search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐகோர்ட்டு"

    பொதுஇடங்களில் பேனர்கள் வைக்கும் விவகாரத்தில் 6 மாதத்திற்குள் சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Highcourt

    சென்னை:

    ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பேனர்களை வைக்கின்றனர். நடக்கக்கூட முடியாத அளவுக்கு நடைபாதைகளில் பேனர்களை வைக்கின்றனர்.

    இவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது இல்லை. கூட்டு சேர்ந்து அதிகாரிகள் செயல்படுகின்றனர். எனவே, அனுமதிப் பெற்று பேனர் வைத்தாலும், அந்த அனுமதியை யார் வழங்கியது? எத்தனை நாட்களுக்கு அந்த பேனர் வைத்துக் கொள்ளலாம்? என்பது உள்ளிட்ட விவரங்கள் அந்த பேனரில் அச்சிட வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக சட்டத்திருத்தம் கொண்டு வர உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி. ஆஷா ஆகியோர் இன்று விசாரித்தனர். பின்னர், ‘பொதுஇடங்களில் பேனர்கள் வைப்பதற்கு முன்பு சென்னை மாவட்டத்துக்கு, மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்கினார். இப்போது மாநகராட்சி அனுமதி வழங்குகிறது. எனவே, அந்த பேனரில், எந்த அதிகாரி பேனர் வைப்பதற்கு அனுமதி வழங்கினார்? எத்தனை நாட்கள் பேனர் வைக்கலாம்? அந்த பேனரில் அளவு எவ்வளவு? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களும், அந்த பேனரின் கீழ் பகுதியில் அச்சிட்டிருக்க வேண்டும். இதற்காக, சென்னை நகர நகராட்சி மற்றும் மாநகராட்சி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும். இந்த சட்டத்திருத்தத்தை 6 மாதத்துக்குள் கொண்டு வர வேண்டும்’ என்று உத்தரவிட்டனர். #Highcourt

    கலப்பு திருமணம் செய்வோருக்கு பாதுகாப்பு வழங்கவும், ஆணவ கொலைகளை ஒழிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சிறப்பு பிரிவை உருவாக்கியுள்ளதாக தமிழக அரசு ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
    சென்னை:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த வீரணன் என்பவரின் மகள் விமலாதேவி தந்தையிடம் டிரைவராக வேலைபார்த்த வேறு சமூகத்தை சேர்ந்த திலீப்குமார் என்பவரை 2014-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதே ஆண்டு அக்டோபர் மாதம் விமலாதேவியை அவரது பெற்றோர் வீட்டுக்கு அழைத்துவந்தனர்.

    பின்னர் அவர் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடல் யாருக்கும் தெரியாமல் எரிக்கப்பட்டது. இதுகுறித்து திலீப்குமார் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், 2016-ம் ஆண்டு விரிவான தீர்ப்பு ஒன்றை பிறப்பித்தார்.

    அதில், இந்த வழக்கில் சட்டத்தை மீறி கட்டப்பஞ்சாயத்து கும்பலுடன் கைகோர்த்து செயல்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கலப்புத்திருமணம் செய்துகொள்பவர்களை ஆணவக்கொலை செய்யும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

    இதை தடுக்கும் விதமாகவும், கலப்பு திருமண தம்பதிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காகவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சமூகநலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் கொண்ட சிறப்பு பிரிவை உருவாக்க வேண்டும். 24 மணி நேரமும் இயங்கும் வகையில் தனி ‘ஹெல்ப் லைன்’ ஏற்படுத்தி புகார்களை உடனுக்குடன் பெற்று வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி கூறியிருந்தார்.

    இந்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தாததால், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஐகோர்ட்டில் உள்துறை செயலாளர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது ஐகோர்ட்டில் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-



    விமலாதேவி வழக்கில் சட்டத்தை மீறி செயல்பட்ட செக்கானூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார், வத்தலகுண்டு இன்ஸ்பெக்டர் வினோஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி, உசிலம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் ராணி ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அதேபோல, மாவட்டந்தோறும் டி.ஐ.ஜி. அல்லது போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. ‘ஹெல்ப் லைன்’ தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பிரிவு மற்றும் தொலைபேசி எண்கள் குறித்த விவரங்களை தமிழக காவல்துறையின் இணையதளத்தில் வெளியிட கடந்த ஏப்ரல் 10-ந் தேதி உத்தரவிடப்பட்டது.

    கலப்புத்திருமணம் செய்யும் காதல் ஜோடிகள் இந்த தொலைபேசி வழியாகவும், இணையதளம் மூலமாகவும் புகாரும், பாதுகாப்பு கேட்டு மனுவும் செய்யலாம். அந்த புகாருக்கான ரசீது அவர்களுக்கு வழங்கப்படும்.

    இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து, தினந்தோறும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். அந்த ஜோடிகளுக்கு தகுந்த பாதுகாப்பை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் வழங்கவேண்டும். உறவினர்கள் இவர்களை விரட்டிச்சென்றால், அதை தடுத்து அந்த ஜோடிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்படும்.

    ஆணவக்கொலை முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. கலப்புத்திருமணம் செய்வோருக்கு தற்காலிகமாக வசிக்கும் இடம், பாதுகாப்பு வழங்குதல், இருதரப்பினரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்த நிபுணர்களை நியமித்தல் உள்ளிட்டவைகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    கலப்புத்திருமணம் செய்துகொள்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் உதவிகளை வழங்காத அதிகாரிகள் கடுமையான குற்றம் செய்ததாக கருதப்பட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு ஆகஸ்டு 9-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. #tamilnews
    முறையான கட்டிடம் இல்லாமல் புழல் பகுதியில் இயங்கும் பள்ளிக்கூடத்தை இழுத்து மூடவும், அங்கு படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிக்கூடங்களுக்கு மாற்றவும் கல்வி அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், சசிகுமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை, புழல் அருகேயுள்ள கன்னடப்பாளையத்தில் ஸ்ரீ சரவணா வித்யாலயா நர்சரி பள்ளி விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகிறது. அங்கு முறையான கட்டிடங்கள் இல்லை. ஆஸ்பெஸ்டாஸ் சீட்டில் பள்ளிக்கூடங்கள் இயங்குகிறது. இதுகுறித்து அரசுக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், கும்பகோணம் பள்ளி தீ விபத்தை போல மற்றொரு சம்பவம் நடந்தால் தான் நடவடிக்கை எடுப்பீர்களா? கட்டிடமே இல்லாத பள்ளியை நடத்துவதற்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். பின்னர், இதுகுறித்து விளக்கம் அளிக்க தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டும் என்று கடந்த வாரம் நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தொடக்க கல்வி இயக்குனர் ஏ.கருப்பசாமி மற்றும் அதிகாரிகள் ஆஜரானார்கள். அவர்கள், இந்த பள்ளிக்கூடத்துக்கு ஏற்கனவே விளக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிவித்தனர்.

    அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, அந்த பள்ளியை மூடவும், அங்கு பயிலும் மாணவர்களை அருகில் உள்ள பிற பள்ளிகளுக்கு மாற்றவும் உத்தரவிட்டார். மேலும் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத கல்வித்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார். #tamilnews
    உத்தரவை அமல்படுத்தாத மதுராந்தகம் தாசில்தார் யார்? என்று காஞ்சீபுரம் கலெக்டருக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. #Highcourt

    சென்னை:

    காஞ்சீபுரம் மாவட்டம், மதுராந்தகத்தை சேர்ந்த கே.ஜி.எத்திராஜ். தனது 9 சென்ட் நிலத்துக்கு பட்டா கேட்டு மதுராந்தகம் தாசில் தாரிடம் விண்ணப்பம் செய்தார்.

    அவரது கோரிக்கை பரிசீலிக்கப்படாததால், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவரது கோரிக்கையை பரிசீலித்து பட்டா வழங்க ஐகோர்ட்டு 2013-ம் ஆண்டு உத்தரவிட்டது.

    இதனடிப்படையில் தாசில்தார் ஏழரை சென்ட் நிலத்துக்கு மட்டுமே பட்டா வழங்கினார்.

    இதையடுத்து மதுராந்தகம் தாசில்தார் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தார். 2013-ம் ஆண்டு முதல் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு நீதிபதிசத்தியநாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது கோர்ட்டு உத்தரவிட்டு 5 ஆண்டுகள் ஆகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனுதாரர் வக்கீல் சத்தியா வாதிட்டார்.

    இதையடுத்து அரசுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, 2013-ம் ஆண்டு முதல் மதுராந்தகத்தில் தாசில் தார்களாக இருந்தவர்கள் யார்? அவர்களது பெயர் என்ன? ஏன் அவர்கள் ஐகோர்ட்டு உத்தரவை 5 ஆண்டுகளாக நிறைவேற்ற வில்லை? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன் காஞ்சீபுரம் கலெக்டர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். #Highcourt

    மீனவ கிராமங்களை தனி பஞ்சாயத்துக்களாக அறிவிக்க கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது.#Fishermenvillage

    சென்னை:

    மீனவர்களை தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினர் வகுப்பில் சேர்த்து அவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியை தனி தொகுதியாக வரையறை செய்யவும், மீனவ கிராமங்களை தனி கிராம பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும் என்றும் மண்டல் கமி‌ஷன் கடந்த1980-ம் ஆண்டு பரிந்துரைத்துள்ளது.

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு முன் மீனவ கிராமங்களை தனி கிராம பஞ்சாயத்தாக அறிவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மீனவர் பாதுகாப்பு சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது.

    மண்டல் கமி‌ஷன் பரிந்துரைபடி மீனவ கிராமங்களை கிராம பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும் என கொடுத்த மனு மீது இதுவரை தமிழக அரசு நடவடிக்கை இல்லை என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    மேலும் அந்த மனுவில், தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்களில் 608 மீனவ கிராமங்கள் உள்ளன. 9.24 லட்சம் மக்கள் தொகை உள்ளது.

    கிராம பஞ்சாயத்துகளுக்கு ஒதுக்கும் நிதி மீனவ கிராமங்களுக்கு சென்றடையவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன், தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையம் வார்டு மறுவரையரை குழு உள்ளிட்டோர் ஆகஸ்டு 17-ந்தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கூறி நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். #Fishermenvillage

    தர்மபுரியில் டி.டி.வி. தினகரன் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கினால் என்ன? ஏன் மறுக்கின்றனர்? என்று போலீசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. #TTVDinakaran
    சென்னை:

    சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தர்மபுரி மாவட்டத்தில், பசுமைச்சாலை திட்டம் குறித்து பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போலீசாரிடம் மனு கொடுக்கப்பட்டது.

    ஆனால், போலீசார் அனுமதி வழங்க மறுத்து விட்டனர். இதையடுத்து அந்த கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.கே.ராஜேந்திரன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘எங்கள் கட்சியின் நிறுவனர் டி.டி.வி.தினகரன் கலந்துகொள்ளும் இந்த பொதுக்கூட்டம் என்பதால், போலீசார் உள்நோக்கத்துடன் அனுமதி வழங்க மறுக்கின்றனர்’ என்று கூறியிருந்தார்.



    இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் மனுதாரர் சார்பில் ஆஜராகி வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் டி.ராஜா, இந்த வழக்கில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் ஆஜராக உள்ளதால், விசாரணையை தள்ளிவைக்கவேண்டும் என்றார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கினால் என்ன? போலீசார் ஏன் மறுக்கின்றனர்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். பின்னர் விசாரணையை வருகிற 17-ந்தேதிக்கு தள்ளிவைத்தார். #TTVDinakaran
    கல்வி கடன் விவகாரம் தொடர்பாக மாணவி தொடர்ந்த வழக்கில் தந்தை வாங்கிய கடன் ஆவணங்களை தாக்கல் செய்யும்படி வங்கிக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர். #Highcourt

    சென்னை:

    நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி தீபிகா. இவர், பாரத ஸ்டேட் வங்கியின் வேதாரண்யம் கிளையில் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தார்.

    இவரது தந்தை கடன் பெற்று அதை முறையாக திருப்பிச் செலுத்தாததால் இவருக்கு கல்விக்கடன் வழங்க முடியாது என்று வங்கி மேலாளர் மறுத்துவிட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தீபிகா வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், கடனை கொடுத்து விட்டு, கடனாளி பின்னால் வங்கி அதிகாரிகள் ஓடுவதை விட, கடனை கொடுக்க மறுப்பது சரியே என்று தீர்ப்பு அளித்தார்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அந்த மாணவி வழக்கு தொடர்ந்தார். அதில், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாதவர் என்று தந்தை மீது பழி சுமத்தியதற்காக வங்கி நிர்வாகம் ரூ.10 லட்சம் இழப்பீடு தரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.தண்டபாணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது தீபிகாவின் தந்தை வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்று வங்கி நிர்வாகம் தரப்பில் வாதிடப்பட்டது.

    இதையடுத்து அவரது தந்தை வாங்கிய கடன் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யும்படி பாரத ஸ்டேட் வங்கிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    விசாரணையை வருகிற 17-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர். #Highcourt

    சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் மாற்றக்கூடாது? என்று ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி எழுப்பினார். #Idolsmuggling #Highcourt

    சென்னை:

    தமிழகத்தில் புராதன மற்றும் பழமையான கோவில்களில் உள்ள சிலைகள் கடத்தப்பட்டது. இவற்றை, சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் கடத்தி, சர்வதேச கடத்தல் கும்பலிடம் விற்பனை செய்துள்ளது.

    இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன், ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிறப்பு படையை உருவாக்கினார். பின்னர் கும்பகோணம் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை சிறப்பு கோர்ட்டாக அறிவித்தார். தமிழகம் முழுவதும் காணாமல் போன சிலைகள் குறித்து இந்த தனிப்படை விசாரிக்க உத்தரவிட்டார்.

    இந்த வழக்கு அவ்வப்போது சென்னை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வருகிறது. கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கோவில் சிலைகளை பாதுகாக்க எடுக்கவேண்டிய நடவடிக்கை உள்ளிட்டவை தொடர்பாக ஐகோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வில்லை என்று நீதிபதி கருத்து கூறியிருந்தார்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதி மகாதேவன், சைவமும், வைணவமும் தழைத்தோங்கும் தமிழகத்தில் சிலைத் திருட்டு என்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதே நிலை நீடிக்குமானால் சிலை கடத்தல் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும். சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் மாற்றக்கூடாது? என்று கேள்வி எழுப்பினார்.

    ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் எழுந்து, சிலை கடத்தல் வழக்கை நீதிமன்றம் விசாரித்து கொண்டிருக்கும் பொழுதே அண்ணாமலை யார் பஞ்சலோக சிலை மாயமாகி விட்டது. ஸ்ரீரங்கம் கோவில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இமெயில் மூலம் பல புகார்களை அரசுக்கு அனுப்பியும் எந்த பயனும் இல்லை என்று குற்றம்சாட்டினார்.

    இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பிளீடர் மகாராஜனிடம் கருத்து கேட்ட நீதிபதி, பின்னர் இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். விசாரணையை 13-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

    மதுக்கடைகளை மதியம் 2 மணிக்கு மேல் திறந்தால் என்ன என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி விடுத்தது. #ChennaiHighCourt #tamilnaduGovernment
    சென்னை:

    சென்னை, திருமுல்லைவாயலில் புதிதாக மதுபான கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் கொண்ட அமர்வு, கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்கியது.



    மேலும், டாஸ்மாக் மதுபான கடைகளை ஏன் மதிய உணவுக்கு முன்பே திறக்கின்றனர்?, அந்த கடைகளில் வேலை நேரத்தை குறைத்தால் என்ன?, டாஸ்மாக் மதுபான கடைகளில் செயல்படும் பார்களில் தரமான உணவு விற்கப்படுகிறதா?, அந்த பார்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிய உரிமங்களை பெற்றுள்ளதா? என்பது உள்பட பல கேள்விகளை நீதிபதிகள் கேட்டிருந்தனர்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல் ஆஜராகி, ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.

    அதில், சென்னையில் உள்ள டாஸ்மாக் பார்களில் 205 பார்களுக்கு உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிமம் பெற்றுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பார்களுக்கு உரிமம் பெறுவது தொடர்பாக மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், உரிமம் பெறாத பார்கள் 7 நாட்களுக்குள் உரிமத்தை பெறவேண்டும். இல்லையென்றால், அந்த பார்களின் இழுத்து மூடப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

    டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் கே.செல்வராஜ், எங்கள் சங்க உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் உணவு பாதுகாப்பு உரிமத்தை வாங்கிவிட்டனர். தரமான உணவு பண்டங்கள் தான் வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படுகிறது என்று கூறினார்.

    அதற்கு நீதிபதிகள், குடிபோதையில் சாப்பிடும் உணவு தரமானதா? என்பது குடிமகன்களுக்கு தெரியாது. அவர்கள் குடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தாலும், அவர்களுக்கு நல்ல உணவு பண்டங்கள் தரமாக வழங்கப்படுகிறதா? என்பது தொடர்பாக அக்கறை எங்களுக்கு உள்ளது. எனவே, பார்களில் தரமான உணவு பண்டங்கள் விற்கப்பட வேண்டும். தரம் குறைவாக இருந்தால், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    பின்னர், டாஸ்மாக் மதுபான கடையின் வேலை நேரத்தை ஏன் இதுவரை அரசு குறைக்கவில்லை. 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரை கடை திறந்துள்ளது. ஏன் உணவு இடைவேளைக்கு முன்பு மதுக்கடையை திறக்கிறீர்கள்?, பிற்பகல் 2 மணிக்கு மேல் திறந்தால் என்ன? என்று அரசு தரப்பில் ஆஜராகி இருந்த கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியனிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த அரவிந்த்பாண்டியன், டாஸ்மாக் மதுபான கடையை எப்போது திறப்பது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது என்றார். அதற்கு நீதிபதிகள், மதியம் உணவுக்கு முன்பு டாஸ்மாக் மதுபான கடையை திறந்து மக்களை குடிக்க வைப்பதில் என்ன கொள்கை முடிவு தமிழக அரசுக்கு இருக்கிறது? என்று கேள்வி எழுப்பினர்.

    அதைத் தொடர்ந்து, படிப்படியாக மதுபான கடைகளை மூடுவதாக கூறியது என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அரவிந்த்பாண்டியன், நெடுஞ்சாலைகள் அருகே மதுபான கடைகள் திறக்கக்கூடாது என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினால், தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் மூடப்பட்டுவிட்டன. இதை நாங்கள் கணக்கு காட்ட விரும்பவில்லை. இருந்தாலும், இந்த 500 மதுபான கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.

    இதையடுத்து விசாரணையை தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  #ChennaiHighCourt #tamilnaduGovernment
    மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதி தொடர்பான வழக்கில் நித்யானந்தாவை ஒரு தரப்பினராக சேர்க்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    மதுரை:

    மதுரை ஆதீனமடத்தின் 292-வது மடாதிபதியாக அருணகிரிநாதர் இருந்து வருகிறார். இந்தநிலையில் மடத்தின் இளைய மடாதிபதியாக நித்யானந்தா கடந்த 2012-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து இந்து அறநிலையத்துறை சார்பில் மதுரை முதன்மை சப்-கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.



    இதற்கிடையே மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதி பதவியில் இருந்து நித்யானந்தாவை அருணகிரிநாதர் நீக்கினார். இதுதொடர்பான வழக்கில் தன்னை ஒரு தரப்பினராக சேர்க்க வேண்டும் என்று நித்யானந்தா சார்பில் மதுரை முதன்மை சப்-கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த கோர்ட்டு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து நித்யானந்தா சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவில், மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதி தொடர்பான வழக்கில் என்னையும் ஒரு தரப்பினராக சேர்க்கக்கோரிய மனுவை மதுரை சப்-கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்து, அந்த வழக்கில் என்னை ஒரு தரப்பினராக சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    முடிவில், மதுரை ஆதீன இளைய மடாதிபதி தொடர்பாக மதுரை முதன்மை சப்-கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கில் நித்யானந்தாவை ஒரு தரப்பாக சேர்க்க அனுமதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    வார்தா புயலில் பலியான 9 மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீட்டை 2 வாரத்துக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. #VardhaCyclone
    சென்னை:

    சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த ஆர்.பிரதீப்குமார் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

    என் தந்தை ரவிச்செல்வன் மீன்பிடி படகு டிரைவராக பணி செய்துவந்தார். 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வார்தா புயல் வீசியபோது, என் தந்தை உள்பட 9 பேர் கடலுக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது புயலில் சிக்கி படகுடன் 9 பேரும் காணாமல்போயினர். இதுகுறித்து சென்னை மீன்பிடி துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    என் தந்தை ரவிச்செல்வன், மீனவர்கள் நிர்மல்ராஜ், வினோத் ஆகியோரது உடல் மட்டும் நாகப்பட்டினம் மாவட்ட கடற்கரையில் ஒதுங்கியது. மற்ற 6 பேரும் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை என்று அரசு அறிவித்து, 9 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்கியது.

    இதற்கிடையில், வார்தா புயலில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய செயலாளர் அறிவித்தார். இதையடுத்து இந்த இழப்பீடு தொகையை கேட்டு நாங்கள் விண்ணப்பம் செய்தோம். இதுவரை அரசு பரிசீலிக்காமல் உள்ளது. பலமுறை கோரிக்கை விடுத்தும், இழப்பீடு வழங்கப்படவில்லை.

    எனவே, வார்தா புயலில் பலியான என் தந்தை உள்பட 9 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.4 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்குவதற்கு சில நடைமுறைகள் உள்ளன. இதை பின்பற்றி தொகையை வழங்க காலஅவகாசம் வேண்டும். அதனால் 4 வாரத்துக்கு தள்ளிவைக்க வேண்டும்’ என்றார்.

    இதற்கு மனுதாரர் தரப்பு வக்கீல் விஜேந்திரன் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, வார்தா புயலில் பலியான 9 பேரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது குறித்து 2 வாரத்துக்குள் தகுந்த நடவடிக்கை எடுத்து, அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.  #VardhaCyclone
    சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது என்று திருமாவளவன் கூறினார்.
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு அடக்கு முறை ஏவப்படுகிறது. அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரத்தைக் கூட தமிழக அரசு பறித்து வருகிறது. அரசு திட்டங்களுக்கு மாற்றுக்கருத்து கூறுகிறவர்கள் பொய் வழக்குகளில் கைது செய்யப்படுகிறார்கள். ஊடகங்கள் மீதும் வழக்கு போடப்பட்டு மிரட்டப்படுகிறது.

    இந்த அடக்குமுறைப் போக்கைக் கைவிடுமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்! தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்குப் பிறகு தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத ஒரு அவசர நிலை நடைமுறைப்படுத்தபடுகிறது.

    ஜனநாயக நாட்டில் அனுமதிக்கப்பட்ட உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. விவசாயிகளை சந்தித்து கருத்துக் கேட்பவர்களைக் கூட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுத்து காவல்துறை கைது செய்கிறது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டில்லி பாபு, பாலபாரதி உள்ளிட்டவர்களும் விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்களும், தமிழ் உணர்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல.


    ஜனநாயகத்துக்கு எதிராக அரசு நடந்து கொள்ளும் போது நீதிமன்றங்களே மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு நீதித்துறை மீதான நம்பிக்கையைத் தகர்ப்பதாக இருக்கிறது.

    கூட்டத்திற்கு அனுமதி உண்டா? இல்லையா? என்று முடிவு செய்வதை விட்டு விட்டு சேலம்-சென்னை எட்டுவழி சாலை திட்டத்தைப் பாராட்டியும் அதற்கு எதிராகப் போராட்டங்களை நடத்தக் கூடாது என்று அறிவுறுத்தியும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது ஏமாற்றமும் அதிர்ச்சியும் அளிப்பதாக இருக்கிறது.

    அடக்குமுறையால் மக்களின் நியாயமான உணர்வுகளை நசுக்கிவிட முடியாது. இதை மத்தியில் ஆளும் ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

    எந்தக் காரணம்கொண்டும் மத்திய அரசின் நிர்பந்தத்துக்குத் தமிழக அரசு பணிந்து போகக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம். அடக்குமுறைப் போக்கைக் கைவிட்டு ஜனநாயக வழியில் நடக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Thirumavalavan #HighCourt
    ×