search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரங்கல்"

    வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆளான சோமாலியா மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் வழங்கப்படுவதுடன், அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என ஐநா பொது செயலாளர் ஆண்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். #SomaliaBlasts #AntonioGuterres
    ஐக்கிய நாடுகள்:

    சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள பிரபல உணவகமான சஹாபி அருகே நேற்று அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. 3 கார்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்து சிதறியதால் அப்பாவி பொதுமக்கள், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் என மொத்தம் 20 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆளான சோமாலியா மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் வழங்கப்படுவதுடன், அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என ஐநா பொது செயலாளர் ஆண்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். 



    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சோமாலியா நாட்டில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதுபோன்ற தாக்குதலால் சோமாலியா மக்களை அச்சுறுத்தி விடமுடியாது. வெடிகுண்டு தாக்குதலால் அவதிப்பட்டு வரும் அந்நாட்டு அரசுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபை என்றும் உறுதுணையாக நிற்கும். மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் அளிக்கும் என தெரிவித்துள்ளார். #SomaliaBlasts #AntonioGuterres
    இந்தோனேசியா விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். #Indonesianplanecrash #LionAirplanecrash #Modi
    ஜகர்தா:

    இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் இருந்து சுமத்ரா தீவில் உள்ள பங்க்கால் பினாங்கு நகருக்கு இன்று காலை 6.20 மணிக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.
      
    “லயன் ஏர் பேசஞ்சர்ஸ்” எனும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் 210 பேர் பயணம் செய்யும் வசதி கொண்டது. இன்று அந்த விமானத்தில் மொத்தம் 189 பேர் சென்றனர். அவர்களில் 178 பேர் பெரியவர்கள், ஒரு சிறுவன், 2 கைக்குழந்தைகள், 2 விமானிகள், 5 பணிப்பெண்கள் இருந்தனர்.

    ஜகர்தாவில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் 13-வது நிமிடத்தில் திடீரென மாயமானது. அந்த விமானத்துக்கும், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அறைக்குமான தகவல் தொடர்பு முழுமையாக துண்டிக்கப்பட்டது.



    தகவலறிந்த மீட்புக் குழுவினர் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். விமானம் விபத்துக்குள்ளாகி அனைவரும் பலியானதாக அவர்கள் தெரிவித்தனர். விபத்துக்குள்ளான அந்த விமானத்தை பவ்யே சுனேஜா (31) என்ற இந்திய விமானி ஓட்டிச் சென்றார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    இந்நிலையில், இந்தோனேசியா விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தோனேசியா விமான விபத்தில் பலியானோரின் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரில் இருந்து அவர்கள் மீண்டு வருவதற்கான பலத்தையும், தைரியத்தையும் அளிக்க இறைவனிடம் வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார். #Indonesianplanecrash #LionAirplanecrash #Modi
    பஞ்சாப் ரெயில் விபத்தில் 61 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார். #AmritsarTrainAccident
    மாஸ்கோ:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே சவுர பஜார் பகுதியில் நேற்று இரவு தசரா விழா கோலகமால கொண்டாடப்பட்டது. அப்போது ராவணனின் கொடும்பாவியை எரிக்கும் நிகழ்ச்சியின் போது, எதிர்ப்பாராதவிதமாக ஏற்பட்ட ரெயில் விபத்தில் 61 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    இந்த விபத்துக்கு  பிரதமர் மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பஞ்சாப் மாநில முதல்மந்திரி அம்ரிந்தர் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவியும் அறிவிக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட விபத்துக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட விபத்தில் 61 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும், இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இரங்கலை தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குறிப்பிட்டுள்ளார். #AmritsarTrainAccident
    உத்தரப்பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் பலியானோர் குடும்பத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளனர். #UPTrainDerailed #TrainAccident #SoniaGandhi #RahulGandhi
    புதுடெல்லி:

    மேற்கு வங்காள மாநிலம் மால்டா நகரில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் வழியாக டெல்லிக்கு ‘நியூ பராக்கா எக்ஸ்பிரஸ்’ ரெயில் நேற்று இரவு புறப்பட்டது. இன்று காலை உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் ஹர்சந்த்பூர் ரெயில்நிலையம் அருகே வேகமாக சென்று கொண்டிருந்த போது திடீரென ரெயில் தடம் புரண்டது.

    என்ஜின் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த 9 பெட்டிகளும் ஒன்றுடன் ஒன்று மோதி தடம் புரண்டு கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 7 பயணிகள் பலத்த அடிபட்டு இறந்தனர். மேலும் 30 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

    ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரெயில் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.



    இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

    உ.பி.யில் நடைபெற்ற ரெயில் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

    இதேபோல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில், உ.பி. ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு பணிகளில் மாநில அரசு விரைந்து ஈடுபட்டிருக்கும் என நம்புகிறேன். காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். #UPTrainDerailed #TrainAccident #SoniaGandhi #RahulGandhi
    ஜம்மு காஷ்மீரில் பேருந்து விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். #JammuKashmir #BusAccident #Modi
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச்சென்ற சிறிய ரக பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.  இந்த விபத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், பேருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.



    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வார் நகரில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது சோக நிகழ்வாகும். விபத்தில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பதிவிட்டுள்ளார். #JammuKashmir #BusAccident #Modi
    தெலுங்கானா மாநிலத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். #Telangana #BusAccident #Modi
    புதுடெல்லி:

    தெலுங்கானா மாநிலம் கொண்டாகட்டு மலைப்பகுதியில் பயணிகளுடன் வந்து கொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து, அந்த மலைப்பள்ளத்தாக்கில் அந்த பேருந்து கவிழ்ந்து விழுந்தது.
     
    விபத்து குறித்து தகவலறிந்த ஆம்புலன்ஸ் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டனர் இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 57 பேர் வரை இறந்துள்ளனர். விபத்தில் காயமடைந்து 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், பேருந்து விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், தெலுங்கானா பேருந்து விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். விபத்தில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் விபத்தில் காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார். #Telangana #BusAccident #Modi
    பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிபின் மனைவி குல்சூம் நவாஸ் மரணத்துக்கு வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார். #KulsumNawaz #SushmaSwaraj
    புதுடெல்லி:

    பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தற்போது அவென்பீல்டு ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். இவருடன் இவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தார் ஆகியோரும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
     
    இவரது மனைவி குல்சூம் நவாஸ் உடல்நலக்குறைவால் தற்போது உயிரிழந்தார். 68 வயதான இவர், கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இவரது உடல்நலக்குறைவை காரணம் காட்டியே நவாஸ் ஷரிப்பும், மகள் மரியமும் ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் லண்டனில் இருந்தது குறிப்பிடத்தக்கது.



    இந்நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிபின் மனைவி குல்சூம் நவாஸ் மரணத்துக்கு வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் மனைவி குல்சூம் நவாஸ் இறந்தது அறிந்து வருத்தமடைந்தேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளேன். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். #KulsumNawaz #SushmaSwaraj
    வடசென்னை மாவட்ட அவைத் தலைவர் மறைவுக்கு ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #ADMK
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:-

    வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட அவைத் தலைவர் கோயில் பிள்ளை மாரடைப்பால் மரண மடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்.

    ஆரம்ப கால கழக உடன்பிறப்பு கோயில் பிள்ளை கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய சிறப்புக்குரியவர்.

    அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

    இவ்வாறு கூறியுள்ளனர். #ADMK
    நடிகர் ஹரிகிருஷ்ணாவின் மறைவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். #NandamuriHarikrishna #NTR
    ஐதராபாத்:

    ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி என்.டி.ராமராவின் மகனும், மாநிலத்தின் முன்னாள் மந்திரியுமான நடிகர் ஹரிகிருஷ்ணா நேற்று அதிகாலையில் நடந்த கார் விபத்தில் மரணமடைந்தார்.

    தெலுங்குதேசம் கட்சியின் நிறுவனரும், ஒன்றுபட்ட ஆந்திராவின் முன்னாள் முதல்-மந்திரியுமான என்.டி.ராமராவின் 4-வது மகன் நந்தமுறி ஹரிகிருஷ்ணா (வயது 61). திரைத்துறையிலும், தெலுங்குதேசம் கட்சியிலும் புகழ்பெற்று விளங்கிய இவர் ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் நேற்று நடந்த ரசிகர் ஒருவரின் திருமணத்துக்காக சொகுசு காரில் கிளம்பினார்.

    ஐதராபாத்தில் இருந்து மேலும் இருவருடன் காரில் புறப்பட்ட ஹரிகிருஷ்ணா, அண்டாங்கி-நார்கெட்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டினார்.

    தெலுங்கானாவின் நல்கொண்டா மாவட்டம் அன்னபார்திக்கு அருகே சென்ற போது, முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு வாகனத்தை முந்தி செல்ல முயன்றார் ஹரிகிருஷ்ணா. அப்போது திடீரென கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது.

    சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி பலமுறை உருண்டு, ரோட்டின் மறுபுறம் போய் விழுந்தது. அப்போது எதிர் திசையில் வந்த ஒரு மாருதி கார் மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது.

    இதில் காருக்குள் இருந்த ஹரிகிருஷ்ணாவுக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் காரில் இருந்த மற்ற இருவரும் காயமடைந்தனர்.



    உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து காருக்குள் இருந்த மூவரையும் மீட்டு நாகர்கெட்பள்ளியில் உள்ள காமினேனி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி ஹரிகிருஷ்ணா, காலை 7.30 மணியளவில் மரணமடைந்தார்.

    திருமணத்துக்கு தாமதமாக கிளம்பியதால் விரைவாக செல்ல வேண்டுமென எண்ணி ஹரிகிருஷ்ணா, காரை வேகமாக ஓட்டியதாக தெரிகிறது. அவர் 150 கி.மீ. வேகத்தில் சென்றிருக்கலாம் எனவும், அதுவே விபத்துக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

    நடிகர் ஹரிகிருஷ்ணா ஒன்றுபட்ட ஆந்திராவின் நிம்மக்குருவில் 1956-ம் ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி பிறந்தவர். சிறுவயதிலேயே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தனது தந்தை என்.டி.ராமராவுடனும் இணைந்து நடித்துள்ளார்.

    பின்னர் படிப்படியாக உயர்ந்து தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரானார். ‘டல்லா பெல்லம்மா’, ‘டட்டம்மா கலா’, ‘ராம் ரகீம்’, ‘சீதாராமா ராஜு’, ‘லாகிரி லாகிரி லாகிரிலோ’, ‘சீதய்யா’ உள்ளிட்ட திரைப்படங்கள் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன.

    இடையில் தெலுங்குதேசம் கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் குதித்த இவர், 1996-ல் மாநில போக்குவரத்து மந்திரியானார். 2008-ல் மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் ஆந்திர பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து 2013-ல் அந்த பதவியை ராஜினாமா செய்தார். தற்போது கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராக இருந்து வந்தார்.

    உயிரிழந்த ஹரிகிருஷ்ணாவுக்கு முதல் மனைவி லட்சுமி மூலம் ஜானகிராம், கல்யாண் ராம் என்ற 2 மகன்களும், சுகாசினி என்ற மகளும் இருந்தனர். 2-வது மனைவி ஷாலினி மூலம் தாரகா ராம் என்ற மகன் உள்ளார். ஜூனியர் என்.டி.ஆர். என அழைக்கப்படும் இவரும், கல்யாண் ராமும் தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களாக உள்ளனர்.

    ஹரிகிருஷ்ணாவின் மற்றொரு மகனான ஜானகி ராம், கடந்த 2014-ம் ஆண்டு நடந்த சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    கார் விபத்தில் நடிகர் ஹரிகிருஷ்ணா உயிரிழந்த தகவல் அறிந்ததும் அவரது சகோதரரும், நடிகருமான பாலகிருஷ்ணா, மகன்கள் ஜூனியர் என்.டி.ஆர்., கல்யாண் ராம் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்தனர். அவர்கள் ஹரிகிருஷ்ணாவின் உடலை ஐதராபாத்தின் மெகதிபட்டணத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு முருதுசகுடாவில் உள்ள நந்தமுறி குடும்ப பண்ணை தோட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) இறுதிச்சடங்கு நடக்கிறது. ஹரிகிருஷ்ணாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார்.

    ஹரிகிருஷ்ணாவின் மறைவு ஆந்திர அரசியல் மற்றும் திரைத்துறையில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மைத்துனரும், ஆந்திர முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு தனது மகன் லோகேசுடன் வந்து ஹரிகிருஷ்ணாவின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இதைப்போல பல்வேறு அரசியல், திரையுலக பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    நடிகர் ஹரிகிருஷ்ணாவின் மறைவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.  #NandamuriHarikrishna #NTR
    உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு பாகிஸ்தான் அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. #AtalBihariVajpayee #RIPVajpayee #PakistanGovt
    இஸ்லாமாபாத்:

    பா.ஜ.க கட்சியின் பிதாமகனும், இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் தனது 93-வது வயதில் இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மிகச்சிறந்த பேச்சாளரும், கவிஞரும், மாபெரும் அரசியல் ஞானம் பெற்ற தலைவருமான இவரது மறைவுக்கு இந்திய நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது.

    இவரது மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டதுடன், 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாளை முன்னாள் பிரதமருக்கு உரிய மரியாதைகளுடன் இறுதி சடங்கு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாரத ரத்னா வாஜ்பாயின் மறைவுக்கு பாகிஸ்தான் அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அரசு தெரிவித்த இரங்கல் செய்தியில், இந்தியா பாகிஸ்தான் உறவை மேம்படுத்துவதில் இவரது பங்கு மகத்துவமானது என்றும், சார்க் கூட்டமைப்பின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவருமான வாஜ்பாயின் மறைவு வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளது.

    மேலும், பாகிஸ்தான் அரசும் மக்களும், வாஜ்பாயை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய மக்களுக்கும் தங்களது இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக அந்த இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. #AtalBihariVajpayee #RIPVajpayee #PakistanGovt
    முன்னாள் பிரதமரும், பாஜகவின் பிதாமகன் என்றழைக்கப்படும் வாஜ்பாயின் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #AtalBihariVajpayee #RIPVajpayee #RahulGandhi #ManmohanSingh
    புதுடெல்லி:

    இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் கடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 93 வயதான இவரது உடல்நிலை இன்று காலை மிகவும் மோசமடைந்ததாக வெளியிடப்பட்ட அறிக்கையை தொடர்ந்து மாலை 5 மணியளவில் இயற்கை எய்தினார்.

    இவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். வாஜ்பாயின் மறைவு தொடர்பான தனது இரங்கல் செய்தியில், இந்தியா தனது மிகச்சிறந்த மகனை இழந்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.



    அதேபோல், மிகச்சிறந்த சொற்பொழிவாளரும், ஈர்க்கத்தக்க கவிஞரும், தனித்துவமிக்க பொதுநல சேவகரும், முதன்மை பிரதமருமான வாஜ்பாயின் மறைவு ஆழ்ந்த துக்கம் அளிப்பதாக மன்மோகன் சிங் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். #AtalBihariVajpayee #RIPVajpayee #RahulGandhi #ManmohanSingh
    பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #SomnathChatterjee
    சென்னை:

    பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:-

    தலைவர் கலைஞரின் நெருங்கிய நண்பராக இருந்த சோம்நாத் சாட்டர்ஜி பாராளு மன்ற ஜனநாயகத்தின் மாண்புகளை கட்டி காக்கும் தலைவராகவும், மக்களவையை கட்சி மனமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு நடுநிலை தவறாது நடத்தியவர். தமிழ்நாடு சட்டமன்ற பொன்விழாவில் கலைஞர் அழைப்பினை ஏற்று பங்கேற்று தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்தவர். ஜனநாயக மரபுகளை பாதுகாத்த மிகச் சிறந்த தலைவரின் மறைவு பாராளுமன்ற ஜனநாயகத்திற்கும் நாட்டிற்கும் பேரிழப்பாகும்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-

    இந்திய நாடாளுமன்றத்தில் பத்து முறை மக்களவை உறுப்பினராக இருந்து அனைவரின் பாராட்டையும் பெறும் விதத்தில் அனைத்து விவாதங்களிலும் பங்கேற்று தனது ஆணித்தரமான திறமையால் இந்திய நாடாளுமன்றத்திற்கு பெருமை சேர்த்தவர் சோம்நாத் சாட்டர்ஜி. அவரது மறைவு இந்திய நாட்டின் பொதுவாழ்வுக்கும், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

    பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ்:-

    சோம்நாத் சாட்டர்ஜி ஏராளமான சிறப்புகளுக்கு சொந்தக்காரர். புகழ்பெற்ற மனித உரிமை போராளி நிர்மல் சந்திர சாட்டர்ஜியின் புதல்வரான சோம்நாத் சாட்டர்ஜி தலைசிறந்த கல்வியாளர். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 10 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். பொது வாழ்வில் நேர்மையையும், தூய்மையையும் கடை பிடித்தவர். மக்களவைத் தலைவராக பணியாற்றிய போது அரசு மாளிகையில் தங்கியிருந்தபோது தமது சொந்த தேவைகளை சொந்த செலவில் நிறைவேற்றிக் கொண்டார். அவரது மறைவு இடதுசாரி அரசியலுக்கும், நேர்மை அரசியலுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-

    நாடாளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவு மிகவும் வேதனைக்குரியது. நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் எவ்வாறு செயல்பட்டு தனக்கு வாக்களித்த மக்களுக்கும், நாட்டிற்கும் பயன்தர வேண்டும் என்பதற்கு முன் மாதிரியாக இருந்தவர். அவரது இழப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கும், மேற்கு வங்கத்திற்கும் பேரிழப்பு. அது மட்டுமல்ல அவரது இழப்பு இந்திய நாட்டிற்கே பேரிழப்பு.

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளர் டி.டி. வி.தினகரன்:-

    மூத்த கம்யூனிஸ்டு தலைவரும், முன்னாள் லோக்சபா சபாநாயகருமான சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவு செய்தி கேட்டு வருத்தமுற்றேன். பத்துமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், மிகச் சிறந்த பண்பாளராகவும் திகழ்ந்த சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

    சோம்நாத் சாட்டர்ஜி நாட்டில் உள்ள ஏழைகள், பிற்படுத்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியோர் நலனுக்காக ஓயாமல் குரல் கொடுத்தவர். இந்திய அரசியலில் அனைவருக்கும் மிகச் சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்தவர். இவரது இழப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #SomnathChatterjee
    ×