search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரான்ஸ்"

    ஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் அர்ஜெண்டினா அணியை 5 -3 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #HockeyWorldCup2018 #France #Argentina
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள பிரான்ஸ் மற்றும் அர்ஜெண்டினா அணிகள் இன்று மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே பிரான்ஸ் அனி வீரர்கள் அபாரமாக ஆடினர். ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஹுயூகோ ஜெனஸ்டெட் ஒரு கோல் அடித்தார்.

    அவரை தொடர்ந்து 23-வது நிமிடத்தில் மற்றொரு வீரர் விக்டர் சார்லட் ஒரு கோலும், 26-வது நிமிடத்தில் மற்றொரு வீரரான அரிஸ்டைட் காய்ஸ்னி ஒரு கோலும் அடித்தனர். இதனால் பிரான்ஸ் அணி 3-0 என முன்னிலை பெற்றது.

    இதற்கு பதிலடியாக, ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் லூகஸ் மார்டினஸ் ஒரு கோல் அடித்தார். 
    30-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் காஸ்பர்டு பாம்கார்டன் ஒரு கோல் அடித்தார்.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 44 மற்றும் 48-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் கான்சால்டு பெய்லட் கோல் அடிக்க 3 - 4 என ஆனது. ஆட்டத்தின் 54-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் பிரான்கோயிஸ் கோயட் ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், அர்ஜெண்டினா அணியை 5- 3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.  இந்த போட்டியில் தோற்றாலும் அர்ஜெண்டினா அணி புள்ளிப்பட்டியலில் ஏ பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது.

    ஏ பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில், ஸ்பெயின் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி 2-2 என சமனிலையில் முடிந்தது. இதைத்தொடர்ந்து, புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்த ஸ்பெயின் அணி போட்டியை விட்டு வெளியேறியது. #HockeyWorldCup2018 #France #Argentina
    ஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான போட்டி 1 - 1 என சமனில் முடிந்தது. #HockeyWorldCup2018 #France #Spain
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள பிரான்ஸ், ஸ்பெயின் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்திலேயே 6-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் திமோதி கிளமெண்ட் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். அதன்பின்னர், ஆட்டத்தின் முதல் பாதி வரையில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் பிரான்ஸ் அணி 1-0 என முன்னிலை பெற்றது.

    இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் அல்வரோ இக்லியாஸ் ஒரு கோல் அடித்து ஆட்டத்தாஇ சமனிலைக்கு கொண்டு வந்தார். இதனால் ஆட்டம் சமனானது.

    இறுதியில், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1 -1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. #HockeyWorldCup2018 #France #Spain
    பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டதற்கு பிரான்சில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். #FrenchRevolution
    பாரீஸ்:

    பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதனால் அவற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை மீண்டும் அதிகரிப்பதால் வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயரும் என அதிபர் இம்மானுவல் மெக்ரான் அறிவித்தார்.

    இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. வெகுண்டெழுந்த மக்கள் நேற்று முன்தினம் நாடு முழுவதும் கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    2034 இடங்களில் விடிய விடிய போராட்டம் நடைபெற்றது. அதில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



    போராட்டக்காரர்கள் முக்கிய சாலைகளை மறித்து போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தினர். ரோட்டில் கற்கள், மரங்கள் போன்றவற்றை போட்டு இருந்தனர். ஆங்காங்கே டயர்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன.

    பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வன்முறை சம்பவங்களில் 409 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 28 பேர் போலீசார், எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் தீயணைப்பு படையினரும் அடங்குவர்.

    போராட்டத்தின்போது வன்முறை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். காயம் அடைந்தவர்களில் 14 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

    157 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தகவலை பிரான்ஸ் உள்துறை மந்திரி கிறிஸ்டோப் கேஸ்டனர் தெரிவித்தார்.

    இப்போராட்டத்தின் காரணமாக அதிபர் இம்மானுவேல் மெக்ரானின் செல்வாக்கு 25 சதவீதம் குறைந்துள்ளது. ஒரு பத்திரிகை பொதுமக்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தியது. அப்போது கடந்த மாதத்தை விட தற்போது மெக்ரானின் மக்கள் செல்வாக்கு மிகவும் குறைந்து இருப்பது தெரியவந்தது. #FrenchRevolution
    உலகப் போர் நூற்றாண்டு நினைவுநாள் அஞ்சலி கூட்டத்துக்கு சென்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காரின் குறுக்கே பாய்ந்த இரு பெண்களை போலீசார் கைது செய்தனர். #Trumpmotorcade #Parisprotesters
    பாரிஸ்:

    பிரான்ஸ் நாட்டு தலைநகரான பாரிசில் உள்ள ‘ஆர்க் டி டிரியோம்பே’ போர் நினைவு சின்னத்தில் சுமார் உலகில் உள்ள சுமார் 70 நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் இன்று அஞ்சலி செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் நினைவு சின்னத்துக்கு பலத்த பாதுகாப்புடன்  காரில் வந்து கொண்டிருந்தார். அவரது காருக்கு முன்னும் பின்னுமாக பாதுகாப்பு வீரர்கள் கார்களில் வந்தனர்.

    அப்போது, சாலையோர தடுப்பை தாண்டி குதித்த இரு பெண்கள் டிரம்ப் கார் அணிவகுப்பின் குறுக்கே மேலாடை இல்லாமல்  பாய்ந்தனர். அதற்குள் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அந்தப் பெண்களை டிரம்ப்பின் கார் கடந்து சென்று விட்டது. அவரது காருக்கு பின்னால் வந்த கார்களின் அருகே நின்று அவர்கள் டிரம்ப்பை எதிர்த்து கோஷமிட்டனர். 

    இதனால் அதிர்ச்சி அடைந்த பாரிஸ் நகர போலீசார் பாய்ந்தோடி சென்று அந்தப் பெண்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி கைது செய்தனர். 

    கைதான பெண்கள் டிரம்ப்பின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இணையதளம் மூலம் நடைபெற்ற ‘ஃபெமென்’ இயக்கத்தின் ஆதரவாளர் என தெரியவந்துள்ளது.

    முன்னதாக, இன்று காலை இதே இயக்கத்தை சேர்ந்த 3 பெண்கள்  ‘ஆர்க் டி டிரியோம்பே’ போர் நினைவு சின்னத்தின் அருகே மேலாடை இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். #Trumpmotorcade  #Parisprotesters 
    நான்காண்டுகளில் 2 கோடி உயிர்களை பறித்த முதல் உலகப் போர் முடிந்த நூற்றாண்டு நினைவுநாளான இன்று சுமார் 70 நாடுகளின் தலைவர்கள் பாரிஸ் நகரில் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தினர். #Worldleadersmark #WWIcentenary #Parisceremony
    பாரிஸ்: 

    முதல் உலகப் போர் முடிவுக்கு வந்த நூற்றாண்டு நினைவு நாளான இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உயிர்நீத்த தங்கள் நாட்டு வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

    பிரான்ஸ் நாட்டு தலைநகரான பாரிசில் உள்ள ‘ஆர்க் டி டிரியோம்பே’ போர் நினைவு சின்னத்தில் சுமார் உலகில் உள்ள சுமார் 70 நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் இன்று அஞ்சலி செலுத்தினர்.

    கொட்டும் மழையில் குடை பிடித்தவாறு மவுன ஊர்வலமாக தலைவர்கள் நடந்துவந்து போர்  நினைவு சின்னத்தின் அருகே திரண்டனர். 

    பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மாக்ரான் தலைமையில் இந்திய துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷிய பிரதமர் விளாடிமிர் புதின், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், கனடா பிரதமர் ஜஸ்ட்டின் டுருடேயு உள்ளிட்ட தலைவர்கள் ஊர்வலமாக அணிவகுத்து வந்தனர்.

    பாதுகாப்பு காரணமாக டிரம்ப், புதின் ஆகியோர் நடந்து வராமல் கார் மூலம் நினைவு சின்னத்தை வந்தடைந்தனர். நினைவு சின்னத்தில் டிரம்ப்பும் புதினும் கைகுலுக்கி கொண்டனர்.

    சரியாக காலை 11 மணி அடித்ததும் முதல் உலகப் போரில் தங்களது இன்னுயிரை நீத்த கோடிக்கணக்கான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தலைவர்கள் அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தினர். முன்னாள் ராணுவ வீரர்கள் உள்பட பல்லாயிரம் பேரும் இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    பின்னர், பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மாக்ரான் உருக்கமாக உரையாற்றினார்.

    உலகில் பல நாடுகள் இன்று தேசியவாதம் என்ற மனப்போக்கை கடைபிடித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். தேசப்பற்று அல்லது தேசபக்தி என்பது வேறு. தேசியவாதம் என்பது வேறு. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

    அமைதிக்கான நமது நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் வரலாறு நம்மை சில வேளைகளில் அச்சுறுத்தி வருகின்றது. தற்போது பழைய தீமைகள் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. 

    முதல் உலகப் போர் விட்டுச்சென்ற தடங்கள் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் இருந்து இன்னும் அழிந்தபாடாக இல்லை. 

    பருவநிலை மாற்றம், வறுமை, பஞ்சம் மற்றும் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக போரிடுவதற்கு அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும். அனைத்துக்கும் மேலாக அமைதிக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் மாக்ரான் வலியுறுத்தினார். #Worldleadersmark #WWIcentenary #Parisceremony
    பிரான்ஸ் நாட்டில் இந்தியா சார்பில் முதல் முதலாக அமைக்கப்பட்டுள்ள போர் நினைவு சின்னத்தை இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று திறந்து வைத்தார். #France #WarMemorial #VenkaiahNaidu
    பாரிஸ்:

    பிரான்ஸ் தலைநகரில் பாரிஸ் அமைதி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பிரான்ஸ் சென்றுள்ளார். அவருடன் அவரது மனைவி உஷாவும் சென்றுள்ளார்.

    முதலாம் உலகப் போர் முடிந்து நூறு வருடம் நிறைவடைந்ததை நினைவு கூரவும், சர்வதேச ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கவும் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மெக்ரான் தலைமை தாங்குகிறார். இதில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.



    இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் விலர்ஸ் குய்ஸ்லேனில் இந்தியா சார்பில் அமைக்கப்பட்ட போர் நினைவுச் சின்னத்தை துணை ஜனாதிபதி திறந்து வைத்தார்.

    அப்போது அவர் பேசுகையில், விலர்ஸ் குய்ஸ்லேனில் இந்தியா சார்பில் கட்டப்பட்டுள்ள போர் நினைவுச் சின்னத்தை திறந்து வைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். முதலாம் உலக போரில் உயிர் நீத்த பல்லாயிரக்கணக்கான இந்திய படைவீரர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும் என தெரிவித்தார்.
     
    முன்னதாக, பிரான்ஸ்வாழ் இந்திய மக்களை சந்தித்து வெங்கையா நாயுடு உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    #France #WarMemorial #VenkaiahNaidu
    பிரான்சிடம் இருந்து சுதந்திரம் பெறுவது தொடர்பாக நியூ கலிடோனியாவில் வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. #NewCaledonia #IndependenceReferendum
    பாரீஸ்:

    பிரான்ஸ் நாட்டின் காலனியாக பிரெஞ்சு பசிபிக் பிரதேசமான நியூ கலிடோனியா உள்ளது. அங்கு பிரான்சிடம் இருந்து நியூ கலிடோனியா சுதந்திரம் பெற்று தனிநாடாக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    இந்த நிலையில், நியூ கலிடோனியா, பிரான்சின் ஒரு பகுதியாக நீடிக்க வேண்டுமா அல்லது சுதந்திரம் பெற்று தனிநாடாக வேண்டுமா என்பது குறித்து மக்களின் கருத்தை அறிய பொது வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இந்த வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. வாக்காளர்கள் திரளாக வாக்குச்சாவடிகளுக்கு திரண்டு வந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

    இந்த நியூ கலிடோனியாவில் மின்னணு சாதனங்கள் தயாரிப்பதற்கு தேவையான நிக்கல் திரளாக கிடைக்கிறது. பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் இந்தப் பகுதியை மிக முக்கிய பகுதியாக பிரான்ஸ் அரசு கருதுகிறது.

    நியூ கலிடோனியா மக்களில் பெரும்பாலோர், தங்கள் பகுதி பிரான்சின் ஒரு பகுதியாக திகழ வேண்டும், சுதந்திரம் தேவையில்லை என்று கருதுவதாக தகவல்கள் கூறுகின்றன. எனவே பிரிவினையாளர்கள் இந்த பொது வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இல்லை என சொல்லப்படுகிறது. #NewCaledonia #IndependenceReferendum 
    தேச நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் எஸ் 400 ரக ஏவுகணை வாங்கப்படுகிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #MEA #RaveeshKumar
    புதுடெல்லி:

    வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    'பிரான்சிடம் இந்தியா வலுவான உறவை கொண்டுள்ளது. இந்தியாவின் மிக முக்கிய நட்பு நாடுகளில் பிரான்சும் ஒன்று. இந்தியா- பிரான்சு இடையேயான உறவில் எந்த தொய்வும் இல்லை.

    தேச நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் எஸ் 400 ரக ஏவுகணை வாங்கப்படுகிறது. நமது கொள்கைகள் மற்றும் எண்ணத்தை அமெரிக்காவிடம் தெரிவித்து விட்டோம். இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். நமது எதிர்பார்ப்புகளையும் அந்நாட்டிடம் தெரிவித்து விட்டோம். ஈரான் மீதான தடை இந்தியாவை பாதிக்காது என்று அமெரிக்க மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் விவகாரத்தை பொறுத்தவரை, பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக நடக்க முடியாது என்பதில் தெளிவாக உள்ளோம். இதனால், தான் இந்தியா பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. தனது மண்ணில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன் பேச்சுவார்த்தைக்கான ஆக்கப்பூர்வான சூழ்நிலையை பாகிஸ்தான் ஏற்படுத்த வேண்டும்.

    எச்1 பி விசா விவகாரம் முக்கியமானது. இது குறித்து அமெரிக்க அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இரண்டு நாடுகளுக்கு இடையில் அமைச்சர்கள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையின் போதும் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

    இலங்கையுடன் வலுவான நல்லுறவை கொண்டுள்ளோம். இருநாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இலங்கை பிரதமர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்'.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #MEA #RaveeshKumar
    பிரான்சில் சினிமா தியேட்டருக்குள் புகுந்த மர்மநபர் ஒருவர், திடீரென பொதுமக்கள் மீது ஆவேசமாக கத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.
    பாரீஸ்:

    வடக்கு பிரான்சில் உள்ள தொழில்துறை நகரம் ரென்னீஸ். அங்கு கயுமெண்ட என்ற சினிமா தியேட்டர் உள்ளது. அங்கு நேற்றிரவு காட்சி நடந்து கொண்டிருந்தது.

    உள்ளூர் நேரப்படி இரவு 10 மணியளவில் உள்ளே புகுந்த மர்மநபர் பொது மக்களை கத்தியால் தாக்கினான். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் பயத்தில் அலறியடித்து உயிர்பிழைக்க தப்பியோடினர்.

    தகவலறிந்து அங்கு போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்தனர். கண்ணீர்புகை குண்டுகளை வீசி கூட்டத்தினரை போலீசார் கட்டுப்படுத்தினர்.

    மேலும் தாக்குதலில் ஈடுபட்ட மர்மநபரை போலீசார் கைது செய்தனர். ஆனால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை. தாக்குதலில் 2 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உலக கோப்பையை வென்றது அற்புதமானது என்று பிரான்ஸ் கால்பந்து அணியின் பயிற்சியாளர் டெஸ்சாம்ப்ஸ் தெரிவித்தார். #FIFAWC2018 #Champion #France
    மாஸ்கோ:

    ரஷியாவில் அரங்கேறிய 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் மாஸ்கோவில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி 2-வது முறையாக உலக கோப்பையை உச்சி முகர்ந்தது. ஏற்கனவே பிரான்ஸ் அணி 1998-ம் ஆண்டில் உலக கோப்பையை வென்று இருந்தது.

    பிரான்ஸ் அணி கோப்பையை வென்ற மறு வினாடியே பிரான்ஸ் நாடு முழுவதும் கொண்டாட்டம் களை கட்டியது. ரசிகர்கள் தெருக்களுக்கு திரண்டு வந்து உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய கொடிகளுடன் தெருக்களில் வெற்றி உலா வந்தனர். பாரீஸ் உள்பட சில இடங்களில் ரசிகர்களின் வெற்றி கொண்டாட்டம் வரம்பு மீறியது. சிலர் கடைகளை அடித்து நொறுக்கினார்கள். ரசிகர்களின் கொண்டாட்டம் எல்லை மீறியதால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி ரசிகர்களை கலைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    வெற்றிக்கு பிறகு பிரான்ஸ் கால்பந்து அணியின் பயிற்சியாளர் டெஸ்சாம்ப்ஸ் கருத்து தெரிவிக்கையில், ‘உலக கோப்பையை வென்றது உண்மையிலேயே அற்புதமானதாகும். இறுதிப்போட்டியில் நாங்கள் பெரிய அளவில் விளையாடவில்லை. இருப்பினும் எங்களது மன உறுதியை வலுவாக வெளிப்படுத்தினோம்’ என்றார்.

    உலக கோப்பையை கைப்பற்றிய பிரான்ஸ் கால்பந்து அணி நேற்று நாடு திரும்பியது. பாரீஸ் நகரில் வீரர்கள் திறந்தவெளி பஸ்சில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட போது எடுத்தபடம். வீரர்களை வரவேற்க ஏராளமான ரசிகர்கள் திரண்டு இருந்தனர்.

    பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிரிஸ்மான் அளித்த பேட்டியில், ‘வெற்றிக்களிப்பில் நான் எங்கு இருக்கிறேன் என்பதே தெரியவில்லை. சிறப்புக்குரிய இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. உலக கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் என்பதால் நாங்கள் தொடக்கத்தில் சற்று பயத்துடன் தான் செயல்பட்டோம். போகப்போக இயல்பு நிலைக்கு திரும்பி தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தோம். அதில் நாங்கள் வித்தியாசத்தை காட்டினோம். உலக கோப்பையை எங்கள் நாட்டுக்கு கொண்டு செல்லும் ஆவலுடன் இருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.

    பிரான்ஸ் அணியின் நடுகள வீரர் பால் போக்பா கருத்து தெரிவிக்கையில், ‘உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்று எனது இளம் வயதிலேயே கனவு கண்டேன். அது நிறைவேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களால் இந்த கோப்பையை வென்று நாட்டுக்கு பெருமை சேர்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. இறுதி ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு நமது உலக கோப்பை கனவு, நனவாக இன்னும் 90 நிமிடங்கள் தான் இருக்கிறது என்று எல்லோரிடமும் தெரிவித்தேன்’ என்றார்.

    தோல்வி கண்ட குரோஷியா அணியின் பயிற்சியாளர் ஜட்கோ டாலிச் கருத்து தெரிவிக்கையில், ‘நான் நடுவர்களின் முடிவு குறித்து ஒருபோதும் கருத்து தெரிவிக்க மாட்டேன். இருப்பினும் ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன். உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இதுபோல் பெனால்டி வாய்ப்பை நடுவர் வழங்கக்கூடாது. இதனால் பிரான்ஸ் அணியின் வெற்றி தரம் எந்த வகையிலும் குறைந்து விடாது. இந்த உலக கோப்பை போட்டியில் நாங்கள் ஆடிய சிறந்த ஆட்டம் இதுவாக இருக்கலாம். நாங்கள் ஆட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்து இருந்தோம். ஆனால் கோல்களை விட்டு விட்டோம். பிரான்ஸ் போன்ற வலுவான அணிக்கு எதிராக ஆடுகையில் தவறு செய்யக் கூடாது. இந்த தோல்வி எங்களுக்கு வருத்தம் அளித்தாலும், உலக கோப்பை போட்டியில் எங்களது செயல்பாட்டை நினைத்து பெருமிதம் அடைகிறோம்.

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் 2-வது இடம் பிடித்த குரோஷியா அணி நேற்று சொந்த நாட்டுக்கு திரும்பியது. விமான நிலையத்தில் இருந்து வீரர்கள் திறந்தவெளி பஸ்சில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட காட்சி. லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து குரோஷிய அணியினருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    நாங்கள் நன்றாக விளையாடினோம். ஆனால் பெனால்டி வாய்ப்பு எங்களை வெளியேற்றி விட்டது. பெனால்டிக்கு பிறகு மீண்டு வருவது கடினமாகி விட்டது. உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்று நாங்கள் அதிகம் விரும்பினோம். ஆனால் கால்பந்து ஆட்டத்தின் மகத்துவம் இது தான். பிரான்ஸ் அணி எங்களை ஆச்சரியப்படுத்தவில்லை. நாங்கள் சுய கோலும், பெனால்டி வாய்ப்பும் அவர்களுக்கு வழங்கி விட்டோம். எனது எதிர்காலம் குறித்து தற்போது முடிவு எதுவும் எடுக்க முடியாது. நாடு திரும்பி ஓய்வுக்கு பிறகு முடிவு செய்வேன்’ என்றார். #FIFAWC2018 #Champion #France
    உலக கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்று நாடு திரும்பிய பிரான்ஸ் அணி வீரர்களுக்கு அந்த நாட்டு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். #WorldCup2018 #France
    பாரீஸ்:

    ரஷியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

    உலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணிக்கு உலக தலைவர்க்ள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். பிரான்ஸ் அணியின் வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் பல்வேறு இடங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர்.



    இதைத் தொடர்ந்து, பிரான்ஸ் திரும்பிய அந்நாட்டு வீரர்களுக்கு தலைநகர் பாரீசில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரணடு வரவேற்றனர். #WorldCup2018 #FifaWorldCup2018 #FRACRO #CROFRA #FrancevCroatia
    20 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து தொடரில் கோப்பையை கைப்பற்றி அசத்திய பிரன்ஸ் அணிக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். #WorldCup2018 #FRACRO
    ரஷியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு பரிசுத்தொகையாக 255 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

    உலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணிக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், உலக கோப்பை வென்ற பிரான்ஸ் அணியின் வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை வென்ற பிரான்ஸ் அணிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    ஏற்கனவே, கடந்த 1998-ம் ஆண்டு பிரான்ஸ் அணி முதல் முறையாக உலக கோப்பையை வென்றிருந்தது. இதன்மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இரண்டாவது தடவையாக உலக கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது. #WorldCup2018 #FifaWorldCup2018 #FRACRO #CROFRA
    ×