search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதலன்"

    திருமங்கலம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்த காதலன் அவரது பெற்றோர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள கூடக்கோவில், கல்லணை கிராமத்தைச் சேர்ந்தவர் பரமன். இவரது மகள் செல்வி (வயது 22) பி.இ. பட்டதாரி.

    இவருக்கும், பக்கத்து ஊரான கல்லணைபுதூர் கிராமத்தைச் சேர்ந்த மலையாளி மகன் மாரிச்செல்வம் (25) என்ற பட்டதாரி வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. 4 வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை மாரிச்செல்வத்தின் வீட்டு முன்பு அமர்ந்து செல்வி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    காதலன் மாரிச்செல்வம் திருமணத்திற்கு மறுத்ததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக செல்வி தெரிவித்தார்.

    இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் செல்வி புகார் கொடுத்துள்ளார்.

    அதில், பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதோடு, தான் அதற்கு உடன்படாததால் திருமணம் செய்ய மாரிச்செல்வம் மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும் காதலன் வீட்டு முன்பு தர்ணா நடத்தியபோது மாரிச்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி மாரிச்செல்வம், அவரது தந்தை மலையாளி, தாயார் கருப்பசாமி, சகோதரர்கள் பகவதி, கார்த்திக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இதில் மாரிச்செல்வம் கைது செய்யப்பட்டார். அவரது சகோதரர் பகவதி 4-வது பட்டாலியனில் போலீஸ்காரராகவும், கார்த்திக் ஜம்மு காஷ்மீரில் ராணுவத்திலும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    வேட்டவலம் அருகே திருமணம் செய்ய காதலன் மறுத்ததால் காதலி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.
    வேட்டவலம்:

    வேட்டவலத்தை அடுத்த அணுக்குமலை கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் வீராசாமி (வயது 32), திருவண்ணாமலையில் உள்ள தனியார் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். கோணலூர் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் மகள் வாசுகி (27), திருவண்ணாமலையில் உள்ள தனியார் கார்மெண்ட்சில் வேலை செய்து வருகிறார்.

    இவர்கள் இருவரும் தினமும் ஒரே பஸ்சில் வேலைக்கு சென்று வந்தனர். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, காதலித்து வந்துள்ளனர். வாசுகி, வீராசாமிக்கு தீபாவளி பண்டிகைக்காக புத்தாடை வாங்கிக்கொண்டு வேட்டவலம் வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து இருவரும் மோட்டார் சைக்கிளில் அணுக்குமலைக்கு சென்றனர். அணுக்குமலை செல்லும் வழியில் ஒரு இடத்தில் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது வாசுகி கொடுத்த புத்தாடையை வீராசாமி வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது.

    மேலும் அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளார். அதற்கு வீராசாமி என் அண்ணனின் திருமணம் நடந்த பிறகுதான் நான் உன்னை திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வாசுகி மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை பிடித்து தன் மீது ஊற்றி தீவைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் தீக்காயம் அடைந்த அவரை, வீராசாமி மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு மாற்றப்பட்டார்.

    இதுகுறித்து வாசுகி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வேட்டவலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோன்மணி வழக்குப்பதிவு செய்து, வீராசாமியை வலைவீசி தேடி வருகிறார். #tamilnews
    திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் வீட்டை விட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்த இளம்பெண் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.

    வடமதுரை:

    திருச்சி மாவட்டம் வையம்பட்டியைச் சேர்ந்தவர் சண்முக வள்ளி (வயது 22). பி.எஸ்.சி. பட்டதாரி, வேடசந்தூரில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இதே மில்லில் வேலை பார்த்த தென்னம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் (22) என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.

    இவர்கள் காதல் விபரம் சண்முகவள்ளி குடும்பத்துக்கு தெரியவரவே வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமண ஏற்பாடுகள் செய்தனர். பத்திரிகை அச்சடித்து உறவினர்களுக்கு கொடுத்து வந்த நிலையில் சண்முகவள்ளி வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனிடம் நடந்த விபரங்களை கூறினார்.

    இதனையடுத்து இன்று வேலாயுதம்பாளையத்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு ரமேஷ் தனது காதல் மனைவியுடன் வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.

    திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி மகன் சாரங்கா (வயது 23). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகள் ஜீவராஜாத்தி (18) என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.

    இவர் தற்போது திண்டுக்கல் தாலுகா அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் காதல் விபரம் வீட்டுக்கு தெரிய வரவே 2 பேரும் திண்டுக்கல்லில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் அவர்களது பெற்றோர்களை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    திருவாரூர் இளம்பெண்ணின் கருவை கலைக்க அ.தி.மு.க. பிரமுகர் பேரம் பேசியதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே உள்ள வடகரை கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன். இவரது மகள் கார்த்திகா (வயது 21). கார்த்திகாவும், சாத்தங்குடி பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான கோகுல் (26) என்ற வாலிபரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். காதலர்கள் நெருங்கி பழகியதால் கார்த்திகா கர்ப்பம் அடைந்தார். தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருந்த கார்த்திகா, காதலன் கோகுலை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார். ஆனால் இதற்கு அவர் மறுத்து விட்டதாக தெரிகிறது.

    இந்த நிலையில் திருவாரூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் மணிகண்டன், கோகுலுக்கு ஆதரவாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கார்த்திகா வீட்டுக்கு மணிகண்டன் சென்று, கோகுல் திருமணம் செய்ய மறுப்பதால் கருவை கலைக்க கூறியுள்ளதாக தெரிகிறது. மேலும் முன்பணமாக ரூ.10 ஆயிரம் கொடுத்து விட்டு, கருவை கலைத்த பின்னர் மீதி ரூ.1 லட்சம் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கார்த்திகா , மணிகண்டன் கொடுத்த ரூ.10 ஆயிரம் பணத்துடன் வந்து திருவாரூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். தனது வயிற்றில் வளரும் கருவை கலைக்க மணிகண்டன் பேரம் பேசியதாக தெரிவித்தார். மேலும் தனது காதலன் கோகுலனுடன் சேர்த்து வைக்கும்படியும் கூறினார்.

    இதனால் கார்த்திகாவின் புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் கார்த்திகாவின் காதலன் கோகுல், மற்றும் அ.தி.மு.க. பிரமுகர் மணிகண்டன் ஆகியோரிடம் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையே அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மணிகண்டன் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. கார்த்திகா, கோகுல் ஆகியோரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தால் தான் உண்மை தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கன்னியாகுமரியில் காதலனை தாக்கிவிட்டு இளம்பெண்ணை கடத்தி சென்ற உறவினரை கைது செய்த போலீசார் மேலும் 7 பேரை தேடி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரியை அடுத்த கோவளம் கடற்கரை பகுதியில் நேற்று மாலை ஒரு சொகுசு கார் வேகமாக வந்தது.

    அந்த சொகுசு காரை இன்னொரு கார் துரத்தி வந்தது. சன்செட் பாயின்ட் அருகே வந்த போது துரத்தி வந்த கார், சொகுசு காரை முந்தி சென்று வழிமறித்தது. இதனால் தொடர்ந்து செல்ல முடியாத சொகுசு கார், வேறுவழியின்றி நின்றது.

    உடனே துரத்தி வந்த காரில் இருந்து திபுதிபுவென சிலர் இறங்கி ஓடி வந்தனர். அவர்கள் சொகுசு காரில் இருந்தவர்களை வெளியே வரும்படி அழைத்தனர்.

    சொகுசு காரில் இருந்தவர்கள் வெளியே வர மறுத்து காரின் கண்ணாடிகளை மூடிக்கொண்டு சத்தம் போட்டனர். உடனே கும்பல் கார் கண்ணாடிகளை அடித்து உடைத்து காரை திறந்தனர். அதில் இருந்தவர்களை வெளியே இழுத்து சரமாரியாக தாக்கினர்.

    சொகுசு காருக்குள் ஒரு இளம்பெண் இருந்தார். அந்த பெண்ணை துரத்தி வந்த காரில் இருந்தவர்கள் அலேக்காக தூக்கி அவர்களின் காரில் போட்டப்படி சிட்டாக பறந்து விட்டனர். சில நிமிடங்களில் இந்த சம்பவம் சினிமா போல் நடந்து முடிந்து விட்டது.

    இந்த தாக்குதல் சம்பவத்தில் சொகுசு காரில் இருந்த 3 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் வலியால் அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

    கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சம்பவம் பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில் காயம் அடைந்தவர்கள் மயிலாடி பெருமாள்புரத்தை சேர்ந்த ஸ்டார்லின்(வயது 24) மற்றும் அவரது உறவினர்கள் சுரேஷ் (43), அருள் (58) என தெரியவந்தது.

    இது பற்றி ஸ்டார்லின் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதில் காதல் தகராறு காரணமாக மயிலாடி பகுதியை சேர்ந்த ஜெயபால், பாலகிருஷ்ணன், ஸ்ரீதேவ், துரைராஜ் உள்பட 8 பேர் தாக்கியதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதன்விபரம் வருமாறு:-

    மயிலாடி பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் டிக்சோனா (22). ஜெயபால், பெயிண்டிங் காண்டிராக்டர். அவரிடம் அதே பகுதியை சேர்ந்த ஸ்டார்லின் தொழிலாளியாக வேலை பார்த்தார். வேலை வி‌ஷயமாக ஜெயபால் வீட்டிற்கு ஸ்டார்லின் அடிக்கடி செல்வார். அப்போது டிக்சோனாவுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. நாளடைவில் இருவரும் காதலர்கள் ஆனார்கள். தொடர்ந்து பெற்றோருக்கு தெரியாமல் அடிக்கடி தனியாக சந்தித்து பேசினர்.

    காதலர்கள் தனியாக சந்தித்து பேசும் விவரம் பெற்றோருக்கு தெரியவந்ததும் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். டிக்சோனாவை அவரது தந்தையும் உறவினர்களும் கண்டித்ததோடு, ஸ்டார்லினிடம் பேசக்கூடாது எனவும் எச்சரித்தனர்.

    இதனால் மனம் உடைந்த காதலர்கள் கடந்த 10-ந் தேதி வீட்டை விட்டு மாயமானார்கள். மயிலாடியில் இருந்து குலசேகரம் பகுதிக்கு சென்ற அவர்கள் அங்கேயே மறைந்து இருந்தனர்.

    இதற்கிடையே காதலர்களின் பெற்றோர், அவர்களை பல இடங்களிலும் தேடினர். இந்த தகவல் காதலர்களுக்கு தெரியவந்தது. இனியும் மறைந்திருந்தால் சிக்கல் என்பதை அறிந்த காதலர்கள், நேற்று கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்து பாதுகாப்பு கேட்க முடிவு செய்தனர்.

    இதற்காக இருவரும் ஒரு கோவிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டு, அந்த தகவலை பெற்றோருக்கு தெரியப்படுத்தினர். இதை அறிந்ததும் அவர்கள் ஆத்திரம் அடைந்தனர்.

    டிக்சோனாவின் தந்தை ஜெயபால் மற்றும் அவரது உறவினர்கள், டிக்சோனா கன்னியாகுமரி போலீஸ் நிலையம் செல்லும் முன்பு அவரை பிடித்துவிட வேண்டும் என்று கன்னியாகுமரி செல்லும் சாலையில் காத்திருந்தனர்.

    அவர்கள் எதிர்ப்பார்த்தபடி டிக்சோனாவும், அவரது காதலன் ஸ்டார்லினும் ஒரு காரில் கன்னியாகுமரிக்கு வருவதை கண்டனர். அவர்களை துரத்தி சென்று கோவளம் பகுதியில் மடக்கி பிடித்து டிக்சோனாவை மட்டும் தங்களுடன் அழைத்து சென்றுவிட்டனர்.

    போலீஸ் விசாரணையில் தெரியவந்த இத்தகவலின் அடிப்படையில் கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன், காதல் தகராறில் வாலிபரை தாக்கிவிட்டு இளம்பெண்ணை கடத்தி சென்றதாக டிக்சோனாவின் தந்தை ஜெயபால்,அவரது உறவினர்கள் பாலகிருஷ்ணன், ஸ்ரீதேவ், துரைராஜ் உள்பட 8 பேர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 147, 148, 341, 294(பி), 323, 324, 506(2) உள்பட 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

    இவர்களில் துரைராஜ் கைது செய்யப்பட்டார். மற்ற 7 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் கடத்தி செல்லப்பட்ட இளம்பெண் டிக்சோனாவையும் போலீசார் கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். #tamilnews
    கர்நாடக மாநிலம் கொப்பல் அருகே முதலிரவின் போது மாயமான புதுப்பெண் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதலனுடன் தஞ்சம் அடைந்தார். #WomanMissing
    பெங்களூரு:

    கொப்பல் மாவட்டம் குடூரு கிராமத்தை சேர்ந்தவர் காயத்ரி. இவருக்கும் மல்லனகவுடா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் பெரியோர்கள் முன்னிலையில் கடந்த மாதம் (செப்டம்பர்) 24-ந் தேதி குஷ்டகி தாலுகா புரா கிராமத்தில் உள்ள சோம்நாத் கோவிலில் வைத்து நடந்தது.

    இந்த திருமணத்தை தொடர்ந்து காயத்ரி-மல்லனகவுடாவின் முதலிரவுக்கு முகூர்த்தம் குறிக்கப்பட்டது. அதன்படி கடந்த 7-ந் தேதி அவர்களின் முதலிரவு குடூரு கிராமத்தில் உள்ள காயத்ரியின் வீட்டில் வைத்து நடைபெறுவதாக இருந்தது.

    இதற்கான வேலைகளை அவர்களின் குடும்பத்தினர் மேற்கொண்டு இருந்தனர். மல்லனகவுடாவும், காயத்ரியும் முதலிரவுக்கு தயாராகினர். இந்த வேளையில், மல்லனகவுடா கழிவறைக்கு சென்றார். அப்போது, திடீரென்று வீட்டுக்குள் நுழைந்த 7 பேர் கும்பல் காயத்ரியை வீடு புகுந்து கடத்தி காரில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மல்லனகவுடா மற்றும் அவருடைய குடும்பத்தினர் காயத்ரியை தேடிப்பார்த்தனர். ஆனால், எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் புதுப்பெண் காயத்ரியை, சோமனாலா கிராமத்தை சேர்ந்த அஞ்சுகுமார் ரெட்டி உள்பட 7 பேர் சேர்ந்து கடத்தி சென்றுள்ளதாக காரடகி போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காயத்ரியையும், அவரை கடத்திய மர்மநபர்களையும் தேடிவந்தார்கள்.

    இந்த நிலையில், வழக்கு விசாரணையில் போலீசார் அலட்சியம் காட்டுவதாக கணவர் மல்லனகவுடா மற்றும் காயத்ரியின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இந்த குற்றச்சாட்டை கொப்பல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரேணுகா சுகுமார் மறுத்தார்.

    இதுபற்றி அவர் கூறுகையில், ‘கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் வழக்கில் முக்கிய தகவல் கிடைத்துள்ளது. இந்த வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. காதல் விவகாரம் அல்லது திருமணம் பிடிக்காததால் மாயமாகி இருக்கலாம். இந்த வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.’ என்றார்.

    இந்த நிலையில், கடத்தப்பட்டதாக கூறப்படும் காயத்ரி, அஞ்சுகுமாருடன் நேற்று மாலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார். பின்னர், அவர் சம்பவம் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ரேணுகா சுகுமாரிடம் கூறினார். அப்போது அவர் கூறியதாவது:-

    என்னை யாரும் கடத்தவில்லை. எனது விருப்பத்தின் படியே அஞ்சுகுமாருடன் சென்றேன். நானும், அஞ்சுகுமாரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இதுபற்றி அறிந்த எனது குடும்பத்தினர் தாலியை கழற்றி எறிந்துவிட்டு உறவினர் மல்லனகவுடாவுடன் கட்டாய திருமணம் செய்து வைத்தனர். இந்த திருமணத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.

    எனது பிடிவாதத்தால் முதலிரவை குடும்பத்தினர் தள்ளிவைத்தனர். இருப்பினும், கடந்த 7-ந் தேதி அவர்கள் முதலிரவுக்கு முகூர்த்தம் குறித்தனர். இதனால் அஞ்சுகுமாரை போன் செய்து வரவழைத்து அவருடன் சென்றேன். என்னை எனது முதல் கணவர் அஞ்சுகுமாருடன் சேர்த்து வைக்க வேண்டும். எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மல்லனகவுடாவுடன் நான் செல்லமாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காயத்ரியின் கோரிக்கையை கேட்ட போலீஸ் சூப்பிரண்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த விவகாரம் கொப்பலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  #WomanMissing

    சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் இளம்பெண் கொடுத்த புகாரின்பேரில், மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி முன்னிலையில் காதலனுடன் இளம்பெண்ணுக்கு திருமணம் நடந்தது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை ராதாபுரத்தை சேர்ந்தவர் குலாப்ஜான். இவரது மகன் முகமது (வயது 25). இவரும், அதே பகுதியை சேர்ந்த முகமதுவின் மகள் சாயின் (20) என்பவரும் காதலித்து வந்தனர். இதையடுத்து அவர்களது பெற்றோர்கள் கடந்த 2015-ம் ஆண்டு காதலர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் செய்து வைத்தனர். இதையடுத்து முகமது குவைத்திற்கு வேலைக்கு சென்றார்.

    2 ஆண்டுகள் அங்கு வேலை செய்துவிட்டு கடந்த 2017-ம் ஆண்டு திருவண்ணாமலைக்கு திரும்பினார். இதையடுத்து மீண்டும் இவர்கள் இருவரும் பழகி உள்ளனர். அப்போது முகமது ஆசை வார்த்தை கூறி சாயினிடம் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் பல்வேறு காரணங்களை முகமது கூறி சாயினை திருமணம் செய்து கொள்ள மறுத்து உள்ளார். இதையடுத்து சாயின், தன்னை முகமது திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக தண்டராம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமதுவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

    இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) பெங்களூருவில் முகமதுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக சாயினுக்கு தகவல் கிடைத்தது.

    இதுகுறித்து சாயின், வக்கீல் ராஜசேகர் மூலம் திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் புகார் மனு அளித்தார். இந்த புகார் மனு குறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான மகிழேந்தி மற்றும் சார்பு நீதிபதி ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலையில் இருதரப்பையும் அழைத்து விசாரணை நடத்தப்பட்டது.

    இதையடுத்து இருதரப்பையும் சமரசம் செய்து முகமதுவுக்கும், சாயினிற்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி முன்னிலையில் ஜமாத் முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது. பின்னர் மணமக்களை நீதிபதிகள் வாழ்த்தினர்.

    சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் இதுபோன்று திருமணம் செய்து வைப்பது இதுவே முதல்முறை என்று நீதிமன்ற வட்டாரத்தில் கூறப்பட்டது.
    வடமதுரை போலீஸ் நிலையத்தில் கல்லூரி மாணவியை திருமணம் செய்த காதலன் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே உள்ள ஆர்.வெள்ளோடு நொச்சிபட்டியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 25). சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் நதியா (23). எம்.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி கோவையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பெற்றோருக்கு பயந்து நண்பர் வீட்டில் தங்கி இருந்த காதல் ஜோடி இன்று வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்ச மடைந்தனர். போலீசார் இரு தரப்பு பெற்றோரையும் வரவழைத்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இளம்பெண்கள் அதிகளவில் காதலனுடன் ஓட்டம் பிடிப்பதால் வேலைக்கு அனுப்ப பெற்றோர் தயங்கி வருகின்றனர்.

    வடமதுரை:

    வடமதுரை, அய்யலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மில்கள் உள்ளன. இங்கு கிராமங்களை சேர்ந்த இளம்பெண்கள் வேலைக்கு வந்து செல்கின்றனர். மில்லில் வேலை பார்க்கும் வாலிபர்கள் மற்றும் வேன் டிரைவர்கள் இளம்பெண்களிடம் ஆசைவார்த்தை காதல் வலை வீசுகின்றனர்.

    பருவவயது என்பதால் பெண்களும் இளைஞர்களின் காதல் வலையில் விழுந்துவிடுகின்றனர். இதேபோல் அய்யலூர் பகுதியில் உள்ள பள்ளியில் இருந்து மாணவிகள் அதிகளவில் மாயமாகின்றனர். பின்பு காதலனுடன் திருமணம் செய்து கொண்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைகின்றனர். இளம் வயது என்பதால் எதிர்கால வாழ்க் கைப்பற்றி சிந்திக்காமல் காதல் வயப்படுகின்றனர்.

    இதனைபயன்படுத்தி ஒரு சில வாலிபர்கள் தங்களின் ஆசை தீர்ந்தவுடன் அப்பெண்களை ஏமாற்றிச்செல்கின்றனர். இதனால் விரக்கியடைந்து தற்கொலை முடிவுக்கும் பெண்கள் செல்கின்றனர்.

    இளம்பெண்கள் மாயமாவதும், பின்பு காதலனுடன் தஞ்சமடைவதும் தொடர்கதையாகி வருவதால் பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளை வேலைக்கு அனுப்ப தயக்கம் காட்டி வருகின்றனர். குடும்ப வறுமை காரணமாக வேலைக்கு செல்லும் பெண்களை ஒருசில வாலிபர்கள் ஏமாற்றிச் செல்கின்றனர். எனவே வேலைக்கு செல்லும் இடங்களில் பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்க நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    கடலூர் அருகே திருமணம் செய்ய மறுத்ததால் காதலன் வீட்டு முன்பு அமர்ந்து காதலி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூர்:

    கடலூர் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகள் சிவகலா (வயது 25). கடலூர் அருகே உள்ள கிழக்கு ராமாபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (30). விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். ராஜ்குமாரும் சிவகலாவும் காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் சிவகலாவுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவரது பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினர். இதனால் சிவகலா தனது காதலன் ராஜ்குமாரிடம் தன்னை உடனே திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று வற்புறுத்தினார். ஆனால் அவர் திருமணம் செய்ய முடியாது என்று கூறி மறுத்து விட்டார். தன்னை காதலித்து விட்டு ராஜ்குமார் திருமணம் செய்ய மறுக்கிறாரே என்று எண்ணி சிவகலா மனம் வருந்தினார்.

    இது குறித்து சிவகலா கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில், நானும், ராஜ்குமாரும் கடந்த 2010-ம் ஆண்டு முதல் காதலித்து வந்தோம். அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி வந்தார். இப்போது என்னிடம் பேச கூட மறுக்கிறார் என்று தெரிவித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக விசாரணைக்கு வருமாறு ராஜ்குமாருக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் விசாரணைக்கு வரவில்லை.

    இதையடுத்து சிவகலா நேற்று ராமாபுரத்தில் உள்ள தன் காதலன் ராஜ்குமார் வீட்டுக்கு சென்றார். அங்கு வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து காதலன் வீட்டின் முன்பு அமர்ந்து சிவகலா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவர் இரவு வரை தர்ணா செய்தார். இந்த சம்பவம் ராமாபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திண்டுக்கல்லில் காதலித்து ஏமாற்றிய வாலிபர் வீட்டு முன்பு வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல்-நத்தம் நம்பிக்கோட்டை பகுதியை சேர்ந்த திருப்பதி மகள் ராஜேஸ்வரி (வயது23). இவர் அதே பகுதியை சேர்ந்த சக்திவடிவேல் (25) என்பவரை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளார்.

    இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சென்று வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சக்திவடிவேல் தனது காதலியை பார்ப்பதை தவிர்த்து வந்துள்ளார். அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

    ஆனால் அதற்கு அவர் மறுத்ததோடு இனிமேல் தனக்கு போன் செய்ய வேண்டாம் என மிரட்டி உள்ளார்.

    இதனால் வேதனை யடைந்த ராஜேஸ்வரி இன்று காலை தனது காதலன் வீட்டுக்கு வந்தார். அவரை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்துள்ளனர். இதனால் தான் கொண்டு வந்த வி‌ஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் இது குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து ராஜேஸ்வரியை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தக்கலையில் காதலனுடன் சுற்றி திரிந்த பிளஸ் 1 மாணவியை உறவினர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
    தக்கலை:

    தக்கலை பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி நேற்று முன்தினம் திடீரென மாயமானார். அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து மாணவியின் தாயார் தக்கலை போலீஸ் நிலையத்தில் தன் மகள் காணாமல் போய் விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தரும்படியும் கூறி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அந்த மாணவியை தேடி வந்தனர். 

    இந்தநிலையில் நேற்று அந்த மாணவி, அவரது தாயாருக்கு செல்போனில் பேசினார். அப்போது தனது காதலனுடன் தான் சென்றதாக தெரிவித்தார். தாயார் தொடர்ந்து அவரிடம் கனிவாக பேசியதில் அவர் வீடு திரும்ப சம்மதித்தார். அதன்படி தக்கலை ஆஸ்பத்திரி அருகே வருவதாக மாணவி தெரிவித்தார். 

    உடனே மாணவியின் உறவினர்களும், போலீசாரும் அங்கு காத்திருந்தனர். மாணவி தனது காதலருடன் மோட்டார் சைக்கிளில் வந்திறங்கினார். அவரை உறவினர்களும், போலீசாரும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். மாணவியை அழைத்துச் சென்ற வாலிபர் மணவாளக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர். 
    அவரும், மாணவியும் மைனர் என்பதால் அவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். 
    ×