search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதிப்பு"

    கேரளா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கனமழையால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு நிவாரண பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் கேரளா விரைந்தனர். #HeavyRain
    அரக்கோணம்:

    கேரளா மாநிலம் பாலக்காடு, கோழிக்கோடு உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழையால் அதிக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே மீட்பு பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படையை அனுப்பி வைக்க டெல்லியில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தை கேரளா அரசு கேட்டுக்கொண்டது. இதையடுத்து வேலூர் மாவட்டம் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களை மீட்பு பணிக்கு செல்ல அதிகாரிகள் உத்தரவிட்டனர்.



    அதன்படி 4 குழுவாக மொத்தம் 100 வீரர்கள் அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமானதளத்தில் இருந்து தனி விமானத்தில் கேரளாவுக்கு நேற்று புறப்பட்டு சென்றனர். மேலும் சாலை வழியாக 60 வீரர்கள் கேரளா புறப்பட்டனர்.

    மீட்பு பணிக்கு தேவையான ரப்பர் படகுகள், உயிர்காக்கும் கருவிகள், முதலுதவி பொருட்கள், மரம் அறுக்கும் கருவிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், நீளமான கயிறுகள் உள்ளிட்ட மீட்பு பொருட்களை உடன் எடுத்து சென்றனர். மறு அறிவிப்பு வரும் வரை வீரர்கள் கேரளாவில் தங்கி மீட்பு பணியில் ஈடுபடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். 
    ஈரான் நாட்டின் தென்பகுதியை இன்று தாக்கிய இரு நிலநடுக்கங்களை தொடர்ந்து மேற்கு பகுதியில் இன்று மூன்றாவது முறையாக 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. #iranearthquake
    டெஹ்ரான்:

    ஈரான் நாட்டின் தென்பகுதியில் உள்ள ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் இன்று இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது. 4.7 மற்றும் 5.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களால் உண்டான பாதிப்பு தொடர்பான தகவல் ஏதும் வெளியாகவில்லை.

    இந்நிலையில், நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள கேர்மன்ஷா மாகாணத்தில் சில மணி நேரத்துக்கு பின்னர் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோலில் 5.9 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தில் 25 பேர் காயமடைந்ததாக கேர்மன்ஷா மாகாண கவர்னர் ஹவுஸாங் பஸ்வன்ட் தெரிவித்துள்ளார்.

    சமீபகாலமாக ஈரான் நாட்டின் சில பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், கேர்மன்ஷா மாகாணத்தில் ஏற்பட்ட 7.3 ரிக்டர் நிலநடுக்கத்துக்கு சுமார் 620 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #iranearthquake
    கோவை மத்திய சிறையில் அமைக்கப்பட்டுள்ள ‘ஜாமர்’ கருவியினால் அதை சுற்றி உள்ள பகுதிகளில் செல்போன் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர்.
    கோவை:

    கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க இரண்டு ‘ஜாமர்’ கருவிகள் சில மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. டவர் பிளாக்கில் ஒன்றும், உயர் பாதுகாப்பு பிரிவில் ஒன்றுமாக இரு ‘ஜாமர்’ கருவிகள் உள்ளன. இவை தவிர மேலும் இரண்டு ‘ஜாமர்’ கருவிகள் விரைவில் அமைக்கப்பட உள்ளன.

    கோவை மத்திய சிறையில் செல்போன் பயன்படுத்துதற்கு தடைவிதிக்கப்பட்டாலும் உள்ளே இருக்கும் கைதிகள் செல்போன் பேசுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன. கைதிகளை பார்க்க வரும் பார்வையாளர்கள் அனைத்து பாதுகாப்புகளையும் மீறி செல்போன்களை மறைத்து கொண்டுவந்து கைதிகளுக்கு கொடுப்பதாக கூறப்படுகிறது. இதனால் செல்போன் செயல்பாட்டை முற்றிலும் தடுக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள முக்கிய சிறைகளில் ‘ஜாமர்’ கருவிகள் பொருத்தப்பட்டன.

    ஆனால் கோவை மத்திய சிறையில் பொருத்தப்பட்டுள்ள ‘ஜாமர்’ கருவிகளின் தாக்கம் எல்லையை கடந்து அருகில் உள்ள பாலசுந்தரம் சாலை உள்பட சுற்று பகுதிகளில் யாரும் செல்போன்களை பயன்படுத்த முடியாத அளவிற்கு கடுமையாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதைதொடர்ந்து பி.எஸ்.என்.எல். செல்போன் நிறுவனத்தினர் கருவிகளின் மூலம் ‘ஜாமர்’ கருவிகளின் தாக்கத்தை ஆய்வு செய்தனர். இதில் மத்திய சிறையில் பொருத்தப்பட்டுள்ள ‘ஜாமர்’ கருவிகள் அருகில் உள்ள செல்போன் சேவைகளையும் பாதிப்பதை உறுதி செய்துள்ளனர்.

    இதுகுறித்து பி.எஸ்.என்.எல். தொழில்நுட்ப பணியாளர் ஒருவர் கூறியதாவது:-

    கோவை மத்திய சிறையில் பொருத்தப்பட்டுள்ள ‘ஜாமர்’ கருவியினால் பி.எஸ்.என்.எல். மட்டுமல்லாது மற்ற செல்போன் நிறுவனங்களின் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சிறை அருகில் உள்ள பாலசுந்தரம் சாலை, பாரதியார் சாலை, நஞ்சப்பா சாலையில் செல்போனில் டயல் செய்தால் இணைப்பு கிடைக்கும். சில வினாடிகள் பேசிக் கொண்டிருக்கும் போதே தொடர்பு தானாக துண்டிக்கப்பட்டு விடும். அல்லது இணைப்பு கிடைத்தாலும் எதிர் தரப்பில் பேசுபவர்களின் குரல் தெளிவாக இருக்காது.இது போன்ற சேவை பாதிப்பு உள்ளது.

    இது தொடர்பாக செல்போன் பயன்படுத்துபவர்கள் ஏற்கனவே புகார் கூறினார்கள். இதுகுறித்து சிறை அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளோம். ஆனால் அவர்கள் தரப்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    ‘ஜாமர்’ கருவியின் தாக்கம் எவ்வளவு மீட்டர் சுற்றளவுக்கு இருக்கும் என்பதை மத்திய அரசு தொலை தொடர்புத் துறையினருக்கு தான் தெரியும். ‘ஜாமர்’ கருவியின் தாக்கத்தை குறைத்து சிறை வளாக அளவுக்குள் வைத்தால் இந்த கோளாறு தவிர்க்கப்படும்.இது தொடர்பாக தொலை தொடர்புத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    அமெரிக்காவில் பெண் மருத்துவர் ஒருவர் ஆபரேசன் தியேட்டரில் ஆடிப்பாடி கவனக்குறைவாக ஆபரேசன் செய்ததால், பாதிக்கப்பட்டதாக சுமார் 100 பெண்கள் புகார் கூறியுள்ளனர். #DancingDoctor
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் அட்லாண்டாவைச் சேர்ந்த பெண் மருத்துவர் விண்டெல் பூட்டே. தோல் நோய் மற்றும் முக அழகு சிறப்பு சிகிச்சை நிபுணரான இவர் தனது மருத்துவமனையில் உள்ள ஆபரேசன் தியேட்டருக்குள் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது,  இடையிடையே மியூசிக் போட்டு ஆடிப்பாடி மகிழ்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

    இவ்வாறு ஆடிப் பாடும்போது எடுத்த வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பதிவேற்றமும் செய்துள்ளார். அதில், அறுவை சிகிச்சைக்காக நோயாளி மயக்க நிலையில் படுத்திருக்க, அருகில் டாக்டர் வெண்டெல் நடனமாடுகிறார். அவரது உதவியாளர்களும் சேர்ந்து ஆடுகின்றனர்.



    அவரிடம் அறுவை சிகிச்சை செய்துகொண்ட முன்னாள் நோயாளிகள் பலர் இந்த வீடியோக்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஒருவேளை அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட உடல் உபாதைகள் மற்றும் பிரச்சனைகளுக்கு டாக்டரின் இதுபோன்ற அலட்சியமான நடவடிக்கை காரணமாக இருக்கலாம் என சுமார் 100 பேர் கூறியுள்ளனர்.

    இந்நிலையில் டாக்டர் விண்டெலுக்கு எதிராக சில பெண்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். டாக்டர் விண்டெலிடம் சிகிச்சை பெற்ற பிறகு நோய்த்தாக்கம், தொற்றுநோய்கள் மற்றும் மூளை பாதிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டதாக மனுதாரர்கள் கூறியுள்ளனர். ஆனால் டாக்டரோ, அவரது மருத்துவமனை தரப்பில் இருந்தோ எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. #DancingDoctor
    கலவரத்தால் பாதித்த ஷில்லாங்கில் பிரச்சினைக்கு உரிய பகுதிகளில் ராணுவத்தினர் நேற்று கொடி அணி வகுப்புகள் நடத்தினர்.
    ஷில்லாங்:

    மேகாலயா மாநிலத்தின் தலைநகரான ஷில்லாங்கில் தெம்மேட்டர் என்ற இடத்தில் 31-ந் தேதி மாலை பஸ் ஊழியர் ஒருவர் உள்ளூர் பொதுமக்களால் தாக்கப்பட்டார். அவர் இறந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானதால், பஸ் டிரைவர்கள் திரண்டனர். இதில் கலவரம் மூண்டது. கல்வீச்சு நடந்தது. போலீஸ் படை விரைந்து வந்து கூட்டத்தை விரட்டியடிக்க கண்ணீர்ப்புகை குண்டு வீசினர். போலீசார் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    அங்கு பல இடங்களுக்கும் கலவரம் பரவியது. நிலைமை மோசமானதால் நேற்று முன்தினம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இணையதள சேவை முடக்கப்பட்டது.

    மாநில அரசின் வேண்டுகோளுக்கு இணங்க ராணுவம் விரைந்தது. பிரச்சினைக்கு உரிய பகுதிகளில் ராணுவத்தினர் நேற்று கொடி அணி வகுப்புகள் நடத்தினர்.

    கலவரம் பாதித்த பகுதிகளில் இருந்து 200 பெண்கள், குழந்தைகள் உள்பட 500 பேரை ராணுவம் மீட்டது. அவர்களுக்கு ராணுவ கண்டோன்மென்ட் பகுதியில் உணவு, தண்ணீர் வழங்கப்பட்டது.

    முதல்-மந்திரி கொன்ராட் கே. சங்மா, உயர் மட்டக்குழுவை கூட்டி ஷில்லாங் நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். 
    திருப்பூரில் கடையடைப்பு போராட்டம் காரணமாக ரூ. 200 கோடிக்கு பனியன் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
    திருப்பூர்:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகள் அறிவித்து இருந்தது.

    இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. பனியன் நகரமான திருப்பூரில் பனியன் மற்றும் அதனை சார்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளது. அவைகள் அனைத்தும் இன்று அடைக்கப்பட்டு இருந்தது.

    திருப்பூர் மற்றும் அதனை சுற்றி உள்ள அனுப்பர் பாளையம் பகுதியில் பாத்திர உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனங்களும் அடைக்கப்பட்டு இருந்தது.

    முழு அடைப்பு காரணமாக திருப்பூரில் ரூ. 200 கோடி பனியன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. பனியன் நிறுவனம் அடைக்கப்பட்டதால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

    திருப்பூரில் பனியன் நிறுவனம் மட்டுமின்றி ஓட்டல்கள், கடைகள், காய்கறி மார்க்கெட் உள்ளிட்டவைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. ஒரு சில ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும் புதுமார்க்கெட், அவினாசி ரோடு, கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் நாகராஜன் உத்தரவின் பேரில் ரெயில் நிலையம், பஸ் நிலையம், ரெயில் நிலையம், மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    அவினாசி, ஆட்டையாம் பாளையம், கைகாட்டி புதூர், சேவூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. அவினாசி தினசரி மார்க்கெட் மூடப்பட்டிருந்தது. ஆனால் பஸ்கள் வழக்கம் போல் ஓடியது.

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகிய இடங்களில் இன்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடியது. கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் ஊட்டிக்கு சுற்றுலா வந்த பயணிகள் அவதியடைந்தனர்.

    வடமாநிலங்களில் புழுதிப்புயல் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால் சென்னையில் இருந்து செல்லும் 5 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. #DustStrom #DelhiDustStrom #FlightsCancelled
    சென்னை:

    தலைநகர் டெல்லியில் நேற்று மாலை மழை மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் புழுதிப்புயல் தாக்கியது. மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் புழுதியுடன் காற்று வீசியதால் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களின் வருகை, புறப்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. 70 விமானங்கள் மாற்று பாதைகளில் திருப்பி விடப்பட்டன. பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.



    இந்நிலையில் புழுதிப் புயல் தாக்கம் காரணமாக சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, ஐதராபாத் செல்லும் 5 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.

    இந்த புழுதி புயலுக்கு உ.பி.யில் 18 பேரும், டெல்லியில் 2 பேரும், மின்னல் தாக்கியதில் மேற்கு வங்கத்தில் 12 பேரும், ஆந்திராவில் 9 பேரும் என மொத்தம் 41 பேர் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    டெல்லி விமான நிலையத்தில் நேற்று இரவு 9 மணிக்கு ஓரளவு நிலைமை சரியான போதிலும், நள்ளிரவு 2 மணிக்குப் பிறகே விமானங்கள் இயங்கத் தொடங்கின. எனினும் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்ட விமானங்கள் வந்து சேர்ந்து, வழக்கமான பயணத்தை தொடர இன்னும் ஒரு நாள் ஆகும் என கூறப்படுகிறது. #DustStrom #DelhiDustStrom #FlightsCancelled
    ×