search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மம்தா"

    போட்டோ ஷாப் முறையில் மம்தாவின் மார்பிங் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததாக கைதான பெண்ணின் ஜாமின் மனு மீது நாளை சுப்ரீம் கோர்ட் விசாரணை நடத்தவுள்ளது.
    புதுடெல்லி:

    மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா  பானர்ஜியை மிகவும் விகாரமாக சித்தரித்து சில நாட்களாக பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட  சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் வைரலாக பரவியது.

    இந்த புகைப்படத்தை பகிர்ந்ததாக பாஜக இளைஞரணியான யுவ மோர்ச்சாவை சேர்ந்த ஹவுரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா சர்மா என்ற பெண்ணை தாஸ்நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 14 நாள் நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.



    இந்த கைது நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்த  பிரியங்கா சர்மாவின் தாயார், ‘அனைவரையும்போல் என் மகளும் இதை ‘ஷேர்’ செய்துள்ளார். ஆனால், அவர் எதிர்க்கட்சியை சேர்ந்தவர் என்பதால் அரசியல் நோக்கத்துடன் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்’ என குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில்,  பிரியங்கா சர்மாவை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் அவரது வழக்கறிஞர் என்.கே.கவுல் தாக்கல் செய்த மனு விடுமுறைக்கால நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சிவ் கண்ணா ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. இவ்விவகாரத்தை அவசர வழக்காக அனுமதித்து விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.

    இதைதொடர்ந்து, இந்த ஜாமின் மனுவின் மீது நாளை விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
    இலங்கையின் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்ததாக இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். #SriLankanblasts #VenkaiahNaidu
    புதுடெல்லி:

    இலங்கையின் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்ததாக இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். 

    அப்பாவி மக்கள் பலியான செய்தி கேட்டு வருந்துவதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். மேற்கு வங்காள முதல்- மந்திரி மம்தாவும் இரங்கல் தெரிவித்துள்ளார். #SriLankanblasts #VenkaiahNaidu
    பாராளுமன்ற தேர்தலில் வெளிநாட்டினர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக இங்கு தேர்தல் பிரசாரம் செய்வது வெட்கக்கேடானது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #LSpolls2019 #Mamata #TMC #Modi
    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள புனியாட்பூரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

    அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநிலத்தில் ஆளும்  திரிணாமுல் காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்த மோடி, மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் இங்குள்ள மக்களை வந்தடையாதவாறு உங்கள் முதல் மந்திரி தடைக்கல்லாக இருந்து வருகிறார் என்றும் குற்றம்சாட்டினார்.



    மாநிலத்தின் பல பகுதிகளில் பாஜக தொண்டர்களுக்கு எதிரான அராஜகத்தை மம்தா கட்டவிழ்த்து விடுவதாக குறிப்பிட்ட அவர், குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என எச்சரித்தார்.

    மேலும், அண்டைநாடான வங்காளதேசத்தில் மிகவும் பிரபலமான நடிகர்கள் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ததை சுட்டிக்காட்டிய மோடி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக வெளிநாட்டினர் இங்கு வந்து தேர்தல் பிரசாரம் செய்வது வெட்கக்கேடானது என்றும் குறிப்பிட்டார்.

    இங்கு நடந்து முடிந்த இருகட்ட வாக்குப்பதிவால் மம்தா தூக்கத்தை தொலைத்து தவிக்கிறார். எனவே, வெளிநாட்டில் பிரபலமானவர்களை வைத்து சிறுபான்மையினத்தவர்களின் ஓட்டுகளை கவர்ந்து விடலாம் என்ற கற்பனையில் மம்தா மிதக்கிறார் என்றும் மோடி தெரிவித்தார். #LSpolls2019 #Mamata #TMC #Modi
    ராணுவ வீரர்கள் மற்றும் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்களின் பெயரால் ஓட்டு கேட்பதற்கு பிரதமர் மோடி வெட்கப்பட வேண்டும் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார். #Modiashamed #votesinname #nameofsoldiers #Mamata
    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி மேற்கு வங்காளம் மாநிலம், உட்டர் தினஜ்பூர் மாவட்டம், இஸ்லாம்பூர் பகுதியில் அம்மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று தனது வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பிரசாரம் செய்தார்.

    கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது அயோத்தியில் ராமர் கோவிலை கட்டாத பாஜக அரசு ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும் அயோத்தி பிரச்சனையை மையமாக வைத்து மக்களை முட்டாள்களாக்க முயற்சிப்பதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.

    இப்போது ராணுவ வீரர்கள் மற்றும் நாட்டுக்காக உயிர்நீத்த தியாகிகளை சொந்தம் கொண்டாடி வரும் மோடி அவர்களின் பெயரால் மக்களிடம் ஓட்டு கேட்டு வருகிறார். இதற்காக அவர் வெட்கப்பட வேண்டும்.

    நமது நாட்டு முப்படையினர் நம் அனைவருக்குமே சொந்தமானவர்கள். அவர்களால் நமக்கு பெருமை, பெருமிதம். ராணுவ வீரர்கள் அனைவருமே தனக்கு மட்டுமே சொந்தம் என்பதுபோல் பேசிவரும் மோடி, போதுமான உளவுத்துறை தகவல் இருந்தும், எச்சரிக்கை விடுக்கப்பட்டும் புல்வாமா தாக்குதலில் இருந்து நமது வீரர்களை பாதுகாக்க தவறியது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் எனவும் மம்தா வலியுறுத்தினார். #Modiashamed #votesinname #nameofsoldiers #Mamata
    பாராளுமன்ற தேர்தலின் மூலம் ஆட்சியை விட்டும் அரசியலை விட்டும் நரேந்திர மோடி தூக்கி எறியப்பட வேண்டும் என மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். #LokSabhaElections2019 #Mamata #Modi #throwModi
    கொல்கத்தா:

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி அம்மாநிலத்தின் ஜல்பைகுரி மாவட்டம், நக்ரக்கட்டா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் இன்று உரையாற்றினார்.

    பிரதமர்  நரேந்திர மோடி தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தில் நான்கரை ஆண்டு காலத்தை வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் கழித்து விட்டார். விவசாயிகள், ஏழை, நடுத்தர மக்களின் பிரச்சனைகளை கவனிக்க அவருக்கு நேரம் இருந்தது இல்லை என குற்றம்சாட்டினார்.

    ‘கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட வேளையிலும், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பலர் உயிரிழந்தபோதும், பல கோடி பேர் வேலைவாய்ப்புகளை இழந்தபோதும் அவர் எங்கே போய் இருந்தார்?



    தேர்தல் நெருங்குவதால் இப்போது உங்கள் வீட்டின் கதவை ஓட்டுக்காக தட்டும் அவர், வாய்க்கு வந்த பொய்களை எல்லாம் உளறிக்கொண்டிருக்கிறார். ஆட்சி, அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறார். பொய் பேசுவதற்கு ஒரு போட்டி வைத்தால் மோடிக்குதான் முதல் பரிசு கிடைக்கும். இந்த தேர்தலிலும் பொய் பேசாதவாறு மோடியின் வாயை ஒட்டிவைக்க வேண்டும்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் நமது  நாட்டின் நலன் கருதி ஆட்சியை விட்டும் அரசியலை விட்டும் நரேந்திர மோடி தூக்கி எறியப்பட வேண்டும்’ எனவும் மம்தா தெரிவித்தார். #LokSabhaElections2019 #Mamata #Modi #throwModi 
    துரைமுருகன் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதற்கு திரிணாமூல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. #duraimurugan #mamata #incometaxraid
    கொல்கத்தா:

    வேலூர் மாவட்டம் காட்பாடி - காந்திநகரில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டுக்கு நேற்றிரவு 10.30 மணிக்கு வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் சோதனை நடத்துவதற்காக வந்தனர். அப்போது அங்கிருந்த திமுக தொண்டர்கள், சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சுமார் 4 மணி நேரத்திற்குப் பிறகு, துரைமுருகனின் வீட்டில் சோதனை தொடங்கியது. அங்கிருந்த துரைமுருகனின் கார் உள்ளிட்ட வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. 

    இதனுடன் அவரது மகனும் தி.மு.க. சார்பில் வேலூர் மக்களவை தொகுதியின் வேட்பாளராக போட்டியிடும் கதிர் ஆனந்துக்கு சொந்தமான காட்பாடி கிருஸ்தியான்பேட்டையில் உள்ள கல்லூரி மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் துரைமுருகன் இல்லத்தில் இருந்து ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என வருமான வரிதுறை தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தின் கல்லூரி, சி.பிஎஸ்.இ பள்ளியில் வருமானவரிதுறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி திமுக பொருளார் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அக்கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில், மேற்கு வங்கம், டெல்லி,  உத்தரபிரதேசம், ஆந்திரா, பீகார், கார்நாடகா ஆகிய மாநிலங்களில் எதிர்கட்சியினர் மீது வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதனைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலும் அந்த வகை சோதனைகள் நடைபெற்றுள்ளது.

    அரசியல் காரணங்களுக்காக இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுவதை  திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மேற்குவங்கம் மற்றும் கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் பழிவாங்கும் நடவடிக்கை தொடர்வதாக திரிணாமூல் காங்கிரஸ் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. #duraimurugan #mamata #incometaxraid
    திரிணாமுல் காங்கிரஸ் இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலைஉறுதி திட்டம் 200 நாட்களாக அதிகரிக்கப்படும். சம்பளமும் இருமடங்காக உயர்த்தப்படும் என திரிணாமுல் காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. #TMCmanifesto #100dayswork
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பாராளுமன்ற தேர்தலுக்கான தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை கொல்கத்தா நகரில் இன்று வெளியிட்டார்.

    இந்த தேர்தல் அறிக்கையில் வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு கவர்ச்சிகரமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

    எதிர்க்கட்சிகள் தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்தால் 100 நாள் வேலைஉறுதி திட்டம் 200 நாட்களாக அதிகரிக்கப்படும். சம்பளமும் இருமடங்காக உயர்த்தப்படும். பிரதமர் மோடியால் கொண்டுவரப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் பின்னணி தொடர்பாக விசாரணை நடத்தப்படும்.

    மோடி அரசால் ஒழிக்கப்பட்ட மத்திய திட்ட கமிஷனுக்கு புத்துயிர் அளிக்கப்படும். உபயோகமற்ற நிதி ஆயோக் ஒழிக்கப்படும். தற்போதைய ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை சீராய்வு செய்யப்படும். மக்களுக்கு பயனளிப்பதாக இருந்தால் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. #TMCmanifesto #100dayswork
    சிபிஐ நடவடிக்கையைக் கண்டித்து கொல்கத்தாவில் தர்ணா போராட்டம் நடத்தி வரும் முதல்வர் மம்தா பானர்ஜி, போராட்டத்திற்கு மத்தியிலும் அரசுப் பணிகளை கவனித்து வருகிறார். #MamataDharna #CBI #CBIvsMamata
    கொல்கத்தா:

    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்துவதற்கு வந்த சிபிஐ அதிகாரிகளை  போலீசார் சிறைப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது. போலீஸ் கமிஷனர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து தடைகளை ஏற்படுத்துவதாகவும், அவரை விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி உத்தரவிட வேண்டும் எனவும் சிபிஐ கூறியுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

    இதற்கிடையே, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சிபிஐ வந்ததற்கு எதிராக மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, 3-ம் தேதி முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 8-ம் தேதி வரை போராட்டத்தை தொடரப்போவதாக அறிவித்துள்ளார்.

    கொல்கத்தா மெட்ரோ சேனல் அருகே சாலையில் அமர்ந்து தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மம்தா பானர்ஜிக்கு, எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இந்த போராட்டத்திற்கு மத்தியிலும் அரசுப் பணிகளை மம்தா பானர்ஜி கவனித்து வருகிறார். தர்ணா போராட்ட பந்தல் அருகே உள்ள புறக்காவல் நிலையம், மாநாட்டு அறையாக மாற்றப்பட்டுள்ளது. நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக, இந்த அரங்கில் மம்தா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. சுமார் 20 நிமிடம் நடைபெற்ற இந்த கூட்டம் நிறைவடைந்ததும், தர்ணா பந்தலுக்கு வந்து போராட்டத்தை தொடர்ந்தார் மம்தா. மேற்கு வங்க வரலாற்றில் முதல் முறையாக சாலையோரம் அமைச்சரவை கூட்டம் நடந்துள்ளது.



    போராட்டத்தின் இடையே போலீசாருக்கு வீரதீர செயல்களுக்கான விருதுகளை மம்தா வழங்கினார். தலைமைச் செயலாளர் கொண்டு வந்திருந்த பல்வேறு அரசுத்துறை சம்பந்தப்பட்ட கோப்புகளிலும் கையெழுத்திட்டார்.

    விவசாயிகள் பொதுக்கூட்டத்தில் வீடியோ கால் மூலம் உரையாற்றினார். இந்த பொதுக்கூட்டம், மம்தாவின் தர்ணா நடைபெறும் இடத்தில் இருந்து சில கி.மீ தொலைவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. #MamataDharna #CBI #CBIvsMamata
    மேற்கு வங்காள நிலவரம் அபாயகரமாக உள்ளது. மம்தா பானர்ஜி, சி.பி. ஐ.யை செயல்பட விட வேண்டும் என்று ராஜ்நாத்சிங் வலியுறுத்தினார். #MamataBanerjee #RajnathSingh
    புதுடெல்லி:

    நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்தவுடன், மேற்கு வங்காள பிரச்சினையை திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சவுகதா ராய் எழுப்பினார். அவருக்கு பிஜூ ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

    அதற்கு பதில் அளித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கூறியதாவது:-

    கொல்கத்தா போலீஸ் கமிஷனருக்கு எதிராக சி.பி.ஐ. அதிகாரிகள் செயல்பட்டனர் என்று உடனடியாக முடிவுக்கு வந்து விடுவது தவறு. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகே இந்த வழக்கை சி.பி.ஐ. எடுத்துக் கொண்டது.



    போலீஸ் கமிஷனருக்கு பலதடவை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. அவர் ஒத்துழைக்காததால்தான், சி.பி.ஐ. இந்த நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

    ஆனால், சி.பி.ஐ. அதிகாரிகளை கொல்கத்தா போலீசார் சுற்றி வளைத்து, பணி செய்யவிடாமல் தடுத்தது, அரசியல் சட்ட சீர்குலைவுக்கு வழிவகுத்துள்ளது.

    மேற்கு வங்காளத்தில் நடந்தவை அனைத்தும் முன்எப்போதும் இல்லாதது. அங்குள்ள நிலவரம் அபாயகரமானது. முதல்-மந்திரியே போராட்டம் நடத்துவதால், குழப்பநிலையை நோக்கி நிலைமை சென்றுள்ளது.

    மாநில அரசின் உரிமைகளை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், அங்குள்ள நிலைமை, அரசியல் சட்ட எந்திர சீர்குலைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நாட்டின் எந்த பகுதியிலும் இயல்பு நிலையை உண்டாக்க நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய அரசுக்கு உரிமை உள்ளது.

    நாட்டின் விசாரணை அமைப்புகளுக்கிடையே ஏற்பட்டுள்ள மோதல், கூட்டாட்சி முறைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, சி.பி.ஐ. தங்கள் கடமையை செய்ய விடுமாறு மம்தா பானர்ஜி அரசை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார்.

    இதற்கிடையே, மம்தா பானர்ஜி தர்ணா குறித்து மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    இது, நரேந்திர மோடியின் நெருக்கடி நிலை அல்ல, மம்தா பானர்ஜியின் நெருக்கடி நிலை. சி.பி.ஐ.யிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள மம்தா தர்ணா போராட்டம் நடத்துகிறார்.

    அங்கு சட்டம்-ஒழுங்கும், அரசியல் சட்ட ஒழுங்கும் முற்றிலும் சீர்குலைந்து விட்டது. இருப்பினும், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறு இப்போதைக்கு கேட்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    மேற்கு வங்காளம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் எம்.பி. மவுசம் பெனாசிர் நூர் இன்று மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். #CongressMP #MausamNoor #TrinamoolCongress
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் கடந்த 19-ம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலும் இருந்து 22 முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று பேசினர். பல லட்சக்கணக்கான மக்கள் இந்த கூட்டத்துக்கு வந்திருந்தனர்.

    இந்த கூட்டத்தால் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் முகாமில் சற்று சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக வடநாட்டு ஊடகங்கள் விமர்சித்திருந்தன. 

    இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் பெண் எம்.பி.யான மவுசம் பெனாசிர் நூர் இன்று மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    சட்டம் பயின்ற பட்டதாரியான மவுசம், மேற்கு வங்காளம் மாநிலத்துக்குட்பட்ட சுஜாப்பூர் சட்டசபை தொகுதி பெண் உறுப்பினராக மூன்றுமுறை வெற்றிபெற்ற ருபி நூர் என்பவரின் மகளாவார்.

    மேற்கு வங்காளம் மாநிலத்தின் காங்கிரஸ் இளைஞர் அணி தலைவராக முன்னர் பொறுப்பு வகித்த மவுசம் பெனாசிர் நூர், தனது தாயாரின் மறைவுக்கு பின்னர் சுஜாப்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அதன் பின்னர் மல்தாஹா உட்டார் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இருமுறை போட்டியிட்டு வெற்றிபெற்ற மவுசம் பெனாசிர் நூர்(39)  இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #CongressMP #MausamNoor #TrinamoolCongress 
    எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் 14 மாநிலங்களில் போட்டியிடுவோம் என மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது. #TMC #LokSabhaelections #DerekObrien
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் கடந்த 19-ம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், நாடு முழுவதிலும் இருந்து 22 முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று பேசினர். 

    இந்த கூட்டத்தால் பா.ஜ.க. முகாமில் சற்று சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக வடநாட்டு ஊடகங்கள் விமர்சித்திருந்தன.

    இந்நிலையில், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் 14 மாநிலங்களில் போட்டியிடுவோம் என மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது.

    கொல்கத்தா நகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மூத்த தலைவர் டெரெக் ஓ பிரயன், ‘கடந்த 19-ம் தேதி மம்தா தலைமையில் நாட்டில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் திரண்ட நாள் இந்திய அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத நாளாக அமையும்’ என்று குறிப்பிட்டார்.

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளிலும்  அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். ஒடிசா உள்பட 14 மாநிலங்களிலும் இந்த தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார். #TMC #LokSabhaelections #DerekObrien
    வரும் பாராளுமன்ற தேர்தலில் 22 கட்சிகள் மெகா கூட்டணியாக மாறி பாஜகவை வீழ்த்துமா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. #ParliamentElection #PMModi

    புதுடெல்லி:

    கொல்கத்தாவில் முதல்- மந்திரி மம்தா பானர்ஜி 22 கட்சி தலைவர்களை திரட்டி ஒட்டு மொத்த நாட்டின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து விட்டார்.

    இதில் பேசிய தலைவர்கள் அனைவரும் பிரதமர் மோடியையும், பா.ஜனதாவையும் கடுமையாக தாக்கிப் பேசினார்கள். ஒட்டு மொத்த மோடி எதிர்ப்பு கூட்டமாகவே இது நடத்தப்பட்டது.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று காங்கிரஸ் கூறி வந்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெங்களூர் மற்றும் சென்னையில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்.

    எதிர்க்கட்சி கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்த போது தேர்லுக்குப் பின் அது பற்றி முடிவு செய்யலாம் என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்தது.

    இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் மாயாவதியும், அகிலேஷ் யாதவும் சேர்ந்து தனியாக ஒரு கூட்டணி அமைத்தனர். இதில் காங்கிரஸ் சேர்க்கப்பட வில்லை. இதன் மூலம் பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கு எதிரான புதிய கூட்டணியாக இது அமைந்தது. இதனால் காங்கிரஸ் அதிருப்தி அடைந்தது.

    மாயாவதி- அகிலேஷ் கூட்டணிக்கு மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிலையில் மாயாவதியை பிரதமர் ஆக்குவோம் என்று அகிலேஷ் யாதவ் அறிவித்தார். இதன் மூலம் மாயாவதி பிரதமர் பதவி மீது குறிவைத்து காய் நகர்த்துவது தெரியவந்தது.

    இதையடுத்து மம்தா பானர்ஜியும் கொல்கத்தாவில் தனியாக நேற்று எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்று திரட்டினார். தனக்கும் பிரதமராகும் தகுதி உள்ளது என்பதை எடுத்துக்காட்டவே எதிர்க்கட்சி தலைவர்களை மம்தாபானர்ஜி திரட்டியதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

    இதை அறிந்துதான் அகிலேஷ் யாதவ் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் மாயாவதி கலந்து கொள்ளவில்லை. அதை வெளிக்காட்டாமல் இருக்க தனது கட்சி சார்பில் பிரதிநிதியை அனுப்பிவைத்தார்.

    இதேபோல் ராகுல் காந்தியும் மம்தாபானர்ஜி கூட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் காங்கிரஸ் பிரதிநிதிகளை அனுப்பிவைத்தார். இதனால் எதிர்க்கட்சி தலைவர்களிடையே ஒற்றுமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    பிரதமர் யார் என்ற கேள்வி இப்போதைக்கு எழவில்லை. பா.ஜனதாவை வீழ்த்தவே இந்த கூட்டணி என்று திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.

    மம்தா கூட்டிய கூட்டத்தில் உள்ளூர் அரசியல் இருப்பதாகவும் கருதப்படுகிறது. மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜிக்கு எதிராகவும், பா.ஜனதாவுக்கு எதிராகவும் காங்கிரஸ்- கம்யூனிஸ்டு கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இது மம்தாவுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    இதற்கிடையே மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் பிரதமராக வேண்டும் அதற்கான தகுதி மம்தா பானர்ஜிக்கு இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகிறார்கள். இந்த கோ‌ஷம் மேற்கு வங்காள வாக்காளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

    இதையடுத்துதான் தனது பக்கம் தேசிய அளவில் எதிர்க்கட்சி தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டவும், இதன் மூலம் கம்யூனிஸ்டு கூட்டணியை முறியடித்து உள்ளூர் வாக்காளர்களிடம் ஆதரவை பெறலாம் என்ற எண்ணத்திலும் இந்த கூட்டத்தை கூட்டியதாக கூறப்படுகிறது. #ParliamentElection #PMModi

    ×