search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 107524"

    புளியங்குடியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் கூண்டு வைத்து பிடிக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    புளியங்குடி:

    புளியங்குடி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் மான், காட்டுப்பன்றி, யானை உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது விளை நிலங்களுக்குள் வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. கோடை காலத்தில் யானைகள் தண்ணீரை தேடி ஊருக்குள் அடிக்கடி வரும்.  

    இந்நிலையில் முதன்முறையாக சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். புளியங்குடி மேற்கு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு உள்ளது. இங்கு சிறுத்தை வந்ததற்கான கால் தடம் பதிந்துள்ளது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினர் வந்து அங்குள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சிறுத்தை வந்தது உறுதி செய்யப்பட்டது. 

     இதையடுத்து சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சென்னிமலை பகுதியில் குரங்குகளின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரிப்பதால் வனத்துறையின் மூலம் குரங்குகளை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை வனப்பகுதியில் வாழும் குரங்குகள் தற்போது நகர பகுதியில் உள்ள வீடுகள், கடைகளிலும் புகுந்து தொந்தரவு செய்வது அதிகரித்து விட்டது.

    குரங்குகளுக்குள் ஏற்படும் சண்டை மக்களை பய முறுத்துகிறது. சென்னிமலை வனப்பகுதியில் வாழும் குரங்குள் அங்கு உணவு பற்றாக்குறையால் சென்னிமலை டவுன் பகுதிக்கு வர ஆரம்பித்து விட்டன. வீடுகளுக்குள் புகுந்து அனைத்து பொருட்களை குரங்குகள் தூக்கிச் சென்று விடுகின்றன.

    பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னிமலையில் இப்படித்தான் குரங்குகள் தொந்தரவு செய்தன. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த நடவடிக்கையில் குரங்குகள் பிடிக்கப்பட்டு சத்தியமங்கலம் வனப்பகுதியில் விடப்பட்டது. அன்று முதல் இதுவரை குரங்குளின் தொந்தரவு கொஞ்சம் குறைந்திருந்தது.

    தற்போது அவற்றின் எண்ணிக்கை பல மடங்கு பெருகி விட்டது. குரங்குகளுக்கு மலை பகுதியில் போதுமான உணவு இல்லாத காரணத்தால் மெதுவாக மலை அடிவாரப் பகுதிக்கு வந்து இரை தேடுகின்றன. தற்போது சென்னிமலை நகரப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அழையா விருந்தாளிகளாக இந்த குரங்குகள் வந்து இருப்பவற்றை தூக்கிப் போவது வாடிக்கையாகி விட்டது.

    வீடுகளில் ஜன்னல் திறந்து இருந்தால் போதும் அந்த வீட்டில் எந்த பொருளும் மிஞ்சாது. குறைந்தது 10 முதல் 15 குரங்குகள் வரிசையாக இறங்கிவிடும். வீடுகளில் எந்த ஒரு உணவு பொருளையும் வெயிலில் காய வைத்தால் குரங்குகளுக்குதான் ஆகும் என்ற நிலை உள்ளது. சென்னிமலை டவுன் பகுதி மக்கள் குரங்கு கூட்டத்திற்கு பயந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    கடை வீதியில் பழம், பன் போன்றவற்றை எந்த பயமும் இல்லாமல் சர்வ சாதாரணமாக வந்து தூக்கி செல்கின்றன என கடை வியாபாரிகள் வருத்தப்படுகின்றனர். இந்த குரங்கு கூட்டத்தினால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.

    குரங்குகளின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மீண்டும் வனத்துறையின் மூலம் குரங்குகளை பிடிக்க வேண்டும் என சென்னிமலை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடைக்கானல் கீழ் மலை பகுதிகளில் சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டத்தால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரும்பாறை, தாண்டிக்குடி மற்றும் பல்வேறு மலைகிராமங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்திருப்பதால் அடிக்கடி வன விலங்குகள் இடம் பெயர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகின்றன.

    மேலும் விவசாய நிலங்களையும் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் வனத்துறையினர் அடிக்கடி பார்வையிட்டு வன விலங்குகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாண்டிக்குடி அருகே உள்ள பட்டலாங்காடு என்ற பகுதியில் அதிகாலையில் தோட்ட வேலைக்கு சென்றவர்கள் கரடி நடமாட்டத்தை கண்டு அச்சமடைந்தனர். அதிகாலையில் வனப்பகுதியை கடந்து கரடி சென்றதால் இரவு நேரத்தில் பசிக்காக தோட்டத்தில் புகுந்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது.

    இதே போல நேற்று பெருங்கானல் பகுதியில் சிறுத்தைப்புலி நடமாடியதைப்பார்த்து அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் வனத்துறையினர் அங்கு முகாமிட்டு வன விலங்குகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து வன விலங்குகள் இடம் பெயர்ந்து தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதிக்குள் நடமாடி வருவது விவசாயிகளை பீதியடைய வைத்துள்ளது. #Tamilnews

    வனத்துறை சார்பில் ‘தமிழ்நாடு சூழல் சுற்றுலா கொள்கை-2017’ என்ற புத்தகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். #EdappadiPalaniswamy
    சென்னை:

    வனத்துறை சார்பில் ‘தமிழ்நாடு சூழல் சுற்றுலா கொள்கை-2017’ என்ற புத்தகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

    தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 19.6.2017 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில் தமிழ்நாடு சூழல்சார் சுற்றுலா கொள்கை-2017 உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.

    அதன்படி, தமிழ்நாடு வனத்துறை சார்பில், ‘தமிழ்நாடு சூழல் சுற்றுலா கொள்கை 2017’ தேசிய வனக்கொள்கையில் கூறப்பட்டுள்ள சாராம்சங்களான உயிர்பன்மையை பாதுகாத்தல், மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துதல் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியும், பல்வேறு துறைகளின் வல்லுநர்கள் மற்றும் இக்கொள்கையோடு இணையப்பெற்ற அரசு துறைகள், தன்னார்வ நிறுவனங்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்களுடன் நடத்தப்பட்ட விரிவான கருத்துக்களின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு வனத்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ‘தமிழ்நாடு சூழல் சுற்றுலா கொள்கை-2017’ என்ற இந்த புத்தகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பெற்றுக்கொண்டார்.

    தமிழ்நாடு சூழல் சுற்றுலா கொள்கையினை செயல்படுத்துவதற்காக ஒருங்கிணைக்கும் துறையாக வனத்துறை செயல்படும். மேலும், இக்கொள்கையின் நோக்கங்களையும், திட்டங்களையும் செயல்படுத்துவதற்காக, மாநில சூழல் சுற்றுலா வாரியம் என்ற சிறப்பு நிறுவனம், தமிழ்நாடு பதிவுச் சட்டம் 1975-ன் கீழ் பதிவு செய்யப்பட்டு செயல்படும்.

    இந்த நிறுவனம், சூழல் சுற்றுலாவிற்கு உகந்த புதிய இயற்கை பகுதிகளை கண்டறிந்து, அவைகளை மேம்படுத்துதல், பாதுகாப்பு அளித்தல், அவ்விடத்தின் புனித தன்மைக்கு குந்தகம் விளைவிக்காதவாறு சூழல் சுற்றுலா பயணிகளின் வருகையை முறைப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும்.

    இந்த நிகழ்ச்சியில், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் முகமது நசிமுத்தின், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர்(வனத்துறை தலைவர்) ரவிகாந்த் உபாத்யாய் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    குடியாத்தம் அருகே உள்ள நீரோடையில் விழுந்து பெண் காட்டு யானை உயிரிழந்த சம்பவம் குறித்து தமிழக, ஆந்திர வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனப்பகுதி, ஆந்திர எல்லையில் உள்ளது. ஆந்திர வனச்சரகத்திற்குட்பட்ட கவுண்டன்யா யானைகள் சரணாலயம் மிக அருகிலேயே இருக்கிறது.

    இங்கு இருந்து குடியாத்தம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மோர்தானா, சைனகுண்டா, கொட்டமிட்டா, தனகொண்டப்பல்லி உள்ளிட்ட கிராமங்களுக்குள் காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்யும்.

    மோர்தானா நீரோடையில் தண்ணீர் குடிக்க யானைகள் கூட்டம், கூட்டமாக வந்து செல்லும். நேற்று ஆடு, மாடுகளை மேய்ப்பவர்கள் மோர்தானா நீரோடையில், யானை இறந்து கிடந்ததை பார்த்தனர்.

    இதுகுறித்து, உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஜி.பி.எஸ். மூலம் ஆய்வு செய்ததில் யானை இறந்துகிடந்த பகுதி தமிழக-ஆந்திர வனப்பகுதி எல்லையில் இருந்தது.

    இதனால், ஆந்திர வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. எல்லை பிரச்சினை காரணமாக, யானை உடலை அகற்றுவது யார்? என்பதில் முரண்பாடு ஏற்பட்டது.

    இதையடுத்து, வேலூர் மாவட்ட வன அலுவலர் முருகன், குடியாத்தம் வனச்சரக அலுவலர் சங்கரய்யா தலைமையில் தமிழக வனத்துறையினர் மற்றும் ஆந்திர வனத்துறையினர் இன்று காலை மோர்தானா நீரோடை பகுதிக்கு வந்தனர்.

    யானை உடல் அழுகி துர்நாற்றம் வீசியது. சுமார் 40 வயது இருக்கும். ஒரு வாரத்திற்கு முன்பே தண்ணீர் குடிக்க மோர்தானா நீரோடைக்கு வந்துள்ளது.

    அப்போது தவறி விழுந்து நீரோடையில் இறந்துள்ளது என தமிழக-ஆந்திர வனத்துறையினர் தெரிவித்தனர்.

    மேலும், யானையின் அழுகிய உடலில் இருந்து பெரிய புழுக்கள், சதை துணுக்குகள் நீரோடையில் கலந்து மோர்தானா அணைக்கு செல்கிறது.

    இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீரோடையில் கிடந்த யானையின் உடலை தமிழக- ஆந்திர வனத்துறையினர் அகற்றினர். மேலும், யானை இறப்பு குறித்து இருமாநில வனத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். tamilnews
    பாலருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதியளித்ததையடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு சென்று குளித்து வருகின்றனர். வனத்துறை சார்பில் இயக்கப்படும் பேட்டரி கார்கள் இயக்கப்படுகிறது.
    செங்கோட்டை:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து தொடங்கி உள்ளது.

    செங்கோட்டையிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநில எல்லைக்குள் ஆரியங்காவு அருகே அமைந்துள்ள பாலருவியில் குற்றாலத்தில் சீசன் தொடங்கும் போதே தண்ணீர் விழும். இதனால் குற்றாலத்திற்கு சீசனை அனுபவிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் பாலருவிக்கும் செல்வார்கள்.

    கடந்த சில ஆண்டாக பருவ மழை பொய்த்த நிலையில் இந்தாண்டு முறையாக தொடங்கியதால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி அடிவார பகுதியான புளியரை, தவணை, குண்டாறு, செங்கோட்டை, பண்பொழி, மேக்கரை உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்ய தொடங்கி உள்ளது. குற்றாலம் ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தற்போது தண்ணீர் வர தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க குவிந்து வருகின்றனர். அண்டை மாநிலமான கேரளாவில் சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அவ்வப்போது மழைபெய்து வருவதால் பாலருவியிலும் தண்ணீர் வரத் துவங்கியுள்ளது. இதனால் பாலருவில் குளிக்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    பாலருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கேரள மாநில வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பாலருவிக்கு செல்வதற்கான பாதையை சுற்றுலா பயணிகளின் வசதிக்காக திறந்து விட்டனர். அதனை தொடர்ந்து பாலருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் வர தொடங்கி உள்ளது.

    தமிழகத்தில் இருந்து செல்லும் சுற்றுலா பயணிகள், வனத்துறை சார்பில் இயக்கப்படும் பேட்டரி கார்கள் மூலம் சென்று பாலருவியில் குளித்துவிட்டு வருகின்றனர். இதற்கு கட்டணம் 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆட்டோ, கார் செல்வதற்கு அனுமதி கிடையாது.

    பாலருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்ததை கேள்விப்பட்டதும் தமிழகத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் பாலருவிக்கு சென்று குளித்து வருகின்றனர். இதனால் அங்கு கூட்டம் அலைமோதுகிறது.

    திண்டுக்கல் அருகே கிராமப்புறங்களில் மரங்களை வெட்டி கடத்தும் கும்பல் அதிகரித்து வருகிறது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகில் உள்ள வி.எஸ். கோட்டை, புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் மரம் கடத்தல் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக புறம்போக்கு நிலங்களில் உள்ள மரங்களை வெட்டி அதனை டிராக்டரில் எடுத்து செல்கின்றனர்.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கேட்டபோது உரிய அனுமதி பெற்றுதான் மரங்களை வெட்டி வருவதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் வசந்தகுமாரிடம் புகார் அளித்தனர். அவர் விசாரணை நடத்தியதில் மரங்களை வெட்டி கடத்தியது சில்வார்பட்டியை சேர்ந்த முத்துகிருஷ்ணன், ராஜ்குமார் என தெரிய வந்தது.

    அனுமதி இல்லாமல் மரம் வெட்டியதும் தெரியவரவே அதனை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் புகாரின்பேரில் தாசில்தார் மற்றும் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வருவாய்த்துறை அதிகாரிகள் நீர்நிலைக்கு இடையூறாக உள்ள மரங்களை வெட்ட மட்டுமே அனுமதி கொடுத்துள்ளனர்.

    ஆனால் இதனை சாதகமாக பயன்படுத்தி பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது. மழைக்கு முறிந்து விழும் மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதாக சொல்லி பல இடங்களில் விதிமுறைகளுக்கு மாறாக மரம் வெட்டப்படுவதாக புகார்கள் வருகிறது. எனவே அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×