நந்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், ராகேஷ் திவிவேதி உள்ளிட்டோரும், ஸ்டெர்லைட் தரப்பில் மூத்த வக்கீல் அரிமா சுந்தரம், பினாகி மிஸ்ரா ஆகியோரும் ஆஜரானார்கள். இந்த வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்க்க மனுதாக்கல் செய்துள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் ஆஜரானார்.

    அரிமா சுந்தரம் தன்னுடைய வாதத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு பிறப்பித்துள்ள 5 உத்தரவுகளையும் ரத்துசெய்ய வேண்டும் என்று கூறி, ஆலைக்கு எதிரான போராட்டம் குறித்து விவரிக்க தொடங்கினார்.

    சி.எஸ்.வைத்தியநாதன் குறுக்கிட்டு, அரசு பிறப்பித்துள்ள உத்தரவுகளில் கோர்ட்டுகளோ, தீர்ப்பாயங்களோ தலையிட முடியாது. இதே போன்ற மனுவை வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டிலும் தாக்கல் செய்துள்ளது என்றார்.

    அரிமா சுந்தரம் வாதிடுகையில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்பும் நாங்கள் முறையிட்டோம். தமிழக அரசு பிறப்பித்துள்ள அனைத்து ஆணைகள் மீதும் மேல்முறையீடு செய்வதற்கு முகாந்திரம் உண்டு என்று கூறினார்.

    உடனே தமிழக அரசு தரப்பில் வாதிடும்போது, ஆலையை மூடுவதற்கு பிறப்பித்த ஆணை மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி வெளியிட்டதாகும். இதன் மீது இவர்கள் மேல்முறையீடு செய்ய முடியாது. இந்த மனுவின் ஏற்புத்தன்மை கேள்விக்குரியது என்றனர்.

    இதற்கு நீதிபதிகள் உங்கள் வாதத்தை ஏற்க முடியாது. மனுதாரர்கள் தங்கள் வாதத்தை தொடரலாம் என்றனர்.

    பின்னர் ஸ்டெர்லைட் தரப்பில் வாதிடுகையில், இந்த பிரச்சினை 1996-ம் ஆண்டில் இருந்து அரசியல்வாதிகளால் உள்நோக்கத்துடன் கிளறப்பட்டு வருகிறது. இவர்கள் கூறும் வகையில் சுற்றுச்சூழலுக்கு மாசு எதுவும் ஏற்படவில்லை. பொதுமக்களிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை. எனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என்றனர்.

    வக்கீல் ராகேஷ் திவிவேதி தன்னுடைய வாதத்தில், ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி அருகில் உள்ள நதிகளும் மாசுபடுகின்றன. இந்த ஆலை வெளியேற்றும் கழிவுகள் மிகவும் ஆபத்தானவை. இந்த ஆலைக்கு சுப்ரீம் கோர்ட்டு 2013-ம் ஆண்டு ரூ.100 கோடி அபராதம் விதித்தது. உடனடியாக ஒரு குழு அமைத்து ஆய்வை மேற்கொண்டால் அங்குள்ள மாசுக்கேட்டை நிரூபிக்க முடியும் என்றார்.

    இதற்கு ஸ்டெர்லைட் சார்பில், நாங்களும் ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்றுதான் கூறுகிறோம். தற்போது ஆலையை பராமரிக்க எங்களுக்கு இடைக்கால அனுமதி வேண்டும் என்றனர்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாயம், ஆலையில் நிர்வாக பணிகளை மட்டும் மேற்கொள்ள அனுமதி அளித்தது. மேலும் நிர்வாக ரீதியிலான பணிகளுக்காக ஆலைக்குள் ஊழியர்களை அனுமதிக்க வேண்டும், ஆலை இயங்காமல் இருப்பதை தூத்துக்குடி கலெக்டர் கண்காணிக்க வேண்டும். ஆலையில் அமில கசிவை கண்காணிக்க தனி அதிகாரியை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைக்க வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள குழுவுடன் இந்த அதிகாரியும் இணைந்து ஆலையால் ஏற்பட்ட மாசு தொடர்பான அறிவியல்பூர்வ ஆதாரங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

    இதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொள்ளாத நீதிபதிகள், ஆலை எக்காரணம் கொண்டும் இயங்க அனுமதி கிடையாது. நிர்வாக பணிகள் மட்டும் மேற்கொள்ளலாம் என்று உத்தரவிட்டனர்.

    மாசு தொடர்பான ஆதாரங்களை தாக்கல் செய்ய 10 நாள் அவகாசம் அளிக்கும்படி தமிழக அரசு சார்பில் கேட்கப்பட்டது. அந்த ஆதாரங்களை 20-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்ட தீர்ப்பாயம், வழக்கு விசாரணையை 20-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.  #NGT #SterlitePlant #tamilnews 
    பல்வேறு சம்பவங்களில் பலியான 14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #EdappadiPalanisamy
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மதுரை மாவட்டம், மேலக்கால் கிராமத்தைச் சேர்ந்த ஞானபிரகாசம் மின் மோட்டார் பழுது நீக்கும் பணியின் போது உயிரிழந்தார்.

    கருப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் அருவியில் குளிக்கச் சென்ற போது, தவறி விழுந்து உயிரிழந்தார்.

    போடிநாயக்கன்பட்டி கிராம உட்கடை பேட்டை புதூர் கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி வாய்க்காலில் குளிக்கச் சென்ற போது ஆற்றில் விழுந்து உயிரிழந்தார்.

    கோயம்புத்தூர் மாவட்டம், ஊஞ்சவேலம்பட்டி கிராமத்தில், சாலை விபத்தில் ஜெயலட்சுமி, ஸ்ரீநிதி, ஆனந்தகிருஷ்ணன், நடராஜ் மற்றும் திருமுருகன் ஆகிய 5 பேர் உயிரிழந்தனர்.

    ஆண்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த குமார் குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

    தேவணாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சேவியர் பிரைட்டன் குமார் ஆழியார் அணையில் மூழ்கி உயிரிழந்தார்.

    திருவள்ளூர் மாவட்டம், போந்தவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகள் தர்ஷினி ஆலய திருவிழாவின் போது, பட்டாசு வெடித்ததில், உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், கே.திப்பனபள்ளி கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பன் மனைவி மூக்கம்மாள் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

    புதுக்கோட்டை மாவட்டம், பட்டரைச்சேரி கிராமத்தைச் சேர்ந்த காமாட்சி இரு சக்கர வாகனத்தில் சென்ற போது சாலை விபத்தில் உயிரிழந்தார்.

    அறந்தாங்கி வட்டம், பூவற்றக்குடி சரகம், திருநாளுர் கிராமத்தைச் சேர்ந்த மாரிக்கண்ணன் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

    இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த மேற்கண்ட 14 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #TNCM #EdappadiPalanisamy
    அசாமில் குடியிருப்போர் விவகாரம் தொடர்பாக வரைவு பதிவேடு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக்கூடாது என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #AssamNRC #SupremeCourt
    புதுடெல்லி:

    அசாம் மாநிலத்தில் வசிப்போர் பற்றிய தேசிய குடிமக்கள் இறுதி வரைவு பதிவேடு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பேர் அசாமை சேர்ந்தவர்கள் அல்ல என்பதும் இவர்கள் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக அசாமில் குடி புகுந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.

    இந்த நிலையில், அசாம் குடிமக்கள் பதிவேட்டின் ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜெலா நேற்று முன்தினம் இறுதி வரைவு பதிவேட்டின் தற்போதைய நிலை குறித்து விரிவான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். இதன் மீது நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் ஆர்.எப்.நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரணை நடத்தியது.



    அப்போது நீதிபதிகள் கூறுகையில், “வரைவு இறுதி பதிவேடு தொடர்பாக மத்திய அரசு நிலையான இயக்க நடைமுறையை உருவாக்கி அதை கோர்ட்டின் ஒப்புதலுக்காக வருகிற 16-ந் தேதி தாக்கல் செய்யவேண்டும். மேலும், விடுபட்டு உள்ளவர்களின் பெயர்களை சேர்க்க மற்றும் இது தொடர்பான ஆட்சேபங்களை தெரிவிக்க உள்ளூர் பதிவாளர் ஒருவர் மூலம் நோட்டீஸ் அளிக்கப்படவேண்டும். இந்த பதிவேடு தொடர்பாக கட்டாய நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது. ஏனென்றால் இது வெறும் ஒரு வரைவு பதிவேடுதான்” என்று உத்தரவிட்டனர்.  #AssamNRC #SupremeCourt
    சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்க போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் ஆன்-லைன் பாஸ்போர்ட் சேவையை விரைவுபடுத்துதல் குறித்து போலீசாருக்கான பயிற்சி வகுப்பு நேற்று காலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்த பயிற்சி வகுப்பிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி போலீசாருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆன்-லைன் மூலம் இ-சேவை பாஸ்போர்ட் கோரி பொதுமக்கள் விண்ணப்பித்தால் 3 நாட்களில் அவர்களுடைய சான்றிதழ்களை சரிபார்க்கும் பணியை முடிக்க வேண்டும். டிஜிட்டல் கையெழுத்து பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தவர்களிடம் இருந்து அவர்களுடைய சான்றிதழ்களை போலீசார் பெற வேண்டிய நிலை உள்ளது. இந்த கையெழுத்தை வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் பணிபுரிவோர் வந்து போட்டு செல்ல காலதாமதம் ஏற்படுவதால் அவர்களுக்கு பாஸ்போர்ட் தருவதற்கும் தாமதம் ஏற்படுகிறது.

    மற்ற மாவட்டங்களில் 5 நாட்களுக்குள் இ-சேவை பாஸ்போர்ட் அளிக்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 30 நாட்களுக்கு மேல் ஆவதாக தெரியவந்துள்ளது. எனவே சான்றிதழ் சரிபார்ப்பு பணியை உடனுக்குடன் முடித்து விரைவாக பொது மக்களுக்கு பாஸ்போர்ட்டு கிடைக்க போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதற்காக மாவட்டத்தில் உள்ள 56 போலீஸ் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை பணியை மேற்கொள்ளும் போலீசாருக்கு கையடக்க கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் விரைவாக பாஸ்போர்ட் சேவை பணியை முடிக்க வேண்டும். மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு 2,500 பேருக்கு பாஸ்போர்ட் பெற்றுத்தரப்படுகிறது. இதை மேலும் அதிகரிக்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முகிலன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    அப்பாவி மக்கள் அடித்துக்கொல்லப்படுவதை மாவட்டம் தோறும் சிறப்பு அதிகாரி, கண்காணிப்பு குழு அமைத்து தடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. #CentralGovernment
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் பசுக்கள் கடத்தல், குழந்தைகள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி, சமூக வலைத்தளங்கள் வாயிலாக வதந்திகளை பரப்பி, வன்முறையில் ஈடுபடுவதும், அப்பாவி மக்கள் தாக்கப்படுவதும், அடித்துக் கொல்லப்படுவதும் அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக பசுக்காவலர்கள் என்ற பெயரில், பசுவை கடத்துகிறார்கள், பசுவை இறைச்சிக்காக அடித்துக்கொல்கிறார்கள் என்று கூறி அப்பாவி மக்களை அடித்துக்கொல்லும் சம்பவங்கள், வட மாநிலங்களில் அதிகளவில் நடந்து வருகின்றன.

    இது தொடர்பான ஒரு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கடந்த 17-ந்தேதி விசாரித்தது. அப்போது நீதிபதிகள், “பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் யாரும் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வதை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது. இதை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவேண்டும். இதுபோன்ற குற்றங்களை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

    இதையடுத்து மத்திய அரசு அதிரடியில் இறங்கி உள்ளது.

    அப்பாவி மக்கள் அடித்துக்கொல்லப்படுவதை தடுப்பதற்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்து அதிகாரியை சிறப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும்; இது தொடர்பான உளவுத் தகவல்களை சேகரிக்கவும், சமூக வலைத்தளங்களை கண்காணிக்கவும் சிறப்பு பணி குழுக்களை அமைக்க வேண்டும்; இதன் மூலம் அப்பாவி மக்கள் அடித்துக்கொல்லப் படுவதை தடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

    இது தொடர்பான கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்து உள்ளது.

    மேலும், இதன் பேரில் நடவடிக்கை எடுத்து, அதை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    அதில், அப்பாவி மக்கள் அடித்துக்கொல்லப்படுவதை தடுக்க சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

    அப்பாவி மக்கள் அடித்துக்கொல்லப்படும் சம்பவங்களை தடுத்து நிறுத்துவது குறித்து சட்டம் ஒன்றை இயற்றலாமா என்று பரிசீலிக்க மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய மந்திரிகள் குழு அமைக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே இந்த விவகாரம் நாடாளுமன்ற மக்களவையில் நேற்று எதிரொலித்தது. இந்தப் பிரச்சினையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுப்பினார். அப்போது அவர், அப்பாவி மக்கள் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவங்கள் குறித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஒருவரது தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    அதற்கு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பதில் அளித்தார். அப்போது அவர், “பல்வேறு மாநிலங்களிலும் அப்பாவி மக்கள் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவங்களை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டு உள்ளது. தேவைப்பட்டால் இதற்காக புதிய சட்டம் இயற்ற அரசு தயாராக இருக்கிறது” என்று கூறினார். 
    நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு எதிரான வழக்கு தொடர்பாக மத்திய அரசு மற்றும் டாடா நிறுவனம் ஒரு வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். #NationalGreenTribunal #NeutrinoResearch
    புதுடெல்லி:

    தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லியில் உள்ள பசுமை தீர்ப்பாயம், நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்துக்கு அனுமதி மறுத்தது. இந்தநிலையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், டாடா நிறுவனம் நியூட்ரினோ ஆய்வக பணிகளை தொடர அனுமதி வழங்கியது.

    இதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு சுற்றுச்சூழல்துறை வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.



    இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் ரகுவேந்திர எஸ்.ரத்தோர், சத்தியவான் சிங் கர்ப்யால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, தமிழக அரசு தரப்பில் அரசு வக்கீல் ராகேஷ் சர்மா ஆஜரானார். விசாரணை தொடங்கியதும் மத்திய அரசு மற்றும் டாடா நிறுவனம் ஒரு வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந்தேதிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தனர்.  #NationalGreenTribunal #NeutrinoResearch #Tamilnews 
    ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை வைத்திருப்பதால் மட்டும் ஒருவர் இந்திய குடிமகன் ஆகி விட முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், திவ்யா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘எனது தாயார் ஜெயந்தி, இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். இலங்கையில் நடந்த போரின் காரணமாக இந்தியாவுக்கு வந்து எனது தந்தையான பிரேம்குமாரை கடந்த 1992-ம் ஆண்டு திருமணம் செய்தார். எனது தாயார் தமிழகத்தில் தான் படித்துள்ளார். அவர், இந்தியர் என்பதற்கு ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் என அனைத்து ஆதாரங்களும் உள்ளன. பணிநிமித்தமாக இத்தாலி சென்று, அங்கிருந்து அடிக்கடி இந்தியா வந்து செல்வார். கடந்த ஜூலை 1-ந்தேதி எனது தாயார் சட்டவிரோதமாக இந்தியா வந்துள்ளதாகக் கூறி அவரை சென்னை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். எனவே விமான நிலைய அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள எனது தாயாரை விடுவித்து, மீண்டும் இத்தாலி செல்ல அனுமதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இலங்கையை சேர்ந்த ஜெயந்தியின் இலங்கை பாஸ்போர்ட் கடந்த 1994-ம் ஆண்டோடு காலாவதியாகி விட்டது. அதன்பிறகு மோசடியாக இந்தியாவில் பாஸ்போர்ட் பெற்றுள்ளார். எனவே தான் அவரை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்’ என்று கூறப்பட்டிருந்தது.

    இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி டி.ராஜா, ‘ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவைகளை பெற்றுவிட்டதால் மட்டும் ஒருவர் இந்திய குடிமகன் ஆகி விட முடியாது. அவற்றை எல்லாம் அரசு அங்கீகரிக்க வேண்டும். ஜெயந்தி இலங்கை பிரஜை என்று கூறி, அந்நாட்டு அரசு அவருக்கு பாஸ்போர்ட் வழங்கியுள்ளது. எனவே, அவரை விடுவிக்க உத்தரவிட முடியாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்’ என்று உத்தரவிட்டார். 
    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதை சுட்டிக் காட்டி கேரளா அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    புதுடெல்லி:

    காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், காவிரி நடுவர் மன்றம் வழங்கிய 30 டி.எம்.சி. தண்ணீரை சுதந்திரமாக தங்கள் தேவைக்கு பயன்படுத்தவும், அதில் ஒரு பகுதியை கேரளா அரசின் பாணசுர சாகர் என்ற திட்டத்தின் கீழ் வரக்கூடிய குத்தியாடி திட்டத்துக்கு பயன்படுத்தி கொள்ளவும் அனுமதிக்க வேண்டும் என்று சீராய்வு மனுவை கேரளா அரசு மார்ச் மாத இறுதியில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.

    இந்த மனுவை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் தங்கள் அறையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு நேற்று விசாரித்தனர். ஏற்கனவே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதை சுட்டிக் காட்டி கேரளா அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
    நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் நல்வாழ்வு மையங்கள் அனைத்தும் முறையாக பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி நேற்று உத்தரவிட்டார். #ChildCare #Registered #ManekaGandhi
    புதுடெல்லி:

    அன்னை தெரசாவால் தொடங்கப்பட்ட ‘மிஷனரிஸ் ஆப் சாரிட்டி’ நிறுவனம், ஜார்கண்ட் மாநிலத்தில் நடத்தி வரும் குழந்தைகள் மையம், தத்தெடுப்பு என்ற பெயரில் 3 குழந்தைகளை பணத்துக்கு விற்று விட்டதாக புகார் எழுந்துள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் நல்வாழ்வு மையங்கள் அனைத்தும் முறையாக பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி நேற்று உத்தரவிட்டார்.

    அத்துடன், குழந்தைகள் தத்தெடுப்புக்கென தேசிய அளவில் செயல்படும் உயரிய அமைப்பான ‘காரா’வில் அனைத்து மையங்களும் ஒரு மாதத்துக்குள் இணைக்கப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். 
    எஸ்.சி. மாணவர்கள் கல்லூரி கல்வி கட்டணம் குறித்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு மத்திய சமூக நலத்துறை மற்றும் அதிகார வழங்கல் துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.
    புதுடெல்லி:

    எஸ்.சி. மாணவர்களுக்கு அரசு கல்வி உதவித்தொகை வழங்குகிறது. இப்போது அந்த கல்வி உதவித்தொகை, சம்பந்தப்பட்ட மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

    இந்த நிலையில் அரசிடம் இருந்து உதவித்தொகை வரும் வரையில் கல்வி கட்டணம் செலுத்த முடியாது என்பதால் கல்லூரியில் எஸ்.சி. மாணவர்களுக்கு இடம் மறுக்கப்படுவதாக புகார்கள் எழுந்து உள்ளன.

    இந்த நிலையில் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு மத்திய சமூக நலத்துறை மற்றும் அதிகார வழங்கல் துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.

    அந்த கடிதத்தில் எஸ்.சி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை அவர்களது வங்கி கணக்கில் அரசு செலுத்தும் வரையில், அவர்கள் கல்வி கட்டணம் செலுத்துவதற்கான தேதியை நீட்டிக்க வேண்டும் என்று கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. 
    ×