search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோபோ"

    கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் ஒரு தனியார் ஓட்டலில் ரோபோ மூலம் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறப்படும் ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
    சிவமொக்கா :

    ஓட்டல்களில் வழக்கமாக அந்த ஓட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் தான் உணவு சப்ளை செய்வது வழக்கம். அல்லது ஓட்டல் உரிமையாளர்களும் வாடிக்கையாளர்களுக்கு உணவு சப்ளை செய்வதுண்டு. வெளிநாடுகளில் தற்போது ஓட்டல்களில் ரோபோக்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உணவு சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    ஆனால் தற்போது கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் ஒரு தனியார் ஓட்டலில் ரோபோ மூலம் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறப்பட்டு வருகிறது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

    சிவமொக்கா நகர் வினோபாநகரில் தனியார் ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாற ஊழியர்களுக்கு பதில், ரோபோக்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஓட்டலுக்கு சாப்பிட வருபவர்கள், தங்களுக்கான உணவை ஆர்டர் செய்துவிட்டு இருக்கையில் அமர்ந்தால் போதும், அவர்கள் விரும்பிய உணவை ரோபோ எடுத்து வந்து வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்கிறது.



    மேலும், ஓட்டலுக்கு சாப்பிட வருபவர்களை அந்த ரோபோ அன்புடன் அழைத்து இருக்கையில் அமர வைக்கிறது. மேலும் அவர்களிடம் ஆங்கிலத்தில் காலை வணக்கம், மதிய வணக்கம், இரவு வணக்கம் ஆகியவற்றை கூறி, ஆர்டர் பெறுகிறது. பின்னர் அவர்கள் சாப்பிட்டு முடித்துவிட்டு செல்லும்போது, அந்த ரோபோ, நன்றி மீண்டும் வருக என்றும் கூறுகிறது.

    இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் கூறுகையில், ஓட்டலுக்கு சாப்பிட வருபவர்களுக்கு ரோபோ மூலம் உணவு பரிமாற முடிவு செய்தேன். இதனால் சீனாவில் இருந்து புதிய ரோபோ ஒன்று இறக்குமதி செய்து ஓட்டலில் வைக்கப்பட்டுள்ளது. மாநிலத்திலேயே முதல் முறையாக எனது ஓட்டலில் தான் ரோபோ மூலம் உணவு பரிமாறப்படுகிறது. இந்த ரோபோ வாடிக்கையாளர்களிடம் அன்பாக நடந்து கொள்கிறது.

    வாடிக்கையாளர்களின் இருக்கை எண்ணை பதிவு செய்து, அவர்கள் கேட்ட உணவுகளை கொடுக்கிறது. இந்த ரோபோ வந்தது எனக்கு மிகவும் எளிமையாக உள்ளது. ஆட்களுக்கு கொடுக்கும் சம்பளமும் மிச்சமாகிறது. இந்த ரோபோவை 2 மணி நேரம் சார்ஜ் செய்தால் போதும். நாள் முழுவதும் வேலை செய்யும் என்றார்.

    ஓட்டலில் ரோபோ உணவு பரிமாறுவது பற்றி அந்தப்பகுதியில் காட்டுத்தீ போல தகவல்கள் பரவியது. இதனால் மக்கள் ஆச்சரியத்துடன் ஓட்டலுக்கு வந்து ரோபோவை பார்த்து செல்கிறார்கள். 
    வி‌ஷவாயு தாக்குதலில் உயிரிழப்பை தடுக்க மனிதர்களுக்கு பதிலாக கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய அதிநவீன ‘ரோபோ’வை சென்னை ஐஐடி உருவாக்கி உள்ளது. #PoisonousGas #ToxicGas
    சென்னை:

    இந்தியாவில் லட்சக்கணக்கான கழிவுநீர் தொட்டிகள் அனுமதியின்றி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளன. அவற்றை சுத்தம் செய்ய அதனுள் இறங்கும் தொழிலாளர்கள் வி‌ஷவாயு தாக்கி இறந்து விடுகின்றனர்.

    இதனால் தொழிலாளர்களின் குடும்பங்கள் ஆதரவின்றி தவிக்கின்றன. அவர்கள் சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாகின்றனர்.

    வி‌ஷவாயு தாக்குதலில் உயிரிழப்பை தடுக்க சென்னை ‘ஐ.ஐ.டி.’ அதி நவீன ‘ரோபோ’வை (எந்திர மனிதனை) உருவாக்கி உள்ளது.

    இந்த ‘ரோபோ’க்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறக்கி விடப்பட்டு அது சுழலும் விசிறிகள் மூலம் அலசி சுத்தம் செய்யும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருப்பது போன்று சுழலும் மின்விசிறி பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    அதில் சுழலும் விசிறியில் உள்ள பிளேடுகள் கழிவு நீருக்குள் புகுந்துதொட்டியை அலசுவதில் சிரமம் ஏற்படும் நிலை ஏற்பட்டது. எனவே, விசிறியில் 6 துடுப்புகள் போன்ற பிளேடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சுழலும் விசிறிகளை மாணவர் ஸ்ரீகாந்த் உருவாக்கினார்.

    இதே முறையில் ஆயில் மற்றும் கியாஸ் துறைகளிலும் தொட்டிகளை சுத்தம் செய்யும் முயற்சியிலும் சென்னை ‘ஐ.ஐ.டி.’ பேராசிரியர்களும், மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

    கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் ‘ரோபோ’வின் செயல்பாடு குறித்த ஆய்வக பரிசோதனையை வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்டில் கழிவுநீர் தொட்டியில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மிகவும் உள்ளடங்கிய பகுதிகளில் ஏராளமான கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. அங்கெல்லாம் மிக குறுகிய தெருக்களில் வாகனங்களையும், பம்புகளையும் எடுத்துச் செல்ல முடியாது. ஆனால் ‘ரோபோ’வை எளிதாக எடுத்து சென்று கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய முடியும். #PoisonousGas #ToxicGas
    சுவீடனில் வேலைக்கு ஆட்கள் எடுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் எச்ஆர் பணிக்காக ரோபோ ஒன்று, பெண் போன்ற முக அமைப்பில், நவீன முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. #TengaiInterviewRobo
    ஸ்டாக்ஹோம்:

    உலகில் தொழில்நுட்பங்களின் பயன்பாடு மற்றும் வளர்ச்சி அன்றாடம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்நிலையில் நாட்டின் பல்வேறு இடங்களிலும் உள்ள நிறுவனங்களில் மக்களை கவர புதிய யுக்திகள் கையாளப்படுகின்றன.

    அந்த வகையில் சுவீடனில் பிரபல கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணிக்கு ஆட்கள் எடுக்கும் ரோபோவை உருவாக்கி உள்ளது. இது மிகவும் நுட்பமான கணினி மொழிகள் கொண்டு வடிவமைக்கப்பட்டதாகும்.

    இது குறித்து ரோபோ வடிவமைப்பாளர்கள் மற்றும் பயன்பாட்டாளர்கள் கூறியிருப்பதாவது:

    சுவீடனில் உள்ள படித்து முடித்து வேலை தேடும் இளைஞர்கள் 73 சதவீதம் பேர், பாலினம், வயது மற்றும் தோற்றம் போன்றவற்றால் பணி கிடைப்பதில்லை என தெரிவித்திருந்தனர். இதனால் கார்ப்பரேட் நிறுவனங்களில் இன்டர்வியூ நடத்தி வேலைக்கு ஆட்கள் எடுக்கும் ‘எச்ஆர்’ பணிக்காக  ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ பெண்ணின் முக அமைப்பு கொண்டதாகும். இதற்கு தங்காய் என பெயரிடப்பட்டுள்ளது.



    மனிதர்களை போல் அல்லாமல், மிகுந்த நடுநிலை தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவுடன் மைக்ரோ போன் கொண்டு எளிதாக உரையாடவும், அதன் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் இயலும். இந்த ரோபோ தற்போது சுவிடிஷ் மட்டுமே பேசக்கூடியதாகும். சுவீடனில் உள்ள மிகப்பெரிய கார்பரேட் நிறுவனத்தின் எச் ஆர் அமைப்பினர், கடந்த ஆண்டு அக்டோபரில் இதனை சோதனை செய்தது.

    தங்காய் எப்படி மனிதர்களை விட சிறந்த முறையில் பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும் என்றால், மனிதர்களாகிய நம்மில் பலர் ஒருவரை பார்த்ததும் தவறாக எண்ணும் வழக்கம் உள்ளது.  இதனால் பல திறமை வாய்ந்த இளைஞர்கள் வேலை வாய்ப்பை இழக்கின்றனர். இதனை தவிர்க்கவே இந்த ரோபோ உபயோகப்படுத்தப்படுமாம்.

    இந்நிலையில் இந்த ரோபோ மற்ற நாடுகளுக்கு உதவி புரிய இந்த ஆண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டிலோ தயார் செய்து விடப்படும். தற்போது இந்த ரோபோ ஆங்கிலத்தில் பேச பயிற்சி எடுத்து வருகின்றது.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #TengaiInterviewRobo
    நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்து, அங்கு பயிரிடும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையில், புதிய லூனார் ரோவரை சீனா அனுப்பி உள்ளது. #China #Mission #Moon
    பீஜிங்:

    நிலவு மற்றும் செவ்வாய் போன்ற பகுதிகளுக்கு மனிதனை அனுப்புவதற்கு முன்னர் அங்கு தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்களை அனுப்பி அவை எப்படி அங்குள்ள சூழ்நிலைகளை சமாளித்து தாக்குப்பிடிக்கின்றன மற்றும் அவற்றுக்கு எந்தவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று கண்டறிந்து ஆவணப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது சீனாவின் சாங் இ (Chang’e Program) திட்டம். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ‘சாங் இ 4 மிஷன்’ (Chang’e 4 Mission) எனும் திட்டத்தை சீனா செயல்படுத்தி உள்ளது.
     
    இதுவரை பூமியை நோக்கி காணப்படாத நிலவின் மற்றொரு பகுதியாக  கருதப்படும் வோன் கர்மான் என்னும் பகுதியில் சாங் இ-4 என்னும் இந்த செயற்கைக்கோள் தரையிறங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    சீனாவிலுள்ள ஷிசாங் விண்வெளி நிலையத்திலிருந்து லோங் மார்ச் 3பி என்னும் ராக்கெட்டில் இந்த ரோபோ, நிலவை நோக்கி செலுத்தப்பட்டது.

    இந்த முயற்சியின் மூலம் நிலவிலுள்ள பாறைகள், மண் ஆகியவற்றை பூமிக்கு கொண்டு வந்து மேலதிக ஆராய்ச்சிகளை செய்வதற்கு சீனா திட்டமிட்டுள்ளது.

    ஜனவரி மாதத்தின் தொடக்க பகுதி வரை இந்த செயற்கைக்கோள் நிலவில் தரையிறங்காது. ஆனால், குறிப்பிட்ட காலம் முடிவு செய்யப்பட்ட பிறகு செயற்கைக்கோள் நிலவின் வேறொரு மூலையிலுள்ள கரடுமுரடான பகுதியில் தரையிறங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சூரியனின் குறுங்கோள்களில் ஒன்று நிலவில் தெற்கு அரைக்கோளத்திலுள்ள அய்ட்கன் பேசினில் மோதியதால் அங்கு பெரும் பள்ளம் உண்டானது. எனவே, நிலவு குறித்த ஆராய்ச்சிகள் தொடங்கிய காலத்திலிருந்தே வோன் கர்மான் என்னும் இந்த இடத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    தற்போது சீனாவினால் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள் இதுவரை ஆராய்ச்சிகளே மேற்கொள்ளப்படாத நிலவின் தென் துருவப் பகுதியின் புவியியல் அமைப்பு குறித்த தகவல்களை சேமிப்பதோடு அங்கிருந்து பாறை துண்டுகள், மண் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வரும்.

    Tidal locking அல்லது ஓதப் பூட்டல் என்ற விளைவின் காரணமாக நம்மால் நிலவின் ஒரு பகுதியை மட்டுமே பார்க்க முடிகிறது. ஏனெனில், நிலவை சுற்றி வருவதற்கு எடுத்துக் கொள்ளும் அதே காலத்தை தன்னைத்தானே சுற்றி வருவதற்கும் நிலவு எடுத்துக் கொள்கிறது.

    பொதுவாக நிலவின் 'இருண்ட பக்கம்' என்றழைக்கப்படும் இந்த இடத்திலும் சூரிய வெளிச்சம் காணப்பட்டாலும், பூமியிலிருந்து இந்த இடத்தை பார்க்க முடியாது என்பதால்தான் இதை அவ்வாறு அழைக்கின்றனர்.

    பூமியின் தொலைதூரத்தில் ரேடியோ அலைகளை அடிப்படையாக கொண்ட தொலைநோக்கிகளை நிலவின் தென் துருவத்தில் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளையும் இந்த செயற்கைக்கோள் மேற்கொள்ளும்.

    அதுமட்டுமின்றி, நிலவில் உயிரியல் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக ஒரு பெட்டிக்குள் உருளைக்கிழங்கு, அராபிடாப்சிஸ் தாவரத்தின் விதைகள் மற்றும் பட்டுப்பூச்சி முட்டைகள்  மூன்று கிலோ கொண்ட கொள்கலனில் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

    நிலவை அடையும் பட்டுப்பூச்சி முட்டைகள் முதலில் பட்டுப்பூச்சிகளை உற்பத்தி செய்யும், பின்னர் அந்த பட்டுப்பூச்சிகள் நிலவில் கரியமில வாயுவை உற்பத்தி செய்யும். இதற்கிடையில், உருளைக்கிழங்கு மற்றும் அராபிடாப்சிஸ் செடிகள் வளர்ந்து ஒளிச்சேர்க்கை மூலம் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து நிலவில் ஒரு சிறிய சூழ்மண்டலத்தை (simple ecosystem) உருவாக்கும் என்கிறார் ஆய்வாளர் யுவான்சுன்.

    "லூனார் மினி பயோஸ்பியர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உபகரணத்தை 28 சீன பல்கலைக்கழகங்கள் இணைந்து உருவாக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  #China #Mission #Moon
    ×