search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐகோர்ட்டு"

    மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து இருப்பவர்களும் கண்டிப்பாக ‘ஹெல்மெட்’ அணியவேண்டும் என்ற சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு மீண்டும் உத்தரவிட்டுள்ளது. #Helmet #HighCourt #TamilNadu
    சென்னை:

    மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள், பின்னால் உட்கார்ந்து இருப்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும். காரில் செல்பவர்கள் ‘சீட் பெல்ட்’ கண்டிப்பாக அணியவேண்டும் என்ற மோட்டார் வாகனச் சட்டத்தை தீவிரமாக தமிழகத்தில் அமல்படுத்தக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ராஜேந்திரன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் கண்டிப்பாக அணியவேண்டும் என்ற உத்தரவை தீவிரமாக அமல்படுத்த தமிழக போலீசாருக்கு உத்தரவிட்டனர்.



    ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாதவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்றும், மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்திருப்பவர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும் என்ற சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் பின்னால் உட்கார்ந்து செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான விவரங்கள் எதுவும் இல்லை.

    இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ‘மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து சென்றாலும், அவர்கள் ஹெல்மெட் அணியவேண்டும்’ என்று கூறினர். அதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வக்கீல், ‘இதை படிப்படியாக அமல்படுத்தி வருகிறோம். பள்ளி, கல்லூரிகளில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்’ என்றார்.

    இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து பயணம் செய்பவர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும் என்ற சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்’ என்று மீண்டும் உத்தரவிட்டனர்.

    இதுதொடர்பான அறிக்கையை வருகிற நவம்பர் 9-ந் தேதி தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டனர். விசாரணையை நவம்பர் 9-ந் தேதி தள்ளிவைத்தனர். 
    தமிழகத்தில் ஆண்டுக்கு எத்தனை டன் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது? என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. #RationRice #HighCourt
    சென்னை:

    ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் அமர்நாத் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேலூர் மாவட்ட கலெக்டர் கடந்த ஆகஸ்டு 30-ந் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து அமர்நாத்தின் மனைவி சவுஜனா என்பவர், சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.பாஸ்கரன் ஆகியோர் அரசு வழங்கும் இலவச அரிசி ஏழைகளுக்குத்தான் சென்றடைய வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். பின்னர், ‘கடந்த 10 ஆண்டுகளில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது?, எத்தனை டன் அரிசி கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது? என்பது உள்பட பல கேள்விகளை நீதிபதிகள் கேட்டிருந்தனர்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் கிருத்திகா கமல் ஆஜராகி, நீதிபதிகள் கேட்டிருந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், மனுதாரரின் கணவர் அமர்நாத்திடம் இருந்து 13.5 குவிண்டால் இலவச ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது’ என்று கூறப்பட்டிருந்தது.

    இதை படித்து பார்த்த நீதிபதிகள், ‘தமிழகத்தில் வழங்கப்படும் இலவச அரிசி, வெளிமாநிலங்களுக்கு சரக்கு ரெயில்கள் மூலம் கடத்தப்படுவதாக பத்திரிகைகளில் செய்தி வருகிறது. இந்த கடத்தல் சம்பவங்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவு இல்லாமல் நடைபெறாது. பெரிய அளவில் அரிசி கடத்தும் நபர்களை விட்டுவிட்டு, சில மூடைகளை கடத்தும் நபர்களை மீது மட்டும் போலீசார் நடவடிக்கை எடுப்பதாகவும் புகார்கள் வருகின்றன’ என்று கருத்து தெரிவித்தனர்.

    அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘சுழற்சி முறையில், ஒவ்வொருவராக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர். இதற்காக 150 முதல் 200 பேர் அரிசி கடத்தலுக்காகவே சிறைக்கு அவ்வப்போது சுழற்சி அடிப்படையில் சென்று வருவார்கள். இத்தனை பேரை கைது செய்துள்ளோம் என்ற புள்ளிவிவரங்களுக்காக, இதுபோன்ற நபர்களை போலீசார் கைது செய்கின்றனர்’ என்று கூறினார்.

    இதையடுத்து நீதிபதிகள், ‘தமிழகத்தில் வினியோகம் செய்யப்படும் இலவச அரிசி, 2 முறை கொதிக்க வைக்கப்பட்ட அரிசி என்பதால், எளிதில் கெட்டுப் போகாது. நீண்ட காலத்துக்கு அதை சேமித்து வைக்க முடியும் என்பதால், பிற மாநிலங்களுக்கு அதிக அளவில் கடத்தப்படுவதாக கூறப்படுகிறது’ என்று கூறினர்.

    பின்னர், ‘எத்தனை குடும்ப அட்டைதாரர் மாதந்தோறும் இலவச அரிசியை பெறுகின்றனர்?, மாதத்துக்கு எவ்வளவு அரிசி அவர்களுக்கு வழங்கப்படுகின்றது?, இலவச அரிசி ஆண்டுக்கு எத்தனை டன் வழங்கப்படுகிறது?, இலவச அரிசி தங்களுக்கு கிடைக்கவில்லை என்று எத்தனை பேர் இதுவரை அரசுக்கு புகார் செய்துள்ளனர்? இலவச அரிசியை வேறுபக்கம் திருப்பிவிட்டதாக குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் மீது எத்தனை வழக்குகள பதிவு செய்யப்பட்டுள்ளன?, இலவசமாக வழங்கப்படும் அரிசியின், சந்தை விலை மதிப்பு எவ்வளவு?, ஒரு குடும்ப அட்டைக்கு 20 கிலோ இலவச அரிசி எந்த அளவுகோளின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன?’ என்பது உள்பட 20 கேள்விகளை கேட்டு, அதற்கு விரிவான பதிலை தமிழக அரசு வருகிற நவம்பர் 1-ந் தேதி தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.  #RationRice #HighCourt

    புதிய தலைமை செயலகம் முறைகேடு குறித்து வழக்குப்பதிவு செய்ய தடை விதிக்க முடியாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #ADMK #DMK #MKStalin

    சென்னை:

    தி.மு.க. ஆட்சிக்காலத்தில் புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டப்பட்டது. பின்னர் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், அந்த கட்டிடத்தில் அரசு பல்நோக்கு மருத்துவ மனையாக மாற்றப்பட்டது.

    மேலும், அந்த கட்டிடம் கட்டியதல் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, அதுகுறித்து விசாரணை நடத்த ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.ரெகுபதி தலைமையில் ஒரு நலர் கமி‌ஷன் அமைக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கமி‌ஷன் விசாரணை கண் துடைப்பு நாடகம் என்று உத்தரவிட்டார். இதையடுத்து நீதிபதி ரெகுபதி தன் பதவியை ராஜினாமா செய்தார். இதைதொடர்ந்து, புதிய தலைமை செயலகம் கட்டிட முறைகேடு வழக்கு, லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு மாற்றி, தமிழக அரசு உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, புதிய தலைமை செயலகம் கட்டிட முறைகேடு குறித்து இதுவரை ஊழல் தடுப்பு போலீசார் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. என்றார்.

     


    மனுதார் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், இந்த வழக்கை போலீஸ் விசாரணைக்கு மாற்றுவதற்கு முன்பு தலைமை செயலாளர் தீர விசாரிக்க வில்லை. ஆவணங்களை பார்க்க வில்லை. அவர் எத்திரத்தனமாக செயல் பட்டுள்ளார். இப்போது இந்த வழக்கை பற்றி பொதுக்கூட்டத்தில் முதல்அமைச்சர் பேசுகிறார். இதனால் சில அச்சம் ஏற்படுகிறது எனவே வழக்கு பதிவு செய்யவும், விசாரணைக்கு தடை வேண்டும் என்றார்.

    தடை விதிக்க மறுத்த நீதிபதி, வழக்கை வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைக்கிறேன். அதற்குள் எதுவும் நடந்து விடாது. மேலும் ரெகுபதி ஆணையத்தில் இருந்து ஊழல் தடுப்பு போலீசாரிடம் ஆவணங்கள் எப்போது சென்றது என்ற விவரத்தை அட்வகேட் ஜெனரல் அரசிடம் கேட்டு தெரிவிக்கவேண்டும்‘ என்று உத்தரவிட்டார். #ADMK #DMK #MKStalin

    ஐகோர்ட்டு பற்றி விமர்சித்த எச்.ராஜாவை கண்டித்து கும்பகோணத்தில் வக்கீல் சங்க தலைவர் தலைமையில் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. #HRaja #BJP
    கும்பகோணம்:

    புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் மெய்யபுரத்தில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டார். அப்போது போலீசார் , கூட்டம் நடத்த தடை விதித்ததால் எச்.ராஜா ஆவேசமடைந்து காவல்துறை மற்றும் ஐகோர்ட்டை பற்றி கடுமையாக விமர்சித்து பேசினார்.

    அவரது ஆவேச பேச்சு இணைய தளங்களில் வீடியோவாக வைரலாக பரவியது. இதற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் எச்.ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் எச்.ராஜா நீதிமன்றம் குறித்து விமர்சித்ததை கண்டித்து தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இன்று வக்கீல் சங்க தலைவர் சங்கர் தலைமையில் வக்கீல்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் ஈடுபட்டதால் கோர்ட்டு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. #HRaja #BJP
    சென்னை துறைமுகத்தில் 8 ஆண்டுகளாக நிற்கும் இரண்டு கப்பல்களை உடைக்க அனுமதிக்கலாமா? என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.#HighCourt #ChennaiHarbor

    சென்னை:

    சென்னை துறைமுகத்தில் ‘ரைசிங் ஸ்டார்’, ‘ரைசிங்சன்’ என்ற 2 கப்பல்கள் கடந்த 8 ஆண்டுகளாக பழுதடைந்து நின்று கொண்டிருக்கிறது.

    இந்த கப்பல்களை உடைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான அனுமதியை சென்னை துறைமுக நிர்வாகத்திடம் அந்த கப்பல் நிறுவனம் முறையிட்டது.

    ஆனால், கப்பலை பழுது பார்க்க மட்டுமே அனுமதிக்க முடியும் என்றும் கப்பலை உடைப்பதற்கு அனுமதி வழங்க முடியாது என்றும் அவ்வாறு அனுமதி வழங்கினால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்று சென்னை துறைமுகம் நிர்வாகம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அந்த கப்பல் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகா தேவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதி, ‘8 ஆண்டுகளாக கப்பல்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது. அந்த கப்பல்கள் கடலில் மூழ்கும் முன்பு, அதை உடைக்க அனுமதி வழங்கினால் என்ன? என்று கேட்டனர்.

    துறைமுகம் சார்பில் ஆஜரான வக்கீல் காஜா மொய்தீன் ஹிஸ்தி, ‘துறை முகத்தில் கப்பல்களை உடைக்க அனுமதி வழங்க முடியாது. கப்பல் மூழ்கி விடும் நிலை, உடைக்க அனுமதித்தால், அது முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு மேலும் பல நிறுவனங்கள் வழக்கு தொடரும். அவ்வாறு கப்பல்களை உடைக்க அனுமதித்தால், கடலில் மிகப்பெரிய மாசு ஏற்படும்’ என்றார்.

    இதையடுத்து, இந்த இரு கப்பல்களின் நிலை என்ன? அவற்றை உடைக்க அனுமதிக்கலாமா? என்பது குறித்து ஒரு நிபுணர் குழுவை அமைத்து, ஆய்வு செய்ய உத்தரவிடலாமா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    இந்த வழக்கை நாளை மறுநாள் (வெள்ளிக் கிழமைக்கு) தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். #HighCourt #ChennaiHarbor

    8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக, மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டப்பிரிவு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது இல்லை. சட்டவிரோத மானதும் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. #GreenwayRoad #Highcourt

    சென்னை:

    சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு கையப்படுத்தப்பட உள்ள நிலத்தை தமிழக அரசு அளவு எடுத்தது. இதற்கு பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தங்களது விவசாயநிலங்களை எல்லாம் அரசு கையப்படுத்த அளவிடுவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இந்த திட்டத்துக்காக, குளங்கள், மரங்கள், மலைகளை அழிக்க அரசு முயற்சிக்கிறது என்றும் குற்றம் சாட்டினர்.

    இந்த திட்டத்தை எதிர்த்தும், இந்த திட்டத்துக்காக நிலத்தை கையப்படுத்துவதை எதிர்த்தும் சென்னை ஐகோர்ட்டில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

    இந்த வழக்குகளை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்குகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிபதிகள் விசாரித்தபோது, கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தில் இருந்து, அதன் உரிமையாளர்களை வெளியேற்றக்கூடாது என்றும் அந்த நடவடிக்கைக்கு தடை விதித்தும் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

     


    இந்த நிலையில், இந்த வழக்குகள் எல்லாம் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தனர்.

    அந்த வழக்கில், 2013ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த நிலத்தை கையப்படுத்துவதற்கான சட்டத்தில், பிரிவு 105 அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இந்த 105வது பிரிவின்படி, நெடுஞ்சாலை, அணுஉலை, ரெயில்வே போன்ற அவசர தேவைகளுக்கான திட்டங்களாக இருந்தால், சமூக பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளாமல் நேரடியாக நிலத்தை கையப்படுத்தலாம் என்று கூறுகிறது. அதனால், இந்த பிரிவு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி, அந்த பிரிவை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘பிரிவு 105 அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது இல்லை. இந்த பிரிவு சட்டவிரோதமானதும் இல்லை. இந்த பிரிவை ஏற்றுக் கொள்கிறோம்’ என்று தீர்ப்பு அளித்துள்ளனர்.

    சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கான நிலத்தை கையப்படுத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

    தற்போது, 2013ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நிலம் கையப்படுத்தும் சட்டத்தின் பிரிவு 105 செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால், இந்த பிரிவை பயன்படுத்தி நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட அதிகாரிளுக்கு தடை எதுவும் ஏற்படாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். #GreenwayRoad #Highcourt

    அறுவை சிகிச்சை செய்ததில் டாக்டர்களின் கவனக்குறைவால் 3-வது பெண் குழந்தை பெற்ற பெண் ரூ.10 லட்சம் கேட்டு தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு ஐக்கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #ChennaiHighcourt
    சென்னை:

    சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் தனம் (30). இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இரு பெண் குழந்தைகள் பிறந்தனர். இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு நாகர்கோவில், ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்துக் கொண்டேன். இதற்கான சான்றிதழை அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் வழங்கியது.

    இந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 5-ந்தேதி கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக சென்றேன். என்னை பரிசோதனை செய்த டாக்டர்கள், நான் கருவுற்றுள்ளதாக கூறினார்கள்.

    இது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், கவனக்குறைவாக செய்த குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையினால் எனக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், எனக்கு 3-வது பெண் குழந்தை கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறந்தது.

    இதையடுத்து எனக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும்படி கன்னியாகுமரி மாவட்ட குடும்பநல மையத்தின் துணை இயக்குனர், அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்பினேன். என்னை பரிசோதனைக்கு அழைத்தனர்.

    நானும் கடந்த ஆண்டு ஆகஸ்டு 30-ந்தேதி, கடந்த மே 7-ந்தேதி, ஜூன் 18-ந்தேதி பரிசோதனைக்கு சென்றேன். என்னை பரிசோதனை செய்த டாக்டர்கள், இதுவரை இழப்பீடு வழங்கும்படி அரசுக்கு பரிந்துரை செய்யாமல், காலம் கடத்துகின்றனர். எனவே, எனக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் சுடலையாண்டி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, மனுவுக்கு 4 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி, சுகாதாரம் மற்றும் குடும்பலநலத்துறை செயலாளர், மருத்துவ கல்வி மற்றும் குடும்பநலத்துறை இயக்குனர் உள்ளிட்டோருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். #ChennaiHighcourt
    மோட்டார் வாகன விபத்து வழக்கில் போலி காப்பீட்டு சான்றிதழ் மூலம் இழப்பீடு பெற முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.#highcourt

    சென்னை:

    தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் காவிய அரசன். இவர், கடந்த 2009-ம் ஆண்டு பள்ளிக் கூடத்துக்கு சைக்கிளில் சென்றார்.

    அப்போது நீலமேகம் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து, காவிய அரசனின் சைக்கிள் மீது மோதினார். இதில், படுகாயமடைந்த காவிய அரசன், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    அதிகவேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த நீலமேகத்திடம் இருந்தும், அந்த மோட்டார் சைக்கிள் காப்பீடு செய்யப்பட்ட எச்.டி.எப்.சி. ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்தும் ரூ.5 லட்சம் இழப்பீடு கேட்டு காவிய அரசன், தன் தந்தை மூலம் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த அரூர் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயம், ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்து 500 இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் இன்சூரன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அதில், விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளை எங்கள் நிறுவனத்தில் காப்பீடு செய்ய வில்லை. இதை விசாரணையின்போது எங்கள் அதிகாரி கூறியும், தீர்ப்பாயம் அதை கண்டு கொள்ளாமல், இழப்பீடு வழங்க எங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், மோட்டார் சைக்கிளின் இன்சூரன்ஸ் சான்றிதழ் என்று போலியான ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். எனவே, தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி முரளிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரூர் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்ட காப்பீட்டு சான்றிதழும், இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கும் சான்றிதழும் தாக்கல் செய்யப்பட்டது.

    இதை இரண்டையும் ஆய்வு செய்த நீதிபதி, அரூர் தீர்ப்பாயத்தில் போலி சான்றிதழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தார்.

    பின்னர் நீதிபதி முரளி தரன் பிறப்பித்த உத்தரவில், ‘போலி காப்பீட்டு சான்றிதழ் குறித்து தர்மபுரி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப் பதிவு செய்யவேண்டும். பின்னர், விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள், அதன் காப்பீட்டு சான்றிதழ் உள்ளிட்டவை குறித்து புலன் விசாரணை செய்து, வருகிற செப்டம்பர் 25-ந் தேதிக்கு முன்பாக சம்பந்தப்பட்ட கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவேண்டும்’ என்று கூறியுள்ளார்.

    ‘அரசன்’ படத்தில் நடிக்காமல் இழுத்தடித்ததாக நடிகர் சிம்பு மீது தொடரப்பட்ட வழக்கில் நடிகர் சிம்பு ரூ.85 லட்சத்தை திருப்பி கொடுக்காவிட்டால் அவரது வீட்டில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #STR #Simbu
    நடிகர் சிம்பு மீது சினிமா பட தயாரிப்பு நிறுவனமான பேஸ்சன் மூவி மேக்கர்ஸ் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தது.

    நடிகர் சிம்புவை கதாநாயகனாக வைத்து ‘அரசன்’ படத்தை தயாரிக்க திட்டமிட்டு இதற்காக அவருடன் ஒப்பந்தம் செய்து கொண்டோம். அவருக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசி முன் பணமாக ரூ.50 லட்சத்தை கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ந் தேதி வழங்கப்பட்டது.

    ஆனால் ஒப்பந்தப்படி நடிகர் சிம்பு ‘அரசன்’ படத்தில் நடிக்க முன்வராமல் இழுத்தடித்தார். அவர் சொன்னபடி நடித்து தராததால் படத்தயாரிப்பு நிறுவனத்துக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அவரிடம் இருந்து பணத்தை திரும்ப பெற்றுத் தர கோர்ட்டு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு நீதிபதி மெ.கோவிந்தராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களுக்கு பின்பு நடிகர் சிம்பு ‘அரசன்’ படத்தில் நடிக்க வாங்கிய அட்வான்ஸ் தொகை ரூ.50 லட்சத்தை ரூ.35.50 லட்சம் வட்டியுடன் சேர்த்து ரூ.85.50 லட்சம் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.



    இந்த தொகையை 4 வாரத்தில் அவர் செலுத்த வேண்டும். இல்லையெனில் நடிகர் சிம்பு வீட்டில் உள்ள வீட்டு உபயோக பொருட்களான ரெப்ரிஜிரேட்டர், டி.வி., வாஷிங்மெஷின், கட்டில், ஷோபா செட், மின் விசிறிகள், கிரைண்டர், மிக்ஸி, ஏர்கண்டி‌ஷனர், டைனிங் டேபிள், சேர்கள் ஆகியவை ஜப்தி செய்யப்படும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

    மேலும் சிம்புவுக்கு சொந்தமான கார், மொபைல் போன்கள் ஆகியவற்றையும் ஜப்தி செய்யலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

    முன்னதாக சிம்பு தரப்பில் வாதிடுகையில், “குறிப்பிட்ட நேரத்தில் படப்பிடிப்பு தொடங்காததால் தனக்கு இழப்பு ஏற்பட்டதாகவும், இதனால் அட்வான்ஸ் தொகையை திருப்பித்தர இயலவில்லை என்றும் வாதாடப்பட்டது. அதை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார். #STR #Simbu #Arasan

    விநாயகர் சிலை நிபந்தனைகளை எதிர்த்து தொடர்ந்த வழக்கு தொடர்பாக ராமகோபாலன் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #VinayagarChathurthi

    சென்னை:

    இந்து முன்னணி அமைப்பின் அமைப்பாளரும், விநாயகர் சதுர்த்தி மத்தியக்குழு என்ற அமைப்பின் அறங்காவலருமான ராமகோபாலன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அதில், ‘ஒவ்வொரு ஆண்டும் சாதி, இன பேதமின்றி மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி விநாயகர் சதுர்த்தியை விமரிசையாக கொண்டாடி வருகிறோம்.

    இந்நிலையில் விநாயகர் சிலைகளை அமைத்து வழிபடுவது உள்ளிட்டவைகள் குறித்து தமிழக பொதுத்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் புதிய நிபந்தனைகளை உருவாக்கியுள்ளனர். இதன்படி அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    சிலைகள் வைக்கப்படும் இடத்தின் உரிமையாளர்கள், உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறையினர், மாசு கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்புத்துறையினர், மின்சார வாரியம், போலீஸ் அதிகாரிகளிடம் தடையில்லா சான்று பெறவேண்டும். முன்அனுமதி பெற வேண்டும்.

    5 நாட்களுக்கு மேல் சிலைகளை வைத்திருக்கக் கூடாது என்பது உள்பட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகள் எல்லாம் கடைசி நேரத்தில் விதிக்கப்பட்டுள்ளதால், இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

    எனவே, அரசாணைக்கு தடை விதிக்கவேண்டும்’ என்று கூறியுள்ளார். இதே கோரிக்கையுடன் வேறு சிலரும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    இந்த வழக்குகள் எல்லாம் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கடைசி நேரத்தில் இப்படி புதிய விதிமுறைகளை அரசு பிறப்பித்தால், சிலை வைப்பவர்களால் என்ன செய்ய முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு அட்வகேட் ஜெனரல் விஜயநாராயண், அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாக கூறினார்.

    இதையடுத்து நீதிபதி, “பழைய விதிகளின்கீழ் விநாயகர் சிலையை வைக்க அனுமதி கேட்கும் மனு தாரர்களின் கோரிக்கையை 48 மணி நேரத்தில் அரசு பரிசீலிக்க வேண்டும். பின்னர் எடுக்கப்பட்ட முடிவை வருகிற 4-ந்தேதி ஐகோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும். விசாரணையை 4-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்” என்று உத்தரவிட்டார்.

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேர்வுகுழு நியமன பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Highcourt #MaduraiUniversity

    சென்னை:

    மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு, கடந்த ஜூன் 14-ந்தேதி தீர்ப்பளித்தது.

    பல்கலைக்கழக சட்ட விதிகளை பின்பற்றி புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுவை அமைத்து, மூன்று மாதங்களுக்குள் துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் பெயர் பட்டியலை தயாரிக்க வேண்டும் என்றும் உத்தர விட்டிருந்தது.

    இந்த உத்தரவின் நகல் கிடைக்கும் முன், விடுமுறை தினமான கடந்த ஜூன் 16-ந்தேதி பல்கலைக்கழக சிண்டிகேட்டின் அலுவல் சாரா உறுப்பினர்களாக உள்ள அரசு அதிகாரிகளின் அவசர கூட்டம் கூட்டப்பட்டு, துணைவேந்தர் தேர்வுக் குழுவுக்கு சிண்டிகேட் பிரதி நிதியாக தங்கமுத்து நியமிக்கப்பட்டார்.

    தங்கமுத்து நியமனத்துக்கு தடை கோரி பல்கலைக்கழக முன்னாள் மாணவர் மகாலிங்கம் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.

    இந்த மனு நீதிபதி மணிக்குமார், நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்த போது, சட்டவிதிகளை பின்பற்றாமல், அவசர கதியில் சிண்டிகேட் பிரதிநிதி நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் மீண்டும் தகுதியில்லாதவரே துணை வேந்தராக தேர்வு செய்யக் கூடிய அபாயம் இருப்பதாகவும் மனுதாரர் தரப்பு வக்கீல் வாதிட்டார்.

    இதையடுத்து, தங்கமுத்து நியமனம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு (வியாழக்கிழமை) தள்ளி வைத்தனர்.

    தஞ்சை சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்த 58 ஏக்கர் நிலத்தை மீட்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஐக்கோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது. #TNGovernment #highCourt
    தஞ்சாவூர்:

    எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில் சிறைச்சாலைகளில் அதிக நெருக்கடி இருப்பதை தவிர்ப்பதற்காக 58.17 ஏக்கர் நிலப்பரப்பில் தஞ்சை திருமலைச முத்திரம் என்ற இடத்தில் திறந்த வெளி சிறைச்சாலை அமைக்க திட்டம் தீட்டப்பட்டது.

    சிறைச்சாலை அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் 58.17 ஏக்கர் நிலப்பரப்பில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் கையகப்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் கட்டிடங்கள் எழுப்பி அங்கு கல்லூரி இயங்கி வருகிறது.

    தஞ்சை சாஸ்திரா பல்கலைக்கழகம், மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் துணையுடன் நிலத்தை வளைத்து போட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் சமூக ஆர்வலர்கள் பலர் , ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அரசு தரப்பில் நடவடிக்கை இல்லாமல் இந்த விவகாரம் கிடப்பிலேயே இருந்து வந்தது.

    இதற்கிடையே இந்த விவகாரம் யானை ராஜேந்திரன் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அரசு அதிகாரிகளின் துணையுடன் சாஸ்திரா பல்கலைக்கழகம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து உள்ளது. இதை உடனடியாக அரசு மீட்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் மனுவில் தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக, ஐகோர்ட்டில் சாஸ்த்ரா சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலத்துக்கான தொகையை அரசுக்கு வழங்கத் தயார் என்று சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தரப்பில் முறையிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை நீதிபதிகள் நூட்டி ராமமோகனராவ், சுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. தீர்ப்பில் நீதிபதி நூட்டி ராமமோகனராவ், தமிழக அரசு, இந்த நிலத்தின் சந்தை மதிப்பு 10 கோடி ரூபாயை பெற்றுக்கொண்டு, நிலத்தை சாஸ்த்ரா பல்கலைக் கழகத்திடம் ஓப்படைக்கலாம். என்று உத்தரவிட்டார்.

    ஆனால் நீதிபதி சுப்பிரமணியம், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்துக்கு பணம் பெற்று விட்டு ஆக்கிரமித்தவரிடமே ஒப்படைப்பது என்பது, தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். எனவே, ஆக்கிரமிக்கப்பட்ட 58.17 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி மீட்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    இரு மாறுபட்ட தீர்ப்பு வந்ததால், இந்த வழக்கை 3-வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி கார்த்திகேயன் விசாரித்து வந்தார். இந்நிலையில், ஐகோர்ட்டு கிளையில் வைத்து, நீதிபதி கார்த்திகேயன் நேற்று பிறப்பித்த உத்தரவில், நீதிபதி சுப்பிரமணியத்தின் தீர்ப்பை உறுதி செய்தார். அதாவது, தஞ்சை சாஸ்த்ரா சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள 58.17 ஏக்கர் நிலத்தை, தமிழக அரசு உடனடியாக கையகப்படுத்தி மீட்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    தற்போது ஆக்கிரமிப்பு நில பிரச்சினை குறித்த தீர்ப்பால் சாஸ்திரா பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. #TNGovernment #highCourt
    ×