search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 107604"

    தென் மாவட்ட மக்களுக்கு மதுரை தான் இனி மருத்துவ தலைநகர் என்றும், இனி மத்திய அரசு பல நல்ல திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வரும் என்றும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். #MaduraiAIIMS #Tamilisai
    சென்னை:

    தென் மாவட்ட மக்களுக்கு மதுரை தான் இனி மருத்துவ தலைநகர் என்றும், இனி மத்திய அரசு பல நல்ல திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வரும் என்றும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். #MaduraiAIIMS #Tamilisai

    பா.ஜ.க. மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

    டெல்லியில் உள்ள எஸ்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர், மத்திய மந்திரிகள் உள்பட பலர் சிகிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அரசு மருத்துவமனைக்கு போவதே தவறு என்று இங்குள்ள (தமிழகத்தில்) அரசியல்வாதிகள் நினைத்து கொண்டிருந்தபோது, எய்ம்ஸ் அரசு மருத்துவமனையில் பிரதமர் உள்ளிட்டவர்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். மந்திரிகளுக்கு கிடைக்கும் அதே மருத்துவம் தான் ஏழைகளுக்கும் கிடைக்கிறது. இது தான் மத்திய அரசின் விருப்பம். அதே கொள்கையுடன் தான் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு அமைக்க உள்ளது.

    பா.ஜ.க தலைவர் என்ற முறையிலும், ஒரு மருத்துவர் என்ற முறையிலும், தென் பகுதியை சேர்ந்தவள் என்ற முறையிலும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் 18 மாவட்ட மக்கள் பலன் அடைவார்கள். சென்னை எப்படி மருத்துவ தலைநகரமோ? அதேபோல் தென் பகுதி மக்களுக்கு மதுரை தான் இனி மருத்துவ தலைநகரம். இது அனைவருக்கும் பலன் தரும். மருத்துவ மாணவர்களுக்கும் பயன் அளிக்கும்.

    மத்தியில் தி.மு.க.-காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது இந்த திட்டத்தை கொண்டு வர முடிந்ததா?. இதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன். பல திட்டங்கள் இனி தமிழகத்திற்கு வரும். மக்களுக்கான அரசாக மத்திய அரசு செயல்படுகிறது.

    இப்போது மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரைக்கு கொண்டு வந்திருப்பதன் மூலம் அந்த பகுதிகள் வளர்ச்சி பெறும். மருத்துவத்திற்காக தென் மாவட்ட மக்கள் இனி சென்னை வர வேண்டியதில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பா.ஜ.க. அலுவலகத்தில் மக்கள் சந்திப்பு என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருகிறோம். இந்த நிகழ்ச்சியில் மக்களுடன் கலந்துரையாடி அவர்கள் குறைகளை மனுவாக பெற்று வருகிறோம். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்றும் கமலாலயத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும்’ என்று கூறியுள்ளார். 
    தமிழகத்தில் 5 இடங்களில் செய்யப்பட்ட ஆய்வைத் தொடர்ந்து மதுரையில் சுமார் 1500 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். #AIIMS #AIIMSinMadurai #Thoppur
    சென்னை:

    நாட்டின் தலைசிறந்த மருத்துவமனையாக கருதப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை 5 மாநிலங்களில் அமைய இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் தேர்வு செய்வது தொடர்பாக செங்கல்பட்டு, மதுரை, செங்கிபட்டி, பெருந்துறை, மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.



    இதையடுத்து, மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியினை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 750 படுக்கை அறைகளை கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட இருப்பதாகவும், இந்த மருத்துவமனையில் 100 மருத்துவ படிப்புக்கான வசதி மற்றும் நர்சிங் படிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், எய்ம்ஸ் மருத்துவமனை 1500 கோடி ரூபாய் செலவில் உருவாகப்பட உள்ளதாகவும், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து தரும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார். #AIIMS #AIIMSinMadurai #Thoppur
    கல்லூரிக்கு சென்ற மாணவி திடீர் மாயமானதால் அவரை யாராவது கடத்திச் சென்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தென்கரை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் சாந்தி (வயது 28). இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

    நேற்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற சாந்தி இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல் வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து காடுபட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவி சாந்தி கடத்தப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குடும்பத் தகராறில் வாலிபரை வெட்டிய தங்கையின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

    பேரையூர், ஜூன்.13-

    மதுரை மாவட்டம், பேரையூர் கிருஷ்ணகோனார் லைன் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 37). இவரது தங்கையின் கணவர் புண்ணியமூர்த்தி. அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து உள்ளார்.

    இது குறித்து மாரியப்பன் புண்ணியமூர்த்தியிடம் தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த புண்ணியமூர்த்தி, அவரது மனைவியின் சகோதரர் மாரியப்பனை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்.

    இதில் படுகாயம் அடைந்த மாரியப்பன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து புண்ணியமூர்த்தியை கைது செய்தனர்.

    மதுரையில் ரேசன் கடை ஊழியரை கொலை செய்தது கூலிப்படையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை கீரைத்துறை பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி (வயது 28). இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் மதுரை மாநகர் 70-வது வட்டச் செயலாளராகவும் இருந்து வந்தார்.

    ரேசன் கடை ஊழியரான முனியசாமி நேற்று காலை ரேசன் கடையில் பொதுமக்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்து கொண்டிருந்த போது மர்ம நபர்கள் 5 பேர் முனியசாமியை சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்துவிட்டு 2 மோட்டார் சைக்கிள்களில் தப்பி விட்டனர்.

    இது குறித்து கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

    முனியசாமி படுகொலை செய்யப்பட்ட இடத்தில் ஒரு பெண் வந்து அடையாளம் காட்டிச் சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே அந்த பெண் தகராறில் கூலிப்படையை ஏவி முனியசாமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது குறித்தும் தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது.

    முனியசாமி கொலையில் தொடர்புடைய கொலையாளிகள் விரைவில் சிக்குவர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    உசிலம்பட்டி அருகே மகனுக்கு திருமணம் ஆகாத விரக்தியில் 76 வயதான மூதாட்டி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    மதுரை:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பொட்லுபட்டியை சேர்ந்தவர் அன்னக்கொடி (வயது76). இவரது மகன் காசி. நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்து வந்த காசிக்கு, அன்னக்கொடி பல இடங்களில் பெண் தேடினார். ஆனாலும் திருமணம் நடைபெறுவதில் தடை ஏற்பட்டு கொண்டே இருந்தது.

    இதனால் விரக்தி அடைந்த அன்னக்கொடி தோட்டத்தில் வி‌ஷம் குடித்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அன்னக்கொடியின் மற்றொரு மகன் மனோகரன் உசிலம்பட்டி தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #Tamilnews
    திருமங்கலம் அருகே பட்டதாரி பெண் காதலனுடன் சென்றதால் அவரது குடும்பத்தினர் வாலிபர் வீட்டுக்கு தீ வைத்தனர்.
    பேரையூர்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் பி.டி.ராஜன் தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம், அரசு பஸ் டிரைவர். இவரது மகன் அருண் (வயது26). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    திருமங்கலம் ராஜீவ் நகரைச் சேர்ந்த பன்னீர் செல்வம் மகள் சர்மிளா (25), முதுகலை பட்டதாரி. இவரும், அருணும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்மிளாவுக்கு வேறு ஒருவருடன் பெற்றோர் நிச்சயம் செய்தனர். இது பிடிக்காத அவர் கடந்த 10-ந்தேதி வீட்டில் இருந்து மாயமாகி விட்டார்.

    இதுகுறித்து திருமங்கலம் போலீசில் பன்னீர்செல்வம் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் காதலன் அருணுடன் சர்மிளா சென்று இருப்பது தெரியவந்தது.

    இதனால் சர்மிளா குடும்பத்தினர் ஆத்திரம் அடைந்தனர். அவரது உறவினர்கள் அருண் வீட்டுக்கு சென்றனர்.

    அங்கு வீடு பூட்டப்பட்டு இருந்தது. பூட்டை உடைத்து உள்ளே சென்ற சர்மிளாவின் உறவினர்கள் அங்கிருந்து பொருட்கள் அடித்து உடைத்து சூறையாடினர். பின்னர் வீட்டுக்கும் தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    மதுரை நகரில் வழிப்பறியில் ஈடுபட்ட 9 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை தெப்பக்குளம் கேட்லாக் ரோடு, ராஜீவ்காந்தி தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது31). இவர் அதே பகுதியில் நடந்து சென்றபோது மேல அனுப்பானடி தமிழன் தெரு நாகராஜ் மகன் சசிக்குமார் (22), நடுத்தெரு ஜோதிராமலிங்கம் மகன் சதீஷ்குமார் (21), பாண்டி மகன் பால்பாண்டி (20) ஆகிய 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.250-ஐ பறித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    வில்லாபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் மருதுபாண்டி, ஆட்டோ டிரைவரான இவரிடம் மேல அனுப்பானடி நாகம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்த சோலையப்பன் மகன் பிரபாகரன், கேட்லாக் ரோடு முனீஸ்வரன் மகன் சூர்யா, பாண்டி(24) ஆகிய 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.700-ஐ பறித்தனர்.

    இதுகுறித்து கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர்.

    வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் கண்ணன் (38). இவர் சிந்தாமணி ரோட்டில் நடந்து சென்றபோது தத்தனேரி பாண்டி (32) என்பவர் மிரட்டி ரூ.280-ஐ வழிப்பறி செய்ததாக அவரை அவனியாபுரம் போலீசார் கைது செய்தனர்.

    மதிச்சியம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சுபாஷ் கிருஷ்ணன் (21) இவர் அண்ணா பஸ் நிலையம் பகுதியில் நடந்து சென்ற போது ராமராயர் மண்டபம் புளியந்தோப்பை சேர்ந்த செல்லப்பாண்டி (22), நடுத்தெருவைச் சேர்ந்த பால்சாமி மகன் அஜீத் (19) ஆகியோர் கத்தியை காட்டி ரூ.600-ஐ பறித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    மதுரையில் இன்று காலை ரே‌ஷன் கடை ஊழியர் சரமாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை கீரைத்துறை வாழைத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது28) ரே‌ஷன் கடை ஊழியர்.

    இன்று காலை 9 மணி அளவில் வாழைத்தோப்பு பகுதியில் உள்ள ரே‌ஷன் கடையை திறந்து பொருட்கள் விநியோகம் செய்ய தொடங்கினார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் முனுசாமியை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

    இதில் அவர் ரத்த வெள்ளத்தில் ரே‌ஷன் கடைக்குள்ளேயே துடிதுடித்து பலியானார். பின்னர் அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டது.

    இதுகுறித்து கீரைத்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முனுசாமியின் உடலை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    முனுசாமி கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews

    மதுரை அருகே வீட்டை உடைத்து ரூ.4½ லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    மதுரை:

    மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள அம்பலத்தடியை சேர்ந்தவர் மொக்கச்சாமி. இவர் மதுரை சிக்கந்தர்சாவடியில் தனது மகனுக்கு புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். இதற்காக நேற்று முன் தினம் வீட்டை பூட்டி விட்டு அங்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் நேற்று இரவு அவரது வீடு கதவு உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதைபார்த்த அவரது சகோதரர் தகவல் கொடுத்தார். இதையடுத்து அங்கு வந்து பார்த்த மொக்கச்சாமி வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தர்.

    பீரோவில் இருந்து 19 பவுன் நகை, ½ கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதன்மதிப்பு ரூ.4½ லட்சம் ஆகும்.

    இதுகுறித்து சமயநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார். #tamilnews
    தமிழக அரசை கலைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்றும் அதுவே கலைந்தால் நாங்கள் பொறுப்பல்ல என்றும் இல.கணேசன் கூறினார். #BJP #LaGanesan #TNGovernment
    மதுரை:

    பா.ஜனதா தேசிய செயலாளர் இல.கணேசன் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மோடி அரசின் 4 ஆண்டுகால சாதனைகளை மதுரையில் சமுதாய தலைவர்களை சந்தித்து விளக்குவதற்காக வந்துள்ளேன்.

    காவிரி பிரச்சனை தொடர்பாக அப்போதைய கர்நாடக முதல்வர் சித்தராமையாவை பிரதமர் மோடி ஏன் கலந்து பேசவிலலை என சிலர் குற்றம் சுமத்துகின்றனர். அப்போது சட்டசபை தேர்தல் நடந்ததால் அதற்கான சூழ்நிலை அமையவில்லை. அதே நேரத்தில் தமிழகத்தின் கோரிக்கைகளை 100-க்கு 100 சதவீதம் மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது.


    முத்தலாக் விவாகரத்து சட்டம் குறித்து மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது அதனை அ.தி.மு.க. உறுப்பினரும், துணை சபாநாயகருமான தம்பித்துரை பாராட்டி பேசினார். ஆனால் இப்தார் விருந்தில் முத்தலாக் சட்டம் தொடர்பாக மத்திய அரசை விமர்சித்து பேசி உள்ளார். இது அவரது கருத்தா? கட்சியின் கருத்தா? என தெரியவில்லை.

    எனவே தமிழக அரசு முத்தலாக் சட்டம் குறித்து தங்களின் கொள்கை முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    தமிழக அரசை கலைக்கும் எண்ணம் மத்திய பா.ஜனதா அரசுக்கு கிடையாது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் அப்படி நடந்துள்ளது. அதே நேரத்தில் ஆட்சி தானாக கலைந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.

    அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக நிபுணர்கள் குழு பரிந்துரை தற்போது வெளிவந்துள்ளது. எனவே பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வரலாம்.

    தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து இப்போது ஆலோசிக்கவில்லை. தமிழகத்தில் எங்கள் நிலைப்பாடு என்னவென்றால் சூரியன் உதிக்கும் இடத்தில் சந்திரன் இருக்காது. அ.தி.மு.க.வுடனும் கூட்டணி இல்லை. தற்போது மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன்தான் நாங்கள் உள்ளோம். தேர்தல் வரும் போது அந்த நேரத்தில் கலந்து பேசி கூட்டணி பற்றி பின்னர் அறிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #LaGanesan #TNGovernment
    மதுரையில் நாளை இந்து முன்னணி மாநாடு நடக்க உள்ள நிலையில் அண்ணாநகர், மேலமடை பகுதியில் விளம்பர பலகை- கொடிகள் எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை கோட்ட இந்து முன்னணி மாநாடு மதுரை அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் அருகில் நாளை (10-ந் தேதி) மாலை நடக்கிறது.

    இதில் நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன், மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

    இந்து முன்னணி மாநாடையொட்டி மதுரையில் பல்வேறு இடங்களில் விளம்பர பதாகைகள் மற்றும் கட்சி கொடிகள் கட்டப்பட்டு இருந்தன.

    இந்த நிலையில் மேலமடை, அண்ணா நகர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள், கட்சி கொடிகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு தப்பியோடி விட்டனர்.

    இதையடுத்து அங்கு இந்து முன்னணி நிர்வாகிகள் குவிந்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்து முன்னணி விளம்பர பதாகை- கொடிகளை எரித்து விட்டு தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மாவட்ட பொது செயலாளர் அழகர்சாமி கூறும் போது இந்து முன்னணி மாநாட்டை சீர்குலைக்கும் நோக்கில் பயங்கரவாதிகள் இத்தகைய சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனர். இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது என்றார்.

    ×