search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறிக்கை"

    தூத்துக்குடியில் நடந்த கலவரம் தொடர்பாக டிஜிபி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கலவரத்தில் 72 போலீசார் காயமடைந்ததாக தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரம் மற்றும் துப்பாக்கி சூடு தொடர்பாக டிஜிபி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

    தூத்துக்குடியில் கலவரம் ஏற்பட்டதையடுத்து, பொது மக்களின் உயிரை காப்பாற்றவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.  கலவரத்தின்போது சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.



    ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக 185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 177 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரத்தை தூண்டியதாக 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கலவரத்தின்போது 72 போலீசார் காயம் அடைந்துள்ளனர்.

    அவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ThoothukudiFiring #DGPReport
    தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை சுட்டுக் கொன்றதற்காக பழிக்குப்பழி வாங்கும் விதமாக போலீசாரை தாக்க ஒரு கும்பல் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. #Thoothukudifiring
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந் தேதி தூத்துக்குடியில் நடந்த போராட்டம் மோதலில் முடிந்தது. போராட்டக்காரர்கள் கல்வீச்சு- தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஒடுக்க போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர்.

    இந்த சம்பவத்தையடுத்து தூத்துக்குடியில் பதற்றம் உருவானது. இதையடுத்து அங்கு 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். 5 ஐ.ஜி.க்கள், 7 டி.ஐ.ஜி.க்கள் என ஏராளமான போலீஸ் அதிகாரிகளும் தூத்துக்குடியில் முகாமிட்டனர். இருந்த போதிலும் தூத்துக்குடியில் ஆங்காங்கே தீவைப்பு, பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் தொடர்ந்தன.

    இதனால் பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கமாண்டோ வீரர்களும் வரவழைக்கப்பட்டனர். பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டதன் எதிரொலியாக தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப தொடங்கியது.

    இதையடுத்து தூத்துக்குடியில் குவிக்கப்பட்டிருந்த போலீசாரின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டது. வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த போலீசார் அவர்களது ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

    நகரின் பல இடங்களில் போலீஸ் பாதுகாப்பு தளர்த்தப்பட்ட நிலையில் பதற்றமான பகுதியாக கருதப்படும் பாத்திமாநகர், திரேஸ்புரம், தாளமுத்துநகர், தெர்மல்நகர், முத்தையாபுரம் உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பில் ஈடுபடும் போலீசார், அந்தந்த பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் சமூக நலக்கூடங்களில் தங்கியுள்ளனர்.


    இந்நிலையில் துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை சுட்டுக் கொன்றதற்காக பழிக்குப்பழி வாங்கும் விதமாக போலீசாரை தாக்க ஒரு கும்பல் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் அதனை எச்சரிக்கையாக போலீஸ் அதிகாரிகளுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

    தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி மோதல் நடந்த போது போலீஸ்காரர்களை, போராட்டக்காரர்கள் ஆவேசமாக கற்களை வீசி தாக்குல் நடத்தினர். துப்பாக்கி சூடு நடந்த பிறகும் போராட்டக்காரர்கள் ஆங்காங்கே கல்வீச்சு மற்றும் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர்.

    அதன் பிறகு ஆயிரக்கணக்கான போலீசார் தூத்துக் குடியில் குவிக்கப்பட்டு கலவரக்காரர்களை தடுத்ததால் அங்கு இயல்பு நிலை திரும்பியது. இருந்த போதிலும் போலீசார் கண் மூடித்தனமாக தடியடி நடத்தியது, துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதால் போராட்டக்காரர்கள் இன்னும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

    ஆகவே ஒரு கும்பல் போலீசாரை தாக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இதற்காக அந்த கும்பல் நெல்லை மாவட்டம் கூத்தங்குழி பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரை கடல் வழியாக படகு மூலம் தூத்துக்குடிக்கு வரவழைத்து இருப்பதாகவும், வெடிகுண்டுகளை தயாரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    அவர்கள் மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தங்கியுள்ள திருமண மண்டபங்கள், சமூக நலக்கூடங்கள் மற்றும் சில போலீஸ் நிலையங்களை தாக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. மேலும் அந்த கும்பலில் பல்வேறு தாக்குதல் திட்டங்கள் குறித்து தகவல் சேகரித்துள்ள உளவுத்துறை போலீசார், அதுபற்றி நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. மற்றும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு அறிக்கை அளித்துள்ளனர்.

    அதன்படி போலீசாரை தாக்க திட்டமிட்டுள்ள கும்பல் பற்றி ரகசிய விசாரணை மற்றும் கண்காணிப்பில் போலீஸ் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் மர்மக்கும்பல் தாக்குதல் நடத்தக்கூடும் என எச்சரிக்கைப்பட்டுள்ள இடங்களில் போலீசார் உஷார் நிலையில் உள்ளனர். #Thoothukudifiring #SterliteProtest
    தூத்துக்குடியில் அமைதி நிலவ பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Thoothukudifiring #EdappadiPalanisamy
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து பேசினார்.

    அவர் கூறுகையில், “சமீபத்தில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து, விவாதிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

    ஏற்கனவே இந்த பிரச்சனை குறித்து அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த கவன ஈர்ப்பு தீர்மானமாக சண்முகநாதன், தமிமுன் அன்சாரி, டி.டி.வி.தினகரன் ஆகியோர் கொண்டு வந்துள்ளனர். இதுபற்றி விவாதம் நடக்க உள்ளது. எனவே ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர இயலாது. அதற்கு சட்ட விதிகளில் இடம் இல்லை.

    மேற்கண்ட 3 பேரும் இது பற்றி தெரிவிக்கும் முன்பே நீங்கள் கேட்டிருந்தால் வாய்ப்பு வழங்கி இருக்க முடியும். இப்போது அதற்கான வாய்ப்பு இல்லை.

    சட்ட விதி 286-ன்படி ஒத்திவைப்பு தீர்மானம் இன்று கொண்டு வர முடியாது. என்றாலும் கட்சிக்கு ஒருவர் என்ற முறையில் பேச அனுமதி கொடுக்கிறேன்.

    அவர்கள் மூன்று பேரும் பேசிய பிறகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பேசலாம்.

    இவ்வாறு சபாநாயகர் கூறினார்.

    துரைமுருகன்:- சட்ட விதிகளை சபாநாயகர் சுட்டி காட்டினாலும் ஜீரோ அவரில் எதிர்க்கட்சித் தலைவர் பேச அனுமதி உள்ளது. அந்த வாய்ப்பை தர வேண்டும்.

    சபாநாயகர்:- இன்று ஜீரோ அவரை பயன்படுத்த முடியாது.


    துரைமுருகன்:- சட்ட விதியின்படி ஜீரோ அவரை அனுமதிக்காவிட்டாலும் சபாநாயகர் தனது சிறப்பு அதிகாரம் மூலம் எதிர்க்கட்சித் தலைவர் பேச அனு மதிக்க வேண்டும்.

    சபாநாயகர்:- அஜண்டாவில் ஒரு நிகழ்ச்சியை சேர்த்த பிறகு ஜீரோ அவரை அனுமதிக்க முடியாது. அஜண்டாவில் உள்ள 3 பேரும் பேசிய பிறகு எதிர்க்கட்சித் தலைவர் 5 நிமிடங்கள் பேசலாம். அதன் மூலம் இந்த பிரச்சனையை முதல்வர் கவனத்துக்கு கொண்டு வரலாம்.

    துரைமுருகன்:- நாங்கள் இதை ஏற்றுக் கொள்கிறோம். எதிர்க்கட்சித் தலைவர் விவாதத்தில் பங்கேற்று பேசுவார்.

    இதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி போராட்டம் நடந்தபோது என்ன நடந்தது என்பது குறித்த ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.

    வேதாந்தா குழுமத்தின் தாமிர உருக்காலை நிறுவனம் (ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட்), தூத்துக்குடி மாவட்டம் , மீளவிட்டான் கிராமத்தில் கடந்த 22 ஆண்டுகளாக இயங்கி வருகின்றது.

    23.3.2013-ல் மேற்படி தொழிற்சாலையிலிருந்து வாயு கசிவு ஏற்பட்டு பொது மக்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதாக புகார் வந்ததன் அடிப்படையில் தொழிற்சாலை நிர்வாகத்திற்கு 24.3.2013 தேதியிட்ட விளக்கம் கேட்கும் அறிவிப்பு அளிக்கப்பட்டு, பின்னர் தொழிற்சாலையை மூடுவதற்கும், மின் இணைப்பை துண்டிப்பதற்கும், புரட்சித்தலைவி அம்மா 29.3.2013 அன்று உத்தரவிட்டார்கள். அதன் பேரில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, தொழிற் சாலை உடனடியாக மூடப்பட்டது.

    அம்மா பிறப்பித்த மேற்படி உத்தரவினை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு முன்பு ஸ்டெர்லைட் நிர்வாகம் செய்த முறையீட்டை விசாரித்த தீர்ப்பாயம், மூடுதல், உத்தரவு மற்றும் மின் இணைப்பு துண்டிப்பு ஆணையை ரத்து செய்தும், தொழிற்சாலையை மீண்டும் இயக்குவதற்கு அனுமதி அளித்தும் 31.5.2013 அன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

    பின்னர் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 8.8.2013 அன்று ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு அனுமதியளித்து இறுதி தீர்ப்பு அளித்தது.

    மேற்படி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவின் அடிப்படையில் தான் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்தது.

    தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த இறுதி தீர்ப்பை எதிர்த்தும், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்றும், புரட்சித்தலைவி அம்மா 2013-ல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேற்படி வழக்கின் விசாரணை தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்நிறுவனத்தை இயக்குவதற்கான இசைவாணை 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், இசைவாணையை புதுப்பிக்க தமிழ்நாடு மாசுக் காட்டுப்பாடு வாரியத்திடம் ஸ்டெர்லைட் நிர்வாகம் விண்ணப்பம் செய்தது. மேற்படி விண்ணப்பத்தினை பரிசீலித்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், ஏற்கனவே பிறப்பித்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதால், ஸ்டெர்லைட் ஆலையின் விண்ணப்பித்தினை 9.4.2018 அன்று நிராகரித்தது. இதனால், ஆலை இயங்கவில்லை.

    இதனிடையில் 9.4.2018 தேதியிட்ட மாசு கட்டுப்பாடு வாரிய நிராகரிப்பு ஆணையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் மேல் முறையீட்டு ஆணையத்தில் மேல் முறையீடு செய்தது. மேல் முறையீட்டு விசாரணை 4.5.2018 அன்று நடைபெற்றபோது, தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் ஆஜரான தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கரைஞர், இத்தொழிற்சாலையை மீண்டும் இயக்க அனுமதிக்கக் கூடாது என கடுமையாக வாதிட்டார்.

    இந்த ஆலை இயங்க அனுமதி வழங்கக் கூடாதென, பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக நல அமைப்புகளும் பல்வேறு போராட்டங்களை அமைதியான முறையில் நடத்தி வந்தன. இந்நிலையில் 12.2.2018 முதல் 25.4.2018 வரை 14 முறை போராட்டக்குழுவினருடன் தூத்துக்குடி ஆட்சியர், சார் ஆட்சியர், ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் போன்ற அரசின் பல்வேறு நிலையிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, தமிழ்நாடு அரசு எடுத்துள்ள திடமான நடவடிக்கைகளை போராட்டக் குழுவினரிடம் விளக்கியுள்ளனர்.

    இருப்பினும் போராட்டக் குழுவினர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர்.


    இந்தச் சூழ்நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக் குழுவினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என முடிவு செய்தபோது 20.5.2018 அன்று தூத்துக்குடி சார் ஆட்சியர் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    பேச்சுவார்த்தைக்குப் பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு, தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை இல்லாமல் ஒருநாள் அமைதியான முறையில், போராட்டம் நடத்திட போராட்டக்குழுவினர் ஒப்புக்கொண்டனர். இருப்பினும், முன் எச்சரிக்கையாக சுமார் 2 ஆயிரம் காவல் துறையினர் அங்கு பணியில் அமர்த்தப்பட்டனர். மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் 144-ன் கீழ் தடை உத்தரவை பிறப்பித்தார்.

    இந்த நிலையில், தடை உத்தரவை மீறி, சில அரசியல் கட்சிகளும், சில அமைப்புகளும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு முனைந்து, போராட்டக்குழுவினருடன் தங்களை இணைத்துக் கொண்டு, திடீரென 22.5.2018 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டு சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தின.

    இக்கூட்டத்தில் சிலர் ஊடுருவி, காவல் துறையினர் மீது கல்லெறிந்தும், அவர்களை விரட்டித் தாக்கியும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கல்லெறிந்து சேதப்படுத்தியும், அவ்வளாகத்தில் இருந்த அரசுத்துறை வாகனங்கள், காவல்துறை வாகனங்கள், இதர வாகனங்கள் மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தியும் கலவரத்தில் ஈடுபட்டனர்.

    மேலும், அருகில் இருந்த ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டும், மாவட்ட தொழில் மைய அலுவலகம், தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்களையும் சேதப்படுத்தினர்.

    இந்நிலையில், வன்முறைகளை கட்டுக்குள் கொண்டு வரவும், பொதுமக்களின் உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கவும், பொதுச் சொத்துக்கு மேலும் சேதம் விளைவிக்காமல் தடுக்கவும், கலவரக்காரர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தும், அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வர தடியடியும் நடத்தப்பட்டது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில், காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டனர்.

    இந்த சம்பவத்தின்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு, இரண்டு மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளையும், மூத்த காவல்துறை அதிகாரிகளையும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அனுப்பி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ஆணையிட்டார்கள். மேலும், மாவட்டத்தில் அமைதி திரும்பிட துரித நடவடிக்கை எடுக்க காவல்துறை தலைமை இயக்குனருக்கு உத்தரவிட்டார்கள்.

    இந்த சம்பவத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதியாக தலா 10 லட்சம் ரூபாய் வழங்கவும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்கவும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும் அரசு ஆணையிட்டது.

    மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் தகுதிக்கேற்றவாறு அரசு பணி வழங்கவும் உத்தரவிடப்பட்டது. ஆய்வுக்கு சென்ற மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள், உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் காயம் அடைந்தோரை சந்தித்தபோது, அவர்கள் வைத்த கோரிக்கைகளின் அடிப்படையிலும், நிவாரண நிதியை உயர்த்தி வழங்க கோரும் மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை 25.5.2018 அன்று பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலும், பல்வேறு தரப்பினரிடமிருந்து அரசுக்கு வைக்கப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையிலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கான நிவாரண நிதியை 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சமாக உயர்த்தி வழங்கவும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கான நிவாரண நிதியை 3 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கவும் லேசான காயம் அடைந்தவர்களுக்கான நிவாரண நிதியை ஒரு லட்சம் ரூபாயிலிருந்து ஒன்றரை லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் 27-ந்தேதி அரசு ஆணையிட்டார்.


    முதல்-அமைச்சரின் ஆணையின்படி 28-ந்தேதி துணை முதல்-அமைச்சர் உள்பட 4 அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று பார்வையிட்டு அங்கு சிகிச்சையில் இருக்கும் காயம் அடைந்தோர்களை மருத்துவமனைக்கு சென்று பார்த்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தும், அவர்களின் கோரிக்கைகளை கேட்டுக் கொண்டனர். மேலும் முதல்-அமைச்சர் அறிவித்த நிவாரணத் தொகையினையும் வழங்கினர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து விசாரித்து அரசுக்கு அறிக்கை அளிக்க, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து அரசு உத்தரவிட்டது.

    எனவே, பொதுமக்கள் இச்சம்பவத்தினால் உணர்ச்சி வயப்படாமலும், யாருடைய தூண்டுதலுக்கும், ஆளாகாமலும், தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து அமைதி நிலவ ஒத்துழைக்க வேண்டும் என்று புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் இந்த அரசு இந்த அவையின் மூலம் மீண்டும் கேட்டுக்கொள்கிறது.

    இவ்வாறு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனி சாமி அதில் கூறியுள்ளார்.

    முதல்-அமைச்சர் அறிக்கையை தாக்கல் செய்த பிறகு எஸ்.பி. சண்முகநாதன் பேசியதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட முதல்வர் எடுத்த நடவடிக்கையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் இதை கொச்சைப்படுத்தும் வகையில்... (தி.மு.க.வினர் எதிர்ப்பு).

    அரசு எடுத்த நடவடிக்கையை நாங்கள் பாராட்டுகிறோம்” என்றார்.

    ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு வெளியிடப்பட்ட அரசாணையை வரவேற்கிறேன். இதை சட்டசபையில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்.

    தூத்துக்குடியில் போலீஸ் வாகனம் எரிக்கப்பட்டதை கண்டிக்கிறேன். இவ்வளவு பிரச்சனை நடந்ததற்கு உளவுப்பிரிவு முன் கூட்டியே சரியான தகவலை தந்ததா? என்பதை அறிய விரும்புகிறேன்.

    கூட்டத்தை கட்டுப்படுத்த தணணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனத்தை ஏன் பயன்படுத்தவில்லை? வெளிநாடுகளில் லட்சக்கணக் கானவர்கள் கூடும் கூட்டத்தை கூட தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைக்கிறார்கள்.

    ஆனால் சொந்த நாட்டு மக்களை காக்க வேண்டிய அரசு காக்கா, குருவியை சுடுவது போல சுட்டதை ஏற்க முடியவில்லை. துப்பாக்கியால் சுட அனுமதி கொடுத்தது யார்? துணை தாசில்தார் அனுமதி கொடுத்ததாக போலீஸ் எப்.ஐ.ஆர். மூலம் தெரிய வருகிறது.

    சீருடை அணியாத காவலர்களும் துப்பாக்கியால் சுடுகிறார்களே, இது எப்படி அனுமதிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Thoothukudifiring #TNCM #EdappadiPalanisamy #TNAssembly
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சட்டசபையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை தாக்கல் செய்தார். #ThoothukudiFiring #TNCM #EdappadiPalanisamy
    சென்னை:

    மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்தி அந்தந்த துறைக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று கூடியது. முதல் நாளான இன்று தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேச உறுப்பினர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

    ஆனால் அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்து இந்த விவகாரம் குறித்து விவாதிக்கவேண்டும் என்பதற்காக, தி.மு.க. சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால், அதனை சபாநாயகர் நிராகரித்தார். இதனை ஏற்க மறுத்த  தி.மு.க. உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.


    இந்த அமளிக்கு இடையே தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை தாக்கல் செய்தார். அதில், தூத்துக்குடியில் 22-ம் தேதி நடந்த போராட்டம் மற்றும் துப்பாக்கி சூடு தொடர்பாக விளக்கம் அளித்திருந்தார்.

    ‘144 தடை உத்தரவை மீறி சில அரசியல் கட்சிகள், அமைப்புகள் சட்டம் ஒழுங்கிற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில்  போராட்டம் நடத்தின. துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து அமைதி நிலவ பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மக்கள் உணர்ச்சி வசப்படக் கூடாது, யாருடைய தூண்டுதலுக்கும் ஆளாக கூடாது” என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். #ThoothukudiFiring #ThoothukudiFiringReport #TNCM #EdappadiPalanisamy
    தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மக்களை அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். #steliteprotest #RajnathSingh
    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து பல அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இந்த சம்பவத்துக்கு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வருத்தம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், ‘தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் மிகுந்த வேதனையை அளிக்கிறது, துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாகவும், தற்போது தூத்துக்குடியில் நிலவும் சூழ்நிலை குறித்தும் தமிழக அரசு விரிவான விளக்கத்தினை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என பதிவிட்டுள்ளார்.



    மேலும், தூத்துக்குடி மக்கள் அமைதி காக்குமாறும், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மக்களுக்காக இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார். #steliteprotest #RajnathSingh
    ×