search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறிக்கை"

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகார் மீது இன்று அறிக்கை தாக்கல் செய்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறை, முறைகேடு எதுவும் நடக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது. #ChennaiHC
    சென்னை:

    தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகள் ஒதுக்கியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என்றும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகார் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

    அதனால், இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விசாரித்து வருகிறார். இந்த வழக்கு நீதிபதி முன்பு கடந்த 12-ந் தேதி விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதி, ‘நெடுஞ்சாலை துறை ஒப்பந்த பணிகளை உறவினர்களுக்கு வழங்கியதாக முதல்-அமைச்சருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட்டதா?

    அந்த விசாரணை நிலை என்ன?. ஒப்பந்த ஒதுக்கீடு முறைகேடுகள் குறித்த விசாரணையின் நிலை என்ன?’ என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், ‘1991ம் ஆண்டு முதல் எஸ்.பி.கே. நிறுவனம் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சியிலும் அவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட ஒட்டச்சத்திரம்-தாராபுரம்-அவினாசி பாளையம் 4 வழிச்சாலை ஒப்பந்த பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி அதிகரிப்படவில்லை. முதல்-அமைச்சர் மீதான புகாரில் முகாந்திரம் உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்த அரசின் முன் அனுமதி பெற வேண்டும். இதுவரை நடத்தப்பட்ட விசாரணை விவரங்களை வெளிப்படையாக தற்போது கூற முடியாது’ என்று கூறினார்.

    இதனையடுத்து இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில், தினந்தோறும் நடத்தப்பட்ட விசாரணையின் விரிவான அறிக்கையை மூடி முத்திரையிட்டு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் புலன் விசாரணை தொடர்பான விவரங்களை கொண்ட ரகசிய அறிக்கையை நீதிபதி முன்பு சமர்பித்தார்.


    பின்னர், ‘முதல்-அமைச்சருக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் எதுவும் இல்லை. இந்த டெண்டர் வழங்கியதில் எந்த முறைகேடு நடைபெறவில்லை’ என்று அட்வகேட் ஜெனரல் கூறினார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இந்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ஒப்பந்த நிறுவனங்கள், அதன் உரிமையாளர்கள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும் என்றார். இதற்கு அட்வகேட் ஜெனரல் கால அவகாசம் கேட்டார். இதற்கு அனுமதித்த நீதிபதி, விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். #ChennaiHC #EdappadiPalaniswami
    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் பொதுப்பணித்துறை நடத்திய ஆய்வில் 7 மேம்பாலங்கள் மிக மோசமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Kolkata
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் கடந்த 4-ம் தேதி மேஜெர்ஹட் என்ற மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பொதுப்பணித்துறை முறையாக பராமரிக்காததே இந்த விபத்துக்கு காரணம் என பரவலாக குற்றம்சாட்டப்பட்டது.

    இதையடுத்து, இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், இதர மேம்பாலங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில், பொதுப்பணித்துறை நடத்திய ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, கொல்கத்தாவில் உள்ள 20 மேம்பாலங்களில் 7 மேம்பாலங்கள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பாலங்களில் கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்குமாறு காவல்துறைக்கு கேட்டுக்கொள்ளப்பட்டது.

    பொதுப்பணித்துறை குறிப்பிட்ட 7 மேம்பாலங்களில் 4 பாலங்களில் கனரக வாகன போக்குவரத்துக்கு காவல்துறை தடை விதித்தனர். இருப்பினும், இரவு நேரங்களில் அந்த மேம்பாலங்களில் சரக்கு வாகனங்கள் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    மேலும், இந்த மேம்பாலங்களை சீர்செய்வதற்கு பல கோடி ரூபாய் செலவு ஆகும் என்றும், அதற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், ஏலம் விடப்பட்டு மிக விரைவில் அனைத்து மேம்பாலங்களும் சீர் செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Kolkata
    2025-ம் ஆண்டுவாக்கில் பாகிஸ்தான் உலகின் 5-வது பெரிய அணுசக்தி நாடாக மாறி விடும் என கூட்டமைப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Pakistan #NuclearPower
    வாஷிங்டன்:

    அமெரிக்க நாட்டில் ‘பாகிஸ்தானிய அணு ஆயுதங்கள் - 2018’ என்ற தலைப்பில் ஹான்ஸ் கிறிஸ்டன்சென், ராபர்ட் நோரீஸ், ஜூலியா டயாமண்ட் ஆகிய 3 பேர் ஒரு அறிக்கை தயாரித்து உள்ளனர். இவர்களில் ஹான்ஸ் கிறிஸ்டன்சென், அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பின் இயக்குனர் ஆவார்.

    அவர்கள் தயாரித்து உள்ள அறிக்கையில், “பாகிஸ்தானில் தற்போது 140 முதல் 150 அணுகுண்டுகள் வரை இருக்கலாம். இதே வேகத்தில் அந்த நாடு போய்க்கொண்டு இருந்தால், 2025-ம் ஆண்டுவாக்கில் அந்த நாட்டிடம் 220 முதல் 250 அணுகுண்டுகள் வரை சேர்ந்துவிடும். இது நடந்துவிட்டால், பாகிஸ்தான் உலகின் 5-வது பெரிய அணுசக்தி நாடாக மாறி விடும்” என கூறி உள்ளனர்.

    பாகிஸ்தான் எத்தனை அணுசக்தி திறன் கொண்ட லாஞ்சர்களை நிறுத்துகிறது, இந்தியாவின் அணு ஆயுத வளர்ச்சி எப்படி அமைகிறது என்பதைப் பொறுத்தே அந்த நாடு அணுகுண்டுகள் கையிருப்பை அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. #Pakistan #NuclearPower  
    கர்நாடக மந்திரி சா.ரா.மகேஷ் தனிப்பட்ட முறையில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பற்றி கூறிய கருத்து மாநிலங்களவையின் கண்ணியத்தை குறைப்பதாகும் என ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. #NirmalaSitharaman #SARAMahesh
    புதுடெல்லி:

    கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் வெள்ள சேதங்களை நேரில் பார்வையிட்ட ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், பின்னர் மடிகேரி நகரில் மாவட்ட பொறுப்பு மந்திரி சா.ரா.மகேஷ், கலெக்டர் ஸ்ரீவித்யா மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனையும் நடத்தினார். இதில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளும் உள்ளூர் பா.ஜனதா பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.



    அப்போது மந்திரி சா.ரா.மகேஷ் குறுக்கிட்டு “இந்த கூட்டத்தை பிறகு வைத்துக்கொள்ளலாம். உங்களுடைய பேச்சை முடியுங்கள்” என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ராணுவ மந்திரி கோபம் அடைந்து எனக்கு பாடம் சொல்லித் தரவேண்டாம் என்று கூறியதாக தகவல்கள் வெளியானது. மந்திரி சா.ரா.மகேஷ், இது தொடர்பாக ராணுவ மந்திரியை குற்றம்சாட்டி ஊடகங்களுக்கு பேட்டியும் அளித்தார்.

    இது தொடர்பாக ராணுவ அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “மாவட்ட நிர்வாகம் வகுத்துத்தந்த நிகழ்ச்சி நிரலின்படிதான் ராணுவ மந்திரி அந்த கூட்டத்தில் பங்கேற்றார். ஆனால் சா.ரா.மகேஷ், தனிப்பட்ட முறையில் ராணுவ மந்திரி பற்றி கருத்து தெரிவித்து இருக்கிறார். இது மாநிலங்களவையின் கண்ணியத்தை குறைப்பதாகும். மேலும் இந்திய ஆட்சி அமைப்பு முறை பற்றி அவருக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. மாநில மந்திரியின் இந்த செயல் துரதிர்ஷ்டவசமானது” என்று கூறப்பட்டு உள்ளது. #NirmalaSitharaman #SARAMahesh
    கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியவர்களுக்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். #KarunanidhiDeath #MKStalin #DMK
    சென்னை:

    கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியவர்களுக்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஓய்வறியா சூரியனாகத் திகழ்ந்த தலைவர் கருணாநிதியை அவரது உயிரினும் மேலான உடன்பிறப்புகளான நீங்களும், நானும் மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் இழந்து கண் கலங்கி நிற்கிறோம்.



    தலைவர் நம்மை விட்டுப் பிரிந்த வேதனை மிகுந்த நிலையில் ஒட்டுமொத்த இந்தியாவே அவரது மரணத்தினால் கலங்கி நின்று இரங்கல் தெரிவித்தபோது, 95 வயதில், 81 வயது பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான தலைவரின் பேராற்றலும் பெரும் சாதனைகளும் தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, இந்திய திருநாட்டுக்கே எந்த அளவு பயன் தந்திருக்கிறது என்பதை உணர்த்தியது.



    ஜனநாயகத்தின் அணையா தீபமாகவும், சுயமரியாதைக் கொள்கையின் குன்றாகவும், நாட்டின் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் போர்ப்படை தளபதியாகவும், தமிழர்களின் அழுத குரலுக்கு ஓடி வரும் உத்தம தலைவராகவும் திகழ்ந்த கருணாநிதி திராவிட இயக்கத்தின் தன்மான உணர்வுகளை போற்றிப் பாதுகாத்தவர்.

    அந்த மாபெரும் தலைவருக்கு இறுதி மரியாதை செலுத்திய பிரதமர், மத்திய மந்திரிகள், கவர்னர்கள், பல்வேறு மாநில முதல்-மந்திரிகள், அமைச்சர்கள், அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்கள், தமிழ்ச் சான்றோர், கலைத்துறையினர், பல்வேறு துறை சார்ந்த பெருமக்கள், தலைவர் கலைஞர் அவர்களின் உயிர்காக்கப் போராடிய காவேரி மருத்துவமனை நிர்வாகத்தினர், மருத்துவர்கள் மற்றும் அல்லும், பகலும் மருத்துவமனை வாசலிலேயே இருந்த பொதுமக்களுக்கும், தி.மு.க. தொண்டர்களுக்கும் கருணாநிதி உடல்நிலை குறித்த செய்திகளை உடனுக்குடன் வழங்கிய பத்திரிகை ஊடகத்துறையினர் என அனைவருக்கும் தி.மு.க.வின் செயல் தலைவர் என்ற முறையிலும், கருணாநிதியின் மகன் என்ற முறையிலும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.



    வங்கக் கடலோரம் துயில் கொள்ளும் தங்கத் தலைவரான பேரறிஞர் அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்றவரான நம் தலைவர் கருணாநிதி தான் திரும்பி வரும்போது அந்த இதயத்தை பத்திரமாக அண்ணாவின் காலடியில் ஒப்படைப்பதாக கவிதை வழியாக உறுதி மொழி அளித்திருந்தார்.

    அதனை நிறைவேற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு உள்ள நிலையில், மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்கத்தில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்கக்கோரி முறைப்படி கோரிக்கை விடுத்தோம். நேரிலும் சென்று வலியுறுத்தினோம். ஆனால், வஞ்சக அ.தி.மு.க அரசின் காழ்ப்புணர்சிகளாலும், அவர்களை ஆட்டுவிப்போரின் சூழ்ச்சிகளாலும் அண்ணா சதுக்கத்தில் இடம் ஒதுக்க மறுத்தனர்.



    அண்ணாவுக்கு கருணாநிதி அளித்த உறுதிமொழியை நிறைவேற்றிட உறுதிபூண்டு, சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்டுள்ளோம். கருணாநிதி நிறைவேற்றிய திட்டங்களையும் நிகழ்த்திய சாதனைகளையும் போற்றும் வகையில் அண்ணாவுடன் இணையும் “இறுதிப் பரிசை” நீதிபதிகளே வழங்கி இருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கும், கடற்கரையில் நினைவிடங்கள் தொடர்பாக தொடுத்திருந்த வழக்குகளை திரும்பப் பெற்ற நல் உள்ளங்களுக்கும், நீதிமன்றத்தில் போராடிய தி.மு.க. சட்டத்துறையினருக்கும், குறிப்பாக உயர்நீதிமன்ற அமர்வில் அழுத்தந்திருத்தமான வாதங்களை வைத்து நீதி கிடைக்க செய்த தி.மு.க. சட்டதிட்ட திருத்த குழு செயலாளரும், மூத்த வழக்கறிஞருமான வில்சனுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    கருணாநிதியின் முகத்தை ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என்று சென்னைக்கு உணர்ச்சிப்பெருக்குடன் ஓடோடி வந்த லட்சோபலட்சம் தி.மு.க. தொண்டர்களையும், பொதுமக்களையும் தாங்கிப் பிடிக்க முடியாமல் ராஜாஜி அரங்கம், மெரினா கடற்கரை ஏன் ஒட்டு மொத்த சென்னையே தத்தளித்து நின்றது.

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள அனைத்து தலைவர்களும் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்து கருணாநிதிக்கு கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்தியதை உடன்பிறப்பே நீ கண்டாய், கதறி அழுதாய், கண் கலங்கி நின்றாய்.

    காவிரி நதி தீரத்தில் பிறந்து வளர்ந்த கருணாநிதியை காவேரி மருத்துவமனையிலிருந்து கொண்டு சென்றதிலிருந்து மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்தது வரை நீங்கள் கலங்கி நின்றாலும், ராணுவக் கட்டுப்பாட்டுடன் உனது “கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை” சிரமேற்கொண்டு நிறைவேற்றியதை இந்தியாவே திரும்பிப் பார்த்திருக்கிறது. கருணாநிதியின் புகழுக்குப் பெருமை சேர்த்துள்ளது. அதற்கு நன்றி சொல்ல வார்த்தைகள் கிடைக்காமல் தவிக்கிறேன்.

    வங்கக்கடல் மாநகரத்தில் புகுந்ததுபோல மக்கள் கடலாக காட்சியளித்த நிலையில், அதனை ஒழுங்குபடுத்துவதில் அக்கறை செலுத்திய காவல்துறையினருக்கும், அரசின் ஏற்பாடுகளை செய்த அரசு அதிகாரிகளுக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மிக சோதனையான காலகட்டத்தில் கருணாநிதியின் லட்சிய தீபத்தை நம் கையில் எடுத்துக் கொண்டு, தமிழர்களுக்கும், இந்திய திருநாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் நம் அனைவருக்கும் இருக்கிறது.

    ஈடு செய்ய முடியாத பேரிழப்பான கருணாநிதியின் மரணத் துயரச் சுமையைத் தாங்கியபடி திரும்பிச் செல்கின்ற பயணத்தில் மிகவும் பத்திரமாகவும், அமைதியாகவும் செல்ல வேண்டும் என்றும் இரு கரம் கூப்பி வேண்டுகோள் விடுக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #KarunanidhiDeath #MKStalin #DMK 
    சென்னை காவேரி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #DMK #Karunanidhi #KauveryHospital #GetWellKarunanidhi
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி சிறுநீர்  தொற்று காரணமாக கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதி இன்னும் 2 நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் என டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில், கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இன்றிரவு 8 மணியளவில் காவிரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘ திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு இம்மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர். இந்த மருத்துவ உதவிகளுடன் அவரது உடல்நிலை சீராக உள்ளது. #DMK #Karunanidhi #KauveryHospital #GetWellKarunanidhi
    பாவ மன்னிப்பு கோரிய பெண்ணை பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கேரள அரசு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Kerala #SupremeCourt
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தனது திருமண வாழ்வுக்கு முன்னதாக  நடந்த தவறு குறித்து பாவமன்னிப்பு கேட்பதற்காக சென்ற பெண்ணை வற்புறுத்தி பாதிரியார்கள் சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்த பெண்ணின் கணவர் மூலம் வெளிச்சத்துக்கு வந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தில் பாதிரியார்கள் மீது குற்றவழக்குகள் பதியப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாதிரியாரின் ஜாமீன் மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

    இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக வருகிற ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், ஆகஸ்ட் 6-ம் தேதி வரை குற்றம்சாட்டப்பட்டுள்ள பாதிரியார்கள் ஜார்ஜ் மற்றும் சோனி வர்க்கீஸ் ஆகியோரை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. #Kerala #SupremeCourt
    அமெரிக்காவில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் மூட்டை பூச்சி தொல்லை இருப்பதாக எழுந்த புகாருக்கு அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. #AirIndia
    புதுடெல்லி:

    ஏர் இந்தியா விமானம் மூலம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து இந்தியாவுக்கு டோன் சேகர் என்ற பயணி கடந்த 17-ம் தேதி வந்துள்ளார். இந்த பயணத்தின் போது மூட்டை பூச்சிகளின் தொல்லையால் மிகவும் அவதிப்பட்டதாகவும், தனது மனைவியும் குழந்தையும் கூட பாதிக்கப்பட்டதாகவும் விமான போக்குவரத்து விவகாரத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவை டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டார்.

    இதே போல், ஜூலை 20-ம் தேதி நியூ ஆர்க்கில் இருந்து இந்தியாவுக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணியும் மூட்டை பூச்சிகளால் கடிபட்ட தனது அனுபவத்தை ட்விட்டரில் பதிவிட்டார்.



    இந்நிலையில், இந்த ட்வீட்டுகளுக்கு பதிலளித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், இதுபோன்ற சம்பவம் எதிர்பாராதவிதமாக எப்போதாவது நடக்கும் நிகழ்வு ஆகும். இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாக விசாரித்து விரைவில் சரிசெய்யப்படும் என தெரிவித்துள்ளது.

    மேலும், அனுபவமிக்க நிபுணர்களை கொண்டு பயணிகளின் விருப்பத்துக்கு ஏற்றவாறு இருக்கைகள் உள்ளிட்டவை மாற்றி அமைக்கப்படும் எனவும் தனது அறிக்கையில் ஏர் இந்தியா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. #AirIndia
    மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததால், அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே உள்ள மர்ம கூட்டணி அம்பலமாகியுள்ளது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் நலன்களை ஒட்டு மொத்தமாகப் புறக்கணித்துள்ள பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்காமல், தமிழக மக்களுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்திருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தன் சம்பந்தியின் ‘பார்ட்னர்’ வருமான வரித்துறை சோதனையில் சிக்கிக்கொண்டார் என்ற ஒரே காரணத்திற்காக, மத்திய பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்து, தன்னை எப்படியாவது ஊழல் வழக்குகளில் இருந்து காப்பாற்றிவிடுங்கள் என்று சுயநலத்தின் உச்சமாக விண்ணப்பம் வைத்திருக்கிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

    நாட்டின் ஜனநாயகத்திற்கும், சமூக நீதிக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும், மாநில சுயாட்சிக் கொள்கைகளுக்கும் முற்றிலும் எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசை எதிர்க்க முதுகெலும்பின்றி, வருமான வரித்துறை சோதனையில் மிரண்டு, நடுங்கி பா.ஜ.க.விடம் மண்டியிட்டு, ஆதரவு தெரிவித்துள்ள முதல்-அமைச்சரும், தமிழ்நாட்டின் சுயமரியாதையை டெல்லி துரைத்தனத்திடம் மொத்தமாக அடகு வைத்திருக்கும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.பி.க்களும் தமிழக மக்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்திருக்கிறார்கள்.

    தமிழகத்தைப் பொறுத்தவரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. முழுக்க முழுக்க பா.ஜ.க.வின் பினாமி கம்பெனியாகச் செயல்படுகிறது என்பது தற்போது நூற்றுக்கு நூறு சதவீதம் நிரூபிக்கப்பட்டுள்ளது. “எங்களுக்குள் அரசு ரீதியான உறவு மட்டுமே இருக்கிறது” என்று இதுவரை வாய்கிழியப் பேசி வந்த அ.தி.மு.க பா.ஜ.க.வினரின் முகமூடி இப்போது கிழிந்து தொங்குகிறது. கண்ணை மூடிக்கொண்டு மத்திய பா.ஜ.க. அரசை ஆதரித்ததன் மூலம் “பா.ஜ.க. - அ.தி.மு.க.” இடையே உள்ள மர்மக் கூட்டணியும் அம்பலமாகிவிட்டது.

    திடீரென்று நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பிற்கு 4 நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சருடைய சம்பந்தியின் பார்ட்னரின் நிறுவனங்களில் வருமான வரித்துறையை ஏவி சோதனை செய்த உள்நோக்கம் பா.ஜ.க.விற்கு நிறைவேறிவிட்டது. ஆகவே, அ.தி.மு.க. எம்.பி.க்களை வளைத்துப்போடுவதற்கு பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு எடுத்த “பிரத்யேக முயற்சி” தான் இந்த வருமான வரித்துறை சோதனையே தவிர ஊழலை ஒழிக்கும் நடவடிக்கை அல்ல என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

    இதுவரை தமிழ்நாட்டு நலன்களை வஞ்சிப்பதில் அ.தி.மு.க. - பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளும் கைகோர்த்துச் செய்த துரோகம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அ.தி.மு.க. எதிர்த்து வாக்களித்திருப்பதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெறுவதற்காக நம்பகத்தன்மை வாய்ந்த வருமான வரித்துறையை துஷ்பிரயோகம் செய்து அந்த அமைப்பின் நம்பகத்தன்மையை சீர்குலைத்திருக்கும் மத்திய பா.ஜ.க. அரசையும், மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்துவிட்டு, மத்திய பா.ஜ.க. அரசை ஆதரித்திருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசையும் மறைந்திருந்த பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டதால், தமிழக மக்கள் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள்; ஊழல் அ.தி.மு.க.வுடனோ வேறு எந்த வழியிலோ தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பா.ஜ.க.வை ஒரு போதும் தி.மு.க. அனுமதிக்காது; எப்போது தேர்தல் வந்தாலும் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 
    கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது மாணவி உயிரிழந்த சம்பவத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. #CentralHomeMinistry
    புதுடெல்லி:

    கோவை மாவட்டத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டபோது பரிதாபமாக லோகேஸ்வரி என்ற மாணவி உயிரிழந்தார். பேரிடர் கால ஒத்திகை தொடர்பான பயிற்சியின் போது நடந்த இந்த விபத்து நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இறந்த மாணவி லோகேஸ்வரியின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளது.

    இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கோவை தனியார் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது லோகேஸ்வரி என்ற மாணவி உயிரிழந்தது துரதிஷ்டவசமானது என்றும், வருத்தமளிப்பதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    மேலும், பயிற்சியின்போது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பங்கேற்கவில்லை எனவும், கல்லூரியில் பயிற்சி அளித்த ஆசிரியருக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 2 தனிப்படைகளை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #CentralHomeMinistry
    சமீபத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்றில், மோதல்களினால் குழந்தைகள் அதிக அளவில் கொல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #UnitedNations
    வாஷிங்டன்:

    உலக அளவில் உள்நாட்டு போர்களும், பயங்கரவாத எதிர்ப்பு போர்களும் ஆங்காங்கே நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஒரு காலத்தில் இந்தியாவில் மட்டுமன்றி, உலக நாடுகள் அனைத்திலும், சிறிய மோதல் ஏற்பட்டால் கூட பெண்களையும் குழந்தைகளையும் காப்பதும், அவர்களை கொல்லாது இருப்பதுமே வீரமாக கருதப்பட்டது.

    ஆனால், இந்த மரபை மாற்றி எழுதும் வகையில், ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கை அமைந்துள்ளது. சிறுவர்கள் மற்றும்  ஆயுத மோதல்கள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பல்வேறு கலவரங்களில், மோதல்களில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 10 ஆயிரம் குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், சுமார் 8 ஆயிரம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராளிகளாக தங்களை மாற்றிக் கொண்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிறுவர்களும், சிறுமிகளும் நீண்ட வன்முறை நெருக்கடி காரணமாக அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும், இதனை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் இருந்தாலும் அதிகரித்துள்ள வன்முறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



    இந்த அறிக்கையானது இந்தியா உட்பட சுமார் 20 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. 9 அரசு படைகளும், 57 ஆயுதம் ஏந்திய குழுக்களும் என மொத்தம் 66 குழுக்கள் மோதல்களில் ஈடுபடுவதாக ஐ.நா. வல்லுநர் விர்ஜினியா கம்பா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய விர்ஜினியா கம்பா, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, பள்ளிகளிலும், மருத்துவமனைகளிலுமே அதிக அளவில் தாக்குதல் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.

    மத்திய ஆப்ரிக்க குடியரசு, காங்கோ, மியான்மர், தெற்கு சூடான், சிரியா, ஏமன் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட மோதல்களிலேயே அதிக அளவில் குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதாக கூறிய அவர், நைஜீரியாவில் மனித வெடிகுண்டுகளாக குழந்தைகள் உபயோகிக்கப்பட்ட மோசமான நிகழ்வை அதற்கு உதாரணமாக சுட்டிக்காட்டினார்.

    ஈராக் நாட்டில் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக ஆயிரம் குழந்தைகள் கைது செய்யப்பட்ட நிகழ்வை சுட்டிகாட்டி பேசிய கம்பா, இதுபோன்று சந்தேகத்தின் அடிப்படையில் குழந்தைகள் கைதாவது குறித்தும் தாம் கவலை அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

    இந்த அறிக்கை தொடர்பாக பேசிய ஐ.நா.பொதுச்செயலாளர், அனைவரும் ஒன்றிணைந்து இந்த வன்முறையை போக்குவதற்கு அமைதியை பரப்ப வேண்டும் எனவும், வன்முறையில் இருந்து மீள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். #UnitedNations
    வடகொரிய அரசின் நடவடிக்கைகள், கொள்கைகள் ஆகியவை அமெரிக்க தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக்கொள்கை, பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக டிரம்ப் அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    சிங்கப்பூரில் கடந்த 12-ந் தேதி நடந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்துப் பேசினர்.

    அந்த சந்திப்பு நடந்த மறுநாளில் டிரம்ப், வடகொரியாவிடம் இருந்து இனி அணு ஆயுத அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவித்தார்.

    இதுபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “வடகொரியாவிடம் இருந்து இனி அணு ஆயுத அச்சுறுத்தல் இல்லை. இன்று இரவு நன்றாக தூங்குங்கள்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

    ஆனால் நேற்று முன்தினம் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு டிரம்ப் அளித்த அறிக்கை ஒன்றில் வடகொரியாவிடம் இருந்து அணு ஆயுத அச்சுறுத்தல் இருப்பதாக கூறி ‘பல்டி’ அடித்து உள்ளார்.

    அந்த அறிக்கையில், “கொரிய தீபகற்பத்தின் ஆயுத பயன்பாடு மற்றும் வடகொரிய அரசின் நடவடிக்கைகள், கொள்கைகள் ஆகியவை அமெரிக்க தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக்கொள்கை, பொருளாதாரத்துக்கு அசாதாரணமான அச்சுறுத்தலாக தொடர்கின்றன” என கூறப்பட்டு உள்ளது.

    மேலும் வட கொரியாவினால் அச்சுறுத்தல் தொடர்கிற நிலையில், அமெரிக்காவில் தேசிய நெருக்கடி நிலையை மேலும் ஓராண்டுக்கு தொடர்வதாகவும் டிரம்ப் அதில் தெரிவித்து உள்ளார்.

    இதற்கிடையே வட கொரியாவுடன் ராஜ்ய ரீதியிலான பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து கொண்டிருப்பதால், தென்கொரியா உடனான கூட்டு ராணுவ பயிற்சிகள் காலவரையறையற்று நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ் கூறி உள்ளார். 
    ×