search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 107604"

    மதுரையில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்த அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த வாக்காளர் பட்டியல், ரூ.7,610 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019
    மதுரை:

    பாராளுமன்ற தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க மதுரை பாராளுமன்ற தொகுதியில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பறக்கும் படையினரின் கண்காணிப்பு பணி 24 மணி நேரமும் நடைபெறுகிறது.

    இந்த நிலையில் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 81-ம் வார்டு செயலாளர் கோபிநாத் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கீழ அண்ணா தோப்பு பகுதியில் மர்ம நபர் ஒருவர் வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்துக் கொண்டு இருந்தார். கோபிநாத் அவரை கையும், களவுமாக பிடித்து திலகர் திடல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    போலீஸ் விசாரணையில், அவர் கீழ அண்ணாத்தோப்பைச் சேர்ந்த எம்.என்.பத்மநாபன் என்பதும், அ.தி.மு.க. பிரமுகராக இருப்பதும் தெரியவந்தது.

    அவரிடம் இருந்த வாக்காளர் பட்டியல், ரூ.7,610 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து திலகர்திடல் போலீசார் பத்மநாபனை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை நாராயணபுரம் பாங்க் காலனியில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 21 பேர் வாக்காளர்களுக்கு வீடு, வீடாகச் சென்று பணம் வழங்குவதாக புகார் வந்தது. இதையடுத்து மதுரை கிழக்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரி சுரேஷ் பேட்ரிக் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 பேர் பிடிபட்டனர். அதிகாரிகளின் விசாரணையில், அவர்கள் தல்லா குளத்தைச் சேர்ந்த பாண்டியராஜ், அர்ஜூன் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக தல்லா குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #LokSabhaElections2019

    மதுரை அருகே புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை கடச்சநேந்தல் இந்திரா காலனியைச் சேர்ந்தவர் வினோத் (வயது 25). இவருக்கும் கலைச்செல்வி என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    வினோத் அடிக்கடி மது குடித்து வந்ததால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் வினோத் மன வேதனை அடைந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பும் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த வினோத் தூக்குப் போட்டு தற்கொலை செய்தார்.

    இதுகுறித்து கே.புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரையில் ஷேர் ஆட்டோவில் சென்ற பெண்களிடம் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை அண்ணாநகர் எல்.ஐ.சி. காலனியைச் சேர்ந்தவர் ஆண்டியப்பன். இவரது மனைவி தவமணி தேவி (வயது 79). இவர் கடந்த ஜனவரி மாதம் 4-ந் தேதி ஷேர் ஆட்டோவில் வெளியே புறப்பட்டார்.

    அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள், தவமணி தேவி வைத்திருந்த ஒரு பவுன் நகை, செல்போன் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, காட்டு பாவா வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் முகமது யூசுப். இவரது மனைவி குல்பத்நிஷா (வயது 40). இவர் கடந்த ஆண்டு நவம்பர் 19-ந் தேதி வேலை நிமித்தமாக மதுரைக்கு வந்திருந்தார்.

    அன்று காளவாசலில் இருந்து மாட்டுத்தாவணிக்கு குல்பத்நிஷா ஷேர் ஆட்டோவில் சென்றார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி குல்பத் நிஷாவிடம் இருந்த 4 பவுன் நகையை மர்ம நபர் திருடிச் சென்றார்.

    மேற்கண்ட 2 சம்பவங்கள் நடந்து 3 மாதங்களுக்கு மேலாகி விட்டது. ஆனால் தற்போது தான் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மதுரை எல்லீஸ் நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்தவர் சலீம். இவரது மனைவி மும்தாஜ்பேகம் (வயது 46). இவர் சம்பவத்தன்று 2-வது பால்பூத் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் மும்தாஜ்பேகத்தை பின் தொடர்ந்து வந்தனர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது மர்ம நபர்கள் மும்தாஜ்பேகத்தை வழிமறித்து அவரிடம் இருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.

    இது குறித்து மும்தாஜ்பேகம் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மதுரைக்கு இன்று பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் வர இருப்பதால் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #PMModi #RahulGandhi
    மதுரை:

    தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2-வது முறையாக இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் தமிழகம் வருகிறார். கொச்சியில் தனது பிரசாரத்தை முடிக்கும் அவர் விமானம் மூலம் இரவு 9 மணிக்கு மதுரை வருகிறார். பசுமலை தாஜ் ஓட்டலில் இரவில் தங்கும் அவர் நாளை(சனிக்கிழமை) காலை ஹெலிகாப்டர் மூலம் தேனிக்கு செல்கிறார்.

    அங்கு பகல் 11 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் ரவீந்திரநாத்குமார் (தேனி), ராஜ்சத்யன் (மதுரை), திண்டுக்கல் தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்து ஆகியோரை ஆதரித்து பேசுகிறார்.

    இதனை முடித்து விட்டு ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் வரும் மோடி, பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா வேட்பாளர்கள் நயினார் நாகேந்திரன் (ராமநாதபுரம்), எச்.ராஜா (சிவகங்கை) ஆகியோரை ஆதரித்து பேசுகிறார். அதன்பின் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை வந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

    இதேபோல் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கிருஷ்ணகிரி, சேலத்தில் பிரசாரத்தை முடித்து விட்டு விமானம் மூலம் மதுரைக்கு இன்று மாலை 3.30 மணிக்கு வருகிறார். அங்கு இருந்து ஹெலிகாப்டர் மூலம் தேனி செல்லும் அவர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.



    பின்னர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் மதுரைக்கு வந்து மண்டேலா நகரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசன் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார். அதன்பின்னர் விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

    ஒரே நாளில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுலும் மதுரையில் இருப்பதாலும், சித்திரை திருவிழா நடந்து வருவதாலும் அங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பிரதமர் மோடி தங்கும் பசுமலை தாஜ் ஓட்டல், அவர் விமான நிலையம் செல்லும் பாதை முழுவதையும் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து உள்ளனர்.

    அதே போல் ராகுல் காந்தி கலந்து கொள்ளும் மண்டேலா நகர் பொதுக்கூட்டத்துக்கும் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மோடி, ராகுல் வருகையையொட்டி மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  #LokSabhaElections2019 #PMModi #RahulGandhi
    காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி 2-ம் கட்டமாக தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திருப்பரங்குன்றம் ஆகிய 4 இடங்களில் நாளை பிரசாரம் செய்கிறார்.
    சேலம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி 2-ம் கட்டமாக தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திருப்பரங்குன்றம் ஆகிய 4 இடங்களில் நாளை (12-ந் தேதி) பிரசாரம் செய்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10 மணியளவில் பெங்களூரு வருகிறார்.

    அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு கிருஷ்ணகிரி ஆண்கள் கலைக் கல்லூரியில் இறங்குகிறார். தேவராஜ மஹால் அருகே அமைக்கப்பட்டு பொதுக்கூட்ட மேடையில் கிருஷ்ணகிரி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் டாக்டர் செல்லக்குமார், ஓசூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சத்யா, தர்மபுரி தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமார், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வக்கீல் மணி, அரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார்.

    பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு சேலம் ஹோலிகிராஸ் கல்லூரியில் வந்திறங்குகிறார். தொடர்ந்து காரில் சேலம் ஊத்துமலை அருகே அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட மேடைக்கு வருகிறார்.

    அங்கு சேலம் தி.மு.க. வேட்பாளர் பார்த்திபன், கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, நாமக்கல் கொங்கு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜ், ஈரோடு ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி, கள்ளக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் பொன்.கவுதமசிகாமணி, விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    பின்னர் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு செல்லும் அவர் அங்கிருந்து தனி விமானத்தில் மதுரைக்கு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் தேனி செல்லும் அவர் புதிய பஸ் நிலையம் அருகே அணைஞ்சி விளக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்பட பலருக்கு ஆதரவு கேட்டு பேசுகிறார்.

    அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதுரை செல்லும் அவர் திருப்பரங்குன்றம் மண்டேலாநகரில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் பேசுகிறார்.

    இதில் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசன், விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்தாகூர், நெல்லை தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம், தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், ராமநாதபுரம் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி, சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திசிதம்பரம் உள்பட பலருக்கு ஆதரவு திரட்டுகிறார். இதையொட்டி காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    மதுரை புதூரில் வீட்டின் கதவை உடைத்து 18 பவுன் நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    மதுரை:

    மதுரை புதூர் சூரியா நகரில் உள்ள தாய்மூகாம்பிகை நகரைச் சேர்ந்தவர் ரவி. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.

    சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு ரவி சென்னையில் வேலை பார்க்கும் தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 18 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினர்.

    ஊர் திரும்பிய ரவி வீட்டில் நகைகள் திருட்டுப்போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை அணையில் இருந்து வருகிற 16-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. #ChithiraiThiruvizha #Vaigaidam
    ஆண்டிப்பட்டி:

    மதுரை சித்திரை திரு விழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை அணையில் இருந்து வருகிற 16-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

    மதுரையில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்ததால் வைகை அணை 2 முறை நிரம்பியது. இதனைத் தொடர்ந்து வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    ஆனால் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரியத் தொடங்கியது.

    71 அடி உயரம் உள்ள வைகை அணையில் தற்போது 42.67 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. நீர்வரத்து முற்றிலும் இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 60 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் மொத்த நீர் இருப்பு 1176 மி. கன அடியாக உள்ளது.

    இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வருகிற 16-ந் தேதி மாலை 6 மணி முதல் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த தண்ணீர் 17-ந் தேதி 850 கன அடியாகவும், 18-ந் தேதி 500 கன அடியாகவும் குறைக்கப்பட்டு 19-ந் தேதி மாலை தண்ணீர் திறப்பு நிறுத்தப்படும். இதன் மூலம் அணையில் இருந்து 3 நாட்களில் 216 மி.கன அடி. தண்ணீர் திறக்கப்பட உள்ளது. சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்த அரசின் உத்தரவிற்காக பொதுப்பணித்துறையினர் காத்திருக்கின்றனர். #ChithiraiThiruvizha #Vaigaidam

    மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டவேண்டும் என வலியுறுத்தி தனியார் விமானத்தில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். #Madurai #Protestinplane
    மதுரை:

    சென்னையில் இருந்து மதுரை நோக்கி தனியார் விமானம் இன்று புறப்பட்டு சென்றது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதில் பயணம் செய்த பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சியை சேர்ந்த சிலர் திடீரென எழுந்து நின்றனர்.

    மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்க வேண்டும் என  அவர்கள் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து, மதுரை விமான நிலையத்தில் இறங்கிய அவர்களை போலீசார் கைது செய்தனர். #Madurai #Protestinplane
    மதுரை பாராளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளருக்கு ஆதரவாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கிங் சென்றபடி வாக்கு சேகரித்தார். #MKStalin #DMK

    மதுரை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். மதுரை பாராளுமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசன் மற்றும் விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளரை ஆதரித்து வண்டியூர், திருமங்கலத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

    அப்போது மோடி, எடப்பாடி அரசை கடுமையாக சாடினார். பிரசாரத்துக்கு பின்னர் மதுரையில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தார்.

    இன்று காலை மு.க.ஸ்டாலின் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் நடந்து சென்றபடியே வியாபாரிகள், பொதுமக்களிடம் மதுரை பாராளுமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசனுக்கு ஆதரவாக வாக்கு கேட்டார்.



    மு.க.ஸ்டாலினுடன் சென்ற வேட்பாளரை அறிமுகம் செய்து இவரை வெற்றி பெறச் செய்தால் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்றார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, 14 வயதில் அரசியலுக்கு வந்த நான் எப்போதும் மக்களோடு மக்களாக இருந்து வருகிறேன்.

    எம்.எல்.ஏ. மேயர், தி.மு.க. தலைவர் என எப்போதும் மக்களோடு இருந்து வருகிறேன். தேர்தலின் போது மட்டும் மக்களை சந்திப்பவர்கள் நாங்கள் அல்ல. ஆட்சியில் இருந்தாலும், இல்லா விட்டாலும் மக்களுக்கு சேவை செய்வோம் என்றார். #MKStalin #DMK

    மோடி அரசால் இந்தியா வளர்ச்சி அடையவில்லை என்றும் தளர்ச்சி அடைந்திருப்பதாகவும், மதுரை பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கடுமையாக குற்றம்சாட்டினார். #MKStalin #DMK #LoksabhaElections2019
    மதுரை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் உள்ள வண்டியூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து பேசியதாவது:

    இந்தியா 45 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. மோடி அரசால் இந்தியா வளர்ச்சி அடையவில்லை. தளர்ச்சிதான் அடைந்துள்ளது. வேலைவாய்ப்பின்மையை அதிகரித்தது தான் இந்த மோடி அரசின் சாதனை. இதனை நான் கூறவில்லை. ஆய்வு அறிக்கை ஒன்றில் இதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் 6.1% வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

    மத்தியில் மோடியின் ஆட்சியை ஒழிக்கவே நீங்களும் இங்கு திரண்டு உள்ளீர்கள். ஏற்கனவே சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடும் போது , இந்த தேர்தல் அறிக்கை கதாநாயகன் மட்டுமல்ல, கதாநாயகியும் இது தான் என கூறினேன். இதில் கீழடியிலே அகழாய்வு தொய்வில்லாமல் தொடங்கப்பட்டு முறையாக நடத்தப்படும் என வாக்குறுதியினை அளித்தோம்.

    இதனை  இங்கு சொல்ல காரணம், இந்த தொகுதியிலே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சு. வெங்கடேசன் இதற்கு முக்கியமான காரணமாவார். தமிழக எழுத்தாளர்கள் நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும். தமிழர்களின் புகழ் ஓங்க வேண்டும். இவர் மதுரையை காப்பாற்ற துடித்துக் கொண்டிருக்கக்கூடிய ஒருவர் ஆவார். இவர்  பாராளுமன்றம் செல்வது எங்களுக்கு மட்டுமல்ல.  உங்களுக்கும் பெருமை ஆகும்.



    அண்மையில் கூட பிரதமர் மோடி, மதுரையில் எய்ம்ஸ் அமைக்க அடிக்கல் நாட்டிவிட்டுச் சென்றார்.  அந்த விழா வெறும் அடிக்கல் நாட்டு விழா தான். அடிக்கல் நாட்டினால் போதுமா? அதற்கு பணம் ஒதுக்க வேண்டாமா? மருத்துவமனை தானாக வந்து விடுமா? ஏற்கனவே அறிவித்திருந்தபடி, உத்தரபிரதேசத்திற்கே தராதவர், மதுரைக்கா தரப்போகிறார்?

    இந்தியாவில் 100 ஸ்மார்ட் சிட்டி உருவாக்கப்படும் என அறிவித்தார். ஆனால் இப்போது தமிழகத்தில் ஒன்று கூட இல்லை. ஆட்சிக்கு வந்தால் அதை செய்வேன் இதை செய்வேன் என கூறுகிறாரே தவிர, ஒன்று கூட செய்யவில்லை. கழக தலைவர் மு கருணாநிதி ஆட்சியிலே, விவசாயிகள் கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம், மினி பஸ்கள், என அனைத்தையும் தாய் உள்ளத்தோடு நடத்தினார். இன்று எடப்பாடி பேய் ஆட்சி நடத்துகிறார்.

    தேர்தல் நேரத்தில் மட்டும் தமிழகத்திற்கு வந்து செல்லும் மோடி அரசு , மதுரைக்கு என்ன செய்திருக்கிறது? என சிந்தித்து செயலாற்றுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK #LoksabhaElections2019

    மதுரையில் கத்தி முனையில் வாலிபரிடம் பணம் மற்றும் செல்போனை பறித்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை ஐராவதநல்லூர் கண்மாய் அருகே தூத்துக்குடியை சேர்ந்த பிரவீன்ராஜ் (வயது 27) நடந்து சென்றார். அப்போது 3 பேர் திடீரென வழி மறித்தனர். அவர்கள், பிரவீன்ராஜ் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர்.

    மேலும் அவரிடம் இருந்து ரூ. 7 ஆயிரத்து 400 மற்றும் ஆப்பிள் செல்போன் ஆகியவற்றை பறித்துச் சென்றனர்.

    இதுகுறித்து தெப்பக்குளம் போலீசில் பிரவீன்ராஜ் புகார் செய்தார். அதில், ரூ.75 ஆயிரம் மதிப்பிலான செல்போன் மற்றும் பணம் பறித்துச் செல்லப்பட்டதாக குறிப்பிட்டு இருந்தார்.

    இதன் அடிப்படையில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மதுரை அனுப்பானடியை சேர்ந்த சண்முககுரு (20), ஆசிரியர் குடியிருப்பை சேர்ந்த சிவகுமார் (20), அஜீத்குமார் (20) ஆகியோர்தான் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    ×